21 ஆகஸ்ட், 2010

முன்னோடி ஊர் முடிச்சூர்!


ஊருக்குள் நுழைந்து நடக்க ஆரம்பித்ததுமே சடக்கென்று உறுத்துகிறது ஒரு விஷயம். அட ஒரு குப்பைத்தொட்டி கூட காணோமே? தேடித்தேடி கண்கள் ஓய்ந்ததுதான் மிச்சம். பாவம். பஞ்சாயத்துக்கு அவ்வளவு நிதி நெருக்கடியோ? குப்பைத்தொட்டியை விடுங்கள். குப்பை கூட இல்லையே? இங்கே மனிதர்கள் வசிக்கிறார்களா என்ன?

மேற்கு தாம்பரத்திலிருந்து படப்பை செல்லும் சாலையில் இருக்கும் முடிச்சூருக்குள் நுழைந்ததுமே இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. மேற்கண்ட சந்தேகம் அவசியமே அற்றது. ஏனெனில் முடிச்சூரில் 16,000 பேர் வசிக்கிறார்கள். தாம்பரத்துக்கு வெகு அருகிலிருக்கும் புறநகர்ப்பகுதி என்பதால் ஆண்டுக்கு ஆண்டு தடாலடி வளர்ச்சி. ஆனாலும் பெரிய ஏரி, குளங்கள், மரங்கள், கால்நடைகள், வெள்ளந்தி மனிதர்களென்று கிராமத்தன்மை சற்றும் மாறாமல் பச்சைமணம் வீசும் பூஞ்சோலையாகவே இருக்கிறது. தூரத்தில் மலைகள் தெரிகிறது. ஊரே பச்சைப்பசேலென இருக்க, சில்லென்ற காற்று 24 மணிநேரமும் வீசிக்கொண்டே இருக்கிறது.

குப்பையைப் போலவே வேறு சில விஷயங்களும் இங்கே இல்லவே இல்லை. குடிநீர்ப் பற்றாக்குறை, குழந்தைத் தொழிலாளர் முறை போன்றவையும் அவற்றில் அடக்கம். சுருக்கமாகச் சொல்லப் போனால் 53 வருட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்கும் கொடுத்துவைத்த பாக்கியவான்கள் முடிச்சூர் வாழ்மக்கள். சும்மாவா? குடியிருப்போர் நலனுக்காக இவ்வளவு சின்ன ஊரிலேயே 53 குடியிருப்போர் நலச்சங்கங்கள் இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை அரசிடமோ, வேறு யாரிடமோ எதிர்ப்பார்க்காமல் தாங்களாகவே செய்துகொள்கிறார்கள் என்பதில்தான் முடிச்சூர் மற்ற ஊர்களிலிருந்து வேறுபடுகிறது. இன்று நேற்றல்ல, 1952லிருந்தே அம்மக்கள் இப்படிப்பட்ட மனவோட்ட்த்துடன்தான் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு சோறு பதம் பார்ப்போம். 1957ல் முதல்வர் காமராஜர் இங்கே ஒரு கிராம மருத்துவமனையை திறந்துவைக்கிறார். அந்த காலத்தில் அதற்கு ரூ.5,000/- செலவு ஆனது. மருத்துவமனையை கட்டியது அரசு அல்ல. YWCA (Young Women Christian Association) என்ற தொண்டு நிறுவனம் பாதிப்பணம் அளிக்க, மீதிப்பணத்தை முடிச்சூர் மக்கள் தங்கள் சொந்தப் பணத்தை செலவழித்து, தங்களுக்கு மருத்துவமனை கட்டிக் கொண்டார்கள்.

இதுதான் முடிச்சூர்வாசிகள்!

இரண்டு நடுநிலைப் பள்ளிகள். மூன்று அங்கன்வாடி பள்ளிகள். இரண்டு நியாயவிலைக்கடை. 12 சதுர கிலோ மீட்டர் அளவே கொண்ட சிற்றூர். 4,200 வீடுகள். 4 வார்டுகளுக்கு 6 உறுப்பினர்கள். ஒரு பஞ்சாயத்துத் தலைவர். இதுதான் உள்ளாட்சி கட்டமைப்பு. புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்துக்குள் அடங்கியது முடிச்சூர் ஊராட்சி.

