8 ஜூலை, 2010

செம்மொழியான தமிழ்மொழியே!


மிகச்சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த இதே கோவை வேறு. மேடும் பள்ளமுமான சாலைகள். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்களுக்கு மேலான மின்வெட்டு. ஒரு சர்வதேச மாநாடு அடுத்த மூன்று மாதங்களில் நடத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் அப்போது தெரியவில்லை. தூசும் தும்புமாக கொங்குமண்டலத்தின் தலைநகர் சோம்பிக் கிடந்தது. சொகுசுப் பேருந்து என்ற பெயரில் அப்போது நவீனப் பேருந்துகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு செம்மொழி மாநாடுதான் காரணம் என்று உள்ளூர்வாசிகள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்கள். அடுத்ததாக மரங்கள் ஆங்காங்கே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்டுக் கொண்டிருக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் அரசுக்கு எதிரான அதிருப்தி வெடித்தது.

இதெல்லாம் பழைய கதை. கடந்த 22ஆம் தேதி இரவு மின்னொளியில் கோவை நிஜமாகவே ஜொலிஜொலித்துக் கொண்டிருந்தது. சுத்தமான சீரான அகலமான பளப்பள சாலைகள். நகருக்குள் சாரை சாரையாக வாகனங்களின் படையெடுப்பு. எங்கும் பரபரப்பு. உள்ளூர் வாசிகளுக்கு இப்போது மாநாடு குறித்து எந்த வருத்தமும் இல்லை. மாறாக குடும்பம் குடும்பமாக மாநாடு நடக்கும் கொடிசியா அரங்கத்துக்கு சென்று ஏற்பாடுகளை கண்டு மகிழ்கிறார்கள். ‘செம்மொழியான தமிழ்மொழியே’ என்று கட்டவுட் எழுத்துகளால் அலங்கரிக்கப்பட்ட முகப்புக்கு அருகில் நின்று செல்போனில் படமெடுத்துக் கொள்கிறார்கள். மாநாடு நடைபெறும் அவினாசி சாலையில் இரவு 12 மணிக்கு கூட கடுமையான போக்குவரத்து நெரிசல்.

கோவையின் இந்த திடீர் வனப்பு மிகக்குறுகிய காலத்தில் இரவுபகல் பாராத அரசு இயந்திரத்தின் உழைப்பால் நிகழ்ந்த அதிசயம். அரசு மனது வைத்தால் நரகத்தை கூட சொர்க்கமாக்கிவிட முடியும். நகரத்தை மாற்றுவது ரொம்ப ஈஸி. இதே வேகத்தில் கோவையைப் போல, தமிழகத்தின் மற்ற முக்கிய நகரங்களையும் பொலிவு பெறவைக்க அரசு முயற்சிக்கலாம். இல்லையேல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஊரில் செம்மொழி மாநாடு நடத்தச் சொல்லி அந்தந்த ஊர் மக்கள் அரசிடம் கோரிக்கை வைக்கலாம்.

செம்மொழி மாநாடு குறித்த பெருத்த எதிர்ப்பார்ப்பு மக்களைவிட கலைஞருக்கே அதிகம் இருந்திருக்க வேண்டும். கோவைக்கு வந்ததுமே, உடனடியாக மதியச் சாப்பாட்டை முடித்துவிட்டு, நேரடியாக மாநாட்டுப் பந்தல் போடப்பட்டிருக்கும் கொடிசியாவுக்கு வண்டியை விட சொன்னாராம். பந்தல் அலங்காரத்தை பகலில் பார்ப்பதைவிட இரவில் பார்க்க நன்றாக இருக்கும் என்று சமாதானப்படுத்தி, அவரை ஓய்வு எடுக்க வைத்திருக்கிறார்கள். இந்த ஆர்வமும், விறுவிறுப்பும் மாநாடு முடியும் வரை முதல்வருக்கு சற்றும் குறையவேயில்லை.

23ந்தேதி காலை கொடிசியா அரங்கம் பிரம்மாண்டமான தேன்கூடாக காட்சியளித்தது. வண்டுக்களாய் மக்கள் ஆயிரக்கணக்கில் மொய்க்கத் தொடங்கினார்கள். அரங்கத்துக்கு செல்லவேண்டிய சாலைமுகப்பில் பச்சைப்பசேலென காய்கனிகளையும், தென்னை ஓலையையும் பயன்படுத்தி வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டிருந்தது. அளவில் கோட்டையை ஒத்த மாநாட்டுப் பந்தல் பனைஓலைகளால் கம்பீரமாக உருவாக்கப்பட்டிருந்தது. ஜிகுஜிகு சரிகை பேப்பர் அலங்காரங்கள், முகலாயர் காலத்து பாணியில் அமைந்திருந்தது. பந்தல், சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளம். அறுபத்தையாயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடிய அளவுக்கு விஸ்தாரம். பார்வையாளர்களின் வசதியாக நூற்றுக் கணக்கில் ஆங்காங்கே எல்.சி.டி. திரைகள். எங்கும் எப்போதும் ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ உச்சஸ்தாயியில் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

காலை 9.30 மணியளவில் வி.ஐ.பி.க்கள் முன்வரிசையை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். மாநாட்டு நுழைவு வாயிலில் தள்ளு முள்ளு. நிதியமைச்சர் அன்பழகன், துணைமுதல்வர் ஸ்டாலின், ஆளுனர் சுர்ஜித்சிங் பர்னாலா, துணை முதல்வர் ஸ்டாலின், முதல்வர் கலைஞர், குடியரசுத்தலைவர் பிரதீபாபாட்டீல் என்று வி.வி.ஐ.பி.க்களும், வா.செ.குழந்தைச்சாமி, அமெரிக்காவைச் சார்ந்த தமிழறிஞர் ஜார்ட் ஹார்ட், இலங்கையைச் சார்ந்த பேராசிரியர் சிவத்தம்பி, மு.கருணாநிதி செம்மொழி தமிழாய்வு அறக்கட்டளை விருதுபெற வந்திருந்த பின்லாந்து நாட்டைச்சார்ந்த அஸ்கோ பர்ப்போலா, என்று தமிழறிஞர்களும் மேடையை அலங்கரித்தார்கள். துவக்கவிழா சம்பிரதாயமான பேச்சுகளோடு மங்கலகரமாக தொடங்கியது. அமெரிக்க அறிஞர் ஹார்ட் அவ்வப்போது தமிழில் எதையாவது எடுத்துவிட கூட்டம் கைத்தட்டி அவரை ஊக்கப்படுத்தியது. குறிப்பாக பாரதியாரின் கவிதைகளை அவர் படிக்க விண்ணதிர கரகோஷம். குடியரசுத் தலைவர் வந்திருப்பதால் மாநாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு கெடுபிடிகளை அமெரிக்க அறிஞரின் கொஞ்சுத்தமிழ் ரிலாக்ஸ் ஆக்கியது. இதே உற்சாகம் மாநாட்டுக்கு வெளியேவும் பரவ கூட்டம் முன்பைவிட வேகமாக மாநாட்டு அரங்குக்குள் நுழைய புயல்வேகத்தில் படையெடுத்தது. சிகப்பாடையில் டமடமவென்று செண்டைமேளம் அடித்துக்கொண்டே சேலத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்தது கண்ணைக் கவர்ந்த கலர்ஃபுல் காட்சி.

