19 செப்டம்பர், 2011

எங்கேயும் எப்போதும்

முதல் காட்சியே க்ளைமேக்ஸாக வைக்க இயக்குனருக்கு பயங்கர தில் இருக்க வேண்டும். அங்காடித்தெரு இயக்குனருக்கு பிறகு இந்த தில் எம்.சரவணனுக்கு வாய்த்திருக்கிறது. இதுமாதிரியான நான்லீனியர் படங்களுக்கு திரைக்கதை சுவாரஸ்யமாக அமையாவிட்டால் மொத்தமும் போச்சு. சென்னையிலிருந்து திருச்சிக்கு ஒரு தனியார் பேருந்து கிளம்புகிறது. திருச்சியிலிருந்து சென்னைக்கு அரசுப்பேருந்து கிளம்புகிறது. நான்கு மணிநேரத்தில் இரண்டு சந்தித்துக் கொள்ளும்போது... ஒன்லைனர் இவ்வளவுதான்.

இடையிடையே பேருந்துகளின் பயணத்தை ஒரு த்ரில்லர் படத்துக்கான எஃபெக்ட்டோடு காட்சிப்படுத்தியிருப்பதில் இயக்குனரோடு கேமிராமேன், இசையமைப்பாளர், எடிட்டர், சிஜி கலைஞர் என்று அனைவரும் கைகோர்த்து அசத்தியிருக்கிறார்கள்.

இரண்டு காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமென்றாலும் கிளைக்கதைகளாக விரியும் ஒருவரி குட்டிக்கதைகள் சுவாரஸ்யம். மனைவி ஏழுமாத கர்ப்பிணியாக இருந்தபோது துபாய்க்கு போன கணவன், செம ஃபிகரை பிராக்கெட் போடும் இளைஞன், புதுமனைவியை பிரிய மனமில்லாமல் கூடவே வரும் மாப்பிள்ளை என்று படம் முழுக்க சுவாரஸ்யமாக சித்தரிக்கப்பட்ட பாத்திரங்கள் பல.

இயக்குனர் இந்தக் கதையை எழுதுவதற்கு முன்பாக பல பஸ் ஸ்டேண்டுகளிலேயே தேவுடு காத்திருப்பார் போல. பூ, பழம் விற்பவரில் தொடங்கி, கண்டக்டர், டிரைவர் வரை பல பாத்திரங்களை உண்மைக்கு வெகு அருகாக சித்தரிக்க முடிந்திருக்கிறது. குறிப்பாக திருச்சி அரசுப்பேருந்து கண்டக்டர் சொல்லும் வசனம். “தம்பி. நாலு சீட்டு தள்ளி வுட்டு உட்கார்ந்துக்கப்பா”.

திருச்சியிலிருந்து சென்னைக்கு வரும் பெண்ணின் காதல் இயல்பாக பூ மலர்வது மாதிரி மலர்கிறது என்றால்.. திருச்சியில் அரசூர் பையன் மீதான நர்ஸின் காதல் அடாவடி ரகம். கிட்டத்தட்ட மவுனராகம் கார்த்திக்கின் கேரக்டர் அஞ்சலிக்கு. ஆக்‌ஷன், ரொமான்ஸ் ஹீரோவாக ஃபார்ம் ஆகிவிட்ட ஜெய்யின் அண்டர்ப்ளே ஆச்சரியம்.

15-பி பஸ்ஸில் ஏற்றிவிட மட்டுமே ‘அசைன்’ செய்யப்படும் ஷ்ரவன் கடைசியில் ஆபிஸ் லீவு போட்டுவிட்டு நாள் முழுக்க பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் அனன்யாவோடு சுற்றுவது கொஞ்சம் லாஜிக் மீறலாகத் தெரிந்தாலும் இண்டரெஸ்டிங்காக இருப்பதால் மன்னித்து விடலாம்.

