22 செப்டம்பர், 2010

தபாங் - பகுத் அச்சா மசாலா ஹை!

கொஞ்சம் இப்படி யோசித்துப் பாருங்கள். தமிழில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் மும்பையில் தயாரிக்கப்படுகின்றன. படத்தின் கதாபாத்திரங்கள் எல்லாரும் மும்பையை சேர்ந்தவர்கள். அந்த ஊர் கலாச்சாரம், பண்பாட்டை அடிப்படையாக கொண்டவர்கள். நடை, உடை, பாவனை எல்லாமே அச்சு அசல் மும்பை. ஆனால் பேசுவது மட்டும் தமிழில். நம்மூர் மதுரைக்காரனுக்கு ஜூனூன் சீரியல் பார்ப்பது மாதிரி இருக்காதா? (இப்போது மட்டும் என்ன பெரியதாக வாழ்கிறது? தமிழ்ப்படங்களில் 85 சதவிகிதம் சென்னைதான் கதைக்களம்)

இதே பிரச்சினைதான் இந்தி படங்களில் கொஞ்சநாட்களாக. இந்தி பேசும் பிற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு முழுக்க முழுக்க மும்பையையே கடந்த பதினைந்து/இருபது ஆண்டுகளாக இந்திப்படங்கள் சுற்றிவந்தன. போனால் போகிறதென்று அவ்வப்போது டெல்லி அல்லது பஞ்சாப்பை களமாக எடுத்துக் கொள்வார்கள். மற்ற மாநிலத்துக் காரர்கள் எல்லாம் இளிச்சவாயர்களா? தொண்ணூறுகளின் மத்தியில் என்.ஆர்.ஐ. இந்தியர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட சில ஷாருக்கான் படங்கள் தொடங்கிவைத்த ட்ரெண்டு இது.

இந்த ட்ரெண்டுக்கு தனது அசாத்தியமான வசூலால் சாவுமணி அடித்திருக்கிறது தபாங். இந்த இந்தி வார்த்தைக்கு 'அச்சமில்லை' என்பது பொருளாம். அறிவுஜீவி சினிமா விமர்சகர்கள் தபாங்கை மொக்கை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தி சினிமாவின் நெ.1 வசூல்சாதனை படமான '3 இடியட்ஸ்' வசூலை அனாயசமாக ஒரே வாரத்தில் முறியடித்திருக்கிறது தபாங். ஓபனிங் வீக்கிலேயே வசூல் 80 கோடியை தாண்டிவிட்டது. பத்து நாட்களில் 100 கோடியை வாரி வாயில் போட்டுக் கொண்டது. படம் ஓடி முடிக்கும்போது 3 இடியட்ஸின் ஒட்டுமொத்த வசூலான 200 கோடியை தாண்டி எங்கேயோ போய் நிற்கும் என்பது பாலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். படத்தின் பட்ஜெட் வெறும் 42 கோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படியென்னதான் படத்தில் ஸ்பெஷல்?

'வித்தியாசமாக ஒன்றுமேயில்லை' என்பதுதான் ஸ்பெஷல். இந்தி சினிமா உலகத்தரத்துக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது என்றுகூறி சாமானிய வெகுஜன ரசிகர்களை சிலகாலமாக புறக்கணித்து வந்தது. அவர்களது ரசனைக்கு தீனிபோட மறுத்து வந்தது. எளிய மனிதர்களுக்கான சினிமாவாக, ஆபத்பாண்டவனாக 'தபாங்' வந்திருக்கிறது. அதாவது அவள் அப்படித்தான், முள்ளும் மலரும் மாதிரி படங்கள் வந்துகொண்டிருந்த தமிழ் சினிமாவில் புயலாக முரட்டுக்காளையும், சகலகலாவல்லவனும் வந்ததில்லையா? அதுமாதிரியான ஒரு மசாலா டிரான்ஸ்லிஷனை இந்தியில் 'தபாங்' சாத்தியப்படுத்தி இருக்கிறது. "எங்களுக்கான சினிமாவை எடுங்கள். நாங்கள் மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வந்து பார்க்கிறோம்" என்று சாமானிய இந்தி சினிமா ரசிகன் இப்படத்தின் வெற்றியின் மூலமாக பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு செய்தி சொல்லியிருக்கிறான்.