‘இது கட்சிமாநாடல்ல. அடக்கியே வாசிக்கவும்!’ என்று முன்பே கலைஞர் அறிக்கை மூலமாக எச்சரிக்கை விடுத்திருந்ததால் எங்கேயுமே கட்சிக்கொடி கண்ணில் படவில்லை. ஆனால் கருப்பு சிவப்பு கரைவேட்டிகளுக்கு பஞ்சமில்லை.

தமிழார்வலரான த.அரங்கநாதன் (77) ஓய்வுபெற்ற ஆசிரியர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். 1968ல் சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டவர். இடையில் மதுரையிலும், தஞ்சையிலும் உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தபோது கலந்துகொள்ள இவருக்கு சாத்தியமாகவில்லை. இப்போது கோவைக்கு வந்திருந்தவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார். “சீரணி அரங்கத்தில் அப்போது அண்ணாவால் கூட்டப்பட்ட கூட்டம் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அன்று கண்ட அதே எழுச்சியை 42 ஆண்டுகள் கழித்து இன்றும்பார்க்கிறேன்” என்று பரவசப்பட்டார். அப்போது மாநாட்டுக்கு முன்பாக எம்.எல்.ஏ ஹாஸ்டல் திறக்கப்பட்டது, இப்போது புதிய சட்டமன்றம் திறக்கப்பட்டிருக்கிறது. அம்மாநாட்டில் அண்ணா, கணியன் பூங்குன்றனாரின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற பதத்தை கடற்கரை கூட்டத்தில் மேற்கோள் காட்டினாராம். இம்மாநாட்டில் அது ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த தீம்சாங்கின் மையக்கருத்தாக அமைந்திருந்ததையும் ஒப்பிட்டார் அரங்கநாதன். என்ன, அப்போது கடற்கரைச் சாலையில் வரிசையாக தமிழ்ச்சான்றோருக்கு சிலை அமைக்கப்பட்டது. இப்போது அது இல்லை என்பதுதான் அவருக்கு இம்மாநாட்டில் இருக்கும் ஒரே ஒரு குறை.

துவக்கவிழாவின் முத்தாய்ப்பாக ’இனியவை நாற்பது’ வாகன அணிவகுப்பு, மாலை 4 மணிக்கு வ.உ.சி. பூங்காவில் தொடங்கியது. சுமார் 9 கிலோ மீட்டர் நீளம் பயணித்து மாநாட்டு அரங்கத்தை அடைவதாக ஏற்பாடு. கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் என்று கலைஞர்கள் கலக்கலாக திறமையைக் காட்ட கூட்டம் கும்மியது. லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த அணிவகுப்பில், தமிழரின் கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையிலான 40 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் நீந்தி அணிவகுப்பு, திட்டமிடப்பட்ட தூரத்தைக் கடக்க நான்கு மணி நேரத்துக்கும் மேலானது. லட்சுமிமில் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்புமேடையில் குடியரசுத்தலைவர், ஆளுனர், முதல்வர் ஆகியோர் பார்வையிட்டனர். முதல்வர் வரும்போது கூட்டம் ஆர்ப்பரிக்க, குஷியான முதல்வர், கூட்டத்துக்கு ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வாணவேடிக்கைகள் வண்ணங்களை வானில் இறைக்க வண்ணமயமாகத் தொடங்கியது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு.

மாநாட்டின் இரண்டாம் நாள், ஆய்வரங்கங்கள், கண்காட்சிகள் தொடங்கப்பட்டதால் மாநாட்டுக்கு கொஞ்சம் சீரியஸ் தன்மை வந்து உட்கார்ந்துகொண்டது. மாநாட்டுப் பந்தலுக்கு பின்புறமாக அமைந்திருக்கும் கொடிசியா வளாகத்தில் இருக்கும் அரங்குகளில் 50க்கும் மேற்பட்ட தளங்களில், இருநூறுக்கும் மேற்பட்ட அமர்வுகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிஞர்களால் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படத் தொடங்கின. ஆய்வரங்கங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அறிஞர்களும், நோக்கர்களும் மட்டுமே பார்வையிடலாம் என்று சொல்லப்பட்டதால், பார்வையாளர் பகுதி காத்தாடத் தொடங்கியது. சில அரங்கங்களில் மேடையில் அமர்ந்திருந்தவர்களே, பார்வையாளர்களை விட எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். செம்மொழி மாநாட்டையொட்டி, உத்தமம் (இன்ஃபிட்) அமைப்பினரால் நடத்தப்படும் இணைய மாநாட்டு அரங்குகளிலும் இதுதான் நிலைமை. அறிஞர்களைப் பொறுத்தவரை மேடையில் அமர மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள். சக அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று காது கொடுத்து கேட்க விருப்பமில்லாதவர்களாக இருக்கிறார்கள். ஆய்வரங்கங்களில் பகலில் ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டாலும், மாலை வேலைகளில் நவீன நாடகங்கள், நாட்டியங்கள் என்று அறிஞர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் இருந்தது.

ஆய்வரங்கங்களும், இணைய மாநாட்டு அரங்கங்களும் ஈயடிக்க அதே நேரத்தில் திறக்கப்பட்ட கண்காட்சிகள் களைகட்டத் தொடங்கின. பிரம்மாண்ட மாநாட்டுப் பந்தலுக்கு வலப்புறமாக இணையதளக் கண்காட்சி மற்றும் பொதுக் கண்காட்சி மக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது. மாநாட்டுப் பந்தலுக்கு நேரெதிராக சாலையின் மறுபக்கத்தில் தென்னிந்திய பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக புத்தகக்காட்சியும் நடந்தது. பொதுக்கண்காட்சிக்கு பின்புறம் கைவினைக் கண்காட்சி.