தொண்ணூறு சதவிகிதம் ‘ஃபீல்குட்’ மூவியாக பயணப்படும் ‘எங்கேயும் எப்போதும்’ கடைசி இருபது நிமிடங்களில் கலங்க வைக்கிறது. குறிப்பாக ‘அப்பா போன் எடுங்கப்பா’ ரிங்டோன் ஒலிக்கும்போது, இடிஅமீன் படம் பார்த்தால் கூட கண்ணைக் கசக்கிக் கொள்வார். படத்தின் இறுதியில் ரசிகனுக்கு கிடைப்பது நெஞ்சு முழுக்க தாங்க முடியாத சோகம்தான்.

படம் பார்த்தவர்கள் ’வீச்சு’ தாங்கமுடியாமல் நேராக டாஸ்மாக்குக்கு ஓடுவதுதான் இயக்குனருக்கு கிடைத்திருக்கும் வெற்றி.

சாந்தி தியேட்டர் அருகேயிருந்த டாஸ்மாக்கில் கிரவுடு தாங்காமல், எக்ஸ்பிரஸ் மாலுக்கு எதிரே மூத்திரச்சந்துக்கு அருகாமையில் அமைந்திருக்கும் டாஸ்மாக்குக்கு ஓடி (நேரம் இரவு 9.50 – டாஸ்மாக் மூடும் நேரம் சரியாக 10.00) அங்கும் குடிமகன்களின் பயங்கரவாத குடிவெறி கூட்டம் காரணமாக சரக்கு வாங்க முடியாமல், மை பாருக்குச் சென்று.. கிங்ஃபிஷர், ஹேவார்ட்ஸ் உள்ளிட்ட ரெகுலர் பிராண்டுகளில் சூப்பர் ஸ்ட்ராங்க் பீர் கிடைக்காமல், டென் தவுசண்ட் சூப்பர் ஸ்ட்ராங்க் என்கிற ஏடாகூட சாராயநெடியோடு கூடிய பாடாவதி சரக்கினை உள்தள்ளி, தலையெழுத்தேவென்று எண்பது ரூபாய் பீருக்கு நூற்றி ஐம்பது ரூபாய் கொடுத்து, டபுள் போதையாகி, செயினாக நாலைந்து தம்மடித்து, மாணிக்சந்தை வாயில் கொட்டி குதப்பியவாறே ஃபீல் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, தோழர் நரேன் சொன்னார், “தலைவா. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”.

17 கருத்துகள்:

 1. படம் ஏ பி சி என எல்லா சென்டர்களிலும் செம ஹிட்ட்

  பதிலளிநீக்கு
 2. அருமையான கலக்கல்
  கட்டிங் விமர்சனம் .
  உங்கள் இனிய பணி சிறக்கட்டும் .
  வாழ்த்துக்கள்
  யானைக்குட்டி

  பதிலளிநீக்கு
 3. சி.பி.செந்தில்குமார் said...

  படம் ஏ பி சி என எல்லா சென்டர்களிலும் செம ஹிட்ட்//

  D E F?

  பதிலளிநீக்கு
 4. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”.
  "கிக்" கான கட்டிங் விமர்சனம் .

  பதிலளிநீக்கு
 5. விமர்சனம் நல்லா இருக்கு.ஆனா முடிவு
  பற்றி எழுதியதை படிக்கும் போது என்னால் பார்க்கமுடியுமா என்று சந்தேகம் வருகிற்து.

  பதிலளிநீக்கு
 6. விமர்சனம் எழுதுகையில் கதையை உடைத்துச் சொல்லக்கூடாது என்பது அறம். நீங்கள் கதையை உடைத்துச் சொல்லாவிட்டாலும் இறுதிகாட்சியை உணர்வடிப்படையில் காட்டிக்கொடுத்து விட்டீர்கள்.

  அஞ்சலி இன்னாரென்று வெளிப்படும் கட்டத்திலும் ஒரு சுவை இருக்கிறது. அதையும் விளக்கிவிட்டீர்கள்.

