12 ஜனவரி, 2011

சென்னைப் புத்தகக் காட்சி - சில பரிந்துரைகள்

புத்தகக்காட்சிக்கு செல்லும் நண்பர்கள், ஏதாவது புத்தகங்களை பரிந்துரையுங்களேன் என்று கேட்கிறார்கள். என்னமாதிரியான ஒரு வறட்சியான இலக்கியச் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு மிகச்சரியான உதாரணம் இது. பின்னே, இம்சை அரசன் வடிவேலுவிடம் பார்க்க வேண்டிய உலகப் படங்கள் பட்டியலை கேட்கலாமா? நாம் அவ்வளவு ஒர்த் இல்லை சார். 'சென்னையில் ஃபிகர் வெட்ட ஏற்ற இடங்கள் யாது யாது' என்று கேட்டால் டக், டக்கென்று லிஸ்ட்டை எடுத்து விடலாம். எனக்குப் பிடித்த இலக்கியவாதி பதலக்கூர் சீனிவாசலு என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். அதற்குப் பிறகும் இதுமாதிரி ஆடம் டீஸிங் பண்ணிக் கொண்டிருந்தால் என்னத்தைச் செய்வது?

இருந்தாலும், நம் சிற்றறிவுக்கு எட்டிய சில பரிந்துரைகள் :

புத்தகக் காட்சிக்குள் நேரே நுழைந்து விடாதீர்கள். பச்சையப்பா கல்லூரியை ஒட்டிய பிளாட்பாரத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்கின்றன. 'உள்ளே' நூறு, நூற்றி ஐம்பதுக்கு விற்கப்படும் புத்தகங்களை இங்கே வெறும் இருபது, முப்பதுக்கு புத்தம் புதுசாக வாங்க முடியும். உதா : அருளன் எழுதிய லங்காராணி. Haunted house என்கிற வித்தியாச வடிவமைப்பு கொண்ட ஐரோப்பிய குழந்தைகள் புத்தகம் ஒன்றினை வெறும் முப்பது ரூபாய்க்கு வாங்கினேன். லேண்ட்மார்க்கில் இதன் ரேட் ஐநூறுக்கும் மேலாக இருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் 'பைண்டிங்' செய்யப்பட்ட பழைய காமிக்ஸ்கள் கூட கிடைக்கும். பிரேம்-ரமேஷின் நாவல் ஒன்று இங்கே சல்லிசாக கிடைத்தது. உள்ளே அதன் விலை நூற்றி இருபதோ, நூற்றி ஐம்பதோ. ஒரு முன்னூறு ரூபாய்க்கு பர்ச்சேஸ் செய்ய முடிந்தால், குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் உங்கள் பையில் நிச்சயம்.

கண்காட்சிக்கே நுழைவுக் கட்டணம் ரூ.5 (இந்த வார புதிய தலைமுறையின் விலை ரூ.10. அதில் இலவச கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்). ஆனால் டூ-வீலர் பார்க்கிங்குக்கு ரூ.10. டூ-வீலர் விடும்போது டோக்கன் வாங்க வேண்டாம். ரிடர்னில் கேட்டால் பத்து ரூபாய் நோட்டு ஒன்றினைக் கொடுக்கலாம். கொஞ்சம் தில்லு இருப்பவர்கள் கைச்சின்னம் மாதிரி கை-யை காட்டினாலேயே போதும். ஏதோ பாஸ் இருக்கிறது என்று நினைத்து கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள். அல்லது 9 மணிக்கு மேல் வண்டியை எடுத்து வந்தால் டோக்கன் வாங்க ஆளே இருக்காது. இந்த 10 ரூபாயை மிச்சம் செய்தால், பாரதி புத்தகாலயத்தில் இரண்டு புத்தகம் கூடுதலாக வாங்க முடியும்.