கண்காட்சிகளைப் பார்க்க, மூன்று நாட்களும் மக்களிடையே பலத்த போட்டாபோட்டி. புத்தகக் காட்சியை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த ‘இனியவை நாற்பது’ வாகனங்களை சுற்றிப் பார்க்கத் தொடங்கினார்கள். இப்போது எல்லோரிடமும் கேமிராசெல்போன் இருப்பதால் கொடிசியா, கோடிக்கணக்கான முறை படமெடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தது. கண்காட்சி நுழைவு வரிசை ஒருக்கட்டத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டது என்றால், மக்களின் காட்சி ஆர்வத்தை நீங்கள் அளவிட்டுக் கொள்ளலாம். மாநாட்டுக்கு வந்தவர்கள் எதையாவது பார்த்தே ஆகவேண்டும் என்ற அதீத ஆர்வத்தில், பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஊடகமையத்தையும் சுற்றிப் பார்க்க ஆயிரக்கணக்கில் கிளம்பி வந்துவிட்டார்கள். ஆய்வரங்கங்களை பார்வையிட தங்களை அனுமதிக்கவில்லை என்றும் பொதுமக்கள் குறைபட்டுக் கொண்டார்கள். மாநாடு முடியும்வரை கண்காட்சிகளில் திரண்ட கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர, கொஞ்சமும் குறைந்தபாடில்லை. மாநாடு முடிந்தபிறகும் பத்துநாட்களுக்கு கண்காட்சிகள் நீடிக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பை கண்டு, கண்காட்சியை ஒருமாதத்துக்கு நீடிக்கலாமா என்று ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

லட்சக்கணக்கானோர் முற்றுகையிட்டாலும் போலிஸ் ஆச்சரியகரமான வகையில் மென்மையாக நடந்துகொண்டார்கள். ஓரிடத்தில் கூட தடியடி நடக்கவில்லை என்பது குறிப்பிடவேண்டிய முக்கியமான விஷயம். கோவை கமிஷனர் சைலேந்திரபாபு, இப்போது அந்நகர மக்களுக்கு ஹீரோ. அவரிடம் கைகுலுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு சிறுவன் ‘ஆட்டோக்ராப் ப்ளீஸ்’ என்று கத்தியபடியே அவரது ஜீப்புக்குப் பின்னால் ஓடுகிறான். எங்கேயாவது கூட்டம் கூடினால் உத்தரவுகள் பிறப்பிப்பதை விடுத்து, தானே நேரடியாக களமிறங்கி சரி செய்கிறார். வாகன அணிவகுப்பின் போது போலிஸார் திணறிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வந்த கமிஷனர், ரோட்டுக்கு நடுவில் நின்று கூட்டத்தை கையாலேயே சரிசெய்தார்.

இணையதளக் கண்காட்சியில் இணையம், கணினி தொடர்பான ஸ்டால்கள் நிறைய இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு ஸ்டாலாக நின்று கவனித்த மக்கள், இலவசமாக ‘சிடி’ ஏதாவது தருவீர்களா என்று கேட்டு, ஸ்டாலில் நின்றிருந்தவர்களை டென்ஷன் ஆக்கிக் கொண்டிருந்தார்கள். முன்னதாக யாரோ ஒரு புண்ணியவான், ஒரு லட்சம் (?) எழுத்துருக்களை (Font) கொண்ட சிடி இணையத்தள அரங்கில் இலவசமாக வழங்கப்படுகிறது என்று புரளி கிளப்பி, அது குறுஞ்செய்திகளில் வேகவேகமாக மக்களுக்கு பரவிக்கொண்டிருந்தது. கணினி என்றால் என்னவென்றே தெரியாதவர்களும் அந்த சிடியை வாங்க ஆர்வம் காட்டினார்கள். தமிழிணையப் பயிலரங்கு ஒன்றும் ‘லைவ்’வாக நடைபெற்றது. கணினியில் தமிழ், தமிழ் விசைப்பலகை, தமிழ் யூனிகோடு, விக்கிப்பீடியா, வலைப்பதிவு, விக்‌ஷனரி என்று கணினிதொடர்பான ஏகப்பட்ட விஷயங்கள் பொதுமக்களுக்கு நேரடியாக தன்னார்வலர்களால் கற்றுத்தரப்பட்டது. கணிப்பொறி தொடர்பான சொல்களுக்கு மு.சிவலிங்கம் என்பவரால் கலைச்சொல் திரட்டு ஒன்று தமிழில் உருவாக்கப்பட்டு பொதுமக்களின் வசதிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. DVDஐ தமிழில் பல்திறன்வட்டு என்று சொல்ல வேண்டுமாம்.

மாநாட்டின் ஹைலைட் பொதுக்கண்காட்சிதான். கலை இயக்குனர் தோட்டாதரணியின் கைவண்ணத்தில் அரங்கத்தின் அழகு பார்வையாளர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. ஓலைச்சுவடிகள் மற்றும் பழைய அரியநூல்கள் நிறைய இடம்பெற்றிருந்தன. 1608ல் அச்சிடப்பட்ட பரிசுத்த வேதாகமம், 1894ல் அச்சிடப்பட்ட புறநானூறு ஆகியவை புத்தக ஆர்வலர்களை புல்லரிக்க வைத்தது. புதிய கற்கால ஆயுதங்கள், தொல்மாந்தர் வாழ்ந்த குகை மாதிரி, தமிழகத்தில் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்ட ஈமப்பேழை, தாழி போன்ற அகழாய்வுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆதிச்சநல்லூர் அரும்பொருட்கள், சங்ககால மட்பாண்டங்கள் ஆகியவை கவனத்தை கவர்ந்தன.

சங்க இலக்கியங்களில் வனம் குறித்த வெளிப்பாடு, மறவன்புலவு சச்சிதானந்தம் தொகுத்த ‘உலகெங்கும் தமிழரின் வரலாற்றுப் பயணங்கள்’, பள்ளி மாணவர்கள் இயக்கும் ஒலி-ஒளி கண்காட்சியென்று தமிழரின் வாழ்வு, பழம்பெருமை பேசத்தக்க அம்சங்கள் கண்காட்சியை சுவாரஸ்யப்படுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் இங்கே ’செம்மொழித் தமிழில் விண்வெளி’ என்று ஸ்டால் போட்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. சங்க இலக்கியத்தில் வெளிப்பட்ட பல கோட்பாடுகளை இன்று இஸ்ரோ நிரூபித்து வருகிறது என்றார் அங்கிருந்த விஞ்ஞானியான ஆர்.எஸ்.கண்ணு. உலகமே தட்டையான வடிவத்தில் இருந்ததாக உலகம் நம்பிக் கொண்டிருக்க, புறநானூற்றிலேயே கோள்கள் உருண்டையான வடிவம் கொண்டவை என்று எழுதப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். “வானை யளப்போம் கடல் மீனையளப்போம், சந்திரமண்டலத்தை கண்டு தெளிவோம்” என்ற பாரதியின் இலக்கியக் கனவை சந்திராயன் திட்டம் மூலமாக நிறைவேற்றியிருப்பதாக ஒரு அறிவிப்பும் அங்கிருக்கிறது. ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் மாதிரிகள் தத்ரூபமாக இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

புத்தகக்காட்சி விற்பனை குறித்து புதிய தலைமுறையிடம் திருப்தி தெரிவித்தார், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்தின் தலைவரான சொக்கலிங்கம். “விற்பனை நல்லமுறையில் நடக்கிறது. செம்மொழி மாநாட்டால் மக்களுக்கும் மகிழ்ச்சி, பதிப்பாளர்களுக்கும் மகிழ்ச்சி” என்றார். 35000 சதுர அடி பரப்பளவில், 146 ஸ்டால்கள். ஒரு லட்சம் தலைப்புகளில் சங்க இலக்கியத்திலிருந்து, நவீன இலக்கியம் வரை புத்தகங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுத் தமிழர்கள் புத்தகங்கள் வாங்க மிகுந்த ஆர்வம் செலுத்தினார்கள்.

கோவையில் இப்போது ‘தமிழ்’ நல்ல விற்பனைப் பொருள். தமிழில் வாசகங்கள் அச்சிடப்பட்ட டீ-ஷர்ட்டுகள் பரபரப்பாக விற்பனையாகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த ’ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ இயக்கத் தொண்டர் ஒருவர் மாநாட்டுக்காக ஸ்பெஷலாக வந்து. கொஞ்சுத்தமிழ் பேசி தமிழில் ‘பகவத்கீதை’ விற்கிறார். பகுத்தறிவுவாதிகள் சிலரும் கூட வேறு வழியின்றி இவரது தமிழுக்கு அடிமையாகி ‘பகவத்கீதை’ வாங்கிச் செல்கிறார்கள். இவரது பெயரைக் கேட்டால் ‘உம்பேரும் கிருஷ்ணா, எம்பேரும் கிருஷ்ணா. உலகமே கிருஷ்ணார்ப்பம்’ என்று தத்துவம் பேசுகிறார்.

கண்காட்சிகள், அணிவகுப்பு வாகனங்கள் என்று மக்களின் கண்ணுக்கு விருந்து ஒரு பக்கம் படைக்கப்பட, இன்னொரு புறம் மாநாட்டுப் பந்தலில் தினமும் நடைபெற்ற கருத்தரங்குகள், கவியரங்குகள், நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் மூலமாக தலைவாழை விருந்து பரிமாறப்பட்டது. என்ன? எல்லாம் கலைஞர்மயம். எல்லாவற்றிலும் கொஞ்சமென்ன நிறையவே ‘கலைஞர் டோஸ்’ அதிகம். எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று கவிஞர்களும், அறிஞர்களும் தொடர்ச்சியாக புகழ்மாலை சூட்டிக் கொண்டிருக்க, ஒருக்கட்டத்தில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட கலைஞரே நொந்துப்போனார். அவர் தலைமையில் நடந்த ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ சிறப்புக் கருத்தரங்கில் “நாம் தாய்த் தமிழுக்காக இங்கே திரண்டிருக்கிறோம். என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?” என்று ஒரு பேச்சாளரின் இடையே குறுக்கிட்டு, தன் ஆட்சேபத்தை தெரிவித்தார்.

மலேசியாவில் இருந்து மலேசிய எழுத்தாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 250 பேர் மாநாட்டுக்கு வந்திருந்தார்கள். “இம்மாநாட்டால் என்ன பயன் என்பதை உடனடியாக உணரமுடியாது. இதன் பயன் எதிர்காலத்தில் உணரப்படும். தமிழர்களுக்கு நம்பிக்கை தரும் மாநாடு இது. உலகமயமாக்கலால் அடையாளங்கள் மறையும் சூழலில், நம்முடைய தமிழ் அடையாளத்தை அழுத்தமாக முத்திரை பதிக்க இம்மாநாடு அவசியப்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் தமிழ் தொடர்பாக மலேசியாவில் மாநாடுகள் நடத்தபோதெல்லாம், தமிழ் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது” என்றார் அவ்வமைப்பின் தலைவரான ராஜேந்திரன்.

மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சுதர்சனம் திடீரென சுகவீனம் அடைந்துவிட, செய்தியறிந்த முதல்வர் மருத்துவமனைக்கு உடனே அமைச்சர்களோடு விரைந்தார். அவர் நலம் பெற்று வருகிறார் என்று மருத்துவர்கள் எடுத்துச் சொன்னபிறகே திருப்தியோடு மாநாட்டுக்கு திரும்பினார். ஒருநாள் திடீரென அஸ்கோ பர்போலா சிறப்பு ஆய்வுரை நடத்திய அரங்கத்துக்கு பார்வையாளராக சென்று அமர்ந்தார். கவியரங்கு ஒன்றின் தொடக்கத்தின் போதும் சடாரென பந்தலுக்குள் வந்தார். முதல்வர் எப்போது எங்கே இருப்பார் என்று தெரியாமல் காவல்துறையினர் ஐந்து நாட்களை திணறலாகவே கழித்தார்கள். கிட்டத்தட்ட எல்லா நாளும், எங்காவது இருந்துகொண்டே இருந்தார் கலைஞர்.

மக்களின் ஏகோபித்த ஆர்வத்தோடு கூடிய பங்கேற்பு, அரசின் கச்சிதமான திட்டமிடலால் திருவிழாவாக திறமையாக நடத்தப்பட்டு முடிந்தது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. ஒவ்வொரு நகரத்துக்கும் ஏதோ ஒரு திருவிழா வருடாந்திரமாக நடக்கும். கோவைக்கு சொல்லிக்கொள்ளும்படி அப்படி ஏதுமில்லை. அந்த நெடுநாள் ஏக்கத்தை கோவைவாசிகளுக்கு தற்காலிகமாக இம்மாநாடு போக்கியிருக்கிறது. மாநாட்டில் பேசப்பட்டவைகள், ஆய்வுகள், அறிக்கைகள் - இவற்றின் விளைவாக தமிழின் வளர்ச்சி.. இதையெல்லாம் உடனடியாக நம்மால் கணித்துவிட முடியாது. போகப்போகத்தான் தெரியும். விதை விதைக்கப்பட்டிருக்கிறது. செடியாகி, மரமாகி, பூத்து, காய்க்குமென்று நம்புவோம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

இவர்தான் பெரியார்!

பூம்புகார் நிறுவனத்தால் உருவாக்கப்படும் பெரியார் சிலைகள்தான் சமத்துவபுரங்களில் நிறுவப்படுகிறது. அங்கே நிறுவப்படும் சிலைகளின் மாதிரி ஒன்று கைவினை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மார்பளவு இருக்கும் கம்பீரமான சிலை இது. பெரியாரை சிலர் தொட்டுக் கும்பிட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சி.


எக்ஸ்ட்ரா மேட்டர் 2 :

செம்மொழி மாநாட்டில் திருக்குறளரசி!

டாக்டர் அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஒன்றரை வயது குழந்தை ஒன்று திருக்குறள் ஒப்புவிப்பதை கேள்விப்பட்டு, பாராட்டுக்கடிதம் அனுப்பியிருந்தார். பின்னர் தமிழகம் வரும்போது அக்குழந்தையை சந்திக்கவும் செய்தார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்ட அக்குழந்தை மதுராந்தகிக்கு இப்போது 9 வயதாகிறது. செம்மொழி மாநாட்டுக்கு வந்திருக்கிறார். இடையில் 6 விருதுகளும், 70 மேடைகளுமென வளர்ந்துவிட்ட மதுராந்தகி, இப்போது சதுரங்கத்தில் மாநில அளவிலான விளையாட்டு வீராங்கனை. மதுராந்தகிக்கு திருக்குறள் தலைகீழ் மனப்பாடம். குறளில் எந்த கேள்வியை கேட்டாலும் டக்கென்று பதிலளிக்கிறார். ஏற்கனவே ஒருமுறை முதல்வரை சந்தித்துப் பேசியிருக்கும் மதுராந்தகி, மாநாடு முடிந்ததும் மீண்டும் முதல்வரை சந்தித்துப் பேச நேரம் கேட்டிருக்கிறார்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 3 :

அரிசிக்குள் அறம், பொருள், இன்பம்!

மாநாடுகள் என்றாலே சாதனையாளர்களுக்கு கொண்டாட்டம்தான். கோவை உப்பிலிபாளையத்தைச் சார்ந்த எம்.மனோகரன் சுமார் 11,000 அரிசிகளில் 1,330 குறள்களையும் எழுதி, அவற்றை ‘கொலாஜ்’ முறையில் ஓவியம் ஆக்கியிருக்கிறார். இந்த ஓவியம் மாநாடு முடிந்தபின் கலைஞருக்கு பரிசளிக்கப்படும் என்றார் மனோகரன். அரிசியில் குறள் எழுதப்பட்டிருப்பதை பூதக்கண்ணாடி கொண்டு வாசிக்க முடிகிறது.


எக்ஸ்ட்ரா மேட்டர் 4 :

மணல் சிற்பம்!

பொதுக் கண்காட்சியையொட்டி பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘கடல் கடந்த கன்னித்தமிழ்’ மணற்சிற்பம் பலரையும் கவருகிறது. 8 முதல் 11 வயது வரை இருக்கும் தேனியைச் சேர்ந்த 20 பள்ளி மாணவர்கள், இரண்டே நாட்களில் இதை உருவாக்கியிருக்கிறார்கள்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 5 :

காய், கனிச் சிற்பம்!

தேனியைச் சேர்ந்த இளைஞரான இளஞ்செழியன் ஒரு சிற்பி. என்ன சிலையை செதுக்க இவர் கல்லை தேடுவதில்லை. காய்கனிகளே போதும். வரிசையாக இவர் செதுக்கி, கண்காட்சியாக வைத்திருக்கும் தலைவர்களின் சிலைகள் செம்மொழி மாநாட்டின் ஸ்பெஷல் அட்ராக்‌ஷன். 1330 சாத்துக்குடிப் பழங்களை அடுக்கி, திருவள்ளுவர் உருவத்தை உருவாக்கியிருக்கிறார். ஏரியல் வியூவில் பார்ப்பவர்கள் அசந்துப் போகிறார்கள்.


(நன்றி : புதிய தலைமுறை)

28 கருத்துகள்:

 1. தங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்திருந்த கட்டுரை. எல்லா பக்கங்களிருந்தும் மாநாட்டை உள்வாங்கிய உணர்வைக்கொடுத்தது எனக்கு. நன்றி!

  பதிலளிநீக்கு
 2. அருமையான‌ க‌வ‌ரேஜ் ல‌க்கி.. இஸ்ரோவின் ஸ்டால் என்ப‌தெல்லாம் எதிர்பாராத‌து. மாநாட்டு வளாக‌த்தை ஒரு சுற்று சுற்றி வ‌ந்த‌ ஃபீல்.. பாராட்டுக‌ள்.

  பதிலளிநீக்கு
 3. ஒரு முக்கியமான எக்ஸ்ட்ரா மாட்டரை விட்டுவிட்டீர்களே! பாசம் கண்ணை மறைக்கும் என்பார்கள்.
  முன்னாள் ஜனாதிபதியும் மிகச் சிறந்த தமிழ் அறிஞருமான அப்துல் கலாம் அவர்களை ஒதுக்கிவிட்டு நடந்த செம்மொழி மாநாடு இது.

  பதிலளிநீக்கு
 4. வழிப்போக்கன்!

  அப்துல்கலாமுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா இல்லையாவென்று உறுதியாக எதுவும் தெரியாத நிலையில் அதுபற்றி பேசுவதே அபத்தமானது.

  அப்துல்கலாம் ஒரு அறிவியலாளர் என்று தெரியும். எவ்வகையில் தமிழறிஞர் என்பதை நீங்கள் விளக்கினால் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். அவர் ஏதேனும் தமிழாராய்ச்சி செய்திருக்கிறாரா?

  பதிலளிநீக்கு
 5. //தூசும் தும்புமாக கொங்குமண்டலத்தின் தலைநகர் சோம்பிக் கிடந்தது//

  உங்கள் தலைவர் மாநாட்டை உயர்த்திக்கூற இப்படி கோவையை இறக்கறீங்களே! மரம் வெட்டியது எல்லோருக்கும் ஆறாத வடு தான். எல்லாம் முடிந்து காலியானவுடன் கோவை மொட்டையாக பெரும்பான்மையான நிழல் தந்த மரங்கள் இல்லாமல் வெறுமையாக காட்சி அளிக்கப்போவது மறுக்க முடியாத உண்மை.

  இதைப்போல வருத்தங்கள் கோபங்கள் இருந்தாலும் மாநாடு மிகச்சிறப்பாக நடந்து என்பதை மறுக்க எவராலும் முடியாது (வீம்புக்கு பேசுபவர்கள்கை தவிர).

  பதிலளிநீக்கு
 6. //மிகச்சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு இருந்த இதே கோவை வேறு. மேடும் பள்ளமுமான சாலைகள். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரங்களுக்கு மேலான மின்வெட்டு. ஒரு சர்வதேச மாநாடு அடுத்த மூன்று மாதங்களில் நடத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் அப்போது தெரியவில்லை. தூசும் தும்புமாக கொங்குமண்டலத்தின் தலைநகர் சோம்பிக் கிடந்தது. சொகுசுப் பேருந்து என்ற பெயரில் அப்போது நவீனப் பேருந்துகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு செம்மொழி மாநாடுதான் காரணம்//

  நண்பரே
  நாங்கள் கோவை வாசிகள் இப்போது மீண்டும் 2 மணிநேர மின்வெட்டின் மூர்க்கதுள் கொண்டுவரப்பட்டு விட்டோம் என்பதை தாழ்மையுடன் பதிவு செய்கிறேன்.

  அன்பான
  சூரி.

  பதிலளிநீக்கு
 7. யுவகிருஷ்ணா..,

  நல்ல பதிவு..

  அப்துல்கலாம் என்ற எளிமையான மனிதரை விவேக் போன்றவர்கள் அதிகமாக பேசியே அவரை வெறுக்கவைத்து விட்டனர்.

  பதிலளிநீக்கு
 8. மிகவும் எதிர்பார்த்த கட்டுரை....நல்ல கவரேஜ்....நன்றி...)

  பதிலளிநீக்கு
 9. துணை முதலமைச்சர் ஸ்டாலின் ரெண்டு தடவை வந்திருக்கார்... பாருங்க ;-)

  பதிலளிநீக்கு
 10. "அப்துல்கலாம் ஒரு அறிவியலாளர் என்று தெரியும். எவ்வகையில் தமிழறிஞர் என்பதை நீங்கள் விளக்கினால் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். அவர் ஏதேனும் தமிழாராய்ச்சி செய்திருக்கிறாரா?" - ’நச்’ கேள்வி தலை. பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி அளவுக்கெல்லாம் கலாம் ஆராய்ச்சி செய்யல. ஏதோ அவருக்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியும். என்ன கேள்வி பாருங்க?

  பதிலளிநீக்கு
 11. உன் அரசியலை நாசுக்காக நுழைத்து எழுதியிருக்கிறாய், எல்லாம் சரி உன் போட்டோவை எதுக்கு போட்டு வச்சிருக்க

  பதிலளிநீக்கு
 12. டிபிகல் பின்னூட்டம் என்றாலும் வேறு வழியில்லை. பல்வேறு காரணங்களால் கோவை வர இயலவில்லை. அந்த ஏக்கத்தை ஓரளவு போக்கியது உங்கள் கட்டுரை லக்கி. நன்றி.

  பதிலளிநீக்கு
 13. //எல்லாப் புகழும் கலைஞருக்கே என்று கவிஞர்களும், அறிஞர்களும் தொடர்ச்சியாக புகழ்மாலை சூட்டிக் கொண்டிருக்க, ஒருக்கட்டத்தில் எதையும் தாங்கும் இதயம் கொண்ட கலைஞரே நொந்துப்போனார்.//
  யப்பா.. யப்பா..யப்பா..யப்பா..யப்பா..
  உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? எப்படிங்க இப்படி?

  பதிலளிநீக்கு
 14. தல கலக்கல் பதிவு...நான் சொல்லாமுன்னு வந்தேன் ஆனால் அகமது சுபைர் சொல்லிடாரு. அதையும் கொஞ்சம் கவனியுங்கள் ;)

  பதிலளிநீக்கு
 15. அன்பின் லக்கி,
  அருமையாக எழுதியுள்ளீர்கள்.. நேரடி வர்ணனை கேட்டது போல உள்ளது..

  சில கருத்துகள்.

  //தூசும் தும்புமாக கொங்குமண்டலத்தின் தலைநகர் சோம்பிக் கிடந்தது//
  தூசும் தும்புகளும் எங்களூரின் மரங்களை வெட்டி மொட்டையடித்ததால் தான்...
  கோவை சோம்பிக்கிடந்ததா...? சுறுசுறுப்பிற்க்கும் உழைப்பிற்க்கும் பெயர் பெற்ற எங்களூர் சோம்பி கிடந்ததா??

  நான் இந்த வருட ஆரம்பத்தில் கோவை மற்றும் சென்னை வந்திருந்தேன். கோவையின் சாலைகள் மற்ற ஊர் சாலைகளை விட நன்றாக இருந்தன. நாங்கள் திருச்சி சாலையில் வசிக்கிறோம். என் தாயார் மற்றும் தம்பியின் கருத்துகள் - மரத்தை வெட்டியதை விட்டுபுட்டு ஒன்னுத்தையும் பன்னல. இவ்வளவு பணத்தை கொட்டி மரத்தை வெட்டீருக்க வேணாம்:)

  திருச்சி சாலை, மேட்டுபாளையாம் சாலைகளில் பயணித்து இருந்தால் தெரியும். இருமருங்கிலும் மரங்கள் சூழ கண்ணிற்கு குளிர்ச்சியான பாதை..

  //சொகுசுப் பேருந்து என்ற பெயரில் அப்போது நவீனப் பேருந்துகள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டது//

  இந்த அரசாங்க பேருந்துகளை விட் நாங்க் ( கோவை வாசிகள்) தனியார் பேருந்து தான் அதிகம் உபயோகிக்கிறோம்.... ஒருமுறை கோவை வந்தால் பயணித்து பாருங்கள் மற்ற நகரங்களின் பேருந்துகளின் அவலம் தெரியும்.