  படம் வெற்றிக்குக் காரணம்: டெக்னீஷியன்கள் மட்டுமல்ல, திரப்படம் பார்க்கும் வழக்கமுள்ள 99% மக்களுக்கு, தமிழ்நாட்டில், தொலைநெடும் பஸ் பயண அனுபவம் இருக்கும். கதை மாந்தர்களோடு தம்மை அடையாளப் படுத்திக்கொள்ள இயல்வதும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

  //15-பி பஸ்ஸில் ஏற்றிவிட மட்டுமே ‘அசைன்’ செய்யப்படும் ஷ்ரவன் கடைசியில் ஆபிஸ் லீவு போட்டுவிட்டு நாள் முழுக்க பஸ்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் அனன்யாவோடு சுற்றுவது கொஞ்சம் லாஜிக் மீறலாக..// இதை நான் மறுக்கிறேன். கிடைத்த வாய்ப்பை அந்தப் பொண்ணு வேண்டிக்காமலேயே நீட்டிக்க முயல்வோம்தானே - அந்த வயசில்?!

  பதிலளிநீக்கு
 7. அருமையான விமர்சனம்.

  நன்றி,
  கண்ணன்
  http://www.tamilcomedyworld.com

  பதிலளிநீக்கு
 8. ரா.சு. சார்!

  நீங்கள் சுட்டிக்காட்டியது சரியானது. கதையையோ, முடிச்சுகளையோ விமர்சனத்தில் தெரியப்படுத்திவிடக் கூடாது என்று எவ்வளவு மெனக்கெட்டாலும், என்னையும் அறியாமல் சில சமயங்களில் இப்படி நேர்ந்து விடுகிறது :-(

  பதிலளிநீக்கு
 9. \\“தலைவா. நம்மளுக்கெல்லாம் மங்காத்தாதான் ரைட்டு”. \\
  வஞ்சப் புகழ்ச்சி...??

  பதிலளிநீக்கு
 10. GOOD CONCEPT, ALL MOST EVERYTHING OK INCLUDE SONG SEQUENCE ,NO DUET NO GANA SONG BUT ALL SONGS THERE ACTING JAI SALUTE, ANJALI AND ANANYA LOOKING GOOD ACT THERE LIMIT, WHEN I AM WATCHING THIS MOVIES UNWANTED THINKING ????? YYYYY?. VERY CAUSAL STORY ( JOURNEY)THIS TRAVEL NOT GHOST RIDE . WHEN WATCHING THIS SCENES IT'S NOT SUITABLE. AFTER ACCIDENT WHO? MISTAKE THAT TEMPO? BEFORE SCENES SHOWING DRIVER RASH DRIVING . BASED ONE ACCIDENT STORY BUT IT NOT EXACT UNDERLINE. ALL THE BEST NEXT FILM SARAVANAN SIR WE BELIEVE LOT OF FROM U FIRTS FILM LOT OF EFFORT CONGRATS TO ALL. MUSIC ALL SONGS GOOD TO HERE BACKGROUND MUSIC SORRY

  பதிலளிநீக்கு
 11. அரசுப் பேருந்துகளின் அவலட்சணங்களும், ஊழியர்களின் அளவில்லா வேலைப்பளுவும், தனியார் பேருந்துக்காரன் கொள்ளை அடிப்பதும், வேகமாக ஓட்டுவதும் தான் பெரும்பாலான விபத்துக்குக்களுக்கு காரணம். மேலும் சென்னை-திருச்சி சாலையின் நடுவில் மேடை அமைந்திருப்பதால் விபத்துக்கள் குறைந்திருப்பதாக புள்ளி விபரங்கள். கண்ணீரை வரவழைத்து, காசு பார்ப்பது தான் படமெடுத்ததின் நோக்கம் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 12. //சாந்தி தியேட்டர் அருகேயிருந்த டாஸ்மாக்கில் ......... குதப்பியவாறே ஃபீல் செய்து//

  எம்புட்டு கஷ்டம்டா சாமி .... தண்ணி அடிக்கிறதுல இருக்குற கஷ்டம் தெரியாம குடிகரன்னு ஈசியா சொல்றவங்கள, உங்க கட்டுரைய படிக்க வக்கணும்ணே ... விமர்சனம் வழக்கம் போல் அருமை !! ( உங்க மேல சத்தியமா வஞ்சி புகழ்ச்சி இல்லை ... இல்லை ... :) :))))

  பதிலளிநீக்கு