தினத்தந்தியின் வரலாற்றுச் சுவடுகளை நுழைந்ததுமே வாங்கிவிடுவது உத்தமம். 375 ரூ மதிப்புள்ள புத்தகத்தை கலைஞர் புண்ணியத்தால் ரூ.300க்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பத்து சதவிகித புத்தகக்காட்சி தள்ளுபடி போக ரூ.270/-க்கு கனமான, ஹார்ட் பவுண்டிங் அட்டை போடப்பட்ட பொக்கிஷம் கிடைக்கிறது. பிரேமா பிரசுரத்தில் மதனகாமராஜன் கதை, விக்கிரமாதித்யன் கதை போன்ற உருப்படியான நூல்கள் எளிமையான தமிழில் கிடைக்கும். இங்கே 1950களின் கிளாசிக் மர்மநாவல்களும் உண்டு. அரு.ராமநாதனின் நூல்கள் நிஜமாகவே முக்கியமானவை.

வானதியில் வாண்டுமாமா நூல்கள் நிறைய கிடைக்கும். மர்மமாளிகையில் பலே பாலு செமத்தியான காமிக்ஸ் கலெக்‌ஷன் (விலை ரூ.150). சாண்டில்யனின் வாழ்க்கை வரலாறு கிடைத்தால் வாங்கி வைத்துக் கொள்ளலாம். மணிமேகலையிலும் கூட அப்புசாமி காமிக்ஸ் கிடைக்கும். பூம்புகாரில் பழைய புஷ்பாதங்கதுரை மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் நூல்கள் சல்லிசான விலையில் கிடைக்கிறது. உதாரணம் : சிறைக் கதைகள், ரூ.15.90. மீனாட்சி நிலையத்தில் குமரிப் பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் சில நூல்களை (உதா : விக்ரம்) பத்து, பண்ணிரெண்டு ரூபாய்க்கு வாங்க முடிந்தது. இதே விலையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் அந்தக் காலத்து சிறுகதைத் தொகுப்புகளையும் இங்கே வாங்கலாம்.

சாகித்திய அகாதமியில் நிறைய இலக்கிய நூல்கள் குறைந்த விலையில் கிடைக்கும். வாசிக்க தம் இருப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இருபத்தைந்து ரூபாய் புத்தகங்களை கூட (இந்த சைஸ் புத்தகங்கள் மற்ற பதிப்பகங்களில் மினிமம் ரூ.75) ஐம்பது சதவிகித தள்ளுபடியில் தள்ளி விடுகிறார்கள். வாங்கத்தான் ஆளில்லை. இராமாயணம், மகாபாரதம் வாங்கியே ஆகவேண்டுமென்றால் ராஜாஜி எழுதியவற்றை வாங்கலாம் (வானதி என்று நினைவு). மலிவு விலையில் வேண்டுமானால் விஜயபாரதத்தில் சித்பவானந்தர் எழுத்தில் வாங்கி வைத்துக் கொள்ளலாம் (ஈச் ரூ.25 ஒன்லி). சத்திய சோதனை, அக்னிச் சிறகுகள் எல்லாம் ரூ.30 ரேஞ்சில் பல ஸ்டால்களில் கிடைக்கிறது.

எந்த ஒரு புத்தகத்தையுமே வாங்குமுன் ஒன்றுக்கு நான்கு முறை யோசியுங்கள். கடந்த பத்தாண்டுகளில் லட்ச ரூபாய்க்கு மேலாக புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். அவற்றில் இருபத்தைந்து சதவிகித புத்தகங்களை முழுமையாக வாசித்திருந்தாலே அதிகம். தீபாவளிக்கு பட்டாசு வாங்கினாலாவது வெடித்துத் தீர்க்கிறோம். புத்தகங்களை என்ன செய்வது? நீங்கள் படித்தே ஆகவேண்டும் என்று நினைக்கின்ற புத்தகங்களை வாங்கலாம். ஒரு எழுத்தாளர் ரொம்ப பிரபலமாக இருக்கிறார் என்று நினைத்து அவரது புத்தகங்களை வாங்குவது மடத்தனம். சாம்பிளாக அவரது ஓரிரு சிறுகதைகளை படித்துப் பார்த்து, உங்களுக்கு 'செட்' ஆனால் மட்டும், அவரது நூல்களை வாங்கலாம். துறைசார்ந்த நூல்கள் வாங்கும்போதும் கவனம் தேவை. நீங்கள் ஏதோ ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் பட்சத்தில், யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' வாங்கினீர்களேயானால், உங்களைப் போன்ற அம்மாஞ்சி உலகத்திலேயே கிடையாது. நண்பர்கள் எழுதினார்கள், நண்பர்கள் பரிந்துரைத்தார்கள் என்று முகதாட்சண்யத்துக்காக புத்தகம் வாங்குவதை தவிருங்கள். வாசிப்பு முக்கியம்தான். அதைவிட உங்களுடைய ஒவ்வொரும் காசும், உங்களுக்கு ரொம்ப முக்கியம். நான் கவிதைகளையே படிப்பதில்லை. பாரதியார் கவிதைகளில் தொடங்கி, நிறைய கவிதைத் தொகுப்புகளை காரணமேயில்லாமல் கடந்தகாலங்களில் காசுகொடுத்து வாங்கி வைத்திருக்கிறேன். இது எனக்கு தேவையா? உங்களுக்கு எதை படிக்க முடியுமோ, அதை வாங்கினா போதும் சார்.

