31 ஆகஸ்ட், 2010

தூக்குத்தண்டனை - எதிர்வினைகள்!

கடந்த பதிவான ’தூக்குத்தண்டனை’ எக்கச்சக்கமாக கண்டனங்களையும், குறைந்தளவிலான பாராட்டுகளையும், எகனை மொகனையான எதிர்வினைகளையும் பெற்றிருக்கிறது. ஃபேஸ்புக்கிலும், வலைப்பூவிலும் பெற்ற எதிர்வினைகளையும் விட மின்னஞ்சல்களில் பெற்றிருக்கும் எதிர்வினைகள் மிக அதிகம். இது ஒரு உலகளாவியப் பிரச்சினை என்பதால் தனிநபர் தொடர்பான, அவரவர் சார்பு அரசியல் தொடர்பான எதிர்வினைகளை விடுத்துவிட்டு, தனிப்பட்ட என் தேர்வில் நியாயமாக தெரியும் சில எதிர்வினைகளை முன்வைத்து மேற்கொண்டு உரையாடலாம் என திட்டமிட்டிருக்கிறேன்.

1. மூன்று மாணவிகளின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? அவர்கள் கொல்லப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? உன் தங்கையையோ, அக்காவையோ உயிரோடு கொளுத்தியிருந்தால் இப்படிதான் எழுதியிருப்பாயா?

2. கொலைகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதான் சரி. இல்லையேல் மீண்டும் மீண்டும் கொலைகள் தொடரும்.

3. தூக்குத்தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு சிறையில் வைத்து லெக்பீஸோடு பிரியாணி போடச் சொல்லுகிறீர்களா? அரசுக்கும் இவர்களால் வெட்டிச்செலவு.

4. மரணதண்டனை வேண்டாம் சரி. வேறு என்னமாதிரியான தண்டனையை பரிந்துரைக்கிறீர்கள்.

5. பஸ் எரிப்பு கொடூரத்தை நேரில் கண்ட தோழர் சஞ்சய்காந்தியின் வாக்குமூலம் : http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html

இன்னும் ஏராளமான எதிர்வினைகள் வந்திருந்தாலும், மிக முக்கியமான விவாதத்துக்கான அடிப்படைக் கூறுகளை இவை கொண்டிருப்பதாக கருதுவதால், இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். என்னுடைய அரசியல் சார்பினை சுட்டிக்காட்டி ஆதரவாகவோ, எதிராகவோ வந்த எதிர்வினைகளை கைவிடுகிறேன். அதுபோலவே நான் பணிபுரியும் ஊடகத்தினை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட வினாக்களை வருத்தத்தோடு புறந்தள்ளுகிறேன்.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாலேயே சொந்தக்கருத்து எதுவும் அந்நிறுவனத்தின் ஊழியனுக்கு இருந்துவிடக்கூடாது என்று பலபேர் அக்கறையோடு கச்சைக்கட்டி அலைவதை காண வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைதான் நான் முன்வைக்கிறேன். இதற்கும், என்னுடைய தொழிலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுவது அயோக்கியத்தனம். அதுமாதிரி பேசும் நபர்களை தயவுதாட்சணியமின்றி ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் புறக்கணித்தும் வருகிறேன்.

மரணதண்டனைக்கு எதிரான மனநிலையை ஒரு கொள்கையாகவே கொண்டவன் என்றமுறையில் மட்டுமே என்னுடைய கருத்துகளை தோழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். மரணதண்டனை தீர்ப்பு எழுதும் நீதிபதிகளோ, வாதாடிய வழக்கறிஞர்களோ தண்டனை குறித்து மகிழ்வு அடைந்து விடுவதில்லை. இறுகிய முகத்தோடுதான் பலரும் இதுபோன்ற தீர்ப்பினை வரவேற்கிறார்கள்.

ஓக்கே, லெட் அஸ் மூவ் டூ தி பாயிண்ட்ஸ்...

1. மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் மிக மிக மோசமானது. திரும்பவும் அப்படியொரு நிகழ்வு ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை மனநிதானத்தோடு இருப்பவர்கள் யாரும் ஆதரித்து விடமுடியாது. என்னுடைய சிறுவயதில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற நிமிடங்கள் எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை பிற்பாடுதான் உணர்ந்தேன். உயிரிழப்பு என்பது மோசமானது, அது யாருடைய உயிராக இருந்தாலும். கொலை செய்தவர்களையே பதிலுக்கு கொலை செய்யக்கூடாது என்று சொல்லுபவன், எப்படி மூன்று உயிர்கள் கொல்லப்பட்டதை வரவேற்பான் என்று லாஜிக்காக பின்னூட்டம் இடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.

2. மரணம் என்பது தண்டனையல்ல என்பதுதான் நமது வாதமே. உலகம் என்பதே ஒரு சிறைக்கூடம் என்பது தத்துவவாதிகளின் சிந்தனைகளில் உதிக்கும் கருத்து. இந்த சிறைக்கூடத்திலிருந்து ஒருவருக்கு விடுதலை அளிப்பது எப்படி தண்டனையாக இருக்கக்கூடும்? கொலை செய்தவர்களை பதிலுக்கு கொலை செய்துவிட்டால், இனி கொலைகள் தொடராது என்பது மிக மிக அபத்தமான வாதம். நாகரிகம் தொடங்கிய 3000 ஆண்டுகளாக உலகில் இருக்கும் நடைமுறை மரணதண்டனை. கொலைகள் நின்றுவிட்டதா என்ன?

