31 டிசம்பர், 2011

சோழிகள் - குறுநாவல் விமர்சனம்!

"சிரித்தபடி சிதறின சோழிகள்" இவ்வளவு எளிமையான ஒரு அறிமுகத்தோடு கூடிய ஒரு கதையை வாசித்ததாக நினைவேயில்லை.

ரேகை ஜோசியம் பார்த்திருக்கிறேன். கிளி ஜோசியம் பார்த்திருக்கிறேன். எலி ஜோசியம் பார்த்திருக்கிறேன். ஏன் கொஞ்சநாட்களுக்கு முன்பாக ஆக்டோபஸ் ஜோசியம் கூட பார்த்திருக்கிறேன். சோழிகளை உருட்டி ஆரூடம் சொல்லுவது எனக்கு புதிது. நாவலுக்கான காலம் ஐம்பதுகள் என்பதால், அப்போது ஒருவேளை இம்முறை பரவலாக இருந்திருக்கலாம்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் வார்த்தைகளை கொண்ட இந்த நெடுங்கதையில் மொத்தமே ஐந்தே ஐந்து பாத்திரங்கள். இவர்கள் பேசிக்கொள்ளும் இடங்களும் ரொம்ப குறைவு என்பதால், மீதி இடங்களை எழுத்தாளரே எடுத்துக்கொண்டு பேசித்தீர்க்க வேண்டிய கட்டாயம். சலசலவென்று ஓயாமல் ஓடைபோல பேசிக்கொண்டே இருக்கிறார். மனித வாழ்வு தொடர்பான எதிர்மறை நியதிகளை விசாரிக்கும் நேர்மறை சிந்தனைகள். கொஞ்சம் நவீனமாகச் சொல்லவேண்டுமானால், 'பார்ப்பனத் தமிழில் புரட்சிவாதம்' என்றுகூட சோழிகளை சொல்லலாம்.

திருவல்லிக்கேணி கதைக்கான களம். அறுபதைக் கடந்த ராயர் நாயகன். ஜோசியம் முழுநேரத் தொழிலல்ல என்றாலும், கேட்பவர்களுக்கு சோழிகளை உருட்டித் துல்லியமாக சொல்கிறார். வாழ்வின் இறுதிக்காலத்தை மற்றவர்களுக்கு உதவி நிம்மதியாக வாழநினைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டவர். திருவல்லிக்கேணி இடையர்களுக்கு அடிக்கடி மாடு தொலைந்துபோவது பெரியப் பிரச்சினை. ராயரிடம் ஆரூடம் கேட்பார்கள். "மந்தவெளி காடுதாண்டி நடைபோடுது. சாயரக்‌ஷைக்குள்ளே பிடிச்சாந்துடு. கோபதாபத்துலக் குச்சிய வீசிடப் படாது. வாயில்லா ஜீவனை அடிக்கறதுக்கான ஆயுதமில்லையே இதுசும்மா அதட்டதான் புரியறதோ" - பெரும்பாலும் இதுதான் ராயரின் ஜோசியம்.

ஒருநாள் சூர்யஸ்தமனத்துக்குப் பிறகு கைக்குழந்தையோடு ஒரு பெண் வருகிறாள். வெள்ளிக்கிழமை கார்த்தாலே வேலைக்குப் போன ஆத்துக்காரர் ரெண்டு நாளா வீடு திரும்பலை. "ஆரூடம் பார்க்கோணும் ஸாமி" எப்படி கேட்கக்கூடாதோ அப்படிக் கேட்கிறாள். ராகவேந்திரசாமிகள் மீது பாரத்தை போட்டுவிட்டு சோழிகளை உருட்டுகிறார் ராயர். அவராலேயே நம்பமுடியவில்லை. உருண்ட சோழிகள் உண்மையை சொல்கிறது. இதுவரை இப்படியொரு ஆரூடம் சொல்லவேண்டிய கட்டாயம் அவருக்கு நேர்ந்ததில்லை. ஒருவேளை சோழிகள் பொய் சொல்கிறதோ?

மீண்டும் உருட்டுகிறார். மீண்டும் அதே பதில். இவர் கேட்க கேட்க சோழிகள் எந்த உணர்வுமில்லாமல் சொன்ன பதிலையே திரும்ப சொல்கிறது. சோழிகள் அஃறிணை. உணர்ச்சியோ நெகிழ்ச்சியோ கிடையாது. ராயர் மனிதர் ஆயிற்றே? அந்தப் பெண்ணுக்கு என்ன பதில் சொல்வார்? குழந்தைக்கு ஒன்று, ஒன்றரை வயதுதான் இருக்கும். "என்னமோ தெரியல. கணக்கு தப்பாவே வந்துண்டிருக்கு. செத்த ஸ்ரமம் பாக்காம காத்தால வர முடியுமாம்மா" என்று சமாதானம் சொல்லி அனுப்புகிறார்.