  எங்களுக்கு(கோவைக்கு) இந்த மாநாட்டால் என்ன பயன் நேர்ந்தது? என்று என் நண்பர்கள் உறவினர்கள் கிட்ட பேசும் போதும் எல்லாரும் பேசிக்கிட்டது தேர்தலுக்கான மாநாடு மட்டுமே என்பது....

  பதிலளிநீக்கு
 16. (1) ந‌ல்ல‌ க‌ட்டுரை, இது போன்ற‌ ப‌க்க‌ சார்ப‌ற்ற‌ க‌ட்டுரை த‌ஞ்சை மாநாட்டை ப‌ற்றி எழுத‌ப்ப‌ட்டிருந்தால் ந‌ன்றாக‌ இருந்திருக்கும். துர‌திர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ அந்த‌ ச‌ம‌ய‌த்தில் யாரும் இதை செய்ய‌வில்லை.
  (2)முனைவ‌ர் க‌லாமை‌ அழைக்க‌ வேண்டுமென்று க‌ட்டாயம் எதுவும் இல்லை, என்ப‌தே என‌து க‌ருத்து. அதே ச‌ம‌ய‌த்தில், ISRO வில் இருந்து ப‌ங்கேற்ற‌ அறிவிய‌லாள‌ர்க‌ள் என்ன‌ த‌மிழாராய்ச்சி செய்த‌த‌ற்காக‌ அழைக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என‌ விள‌க்க‌முடியுமா?
  (3)இந்த‌ மாநாடு ப‌ற்றி சில‌ விச‌ய‌ங்க‌ளை ப‌கிர்ந்துகொள்ள‌ வேண்டுமென‌ நினைக்கிறேன். இன்றோ அல்ல‌து நாளையோ அது தொட‌ர்பாக‌ எழுதுகிறேன்.
  krishnamoorthy

  பதிலளிநீக்கு
 17. சாயல்களும் சார்புகளுமில்லாத ஒழுங்கான ரிப்போர்ட்டிங். தேறியாச்.

  பதிலளிநீக்கு
 18. பின்னூட்டம் போட்ட பாரா ஒரிஜினல் பாராவா?

  பதிலளிநீக்கு
 19. //அப்துல்கலாம் ஒரு அறிவியலாளர் என்று தெரியும். எவ்வகையில் தமிழறிஞர் என்பதை நீங்கள் விளக்கினால் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும். அவர் ஏதேனும் தமிழாராய்ச்சி செய்திருக்கிறாரா?//

  what a question lucky? Will you care to explain what the following guys did for Tamil.
  1. Mrs Gandhi Alagiri
  2. Mr. Udayanidhi Stalin
  3. Family members other than MK and Kani Mozhi
  4. R M veerappan
  5. Thol thiruma
  6. Ila Ganesan
  7. D.Raja
  8. A. Rasa
  9. Pranabh Mukerjeee
  10. P Chidambaram

  And Abdul kalam has written 2 books in Tamil

  பதிலளிநீக்கு
 20. என்னமோ மாநாட்டிற்கு வந்தவனெல்லாம் தமிழறிஞர் மாதிரி பேசுறிங்க? அப்துல் கலாம்.. உலக திருக்குறள் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு உரையாற்றியதெல்லாம் உங்களுக்கு தெரியாதா? பேருந்துகளில் எழுதி வைத்திருந்த குறள்களையெல்லாம் அழித்துவிட்டு, எங்கு பார்த்தாலும் "நாம் என்றால் உதடு ஒட்டும், நீ நான் என்றால் ஒட்டாது, வெட்டாது" என்ற உலக (மகா!) பொதுமறைகளை எழுதியவரை அடி வருடும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், திருக்குறளை அடிக்கோடிட்டு பேசுகிற கலாமின் பெருமை எப்படி தெரியும்? என்றைக்கும் சுயபுத்தியோடு கட்டுரை எழுதியிருந்தால் தானே உங்களிடமிருந்து நேர்மையை, நடுநிலையை எதிர்பார்க்கமுடியும்?

  பதிலளிநீக்கு
 21. எல்லா மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரியிலும் தமிழ் இலக்கியம் ஒரு பாடமாக வைக்காத வரை பள்ளிகளில் தமிழ் தட்டச்சு கொண்டுவராத வரை இளைஞர்களிடம் தமிழை முழுமையாக கொண்டு செல்ல முடியாது

  பதிலளிநீக்கு
 22. uvakrishna, unga DMK jalraa thaanga mudiyalai. Just for somebody's fun 380 crores and more than that the entire GOvt has come to stand still. This is show business and Businesss people (DMK) made a good money out of it. Want to see atleast one single honest and straight thing from this people in which they don't make money. Pinam thinni pasanga..ADMK is also the same. Now it is turn of DMK. Ozunga Tamilanukku Education, food, Job koduthu safe and clean aana govt kodunga adhu podhum. Tamil nalla irunda adhai vachi business panna neriya peru varuvaanga.