ஒரு காலத்தில் இங்கே விவசாயம்தான் பிரதானத் தொழில். நகரமயமாக்கல் சூழலில், தாம்பரம் நகருக்கு வெகு அருகே இருப்பதால் இன்று நிலை மாறிவிட்டது. குறைந்தபட்சம் 30 சதவிகிதம் பேராவது அரசு ஊழியர்கள். கட்டடத் தொழிலாளர்களும் கணிசமானவர்கள். பரம்பரை பரம்பரையாக இங்கே வசிக்கும் பாரம்பரியமான 50 குடும்பங்கள் இன்னமும் இங்கேயே வசிக்கின்றனர்.

குடிநீர்ப்பஞ்சம் அறவேயில்லை!

ஆக்கிரமிப்பு இல்லாத மிகப்பெரிய ஏரி ஒன்று. ஐந்து குளங்கள். மூன்று திறந்தவெளிக் கிணறு, எட்டு ஆழ்துளைக் குழாய்க்கிணறுகள் இருப்பதால் குடிநீர்ப்பஞ்சம் என்ற சொல்லையே முடிச்சூர்வாசிகள் கேள்விப்பட்டதில்லை. ஒரு நாளைக்கு 11 லட்சம் லிட்டர் குடிநீரை இந்த நீராதாரங்களின் மூலமாக எடுத்து பயன்படுத்துகிறார்கள்.

குடிநீர் வினியோகத்துக்கு ஏதுவாக 14 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் கட்டப்பட்டிருக்கின்றன. 1000 வீடுகளுக்கும் மேலாக வீட்டுக் குடிநீர் இணைப்பும், எல்லாத் தெருக்களிலும் குடிநீர்க்குழாயும் கட்டமைத்திருக்கிறார்கள். குடிநீருக்கு பாலாறையோ, சென்னைக் குடிநீரையோ எதிர்ப்பார்க்கா வண்ணம் தன்னிறைவு அடைந்திருக்கிறார்கள். ஊராட்சி முழுக்க மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாக ஏற்படுத்தியிருப்பதால், நிலத்தில் நீர்மட்டத்தின் அளவு போதுமானதாகவே இருக்கிறது.

விஸ்வரூபம் எடுத்திருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்!

முடிச்சூரின் முன்னேற்றத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பங்கு அளப்பறியது. இவ்வளவு சின்ன ஊராட்சியிலேயே மொத்தம் 112 குழுக்கள் இருக்கிறது. தோராயமாக 1800 பேர் இக்குழுக்களில் இயங்குகிறார்கள். எல்லா குழுக்களையும் இணைத்து ஒரு கூட்டமைப்பு உருவாக்கியிருக்கிறார்கள். இந்த கூட்டமைப்பு ஒரு அரசுசாரா நிறுவனம் (NGO) போல செயல்படுகிறது. ‘போல’ என்ன? NGO-வாக இக்கூட்டமைப்பினை பதிவுகூட செய்திருக்கிறார்கள்.

“மாவட்ட அளவில் மணிமேகலை விருது பெற்றவர்கள் நாங்கள்!” என்று பெருமையாகச் சொல்கிறார் கூட்டமைப்பின் தலைவியான நிர்மலா பாஸ்கர். இவர் முடிச்சூரின் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவியும் கூட. ஊரில் எந்த நல்லது கெட்டது நடந்தாலும், மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்பை கலந்தாலோசிக்காமல் எதுவும் செய்வதில்லை. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கிறார்களோ இல்லையோ. முடிச்சூரில் 50% ஒதுக்கீடு இயல்பாகவே இருக்கிறது.

சமீபத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலமாக ரூ.27 லட்சம் சுழல்நிதி இந்தக் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கிறது. மகளிர் கூட்டமைப்புக்கு 2 கட்டிடங்களும், 2 வணிக மையமும் ஊருக்குள் இருக்கிறது.

