October 20, 2010

அ முதல் ஃ வரை இலவசமாய் இணையத்தில்..

தமிழ் இலக்கண நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், கவிதை-உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் சுமார் 400 புத்தகங்களை வாங்கினால் உங்களுக்கு எவ்வளவு செலவு ஆகும்? புத்தக அலமாரி தாங்குமா? சொந்தமாக வாங்க முடியவில்லை என்றாலும் நூலகத்துக்கு சென்று படித்தால், இவ்வளவற்றையும் படிக்க எவ்வளவு காலம் ஆகும்?

கவலையே வேண்டாம். இத்தனையும் உங்களுக்கு இலவசம். உங்கள் புத்தக அலமாரியில் இவற்றுக்கு இடஒதுக்கீடும் வேண்டாம். நூலகத்துக்கு பாதம் தேய நடக்கவும் வேண்டாம். உட்கார்ந்த இடத்திலிருந்தே உங்கள் கணினியில் இணைய இணைப்பை சொடுக்கினால் போதும். அத்தனையும் உங்கள் மவுஸின் கட்டுப்பாட்டில்.

அதிசயமாக இருக்கிறதா? தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகத்தை இணையத்தில் திறந்தோமானால் இன்னும் நிறைய ஆச்சரியங்கள் காத்துக் கிடக்கின்றன. இந்நூலகம் மொத்தம் பல்வேறு செயல்பாடுகளை கொண்டு தனித்துவத்தோடு இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கண நூல்களில் தொல்காப்பியத்தில் தொடங்கி புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம் என்று அறுவகை இலக்கணம் வரை தமிழின் ஆதார இலக்கணநூல்கள் 20 தொகுக்கப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. திருக்குறள், நாலடியார் தொடங்கி அத்தனை பதிணென்கீழ்க்கணக்கு நூல்களும் நூலகத்தில் உண்டு.

சிலப்பதிகாரத்தில் தொடங்கி தமிழின் முக்கிய காப்பியங்கள் அனைத்தும் இணையத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இவை மட்டுமன்றி சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நெறிநூல்கள், சித்தர்பாடல்கள் என்று திகட்ட திகட்ட தமிழமுதம் வாரி வாரி வழங்கப்படுகிறது.

சங்க இலக்கியங்கள் ரோமன் வரிவடிவத்திலும் தனியாக வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு அகராதிகள் தளத்தில் உண்டு. தமிழ் கலைக்களஞ்சியம் (என்சைக்ளோபீடியா) பத்து தொகுதிகள் கிடைக்கிறது. பல்வேறு துறைகளிலும் புழக்கத்தில் இருக்கும் புதிய கலைச்சொற்களை தொகுத்து கொடுக்கிறார்கள். தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்கள் தொகுத்த சுவடிகளை, சுவடிக் காட்சியகமாக கண்முண்ணே விரிகிறது. சுவடிகளை இணையத்தில் விளக்கங்களோடு வாசிக்கலாம்.

இவை மட்டுமல்லாது, பண்பாட்டுக் காட்சியகம் ஒன்றும் சிறப்பாக இங்கே இயங்குகிறது. இதில் திருத்தலங்கள், திருவிழாக்கள், கலைகள், வரலாற்றுச் சின்னங்கள், விளையாட்டுகள் என்று தமிழருக்கான பாரம்பரியப் பெருமைகள் அனைத்துமே ஒலி-ஒளி காட்சிகளாக சேகரிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் குறித்தோ அல்லது தமிழர் குறித்தோ மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் செய்ய விரும்புபவர்களுக்கு தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின்நூலகம், போதும் போதுமென்று சொல்லக்கூடிய அளவுக்கு தகவல்களை அள்ளி வழங்குகிறது.

ஒருமுறை இந்நூலகத்துக்குள் நுழைந்துவிட்டால் தமிழ் நம்மை ஈர்த்து இங்கேயே உட்கார வைத்துவிடும். இந்நூலகத்தில் இருக்கும் நூல்களை ஒருங்குறியில் (Unicode) மாற்றிவரும் பணிகள் நடந்துவருவதால், சில நூல்களை வாசிக்க எழுத்துரு தேவைப்படும். எனவே முதன்முதலாக நூலகத்துக்குள் நுழையும்போது, தேவைப்படும் எழுத்துருவை உங்கள் கணினியில் நிறுவிவிடுவது நல்லது.

இதுவரை ஏறக்குறைய இரண்டு லட்சம் வருகைகளை பெற்றுள்ள இந்த நூலகத்துக்கு நீங்களும்தான் போய்ப் பாருங்களேன்.

இணைய முகவரி : http://www.tamilvu.org/library/libindex.htm

(நன்றி : புதிய தலைமுறை)

7 comments:

 1. very very usefull... thank a lot...

  ReplyDelete
 2. எல்லாத்தையும் இலவசமாகக் கொடுக்கற மாதிரியா இதுவும்?

  ஆனால், நாம காசு கொடுத்துப் படிக்கச் சொன்னாலும் படிக்க மாட்டோமே! தமிழ்நாட்டிலே எல்லோருக்கும் கணிணியும் இணைய வசதியும் இலவசமாக கிடைக்க ஒரு வழி இருக்கு போலிருக்க ;-)

  ReplyDelete
 3. இந்த சுட்டியை பகிர்ந்ததற்கு நன்றி

  ReplyDelete
 4. very useful information. thank u lucky.

  ReplyDelete
 5. very useful information. thank u lucky.

  ReplyDelete
 6. மிக முக்கியமான, பயனுள்ள தகவலைத் தந்திருக்கிறீர்கள் யுவா. மொழி பாதுகாக்கப்படுவதில், வளர்க்கப்படுவதில் அதன் இலக்கணமும் இலக்கியங்களும் இப்படி நவீன அறிவியல் களத்திற்குக் கொண்டுவரப்படுவது மிக மிகத் தேவை. அந்த நிறுவன்ததிற்கும் உங்களுக்கும் என் மனம் நிறை பாரட்டுகள்.

  ReplyDelete