உத்தரப் பிரதேசத்தின் லால்கஞ்ச் தான் கதைக்களம். சுல்புல் பாண்டேவுக்கும், மகான்சந்துக்கும் ஒரே அம்மா. வேறு வேறு அப்பா. சுல்புலின் அப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். மகன்கள் மீது அம்மா ஒரே மாதிரியாக பாசம் காட்ட, அப்பா மட்டும் தன்னுடைய மகனான மகான்சந்தை மட்டும் பொத்தி பொத்தி வளர்க்கிறார். வளர்ந்து பெரியவனாகி சுல்புல் பாண்டே போலிஸ் அதிகாரி ஆகிறான். சகோதரனுடனும், (வளர்ப்பு) தகப்பனுடனும் உணர்ச்சிப்போர் புரிகிறான். இடையில் அப்பாவையும், தம்பியையும் தூண்டிவிட ஒரு வில்லன். அம்மா கொல்லப்படுகிறார். ஒரு காதல். நாலு சண்டை. குத்துப்பாட்டு. டூயட். மொத்தமே அவ்ளோதான்.

இந்தி சினிமாவென்று அல்ல. தமிழ், தெலுங்கு சினிமாக்கள் மறந்துவிட்ட பல 'க்ளிஷே'க்கள் தபாங்கில் உண்டு. ஒரு கட்டத்தில் பழைய மசாலா படங்களை நக்கலடிக்கிறார்களோ என்றுகூட நினைக்க வேண்டியிருக்கிறது. ஆனால் 'சீரியஸாகவே' இப்படம் இப்படித்தான் வேண்டுமென்று எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அந்தக் காலத்து எம்.ஜி.ஆர். பாணி மீசையோடு சல்மானை பார்க்கவே குஷியாக இருக்கிறது. ஓபனிங் ஃபைட் அபாரம். அங்கே தொடங்கும் சல்மானின் எனர்ஜி கடைசிவரை குறையவேயில்லை. க்ளைமேக்ஸில் அவருடைய பாடி கண்டிஷன் தாங்காமல் சட்டையே அதுவாகவே கிழிந்துவிடுகிறது என்ற இயக்குனரின் அல்லது ஸ்டண்ட் மாஸ்டரின் கற்பனை அட்டகாசம். சத்ருகன் சின்காவின் மகள்தான் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். பேரழகு. வேறு என்னத்தைச் சொல்ல? குறிப்பாக சொல்லவேண்டுமானால் லேசான மேடுகள் கொண்ட சந்தனநிறத்திலான அவரது இடையை சொல்லலாம். அந்தகாலத்து ஹேமமாலினி மாதிரி வித்தியாசமான ஹேர்ஸ்டைல். பார்த்துப் பேசிப்பழகி கல்யாண ஜோலியெல்லாம் முடிந்தபிறகு, முதலிரவில் சல்மானைப் பார்த்து கேட்கிறார். "உன்னோட பேரு என்ன?"

அநீதிகளுக்கு(?) எதிரான ஒரு போலிஸ் ஆஃபிஸரின் போராட்டம் என்ற சீரியஸான கதைக்களன் என்றாலும், படம் முழுக்க நிமிடத்துக்கு ஒருமுறையாவது பலமாக சிரித்துக்கொண்டே பார்க்க முடிகிறது என்பதில்தான் இயக்குனரின் லாவகம் இருக்கிறது.

தபாங் - கைத்தட்டி, விசிலடித்து, குத்துப்போட்டு வரவேற்கலாம்.

11 கருத்துகள்:

 1. அதும் சல்மான் பாடி லாங்குவேஜ் பிரமாதம்..

  தங்கச்சி செண்டிமெண்ட் மிஸ்ஸிங்க்...