“ஊரின் ‘பளிச்’ சுத்ததில் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களின் பங்கு பிரதானமானது” என்கிறார் ஊராட்சிமன்றத் தலைவர் தாமோதரன்.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்

கட்டுரையின் தொடக்கத்தில் குப்பையில்லை என்று ஆச்சரியப்பட்டோம் இல்லையா? அது எப்படி சாத்தியமானது?’

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எல்லா ஊர்களுக்கும் இருக்கும் இந்த குப்பைப் பிரச்சினை முடிச்சூருக்கும் இருந்தது. குப்பைகளை மக்கள் விதியில் கொட்ட, அவற்றை இரண்டு குப்பை வண்டிகள் வைத்து வாரி ஏரியில் கொட்டி கொண்டிருந்தது ஊராட்சி நிர்வாகம். நீராதாரங்களில் குப்பைகளை கொட்டுவதால் என்னென்ன தீமைகள் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் ஒருமுறை உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்து வகுப்பெடுத்தார்.

அதன்பின்னர் விழித்துக் கொண்ட முடிச்சூர் தங்கள் ஊருக்காக ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமைக்குழு’ ஒன்றினை உருவாக்கியது. குடியிருப்போர் நலசங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சிமன்றம் ஆகியவை இந்தக் குழுவின் அங்கத்தவர்கள். Hand in Hand என்ற தொண்டு நிறுவனம் இவர்களுக்கு உதவத் தொடங்கியது. மாவட்ட ஆட்சியாளரும் 4,80,000 ரூபாய் நிதிகொடுத்து ஊக்குவித்தார். குப்பைப் பிரச்சினையைத் தீர்க்க இப்போது இவர்களிடம் ஒரு திட்டம் தயார்.

அதன்படி ஒவ்வொரு வீட்டுக்கும் இரண்டு குப்பைத்தொட்டி வழங்கப்பட்டது. ஒன்று பச்சை நிறம் – மக்கும் குப்பைகளுக்காக. மற்றொன்று சிகப்புநிறம் – பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகளுக்காக. மக்களே குப்பைகளை தரம்பிரித்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை 7 மணியளவில், குப்பையை சேகரிக்க வருவார்கள் பசுமை நண்பர்கள்.

ஆம், துப்புரவுப் பணியாளர்கள் என்ற சொல் முடிச்சூரில் தடை செய்யப்பட்டிருக்கிறது. சுகாதாரப் பணியில் ஈடுபடும் இவர்களை ஊரில் எல்லோருமே க்ரீன் பிரண்ட்ஸ் (பசுமை நண்பர்கள்) என்றுதான் அழைக்க வேண்டுமென்று அறிவிக்கப்படாத சட்டம் அமலில் இருக்கிறது.

பசுமை நண்பர்களின் வருகை ஒரு விசில் சத்தத்தின் மூலம் மக்களுக்கு தெரியும். சேகரிக்கப்பட்ட குப்பை நேராக ஒரு பிரித்தெடுக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கே மக்காத குப்பைகளை பிரித்தெடுத்து மறுசுழற்சி (recycling) செய்ய அனுப்பப்பட்டு விடும். மக்கும் குப்பைகளை தொட்டிகளில் கொட்டி, பதப்படுத்தப்பட்டு 45 நாட்களில் மண்புழுக்களை உருவாக்குகிறார்கள். இதன்மூலமாக மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. எனவே குப்பை என்றால் வீணான விஷயம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

மொத்தம் 28 பேர் பசுமை நண்பர்கள் குழுவில் இருக்கிறார்கள். இவர்களது சம்பளம், நிர்வாகமென்று மாதத்துக்கு ஒரு லட்சரூபாய் செலவாகிறது. இதையும் அரசிடம் வாங்குவதில்லை. ஊராட்சியும் தனது நிதியிலிருந்து தருவதில்லை. ஒவ்வொரு வீட்டிலும் குப்பை அகற்றும் பணிக்காக மாதம் ரூ.30/- வசூலிக்கப்படுகிறது. Hand-in-hand தொண்டு நிறுவனமும் மொத்தச் செலவில் ஒரு பகுதியை கொடுத்துவிடுகிறது.

சம்பளம் தவிர்த்து, பசுமை நண்பர்களுக்கு சோப், கையுறை போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது. காப்பீடு இருக்கிறது. மாதாமாதம் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

திடக்கழிவு மேலாண்மையில் முடிச்சூரின் திறமையைக் கண்டு உலகமே வியக்கிறது என்றால் மிகையான வார்த்தையல்ல. நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்கள் பலவும் இங்கே வந்து இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று பாடமாக படித்துவிட்டுச் செல்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் சுத்தம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் முடிச்சூர் குறித்து கேள்விப்பட்டு, நேரில் வந்து கண்டு செல்கிறார்கள். சமீபத்தின் சுவீடன் நாடு, தங்கள் நாட்டில் குப்பைகள் எப்படி சுத்தப்படுத்தப்படுகிறது என்பதை நேரில் காண (Study tour), முடிச்சூர் ஊராட்சிமன்றத் தலைவரை அழைத்து கவுரவப்படுத்தியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியாளருக்கும் இவ்விஷயத்தில் முழுத்திருப்தி. குப்பைகளை பிரித்தெடுத்து, உரம் தயாரிக்கும் பெரிய தொழிற்சாலை ஒன்றினை இப்போது உருவாக்கி வருகிறார்கள். இதற்காக மாவட்ட ஆட்சியாளர் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் மற்றும் மக்கள் பங்கேற்பின் மூலமாக வெகுவிரைவில் இத்தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வந்துவிடும். தமிழ்நாட்டின் 13,000 ஊராட்சிகளிலேயே மிகப்பெரிய குப்பை பிரிக்கும் தொழிற்சாலையாக இதுதான் இருக்கும் என்று மார்தட்டி சொல்கிறார்கள் மக்கள்.

அனேகமாக அனைத்து வீடுகளிலுமே கழிப்பறை வசதி இருக்கிறது. பாதாளச் சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீரை, தொட்டியில்தான் (safety tank) வெளியேற்ற வேண்டும். இந்த கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட வாய்ப்பிருக்கிறது. எனவே ஊராட்சியில் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் கழிவுத்தொட்டியிலும் ‘பேக்டிசைம்’ என்ற ரசாயனம் கலக்கப்பட்டிருக்கிறது. இந்த ரசாயனம் மூலமாக உருவாகும் பாக்டீரியாக்கள் கழிவுநீரிலிருக்கும் கழிவுகளை தின்று, நீரை சுத்தமான நீராக மாற்றிவிடும். இந்நீரை செடி, கொடிகளுக்கு கூட விடலாமாம். நிலத்தடியும் மாசுபடுவதில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கழிவுத்தொட்டியில் விடவேண்டிய பேக்டிசைமுக்கு ரூ.75/- மட்டுமே செலவாகும்.

கூவம் நதி சீரமைப்புக்கு சமீபக்காலமாக அரசு நிறைய ஆலோசனை செய்து வருகிறது. பல கிராமங்கள் தங்கள் கழிவுகளை ஆற்றில் கலந்துவிடுவதாலேயே கூவம் மாசடைகிறது. சிலநாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டமொன்றில் கழிவு அகற்றுதல் பிரச்சினையை முடிச்சூர் ஊராட்சி எப்படி கையாளுகிறது என்பதை முடிச்சூர் ஊராட்சி மன்றத் தலைவரை நேரடியாகப் பேசச்சொல்லி மற்ற ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கு விளக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

சாலைகள்

கிட்டத்தட்ட 70 சதவிகிதம் சாலைகள் கான்க்ரீட் சாலைகளாக தரமுயர்த்தப் பட்டிருக்கிறது. சாலைகளுக்கு எப்போதுமே நமக்கு நாமே திட்டம்தான். சாலை போடவேண்டுமென்றால் அதன் பயனாளர்கள் (அதாவது அத்தெருவில் வசிப்பவர்கள்) அனைவரையும் அழைத்து ஒரு கூட்டம் போடுகிறார்கள். சாலை அமைக்க இவ்வளவு ரூபாய் மதிப்பீடு ஆகியிருக்கிறது. நீங்களும் பங்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள்.