அந்த கிருஷ்ணபட்சத்து இரவு ராயருக்கு தூங்கா இரவு. அவரது பத்தினி சுலோசனா பாய் தனது பர்த்தாவை இந்தக் கோலத்தில் கண்டதேயில்லை. கடவுளோடு மனதில் பேசுகிறார். அல்ப மனித வாழ்வு குறித்த ஆத்ம விசாரம். தர்ம நியாயம். காற்றில் வெறுமனே கத்தி சுத்தி களைப்படைகிறார். இவ்வளவுதானா மனிதவாழ்வு? காலையில் அந்தப் பெண் வந்துவிடுவாள். மகள் வயதில் இருப்பவளிடம் என்ன பதில் சொல்வது? சோழிகள் சொன்னதை அப்படியே திருப்பிச் சொல்லிவிடலாமா? நல்ல ஆரூடம் சொல்வேன் என்று என்னை நம்பி வந்தவளை நானே ஏமாற்றலாமா?

இப்படியாகப் போகிறது கதை. கடைசியில் "நதி எதுவாய் இருந்தாலும் சங்கமித்தாக வேண்டிய இடம்தானே கடல்" என்ற யதார்த்த வரியோடு முடிகிறது.

விமலாதித்த மாமல்லன் எடுத்தாண்டிருக்கும் பார்ப்பன மொழி மிக மிக அழகானது. தூர்தர்ஷன் நாடகங்களிலும், தமிழ் சினிமாவிலும் நாம் கண்ட, கேட்ட மொழியல்ல இது. நாவல் முழுக்கவே இம்மொழியாளுகை மிகச்சிறப்பாக எழுத்தாளருக்கு கைவந்திருக்கிறது. ஆனாலும் ஒரு நறுக்கென்ற சிறுகதைக்கான புள்ளியை குறுநாவலாக - வேறு சில சம்பவங்களை புத்திசாலித்தனமாக கோர்த்திருந்தாலும் - நீளமாக இழுத்திருப்பதால், இடையில் மெகாசீரியல் அலுப்பு வாசகனுக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

கதையின் தொடக்கத்தில் பார்த்தசாரதி கோயில் பட்டரோடு ராயர் பேசும் சமூக விவாதம் இக்கதையின் ஹைலைட் என்று எடுத்துக் கொள்ளலாம், அது கதைக்கு சம்பந்தமற்ற, இடைச்செருகலான நிகழ்ச்சி என்றபோதிலும்.

"பிராம்மண குலத்தையே வாய்க்கு வந்தபடி தூஷிக்கிற துடைப்பக்கட்டைப் பயல்களுக்கெல்லாம் சோழி உருட்டி ஜோசியம் சொல்றீரே சொரணை இல்லையோ உமக்கு" - பட்டர்.

ராயர் சிரிக்கிறார்.


"நேக்கு வயத்தப் பத்திண்டு வரதுக்கு சிரிப்பா இருக்காங்காணும்"

"படிக்கறது ராமாயணம் இடிக்கறது பெருமாள் கோயில்னு இருக்கறவாளைப் பாத்து சிரிக்காம வேற எண்ணப் பண்ணச் சொல்றேள்"

"நாத்தழும்பேற நாஸ்திகவாதம் பேசற நாய்களைப் போய் சப்போர்ட் பண்றீரே நியாயமாய்ப் பட்றதா உமக்கு"

ராயர் ஒரு நீண்ட விளக்கம் கொடுக்கிறார். பூணூல் போட்டிருந்தா பார்ப்பானா? போட்டவாளுக்குப் பொறந்துட்டா பார்ப்பானா? எத்தனை பேரு வேளை தவறாம சந்தி பண்றான்? எத்தனை பேரு அர்த்தம் புரிஞ்சி காயத்ரி சொல்றான்? முக்காலே மூணு வீசம் பேருக்கு முதுகு சொறியத்தான் பூணூல் உபயோகப்பட்டுண்டிருக்கு என்று பிராமண நிந்தனை செய்கிறார்.

"க்ருஷ்ண. க்ருஷ்ண" என்று தலையில் அடித்துக் கொள்ளும் பட்டர், "என்னங்காணும் நீர். நாயக்கரை (பெரியாரை) தோக்கடிச்சிடுவீர் போலிருக்கே? உம்ம பூணூலை கழட்டிப் போட்டுற வேண்டியதுதானே?" என்று சொல்லிவிட்டு பின்னங்கால் பிடரியிலடிக்க ஓடுகிறார்.

டீடெய்லிங் கொடுப்பதில் விமலாதித்த மாமல்லன் கிங். கதாபாத்திரங்களுக்கான விவரணை ஆகட்டும், போலவே சம்பவங்களுக்கான விவரணை ஆகட்டும். மிக சுவாரஸ்யமாக, விஸ்தாரமாக - திண்ணையில் அமர்ந்து வெத்தலைப்பெட்டி செல்லத்தை திறந்து இலையின் காம்பை ஒடித்து, விரலில் சுண்ணாம்பு சுரண்டி இலையின் பின்பக்கத்தில் அளவுப் பார்த்து தடவி, ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு சேர்த்து, சொகுசாக வெத்தலைப்போடும் லாவகம் அவரது எழுத்துகளில் மிளிர்கிறது.

