14 மே, 2011

16,00,000

16,00,000

வாயைப் பிளந்து பயந்துவிடாதீர்கள்.
ஊழலில் சம்பந்தப்பட்ட கோடிகள் அல்ல இந்த எண்ணிக்கை.

நல்ல விஷயம்தான். வரும் ஆண்டு, இதே எண்ணிக்கையில் புதியவேலைவாய்ப்புகள் இந்திய இளைஞர்களுக்கு
கிடைக்கப் போகிறது.

வறுமையின் நிறம் சிகப்பு’, ‘பட்டம் பறக்கட்டும் இதெல்லாம் எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பு. அந்த காலக்கட்டத்தில் சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடியது. மேற்கண்ட திரைப்படங்கள், ஊடகங்கள் அப்பிரச்சினையை அக்காலத்தில் பிரதிபலித்ததற்கு சாட்சி.
இன்று யாராவது எனக்கு வேலை கிடைக்கவில்லை என்று சொன்னால் அது சமூகத்தின், தேசத்தின் குற்றமல்ல. சம்பந்தப்பட்ட நபர் மீதுதான் பிரச்சினை இருக்கக்கூடும். வேலையில்லா பட்டதாரி என்கிற சொல்லே வழக்கொழிந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து எடுக்கப்பட்ட கணிப்பு ஒன்று இந்த கூற்றினை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. மனிதவளத் துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்று மாஃபா ராண்ட்ஸ்டாட். சென்னையை தலைமையகமாக கொண்ட இந்நிறுவனம் வருடா வருடம் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த துல்லியமான கருத்துக் கணிப்பு ஒன்றினை நடத்தி, வெளியிடுவது வழக்கம்.
கடந்த 2010ஆம் ஆண்டு கருத்துக் கணிப்பில் பத்து லட்சத்துக்கும் மேலான புதிய வேலைகள் உருவாகும் என்று கணித்திருந்தார்கள். 11,31,643 பேருக்கு வேலை கிடைத்தது. அதிகபட்சமாக, சுகாதாரத்துறையில் (Healthcare) 2,54,655 பேருக்கும், விருந்தோம்பல் (Hospitality) துறையில் 1,60,300 பேருக்கும், ரியல் எஸ்டேட் துறையில் 1,29,312 பேருக்கும் வேலை கிடைத்தது. மும்பை, டெல்லி, சென்னை நகரங்கள் மட்டுமே 2,55,797 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்தது என்பது இங்கே குறிப்பிடத்தகுந்த விஷயம்.
இந்த ஆண்டு எப்படி இருக்கும்?
சமீபத்தில் மாஃபா ராண்ட்ஸ்டாட் எடுத்திருக்கும் கணிப்பில் மொத்தமாக பதினாறு லட்சம் புதிய வேலைகள் அமைப்புரீதியான நிறுவனங்களில் உருவாக்கப்படும் என்று தெரியவந்திருக்கிறது. பதிமூன்று தொழில் வகைகள், 650 நிறுவனங்கள், எட்டு பெரிய நகரங்கள் என்று கருத்தில் எடுத்துக்கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இவ்வாண்டும் சுகாதாரத்துறையே அதிக வேலைகளை தருவதில் முன்னணி வகிக்கும் என்று தெரிகிறது. இத்துறையில் மட்டுமே 2,48,500 புதிய வேலைகள் உருவாகலாம். விருந்தோம்பல் – 2,18,200, ரியல் எஸ்டேட் – 1,44,700, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு – 1,26,100, தயாரிப்புத்துறையும் (இயந்திரத் தயாரிப்பு தவிர்த்து) லட்சக்கணக்கில் புதிய வேலைகளை உருவாக்கித் தரும்.
வரும் கல்வியாண்டில் தாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தொழில்சார்ந்த மேற்படிப்புகளை, மாணவர்கள் அடையாளம் காண ஏதுவாக மாஃபா ராண்ட்ஸ்டாட்டின் கணிப்புகளை துறைவாரியாக கீழே தருகிறோம். ஒவ்வொரு துறை குறித்தும் சுருக்கமான, தீர்க்கமான அறிதலை இதன் மூலம் அனைவரும் பெறலாம். (கீழே வளர்ச்சி என்று குறிப்பிடப் படுவதை, சம்பந்தப்பட்ட துறை வேலைவாய்ப்பில் ஏற்படுத்திய, ஏற்படுத்தப்போகும் வளர்ச்சி என்பதாக அறிக)