மொத்த மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்களுடையதாகவும், மீதி அரசுடையதாகவும் இருக்கிறது. எல்லா சாலைகளுக்கும் விடாப்பிடியாக ‘நமக்கு நாமே’ திட்டத்தை பிடித்திருப்பதற்கு முடிச்சூர் ஊராட்சி ஒரு நியாயமான காரணத்தை வைத்திருக்கிறது. மக்களின் பங்கு இருப்பதால்தான் இச்சாலை நம் பணத்தில் போடப்பட்டிருக்கிறது. நம்முடையது என்ற மனப்பான்மை அவர்களுக்கு வருகிறது.

இதுவரை நமக்கு நாமே திட்டத்தில் கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் வரை சாலை போட்டிருக்கிறார்கள் என்றால் எவ்வளவு சாலைகள் போடப்பட்டிருக்கும், அவற்றில் மக்களின் பங்கு எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களிடம் இருந்து பங்கு பெறும்போது வங்கி வரைவோலையாக மட்டுமே பெறுகிறார்கள். பணத்தை கையில் வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை.

விருதுகள்

தங்கள் பகுதி மக்களின் அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகளை தீர்ப்பதைத் தவிர்த்து வேறென்ன பெரிய கடமை இருக்கப் போகிறது உள்ளாட்சிகளுக்கு?
கடமையைச் சிறப்பாகச் செய்பவர்களுக்கு விருதுகளும், பாராட்டுகளும் குவிவது வழக்கம்தான்.

சுத்தமான கிராமத்துக்கான நிர்மல் புரஸ்கார் தேசிய விருது, தமிழகத்தின் சிறந்த ஊராட்சி நிர்வாகத்துக்கான தேசிய விருது, கர்நாடக அரசாங்கம் வழங்கிய கர்நாடக உத்சவா விருது, காஞ்சிபுரம் மாவட்டளவில் மழைநீர் சேகரிப்பை சிறப்பாக செய்ததற்கான மாவட்ட விருது என்று இன்னும் நிறைய அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் விருதுகளால் நிரம்பி வழிகிறது ஊராட்சி மன்ற அலுவலகத்தின் வரவேற்பரை.

தட்டினால் திறக்கிறது

சில காலத்துக்கு முன்பாக ஊராட்சிமன்றத் தலைவர்களோடு, மாவட்ட ஆட்சியர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக உரையாடும் முறை கொண்டுவரப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. முன்னோட்டமாக தமிழகத்தில் இரண்டே இரண்டு ஊராட்சிகளுக்குதான் ‘வெப் கேமிரா’ வழங்கப்பட்டது. ஒன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியிலிருந்த ஆண்டிப்பட்டி. மற்றொன்று முடிச்சூர். இதிலிருந்து இவ்வூருக்கு அரசிடமிருக்கும் நிஜமான செல்வாக்கையும், முக்கியத்துவத்தையும் உணரலாம்.

“அரசால் எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் நாங்கள் விடுவதில்லை. உடனே பேப்பரையும், பேனாவையும் எடுத்து விண்ணப்பிக்க ஆரம்பித்து விடுவோம். கிடைக்குமோ கிடைக்காதோவென்று யோசிப்பதேயில்லை. எப்போதும் எல்லாக் கதவையும் தட்டிக்கொண்டே இருக்கிறோம். தொடர்ச்சியாக தட்டிக் கொண்டிருப்பதால் அவையும் திறந்துகொண்டே இருக்கிறது” என்கிறார் ஊராட்சிமன்றத் தலைவர் தாமோதரன்.

நிஜம்தான். சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) கட்டுமான அபிவிருத்திக்காக 25 லட்சம் வழங்குவதுண்டு. முடிச்சூர் வருடம் தப்பாமல் கடந்த 4 ஆண்டுகளாக இத்தொகையை பெற்றுக்கொண்டே இருக்கிறது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்களிடம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் வரை பெற்றிருக்கிறார்கள்.