3. குற்றவாளிகளை சிறையில் அடைத்து, வேறு குற்றங்கள் செய்யாமல் தடுப்பதைவிட அரசுக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிடப் போகிறது? குற்றவாளிகளும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு வயிறு இல்லையா? பசி இல்லையா? சக மனிதர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை லெக் பீஸ் பிரியாணி போடுவதைகூட ஆட்சேபிக்கும் அளவுக்கு நம் சமூகத்தின் மனப்பான்மை குறுகிவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர்கள் இவ்வாறெல்லாம் கருத்து கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது.

4. மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை என்று தத்துவார்த்தமாக 2வது பாயிண்டில் விவாதித்து விட்டதால், நடைமுறையிலிருக்கும் ஆயுள் தண்டனைகளை அதிகபட்சத் தண்டனைகளாக பரிந்துரைக்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை போல சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். நம்முடைய சட்டத்தில் ஏற்கனவே இதற்கு இடமுண்டு. தர்மபுரி கொலை சம்பவ குற்றவாளிகளைப் போன்ற கொடூரமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை அடிப்படையிலோ அல்லது அரசுகளின் மன்னிப்பு அடிப்படையிலோ சாகும்வரை விடுதலையே கிடையாது என்று சட்டத்திருத்தமும் கொண்டு வரலாம். வாழ்வு முழுக்க நான்கு சுவர்கள்தான் உலகம் என்பதை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருந்துவிட முடியும்? - சிறைவாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை உணர ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் (தமிழில் ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி) நூலை பரிந்துரைக்கிறேன்.

5. தோழர் சஞ்சய்காந்தி நேரில் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவரது உணர்வுகளை சில தகவல் பிழைகளோடு கொட்டியிருக்கிறார். அன்று அவர் கேட்ட மரண ஓலம் அவரது வாழ்வின் எல்லா நாட்களையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அவசியம் நிறைவேற்றியாக வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.

33 கருத்துகள்:

 1. நல்லா சொல்றாங்கையா டீடைலு......

  பதிலளிநீக்கு
 2. கன்வின்ஸிங். மரண தண்டனையை நானும் எதிர்க்கிறேன். இது காட்டுமிராண்டித்தனமானது.

  பதிலளிநீக்கு
 3. //மரணம் என்பது தண்டனையல்ல என்பதுதான் நமது வாதமே. உலகம் என்பதே ஒரு சிறைக்கூடம் என்பது தத்துவவாதிகளின் சிந்தனைகளில் உதிக்கும் கருத்து. இந்த சிறைக்கூடத்திலிருந்து ஒருவருக்கு விடுதலை அளிப்பது எப்படி தண்டனையாக இருக்கக்கூடும்?//

  நீங்க இந்த மாதிரி எல்லாம் எழுதறதுக்கு விவாதமே செய்ய வேணாம் :)- அடிக்கடி இந்து ஞான மரபு பதிவுகள் படிக்கறீங்களா ? ரவி அவர்கள் கன்வின்சிங் அப்படின்னு சொல்லி இருக்கும்போதே உங்களுக்கு நீங்க எழுதினது மேல சந்தேகம் வந்து இருக்கணும்.

  பதிலளிநீக்கு
 4. மரண தண்டனை என்பது மொத்தமாக கைவிடப்படாமல், case to case basis தேவையெனில் இருக்கவேண்டும். தருமபுரி சம்பவத்தில் குற்றத்திற்கான மூல காரணத்தை பார்க்கும்போது, நிச்சயம் இந்த வழக்கில் தேவை.

  இந்த சம்பவம் நடைபெறுவதற்கு, அடிப்படைக் காரணம் அரசியலாய் இருந்தாலும், இந்த வழக்கில் தூக்குத்தண்டனை வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு எந்த அரசியல் சார்பும் இல்லை. மீண்டும் அரசியல்வாதிகளால், இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என்பதுதான் (இந்த வழக்கில்) தூக்குத்தண்டனையை வலியுறுத்துவதன் நோக்கம்.

  பதிலளிநீக்கு
 5. Your objective is not very clear. One hand you mentioned need to give a chance to the culprit to live their life. And other hand you mentioned that let them to spend the rest of the life in prison. Is it very contradicting?.What's the difference between capital punishment and spend his rest of the life in prison?. What is the difference between "pinam" and "nadai pinam"?.

  பதிலளிநீக்கு
 6. கிருஷ், யதார்த்தம் தான் உன்மை.தத்துவமெல்லாம் போயே போச்சு!கொஞ்சம் பல்டி அடிக்கற மாதிரி தெரியுது.மனிதன் மிருகமானதால் தான் கொலை செய்கிறான்.அப்பறம் அவனே மனிதனாவே பாக்குனுமா?

