30 ஜூலை, 2010

’ஓ’ ஞாநி!

குமுதத்தின் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்தமான தலைவர் ராஜாஜி. அவர் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் எஸ்.ஏ.பி.க்கு உண்டு. குமுதம் வளர்ந்து வந்த நேரத்தில் பெரும்பாலான தலையங்கங்கள் தனது சவுக்கடியை தொடர்ச்சியாக முதல்வர் ராஜாஜி மீது வீசி வந்தது.

ஓர் உதவியாசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டாராம். “நீங்கள் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை, அவரது ஆட்சியை இப்படியெல்லாம் விளாசலாமா?”

எஸ்.ஏ.பி. சொல்லியிருக்கிறார். “பெரிய பத்திரிகையான நாம் யானையிடம்தான் மோதவேண்டும். திமுக போன்ற கொசுக்களிடம் மோதுவதில் நமக்கென்ன பெருமை?”

திமுக பின்னாளில் புலியாக வளர்ந்து பாய்ச்சல் நிகழ்த்தியபோது எஸ்.ஏ.பி. துப்பாக்கி கொண்டு தலையங்கம் தீட்டவேண்டியிருந்ததாம்.

- எஸ்.ஏ.பி. மறைந்தபோது, ஏதோ ஒரு பத்திரிகையில் (ஆ.வி. என்பதாக நினைவு) ரா.கி.ரங்கராஜன் எழுதியது இது. என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.

இந்தப் பதிவில் நான் சொல்லவிரும்பியது இதை மட்டும்தான். ஏன் சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

ஞாநி மீது பலருக்கும் பல்வேறு குறைபாடுகள் உண்டு. குற்றச்சாட்டுகள் இருக்க வாய்ப்பில்லை. குறைபாடுக்கும், குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் எழுதுவது எல்லோருக்கும் பிடிக்காது. அதுபோலவே எல்லோருக்கும் பிடிக்கும்படிதான் அவர் எழுதவேண்டும் என்று அவசியமும் கிடையாது.

முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றியவர். அந்நிறுவனம் இவரை ஏதோ காரணத்தால் – என்ன காரணமென்று தெரியவில்லை – நீக்கியதால், தொழிலாளர் உரிமை என்ற அடிப்படையில் கோர்ட்டுக்குச் சென்று வழக்கில் வென்றவர். இந்த மனத்திடம் இப்போது பத்திரிகைகளில் பணிபுரிபவர்களில் எத்தனைப் பேருக்கு இருக்கும் என்பது சந்தேகமே. நிச்சயமாக எனக்கு இல்லை.

பிற்பாடு அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு வந்தபின்னர்தான் ‘டேபிள் ஒர்க்’ என்ற ஒரு பணி, தமிழ்ப் பத்திரிகையுலகில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சொல்வார்கள். டேபிள் ஒர்க் என்பது இன்றைய பத்திரிகையுலகில் மிகவும் அத்தியாவசியமானப் பணியாக இருக்கிறது. வேறொன்றுமில்லை. பிறர் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் மெருகேற்றி, தேவையான திருத்தங்கள் செய்து அச்சுக்கு அனுப்புவது. மாவட்டங்களில் பல்வேறு நிருபர்கள் தரும் தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொகுத்து முழுமையான கட்டுரையாக எழுதுதல் போன்றவையே டேபிள் ஒர்க். இதில் வேறு சில பணிகளும் உண்டு. அவை இங்கே அவசியமில்லை.

ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்த இந்தமுறையை தமிழ்ப் பத்திரிகையுலகில் பரவலாக்கிய முன்னோடி என்பதாக ஞாநி பத்திரிகை வட்டாரங்களில் அறியப்படுகிறார். அனேகமாக தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் இந்தப் பாணியில் தமிழ்ப் பத்திரிகைகளின் எடிட்டோரியல் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக வரும் கட்டுரைகளையோ கவிதைகளையோ கதைகளையோ – கிட்டத்தட்ட அப்படியே – வெறுமனே பிழைத்திருத்தி அனுப்புவதுதான் வழக்கமாம்.

