28 பிப்ரவரி, 2011

இண்டர்நெட்டில் பிரபலங்கள்!

ஏ.ஆர்.ரகுமான், ஹாலிவுட் நடிகை ஷரன்ஸ்டோனுடன் டின்னர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் குடும்பத்தோடும், நண்பர்களுடனும் வார இறுதியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

த்ரிஷா மைசூரில் படப்பிடிப்புக்கு போயிருக்கிறார்.

மு.க. ஸ்டாலினுக்கு சேலத்தில் ஒரு அரசு நிகழ்ச்சி.

சுஷ்மா ஸ்வரராஜ், நாகப்பட்டினத்துக்கு வருகிறார்.

பிரபலங்களைப் பற்றிய சின்னச் சின்ன செய்திகளைக் கூட தெரிந்து வைத்துக் கொள்வதில் சாமானியர்களுக்குதான் எவ்வளவு ஆவல்? முன்பெல்லாம் இந்தச் செய்திகளை தெரிந்துகொள்ள ஊடகங்களைதான் சார்ந்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பப் புரட்சி பிரபலங்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையிலான இடைவெளியை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கிறது. ட்விட்டர், ஃபேஸ்புக், ஆர்குட், வலைப்பூக்கள் (Blogs) என இணையம் எல்லோருக்குமான வலையை விரித்து வைத்திருக்கிறது.

முன்பெல்லாம் ஒரு நடிகரோ, அரசியல் பிரபலமோ ஏதேனும் பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருந்த கருத்து ஒருவருக்குப் பிடித்திருந்தால் அல்லது மாற்றுக் கருத்து இருந்தால் பத்திரிகைக்கு 'வாசகர் கடிதம்' எழுதி தெரிவிக்க முடியும். இல்லையேல் அந்தப் பிரபலத்தின் முகவரியை எப்பாடுபட்டாவது கண்டுபிடித்து கடிதம் எழுதுவார்கள். அந்தக் காலமெல்லாம் இப்போது மலையேறிப் போயாச்சி! நாகார்ஜூனா நடிக்கும் புதுப்படத்தின் பெயர் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ட்விட்டரில் நுழைந்து 'பெயரை மாற்றித் தொலையுங்களேன்' என்று நேரடியாக சொல்லிவிடலாம்.

ஹாலிவுட், அமெரிக்கா, ஐரோப்பாவென்று பார்க்கப் போனால் பிரபலமாக இருக்கும் ஒருவர் நிச்சயமாக ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, மைஸ்பேஸ் தளத்திலோ, ஆர்குட்டிலோ கட்டாயம் இருப்பார். அல்லது வலைப்பூவாவது எழுதுவார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஆகியோரையெல்லாம் அடிக்கடி ட்விட்டரில் காணலாம்.

இப்போது இந்திய பிரபலங்களும் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சினிமா நட்சத்திரங்கள், தங்கள் ரசிகர்களோடு நேரிடையாக உரையாடுகிறார்கள். எழுத்தாளர்கள் தங்கள் வாசகர்களோடு பேசுகிறார்கள். அரசியல்வாதிகள் மக்களோடு பழகுகிறார்கள். முன்பெல்லாம் இந்த இரு தரப்புக்கும் இடையே ஓர் 'ஊடகம்' தேவையாக இருந்தது.

இந்திய அளவில் அமிதாப் பச்சன், அமீர்கான், சல்மான்கான், லாலுபிரசாத் யாதவ், சசிதரூர், சச்சின் டெண்டுல்கர், ஏ.ஆர்.ரஹ்மான், விஜய் மல்லையா என்று ஏராளமான பிரபலங்கள் இணைய வலைப்பின்னல்களில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய சினிமாவின் உச்சநட்சத்திரங்களான் 'கான்'கள் இங்கே கருத்தால் அடித்துக் கொள்வதும் கூடுதல் சுவாரஸ்யம்.