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள யுவா,

  உங்களின் இந்த பதிவில் என்னவோ நீங்கள் எழுதிய முந்தைய பதிவை நியாபடுத்த மட்டுமே முயன்றிருக்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களை கொஞ்சமும் மனதார சிந்தித்ததாக தெரியவில்லை மாறாக மறுபடியும் உங்களின் முந்தைய பதிவையே தான் இங்கேயும் தந்திருக்கிறீர்கள் என்ன வரிகள் மாற்றி எழுதப்பட்டுள்ளன மற்ற படி எந்த கேள்விகளுக்கும் நியாமான பதிலை நீங்கள் தரவில்லை என்பது என் தாழ்மையான கருத்து...

  // அவர்கள் கொல்லப்பட்டதை மனநிதானத்தோடு இருப்பவர்கள் யாரும் ஆதரித்து விடமுடியாது//

  அவர்கள் கொல்லப்பட்டதை ஆதரிக்காத நீங்கள் எப்படி கொன்றவர்களை ஆதரிக்கிறீர்கள்?

  நீங்கள் சொல்லும் காரணம்

  //கொலை செய்தவர்களை பதிலுக்கு கொலை செய்துவிட்டால், இனி கொலைகள் தொடராது என்பது மிக மிக அபத்தமான வாதம். நாகரிகம் தொடங்கிய 3000 ஆண்டுகளாக உலகில் இருக்கும் நடைமுறை மரணதண்டனை. கொலைகள் நின்றுவிட்டதா என்ன?//

  இந்த லாஜிக்கில் பார்த்தால் உலகத்தில் எந்த தண்டனையும் கொடுக்க முடியாது...நீங்கள் சொல்வது போல ஆயுள் தண்டனை கொடுத்தால் மட்டும் கொலைகள் நின்றுவிடுமா என்ன? அப்படியே குறைத்துக் கொண்டு போனால் கடைசியில் தண்டனை என்பதே வேண்டாம் என்ற நிலை தான் வரும்...யுவா மரண தண்டனை இல்லாமல் போனால் கண்டிப்பாக இப்போது இருப்பதை விட அதிக கொலைகள் தான் நடக்கும் என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்

  //குற்றவாளிகளை சிறையில் அடைத்து, வேறு குற்றங்கள் செய்யாமல் தடுப்பதைவிட அரசுக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிடப் போகிறது? குற்றவாளிகளும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு வயிறு இல்லையா? பசி இல்லையா? சக மனிதர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை லெக் பீஸ் பிரியாணி போடுவதைகூட ஆட்சேபிக்கும் அளவுக்கு நம் சமூகத்தின் மனப்பான்மை குறுகிவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர்கள் இவ்வாறெல்லாம் கருத்து கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது//

  இதை விட அபத்தமாக ஒருவரால் சிந்திக்க முடியாது யுவா...அரசுக்கு கைதிகளை பார்த்துக்கொள்வது தான் வேலையா? சூப்பர்...அவர்களும் மனிதர்கள் தானே ஏன் நாம் அவர்களுக்கு சரக்கு, தம், ஐய்ட்டம் எல்லாம் சப்ளை செய்ய கூடாது என்று கூட கேட்கலாம் போல...

  //மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை என்று தத்துவார்த்தமாக 2வது பாயிண்டில் விவாதித்து விட்டதால், நடைமுறையிலிருக்கும் ஆயுள் தண்டனைகளை அதிகபட்சத் தண்டனைகளாக பரிந்துரைக்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை போல சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். நம்முடைய சட்டத்தில் ஏற்கனவே இதற்கு இடமுண்டு//

  மரணம் விடுதலையா...அப்போ நீங்கள் இப்போ சாக தயாரா? இப்படி கேட்பதற்கு மன்னிக்கவும் ஆனால் நிதர்சனம் என்ன வென்றால் ஒருவருக்கும் சாக இஷ்டம் கிடையாது...அவ்வளவு ஏன் நம்மில் எத்தனை பேர் முதுமையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறோம்? ரெட்டை ஆயுள் தண்டனையா? எவன் காசில் இந்த கொலைகாரர்கள் வாழபோகிரார்கள்? நம்முடைய வரி பணம் அய்யா...இவர்களை போன்ற கயவர்களுக்கு வீணாவதை விட ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் நம் பணம் போனால் பரவாஇல்லை

  //ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்//

  அந்த மரண ஓலத்தை கேட்டால் எந்த கயவாளியும் இனி கொலை செய்ய தயங்குவான் என்ற கோணத்தில் ஏன் உங்களால் பார்க்க முடியவில்லை???

  என்றும் அன்புடன்,
  நெ. பார்த்திபன்

  பதிலளிநீக்கு
 8. லக்கி.....நான் அதிகம் விவாதிக்க நினைக்கும் ஒரு கருத்து உங்கள் பதிவுக்கு என் வாழ்த்துக்கள்.

  என்னுடைய கருத்துக்கள் சில...

  நான் மரண தண்டனையை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்திய அரசியல் சட்ட நடைமுறைபடுத்துதலில் உள்ள அலங்கோலங்களையும் சிறை வாசத்தின் மலவாசத்தையு பார்க்கிற போது மரண தண்டனை என்பது குற்றவாளிக்கு ஒரு வகை விடுதலை என்றே கொள்வேன்.

