8 ஜூன், 2011

வீட்டில் மாணவர். வகுப்பில் ஆசிரியர்!

பொருளாதாரப் பாடம் நடத்த ஆசிரியர் இல்லை. ஆனாலும் பொருளாதாரத்தில் ஆல் பாஸ். வகுப்பெடுக்க ஆசிரியரே இல்லாமல் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள் ரங்கசமுத்திரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர்.

ரெங்கசமுத்திரம், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் இருக்கும் ஊர். இங்கே வசிப்பவர்கள் பெரும்பாலும் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள். ஏழை மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள். தங்கள் குழந்தைகளின் கல்வித்தேவைக்காக அரசுப்பள்ளிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள்.

இத்தகைய பின் தங்கிய சூழலில்தான் ரெங்கசமுத்திரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வருடா வருடம் அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்து வருகிறது. சுமார் ஆயிரம் மாணவ மாணவியர் படிக்கும் இப்பள்ளியில் தலைமை ஆசிரியரோடு சேர்த்து 25 ஆசிரியர்கள்தான் பணிபுரிகிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கே மேல்நிலை வகுப்புகளில் மாணவர்கள் சேர வேண்டுமென்றால் அறிவியல் பாடப்பிரிவு மட்டுமே எடுக்க முடியும். ஏனெனில் அப்பாடங்களை நடத்த மட்டும்தான் அரசு நியமித்த ஆசிரியர்கள் இருந்தார்கள். பள்ளியின் பெற்றோர் – ஆசிரியர் கழகம், கலைப்பாடப்பிரிவும் (arts) தங்கள் மாணவர்களுக்கு போதிக்கப்பட வேண்டும் என்று விரும்பியது. 3rd க்ரூப் எனப்படும் கலைப்பாடப்பிரிவு, அரசு உதவியின்றி இப்படித்தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் இப்பள்ளியில் ஏற்படுத்தப்பட்டது.

பாடம் எடுக்க ஆசிரியர்கள்?

உதாரணத்துக்கு ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணி. இவர் தானே முன்வந்து வணிகம் மற்றும் அக்கவுண்டன்சி பாடம் எடுக்க விரும்ப்பம் தெரிவித்தார். இவரைப் போலவே மற்ற ஆசிரியர்களும், வழக்கமான தங்கள் வேலையோடு, பணிக்கப்படாத வேலையையும் ஊதியமின்றி மாணவர்களுக்காக கூடுதலாக செய்ய முன்வந்தார்கள். வழக்கமான பள்ளி நேரம் முடிந்தும், மேல்நிலை மாணவர்களுக்காக கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடம் நடத்தினார்கள். சனி, ஞாயிறுகளில் மேல்நிலை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் சிறப்பு வகுப்பு நடத்த ஆரம்பித்தார்கள். மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் விடுமுறையே இல்லை.

தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் சில பாடங்களுக்கு மட்டும் தனியார் ஆசிரியர்களை ஊதியத்துக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் நியமித்திருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை பொருளாதாரப் பாடத்தை மாணவர்களுக்கு நடத்தி வந்த தனியார் ஆசிரியருக்கு, வேறு வேலை கிடைத்துவிட்டதால் பாடமெடுக்க ஆளில்லை.

கையைப் பிசைந்து, கலங்கி நின்றார் தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன். சுமார் 70 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ?

ராமகிருஷ்ணனின் மனைவி சரஸ்வதியும் ஒரு ஆசிரியர்தான். அவர் அருகிலிருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் பணிபுரிகிறார். பொருளாதாரப் பாடம் எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். கணவர் பணிபுரியும் பள்ளியின் நிலையறிந்து உதவ முன்வந்தார். தனக்கு விடுமுறையாக கிடைக்கும் சனி, ஞாயிறுகளை கணவரின் பள்ளிக்காக தியாகம் செய்தார். மற்ற நாட்களில் காலையில் இவரிடம் பாடம் படித்துவிட்டு சென்று, வகுப்பறையில் அதே பாடத்தை எடுப்பாராம் தலைமை ஆசிரியர்.

“மாணவனாக இருப்பதற்கு வயது ஒரு பொருட்டில்லை. என்னுடைய மாணவர்களுக்கு பொருளாதாரப் பாடம் எடுத்தேயாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டபோது, நானே வீட்டில் மாணவனாகவும், பள்ளியில் ஆசிரியனாகவும் அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது. மனைவியாக இருந்தாலும், ஆசிரிய கண்டிப்போடே பாடம் எடுத்தார் சரஸ்வதி.