  பதிலளிநீக்கு
 23. இந்த‌ மாநாடு அறிவிக்க‌ப்ப‌ட்ட‌ போது, இது தேவையில்லாத‌ வேலை என்று நினைத்தேன்.அது த‌வ‌றான‌ எண்ண‌ம் என்ப‌தை, முனைவ‌ர் க‌ர‌சிமாவின் அறிவிப்பு உண‌ர்த்திய‌து. ஏனெனில், நானோ, என‌து மாண‌வ‌ர்க‌ளோ ஒரு ச‌ர்வ‌தேச‌ மாநாட்டிற்கான‌ ஆராய்ச்சிக் க‌ட்டுரை ச‌ம‌ர்பிக்க‌ எடுத்துக் கொள்ளும் கால‌ம் ஒரு வார‌ம். இது ஆராய்ச்சியில் ஈடுப‌டும் அனைவ‌ருக்கும் பொருந்தும். ஒரு க‌ட்டுரை ச‌ம‌ர்பிக்க‌ ஒரு ஆண்டுகால‌ம் தேவை என்ப‌து, த‌மிழ் ஆராய்ச்சியாள‌ர்க‌ளின் இய‌லாமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்த‌ எண்ண‌த்தை மேலும் அதிக‌ப்ப‌டுத்திய‌து, மாநாட்டுச்‌ சொற்பொழிவுக‌ளில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ விச‌ய‌ங்க‌ள். இந்த‌ மாநாட்டு உரைக‌ளில் இருந்து நான் தெரிந்து கொண்ட‌ ஒரே புதிய‌ விச‌ய‌ம், உல‌கின் தொன்மையான‌, உண்மையான‌ ( original ) இல‌க்க‌ண‌ம் கொண்ட‌ மொழிக‌ள் த‌மிழ், ச‌ம‌ஸ்கிருத‌ம், கிரேக்க‌ம், ல‌த்தீன் என்ப‌தே. மாண்ட‌ரினும், ஹீப்ரூவும் இதில் இட‌ம்பெறாத‌து என‌க்குப் புதுமையான‌து. இந்த‌ த‌க‌வ‌லை சொன்ன‌வ‌ர் முனைவ‌ர் வ‌. செ. குழ‌ந்தைசாமி. த‌மிழை முறையாக‌ ப‌டிக்காத‌, என் போன்ற‌வ‌ர்க‌ளுக்குத்‌ தெரிந்த‌ விச‌ய‌ங்க‌ள் தான் இந்த‌ சொற்பொழிவாளார்க‌ளுக்கும் தெரியும் என்றால், இவ‌ர்க‌ளால் த‌மிழுக்கு என்ன ப‌ய‌ன்? இந்த‌ மாநாட்டில் இட‌ம்பெற்ற‌ பெரும்பாலான‌ உரைக‌ள், முன்னால் ச‌பாநாய‌க‌ர் முனைவ‌ர் கா. காளிமுத்து அவ‌ர்க‌ள் கிராம‌ங்க‌ளில் நிக‌ழ்த்திய் உரைக‌ளுட‌ன் ஒப்பிட‌ த‌குதிய‌ற்ற‌வை என்ப‌தே என‌து க‌ருத்து. இந்தி எதிர்ப்பு போராட்ட‌ கால‌த்தில், த‌மிழ‌க‌ம் முழுவ‌தும் சுற்றிச் சுழ‌ன்று மாண‌வ‌ர்க‌ளிட‌ம் எழுச்சி உரை நிக‌ழ்த்திக்கொண்டிருந்த‌ காளிமுத்துவிட‌ம் சிவ‌க‌ங்கை க‌ல்லூரி மாண‌வ‌ர் ஒரு ச‌வால் விட்டார். காளிமுத்து, உங்க‌ள் த‌மிழ் சிற‌ந்த‌ மொழி என்றால், "நெருஞ்சிப் பூக்க‌ள்" என்ற‌ த‌லைப்பில் 15 நிமிட‌ம் உங்க‌ளால் உரை நிக‌ழ்த்த‌ முடியுமா என்று கேட்டார். ச‌ங்க‌ இல‌க்கிய‌ பாட‌ல்க‌ளை மேற்கோள் காட்டி, காளிமுத்து பேசிய‌து 75 நிமிட‌ம். த‌லைப்புக் கொடுக்க‌ப்ப‌ட்ட‌ 5 வ‌து நிமிட‌த்தில் உரையை தொட‌ங்கிய‌ காளிமுத்துவுட‌ன் ஒப்பிட‌க் கூடிய‌ ஆராய்ச்சியாள‌ர்க‌ள் இன்று இல்லாத‌து, ந‌ம் மொழி ஆராய்ச்சியின் அவ‌ல‌ நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டு. என் வாழ்வின் ம‌கிழ்ச்சியான‌ த‌ருண‌ங்க‌ளில், காளிமுத்து அவ‌ர்க‌ளின் பேச்சை கேட்ட‌ நேர‌ங்க‌ள் முக்கிய‌மான‌வை.

  மொழி வ‌ள‌ர்ச்சிக்காநன‌ மாநாட்டில் எத‌ற்கு க‌லை நிக‌ழ்ச்சிக‌ள்? க‌லை நிக‌ழ்ச்சிக‌ள் ந‌ட‌த்த‌த்தான் "சென்னை ச‌ங்க‌ம‌ம்" இருக்கிற‌து. த‌மிழ் மாநாட்டில் க‌லை நிக‌ழ்ச்சிக‌ளை சேர்த்த‌து அறிஞ‌ர், என‌வே இதில் க‌லைஞ‌ரை குறை சொல்வ‌து முறைய‌ல்ல‌. இந்த‌ மாநாட்டின் மூல‌ம் நான் தெரிந்து கொண்ட‌து, த‌மிழ் ஆராய்ச்சி க‌வ‌லைக்கிட‌மாக‌ உள்ள‌து என்ப‌தே. என‌து தேட‌லில் நான் க‌ண்ட‌றிந்த‌து, ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் குறிப்பிடும் ப‌டியான‌ முனைவ‌ர் ப‌ட்ட‌ க‌ட்டுரைக‌ளை ச‌ம‌ர்ப்பித்து இருப்ப‌து, ர‌மேசும், விம‌ல‌னும். ச‌ங்க‌ இல‌க்கிய‌த்தில் ஆராய்ச்சி செய்யாத‌த‌ற்குக் காரண‌மாக‌ நான் ச‌ந்தித்த‌ மாண‌வ‌ர்க‌ள் சொல்வ‌து, ச‌ங்க‌ இல‌க்கிய‌ம் க‌டின‌ம் என்ப‌தே. ச‌ங்க‌ இல‌க்கிய‌ம் க‌டின‌ம் என்ற‌ எண்ண‌ம் வ‌ருவ‌த‌ற்கு ஒரு கார‌ண‌ம் ப‌ள்ளிக‌ளில் முறையாக‌ த‌மிழ் க‌ற்றுத்த‌ராத‌து. த‌மிழ் ஆசிரிய‌ர்க‌ளை "முறையாக‌" நிய‌ம‌ன‌ம் செய்து த‌மிழ் வ‌ள‌ர‌ த‌மிழ‌க‌ அர‌சு உத‌வ‌ வேண்டும்.
  krishnamoorthy

  பதிலளிநீக்கு
 24. people touching periyar statue feet was "Kan kolla kaatchi" for him....
  what a great "paguthu arivu"? and if you dont know what Kalam has done for Tamil, there is something called google...check there...
  as long as people like you are there all the politicians will be having great fun in TN...

  பதிலளிநீக்கு
 25. //கோவையின் இந்த திடீர் வனப்பு மிகக்குறுகிய காலத்தில் இரவுபகல் பாராத அரசு இயந்திரத்தின் உழைப்பால் நிகழ்ந்த அதிசயம். அரசு மனது வைத்தால் நரகத்தை கூட சொர்க்கமாக்கிவிட முடியும். //

  அந்த லட்சணம் இதுதான் .

  http://www.skyscrapercity.com/showpost.php?p=60276413&postcount=8619

  பதிலளிநீக்கு