5 ஏப்ரல், 2011

சொன்னதை செய்பவர்!

டிவியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த ரகுவன்ஷ் கன்வாருக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அவர் பீகாரின் அரசு ஊழியர். மோட்டர் வெய்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார். ஃப்ளாஷ் செய்திகளில் அவரது பெயர்தான் ஓடிக் கொண்டிருந்தது. பீகாரின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பி.கே.சஹி ஒரு பொதுக்கூட்டத்தில் கன்வாரின் பெயரை உச்சரித்திருந்தார். ஆனால் கன்வாருக்கு மகிழக்கூடிய விஷயமாக இது அமையவில்லை.
ஏனெனில் செய்தி இவ்வாறாக ஓடிக் கொண்டிருந்தது. “முறைகேடாக சொத்துசேர்த்து கட்டிய ரகுவன்ஷ் கன்வாரின் வீட்டில் இருந்து அவர் அகற்றப்படுவார். அந்த இடத்தில் இனி அரசுப்பள்ளி அமையும். அமைச்சர் அறிவிப்பு
ஊழலுக்கு எதிரான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் போருக்கு முதல் களப்பலி ரகுவன்ஷ் கன்வார். சமீபத்தில்தான் பீகார் அரசு இப்படியான ஒரு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதாவது வருமானத்துக்கு மீறிய சொத்துகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களிடமிருந்து, இந்த முறைகேடான சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
கன்வாருக்கு 54 லட்சரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதை சில ஆண்டுகளுக்கு முன்பாக பீகார் விஜிலென்ஸ் கண்டறிந்தது. அதையடுத்தே அவர் 20 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டிருக்கிறார். இது மட்டுமல்ல, இதைப்போலவே மேலும் 18 வழக்குகள் பதியப்பட்டு சுமார் 21 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இன்னும் 87 புதிய வழக்குகளுக்கான முகாந்திரமும் இருப்பதாக செய்திகள் வந்துக் கொண்டிருக்கிறது.
ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் என்று அடுத்தடுத்து நடந்த தேசிய ஊழலின் முடைநாற்றத்தால் முடங்கிப் போயிருக்கும் ஒரு நாட்டுக்குள் பீகார் தனித்தீவாய் நம்பிக்கையளிக்கிறது. ஊழல் நெருப்பு நாடெங்கும் பற்றியெறிய, எரியாத கற்பூரமாய் பீகார் மட்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் நிதிஷ்குமாரின் நேர்மைக்கு பங்கமாய் ஊழல் மிகுந்த அரசு ஊழியர்களின் செயல்பாடுகள் முட்டுக்கட்டையாக அமைந்தன. கடந்தாண்டு நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, பீகார் மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். “ஊழல் சகித்துக் கொள்ள முடியாத துன்பம். பல்லாண்டுகளாய் சகித்துக் கொண்டிருக்கும் எனது அன்பு பீகார் மக்களே, உங்களை ஊழலின் பிடியிலிருந்து விடுவிப்பேன். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வைப்பேன்
அன்று சொன்னதை, ஆட்சிப் பொறுப்பு ஏற்று இன்று செய்துக் கொண்டிருக்கிறார் நிதீஷ்.
2006லேயே ஊழலை ஒழிக்க நிதிஷ் எடுத்துக் கொண்ட வழக்கமான நடைமுறைகள் பலனை தந்ததாக சொல்ல முடியாது. நேர்மையான அதிகாரிகளை தேர்ந்தெடுத்து ஒரு சிறப்பு கண்காணிப்புக் குழுவினை அப்போதே அமைத்திருந்தார். நான்கு ஆண்டுகளில் சுமார் 400 அரசு ஊழியர்களை இக்குழு கையும், களவுமாக பிடித்திருந்தது. ஆயினும் அவர்களில் இருவரை மட்டுமே தண்டிக்க முடிந்தது. மொத்தமாக ஐந்தே ஐந்து முதல் தகவல் அறிக்கைகளைதான் இக்குழு பதிந்திருந்ததாக ஊடகங்கள் சலித்துக் கொண்டன. நம்மிடம் இருக்கும் சட்டம் அந்தமாதிரி. சட்டத்தை பாதுகாப்பவர்களை விட, அதை உடைப்பவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்தோடு இருக்கிறார்கள்.
இதற்கிடையே தனது கிராமப்புற பயணங்களில் ஊழல் கொடுமைகளை கதை, கதையாக கேட்க வேண்டியிருந்தது முதல்வருக்கு. பெரிய ஊழல்களை கூட விட்டுத் தொலைக்கலாம். சிறிய சிறிய சான்றிதழ்கள் பெற கூட, லஞ்சமின்றி சீட்டை விட்டு அசைய அரசு ஊழியர்கள் தயாராக இல்லை. கிடைக்கும் லஞ்சப் பணத்தை கட்டிடங்களாகவும், தங்கங்களாகவும் வாங்கி குவித்தார்கள்.
ஒரு வழக்கு விசாரணையின் போது, ஒரு கண்காணிப்பு அதிகாரியின் பொறியில் சிக்கியவர் பாட்னாவைச் சேர்ந்த ஒரு பால் வியாபாரி. அவரிடம் ஒரு டஜன் கார்களும், பங்களா, தோப்பு துரவென்று செமத்தியான சொத்து. விசாரித்துப் பார்த்ததில் அரசு ஊழியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சப் பணத்தை பெற்றுத் தரும் வெறும் ‘ஏஜெண்ட்மட்டும்தான் இவர். இவரிடமே இவ்வளவு சொத்து இருக்கிறதென்றால், லஞ்சம் பெற்றவர்களிடம் எவ்வளவு சொத்து இருக்கும்? இவரைப் போலவே பாட்னாவில் பல பீடாக்கடை வைத்திருப்பவர், ஐஸ்க்ரீம் வியாபாரிகள் என்று கோடிஸ்வரர்கள் நிறைய பேர் உண்டு.