வங்கி, நிதி மற்றும் இன்சூரன்ஸ் (Banking Financial Services & Insuranc)
தற்போதைய பணியாளர்கள் : 9,07,960
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 80,700
நிலையான, நேர்மறையான சிந்தனைகள் நிலவும் துறை. 2010ன் இறுதிக் காலாண்டில் இத்துறையின் சிறப்பான முன்னேற்றம் நம்பிக்கையை தருகிறது. குறுங்கடன், இன்சூரன்ஸ், வணிகத்துக்கு வங்கிக் கடன் என்று ஏறுமுகத்தில் இருக்கும் துறை. வரும் ஆண்டில் 8.9 சதவிகித வளர்ச்சி எதிர்ப்பார்க்கப் படுகிறது.

கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனை (Education, Training and Consultancy)
தற்போதைய பணியாளர்கள் : 97,94,000
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 1,07,500
கல்வித்துறை எப்போதுமே புதிய பணியாளர்கள் தேவைப்படக்கூடிய துறையாகவே விளங்குகிறது. வேலை தொடர்பான கல்வியை விரும்பும் மாணவர்கள் அதிகரித்து வருகிறார்கள். எனவே பயிற்சி மற்றும் ஆலோசனை துறையின் வளர்ச்சி நிச்சயம். இந்த்த் துறைகளில் 1.1 சதவிகித கூடுதல் வளர்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எரிசக்தி (Energy)
தற்போதைய பணியாளர்கள் : 8,95,500
கணிக்கப்படும் புதிய வேலைகள் : 24,900
கடந்தாண்டு இந்த துறை பெரியவில் சோபித்ததாக தெரியவில்லை (நம்மூரில் கூட மின்வெட்டு மூலம் நீங்களே நேரடியாக உணர்ந்திருக்கலாம்). ஆனால் ஆண்டின் கடைசிக் காலாண்டில், இத்துறை திடீர் சுறுசுறுப்பு பெற்றது. ஆயினும் கடந்தாண்டு பெரும்பாலும் நீடித்த சோம்பல், இவ்வாண்டும் தொடரும் என்றே நிறுவனங்களில் விசாரித்த அளவில் தெரியவருகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை (Renewable energy) அரசு ஊக்குவித்து வருவதால், இனி வரும் ஆண்டுகளில் இத்துறை விஸ்வரூபம் எடுக்கலாம். இருக்கும் துறைகளிலேயே மிகக்குறைவான புதிய வேலைகளை இத்துறைதான் வரும் ஆண்டில் ஏற்படுத்தும். வளர்ச்சி சதவிகிதம் 2.8 சதவிகிதம்.

சுகாதாரத் துறை (Healthcare)
தற்போதைய பணியாளர்கள் : 33,77,652
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
2,48,500
நம் நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையைப் பொறுத்தவரை சுகாதாரத்துறைதான் சூப்பர்ஸ்டார். கடந்தாண்டு நமக்கு கிடைத்த வேலைகளில் 16 சதவிகிதம் இத்துறையில் மட்டுமே கிடைத்தது. 2012 வாக்கில் 7500 கோடி அமெரிக்க டாலர்கள் அளவிலான வர்த்தக அதிசயத்தை நிகழ்த்தப் போகும் துறை இது (இன்றைய மதிப்பில் 7500 கோடியை 50ஆல் பெருக்கிப் பாருங்கள்). சுகாதாரத் துறையோடு கூடவே மருத்துவக் காப்பீடும் பெருகி வருகிறது. மெட்ரோ நகரங்களை தவிர்த்து, அடுத்தடுத்த நகரங்களில், கிராமங்களிலும் கூட சுகாதாரத்துறையின் சேவை விரிவடைந்து வருவதால் தனியார் மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கு இத்துறை மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. மருத்துவ சுற்றுலா மற்றும் மருத்துவம் தொடர்பான மற்ற துறைகளிலும் நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். 7.4 சதவிகித வளர்ச்சியை இத்துறை கூடுதலாக பெறக்கூடும்.

