30 ஏப்ரல், 2011

போராட்டங்கள் - சாண்டில்யன்

ஏழாம் வகுப்பு கோடை விடுமுறையின் போதுதான் ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை நானே ராஜராஜ சோழனாக நினைத்துக்கொண்டு வானதிகளை தேட ஆரம்பித்த காலம் அது (பி செக்‌ஷன் குமுதா வானதி கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தினாள்). அடுத்தடுத்து பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் என்று கல்கியை கரைத்துக் குடிக்க ஆரம்பித்தேன்.

கல்கி தாகம் தீர்ந்தபோதுதான் சாண்டில்யனை நாடினேன். கடல்புறா, ராஜதிலகம், கன்னிமாடம், யவனராணி, இளையராணி, ராணா ஹமீர் என்று அடுத்தடுத்து வாசித்த அவரது நாவல்களால் கிறங்கிப் போனேன். பதலக்கூர் சீனிவாசலுவை துரோணராக ஏற்றுக்கொண்ட ஏகலைவன் என்பதால் எனக்கு சாண்டில்யனை இயல்பாகவே பிடித்துப் போனது. அந்த காலத்தில் குமுதத்தில் தொடர்கதை எழுதுவதற்காகவே, இவருக்கு மாதசம்பளம் வழங்கப்பட்டு வந்ததாக அப்பா சொல்லியிருக்கிறார். தமிழ் சரித்திரப் புதினங்களின் சாதனை மன்ன்ன் சாண்டில்யன் என்று சொல்வதில் தவறேதுமில்லை. அவர் எழுதுவது இலக்கியமா, வெறும் செக்ஸ் கதைகளா என்று அந்த காலத்தில் பெரிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்ததாம்.

யவனராணியின் முல்லைக்கொடி போன்ற இடை, மைவிழிச்செல்வியின் பரந்து விரிந்த மார்புகள், வாழைத்தொடைகள், அம்சமான தொப்புள்கள் என்று ஜில்பான்ஸாக எழுதும் சரித்திர எழுத்தாளர் அவர் என்பதாகவே எனது மனதில் பதிந்துப்போனார். சாண்டில்யனின் சுயசரிதையான ‘போராட்டங்கள்’ நூலினை கடந்த இரவில் வாசிக்கும் வரை.

இவ்வளவு எளிமையான மொழியில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது வாழ்க்கையை குமுதம் இதழில் இவர் தொடராக எழுதியிருக்கிறார் என்பதை நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இந்நூலில் கையாளப்பட்டிருக்கும் எளிய, அசத்தலான தமிழ் இந்த இண்டர்நெட் யுகத்தில் கூட எனக்கு கைவரவில்லையே என்று பொறாமைப்படுகிறேன். வரிக்கு வரி இழையோடும் நகைச்சுவை, சுய எள்ளல், எதிர்க்கருத்து கொண்டோர் மீது மெல்லிய வன்மத்தோடு கூடிய நையாண்டி. சந்தேகமேயில்லை. சாண்டில்யன் ஒரு மன்னன்தான்.

சாண்டில்யன் என்றதுமே உங்கள் மனதுக்குள் எப்படியான ஒரு தோற்றம் கற்பனைக்கு வருகிறது?

கருத்த உயரமான கம்பீரத் தமிழ் தோற்றம். வெட்டறுவா மீசை. எதிரில் பேசுபவர்கள் பெண்களாக இருந்தால், அவர்களது கழுத்துக்கு கீழேயே அலைபாயும் குறும்புக் கண்கள். இப்படித்தான் நான் கற்பனை செய்து வைத்திருந்தேன். அவரை அந்தக்காலத்தில் சந்திக்க வந்த சில கல்லூரி மாணவிகளும் இப்படியான கற்பனையிலேயே அவரை சந்திக்க வந்திருக்கலாம். அவர்கள் சந்தித்தது ஒரு அறுபத்தைந்து வயது கிழவரை. நெற்றியில் நாமம். வைணவப் பாரம்பரிய குடுமி. கீழே எட்டுமுழ வேட்டி. மேலே மூன்று முழத்துண்டு.

மாணவிகளில் ஒருவர் கேட்கிறார். “நீங்கள்தானா?”

சாண்டில்யன் சொல்கிறார். “ஆமாம். நானேதான்!”