பெரிய ஊழல் முதலைகள் இந்தியாவின் பெருநகரங்களில் ரியல் எஸ்டேட்களில் லஞ்சப் பணத்தை முதலீடு செய்கிறார்கள் என்றால், சிறிய முதலைகள் வங்கி லாக்கர்களில் பதுக்கிக் கொண்டிருந்தார்கள்.
நிதிஷ்குமாருக்கு யதார்த்தம் புரிந்தது. கையில் வசமாக கிடைத்த குற்றவாளியை தண்டிக்கக் கூடிய அளவுக்கு சட்டத்தில் வகையும் இல்லை. ஊழல் தடுப்பு அதிகாரிகள் வழக்கு மேற்கொள்ள, தங்களது மேலதிகாரிகளின் அனுமதியைப் பெற்றாக வேண்டும். இந்த நடைமுறைகளின் தாமதம் ஏற்படுத்தும் ஓட்டையில் நுழைந்து முதலைகள் வெளியேறிக் கொண்டிருந்தன. அட்டர்னி ஜெனரலாக இருந்த பி.கே.சஹியிடம் எப்படியாவது இதற்கு ஒரு தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டார் (சஹி தான் இரண்டாம் முறையாக நிதிஷ் பொறுப்பேற்ற பிறகு மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்).
பீகாரின் ஊழல் தடுப்புச் சட்டத்தை நன்றாக அலசி ஆராய்ந்து, நிபுணர்களிடம் ஆலோசித்து ஒரு பக்காவான சட்டமுன்வடிவினை தயாரித்தார் சஹி. இந்த முன்வடிவு பிப்ரவரி 2009ல் பீகார் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. பின்னர் நாட்டின் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர்களின் ஒப்புதலினைப் பெற ஓராண்டு ஆகியது. கடைசியாக மார்ச் 2010ல், பிரசித்திப் பெற்ற அந்த சட்ட முன்வடிவு The Bihar Special Courts Act, 2009 என்கிற பெயரில் குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
ஊழல் ஒழிப்பு அமைப்புகளுக்கு இப்போது ஒரே குஷி. வருமானத்துக்கு மீறிய சொத்து சேர்த்த அரசு ஊழியர்களின் சொத்துகளை உடனுக்குடன் அரசு பறிமுதல் செய்கிறது. இந்த வழக்கினை விரைந்து விசாரிக்க அதிவேக விரைவு நீதிமன்றங்கள் ஆறு உண்டு. ஆறு மாதங்களுக்குள்ளாக எந்த வழக்குக்கும் தீர்ப்பு கிடைத்து விடுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், சரியாக கணக்கு காட்டும் பட்சத்தில் அரசு பறிமுதல் செய்த அவரது சொத்து திரும்ப தரப்படுகிறது. அவ்வாறு தவறாக யாருடைய சொத்தாவது பறிமுதல் செய்யப்பட்டிருந்தால் 5 சதவிகித அபராத வட்டியை சம்பந்தப்பட்டவருக்கு அரசு கொடுத்து விடுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட கட்டிடங்கள் மற்றும் இடங்களில் பள்ளிகளை உருவாக்குவதுதான் பீகார் அரசின் நோக்கம்.
தங்களுக்கு வேண்டிய அதிகாரிகள் என்றால் அரசியல்வாதிகள் குறுக்கிட்டு வழக்கை கெடுத்துவிடுவார்களே என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு முழு சுதந்திரத்தையும் முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியிருக்கிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் கூட, ஊழல் வழக்குகளில் தலையிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
சரி. ஊழல் செய்தவர்கள் என்பதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள். சுலபம். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறவருக்கு பத்து கோடி ரூபாய்க்கு சொத்து இருந்தால்? பிடித்துப் போய் சிறப்பு நீதிமன்றத்தில் நிறுத்திவிடுகிறார்கள். சொத்துக்கு கணக்கு காட்டிவிட்டு, முடிந்தால் 5 சதவிகித கூடுதல் வட்டியோடு திருப்பிக் கொள்ள வேண்டியதுதான்.
ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையின் அடுத்தக் கட்டமாக அரசு ஊழியர்கள் தங்களது சொத்துக் கணக்கினை பகிரங்கமாக மக்கள் முன்வைக்க வேண்டும் என்றும் சமீபத்தில் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். இதையடுத்து பீகாரின் நாலரை லட்சம் அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் தங்களது சொத்துக் கணக்கை அரசிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.
முதற்கட்டமாக சுமார் 80,000 அரசு ஊழியர்களின் சொத்துகளை பீகார் அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிட்டிருக்கிறது. இவற்றில் 190 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 169 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 29 ஐ.எப்.எஸ். அதிகாரிகள், 2,800 பிஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக் கணக்குகளும் அடங்கும்.
ஏற்கனவே கடந்த டிசம்பர் 2010ல் பீகார் முதல்வரும், அவரது கேபினட் சகாக்களும் தங்களது சொத்துக்கணக்கை பீகார் அரசின் இணையத்தளத்தில் வெளியிட்டு முன்னுதாரணம் தந்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஊழலில் மூழ்கி திளைத்துக் கொண்டிருந்த பீகார் மாநிலம், இன்று ஊழல் ஒழிப்பில் தேசமே தலைநிமிர்ந்து பார்க்கும் வண்ணம் உயர்ந்துக் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இன்று பீகார் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பீகார் இருக்கும் திசை நோக்கி கையை உயர்த்தி ஒரு சல்யூட் அடிப்போம்.
(நன்றி : புதிய தலைமுறை)