தமிழக அரசின் இலவச வீட்டுமனைப்பட்டா, கிராமநத்தம் வீட்டுமனைப்பட்டா, வண்ணத் தொலைக்காட்சித் திட்டம், கலைஞர் காப்பீடுத் திட்டம் என்று திட்டத்தையும் விட்டு வைப்பதில்லை முடிச்சூர். எல்லாவற்றையும் கதவுத் தட்டி, கதவுத் தட்டியே வாங்கிவிடுகிறது. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக 4 பேருக்கு இருதய அறுவைச் சிகிச்சை கூட நடந்திருக்கிறதாம்.

தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், குடியிருப்போர் சங்கங்கள், மகளிர் கூட்டமைப்பு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊழியர்கள் என்று ஊர் மொத்தமே கூடி தேரிழுப்பதால் முடிச்சூர் தேர் ஆழித்தேர் மாதிரி கம்பீரமாக அசைந்தாடி அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி அசுரப்பாய்ச்சல் பாய்ந்துக் கொண்டிருக்கிறது.

நிர்வாகம், அடிப்படை வசதிகள் என்பதைத் தாண்டி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் இவ்வூர் மும்முரம் காட்டிவருவது குறிப்பிடத்தக்க ஒன்று. கடைகளிலோ, வீடுகளிலோ குழந்தைத் தொழிலாளர் கட்டாயம் இருக்கக்கூடாது என்பதை கடுமையாக கடைப்பிடிக்கிறார்கள். குழந்தைகள் யாராவது நீண்டகாலமாக பள்ளிகளுக்கு வராமல் இருந்தால் (school drop out), அதை வைத்து அக்குழந்தை எங்காவது பணி செய்யச் சென்றிருக்கலாம் என்று கண்டுபிடிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் நேரிடையாகப் பேசி, பிரச்சினை ஏதாவது இருந்தால் தீர்த்து வைக்கிறார்கள்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது நம் நாடும், மக்களும் எப்படி இருக்க வேண்டுமென்று காந்தி கனவு கண்டாரோ, அப்படித்தான் இருக்கிறது முடிச்சூர் ஊராட்சி. நாடு அப்படி இருக்கிறதா என்பதை நாட்டை ஆளுபவர்கள்தான் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.

அடடா, ஒன்றை சொல்ல மறந்துவிட்டோமே? முதலிலேயே சொல்லியிருக்க வேண்டும். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கால முடிச்சூர் ஊராட்சியின் வரலாற்றில் ஒருமுறை கூட அரசியல் கட்சி சார்பானவர்கள் தலைவர் பொறுப்புக்கு வந்ததில்லை. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!

(நன்றி : புதிய தலைமுறை)

18 கருத்துகள்:

 1. //கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கால முடிச்சூர் ஊராட்சியின் வரலாற்றில் ஒருமுறை கூட அரசியல் கட்சி சார்பானவர்கள் தலைவர் பொறுப்புக்கு வந்ததில்லை. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்!//

  கட்டுரையிலயே ஹைலைட் இதான்!

  பதிலளிநீக்கு
 2. நம்புவதற்குச் சிரமமாக உள்ளது. என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?

  பதிலளிநீக்கு
 3. கோபி அவர்களே!

  சென்னையில் இருந்தாலோ அல்லது சென்னைக்கு வந்தாலோ நேரடியாகவே ஒரு நடை போய் பார்த்துவிட்டு வந்துவிடலாமே?

  கட்டுரையின் நீளம் கருதி இன்னமும் பல சாதனைகளை எழுதாமல் விட்டிருக்கிறேன்.

  நீராதாரங்களை யாரும் அபகரிக்க இயலாத வண்ணம் பக்காவாக எல்லைகள் வகுத்திருக்கிறார்கள்.

  மக்கள் மையம் என்ற பெயரில் ‘எல்லோருக்கும் கணினி’ என்று நிறைய திட்டங்கள்.