திருக்கோயிலூரில் 1910ஆம் ஆண்டு, ராமானுஜம் அய்யங்கார் – பூங்கோவில்வல்லி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த பாஷ்யம் அய்யங்காரை உங்களுக்கு தெரிந்திருக்காது. எனக்கும்தான். பிற்பாடு அவரைதான் சாண்டில்யனாக தமிழகமே தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது.

சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்த பாஷ்யம், திருச்சி செயிண்ட் ஜோசப்பில் கல்லூரிப்படிப்பை முடித்தார். கல்லூரிக் காலத்தில்தான் ராஜாஜியின் மூலமாக தேசிய எழுச்சி பெற்று, சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். 1929ல் இவருக்கும், ரங்கநாயகிக்கும் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்குப் பிறகு அப்பா காசிலேயே கும்மியடித்ததை, சாண்டில்யன் பெருமையாகவும், நகைச்சுவையாகவும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

சோற்றுக்குப் பிரச்சினை இல்லை என்பதால் அவருக்கு இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக எடுத்துக் கொள்ளலாம். 1930ல் சென்னை தி.நகரில் குடியேறுகிறார். விகடனில் பின்னி, பெடலெடுத்துக் கொண்டிருந்த கல்கி இவரது தெருக்காரர். திரு வி.க.வின் நவசக்தியில் பணிபுரிந்த சாமிநாத சர்மா இவரது இலக்கிய வெறிக்கு சோளப்பொறி ஆன நண்பர். இடையில் சும்மா இருந்த காலத்தில் இவரது அப்பா தமிழ்பயில, திருக்கண்ணபுரம் ஸ்ரீனிவாசாச்சாரியார் என்கிற தமிழறிஞரிடம் சேர்த்து விட்டதாகவும் தெரிகிறது.

சாண்டில்யனின் முதல் கதையை வெளியிட்டவர் தந்தை பெரியாரின் நண்பரான தோழர் சுப்பிரமணியம். பார்ப்பனர்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த நீதிக்கட்சியின் பத்திரிகையான ‘திராவிடன்’ இதழில்தான் இவரது முதல்கதை ‘சாந்த சீலன்’ வெளியானது. காங்கிரசுக்கு ஆதரவான கதை. இந்த கதையை வெளியிட்டதால் தோழர் சுப்பிரமணியத்துக்கு வேலைபோனது தனி கிளைக்கதை.

பின்னர் சிறுகதைகள் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். ஆனந்த விகடனில் அடுத்தடுத்து இவரது சிறுகதைகளை கல்கி வெளியிட, பாஷ்யம் அய்யங்கார் சாண்டில்யன் ஆனார். நவசக்தியில் சாமிநாத சர்மா மூலமாக கட்டுரைகளும் எழுதினார்.

இந்த கட்டத்தில் சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீநிவாசனை ஒருநாள் சந்திக்கிறார்.

“என்ன செய்கிறாய்?”

“கதை எழுதுகிறேன். உங்கள் பேப்பரில் கூட எழுதியிருக்கிறேன்”

“அதில் எப்படி பிழைக்க முடியும்?”

“முடியாதுதான்”

“நீ கிராஜூவேட்டா?”

“இல்லை” (கல்லூரிப் படிப்பை சுதந்திரப் போராட்ட வெறியில் – ஐ மீன் உணர்வில் - முழுமையாக முடிக்கவில்லை என்று தெரிகிறது)

“உனக்கு வேலை தருகிறேன். குமாஸ்தா வேலை என்றால் 35 ரூபாய் சம்பளம். பத்திரிகையாளன் ஆக வேண்டுமானால் ஆறு மாதங்கள் சம்பளமின்றி பயிற்சியாளனாக வேலை பார்க்க வேண்டும். எது வேண்டும்?”

“பத்திரிகையாளனாக எடுத்துக் கொள்ளுங்கள்”

சாண்டில்யனின் ‘போராட்டம்’ தொடங்கிய நொடி அதுதான்.

அந்த காலத்தில் ஆங்கிலப் பத்திரிகைகளில் நிருபர்களின் சம்பளம் இருநூற்றி ஐம்பது ரூபாயிலிருந்து தொடங்குகிறது. தினமணியில் கூட அறுபது ரூபாய். ஆறு மாதம் அல்லாடியபிறகே சாண்டில்யனுக்கு முப்பத்தைந்து ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.