தமிழக அளவில் பார்க்கப் போனால் பிரபலமான சினிமா நட்சத்திரங்கள்தான் அதிகளவில் இணையத்தில் புழங்குகிறார்கள். நரேன் கார்த்திகேயன், முரளிவிஜய் போன்ற விளையாட்டு வீரர்கள் சிலரும் உண்டு. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.சேகர், ரவிக்குமார் போன்ற சிலரைத் தவிர்த்துப் பார்த்தோமானால், அரசியல் பிரபலங்களுக்கு இன்னமும் இக்கலாச்சாரம் பெரியளவில் சென்று சேரவில்லை. மாறாக தமிழ் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்று எழுத்து சார்ந்து இயங்குபவர்கள் பெரும்பாலானோர் ட்விட்டர், ஃபேஸ்புக், வலைப்பூவென்று எங்காவது ஓரிடத்தை கெட்டியாகப் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

தயாநிதி அழகிரி, வெங்கட்பிரபு, மாதவன், சிம்பு, ஜீவா, வெற்றிமாறன், தனுஷ், பிரகாஷ்ராஜ், யுவன்ஷங்கர்ராஜா, ஸ்ருதிஹாசன், சுசித்ரா, ஸ்ரேயா, நமிதா, பி.சி.ஸ்ரீராம், சுப்பிரமணியன்சாமி, விஸ்வநாதன் ஆனந்த், இந்திரா பார்த்தசாரதி, மனுஷ்யபுத்திரன், பா.ராகவன், சாருநிவேதிதா, ஜெயமோகன், ஞாநி, நாஞ்சில்நாடன், ஹிந்து ராம், புதிய தலைமுறை மாலன், குமுதம் ப்ரியா கல்யாணராமன், ஆனந்தவிகடன் ரா.கண்ணன் என்று பலதளங்களில் முக்கியமான ஆட்கள் பலரையும் நீங்கள் ஏதோ ஒரு சமூக வலைப்பின்னல் தளத்தில் நண்பராக்கிக் கொண்டு உரையாட முடியும்.

பிரபலங்கள் ஏன் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுகிறார்கள்?

ட்விட்டர், ஃபேஸ்புக் மாதிரியான இணையத்தில் புழங்குவது மிக எளிதானது. சாமானியர்களோடு தொடர்பில் இருக்க முடிகிறது. தங்கள் தொடர்பான சம்பவங்கள், சந்தித்த மனிதர்கள், தனிப்பட்ட கருத்துகளை எல்லோரிடமும் 'பிரபலப் பூச்சு' இல்லாமல் பகிர்ந்துகொள்ள முடிகிறது. மனதில் தோன்றியதை எழுதியவுடனேயே பலருக்கும் போய்ச் சேருகிறது. தினமும் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை, தங்களை அபிமானமாக கருதுபவர்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்க முடிகிறது.  மற்றவர்களின் கருத்தையும் உடனுக்குடன் அறிய முடிகிறது. மொபைல் போன் மூலமாகவே ட்விட்டர் போன்ற இணையத் தளங்களில் இயங்கலாம். புகைப்படங்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

"சமத்துவமான சமூகம் உருவாக இளைஞர்கள் தோள் கொடுக்கவேண்டும். உங்களோடு நானும் சேர்ந்து தோள் கொடுப்பேன்" என்று தமிழகத்தின் துணைமுதல்வரான மு.க.ஸ்டாலின் தன்னுடைய வலைப்பூவில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். 2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இந்த வலைப்பூ மூலமாக தனது கட்சிக்காரர்களுடனும், மக்களோடும் மு.க.ஸ்டாலின் உரையாடல் நிகழ்த்தி வருகிறார். (http://mkstalin.net/blog)

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் தன்னுடைய வலைப்பூவில் இவ்வாறாக எழுதியிருக்கிறார். "பொதுமக்களுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்குமான வெளிப்படையான விவாதங்களை ஊக்குவிக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் இந்த வலைப்பூ உருவாக்கப்பட்டிருக்கிறது. தங்களது சட்டமன்ற உறுப்பினரோடு சேர்ந்து, தொகுதிமக்களும் தங்களது குரலை உயர்த்திச் சொல்லவும் இது பயன்படும்". (http://mylaporemla.blogspot.com)

இணையத்தில் இயங்கும் தமிழர்கள் பலருக்கும் தங்களது பிராந்தியப் பிரச்சினையை வட இந்திய ஊடகங்களும், பிரபலங்களும் கண்டுகொள்வதில்லை என்று ஒரு குறை உண்டு. சமீபத்தில் நாகப்பட்டினத்தில் நடந்த மீனவர் படுகொலையின் போது 'ட்விட்டர்' தளத்தின் மூலமாக தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டு, பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்றத் தலைவர் சுஷ்மாஸ்வரராஜையே அசைத்துவிட்டார்கள். ட்விட்டரில் இந்திய அளவில் ஐந்து நாட்களுக்கு மீனவர் பிரச்சினையை ( #tnfisherman என்கிற அடையாளத்தில்) இவர்கள் முதலிடத்தில் வைத்திருந்தார்கள். இதற்குப் பிறகே வட இந்திய ஊடகப் புள்ளிகள் இதைக் கவனித்து தமிழக மீனவர் பிரச்சினை குறித்த செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பினார்கள்.

பெங்களூரைச் சேர்ந்த இளம் எழுத்தாளரான சரவணகார்த்திகேயன், தனது முதல் நூலுக்கான பதிப்பாளரையே, இதுபோன்ற சமூகத்தளம் ஒன்றில்தான் கண்டறிந்ததாக சொல்கிறார். 'சந்திராயன்' என்கிற அந்த நூல், கடந்தாண்டு சிறந்த அறிவியல் நூலுக்கான தமிழக அரசின் பரிசினை வென்றது.

இதெல்லாம் லாபங்கள். சில பாதகங்களும் நிச்சயமாக உண்டு. உதாரணத்துக்கு முன்னாள் வெளியுறத்துறை இணையமைச்சர் சசிதரூரை சொல்லலாம். யதார்த்தமாக தனது மனதுக்குப் பட்டதை 'ட்விட்டர்' இணையத்தளத்தில் இவர் சொல்லிவிட, ஒரு அமைச்சரே எப்படி இப்படிப் பேசலாம் என்று சர்ச்சை கச்சைக் கட்டிக் கொண்டது. அவரது சொந்தக் கட்சியினரே அவரை விமர்சிக்க ஆரம்பித்தனர். வேறு வழியின்றி, தான் சொன்னது 'ஜோக்' என்று கட்சித்தலைமையிடமும், ஆட்சித்தலைமையிடமும் சொல்லித் தப்பித்தார். அமெரிக்க அதிபர் ஒபாமா ட்விட்டரில் கருத்தெழுவதை கண்டு, இவரும் ட்விட்டருக்கு வந்தாராம்.

இதேபோல பின்னணிப் பாடகி சின்மயி சொன்ன ஒரு கருத்தும் கூட, ட்விட்டரில் சில நாட்களுக்குப் புயலை கிளப்பியது. பலரும் அவரோடு மல்லுக்கட்டினர்.

பிரபலங்கள் சொல்லும் சாதாரண கருத்துகளைக் கூட சீரியஸாக மற்றவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். தங்களுக்கு உவப்பில்லாத் கருத்து சொன்னவர் ஒரு பிரபலமென்று தெரிந்தால், இரட்டை மடங்கு உக்கிரத்தோடு சண்டைக்கோழிகளாய் மாறிப் போகிறார்கள். இதனாலேயே பிரபலங்கள், தாங்கள் சொல்லவரும் ஒவ்வொரு வார்த்தையையும் ஒன்றுக்கு நான்கு முறை நன்றாக சோதித்துவிட்டே பயன்படுத்த வேண்டியதாகிறது.

எது எப்படியிருந்தாலும் பிரபலங்களுக்கு தங்களது 'பிரபலம்' எனும் முகமூடி ஒரு கூடுதல் சுமை. ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தையும் முடித்துவிட்டு, இமயமலைக்குச் சென்று சாதாரணர்களில் ஒருவராக மாறி இயல்படைவதை இதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். பிரபல கழற்றிவைத்துவிட்டு சாதாரணமாக உரையாட ஒரு வெளி இவர்களுக்கு தேவை. இணையம் அத்தகைய இடமாக இருக்கிறது.