  முழுக்க முழுக்க உள்ளாட்சியின் அடிப்படையில் உருவான சொர்க்கம் முடிச்சூர்.

  பதிலளிநீக்கு
 4. நிச்சயம் ஒரு நாள் சென்று பார்த்து அதிசயித்துவிட்டு வரவேண்டும்.

  அரசியல்வாதி புகாத ஊர் உருப்பட்டுவிடும் என்று கூறலாம் போல.

  அறிமுகத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. எப்பா, ஒரு வழியாக உங்கள் பதிவுகளில் வரும் ஒன்று எனக்கு பரிச்சயம் ஆகி இருக்கிறது.

  சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை (ஒரு விளம்பரதாரை காண ) முடிச்சூர் சென்றேன். மிகவும் நன்றாக இருந்தது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மறுபடியும் சென்றபோது பெருத்த மாற்றங்கள் கண்ணுக்கு பட்டன.

  பதிலளிநீக்கு
 6. என்னால நம்பவே முடியல....

  இதை முகப்புத்தகத்துல இங்கிருந்தே பகிரும் வண்ணம் ஒரு சுட்டி கொடுத்தால் நல்லா இருக்கும்.

  பதிலளிநீக்கு
 7. முடிச்சூர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு விவரமாய் அல்ல. நல்பதிவு

  பதிலளிநீக்கு
 8. அற்புதம்...
  வேறென்ன சொல்ல..
  -விபின்

  பதிலளிநீக்கு
 9. Did you write the review for the movie Expendables in Vikatan?

  பதிலளிநீக்கு
 10. நல்ல பதிவு... நன்றி லக்கி...!!!

  - முடிச்சூர் வாசி ஜெய்.

  பதிலளிநீக்கு
 11. //நம்புவதற்குச் சிரமமாக உள்ளது. என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் நாம்?//

  நிஜம் தான். அந்த அளவு சமுதாய சீர்கேடுகளை பார்த்து நொந்துப்போயிருக்கிறோம்.

  நல்ல பகிர்வுக்கு நன்றிகள் யுவகிருஷ்ணா:)

  பதிலளிநீக்கு
 12. மிக்க நன்றி யுவகிருஷ்ணா, உண்மையிலே பயனுள்ள தகவல்,
  திட கழிவு பிரச்னைக்கு பல்வேறு இணைய தளங்களைத் தேடி அலுத்த போது, உங்கள் பதிவு பல அவசியமான தகவல்களைத் தாங்கி வந்துள்ளது,
  தொடருங்கள் இது போன்ற பயனுள்ள தகவல்களை,
  அன்புடன், மார்கண்டேயன்.

  பதிலளிநீக்கு
 13. Yuvakrishna:

  Nice article.

  One correction:
  You have mentioned 53 years after independence. It is actually 63 years.

  Otherwise, it is really a required info for everyone.

  Why media is not projecting these types of activities in a prolific manner.

  Kuppusamy K S
  http://kskuppu.blogspot.com

  பதிலளிநீக்கு
 14. //சுகாதாரப் பணியில் ஈடுபடும் இவர்களை ஊரில் எல்லோருமே க்ரீன் பிரண்ட்ஸ் (பசுமை நண்பர்கள்) என்றுதான் அழைக்க வேண்டுமென்று அறிவிக்கப்படாத சட்டம்//

  Great...

  பதிலளிநீக்கு
 15. Dear krishna,
  Really i am very surpised about this mudichoor history.Also i was veryvery happy about that last poin which u r mentioned no politic is there.Any hw keep up the good work.This will be the good example for all our villages in tamilnadu.Thanks.

  பதிலளிநீக்கு
 16. யார் ஆரம்பித்தது? எப்படி தொடர்கிறத? நம்பவே முடியவில்லை

  பதிலளிநீக்கு
 17. முடிச்சூர்............
  அளவு கடந்த ஆச்சரியங்கள்!
  காரணத்தின் ஊற்றாய் ஊராட்சி மன்ற தலைவர்
  வானம் தொட வளரட்டும்!
  நின் புகழ் ஓங்கட்டும்!

  பதிலளிநீக்கு