ஆனந்த விகடனில் ஞாநியின் பங்கு இருந்த காலக்கட்டத்தில் அவர் எப்படி எழுதுவார் என்று சுவாரஸ்யமாக சொல்வார்கள். ஒரே ஒரு பிரச்சினையையோ அல்லது சம்பவத்தையோ நான்கைந்து நிருபர்கள் எழுதி அனுப்புவது வழக்கம். நிறைய ஃப்ரீலான்ஸர்கள் அப்போது இருந்தார்கள். எழுத்து மற்றும் பிரச்சினையைப் பார்க்கும் விதத்தில் ஒவ்வொருவரும் வேறுபடுவார்கள். ஒருவர் சார்புநிலையெடுத்து எழுதியிருப்பார். இன்னொருவர் எதிர்ப்புநிலையை கறாராக கைக்கொண்டிருப்பார். இன்னுமொருவர் நடுநிலை என்ற பெயரில் கத்திமீது நடக்க முயன்றிருப்பார்.

எடிட்டோரியலில் இருப்பவர் இந்த நான்கு கட்டுரைகளையும் வாசித்ததும் நிச்சயமாக குழம்பிப் போய்விடுவது என்பது இயல்புதான். ஞாநி நான்கையும் எடுத்து பொறுமையாக வாசிக்க ஆரம்பிப்பாராம். வாசித்து முடித்ததும் மூடிவைத்துவிடுவாராம் (என்னிடம் சொன்னவர் கிழித்து எறிந்துவிடுவார் என்று சொன்னார்). பிறகு வெள்ளைத்தாளை எடுத்து எந்தவித ரெஃபரென்ஸுமின்றி மடமடவென்று நறுக்குத் தெறித்தாற்போல எழுதிமுடிப்பாராம். கட்டுரையை வாசித்தவர்கள் அது நேரடி ரிப்போர்ட்தான் என்று கையில் அடித்து சத்தியம் செய்யக்கூடிய நேர்த்தி அவரது எழுத்தில் இருக்குமாம்.

கடந்த ஐந்தாண்டு தமிழ்ப்பத்திரிகையுலக வரலாற்றில் ஞாநியின் ‘ஓ’ பக்கங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பெரும்பாலும் திமுகமீதான – குறிப்பாக கலைஞர் – கொலைவெறி எதிர்ப்புதான். பலநேரங்களில் கலைஞர்மீது இவருக்கு சொந்தப் பகை ஏதோ உண்டோவென்று ஐயம் வரும் வகையில்தான் எழுதியிருக்கிறார் (சாருநிவேதிதா தொடர்ச்சியாக ஜெயமோகனை எழுதிவருவதைப் போல).

ஆனால் இதையும் மீறி, தொடர்ச்சியாக நான் ‘ஓ’ பக்கங்களை வாசித்து வந்தேன். ஒரு பிரச்சினையை ஒரு பத்திரிகையாளன் எத்தனை விதமான கோணங்களில் பார்க்கலாம் என்பதை ‘ஓ’ பக்கங்கள் பாடமாகவே நடத்தி வந்தது.

இனி ‘ஓ’ பக்கங்கள் குமுதத்தில் வராது என்று அறிவித்திருக்கிறார். சமீபக்கால விகடனின் எழுத்துகளை வாசிக்கும்போது, மீண்டும் விகடனில் வர வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் விகடன் டூ குமுதம் டூ விகடன் என்று ஊஞ்சலாட ஞாநி விரும்புவாரா என்று தெரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை குமுதமும், விகடனும்தான் இன்றையத் தேதியில் மிகச்சிறந்த பிளாட்ஃபார்ம்கள். இந்த இரு பத்திரிகைகளைத் தவிர்த்து வேறெதிலாவது எழுதினால் எந்தளவுக்கு மக்களிடம் ‘ரீச்’ ஆகுமென்று கணிக்க முடியவில்லை. அப்படியே ஞாநிக்காக ஒரு சிலர் படித்தாலும், விகடன் – குமுதத்தில் அப்பகுதிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி புதிய பத்திரிகையில் கிடைக்குமென்பது உறுதியில்லை.

தனிப்பட்ட முறையில் ’ஓ’ பக்கங்கள் இல்லாததால் எனக்கு என்ன இழப்பென்று யோசித்துப் பார்க்கிறேன். கடந்த ஒரு வாரமாக சென்னையை மையம் கொண்டிருக்கும் ‘கள்ளக்காதல்’ புயல் பற்றிய ஒரு திட்டவட்டமான தீர்மானத்துக்கு வர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஞாநி ‘ஓ’ பக்கங்களில் இச்சம்பவங்களை அலசி ஆராய்ந்து, பின்னணியை நோண்டி நொங்கெடுத்து தெளிய வைத்திருப்பார்.

அதே வேளையில் விகடன் மற்றும் குமுதம் இப்பக்கங்களை இழக்க வேண்டிய சூழலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்!