1994ல் எழுதப்பட்ட இந்த குறுநாவல் 1996ல் மாலைக்கதிர் இதழில் வெளிவந்திருக்கிறது. இருபது வயதுகளிலேயே தீவிர இலக்கியத்தில் முத்துக்குளித்து, தமிழிலக்கியத்தின் முக்கியமான ஆளுமையாக கவனிக்கப்பட்ட இவர் அடிக்கடி வாழ்விலும் சரி, இலக்கியத்திலும் சரி சந்நியாசம் வாங்கிக்கொண்டு ஒதுங்கிவிட்டிருக்கிறார். கிட்டத்தட்ட இவரின் பதினாறு ஆண்டுகால வனவாசத்தை அகநாழிகை இலக்கிய இதழ் முடித்து வைத்திருக்கிறது. 'சோழிகள்' குறுநாவல் செப்டம்பர் - நவம்பர் 2010 தேதியிட்ட அகநாழிகை இதழில் மீள்பிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது. இவரின் கும்பகர்ண இலக்கியத் தூக்கத்தை நீர் தெளித்து எழுப்பியிருக்கிறார் அகநாழிகை ஆசிரியர் பொன்.வாசுதேவன். இதன் மூலமாக அடுத்த இலக்கிய இன்னிங்சை துவக்குவதற்கான வாய்ப்பு விமலாதித்த மாமல்லனுக்கு வாய்த்திருக்கிறது. இச்சூழலில் இது ஒரு முக்கியமான இலக்கிய நடவடிக்கையாக கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

இடைப்பட்ட காலத்தில் ஒன் டே மாட்சுகள் மட்டுமின்றி, டி20 மாட்சுகளும் பிரபலமாகி விட்டது மாமல்லன் சார். இதையும் கொஞ்சம் கவனத்தில் கொண்டு விளையாடுங்க. உங்க அடுத்த இன்னிங்ஸுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!


விமலாதித்த மாமல்லன் கதைகள் - கடந்தாண்டு உயிர்மை வெளியீடாக வந்திருக்கிறது. முப்பது ஆண்டுகளில் இவர் எழுதிய மொத்த முப்பது கதைகளும் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. விலை ரூ.180. பக்கங்கள் : 312

சில இணைப்புகள் :


12 கருத்துகள்:

 1. பகிர்விற்கு நன்றி. படிச்சுடுவோம்.

  பதிலளிநீக்கு
 2. பொன்.வாசுதேவனுக்கு வாழ்த்துகள் .
  விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு வந்தனங்கள் ..

  பகிர்வுக்கும் வாழ்த்து..

  பதிலளிநீக்கு
 3. //டீடெய்லிங் கொடுப்பதில் விமலாதித்த மாமல்லன் கிங். கதாபாத்திரங்களுக்கான விவரணை ஆகட்டும், போலவே சம்பவங்களுக்கான விவரணை ஆகட்டும். மிக சுவாரஸ்யமாக, விஸ்தாரமாக - திண்ணையில் அமர்ந்து வெத்தலைப்பெட்டி செல்லத்தை திறந்து இலையின் காம்பை ஒடித்து, விரலில் சுண்ணாம்பு சுரண்டி இலையின் பின்பக்கத்தில் அளவுப் பார்த்து தடவி, ஏ.ஆர்.ஆர். சுகந்தப் பாக்கு சேர்த்து, சொகுசாக வெத்தலைப்போடும் லாவகம் அவரது எழுத்துகளில் மிளிர்கிறது//

  அவ்வளவேதான்.... அந்த சுகம்தான் வாசிக்க வைக்குது...

  பதிலளிநீக்கு
 4. சோழிகள் குறு நாவல் படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது உங்கள் விமர்சனம். வார்த்தைகள் வந்து அரு(வி)மையாக விழுகிறது. இன்னும் சுருக்கி (குறுக்கி அல்ல)எழுதினால் இன்னும் சிறப்பாக அமையும். தளபதி முதல் காட்சி...இதெல்லாம் ஊக்குவிக்கும் விதத்தில் எழுதாதீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஒபெநிங் ஸ்பெல்லோ, மிடில் ஓவரோ இல்லை ஸ்லாக் ஓவரோ...
  சரியான ஸ்ட்ரோக் ஆடறதில் தில்லாலங்கடி நீர்தான் ஓய். நேரத்துக்கு எழுதினேள். நன்றி.

  பதிலளிநீக்கு
 6. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி யுவா சார்..!

  பதிலளிநீக்கு
 7. ஐய்யகோ...அவர் எக்ஸைல் விமர்சணம் எழுதின இந்நேரத்திலேயே இப்பதிவு...சாரு வட்டத்திடம் இருந்து அந்த ஆண்டவர் உங்களை காப்பாராக‌

  பதிலளிநீக்கு
 8. hiii,
  The link to read the novel online is not working. Is there any alternate link?

  G Hariprasad

  பதிலளிநீக்கு
 9. அருமையான விமர்சனம்.
  வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. நன்னா சொல்லிண்டேள். ஷேமமாக இருக்க வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு