25 ஜனவரி, 2011

ஜி.எஸ்.எல்.வி – சில தகவல்கள்!ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?


Geosynchronous Satellite Launch Vehicle என்று தொழில்நுட்ப மொழியில் சொல்லப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO), இன்சாட் வகை செயற்கைக் கோள்களை விண்வெளியில் அதற்குரிய இடத்தில் கொண்டு சேர்க்கும் வேலையைதான் ஜி.எஸ்.எல்.வி. செய்கிறது.

இன்னும் கொஞ்சம் எளிமையாக சொல்வதென்றால், வீட்டிலிருந்து உங்களை அலுவலகத்துக்கு ஸ்கூட்டர் கொண்டு செல்கிறது இல்லையா? செயற்கைக் கோள்களுக்கு ஸ்கூட்டர் என்று ஜி.எஸ்.எல்.வி.யை புரிந்துகொள்ளலாம்.

நம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மற்ற முன்னேறிய நாடுகளின் ராக்கெட்டுகளை நாம் பயன்படுத்த வேண்டுமானால் பல்லாயிரம் கோடி செலவாகும். ஜி.எஸ்.எல்.வி. நம்முடைய தொழில்நுட்பம், நம்முடைய நிபுணர்களால் செயல்படுத்தப்படுவது என்பதால் சிக்கனமானது. அதாவது சில நூறு கோடிகள்.

ஜி.எஸ்.எல்.வி பிறந்த கதை

உலகோடு உறவாடக்கூடிய (Geosynchronous satellites) செயற்கைக் கோள்கள், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இந்தச் செயற்கைக் கோள்களை உருவாக்கிவிடக் கூடிய நாடுகளால், அவற்றை விண்ணுக்கு ஏவும் ராக்கெட் தொழில்நுட்பத்தை சுலபமாக ஏற்படுத்திவிட முடிவதில்லை.'

1990ல் இந்தியா தனது செயற்கைக் கோள்களை தானே செலுத்தக்கூடிய ராக்கெட் தொழில்நுட்ப திட்டத்தை முன்னெடுத்தது. ஏனெனில் அதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்ப உதவிகளை நமக்கு சோவியத் யூனியன் செய்து வந்தது. அந்நாடு சிதறுண்ட நிலையில் சொந்தக்காலில் நிற்கவேண்டிய அவசியத்தை இந்தியா உணர்ந்தது.

ஏற்கனவே பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle) தொழில்நுட்பத்தில் நமது நிபுணர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால் ஜி.எஸ்.எல்.வி.யை வெற்றிகரமாக உருவாக்கிடும் தன்னம்பிக்கை நம்மவர்களுக்கு நிறையவே இருந்தது. ஜி.எஸ்.எல்.வி.யை இயக்கிடும் கிரையோஜெனிக் என்ஜின் தொழில்நுட்பத்தை நமக்கு மற்ற நாடுகள் நியாயமற்ற காரணங்களுக்காக மறுத்தன (இந்திய கிரையோஜெனிக் கதையை பெட்டிச் செய்தியாக காண்க). எனினும் ஏற்கனவே நாம் பெற்றிருந்த ரஷ்ய என்ஜின்களை வைத்து 18, ஏப்ரல் 2001 அன்று வெற்றிகரமாக ஜி.எஸ்.எல்.வி.யை ஏவினோம்.

கட்டமைப்பு எப்படி?

பி.எஸ்.எல்.வியை மேம்படுத்தியே, மேலதிக நவீன தொழில்நுட்பத்தோடு ஜி.எஸ்.எல்.வி. உருவாகி இருக்கிறது. இது மொத்தம் மூன்று அடுக்குகளாக இருக்கும். கீழ் அடுக்கு முழுக்க திடப்பொருட்கள் அடங்கியது. இரண்டு மற்றும் மூன்றாவது அடுக்குகள் திரவங்கள் நிரம்பியது. மூன்று அடுக்குகளிலுமே விண்ணுக்கு உந்திச் செல்லும் (propelled) இயந்திரங்கள் நிரம்பியிருக்கும். முதல் இரண்டு அடுக்குகளும் பி.எஸ்.எல்.வி. மாதிரியே இருக்கும். மூன்றாவது அடுக்கில்தான் ஜி.எஸ்.எல்.வியின் சிறப்பம்சமான கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

ஏன் கிரையோஜினிக்?

பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்களை சுமந்தபடி மிக்ககுறுகிய காலம் மட்டுமே பயணிக்கும். அவையின் சக்தி அவ்வளவுதான். இதனால் சில நூறு கிலோ மீட்டர்கள் உயரத்தில்தான் செயற்கைக்கோள்களை நிறுவமுடியும்.

35,000 கி.மீ உயரத்தில் நிறுவக்கூடிய செயற்கைக்கோள்கள்தான் பன்முகப்பயன்களை தரக்கூடியவை. குறிப்பாக தகவல் தொடர்புக்கு ஏதுவான செயற்கைக்கோள்களை இந்த உயரத்தில்தான் நிறுத்தியாக வேண்டும். இதற்கு பி.எஸ்.எல்.வி சரிப்படாது. ஜி.எஸ்.எல்.வி. தான் ஒரே தீர்வு. மிகவும் சக்திவாய்ந்த இயந்திரங்களை பொருத்தினால் மட்டுமே இவ்வளவு உயரத்துக்கு ராக்கெட்டை அனுப்பமுடியும். அந்த இயந்திரம்தான் கிரையோஜெனிக்.

மைனஸ் 183 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஆக்சிஜன், மைனஸ் 253 டிகிரிக்கு குளிரூட்டப்பட்ட ஹைட்ரஜன் ஆகியவைதான் கிரையோஜெனிக்கின் எரிபொருள். ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் திரவநிலையில் இருக்கும். ராக்கெட் கிளம்புவதற்கு முன்பான 30 நொடி வரை இந்த எரிபொருள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஜி.எஸ்.எல்.வி. எத்தனை முறை ஏவப்பட்டது?

ஜி.எஸ்.எல்.வி. இதுமுறை ஏழு முறை ஏவப்பட்டிருக்கிறது. முறை ஏப்ரல் 2001லும், மே 2003லும் ஜி-சாட் 1, ஜி-சாட் 2 ஆகியவை ஏவப்பட்டது. EDUSAT தகவல் செயற்கைக்கோள் செப்டம்பர் 2004ல் வெற்றிகரமாக விண்ணுக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஜூலை 2006ல் இன்சாட்-4சியை ஏவ நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இயந்திரக்கோளாறு ஏற்பட்டதின் காரணமாக வங்காள விரிகுடாவுக்கு மேலாக ராக்கெட்டும், செயற்கைக்கோளும் வெடித்துச் சிதறடிக்கப்பட்டன. முந்தைய தோல்வியை ஈடுகட்டும் வகையில், செப்டம்பர் 2007ல் இன்சாட் 4சிஆர் விண்ணில் நிறுவப்பட்டது.

ஏப்ரல் 2010ல் ஜிசாட்-4னை சுமந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்வியடைந்தது. கிரையோஜெனிக் இயந்திரத்துக்கு செல்லவேண்டிய எரிபொருள் தடைபட்டதால் இம்முயற்சி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் ஜிசாட்-5பியை விண்ணில் நிறுவ நடந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது. இவ்வாண்டில் ஜி-சாட்6-ஐ விண்ணில் நிறுவ திட்டமிடப்பட்டிருக்கிறது. 2003 மற்றும் 2004ல் ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் மட்டுமே திட்டமிடப்பட்ட இடத்தில் விண்ணில் சரியாக நிறுவப்பட்டவை.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள், சென்னையில் இருந்து 80 கி.மீ தூரத்தில், ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்திருக்கும் சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது.

தோல்வி

வருட கடைசியில் ஜிசாட் -5பியை நிறுவும் முயற்சியில் இந்தியா தோல்வியடைந்திருப்பது நிச்சயமாக இஸ்ரோவுக்கு பெரிய பின்னடைவுதான். கடந்த ஏப்ரல் மாதம், முதன்முறையாக முழுக்க இந்திய தொழில்நுட்பத்தோடு கூடிய கிரையோஜெனிக் எந்திரத்தை உருவாக்கி ஜிசாட் -4ஐ ஏவும் முயற்சியும் தோல்வி அடைந்திருக்கிறது. பி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பத்தில் இன்று இந்தியாவுக்கு சர்வதேச அளவில் கிடைத்திருக்கும் மரியாதையை, நிச்சயமாக இந்த ஜி.எஸ்.எல்.வி. தோல்விகள் குலைக்கும். 2013ஆம் ஆண்டு நாம் ஜி.எஸ்.எல்.வி. மூலமாகதான் சந்திராயன்-2ஐ ஏவ இருக்கிறோம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சமூக, பொருளாதார, அரசியல் எழுச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கு மகத்தானது. இந்நிறுவனத்தின் வெற்றிகளும், தோல்விகளும் இந்திய கவுரவத்தோடு சம்பந்தப்பட்டது. கடந்த ஆண்டு சுற்றுப்பயணத்தின் போது பிரான்ஸ் அதிபர், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைதான் முதலில் சுற்றிப் பார்த்தார். விண்வெளி ஆராய்ச்சிகளில் இந்தியாவோடு கைகோர்த்து செயல்பட அமெரிக்க, ரஷ்ய அதிபர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தியாவும், சீனாவும்தான் எதிர்காலத்தில் ராக்கெட், செயற்கைக்கோள் தொடர்பான வான்வழி வர்த்தகத்தில் கோலோச்சப் போகிறார்கள் என்று பாரிஸைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கணக்கீடு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் நாம் கடந்த வருடத்தில் அடுத்தடுத்து பெற்றிருக்கும் இரு தோல்விகள் கொஞ்சம் சோர்வடையவே செய்கின்றன.

அதே நேரத்தில் கடந்த மாதம் ரஷ்யா, ஓராண்டுக்கு முன் நாசா (அமெரிக்கா), மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் வெகுவாக முன்னேறிய நாடுகளும் கூட சமீபமாக சில தோல்விகளை கண்டிருக்கிறார்கள். ராக்கெட் அறிவியலுக்கே கொஞ்ச காலமாக சகுனம் சரியில்லை போலும்.

இந்திய-கிரையோஜெனிக் கதை!

2003 மார்ச் மாதம். பிரதமர் வாஜ்பாய் பாராளுமன்றத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையே அறிவித்தார். "நாமே கிரையோஜெனிக் எந்திரத்தை சொந்தமாக உருவாக்கும் தொழில்நுட்ப தன்னிறைவைப் பெற்றுவிட்டோம்!" – இந்தியா அன்று அடைந்த பெருமிதத்துக்கு பின்னால்தான் எவ்வளவு அரசியல் சூழ்ச்சிகள்?

கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை நாம் 1993ல் இருந்து பயன்படுத்தி வருகிறோம். 1998ல் பொக்ரானில் செய்யப்பட்ட அணுசோதனை நம்மை உலகின் மற்றநாடுகளிடமிருந்து விலக்கி வைத்தது. மற்ற நாட்டு விஞ்ஞானிகளோடு நம் விஞ்ஞானிகளுக்கு இருந்த தொழில்நுட்ப ஆலோசனை பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை சுமந்துச் செல்லும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப்பட்டு, நமக்கு தொழில்நுட்பம் மறுக்கப்பட்டது.

இதற்குப் பின்னால் உலகத்தின் பாதுகாப்பு காரணமாக காட்டப்பட்டாலும், வணிகம் – மிகப்பெரிய வணிகம்தான் உண்மையான காரணம். அமெரிக்கா, ரஷ்யா, சைனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தார்கள். தகவல் தொடர்புக்கு ஏதுவான பெரிய செயற்கைக்கோள்களை ஒரு நாடு விண்ணில் நிலைநிறுத்த வேண்டுமானால் இவர்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டும். மிகப்பெரிய பணவர்த்தனை நடைபெறும். இந்தியா, இந்த தொழில்நுட்பத்தில் கைதேர்ந்துவிட்டால் மிக்க்குறைந்த காசுக்கு மற்றவர்களுக்கு செயற்கைக்கோளை ஏவித்தரும் என்று இந்நாடுகள் அஞ்சின. இதனால் தங்கள் பங்குக்கு பங்கம் வரும் என்பதாலேயே உலகப் பாதுகாப்பை காரணம் காட்டின.