14 கருத்துகள்:

 1. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு சார், இதற்கு நேரடியாக ஆளுங்கட்சியினை ஜால்ரா அடித்தால் பத்திரிக்கை பிழைப்பு நடத்த இயலும் என்று தெரிவிக்கலாம் சார்

  பதிலளிநீக்கு
 2. பாவம் ஞானியின் நிலைமை உருளை கிழங்கு பற்றியெல்லாம் எழுத வேண்டியதாயிற்று..... ........(மயிலை பிடிச்சு காலை ஒடைச்சு)

  பதிலளிநீக்கு
 3. ////சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு சார், இதற்கு நேரடியாக ஆளுங்கட்சியினை ஜால்ரா அடித்தால் பத்திரிக்கை பிழைப்பு நடத்த இயலும் என்று தெரிவிக்கலாம் சார்///

  Repeattu

  பதிலளிநீக்கு
 4. "ஓ பக்கங்கள்" நிறுத்தப்பட்டது வருத்தமான தகவல். குமுதத்திற்கு கண்டனங்கள்.

  சாரு இவரைப் "பெட்டி வாங்குகிறார்" என்று தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
  எப்படி சக எழுத்தாளரை இப்படியெல்லாம் சொல்ல மனம் வருகின்றது என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 5. இந்த காலத்தில் இப்படி ஒரு பத்திரிகையாளர் இருந்தார் என்பது பிற்கால வரலாற்றில் வியப்பாகப் பார்க்கப்படும்.தன்னலவில் நேர்மையானவர்.”தரணியில் யார்க்கும் அஞ்சாத தெளிந்த ஞானச் செருக்கு” தான் அவரது பலமும் பலவீனமும்.

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் சொல்வது சரியே. நான் ஓ பக்கங்களை விகடனில் வந்த போது படித்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது அவரின் வலைத்தளத்தில் படிக்கத் துவங்கியுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 7. உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். என் பதிவிலும் சொல்லி உள்ளேன்.

  http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

  பதிலளிநீக்கு
 8. கிருஷ்ணா, ஒரு பத்திரிகை அச்சாகி வெளிவரவேண்டுமேன்றால் இன்றைய கால கட்டத்தில் மிகுந்த சிரமம் வாய்ந்த விஷயம், அதற்கு விளம்பரம் மட்டுமே வேர்கள், இந்நிலையில் இனிமேல் எந்தப் பத்திரிக்கையாலும் சுதந்திரமாக செயல் பட முடியாது என்பது சுடுகின்ற உண்மை,

  இது உங்களுக்கு தெரியாதது அல்ல,

  அதனால், இனிமேல் அச்சாகி வெளி வரும் பத்திக்கைகளில் ஆட்சியாளர்கள், ஆள்பவர்கள் ஆகியோருக்கு சார்பாக மட்டுமே வரும்.

  இதில் எந்த மாற்றமும் இல்லை, பத்திரிகை தொடர்ந்து வெளி வரவேண்டும் என்றால், அதற்கேற்றார் போல் உள்ள ஆட்கள் மட்டுமே பத்திரிகை நிர்வாகத்தினர் விரும்புவார்கள், இது நிறுவனங்கள் அனைத்திற்குமே உள்ள இயல்பு.

  அதனால் ஞாநியின் விலகல் எப்பொழுதோ எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, மூன்று வருடம் அவர் கருத்துக்கள் வெளி வந்ததே பெரிய விஷயம் தான்.

  பதிலளிநீக்கு
 9. //சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ன ஒரு அரிய கண்டு பிடிப்பு சார், இதற்கு நேரடியாக ஆளுங்கட்சியினை ஜால்ரா அடித்தால் பத்திரிக்கை பிழைப்பு நடத்த இயலும் என்று தெரிவிக்கலாம் சார்//

  பத்திரிகை நடத்துவதும் நல்ல வியாபாரம் என்றானபின் அப்புறம் என்ன மாரல் வேல்யூஸ் வாழுது?!

  பதிலளிநீக்கு
 10. உங்க நேர்மைக்கு நிஜமான ஒரு சல்யூட்!

  பதிலளிநீக்கு
 11. கள்ளக்காதல் பற்றிய தீர்மானத்திற்கு வரவேண்டுமானால் வினவு வெளியீடான 'ஜீன்ஸ் பேன்டும் பாலியல் வன்முறையும் ' படியுங்கள். நேர்த்தியான அலசல்
  - சென்னைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 12. inneram kalki jump arinthirupeergal gnani sela nerangalil ada enumbadi ezhuthugirar pala samayangalil aiyo pavam endru than thondrugirathu

  பதிலளிநீக்கு