2 செப்டம்பர், 2010

கவிதை நடிகன்!


இளம் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் ’நகரத்திற்கு வெளியே’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சென்னையில் நடந்த இலக்கிய விமர்சன கூட்டம் அது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். டிஸ்கவரி புக் பேலஸ் என்ற புத்தகக்கடையில் நடந்து கொண்டிருந்தது. நூல் விமர்சனத்தை கவிஞர்கள் சிலர் நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இருந்த அந்த கூட்டத்துக்கு இடையே திடீரென ஒரு கோமாளி “கருப்பூ.. சிவப்பூ” என்று உரத்தக் சிரிப்புக்கிடையே சொல்லிக்கொண்டே நுழைந்தார். கையில் வண்ண வண்ண பலூன்கள். முகம் முழுக்க வெள்ளைப்பூச்சு அரிதாரம். கருப்பு மையில் பெரிய மீசை. பெரிய சிகப்பு மூக்கு.

பார்வையாளர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சட்டென்று விமர்சன நிகழ்விடத்தைக் கைப்பற்றிய அக்கோமாளி, கவிஞர் ரமேஷ் பிரேதனின் ‘பலூன் வியாபாரி’ என்ற கவிதையை உரக்க வாசித்தவாறே முன்வரிசையில் இருந்தவர்களுக்கு பலூனை விற்க ஆரம்பித்தார். கவிதைகளின் வரிகளுக்கேற்ப முகபாவனைகளும், உடல்மொழியும் சொல்லுக்கு சொல் மாறிக்கொண்டே இருந்தது. சீரியஸ் இலக்கியத்தை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு, ‘சிரி’யஸ்ஸான நிகழ்வு ஒரு விதூஷகனால் நிகழ்த்தப்பட்டதில் இரட்டை மகிழ்ச்சி.

பலூன் வியாபாரி கவிதை முடிந்ததுமே, ஆன்-த-ஸ்பாட்டில் கோமாளி வில்லனாக மாறினார். பார்வையாளர்கள் எதிரிலேயே கருப்பு மையை முகம் முழுக்க பூசினார். இப்போது அவரது கண்கள் கலங்கி, சிவந்து, முகம் விகாரமடைந்து அச்சமூட்டும் தோற்றம் நிலை கொண்டது. ரமேஷ் பிரேதனின் ‘காந்தியை கொன்றது தவறுதான்!’ கவிதையை வாசிக்கத் தொடங்கினார். கவிதையில் வாசகர்களுக்கு வைக்கப்படும் கேள்விகளை, பார்வையாளர்களை நோக்கி இவர் கேட்கத் தொடங்கினார். அரங்கில் இங்குமங்குமாக குதியாட்டம் போட்டபடி ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டே போனார். திடீரென துப்பாக்கியை நீட்டுவதைப் போல கையை நீட்டி ‘டுமீல்’லென்று சத்தமிட்டபடியே பிணமாக விழுந்தார். பார்வையாளர் மத்தியில் புத்தகத்தின் பக்கங்களை லேசாக புரட்டினாலும் ஒலி கேட்குமளவுக்கு நிசப்தம்.

அடுத்து சி.மோகன் எழுதிய ஒரு தலைப்பில்லாத கவிதை. ‘இன்று எனக்கு தூக்கம் வருகிறது’ இம்முறை மேக்கப்போடு, உடையும் மாறுகிறது. எல்லாமே பார்வையாளர்கள் கண்ணெதிரிலேயே. முகம் முழுக்க சிகப்பு மை. கருப்பு பனியனை துறந்து காவி பனியன். மனிதர்களின் குண இயல்புகளை வேறுபடுத்திக் காட்ட ‘வண்ணங்களை’ குறியீடாக பயன்படுத்துகிறார் அந்த நடிகர்.

பதினைந்து நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட மூன்று கவிதை நிகழ்த்துதல்கள் இவை. கவிதை நிகழ்த்துதல் என்ற சொல் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். கவியரங்கங்களில் கவிதைகள் வாசிக்கப்படுவதுதான் மரபு. நவீன இலக்கியம் வாசிப்பையும், நடிப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறது. கவிதைகள் நாட்டிய நாடகங்களாக நிகழ்த்தப்பட்ட காலம் மாறி, புதுக்கவிதைகளை ஒரு திறமையான நடிகர் மூலமாக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் புதிய யுக்தி இது. ஏற்கனவே ஞானக்கூத்தன் போன்ற பெரிய கவிஞர்களின் கவிதைகள் இதுபோல நடிகர்களால் நடித்துக் காட்டப்பட்டதுண்டு. பொதுவாக கவிதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களின் தாக்கத்தை, இம்மாதிரியான கவிதை நிகழ்த்துதல்கள் பன்மடங்காக பெருக்குகிறது என்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.

