10 மார்ச், 2011

விளையாட்டு விஷயமா இது?

கிரிக்கெட் இந்தியாவின் மதம். வீரர்கள் இந்தியர்களின் கடவுளர்கள். அதெல்லாம் சரி. கடவுளின் சொந்த தேசத்தை அழித்து கிரிக்கெட் விளையாட வேண்டுமா என்று சர்ச்சை எழுந்திருக்கிறது கேரளாவில்.

கேரளாவைப் பொறுத்தவரை, அங்கிருப்பவர்களுக்கு கிரிக்கெட் ஆர்வம் பெரியதாக கிடையாது. கால்பந்து, தடகளம் என்று கலக்குபவர்கள். எனவேதான் இந்திய கிரிக்கெட் அணியிலும் கூட கேரள வீரர்கள் எப்போதாவது அரிதாக இடம்பெறுவார்கள். கொச்சியில் ஒரு மைதானம் உண்டு. ஜவஹர்லால் சர்வதேச மைதானம். அது கால்பந்து விளையாட கட்டப்பட்ட மைதானம். அவ்வப்போது கிரிக்கெட் போட்டிகளும் இங்கே நடத்தப்படுகிறது. இது கொச்சி பெருநகர வளர்ச்சி மையத்தோடு இணைந்து கேரள அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.

கேரளாவில் கிரிக்கெட் அசோசியேஷன் உண்டு. ஆனால் இந்தியாவிலேயே சொந்தமாக கிரிக்கெட் மைதானம் இல்லாமல் இயங்கும் ஒரே அசோசியேஷன் அதுதான்.

இதெல்லாம் சமீபக்காலம் வரைதான். ஆடிக்காற்றில் அம்மியே பறக்குமாம். ஐ.பி.எல் மோகத்தில் கேரளாவும் வீழ்ந்து விட்டது. சமீபத்தில் ஐ.பி.எல். போட்டிகளுக்கு கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டபோது, புதியதாக சேர்ந்த அணி கொச்சி அணி. சொந்த அணி, சொந்த ஊரில் விளையாடினால்தான் ஐ.பி.எல்.லில் கூடுதலாக கல்லா கட்ட முடியும். இந்தச் சூழலில் கேரள கிரிக்கெட் அசோசியேஷன் சுறுசுறுப்பானது. சர்வதேசப் போட்டிகளை நடத்தக்கூடிய நவீன சொந்த மைதானம் என்கிற தன் கனவினை நனவாக்க முன்வந்தது.

மைதானம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் எடகொச்சி. தெற்கு கொச்சியின் ஓரத்தில் அமைந்த பழமையான ஊர். தேசிய நெடுஞ்சாலை 47 நரம்பாய் ஊடுருவிச் செல்லும் இடம். அரபிக்கடல் உள்வாங்கி நிலத்துக்குள் நுழையும் (Backwater) இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. அரிதான மாங்குரோவ் காடுகள் நிறைந்த பூமி. தெற்கு ரயில்வே நிலையத்துக்கும், வடக்கு ரயில்வே நிலையத்துக்கும் இடைப்பட்ட கல்லூர் ஜங்ஷனில் கே.சி.ஏ. கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட திட்டமிடப்பட்டது. 50,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி. பகல் இரவு போட்டிகளும் நடத்தும் வண்ணம் மின்விளக்கொளி என்று ஆடம்பரம் தூள் பறந்தது. 2012ஆம் ஆண்டு இந்த மைதானம் தயாராகிவிடும் என கேரள கிரிக்கெட் அசோசியேஷனின் செயலாளர் டி.சி.மேத்யூ அறிவித்திருந்தார். உலகளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் மைதானங்களான அடிலைட், ஜோகனஸ்பர்க், மொகாலி, ஹைதராபாத் ஆகியவற்றின் வடிவமைப்பினை இம்மைதானத்தில் கொண்டுவர அவர் ஆர்வமாக இருந்தார்.

கேரளாவின் எதிர்க்கட்சிகள் கூட இந்த திட்டத்தை ஆதரிக்கும் நிலையில், எதிர்பாராத இடத்தில் இருந்து இந்த மைதானம் இங்கே அமைக்கப்பட எதிர்ப்பு கிளம்பியது. சுற்றுச்சூழ ஆர்வலர்கள், கேரளாவின் இயற்கை அழகை சிதைத்து விளையாட்டு கேளிக்கைக்கு முன்னுரிமை கொடுப்பதாக போர்க்கொடி எழுப்பினார்கள். வேம்பநாடு ஏரியின் ஒரு பகுதியும் கூட மைதானத்துக்குள் அடகு வைக்கப்பட்டு விடுமாம்.