ஆனால் ஒரு பத்திரிகையாளன் சம்பாதிப்பதை, உலகில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் வேறு எவருமே சம்பாதிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அவன் சம்பாதிப்பது பணமல்ல. அனுபவம். நூறாண்டுகள் வாழும் சாதாரண ஒரு மனிதர் பெறும் அனுபவங்களை ஒரு பத்திரிகையாளன் நான்கைந்து ஆண்டுகளிலேயே பெற்றுவிட முடியும் என்பதுதான் இந்தப் பணியின் சிறப்பு (ஒழுங்காக வேலை பார்த்தால்).

சாண்டில்யனும் அனுபவங்களை சம்பாதிக்கிறார். மகாத்மா காந்தியை கூட சந்தித்து பேட்டி கண்ட புண்ணியம் அவருக்கு வாய்க்கிறது. யாரால் ஈர்க்கப்பட்டு, அரசியல் ஆர்வம் கொண்டாரோ, அதே ராஜாஜியை கட்டுரை எழுதி விளாசவும் அவர் தயாராகவே இருந்தார். கல்கியோடு கூட மோதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

1952ஆம் ஆண்டு சென்னை பொதுக்கூட்டம் ஒன்றில் ராஜாஜி பேசுகிறார்.

“சினிமா பார்ப்பது அபாயகரமான படிப்பு. அதனால் புத்தி கெடுகிறது. உண்மை மறைகிறது. கொலை, கொள்ளை அதிகரிக்கிறது. அவ்வளவு ஏன்? ‘கம்யூனிஸம்’ கூட உண்டாகிறது”

இந்தக் கருத்துக்கு எதிராக சுதேசமித்திரன் வார இதழில் சாண்டில்யன் ‘சினிமா பார்ப்பது கெடுதலா?’ என்று எழுதுகிறார். கிட்டத்தட்ட கமல்ஹாசன் பாணி சிந்தனைகள் இவருடையது. சினிமா ஒரு தொழில்நுட்பம் அதை தவிர்க்க இயலாது. அதை நல்ல முறையில் மாற்ற வேண்டியதுதான் நமது கடமை என்று சாண்டில்யன் குறிப்பிடுகிறார்.

ராஜாஜியையே எதிர்த்துவிட்டார் என்று சாண்டில்யன் மீது பலரும் பாய்ந்தார்கள். பிற்பாடு சாண்டில்யன்தான் வெல்கிறார். ஏனெனில் ராஜாஜியின் ‘திக்கற்ற பார்வதி’ கூட சினிமா ஆனது.

அதேநேரம் சாண்டில்யனும் சினிமா விமர்சனங்களில் ரொம்பவும் கறாராகவே இருந்திருக்கிறார். திராவிட கருத்தாக்கங்களை தாங்கி வந்த படங்களை இவரால் தாங்கிக்கொள்ளவே இயலவில்லை. கல்கி, அறிஞர் அண்ணாவை ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அடைமொழியிட்டு அழைத்ததை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். ‘நாத்திகம்’ என்கிற சிந்தனையை சாண்டில்யனால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக ‘கற்பு’ குறித்தான கற்பிதங்களை திராவிட எழுத்தாளர்கள் பத்திரிகைகளிலும், சினிமாவிலும் உடைத்தெறிந்ததை எதிர்த்து பெரும் போராட்டத்தையே சாண்டில்யன் நிகழ்த்த வேண்டியதாக இருக்கிறது. டி.கே.எஸ். சகோதர்களின் ‘மனிதன்’ நாடகமாகவும், பிற்பாடு திரைப்படமாகவும் வந்தபோது ‘விபச்சாரக்கதை’ என்று கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். நவகாளி யாத்திரையின் போது நாட்டில் ஏற்பட்ட வல்லுறவுகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு என்கிற உயரிய நோக்கத்தில் ‘மனிதன்’ உருவானாலும், பிறப்பிலேயே பிற்போக்காளராக பிறந்துவிட்ட சாண்டில்யனால் அதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவரது போராட்டங்களை வாசிக்கும்போது, சாண்டில்யன் ஒரு கண்டிப்பான பார்ப்பன பிற்போக்காளராகவே வாழ்ந்திருக்கிறார் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

சினிமா மீது சாண்டில்யனுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்?