விருந்தோம்பல் துறை (Hospitality)
தற்போதைய பணியாளர்கள் : 61,11,300
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
2,18,200
கடந்தாண்டு சக்கைப்போடு போட்ட துறைகளில் இதுவும் ஒன்று. தற்போது ஹோட்டல் கட்டமைப்புகளில் செய்யப்படும் பெரிய முதலீடுகளை வைத்து கணிக்கும்போது, வேலைவாய்ப்புச் சந்தையில் இத்துறை நல்ல அறுவடையை செய்யும் என்று தெரிகிறது. 3.6 சதவிகித வளர்ச்சியை எதிர்நோக்கலாம்.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச்சார்ந்த ஏனைய துறைகள் (IT & ITES)
தற்போதைய பணியாளர்கள் : 19,18,865
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,83,000
இந்தியாவில் வேலைவாய்ப்பை கொட்டித் தருவதில் அமைப்புரீதியாக வலுவான துறை இது. கடந்த ஆண்டும் நிறைய இளைஞர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பத்தை நம்பியோர், நிச்சயம் கைவிடப்படார். 2011ஆம் ஆண்டிலும் நிறைய பேருக்கு இத்துறை வேலைவாய்ப்பைத் தரும். கிராமப்புறங்களில் பெருகிவரும் BPO சேவை, பரவலான வேலைவாய்ப்பை பெருகவைக்கும். 9.5 சதவிகித வளர்ச்சியை காணும்.

உற்பத்தித் துறைஇயந்திரங்கள் மற்றும் கருவிகள் (Manufacturing – machinery & equipment)
தற்போதைய பணியாளர்கள் : 11,34,800
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
68,400
கடந்தாண்டின் இறுதிக் காலாண்டில் சிறப்பாக செயல்பட்ட இத்துறை, அதே செயல்பாட்டை இவ்வாண்டும் தொடர்ச்சியாக தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்துறையை சார்ந்திருக்கும் சார்பு நிறுவனங்களின் வளர்ச்சி நம்பிக்கை தரும் விதத்தில் இருக்கிறது. எனினும் கூட நாட்டில் வீங்கிவரும் பணவீக்கம், இத்துறையின் நீண்டகால வளர்ச்சி அடிப்படையில் கவலையளிப்பதாகவே இருக்கிறது. இருப்பினும் வரும் ஆண்டில் 6 சதவிகித வளர்ச்சி நிச்சயம்.

உற்பத்தித் துறைஇயந்திரங்கள் தவிர்த்து (Manufacturing – non machinery)
தற்போதைய பணியாளர்கள் : 45,08,000
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
2,34,400
மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியச் சந்தையின் அபாரமான உள்நாட்டுத் தேவை, இத்துறையை பொருளாதார மந்த நெருக்கடியிலிருந்து  அதிவிரைவாக மீட்டிருக்கிறது. அரசின் பொருளாதார அடிப்படைகள் மற்றும் ஊக்கமும் இந்த மீள் எழுச்சிக்கு முக்கியமான காரணம். நுகர்வோர் பொருட்கள், உணவு, டெக்ஸ்டைல்ஸ், தோல் மற்றும் அதைச் சார்ந்தப் பொருட்கள் உள்ளிட்ட உற்பத்தித்துறை ஆகியவை உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பால், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று நம்பலாம். வளர்ச்சி சதவிகிதம் 5 ஆக உயரும்.

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (Entertainment & Media)
தற்போதைய பணியாளர்கள் : 13,56,300
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,26,100
2011ன் கடைசி காலாண்டில் திடீரென ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைத்தது. அந்தப் போக்கு இவ்வாண்டும் தொடரும். அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள், பொருளாதார வளர்ச்சி, நகரமக்கள் பழகிக் கொண்டிருக்கும் டிஜிட்டல் வாழ்க்கை, மக்களுக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு செலவிடப்படுவது என்று ஏராளமான காரணிகள் இத்துறையின் போக்கை நிர்ணயிக்கிறது. 9.3 சதவிகித வளர்ச்சியை இத்துறை காணக்கூடும்.

மருந்துத் துறை (Pharma)
தற்போதைய பணியாளர்கள் : 2,84,351
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
49,400
இந்திய மருந்து உற்பத்தித்துறை சமீப ஆண்டுகளில் சீரான வளர்ச்சியை கண்டுவருகிறது. வரும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிரடி வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஒப்பந்த உற்பத்தி மட்டுமே 3000 கோடி டாலராக உயரலாம். ஒப்பத ஆராய்ச்சித்துறை மட்டுமே 600 முதல் 1000 கோடி டாலர் வரையிலான வர்த்தகத்தை செய்யக்கூடும். இவ்வளவு பணம் புழங்குவதால் இத்துறைக்கு கூடுதல் பணியாளர்கள் நிறைய தேவைப்படுவார்கள். 17.2 சதவிகித வளர்ச்சியை வருமாண்டில் இத்துறை பெறக்கூடும்.

ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானம் (Real Estate & Construction)
தற்போதைய பணியாளர்கள் : 8,59,312
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,44,700
நாட்டில் நிலையாகியிருக்கும் பொருளாதார வளர்ச்சியால் இத்துறை மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்தாண்டு நல்ல வளர்ச்சியை அடைந்தபோதும் கூட, அது எதிர்ப்பார்ப்புக்கும் குறைவானதே. மத்திய, மாநில அரசுகள், மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் பெருமளவு கவனம் செலுத்துவதால், கட்டுமானத்துறை கலக்கிக் கொண்டிருக்கிறது. பெருகிவரும் சில்லறை வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறை தொடர்பான புதிய கட்டமைப்பு பணிகளும் அதிக வேலைவாய்ப்புக்கு கைகொடுக்கும். எதிர்ப்பார்க்கப்படும் வளர்ச்சி சதவிகிதம் 16.4
நுகர்வோர், சில்லறை வர்த்தகம் மற்றும் தொடர்பான மற்றைய சேவைகள் (Trade including Customer, Retail and Services)
தற்போதைய பணியாளர்கள் : 8,59,312
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
1,44,700
உலகப் பொருளாதார வளர்ச்சி, இந்திய ஏற்றுமதியில் ஏற்பட்டிருக்கும் உயர்வு, சர்வதேச வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகியவற்றால் வரும் ஆண்டில் சொல்லிக் கொள்ளும்படியான வேலைவாய்ப்புகளை இத்துறை உருவாக்கித் தரும். 2014ஆம் ஆண்டு வாக்கில் 674.37 பில்லியன் (இந்த தொகையை நூறு கோடியில் பெருக்கிப் பாருங்கள்) அளவுக்கு இந்தியாவின் சில்லறை வர்த்தகம் மட்டுமே இருக்குமாம். பெரிய நிறுவனங்கள், சிறு சிறு நகரங்களில் கூட சில்லறை வர்த்தக கடைகளை, புற்றீசல் மாதிரி உருவாக்கி வருகிறது என்பதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். 5.9 சதவிகித வளர்ச்சி வரும் ஆண்டில் கிடைக்கக் கூடும்.

போக்குவரத்து, சேகரிப்பு மற்றும் தொலைதொடர்பு (Transport, Storage & Communication)
தற்போதைய பணியாளர்கள் : 26,82,600
கணிக்கப்படும் புதிய வேலைகள் :
93,300
2010ஆம் ஆண்டு நன்றாக செயல்பட்ட துறைகள் இவை. துறைமுகத்துறை சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சியைப் பெற இயலவில்லை. ஆனால் ரயில், சாலை, விமானம் ஆகிய போக்குவரத்துகள் பரவாயில்லை. எனவே போக்குவரத்துத் துறை கடந்தாண்டு ஒரு கலவையான வளர்ச்சியையே எட்டியது. தொழில் தொடர்பான சரக்கு போக்குவரத்து அதிகரித்து வருவது இத்துறையின் வளர்ச்சிக்கு கூடுதல் பலம்.
3ஜி அறிமுகம், ஒரே மொபைல் நம்பரை எந்த சேவை வழங்கும் நிறுவனத்துக்கும் மாற்றிக்கொள்ளும் மொபைல் போர்ட்டபிள் வசதி போன்றவை தொலைதொடர்புத் துறையில் கூடுதல் பணிகளை உருவாக்கலாம்.
3.5 சதவிகித வளர்ச்சியை இத்துறைகளில் எதிர்நோக்கலாம்.
இந்தியாவின் பெருநகரவாரியாக, ஒவ்வொரு நகரத்திலும் எவ்வளவு புதிய பணியிடங்கள் வரும் ஆண்டில் உருவாகும்?
அஹமதாபாத் – 7,257
பெங்களூர் – 20,794
சென்னை – 68,134
புதுடெல்லி மற்றும் தேசிய தலைநகரகப் பகுதிகள் – 1,02,616
ஹைதராபாத் – 13,489
கொல்கத்தா – 31,759
மும்பை – 1,02,884
புனே – 14,720
“தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்தியாவில் பத்துலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் அமைப்பு சார்ந்த நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்குமே மகிழ்ச்சியான விஷயம்தான். உலகெங்கும் ஏற்பட்டு வரும் பொருளாதார மாற்றங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் இந்தியா, சீனா ஆகிய வளர்ந்துவரும் நாடுகளில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. இதனால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்நாடுகளின் பொருளாதாரமும் ஏற்றமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
ஆனாலும் நம் நாட்டில் பணித்திறன் குறைவாகவே இருக்கிறது. இதனால் இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் பாதிக்கிறது என்பதை நாட்டின் முன்னணி மனிதவள சேவை நிறுவனம் என்கிறவகையில் எங்களால் உணரமுடிகிறது. பணித்திறனை அதிகரிக்க அரசும், தனியார் நிறுவனங்களும் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்என்று இந்த கணிப்பு முடிவுகள் குறித்து பேசும்போது கூறுகிறார் ஈ.பாலாஜி. இவர்தான் மாஃபா ரா ராண்ட்ஸ்டாட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர்.
(நன்றி : புதிய தலைமுறை)