பூமி, நீதி மற்றும் ஜனநாயக மக்கள் அமைப்பின் (People's movement for Earth, Justice and Democracy) தலைவர் சி.ஆர். நீலகண்டன், "இந்த மைதானம் குறைந்தபட்சம் ஐந்து சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரானது. கடலோர ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள், கேரள நெல்வயல் மற்றும் சதுப்புநில பாதுகாப்பு சட்டம், பல்லுயிர் பெருக்கச் சட்டம், நிலச்சீர்த்திருத்தச் சட்டம் மற்றும் வனச்சட்டங்களை மீறி அமைக்கப்படுகிறது. எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்" என்று கோரினார்.

கொச்சியில் ஏற்கனவே ஜவஹர்லால்நேரு மைதானம் இருக்கையில், நகருக்கு வெளியே புதிய மைதானம் தேவையற்றது என்பதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆதங்கம். பூமி வெப்பமடைதல், மீன்வளம் குறைதல், உணவுப்பொருள் உற்பத்திக்குறைவு என்று ஏற்கனவே பல பிரச்சினைகளை சந்தித்து வரும் சூழலில், மாங்குரோவ் இயற்கைக் காடுகளை, விளையாட்டுக்காக அழிப்பது இயற்கைக்கு விரோதமானது என்பதும் அவர்களது அச்சம்.

சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இந்த மைதானம், எடகொச்சியின் சுற்றுலா மற்றும் அதைச்சார்ந்த வளர்ச்சிகளுக்கு உதவும் என்பது மைதானத்தை வரவேற்போரின் வாதம். "இந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களே இப்படித்தான், மரத்தை வெட்டக்கூடாது, செடியை பிடுங்கக்கூடாது என்று வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்" என்பது அவர்கள் சலிப்பு.

மைதானத்துக்கு தேவைப்படும் 24 ஏக்கர் நிலம் மட்டுமல்லாமல், ஏராளமான ஹெக்டேர் விளைநிலங்களும், இயற்கைச் செல்வங்களும் சாலை, கட்டிடங்கள், மேம்பாலங்கள், வாகனம் நிறுத்தும் பகுதி ஆகியவற்றுக்காக அழிக்கப்படும் என்பது சுற்றுச்சூழலாளர்களின் வாதம்.

இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகம், கேரள கிரிக்கெட் அசோசியேஷனுக்கு இது தொடர்பாக ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. கடந்தாண்டு செப்டம்பர் 3 வாக்கில், மாங்குரோவ் காடுகள் அடங்கிய பேக்வாட்டர் பகுதிகள் இங்கே இருந்ததாகவும், அவை செப்டம்பர் 22 வாக்கில் மைதானம் அமைக்கப்பட அழிக்கப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பெங்களூர் மண்டல அலுவலகம் குற்றம் சாட்டியது. இது குறித்த விரிவான விசாரணையை கேரள வனத்துறையும் மேற்கொண்டது. கேரள கிரிக்கெட் அசோசியேஷனோ, இங்கே மாங்குரோவ் காடுகள் எதுவுமில்லை, அவற்றை நாங்கள் அழிக்கவுமில்லை என்று வாதிட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக 2005ஆம் ஆண்டு இப்பகுதியில் சேட்டிலைட் மூலமாக எடுக்கப்பட்ட கூகிள் மேப் படத்தை முன்வைக்கிறது.

"உதயம்பேரூர் என்கிற இடத்தில் மைதானம் அமைக்க முன்பு கேரள கிரிக்கெட் அசோசியேஷன் திட்டமிட்டது. கையகப்படுத்த வேண்டிய நிலத்துக்கு பத்து லட்ச ரூபாய் முன்பணமும் கொடுக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டும் அந்த இடத்தில் மைதானம் அமைக்க ஒப்புதலை தந்தது. ஆனால் அந்த இடத்தை விட்டு, விட்டு குறிப்பாக இந்த இடத்தில் ஏன் மைதானம் அமைக்க அவர்கள் அடம் பிடிக்கிறார்கள் என்பதுதான் மர்மமாக இருக்கிறது" என்கிறார் சி.ஆர்.நீலகண்டன்.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் தென்னக வன அமைச்சர்கள் மாநாடு நடந்தது. இம்மாநாட்டுக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "கேரளாவின் எல்லாக் கட்சிகளும் இந்த விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறது. காடுகளை அழித்து கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன்பு நாமே நம்மை ஒரு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு எது முக்கியம், மாங்குரோவ் காடுகளா அல்லது கிரிக்கெட்டா?" என்று பிரச்சினையை சூடாக்கினார்.