  அவனது மரணத்தை உறவினர்கள் மாரடித்து அழுது ஏற்றுக்கொண்டாலும் மரணம் என்பது சிறை வாசத்தை ஒப்பிட்டு பார்க்கிற போது விடுதலையே.

  நீங்கள் சொல்வது போல் 'சாகும் வரை சிறை வாசம்' தான் மரண தண்டனையை விட கொடுமையானது.

  உதாரணமாக தற்கொலை பற்றி நான் சொல்வதென்றால் தற்கொலையை நான் ஒரு போதும் ஊக்குவிக்கமாட்டேன். ஆனால் தற்கொலை செய்துகொள்ள ஒரு மனிதனுக்கு சகல உரிமையும் உள்ளதென்றே நான் நம்புகிறேன். ஆனால் சிறையில் அடைபடும் ஒருவன் தற்கொலை செய்துகொள்ள முடியாதபடி அரசாங்கம் கவனித்துக்கொள்கிறது. எனவே நீ சாகாமல் சிறை வாசத்தை செய்த குற்றத்திற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று அரசாங்கம் கொடுமுகம் காட்டுவதை விட மரண தண்டனை லெகுவானதென்பதே என் கருத்து.

  ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்கிறது நம் சட்ட வழிமுறை.
  சமானியன் இந்த வாக்கியத்தில் உள்ள மனிதாபிமானத்தையும் நிரபராதிகள் மேல் அரசாங்கம் காட்டும் கரிசனத்தையும் கவனிக்கும் அதே நேரத்தில் இந்த வாக்கியத்தில் பொதிந்துள்ள வக்கிரத்தை ஒரு குற்றவாளி தான் உணர முடியும்.

  ஒரு நிரபராதிக்காக ஆயிரம் குற்றவாளியை விடுதலை செய்த அரசாங்கமே உனக்கு என்னை தண்டிக்க என்ன அருகதை இருக்கிறதென்று குற்றவாளி கேள்வி எழுப்புகிறான். இன்று குற்றம் செய்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்படவில்லை. எனவே தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நாம் கருத முடியாது அவர்களை வேண்டுமானால் துர்ரதிர்ஷ்டவான்கள் என்று அழைக்கலாம்.

  இவை கருத்துக்கள் மட்டுமே என்னுடைய நிலைப்பாடென்று துல்லியமாக சொல்லிவிடமுடியாது.

  பதிலளிநீக்கு
 9. //5. தோழர் சஞ்சய்காந்தி நேரில் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவரது உணர்வுகளை சில தகவல் பிழைகளோடு கொட்டியிருக்கிறார்.//

  3000 சீக்கியப் படுகொலைகளை நிகழ்த்திய காங்கிரஸ்காரர்களுக்கு இதுவரை எந்த தண்டனையும் கொடுக்கப் படவில்லை, அதிகபட்சமாக சிதம்பரம் மீது செருப்பு வீசப்பட்டது அதுவும் இலக்கை அடையவில்லை

  பதிலளிநீக்கு
 10. அன்பிற்கினிய யுவகிருஷ்ணா..,

  / /...மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை...சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். கொடூரமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை அடிப்படையிலோ அல்லது அரசுகளின் மன்னிப்பு அடிப்படையிலோ சாகும்வரை விடுதலையே கிடையாது என்று சட்டத்திருத்தமும் கொண்டு வரலாம். வாழ்வு முழுக்க நான்கு சுவர்கள்தான் உலகம் என்பதை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருந்துவிட முடியும்?.../ /

  இதுதான் யதார்த்தம்... எனது கருத்தும் இதுதான்...

  இன்றைய தினமலர் நாளிதழின் செய்தி:
  பஸ் எரிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குடும்பத்தினருக்கு அக்கட்சியை சேர்ந்தவர்கள் ஆறுதல்.

  மனம் இறங்குவதுதானே மனித நேயம்.

  நன்றி..,
  மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
  அன்புடன்.ச.ரமேஷ்.

  பதிலளிநீக்கு
 11. கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. ஆனால் விவாதிக்கப்பட வேண்டியது

  பதிலளிநீக்கு
 12. ஹாய் லக்கி... என்னுடைய கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

  வெல்.. மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா? இந்தியாவைப் போல் ஒரு நாட்டில், மரண தண்டனை கட்டாயம் வேண்டும் என்பதே எனது கருத்து. காரணம், மிக எளிமையானது.

  சட்டம், போலீஸ் போன்ற அத்தனை துறைகளும் கெட்டுக் கிடக்கும் ஒரு மூன்றாம் உலக நாடு இந்தியா. இங்கு, சிறைக்குள்ளேயே எல்லா வசதிகளும் கைதிகளுக்குக் கிடைக்கின்றன. எதை எதிர்பார்த்து அவர்களை ஆயுள் தண்டனையில் இருத்துகிறோமோ, அந்த விஷயம் இங்கு நடப்பதேயில்லையல்லவா?