13 கருத்துகள்:

 1. நல்ல கட்டுரை..

  இந்தியாவின் வருமானம் ஐடியால் மட்டுமே என நினைக்கும் பொதுபுத்தி மாற ஒரு த்கவல்.

  இந்தியவைன் மொத்த GDP 150 Trillion DOlloars. இதில 5.1% மட்டுமே ஐடியின் பங்கு. நேரிடையாக மற்றும் மறைமுக வேலை என இரண்டையும் கணக்கில் கொண்டாலும் 2-2.5 கோடி பேர்தான் அதில் இருக்கிறார்கள்.

  இந்தியாவின் நிஜ வளர்ச்சிக்கும் இது மட்டுமெ எகாரணம் அல்ல. ஐடியை விட ஆட்டோமொபைல், மெட்டல் போன்ற துறைகள் வேகமாக வளர்ந்துவருகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 2. தமிழன் அவர்களே!

  இதே மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாமல் உருப்படாத பின்னூட்டங்களை தொடர்ச்சியாக பின்னூட்டிக் கொண்டிருந்தால், உங்கள் பின்னூட்டங்களை வெளியிட முடியாது என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன் :-(

  பதிலளிநீக்கு
 3. அம்மா ஆட்சியின் முதல் நல்ல அறிகுறி....

  அம்மாவின் சாதனை சரித்திரம் லக்கியின் மூலமாகவே ஐந்து ஆண்டுகளும் தெரிய வேண்டும்...

  பதிலளிநீக்கு
 4. //இந்தியாவின் நிஜ வளர்ச்சிக்கும் இது மட்டுமெ எகாரணம் அல்ல. ஐடியை விட ஆட்டோமொபைல், மெட்டல் போன்ற துறைகள் வேகமாக வளர்ந்துவருகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.//

  கார்க்கி... மற்ற துறைகளில் ஐடி அளவிற்கு கூலி மற்றும் வளர்ச்சி இருக்குமா என்பது குறித்து உனது கருத்தை அறிய ஆவலாய் உள்ளேன்

  பதிலளிநீக்கு
 5. If you are truly believe in people verdict then say something about your DMK downfall and ADMK Clean sweep.Then everyone know that you have general opinion about people problem.

  பதிலளிநீக்கு
 6. @ திம்மிக்கள் குறித்து உங்களிடம் நகைச்சுவையான கட்டுரை எதிர்பார்க்கிறேன் தலைவரே, தோல்விக்கு என்ன காரணம் கூறுகிறீர்கள் என்று தெரிந்துக் கொள்ளவும் ஆவல்
  லக்கி அண்ணாவிற்கு 1 டஜன் கர்சீப் பார்சல்
  ராகவேந்திரன்,தம்மம்பட்டி

  பதிலளிநீக்கு
 7. very good and useful article. It has come on time also. good work yuva. thanks.

  பதிலளிநீக்கு
 8. நல்ல பயனுள்ள பதிவு...நன்றி...

  http://zenguna.blogspot.com

  பதிலளிநீக்கு
 9. நண்பர் யுவகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. நம் நாட்டில் நிறைய வேலை வாய்ப்பு இருப்பது மிகவும் மகிழ்வான விடயம். ஆனால் நல்ல ஒரு தொழிலாளியை உருவாக்குவது என்பது நாம் படிக்கும் காலத்திலேயே ஆரம்பிக்கவேண்டும், நமது பாடத்திட்டத்தில் செய்முறை பயற்சி அதிக அளவில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய சிறிய கருத்து.

  அன்புடன்
  அப்பாதுரை
  சிங்கப்பூர்

  பதிலளிநீக்கு