September 14, 2010

டாஸ்மாக் இல்லாத ஊர்!‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது பழமொழி. இந்த ஊரில் கோயில் இல்லை. இருப்பினும் சுமார் 800 பேர் குடியிருக்கிறார்கள். “கோயில் மட்டுமில்லை. சாராயக் கடையும் இங்கே இல்லை. அதனாலேதான் நாங்க நிம்மதியா வாழமுடியுது” என்கிறார் கிராமவாசி ஒருவர்.

நிஜமாகவே ஆச்சரியம்தான்! இங்கே ‘டாஸ்மாக்’ மதுக்கடை இல்லவேயில்லை. இங்கே மட்டுமல்ல. இந்த ஊர் அமைந்திருக்கும் கோட்டைப்பூண்டி ஊராட்சி மன்றத்தில் எங்குமே இல்லை. யாருக்காவது குடிப்பழக்கம் இருந்தால்தானே ‘டாஸ்மாக்’ கல்லா கட்டும்?

அட. இதென்ன கலாட்டா? ‘டாஸ்மாக்’ இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு ஊரா? உங்களுக்குத் தோன்றும் அதே ஆச்சரியம்தான் நமக்கும்.

சமத்துவபுரம் என்பது பெரியாரின் கனவு. ஒரு ஊரில் வாழும் எல்லோருமே சாதி, மத பேதமற்று, ஆண் பெண் சமத்துவத்தோடு வாழவேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு போராடிய சமூகப் போராளி அவர். அவருடைய ஆசையை நிறைவேற்றும் பொருட்டே ‘பெரியார் சமத்துவபுரம்’ என்ற பெயரில் சிற்றூர்களை, தமிழகஅரசு ஆங்காங்கே சில வருடங்களாக உருவாக்கி வருகிறது. ஆனால் அரசு இத்திட்டத்தை சிந்திப்பதற்கு முன்பாகவே, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாகவே இந்த ஊர் சமத்துவபுரமாகவே செயல்பட்டு வருகிறது.

மது மட்டுமல்ல. சிகரெட், பான்பராக் என்று லாகிரி வஸ்துகள் எதையுமே பழக்கப்படுத்திக் கொள்ளாமல் வாழ்கிறார்கள். மக்களுக்கு எந்தப் பழக்கமும் இல்லை என்பதால் கடைகளில் இந்த சமாச்சாரங்கள் விற்கப்படுவதில்லை. தமிழக அரசின் சுகாதாரத்துறை இந்த கிராமத்தை ‘புகையில்லா கிராமம்’ என்று அறிவித்திருக்கிறது.

அகிலம் ஆளும் அங்காளபரமேஸ்வரியின் அருள் வேண்டி செஞ்சிக்கு அருகில் இருக்கும் மேல்மலையனூர் சுற்று வட்டாரமே செவ்வாடை அணிந்திருக்கிறது. அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மட்டுமே இருக்கும் இந்த ஊர் மட்டுமே கருஞ்சட்டை அணிந்து, கடவுள் மறுப்பு கூறி, கம்பீரமாக தன்னை பகுத்தறிவுக் கிராமமாக பறைசாற்றி வருகிறது.

செக்கடிக்குப்பம்!

“எல்லா ஊரையும் போலதான் எங்கள் ஊரும் ஒரு காலத்தில் இருந்தது. ஊரில் ஆறு ஓடாத குறையை சாராய ஆறு நிவர்த்தி செய்தது. மது மயக்கத்தில் எங்கள் சமூகம் அழிந்துகொண்டு வருவதைக் கண்டு மனம் வெறுத்துப் போனோம். தொடர்ச்சியான பிரச்சாரம் மூலமாகவே மனமாற்றத்தைக் கொண்டுவந்தோம். போதைப் பழக்கத்தால் உயிரிழந்த எங்கள் ஊர்க்காரர்களின் சோகக்கதைகளை இளைஞர்களுக்கு பரப்பினோம். மது, சிகரெட் பழக்கங்கள் உடல்நலத்தை கெடுப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் அழிக்கிறது என்பதை அவர்களுக்கு உணர்த்தினோம். அதன் பலனை இன்று அனுபவிக்கிறோம். எங்கள் இளைஞர்கள் இப்போது பத்தரைமாற்றுத் தங்கங்கள்” என்கிறார் ஊர்ப்பெரியவரான மா. அர்ச்சுனன்.

விவசாயத்தை பிரதானத் தொழிலாக கொண்டவர்கள் செக்கடிக்குப்பத்துக் காரர்கள். அறுபதுகளில் மேல்மலையனூருக்கு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்ய பெரியார் வந்தார். செஞ்சிக்கு அண்ணா வந்தார். இவர்களது சிந்தனைகளை மேடைவாயிலாக உணர்ந்த ஒரு இளைஞர் கூட்டம், தங்களை பகுத்தறிவுப் பாதைக்கு திருப்பிக் கொண்டது. மூடநம்பிக்கைகளை ஒழித்து, தமிழுணர்வுக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார்கள்.