காரணம் இருக்கிறது. பத்திரிகைத்துறையில் பணியாற்றிக்கொண்டே திரைத்துறையிலும் ஈடுபட்டிருக்கிறார் சாண்டில்யன். நிறைய டிஸ்கஷனில் கலந்துகொண்டிருக்கிறார். சுவர்க்க சீமா, என் வீடு ஆகிய படங்களில் திரைக்கதைப் பிரிவில் இவரது பங்களிப்பு நேரடியாகவே இருந்திருக்கிறது. தனது சினிமா அனுபவங்களை பிற்பாடு (1985) ‘சினிமா வளர்ந்த கதை’ என்கிற நூலில் பகிர்ந்துகொண்டும் இருக்கிறார்.

சுதேசமித்திரனில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பாதி சம்பளத்துக்கு ஹிந்துஸ்தான் டைமில் பணிக்கு சேர்ந்தது, பின்னர் மீண்டும் சுதேசமித்திரனுக்கே வந்தது என்று பத்திரிகை அலுவலக அரசியல், சாண்டில்யனின் வாழ்க்கையை ஏற்றமும், இறக்கமும் ஆனதாக மாற்றியமைத்தது. இன்றைய தினப்பத்திரிகைகளின் வார இதழ்களுக்கான வடிவமைப்பை தமிழில் முதலில் உருவாக்கியவர் சாண்டில்யன்தான் என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆம். மகா த்ராபையாக வந்துக்கொண்டிருந்த ‘அனுபந்தம்’ என்று சொல்லக்கூடிய இதழுடன் இணைப்புகளை வாரமலராக்கி, மணம் வீச செய்த சாதனையாளர் சாண்டில்யன்தான்.

ஒரு பத்திரிகையாளராக மட்டுமல்ல. பத்திரிகையாளர் சங்கம், எழுத்தாளர் சங்கம் உருவாக்கம் என்று பலவிதங்களிலும் சாண்டில்யன் முன்னோடியாகவே இருந்திருக்கிறார். கிருஷ்ணகான சபா கூட இவரது வீட்டு வராந்தாவில்தான் தொடங்கப்பட்டது என்று குறிப்பிடுகிறார். உழைக்கும் பத்திரிகையாளருக்காக கடுமையாகப் போராடி பல சலுகைகளை வாங்கித்தந்த இவரால், எந்த சங்கத்திலும் கடைசிவரை நீடிக்கவே முடியவில்லை. நிறுவனர்களில் ஒருவராக பல சங்கங்களிலும் இவர் இருந்திருந்தாலும், பிற்பாடு வந்து இணைந்தவர்களோடு மோதி பாதியிலேயே வெளியேறிவிடுவது சாண்டில்யனின் ராசி. இவர் யாரிடமெல்லாம் மோதுகிறாரோ, அவர்களெல்லாம் சாண்டில்யனை மிகவும் மதித்தவர்கள், அன்பு பாராட்டியவர்கள் (மோதல்களுக்குப் பிறகும்) என்பதுதான் இங்கே குறிப்பிடத்தகுந்தது. கொள்கை வேறு, நட்பு வேறு, அபிமானம் வேறு என்று வாழ்ந்த கண்டிப்பான மனிதராகவே சாண்டில்யனை பார்க்க முடிகிறது.

விருதுகள் குறித்த கேலியான பார்வை சாண்டில்யனுக்கு உண்டு. விருது தகுதியானவர்களுக்கு போய் சேருகிறது என்றாலும், அவர்களது தகுதியற்ற படைப்புகளுக்குதான் கிடைக்கிறது என்று நொந்துக் கொள்கிறார். ‘ஆளுக்குதான் பரிசே தவிர, நூலுக்கு பரிசில்லை’ என்று அழகான சொற்றொடரை இங்கே பயன்படுத்துகிறார். சாகித்ய அகாடமி தமிழ்நாட்டுக்கு தேவைதானா என்கிற கேள்வியையும் முன்வைக்கிறார்.

எழுபதுகளில் மலர்ந்த நவீன இலக்கியப் போக்கையும் சாண்டில்யனால் புரிந்துகொள்ள இயலவில்லை அல்லது அவருக்கு பிடிக்கவில்லை. விமர்சனம் என்கிற சொல்லையே திறனாய்வு என்று மாற்றியதை கூட குறைபட்டுக் கொள்கிறார்.