மேற்கண்ட கவிதைகளை நிகழ்த்திய நடிகர் தம்பிச்சோழன். தருமபுரி மாவட்டம் ஊத்துப்பள்ளி என்கிற கிராமத்தில் பிறந்த இவர் கூத்துப்பட்டறை அமைப்பில் நாடகம் எழுதுவதற்கும், நடிப்பிற்கும் பயிற்சி பெற்றவர். தேசிய நாடகப்பள்ளி நடத்திய நவீன நடிப்புப் பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்.

இப்போது பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திக் கொண்டிருக்கிறார். கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி அளிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். தற்போது நமது பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை செயல்வழிக் கற்றலாக நடிப்பு முறையில் கற்பிப்பது குறித்த ஆய்வினை செய்துவருகிறார்.

“ஒரு நடிகன் என்பவனுக்கு சினிமாவில் மட்டும்தான் வேலை இருக்கும் என்று நமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு நெடுக நடிகர்கள் பிற மொழி இலக்கியங்களை தம் தாய் மொழி மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் இலக்கியத் தூதர்களாக இருந்திருக்கிறார்கள். தம் மொழி சிறப்புகளை அயல்மொழியாளர்களுக்கும் தங்கள் நடிப்பு மூலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

நடிகனென்றால் சினிமாவில் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற மனோபாவத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எனவேதான் சிறந்த கவிதைகளை மக்களிடம் நடிப்பு மூலமாக பரப்பவேண்டும் என்று திட்டமிட்டேன். மேடை வைத்து, டிக்கெட் வாங்கி பிரம்மாண்டமாக நிகழ்த்தி காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நடிகன் என்றால் கிடைத்த எந்த ஒரு இடத்திலும் அவனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த பதினைந்து நிமிட நிகழ்வுக்கு எனக்கு ரூபாய் நூற்றி ஐம்பது மட்டுமே செலவானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

சி. மோகன், அய்யப்ப மாதவன் போன்ற கவிஞர்களின் இன்னும் சில நல்ல கவிதைகளை நிகழ்த்திக் காட்ட தயாராகி வருகிறேன். நல்ல இலக்கியத்தை அறியாத சமூகம் நற்சமூகமாக மலராது. எனவேதான் நான் வாசித்து பெற்ற இன்பத்தை, நம் மக்களும் பெற வேண்டுமென்று எனக்குத் தெரிந்த நடிப்பு மூலமாக வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் தம்பிச்சோழன்.

காலத்துக்கேற்ப எல்லாவற்றின் வடிவங்களும் மாறித்தான் வந்திருக்கின்றன. மாற்றம் மட்டுமே என்றும் மாற்றமில்லாததாக இருக்கிறது. எதிர்காலத்தில் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை எழுதி பத்திரிகைக்கு அனுப்பாமல், ஒரு நல்ல நடிகரைப் பிடித்து மக்கள் மத்தியில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் ட்ரெண்ட் கூட வெகுவிரைவில் வரக்கூடும்.

(நன்றி : புதிய தலைமுறை)

10 கருத்துகள்:

 1. எண்பத்தி ஏழாம் ஆண்டுவரை
  “கவிதா நிகழ்வு“ என்ற நடிப்புடன் கூடிய நிகழ்வுகள் நடந்தது. தற்போது அறுகிவிட்டதோ என்று நினைத்தேன்.
  இல்லை என்பதை உணர்த்தியது இந்தப் பதிவு. அக்கால கவிதா நிகழ்வுகளில் ஈராஸ்காரர்களின் நிகழ்வுகள் உயிர்ப்போடு இருந்தது.

  பதிலளிநீக்கு
 2. நல்ல நடிகன்... நானும் ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 3. A video recording of that 15 minutes would have enjoyed by many readers. Does anyone if its available anywhere?
  Thank you for highlighting such a talent.

  பதிலளிநீக்கு