28 மே, 2011

சிலுக்கு

"சிலுக்கு" - பெயரை கேட்டாலே சிலிர்த்து கொள்வார்கள் காதோரம் நரைத்தவர்கள். 1979ல் வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான விஜயவாடா விஜயலஷ்மி என்ற சிலுக்கு சுமிதா பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று. ரஜினி, கமல் தமிழ் திரையுலகை ஆண்டு வந்த சகாப்தத்திலும் கூட சிலுக்குவின் பெயருக்கு தனி மவுசு இருந்தது.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஒரு லட்சரூபாய் வரைக்கும் விலைபோனது என்பது உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள். சிலுக்குவின் கண்ணசைவு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை திருடியது என்றால் மிகையில்லை.

90களின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகிகளே தாராளக்கவர்ச்சியை காட்டு காட்டுவென்று காட்ட தயாராக இருந்ததால் கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. அவ்வகையில் சிலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதை விட்டு விட்டு குணச்சித்திரப் பாத்திரங்களிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.


திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ‘தாடிக்காரர்’ என்கிற சொல் இக்காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமான சொல்.

சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது. அவர் கடைசியாக இடம்பெற்று வெளிவந்த திரைப்படம் அர்ஜூன் நடித்த சுபாஷ். அப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அர்ஜூனுடன் நடனமாடியிருந்தார். அப்பாடலின் கடைசியில் கூட சிலுக்கு தீக்கிரையாவது போல கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சோகம்.

பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்போது சிலுக்கு கதாநாயகியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஒன்று ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூசுதட்டப்பட்டது. திருப்பதி ராஜன் என்பவர் தயாரித்து இயக்கிய தங்கத்தாமரை என்கிற திரைப்படம் அது. தற்கால ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் படத்தில் சில மாற்றங்களை அமைத்து, பாடல் காட்சிகளை இணைத்து வெளியிட திருப்பதிராஜன் முன்வந்தார். விநியோகஸ்தர்கள் மத்தியில் இத்திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பும், எதிர்ப்பார்ப்பும் கூட இருந்தது.

பல ஆண்டுகள் கழித்து சிலுக்குவை திரையில் காணப்போகிறோம் என்று சிலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் ஆர்வத்துடன் தங்கத்தாமரையை எதிர்பார்த்து இன்னும் காத்திருக்கிறார்கள். தங்கத்தாமரையை சீக்கிரமா கண்ணுலே காட்டுங்க சாமீங்களா...

7 கருத்துகள்:

 1. //சிலுக்கு"//
  சிலுக்கு மவுசு போயி ரொம்ப நாள் ஆவுது. படம் டிவில வேணா ரிலீஸ் ஆகலாம்

  பதிலளிநீக்கு
 2. அய்யயோ தலைவிய ஞாபகப்படுத்தீட்டியே நண்பா. இன்னிக்கு எப்படித்தான் தூங்குவேன்னு தெரியலையே

  பதிலளிநீக்கு
 3. சிலுக்கு ஸ்மிதா எனும் உதிர்ந்த நட்சத்திரத்தை பற்றிய நினைவுகூரும் பதிவு அருமையாக இருந்தது!

  பதிலளிநீக்கு
 4. //அந்தப் பழம் ஒரு லட்சரூபாய் வரைக்கும் விலைபோனது என்பது உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே கிடைக்காத பெருமை //

  எட்டாயிரமோ, பத்தாயிரமோ போனது, அதற்கு மேல் கண்டிப்பாக இல்லை.

  பதிலளிநீக்கு
 5. ஐயா யுவகிருஷ்ணரே ஏன் இந்த திடீர் பல்டி... ஒரு பதிவு மாவீரன் ஜெரோனிமா பற்றி பதிந்துவிட்டு அடுத்த பதிவாக இப்படி ஐட்டத்துக்கு தாவிவிட்டீர்களே !! ஏன் டிஆர்பி மாதிரி உங்கள் பதிவிற்கு வருகை தருவோர் எண்ணிக்கை குறைந்து விட்டதோ? அதை சரி செய்யவா இந்த கவர்ச்சி (கவுச்சி) பதிவு ?

  பதிலளிநீக்கு
 6. Silukku had taken wrong decision.She too had chance to become CM of Any south state.

  PANAYERI

  பதிலளிநீக்கு