  மேலும், எதிர்பாராது நிகழும் விபத்துகள் போன்ற விஷயங்களுக்கு நீங்கள் சொல்லும் ஆயுள் தண்டனைகள் பொருந்தலாம். ஆனால், திட்டமிட்டுச் செய்யும் கொலைகளுக்கு (உதா: பிளான் போட்டு மனைவியின் கழுத்தை அறுப்பது, மாணவிகளை எரிப்பது இன்னபிற), ஆயுள் தண்டனை ஒரு தீர்ப்பாக ஆகவே ஆகாது. அதுவும், இந்தியாவில்.

  மரண தண்டனை கூடவே கூடாது என்பது எப்படி உள்ளதெனில், ஒரு உதாரணம் தருகிறேன்.

  நான் வசிக்கும் பெங்களூரில், நாய்த்தொல்லை மிக அதிகம். தெருவுக்குத் தெரு, குறைந்த பட்சம் 50 நாய்கள் உண்டு. இரவில், ஒன்பது மணிக்கு மேல், தனியாக நடந்து வந்தால், கடிபடுவது உறுதி. அப்படிப்பட்ட நிலையில், அரசிடம் முறையிட்டு, நாய்களை அகற்றப் பார்த்தால், இந்த ‘விலங்கின ஆர்வலர்கள்’ ஓடி வந்து, ‘நாய்கள் நாட்டின் கண்கள். அவை தெருவில் நடமாடுவது அவற்றின் பிறப்புரிமை.. நாய்களை அரசிடம் விடேன்’ என்று புரட்சி செய்கிறார்கள் இங்கே.. அவனவன் கடிபட்ட வலி, அவர்களுக்குத் தான் தெரியும்.. இந்த ஆர்வலர்களின் வீட்டிலேயே இத்தனை நாய்களையும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று விட்டுவிடலாமா என்று நாங்கள் யோசித்து வருகிறோம்..

  இப்படித்தான் மரணதண்டனை கூடாது என்ற வாதம் எனக்குத் தோன்றுகிறது. சில குற்றங்களுக்கு மரண தண்டனை அவசியம் தேவை என்பது எனது கருத்து.

  மேலும், உங்கள் வாதப்படியே பார்த்தாலும், இரட்டை, மூன்று ஆயுள் தண்டனை கொடுப்பதால் என்ன பலன்? நடைப்பிணமாக ஒருவன் வாழ்வதனால் சமூகத்துக்கு என்ன நன்மை? அதற்குப்பதில், அவனுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது மேலல்லவா?

  மரண தண்டனை முதலிலிருந்தே இருந்துதான் வருகிறது. அதனால் குற்றங்கள் என்ன குறைந்தா போய் விட்டன என்று நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அப்படியென்றால், ஒன்று செய்யலாம் என்று தோன்றுகிறது. குற்றங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அதனால், சட்டத்தையே தூக்கி விடலாம்; விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே ட்ராஃபிக் விதிகளை மொத்தமாக அகற்றிவிடலாம். மொள்ளமாறிகள் அரசியலுக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.. எனவே, ஊழலை குற்றப்பட்டியலில் இருந்து அகற்றிவிடலாம்..

  இப்படித் தான் தோன்றுகிறது.. மரண தண்டனை வேண்டாம் என்று சொல்வதில்..

  இது எனது கருத்து. நன்றி.

  பதிலளிநீக்கு
 13. லக்கி. தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். மூன்றாம் மனிதராக நீங்கள் இட்ட இந்த பதிவு உங்கள் இணைய பக்கத்தை நிரப்பும் ஒரு பதிவு மட்டுமே. பலர் "உங்கள் அக்கா தங்கச்சி...." என்று கூறிய வசனத்தை நான் நாசுக்காக கூறுகிறேன். தத்துபித்துவம் எல்லாம் பதிவு எழுதவும் படிக்கவும் நல்லா இருக்கும். உங்கள் ஆஸ்தானமான சாருவை பத்தி சொன்னாலே வெகுண்டெழும் நீங்கள் எழுதிய இந்த பதிவை வெறும் ஹிட்சுக்காக எழுதியதாகவே நான் கருதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 14. ஒருவர் குடும்பத்தை பஸ்ஸில் வைத்து கொளுத்தியிராவிட்டால் அவர் மரணதண்டனையை ஆதரிக்கமாட்டார்.

  நிதாரி சம்பவத்துல ஒருவர் பிள்ளையை பாந்தர் கோலி வன்புணர்ந்து வெட்டி தின்றிருக்கவில்லை என்றால் அவர் மரணதண்டனையை ஆதரிக்கமாட்டார்.

  என்னை கேட்டால் தூக்கு தண்டனை மிக சுலபமானது,ஆங்கிலேயன் கண்டுபிடிப்பு.சீக்கிரம் வலியில்லாம சாகமுடிவது,அது கூடாது
  நான் லீதல் இஞ்சக்‌ஷனையும்,ஓல்ட் ஸ்பார்கி எனும் மின்சார நாற்காலியையும் வரவேற்கிறேன்.

  அடுத்தவருக்கு நடப்பது நமக்கு செய்தி
  நமக்கு நடந்தால் அது சம்பவம்

  பதிலளிநீக்கு
 15. அன்பின் கருந்தேள்...

  உங்கள் நாய் உதாரணம் மிகவும் ஸ்வாரஸ்யமானது.