இதற்கிடையே மைதானப் பணிகளை துவக்குவதற்கு முன்பாக தேவையான சுற்றுச்சூழல் ஒப்புதல்களை கேரள கிரிக்கெட் அசோசியேஷன் பெற்றிருக்கவில்லை என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. இதனால், வனபாதுகாப்புச் சட்டம் (1986) செக்‌ஷன் 5 படி நடவடிக்கை எடுக்கப்படலாம். கேரள கடலோர நிர்வாக அமைப்பு (KSCZMA), பணிகளை நிறுத்தச் சொல்லி உத்தரவிடுமாறு மாவட்ட ஆட்சியாளரை கேட்டுக் கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலுக்கு இங்கே ஏற்பட்ட சேதாரத்தை கணக்கிட்டு, அவற்றை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வது குறித்த ஒரு திட்டத்தை விரைவில் கேரள முதல்வருக்கு கொடுக்கவும் இந்த அமைப்பு பணியாற்றி வருகிறது.

கடைசியாக, கேரள உயர்நீதிமன்றமும் மைதானத்தின் பணிகளை முன்னெடுக்க தடை விதித்திருக்கிறது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையில்லாச் சான்று பெற்றபின் தான் பணிகளை தொடங்கவேண்டும் என்று தனது தீர்ப்பில் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 2012ல் சொந்தமாக ஒரு மைதானம் என்கிற கேரள கிரிக்கெட் அசோசியேஷனின் கனவு, கானல்நீராகதான் மாறும் போலிருக்கிறது.

மாங்குரோவ் காடுகள் இயற்கையே தென்னக மாநிலங்களுக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு கவசம். சுனாமி வந்தபோது கூட, மாங்குரோவ் காடுகள் சூழ்ந்த பகுதிகள் பெருத்தளவில் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விளையாட்டுக்காக கூட கவசத்தை உடைக்கலாமா என்பதுதான் நம் முன்பாக இப்போது முன்வைக்கப்பட்டிருக்கும் கேள்வி.

 

எக்ஸ்ட்ரா நியூஸ் :

அழிந்துவரும் மாங்குரோவ் காடுகள்!

மனித ஆக்கிரமிப்பின் காரணமாக சமீபகாலமாக மாங்குரோவ் காடுகளுக்கு கேரளாவில் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மங்கலவனம், பனங்காடு, கும்பாளம், நேட்டூர், பனம்புகாடு, முலுவுகாடு, கும்பாலங்கி, கண்ணமாலி, செல்லானம் போன்ற பகுதிகளில் இருந்து முற்றிலுமாக இக்காடுகள் காணாமல் போயிருக்கின்றன. குடியிருப்புகள், சாலைகள் அமைப்பது போன்ற காரணங்களுக்காக இவை அப்புறப்படுத்தப்படுகின்றன.

1991ஆம் ஆண்டில் கொச்சியில் மட்டுமே 260 ஹெக்டேர் அளவுக்கு மாங்குரோவ் காடுகள் இருந்ததாக வன தகவல் அமைப்பின் குறிப்பில் அறியமுடிகிறது. இப்போது இம்மாவட்டத்தில் அப்படியொரு தகவலே எடுக்கமுடியாத அளவுக்கு இக்காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

வெளிநாடுகளில் இருந்து இனப்பெருக்கத்துக்காக கொச்சிக்கு வரும் அரியவகைப் பறவைகளின் வருகை குறைந்திருக்கிறது. மீன் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களின் வருகையும் அருகி வருகிறது என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவலையான பார்வை.

(நன்றி : புதிய தலைமுறை)

4 கருத்துகள்:

 1. நல்லதொரு டீடெய்ல்ட் ரிப்போர்ட்.நன்றி தோழர்.

  பதிலளிநீக்கு
 2. கடவுளின் தேசம் என பெருமையாக சொல்லிக் கொள்பவர்களின் மட்டமான செயல் இது.

  பதிலளிநீக்கு
 3. Thanks for creating awareness .Mangrove forests are the real environment protectors , they save us from tsunami and also the prevent soil erosion . Even if the stadium plan is cancelled mangrove forest in that area has been destroyed , we should try to protect the pitchavaram mangrove forest (second largest mangrove forest ) .

  பதிலளிநீக்கு
 4. Thanks for your interest on environment.Keep on hitting the people who destroys the nature.
  Wishes....

  பதிலளிநீக்கு