11 கருத்துகள்:

 1. //பீகார் இருக்கும் திசை நோக்கி கையை உயர்த்தி ஒரு சல்யூட் அடிப்போம்//

  சல்யூட் பீகார்

  பதிலளிநீக்கு
 2. ஆதங்கமா இருக்குண்ணே அந்த மாநிலத்தை பாத்து...நம்ம மாநிலத்துக்கு அந்த மாதிரி சட்டமெல்லாம் வருமாண்ணே..?! :(

  பதிலளிநீக்கு
 3. சல்யூட் . . . . . . . . பொருத்திருந்து பார்ப்போம்

  பதிலளிநீக்கு
 4. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆரோக்கியமான பாதையில் செல்கிறது பீஹார் . இந்தியாவிற்கு வழிகாட்டியாக இருந்த தென் மாநிலங்கள் இன்று ஊழலில் திளைக்கின்றன இதற்கு அரசியல்வாதிகளை விட மக்களை தான் குறை சொல்ல வேண்டும் .நாம் செய்வது தவறு என்றே நமக்கு தெரியவில்லை , சரியான வழியில் செல்பவனை கேலிக்குரியவனாக்குகிறோம் . பீஹாரைப் பார்த்து நம் மக்களும் , அரசியல்வாதிகளும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்பதே என் கனவு. நம் அதிகாரிகளும் , அரசியல்வாதிகளும் இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்காக அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் , பஞ்சாப் அரசு உழவர் சந்தை திட்டத்தை நம் அரசைப் பார்த்து செயல்படுத்தியதாக கேள்விப்பட்டேன்.

  பதிலளிநீக்கு
 5. You better forward articles don't write about the DMK. that will spoil you image

  பதிலளிநீக்கு
 6. 'அழிவுக்குப் பிறகுதான் ஆக்கம் வரும்' என்பதற்கு பீகார் ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

  பதிலளிநீக்கு
 7. இதெல்லாம் சரி, லக்கி, முதலமைச்சரும், முன்னாள் முதல்வரும், அமைச்சர்களும் எப்படி இவளவு சொத்து வந்தது என்று சொல்வார்களா? எல்லா மாநிலத்திலும். உடனே அடுத்த பதிவு கருணாநிதிக்கு எப்படி இவளவு சொத்து நியமாக வந்தது ஜெயா எப்படி இவளவு சொத்து சட்டத்தை ஏமாற்றி சேர்த்தார் என்று எழுதி விடுவீர்கள். எனக்கு இரண்டு பேரயும் பிடிக்காது ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க வுங்களின் கருணாநிதி சார்பு பதிவு அதிகரித்து விட்டது.

  பதிலளிநீக்கு
 8. தமிழ்நாட்டில் இதை நடைமுறைப்படுத்த இளைஞர்களால் மட்டுமே இயலும்.

  பதிலளிநீக்கு
 9. படிக்கவே சந்தோஷமாய் இருக்கிறது. ஊழலை ஒழிக்க வழி செய்து இருக்கிறார்கள் அதனை பின்பற்றுகிறோம் என்றாவது இங்கு இந்த தேர்தலில் யாராவது பிரச்சாரம் செய்தால் .....நினைக்கவே நல்லாயிருக்கே.ஆனால் நடக்காதே.

  பதிலளிநீக்கு
 10. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். நம்மை ஆளப்போகும் எவரும் நல்லவர்களுமில்லை; நம்பிக்கையானவர்களும் இல்லை. மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாத, பதவிகளைக் கொண்டு தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மட்டுமே செழிக்க வைக்கப் போகும் யாரோ ஒருவர்தான் நாளைய முதல்வர். அந்த நாளைய முதல்வருக்கு ஒரேயொரு வேண்டுகோள். பதவியேற்றதும் பீகார் சென்று ஒரு ஆறுமாத காலமாவது இருந்துவிட்டு வாருங்கள்.

  பதிலளிநீக்கு