ஆரம்பத்தில் இவர்களது பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்கு பெரிய வரவேற்பில்லை. “புரோகிதர் இல்லாமல் சீர்த்திருத்த திருமணமா? மணமக்கள் கடவுள் அருள் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா?” என்று அவநம்பிக்கையோடுதான் பார்த்தார்கள்.

அவர்களது நம்பிக்கையை உடைக்க அர்ச்சுனன் தன் வாழ்வையே பணயம் வைத்து ஜெயித்துக் காட்டினார். மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. பீடைமாதம் என்று வழங்கப்படுகிற இம்மாதத்தில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகள் அமங்கலமாகும் என்பது காலம் காலமாக நிலவி வருகிற வாடிக்கை.

1968, மார்கழி மாதத்தில் சீர்த்திருத்த முறையில் திருமணம் செய்துகொண்டார் அர்ச்சுனன். சீரும், சிறப்புமாக வாழ்ந்து திருமணச் சடங்குகளில் இல்லை வாழ்க்கையின் சிறப்பு. சேர்ந்து வாழ்வோரின் மனங்களில்தான் அது இருக்கிறது என்று நிரூபித்தார். இவர் ‘பிள்ளையார் சுழி’ போட்டு ஆரம்பித்து வைக்க, அடுத்தடுத்து சீர்த்திருத்தம் தொடர்ந்தது.

“ஆரம்பக் காலங்களில் மக்களின் மனதை மாற்றுவதற்கு நிரம்ப சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கலைவடிவங்கள் மூலமாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, மக்களை கவர்ந்தோம். அண்ணா எழுதிய நாடகங்களை சுற்றுவட்டார கிராமங்களில் நடத்திக் காட்டினோம். திருவண்ணாமலை வட்டாரங்களில் நாங்கள் ரொம்ப பிரபலம். ‘பகுத்தறிவுப் பஜனை’ என்கிற பெயரில் மார்கழி பஜனை பாணியிலேயே, அதே ராகத்தில் கடவுள் மறுப்பு பஜனைகளை செய்வோம். கருப்புச்சட்டை அணிந்து தாப்ளாக்கட்டையோடு தெருத்தெருவாக நாங்கள் பஜனை செய்வதைப் பார்த்து, பக்தர்கள் சிலரும், எங்களை பக்தர்கள் என்று நினைத்துக்கொண்டு பஜனையில் கலந்துகொள்வார்கள். பாடப்பாட வார்த்தைகளின் பொருளுணர்ந்து பதறுவார்கள்” என்று சிரிக்கிறார் பகுத்தறிவுப் பாடகரான காத்தவராயன். இந்த வயதிலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் என்பது இல்லையே” என்று ஏழுக்கட்டைக் குரலில் அசத்தலாகப் பாடுகிறார்.

இப்போது இங்கே நடக்கும் திருமணங்கள் அனைத்துமே சீர்த்திருத்த, மத-சாதி மறுப்புத் திருமணங்கள்தான். “இருவரும் நண்பர்களாக வாழ்கிறோம்” என்று மணமக்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை எடுத்துக் காட்டுவதாகச் சொல்லி தாலியை புறக்கணிக்கிறார்கள். வரதட்சிணை? கொன்றுவிடுவார்கள்!

திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஊருக்குப் பொதுவாக ‘இராவணே அசுரன்’ திறந்தவெளி நினைவரங்கம் கட்டியிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அவரவர் இல்ல நிகழ்ச்சிகளை இங்கே நடத்திக் கொள்ளலாம். கட்டணம் எதுவுமில்லை.

ஊரில் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட மதம்சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை. இந்த கொண்டாட்டத்துக்கு மாற்று ஏற்பாடாக சித்திரை மாதத்தில் ‘தமிழ் மன்னர் விழா’, ‘தமிழ் திருநாள்’ மட்டும் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் தமிழகத்தின் கிராமந்தோறும் அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றப்படுகிறது இல்லையா? வருடம் முழுக்க எங்கள் மக்கள் கூழ்தான் குடிக்கிறார்கள் என்றுகூறி தமிழ் மன்னர் விழாவில் இட்லி, தோசை, கேசரி, பொங்கல் என்று ‘வெரைட்டியாக’ வழங்கி அசத்துகிறார்கள்.