இந்நூல் குறிப்பாக பத்திரிகைத்துறையில் பணிபுரிபவர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டியது. எழுத்து மற்றும் அலுவலகப் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்று இலகுவாக எடுக்கப்பட்ட பாடமாக இந்நூலை கருதலாம். பத்திரிகையாளர்கள் மட்டுமன்றி அனைவரும் கூட ஒரு சுயமுன்னேற்ற நூலாக இந்நூலை வாசிக்கலாம். தவறேதுமில்லை. நல்லதொரு மனவெழுச்சியை ஏற்படுத்தக்கூடிய கதைதான் சாண்டில்யனின் கதை.

சாண்டில்யன் உள்ளிட்ட 28 எழுத்தாளர்களின் எழுத்துகளை நாட்டுடமையாக்க 2009ல் கலைஞர் ஆணையிட்டார். அப்போது சுந்தரராமசாமி மற்றும் கண்ணதாசனின் வாரிசுகள் இந்த ஆணையை கடுமையாக எதிர்த்தார்கள். நாட்டுடமைக்கு ஒத்துக்கொள்வது அவரவர் வாரிசுகளின் விருப்பம் என்று அரசு பல்டியடிக்க வேண்டியதாயிற்று. எனவே சாண்டில்யனின் வாரிசுகளும் அவரது எழுத்தை நாட்டுடமை ஆக்கவேண்டாமென்று மறுத்துவிட்டார்கள்.

போராட்டங்கள் என்கிற தலைப்பில் குமுதத்தில், 70களின் மத்தியில் இத்தொடர் எழுதும்போதே சாண்டில்யனுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக கல்கி தரப்பிலிருந்தும், டி.கே.எஸ். வாரிசுகளின் தரப்பிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்புகளை நூலிலேயே கொஞ்சம் குசும்போடு பதிவு செய்திருக்கிறார் சாண்டில்யன். இத்தொடர் திடீரென முடிந்ததும் ஏராளமான வாசகர்கள் “ஏன் முடித்து விட்டீர்கள்?” என்று சாண்டில்யனுக்கு கடிதம் எழுதினார்கள். “இது முடியவில்லை. எழுதுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அவகாசம் கிடைக்கும்போது மீண்டும் எழுதுவேன்” என்று பிற்சேர்க்கையில் சாண்டில்யன் குறிப்பிட்டிருக்கிறார். எழுதினாரா என்றுதான் தெரியவில்லை.

நூலின் பெயர் : போராட்டங்கள்.
ஆசிரியர் : சாண்டில்யன்
வெளியீடு : வானதி பதிப்பகம்,
13, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.
விலை ரூ.32.

10 கருத்துகள்:

 1. என் தாத்தாவின் கிளாஸ்மெட் அவர் . இன்னொரு விஷயம் ..அவர் உபன்யாசங்கள் கூட செய்வார் . தஞ்சை மேலவீதி கிருஷ்ணன் கோயிலில் நடந்த ஒரு உபன்யாசத்துக்கு என் தாத்தாவுடன் சென்றது நினைவுக்கு வருகிறது..

  பதிலளிநீக்கு
 2. சென்னை-மயிலை கச்சேரி சாலையில் யாருமே அறியாத ஒரு நூலகத்தை கண்டுபிடித்திருக்கிறேன். இது முழுக்க முழுக்க இலவசமாக நூல்களை வாசகர்களுக்கு வழங்கும் நூலகம்.

  இந்த நூலகத்தின் சிறப்பு என்னவென்றால், வாசகரின் நாடிப்பிடித்து.. இந்நூல்தான் இவருக்கு ஏற்றது என்பதை கருத்தில் கொண்டு, நூலகரே வாசகருக்கான நூலை அடையாளம் கண்டு, தேடிப்பிடித்து தருகிறார்.

  அவ்வாறு எனக்கு கிடைத்த ஒரு நூல்தான் சாண்டில்யனின் போராட்டங்கள்...

  பதிலளிநீக்கு
 3. திடீரென பார்ப்பனர் நிழலில் ஒதுங்க ஆரம்பித்து விட்டீரே, லக்கிலூக்,உங்களுக்கு கீழ் தானா?சுஜாதா?இந்த வரட்டு ஆணவம் உங்களுக்கு அழகில்லை,நீர் போக வேண்டிய தூரம் அதிகம்,நீர் ஏன் நெஞ்சுக்கு நீதி படித்த்டு விமர்சனம் எழுதகூடாது?ஓய்

  பதிலளிநீக்கு
 4. இவரது நாவல்களை ராணி முத்துவில் தேடிப்பிடித்து படித்திருக்கிறேன் (தொண்ணூறுகளின் ஆரம்பதிதில் அல்லது பதின்மவயதில் பாய்ந்த வேளையில்).