  நாய்களை கொல்வதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அந்த உதாரணத்தின் இன்னொரு கோணத்தை சிந்தியுங்கள். உங்கள் தெருவிலிருக்கும் பத்து நாய்களை கொண்டு போய் கொல்வதால் நாளை புதிதாக வரும் பதினொன்றாவது நாய் பயத்தில் வருந்தி திருந்துமா?
  நிச்சயமாக இல்லை.

  நாயின் குணம் கடிப்பது. அதை ஒரு போதும் அது நிறுத்திக்கொள்ளப்போவதில்லை.

  அது போல் குற்றம் செய்ய துணிந்தவனுக்கு தண்டனைகள் பற்றி தெரிந்தே இருக்கிறது. அதை உதறி தள்ளிவிட்டுத்தான் அவன் குற்றம் செய்ய ஆயத்தமாகிறான். அப்படி துணிந்த குமாரை டமாரின் தூக்குதண்டனை திருத்திவிடும் அல்லது குற்றம் செய்வதிலிருந்து அவனை விலக்கிவிடும் என்று நீங்கள் கற்பனித்துக்கொள்வது நகைச்சுவையாக உள்ளது.


  நீங்களும் நானும் குற்றவாளியாய் இல்லாமல் இருப்பதற்கு இந்தியாவில் கவனிக்கவும் இந்தியாவில் மூன்று காரணங்கள் உண்டு.

  1. நாம் குற்றம் செய்ய விரும்புவதில்லை.
  2. குற்றம் செய்தால் சட்டம் நம்மை பின் தொடர்வதை தவிர்க்கும் அளவுக்கு நாம் செல்வாக்கு படைத்தவர்கள் இல்லை. எனவே குற்றவாளி என்று சட்டம் நம்மை துரத்துவதை நாம் விரும்பவில்லை.
  3. நம்மை குற்றவாளி என்று ஜோடிக்க சக்தி வாய்ந்த எவரோடும் நாம் இதுவரை மோதவில்லை.

  இந்தியாவில் குற்றவாளியாக இல்லாமல் ஒருவன் இருக்க மேற்சொன்ன ஏதேனும் ஒரு காரணம் பொருந்தும்.

  ஒருவன் குற்றவாளியாய் இருக்க மேற்சொன்ன மூன்று காரணங்களின் எதிர்மறை நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது அவன் குற்றம் செய்ய விரும்பியிருக்கலாம். சட்டத்தின் பிடியை அலட்சியம் செய்பவனாக இருக்கலாம் அல்லது சட்டத்தின் பிடியிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் செல்வாக்கு படைத்தவனாக இருக்கலாம். பாயின்ட் நம்பர் 3 நிகழ்ந்திருக்கலாம்.

  இப்போது சொல்லுங்கள் மேற்சொன்ன 3 காரணங்களுக்காக நாளை குற்றவாளி ஆகப்போகும் ஒருவன் இன்று நிறைவேற்றப்படும் மரண தண்டனையினால் அச்சம் கொண்டு குற்றம் செய்யாமல் இருப்பானோ?

  பதிலளிநீக்கு
 16. கேள்வி இது தான்.

  தூக்கு தண்டனை அவசியமா?

  ஆம் என்றால்....எதற்கு? ஆப்ஷன் 1 அல்லது 2.

  1. குற்றவாளிக்கு தண்டனை
  2. மற்றவர்களுக்கு பாடம்

  அவசியம் இல்லை என்றால்? ஏன்?

  1. அது கொடூரமானது
  2. அது இலகுவானது.

  பதிலளிநீக்கு
 17. விசாவின் அறிவுத்திறமையை பார்த்து வியந்து விட்டேன்.

  1. நாம் குற்றம் செய்ய விரும்புவதில்லை. ( இவர்கள் குற்றம் செய்ய விரும்பியிருக்கிறார்கள் )

  2. குற்றம் செய்தால் சட்டம் நம்மை பின் தொடர்வதை தவிர்க்கும் அளவுக்கு நாம் செல்வாக்கு படைத்தவர்கள் இல்லை. எனவே குற்றவாளி என்று சட்டம் நம்மை துரத்துவதை நாம் விரும்பவில்லை. ( இவர்கள் செல்வாக்கு படைத்தவர்கள் இல்லை. இருந்தால் இந்நேரம் வெளியே சுதந்திரமாக உலாவியிருப்பர்கள். )

  3. நம்மை குற்றவாளி என்று ஜோடிக்க சக்தி வாய்ந்த எவரோடும் நாம் இதுவரை மோதவில்லை. ( யாரோடும் மோத வேண்டாம். நாம் செய்த பாவத்தை நாம் அறுவடை செய்ய வேண்டும். வெளியே நல்ல நிலையில் இருப்பது போல் இருந்தாலும் தவறு செய்தவர்கள் தினம் தினம் சாகாமலே, சாக மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டு வேதனையை அனுபவிப்பார்கள். நியூட்டனின் மூன்றம் விதிப்படி. )