கிராமத் திருவிழாக்களில் ‘சாமி ஊர்வலம்’ நடக்கும். தமிழ் மன்னர் விழாவில் இராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகிய பண்டையத் தமிழ் மன்னர்களின் வேடம் அணிந்து இவர்கள் ஊர்வலம் நடத்துகிறார்கள். சிலம்பம், இசை, பகுத்தறிவுப் பாடல்கள், சமூக நாடகங்கள் என்று தமிழ் மன்னர் விழா களைகட்டும். மதப்பண்டிகைகள் தரக்கூடிய குதூகல உணர்வை, பகுத்தறிவு நிகழ்வுகளிலும் கொண்டுவந்து விடுவதால் மக்களுக்கு எதையும் இழந்த உணர்வு இல்லவேயில்லை. பட்டாசுக்கு மட்டும் தடா. அது சுற்றுச்சூழலுக்கு சீர்கேடு என்பதால். சுற்றுப்புற ஊர்கள் தீபாவளியைக் கொண்டாடும்போது இவர்கள் மட்டும் கருத்தரங்கம், பட்டிமன்றம் என்று நடத்துகிறார்கள்.

“பொதுவாக மரண ஊர்வலங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘பறை’ அடிப்பது வழக்கம். சாதியச் சமூகத்தை எதிர்ப்பவர்கள் என்பதால் எங்கள் ஊர் மரண ஊர்வலங்களில் இங்கே ‘பறை’ அடிப்பதில்லை” என்றார் மதியழகன் என்கிற ஊர்க்காரர்.

சரி, இவர்கள் எந்த சமரசமுமின்றி பகுத்தறிவோடு இருக்கிறார்கள். ஆதலால் விளைந்த பயனென்ன?

இந்த ஊர்க்காரரான பேராசிரியர் அ.பெரியார் சொல்கிறார். இவர் எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

“முதல் பயன் ஆண்-பெண் சமத்துவம். எங்கள் ஊரில் பெண்களுக்கு முழுமையான சமத்துவம் உண்டு. ஊரில் எல்லோருமே தற்காப்புக்கலையாக சிலம்பம் கற்றுக் கொள்கிறோம். மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களும் இங்குண்டு. இக்கலையை கூட பால்பேதமின்றி பெண் குழந்தைகளுக்கும் முழுமையாக சொல்லித்தரப் படுகிறது.

எல்லோருமே பகுத்தறிவாளர்களாக மாறிவிட்ட எங்கள் ஊரில் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எல்லோருக்கும் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகம். தமிழுணர்வும் அதிகம். ஊர்க்காரர்களாக சேர்ந்து தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று நட்த்துகிறோம். அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை விட தாய்த்தமிழ் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம்.

பிறப்பு மட்டுமல்ல, இறப்பிலும் எங்களுக்கு சாதி மதமில்லை. அறியாமையையும், மூடநம்பிக்கையையும் முற்றிலுமாக ஒழித்திருக்கிறோம் என்று சாதகமாக ஏராளமான விஷயங்கள் பல இருந்தாலும் கூட பகுத்தறிவால் எங்கள் ஊருக்கு விளைந்த முக்கியமான நன்மைகளாக சமத்துவத்தையும், கல்வி விழிப்புணர்வையும் நினைக்கிறேன்” என்றார்.

ஊரில் அடுத்து ஆச்சரியப்படுத்தும் விஷயம் ‘தமிழ்’ பெயர்கள். இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நூற்றுக்கு 95 சதவிகிதம் தமிழ்ப் பெயர் சுமந்திருக்கிறார்கள். மீதி ஐந்து சதவிகிதம் பேருக்கும் கூட தேசியத் தலைவர்களின் பெயர்களாகவே இருக்கின்றன. கப்பலோட்டிய தமிழர் என்பது இளைஞர் ஒருவரின் பெயர். சமீபத்தில் பிறந்த பெண்குழந்தை ஒன்றுக்கு செஞ்சோலை என்றுகூட பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

நபர்களுக்கு மட்டுமல்ல. சுய உதவிக்குழுக்களுக்கும் கூட தமிழ்ப்பெயர்கள்தான். இராவணன், கும்பகர்ணன் ஆகியவை ஆண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு சூட்டியிருக்கும் பெயர். இசைத்தமிழ், விண்ணில் தமிழோசை, சுயமரியாதை ஆகிய பெயர்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு. ‘பகுத்தறிவு என்றால் என்ன?’ என்பது இவர்களது விவசாய மேம்பாட்டுக் குழுவுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்.

“பகுத்தறிவு எல்லோருக்குமே இருப்பதால் உள்ளாட்சி திறந்தமனதோடு சிறப்பாக நடைபெறுகிறது. ‘நல்ல ஊர்’ என்று அரசு வட்டாரத்தில் பெயர் எடுத்திருப்பதால் அதிகாரிகளோடும், அரசோடும் நல்ல புரிந்துணர்வு இருக்கிறது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எல்லாமே எங்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது” என்கிறார் ஊராட்சி மன்றத் தலைவரான வீரமணி.