  யவனராணி கதை ராணி முத்துவில் வந்தபோது மூன்றாவது அத்யாயம் (என்று நினைக்கிறேன்) முழுவதும் ஒரு கிளுகிளுப்பான வர்ணனையில் பயணிக்கும். அதோடு ஜெயராஜின் கிளர்ச்சியான கோட்டோவியங்களும் போட்டி போட்டுக்கொண்டு உணர்வுகளை தூண்டுகிற வகையில் அமைந்து இருக்கும். ஹ்ம்ம்ம், பழைய நினைவுகள்.

  இப்போதெல்லாம் இது போன்ற பத்திரிக்கையாளர்களின் சுய சரிதங்களையும், சினிமாக்காரர்களின் சுயசரிதங்களையும் தேடிப்பிடித்து படித்து வருகிறேன். சமீபத்தில் படித்தவை: குமுதம் எடிட்டர் எஸ்.ஏ.பி மற்றும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களின் முதலாளி புத்தகங்கள். இரண்டுமே டாப் கிளாஸ்.


  கிங் விஸ்வா
  சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சித்திரக்கதை - சென்னை சூப்பர் கோமிக்ஸ் - பாண்டி: பாய் ஆப் தி மேட்ச்

  பதிலளிநீக்கு
 5. அருமை பல விஷயங்கள் எனக்கு புதியவை. நானும் அவரை சிருங்காரம் ததும்ப எழுதிய எழுத்தாளராகவே இனங்கண்டு வைத்திருந்தேன். பத்தாம் வகுப்பளவில் படித்த போது தேடி தேடி படித்தது சாண்டில்யனைத்தான்

  பதிலளிநீக்கு
 6. சாண்டில்யனை விடுங்கள்.
  ஆளுமை நிறைந்த குந்தவையை விட,பேரழகும்,புத்திக்கூர்மையும்,தந்திரங்கள் நிறைந்த நந்தினியைவிடவும் ஏன் அனைத்து ஆண் வாசகர்களுக்கும் அப்பாவி,வெகுளி,பயந்த சுபாவம்
  நிறைந்த வானதியை மட்டுமே பிடித்துபோகிறது?(எனக்கு உள்பட) ஆணாதிக்க சிந்தனை?

  பதிலளிநீக்கு
 7. இளையபல்லவன் அகூதா அமீர் மறக்க முடியாதது

  பதிலளிநீக்கு
 8. //திடீரென பார்ப்பனர் நிழலில் ஒதுங்க ஆரம்பித்து விட்டீரே, லக்கிலூக்,உங்களுக்கு கீழ் தானா?சுஜாதா?இந்த வரட்டு ஆணவம் உங்களுக்கு அழகில்லை,நீர் போக வேண்டிய தூரம் அதிகம்,நீர் ஏன் நெஞ்சுக்கு நீதி படித்த்டு விமர்சனம் எழுதகூடாது?ஓய்//

  பதிலளிநீக்கு
 9. ஒரு பத்திரிகையாளன் சம்பாதிப்பதை, உலகில் வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் வேறு எவருமே சம்பாதிக்க முடியாது. துரதிருஷ்டவசமாக அவன் சம்பாதிப்பது பணமல்ல. அனுபவம். நூறாண்டுகள் வாழும் சாதாரண ஒரு மனிதர் பெறும் அனுபவங்களை ஒரு பத்திரிகையாளன் நான்கைந்து ஆண்டுகளிலேயே பெற்றுவிட முடியும் என்பதுதான் இந்தப் பணியின் சிறப்பு (ஒழுங்காக வேலை பார்த்தால்).

  உண்மை. கட்டுரை அருமையாக இருந்தது

  பதிலளிநீக்கு
 10. திருவரங்கன் உலா பற்றி எதுவும் சொல்லவில்லையே? உங்களின் கடவுள் எதிர்ப்பு நம்பிக்கையை தூர வைத்து விட்டு , சரித்திர கதை போலே படிக்கலாம். மத புரட்சி செய்த மகான் படிக்கலாம் ( பெரியாரே ஒத்து கொண்ட ஒரு புரட்சியாளர் ராமானுஜர்)

  பதிலளிநீக்கு