எங்கள் பள்ளியில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களது நேரத்தை தியாகம் செய்து, மாணவர்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியராக என் பங்கினை நான் செய்ய வேண்டாமா?” என்கிறார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் – சரஸ்வதி ஆசிரியத் தம்பதியினரின் உழைப்புக்கு பலன் தேர்வு முடிவுகளில் கிடைத்தது. எல்லா மாணவர்களுமே வெற்றி. கூடுதல் போனஸாக ஒரு மாணவி 200க்கு 200 மதிப்பெண் எடுத்தும் சாதனை புரிந்தார். பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவிகிதம் 97. Pure science எனப்படும் பாடப்பிரிவு தவிர மற்ற எல்லா பிரிவிலும் 100 சதவிகித தேர்ச்சி.

“எங்கள் பள்ளிக்கு கிடைத்த அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் மாதிரி, வேறு எந்தப் பள்ளிக்கு கிடைத்தாலும் இதே போன்ற சாதனை உறுதி. மாணவர்களும் ஆசிரியர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துழைத்தார்கள்” என்று சிலிர்த்துக் கொண்டார் தலைமை ஆசிரியர்.

மாவட்ட கல்வி நிர்வாகமும், ரெங்கசமுத்திரம் பள்ளியின் கல்வி எழுச்சிக்கு பின்புலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. அடிக்கடி பள்ளிக்கு அதிரடி விசிட் அடித்து, கல்வித்தரத்தை பரிசோதித்து வருகிறார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செல்வகுமார். “நான் செல்லும் பள்ளிகளில் எல்லாம் ரெங்கசமுத்திரம் பள்ளியை உதாரணமாக காட்டி பேசுவேன். எல்லா அரசுப் பள்ளிகளுமே இதேமாதிரியான தரத்தினை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு” என்கிறார் செல்வகுமார்.

ராமகிருஷ்ணன் மாதிரி தலைமை ஆசிரியர் வாய்த்தால் எதுவுமே சாத்தியம்தான்!

(நன்றி : புதிய தலைமுறை)

10 கருத்துகள்:

 1. எல்லாம் புகழும் சரஸ்வதி அம்மாவுக்கே...

  பதிலளிநீக்கு
 2. //“மாணவனாக இருப்பதற்கு வயது ஒரு பொருட்டில்லை. என்னுடைய மாணவர்களுக்கு பொருளாதாரப் பாடம் எடுத்தேயாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டபோது, நானே வீட்டில் மாணவனாகவும், பள்ளியில் ஆசிரியனாகவும் அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது. மனைவியாக இருந்தாலும், ஆசிரிய கண்டிப்போடே பாடம் எடுத்தார் சரஸ்வதி.//

  Great...

  பதிலளிநீக்கு
 3. வேலை இல்லாமல் ஆயிரமாயிரம் முதுகலை ஆசிரியர்கள் 20 வருடங்களாக காத்து இருக்கிறார்கள்.எந்த அரசும் அதை கண்டுகொள்வதில்லை.

  பதிலளிநீக்கு
 4. //வேலை இல்லாமல் ஆயிரமாயிரம் முதுகலை ஆசிரியர்கள் 20 வருடங்களாக காத்து இருக்கிறார்கள்.எந்த அரசும் அதை கண்டுகொள்வதில்லை.//kalaignar arasu saathanaikalil ithuvum onru.intha aatchiyaavathu kandukollumaa?

  பதிலளிநீக்கு
 5. //உதாரணத்துக்கு ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணி. இவர் தானே முன்வந்து வணிகம் மற்றும் அக்கவுண்டன்சி பாடம் எடுக்க விரும்ப்பம் தெரிவித்தார்.///

  He is my Uncle and am really proud of him and the HM and other tachers of Govt Higher secondary school, Rengasamudram, Aundipatty Taluk.

  பதிலளிநீக்கு
 6. ஆசிரியை சரஸ்வதி ரூபத்தில் அந்த தேவி சரஸ்வதியே வந்து பாடம் சொல்லிக்கொடுத்துள்ளால்..

  பதிலளிநீக்கு
 7. இவர்கள் மாதரி ஆசிரியர்களால் தான் இன்னும் கல்வி கொள்ளையும் தாண்டி நம் மாணவர்கள் விண்ணை தொடுகிறார்கள் அந்த ஆசிரியார்களுக்கு பாதம் தொட்டு வணக்கம்.

  பதிலளிநீக்கு
 8. For the people who complain about teachers and govt. employees please read about these teachers and appreciate them

  பதிலளிநீக்கு