  ஆகவே இவர்கள் இந்த மூன்று விதியின் கீழ் வராததினால், சாகும் வரை தூக்கிலிடுவது தவறே இல்லை. பேனாவை வேண்டுமானால் நீதிபதி உடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 18. //உயிரிழப்பு என்பது மோசமானது, அது யாருடைய உயிராக இருந்தாலும். கொலை செய்தவர்களையே பதிலுக்கு கொலை செய்யக்கூடாது என்று சொல்லுபவன், எப்படி மூன்று உயிர்கள் கொல்லப்பட்டதை வரவேற்பான் என்று லாஜிக்காக பின்னூட்டம் இடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக்
  கொள்ளலாம்.//
  ஒகே தலைவரே ஒத்துக் கொள்கிறேன், பொறுத்தி பார்த்துக் கொள்கிறேன் உங்களது நிலைப்பாட்டையே உங்களது லாஜிக்கையோ நான் சந்தேகிக்கவில்லை
  ஆனால் திமுக தலைமை = அஇஅதிமுக தலைமை இந்த பிரச்சினையை எவ்வாறு கையாண்டார்கள் என்று உலகுக்கு தெரியும்

  பதிலளிநீக்கு
 19. லக்கி இந்த விஷயத்தில் நான் உங்களை நான் ஆதரிகிறேன். தூக்கு என்பது காண்டுமிராண்டித்தனம். இதில் தடுமாற்றம் தேவையில்லை. ராஜீவ்கொலை வழக்கிலோ, தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கை வைத்தோ அதரித்தோ எதிர்த்தோ பார்க்க வேண்டியத்ல்லை.இது பற்றி நானும் விரிவாக எழுதமால் என நினைக்கிறேன்,

  டி,அருள் எழிலன்,

  பதிலளிநீக்கு
 20. @லக்கி யுவக்ருஷ்ணா: கட்டுரை நன்றாக இருந்தது. ஆனால் தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தையும் தூக்குதண்டனையை ஒழிப்பதை பற்றியும் இணைப்பது சற்றும் பொருத்தமில்லாதது மட்டுமல்ல, முதிர்ச்சி இல்லாததும் கூட.

  பதிலளிநீக்கு
 21. /// VISA said...

  எனவே தண்டிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்று நாம் கருத முடியாது அவர்களை வேண்டுமானால் துர்ரதிர்ஷ்டவான்கள் என்று அழைக்கலாம்.///

  VISA அண்ணே, சூப்பரா சொன்னீங்கண்ணே, ஆதாரத்தோட மாட்டிகிட்டது இவங்களோட தப்பாண்ணே, தினகரன் அஃபீஸ்ல கூட 3 பேர எரிச்சி கொன்னாங்க தண்டனையா குடுத்துட்டாங்க, எங்கள மாதிரி புதுசா பதிவெழுத வந்து குப்பை கொட்டுரவங்கல்லாம், இன்னும் உங்க மாதிரி அனுபவமுள்ள, பதிவுலக ஜாம்பவான்கள் கிட்டேர்ந்து இன்னும் நெறய எதிர்பாக்குறோம்ணே...

  ஏமாத்திடாதீங்க, இவங்கள ரிலீஸ் பண்ணச் சொல்லி ஸ்ட்ராங்க ஒரு பதிவெழுதுங்கண்ணே...

  ஏன்னா, தூக்குதண்டன குடுக்குறதனாலயோ, ஆயுள் தண்டனை குடுக்குறதாலையோ, எப்படி இந்த மாதிரி பெட்ரோல் ஊத்தி எரிச்சி கொலை பன்னுரது நிக்கப் போரதில்லையோ, அதே மாதிரி சும்மா போலீஸ், சட்டம், மண்ணாங்கட்டினு இந்த கவருமெண்டு கேசு போட்டு தண்டனை குடுக்குறதையும் நிறுத்தச் சொல்லி போராடனும்ணே..., ஏன்னா இதனால தப்பு பன்றது நின்னா போச்சி..., நீங்க விடாதிங்கண்ணே, எதிர் கருத்து சொல்றவங்க சொல்லிகிட்டுதான் இருப்பாங்க அவங்க இப்படி சொல்லி பேமஸாகப் பாக்குராங்க... அதையெல்லாம் கண்டுகிடாதீங்க...

  பதிலளிநீக்கு
 22. இந்த மாதிரி ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு டைப் அடிப்பது, தத்துவம் பேசுவது, ஆலோசனை சொல்வது ரொம்ப எளிது நண்பரே! உங்கள் உயிரியினும் மேலானா அன்பு மகளை எவனாவது கொளுத்தினால் (மன்னிக்கவும், வேறு வழியில்லை), இப்படி தான் கருத்து கூறுவீர்களா? கொஞ்சம் மனசாட்சியுடன் பேசவும்...!

  பதிலளிநீக்கு
 23. பின்னூட்டம் இடலாம் என்றுதான் வந்தேன். மிக நீளமான பின்னூட்டமாக இருப்பதால், தனிப்பதிவாகவே போட்டுவிட்டேன்

  http://ramamoorthygopi.blogspot.com/2010/08/blog-post_31.html

  பதிலளிநீக்கு
 24. தல நீங்க ஏன் மரணத்தை ஒரு தண்டனைனு பாக்குறீங்க.. இந்து ஞான மரவில் மரணம் என்பது ஒரு ஆன்மா இந்த உலகிலிலிருந்து விடுபட்டு இறைவனடி சேர்வதையோ அல்லது மறுபிறவி அடைவதையோ குறிப்பிடுகிறது... பஸ் எரித்தவர்களை பாராட்டி அவருக்கு மரணம் என்னும் உயரிய ஞான நிலையை அரசு தருகிறது.