இந்நிலையில் இந்தியா தனக்கான தொழில்நுட்பத்தை தாமே வடிவமைப்பது என்று அதிரடியாக முடிவெடுத்தது. தமிழகத்தின் மகேந்திரபுரியில் Liquid Propulsion System Centre என்கிற இந்திய நிறுவனம் இந்த எந்திரங்களை உருவாக்குவதில் முனைப்பாக இயங்கி வருகிறது. 2002 பிப்ரவரியிலேயே சில நொடிகளுக்கு விண்ணில் செயற்கைக்கோளை உந்திச்செல்லும் இயந்திரத்தை நாம் உருவாக்கிவிட்டோம். 2002 செப்டம்பரில் 1000 நொடிகளுக்கு உந்திச்செல்லுகிற இயந்திரம் தயார். எவ்வளவு நொடிகளுக்கு இது விண்ணைக் கிழித்துச் செல்லும் என்பது மிக முக்கியம். அதிக நொடிகளுக்கு இயங்கும் இயந்திரத்தால்தான் நல்ல உயரத்தில், திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிறுவமுடியும். அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றிகண்ட பின்னரே மார்ச் 12, 2003 அன்று கிரையோஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

கிரையோஜெனிக் இயந்திரங்களை காசுகொடுத்து வாங்குவது வேறு. தொழில்நுட்ப ஆலோசனைகளை ஒப்பந்தங்கள் மூலமாக பெறுவது என்பது வேறு. ரஷ்யாவிடமிருந்து நாம் மொத்தம் 7 கிரையோஜெனிக் எந்திரங்களை வாங்கியிருந்தோம். அவற்றில் 6 எந்திரங்களை இப்போது பயன்படுத்தி விட்டோம். 2011 மத்தியில் மீதியிருக்கும் எந்திரமும் ஏவப்பட்டு விடும். அனேகமாக நான் பிரான்ஸையோ, ரஷ்யாவையோ மீண்டும் உதவிக்கு நாட வேண்டிய அவசியம் வரலாம். இது தற்காலிகமானது.

நாம் உருவாக்கும் இயந்திரங்களை வைத்து நமது செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலைபெறும்போது, மற்ற நாடுகளில் இருந்து நமக்கு 'கிரையோஜெனிக் ஆர்டர்' நிறைய வரும். இவ்வளவு நாட்களாக இந்த தொழில்நுட்பத்தை பூதம் மாதிரி அடைகாத்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வந்த நாடுகளுக்கு நம் மீது எரிச்சலும் வரும்.

கிரையோஜெனிக் தொழில்நுட்பம் தெரிந்தால், இந்தியா அழிவுகர ஏவுகணைகளை உருவாக்கும் என்று இந்நாடுகள் முன்பு பூச்சாண்டி காட்டியதில்லையா? கடந்த இருபது ஆண்டுகளில் நாம் அப்படிப்பட்ட ஒரு ஏவுகணையை கூட இதுவரை உருவாக்கவில்லை. இவ்வகையிலும் இந்தியா முன்னேறிய நாடுகளின் முகத்தில் கரியைப் பூசியிருக்கிறது.

(நன்றி : புதிய தலைமுறை)

12 கருத்துகள்:

 1. We are very behind to create a c engine and very good in pslv. Geo synchronized means ,the satielite revolving around the earth with the same speed of the earth. So the satielite is stationary.

  பதிலளிநீக்கு
 2. on 7th Oct 2010 I went to ISRO Shriharikota for training scientist working there.
  Same day i visted GSLV Launch site.
  I got chance to go till top and see all the facilities.
  It was great experience.

  பதிலளிநீக்கு
 3. 0 பின்னூட்டங்கள்

  No wonder...:)


  Good post

  பதிலளிநீக்கு
 4. LPSC இருப்பது மகேந்திரபுரி அல்ல, அது மகேந்திரகிரி.

  பதிலளிநீக்கு
 5. Very good article. Everyone should reading such information, and get interested in the developments from our nation. This is one of the ways to pull our "cinema coma" state, and to get interested in matters that really will help our nation better and proud.
  Kudos Mr Yuvakrishna.

  பதிலளிநீக்கு
 6. அரிய தகவல்களை எளிய நடையில் சொல்லியிருப்பது சூப்பர்!

  பதிலளிநீக்கு