இப்படிப்பட்ட ஊர் கடந்த ஒன்றரை ஆண்டாக சோகத்தில் மூழ்கி இருக்கிறது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்கள் துக்கத்தை பறைசாற்றி வருகிறார்கள். கடந்த ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டுகளில் தமிழர்கள் வெடித்துச் சிதறியது இவர்களது மனங்களில் ஆறாத வடுவாக பதிந்துவிட்டது. தமிழ் மன்னர் விழா, தமிழர் திருநாள் என்று ஊர் விசேஷங்கள் எதுவும் நடத்தும் மனநிலையில் இவர்கள் இல்லை.

“விரைவில் எல்லாம் சரியாகும். நாங்களும் எங்கள் விழாக்களை நடத்துவோம் என்கிற நம்பிக்கையில் காலம் கழிகிறது!” என்கிறார்கள் இந்த கருஞ்சட்டை மனிதர்கள்.

(நன்றி : புதிய தலைமுறை)

19 comments:

 1. பெரிய ஆச்சரியம் தந்த ஊர்!

  இவ்வளவு சீர்திருத்திற்கு பின் இருக்கும் உழைப்பும், அனுபவங்களும், சிரமங்களும் மிக பெரியது..

  பாராட்டுகள் செக்கடிக்குப்பத்துக்கும், அதன் சிறப்பை இந்த பதிவின் மூலம் பதிவு செய்த உங்களுக்கும்


  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  ReplyDelete
 2. கோயிஞ்சாமி எண் 0072:13 PM, September 14, 2010

  ந‌ண்ப‌ரே,

  என‌து ச‌க‌ உட‌ன்பிற‌ப்பு ஒருவ‌ர், அவ‌ர் பெய‌ர் யு‍வ‌கிருஷ்ணா (ஆபாச‌ க‌ட‌வுள்) அவ‌ர் த‌ன‌து பெய‌ரை மாற்ற‌ விரும்புகிறார். த‌ங்க‌ள் ப‌குத்த‌றிவு பாச‌றையில் ந‌ல்ல‌ திராவிட‌ பெய‌ர் ஏதேனும் ஸ்டாக் இருந்தால் கூறுங்க‌ளேன். பெய‌ர் மாற்றும் விழாவை கோயிஞ்சாமிக‌ள் புடைசூழ‌ வெகுசிற‌ப்பாக‌ ந‌ட‌த்தி விட‌லாம்.

  ReplyDelete
 3. arumaiyaana padhivu nanbaa... pagirdhamaikku nanri

  ReplyDelete
 4. This is my Dream Land. Waav.. Wonderful.

  ReplyDelete
 5. அருமையான ஊர்!
  ஒரு சந்தேகம் இராவணன் தமிழ் மன்னனா?

  ReplyDelete
 6. wow!!! it is a dream village...good post lucky!!!

  ReplyDelete
 7. ஆச்சர்யமா தான் இருக்கு.. தமிழ் நாட்டில இப்படி ஒரு ஊரா...

  ReplyDelete
 8. வியப்பான செய்தி. பகிர்வுக்கு நன்றி தோழர்.

  (பத்திரிகைக்காக ஒண்ணும் பில்ட் அப் பண்ணிவிடலையே.. :‍-))

  ReplyDelete
 9. பல கிராமங்கள் இப்படி தோன்றினால் .... தமிழுக்கும் பெருமை

  ReplyDelete
 10. ராமன் வட நாட்டு மன்னன்
  ஆனால் ராவணன் தமிழ் மன்னன் தான் அதை எப்போதே டிக்ளேர் செய்தாகி விட்டது

  ReplyDelete
 11. Wow... Could not believe it!

  -Pugazh
  http://imayam.org

  ReplyDelete
 12. எல்லாம் சரி! சித்திரையில் தமிழ் விழா நடத்துகிறார்களே? ஏன் என்று கேட்கவில்லையா?

  ReplyDelete
 13. Superb Pathivu.

  Would love to visit this place...

  Thanks Y K

  Mayiladuthurai Sivaa...

  ReplyDelete
 14. படிக்க நிறைவாய் இருக்கின்றது. என்றாவது ஒருநாள் அந்த ஊருக்குச் சென்று அவர்களை சந்தித்து உரையாட வேண்டும். நிச்சயமாக

  ReplyDelete
 15. இவர்கள் தான் உண்மையான தமிழர்கள். இவர்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.

  ReplyDelete
 16. நீங்கள் போகும் பொது என்னையும் அழைத்து செல்லுங்கள் . இப்படி மனிதர்களை பார்ப்பது அரிது

  ReplyDelete
 17. நீங்கள்தான் மாமனிதர்கள் வாழ்க பல்லாண்டு

  ReplyDelete