  பதிலளிநீக்கு
 2. தல,

  படம் டாப் டக்கர். அதுவும் அந்த ஓபனிங் சீனும், கிளைமேக்ஸ் பைட்டும் தொட்டால் சல்மான் ஸ்பெஷல். என்னை போன்ற சல்மான் ரசிகர்களுக்கு மொத்த வசூல்.

  அடிஷனல் மேட்டர் 1: சென்ற ஆண்டு இதே ரம்சான் முடிவில் வந்த வான்டட் படம் (தமிழ் போக்கிரி) செம ஹிட். அதைப்போலவே இந்த படமும் தான் சூப்பர் டோபர் ஹிட்.

  அடிஷனல் மேட்டர் 2: அந்த ஜண்டு பாம் பாடல் இப்போது அவுட் ஆப் கோர்ட் செட்டில்மென்ட் வரை வந்துள்ளது.

  அடிஷனல் மேட்டர் 3: கண்டிப்பாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமாம்.

  பதிலளிநீக்கு
 3. "Wanted" திரைப்படத்திர்க்குப் பிறகு சல்மானுக்கு சொல்லிக்கொல்லும் படியான ஒரு ஹிட்...

  பதிலளிநீக்கு
 4. நல்ல விரிவான விமர்சனம்...

  // இந்தி படங்களில் கொஞ்சநாட்களாக. இந்தி பேசும் பிற மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு முழுக்க முழுக்க மும்பையையே கடந்த பதினைந்து/இருபது ஆண்டுகளாக இந்திப்படங்கள் சுற்றிவந்தன.//

  இந்தி பட உலகில் இப்படி ஒரு பிரச்சனையா? ஏன் பீகார் மற்றும் உ பி தலைநகரங்களில் திரை படங்கள் எடுப்பதில்லை?

  பதிலளிநீக்கு
 5. ஆமாங்க, சரியான மசாலா தான் இந்தப் படத்தோட ஹிட். உங்க விமர்சனம் அதை நச்ன்னு சொல்லிருக்கு.

  பதிலளிநீக்கு
 6. சகல கலா வல்லவன் வன்துதான் ரசிகர்களை காபாத்துச்சா ?

  சொல்லவெ இல்ல ?

  பதிலளிநீக்கு
 7. அடிஷனல் மேட்டர் 4: படத்தின் சண்டைக் காட்சிகளை அமைத்திருப்பவர் நம்ம ஊருக்காரர் - எஸ்.விஜயன்..

  (ஏம்ப்பா.. இலங்கை போனதுக்காக பிரச்சினை வந்ததால சல்மான் படத்த தமிழ்நாட்டுல ஓட விட மாட்டோம்னாங்களே.. அது அம்புட்டுத்தானா)

  பதிலளிநீக்கு
 8. >> தமிழ்ப்படங்களில் 85 சதவிகிதம் சென்னைதான் கதைக்களம்

  யார் சொன்னது? முக்காவாசி படங்கள் இப்போ தென் மாவட்டங்களை மையமா கொண்டு வருது :)

  பதிலளிநீக்கு
 9. இதையே நம்ம ஆளுங்க எடுத்து இருந்தா 'தபாங்' ஒரு 'டப்பா'ங் படம் ன்னு சொல்லி இருப்பீங்க, இல்லையா? :)
  -கார்த்திக்

  பதிலளிநீக்கு
 10. இதப்படிக்கற நம்ம ஊர் அல்லர சில்லற டைரக்டர் எல்லாரும் நானும் படம் எடுக்கறேன் பாருடான்னு மொக்கைய போட போறாங்க திரை விமர்சகர்கள் ஜாக்கிரதை

  பதிலளிநீக்கு
 11. நானும் பார்த்தேன்..
  பழைய ரஜினி படம் மாதிரியே இருந்துச்சி
  சல்மான் போடி லாங்குவேஜ் அபாரம்
  முரட்டுகாளைக்கும் சகலகலவல்லவனுக்கும் பின்னாடி இவ்ளோ பெரிய ஸ்டோரி இருக்குறது இப்பதான் தெரியுது

  பதிலளிநீக்கு