  நந்திகிராமில், ஈழத்தில்,குஜராத்தில் தண்டகாரண்ய காடுகளில் மக்களுக்கு வழங்கப்பட்டவை எல்லாமே மரணம் என்னும் ஆன்ம விடுதலை..

  பதிலளிநீக்கு
 25. லக்கிலுக்
  மரணத்தை தண்டனையாக பார்க்காதீர். அது ஆன்ம விடுதலை. ஈழத்தில்,நந்திகிராமில், குஜராத்தில், தண்டகாரண்ய காடுகளில் இறந்தவர்கள் அனைவருமே அரசாங்கத்தால் ஆன்ம விடுதலை பெற்றவர்கள்

  பதிலளிநீக்கு
 26. பொதுவாக பதிவுலகில், தாங்கள் நம்பும் கருத்துக்களே சத்தியம் என எண்ணியே பதிவுகள் இடப்படுகின்றன. அவைகளுக்கு எதிர்வினைகள் ஏற்படும்போது, அந்த எதிர்வினைகளுக்குள் இருக்கிற நியாயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. திரும்பவும் தான் சொன்ன பழைய கருத்துக்களையே வலியுருத்தி அடுத்த பதிவுகளும் வந்துவிடுகிறது. இது ஒருவிதமான ஈகோ. தன்னுடைய கருத்துகளை மாற்றிக் கொள்ளவும், நியாயங்களை ஏற்றுக் கொள்ளவும் மறுக்கும் ஈகோ. இந்த பதிவிலும் அதுதான் தெரிகிறது. நமக்கு நேரிடையாக எந்தவித பிரச்சனைகளும் வராதவர "மனித உரிமை" பேசுவோம் வாருங்கள்... வேறென்ன சொல்ல...

  பதிலளிநீக்கு
 27. ரொம்ப சௌகரியமாக மதுரையில் தினகரன் ஊழியர்கள் மூன்று பேர் எரிக்கப்பட்டதை மறந்து விட்டது போல் பாவ்லா காட்டி இருக்கிறீர்களே, அட அடாடா.

  பதிலளிநீக்கு
 28. லக்கி,

  நீதிமன்றம் வழங்கும் மரண தண்டனைகள் நிறுத்தபட வேண்டும்... என்பது நியாயமான உணர்வே...

  நீங்கள் சொல்வது போல்... ராஜிவ் என்பவனுக்கு எந்த நீதிமன்றம் தண்டனை வழங்கியது... இல்லையே... அது நீங்கள் எழுதிய இந்த பதிவு போல் எதிர்வினையா? இல்லை சில உலக மகா அயோக்கியர்கள் சு.சாமி, சந்திராசாமி, நரசிம்மராவ் போன்றவர்கள் செய்த கொலையா... தமிழர்கள் எதிர் வினையை... சு.சாமி குழு பயன்படுத்தி கொண்டதா?

  ராஜிவ் என்பவனின் பிண்டத்திற்கு கடந்த ஆண்டு 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த... சோனியா, ராகுல், பிரனாப், எம்.கே.நாராயணன்,சிவசங்கர மேனன், மன்மோகன், ஹிந்து ராம், சு.சாமி, ஜெயலலிதா போன்ற போர் குற்றவாளிகளை எந்த நீதிமன்றம் தண்டிக்க போகிறது?

  தமிழினத்தின் எதிரியான ராஜிவ் என்பவனின் மரத்திற்கு மானமுள்ள எந்த தமிழனும் வருந்த தேவையில்லை என்பது என் நிலை...

  பதிலளிநீக்கு
 29. // சோனியா, ராகுல், பிரனாப், எம்.கே.நாராயணன்,சிவசங்கர மேனன், மன்மோகன், ஹிந்து ராம், சு.சாமி, ஜெயலலிதா போன்ற போர் குற்றவாளிகளை எந்த நீதிமன்றம் தண்டிக்க போகிறது //

  தமிழ்குரல், நல்ல அருமையான லிஸ்ட். எந்த notable exception ன்னும் இல்லையே !

  பதிலளிநீக்கு
 30. 3000 சீக்கியப் படுகொலைகளை நிகழ்த்திய காங்கிரஸ்காரர்களுக்கு இதுவரை எந்த தண்டனையும் கொடுக்கப் படவில்லை, அதிகபட்சமாக சிதம்பரம் மீது செருப்பு வீசப்பட்டது அதுவும் இலக்கை அடையவில்லை
  sssssssssssssssuupperr

  பதிலளிநீக்கு
 31. அவங்களை தண்டனை இல்லாம விட்டு விடுவோம். இன்னொரு நூறு பேரை உயிரோடு கொளுத்தட்டும்.

  பதிலளிநீக்கு
 32. http://thatstamil.oneindia.in/news/2010/09/05/salem-omalur-girl-murder.html

  Ithukku neenga recommend seiyum thandanai enna?
  -Jai

  பதிலளிநீக்கு