எக்ஸ்ட்ரா மேட்டர் : இணைய தளங்களில் சில பிரபலங்கள் சம்பந்தமில்லாமல் உளறுவார்கள். என்ன ஏதுவென்று கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால்தான் தெரியும். பிரபலங்கள் பெயரில் யாராவது 'குறும்பர்கள்' விளையாடியிருப்பார்கள். மன்மோகன்சிங், சோனியாகாந்தி பெயர்களில் கூட யாராவது கும்மி அடிப்பது உண்டு. குறிப்பாக இளம் நடிகைகள் பெயரில் கணக்கு துவக்கி விளையாடுவது அதிகமாக நடக்கும்.

அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா பெயரில் ஒரு குறும்பர் யாரோ 'ட்விட்டர்' தளத்தில் கொஞ்சம் ஓவராகவே விளையாடி விட்டார். கட்சிக்காரர்கள் 'அம்மா'வின் காதுக்கு விஷயத்தைக் கொண்டு சென்றவுடன், அவர் டென்ஷன் ஆகி ஒரு அறிக்கை கூட விட்டிருக்கிறார். ட்விட்டர் தளத்தில் தான் எழுதுவதில்லை என்றும், தன் பெயரை யாராவது தவறாகப் பயன்படுத்தினால் சைபர்-க்ரைம் மூலமாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் ஜெயலலிதா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபலங்களாக இருந்தாலே தொல்லைதான். எனவே பிரபலங்களே! உங்கள் பெயரில் யாராவது போலிக்கணக்கு துவக்குவதற்கு முன்பாக, நீங்களே நேரடியாக இணைய குளத்தில் குதித்து விடுவதுதான் உத்தமம்!

(நன்றி : புதிய தலைமுறை)

7 கருத்துகள்:

 1. அம்மையாராடோ அக்கவுண்ட்டை, குருமூர்த்தி பாலோ செய்து தொலைத்தாராமே... :)

  பதிலளிநீக்கு
 2. //2008ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக இந்த வலைப்பூ மூலமாக தனது கட்சிக்காரர்களுடனும், மக்களோடும் மு.க.ஸ்டாலின் உரையாடல் நிகழ்த்தி வருகிறார். (http://mkstalin.net/blog)//

  தகவல் கொடுத்தமைக்கு நன்றி.

  மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் வலை பூ உரலி (http://mylaporemla.blogspot.com))கொடுத்தமைக்கும் நன்றி.இப்படி ஒவ்வொரு MLA வும் இருந்துட்டா நொம்ப நல்லா தான் இருக்கும்.ஆனா எத்தனை பேருக்கு வலை பூவை ஒரு கருவியாக உபயோக படுத்த தெரியும். நீங்க சொல்லி தான் மு.க.ஸ்டாலின்,எஸ்.வி.சேகர் ஆகியோரின் உரலி எனக்கு தெரிய வந்தது.ஒரு வெளிபடையான அரசியல்வாதிக்கு இது நல்லா அடையாளம்.இப்படி எல்லா அரசியல்வாதிகளும் இருந்துட்டா .....!

  ஆனாலும் இனி வரும் காலங்களில் ஒரு மாறுதலான ,வெளிப்படையான அரசியலக்கு இது ஒரு துவக்கமாக அமையலாம் என எதிர் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. Boss, you have missed out manicktagore from tamilnadu. He usually writes ~i am in delhi~ ~i am in chennai~ ~i am in my constintuency~ So, please edit the feature. Thanks.

  பதிலளிநீக்கு
 4. தாங்யு யுகி,

  நான் எற்கனவே அதை செய்துவிட்டேன்.பிரபலமாக இருப்பதற்கு என்னவெல்லாம் விலைக் கொடுக்கவேண்டியுள்ளது. (இதே தொனியில் நிறைய பின்னூட்டங்கள் வரலாம்... இருந்தாலும்... ஹிஹி)

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அருமை யுவா , ஆனால்

  http://rajadmk.blogspot.com
  இணைத்திருக்கலாம்

  பதிலளிநீக்கு
 6. நல்ல பயனுள்ள பதிவு.
  வாழ்த்துக்கள் யுவகிருஷ்ணா.

  பதிலளிநீக்கு