ஓக்கே, பத்து நூல்கள் பரிந்துரை. நான் சொல்வதற்காக இவற்றை நீங்கள் வாங்கியாக வேண்டும் என்று எந்த அவசியமுமில்லை. இந்த நூல்களை நான் வாசித்திருக்கிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்புக் காரணமும் இந்தப் பரிந்துரைக்கு இல்லை. உங்கள் பர்ஸுக்கு பெரியதாக வேட்டு வைத்துவிடக்கூடாது என்கிற பாச உணர்வும் இந்த பரிந்துரையின் பின்னால் ஒளிந்திருக்கிறது. இது எல்லாமே கொஞ்சம் உருப்படியான புத்தகங்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட எண்ணமும் கூட. இந்தப் புத்தகங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையும் வாசிக்க முடியும் என்பதால் 'துட்டுக்கேத்த தோசை' என்கிற வகையிலும் எடுத்துக் கொள்ளலாம்.

1. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதைய்யர்

2. பாரதியார் கதைகள், கட்டுரைகள்

3. என் கதை - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை

4. எஸ்.ஏ.பி - ஜ.ரா.சு, புனிதன், ரா.கி.ர

5. ஜெயமோகன் குறுநாவல்கள்

6. கூனன் தோப்பு & சாய்வு நாற்காலி - தோப்பில் முகமது மீரான்

7. மதுமிதா சொன்ன பாம்புக் கதைகள் - சாரு நிவேதிதா

8. பின் கதைச் சுருக்கம் - பா.ராகவன்

9. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் - கிரேஸி மோகன்

10. சுகுணாவின் காலைப்பொழுது - மனோஜ்8 கருத்துகள்:

 1. கண்காட்சிக்கே நுழைவுக் கட்டணம் ரூ.5 (இந்த வார புதிய தலைமுறையின் விலை ரூ.10. அதில் இலவச கூப்பன் கொடுத்திருக்கிறார்கள்).

  என்னா ஒரு மார்க்கெட்டிங் டெக்னிக்..


  எழுத்து உங்கள் பக்கம் வசமாகிறதோ..

  பதிலளிநீக்கு
 2. ஜெயமோகன் குறுநாவல்கள்?? ரைட்டு...

  பதிலளிநீக்கு
 3. அட ராமா! (அட கிருஷ்ணா என்று சொல்லணுமோ!) நான் ஏதோ சமீபத்திய புத்தகக் காட்சி பற்றித்தான் போட்டிருக்கிறீர்கள் என்று ஆசை ஆசையாகப் படித்தால், கடைசி வரியில் வைத்தீர்களே வேட்டு! இருந்தாலும், பதிவு நல்லா இருந்ததுன்னு சொல்றதுல எனக்கு ஒரு கஷ்டமும் இல்லீங்ணா!

  பதிலளிநீக்கு
 4. அண்ணே..இந்த 9வது புத்தகம் இருக்கு பாருங்க.. அதுக்கு 300 ரூபாய் கொடுக்கலாம்

  பதிலளிநீக்கு
 5. @ கிருபாநந்தினி said...


  long time no see. hope all are fine

  பதிலளிநீக்கு
 6. கூனன் தோப்பு மற்றும் சாய்வு நாற்காலி உங்களுக்கு முழுமையாக புரிந்ததா?இல்லையெனில் நான் உதவ தயார் .

  பதிலளிநீக்கு