4 மே, 2010

பள்ளிக்கல்வி கட்டணம் இனி?

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பெற்றோர் மத்தியில் எப்போதும் புகைச்சல் இருந்துகொண்டேதான் இருக்கிறது. குறைபட்டுக் கொண்டே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கொண்டு சேர்ப்பது நடுத்தர மக்களின் வழக்கமாகவும் இருக்கிறது.

தொடர்ச்சியான இதுபோன்ற புகார்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலமாக கல்விக் கட்டணங்களை ஒழுங்கு படுத்த முடியும் என்றது அரசுத்தரப்பு. சட்டத்தை அமல்படுத்துவதற்கு வாகாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் மூலமாக, தனியார் பள்ளிகளில் கட்டண விகிதங்கள் சரியாக இருக்கிறதா என்று ஆராய ஒரு கமிட்டியும் உருவாக்கப்பட்டது.

தமிழக அரசு கொண்டு வந்திருந்த இந்த சட்டத்தினை எதிர்த்து சில தனியார் பள்ளிகளும், தமிழ்நாடு நர்சரி, மெட்ரிக்குலேஷன் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் சங்கமும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் சட்டத்தில் இருந்த ஒரே ஒரு பிரிவினை மட்டும் ரத்துசெய்து சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு எந்த ஆட்சேபணையுமில்லை என்று தீர்ப்பு சொன்னது.

தமிழ்நாடு பள்ளிகள் கட்டண ஒழுங்குமுறை சட்டம் எவ்வகையில் செயல்படும் என்று சட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

• இந்த குழு பள்ளிகளுக்கு இவ்வளவுதான் கட்டணங்கள் வாங்க வேண்டும் என்று எந்த வரையறையையும் நிர்ணயிக்காது.

• ஆனால் ஏற்கனவே பெறப்படும் கட்டணங்கள் நியாயமான முறையில் வரையறுக்கப்பட்டு பெறப்படுகிறதா என்பதற்கான விளக்கங்களை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு கோரும்.


• கட்டண விவரங்களும், அந்த கட்டணங்கள் ஏன் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கங்களும் பள்ளித் தரப்பிடமிருந்து குழுவுக்கு தரப்பட வேண்டும்.

• நன்கொடை என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் தொகையை பள்ளிகள் பெறக்கூடாது. அப்படி பெறப்படுவதாக தெரிந்தால் குழு தலையிடும்.


• பள்ளி நிர்வாகத்தின் கருத்துகள் பெறப்பட்டு, ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் சரியானதா, மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமா என்பதை குழு முடிவு செய்யும்.

• தனியார் பள்ளிகள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பதற்கும், ஒப்புதல் வாங்குவதற்கும் இச்சட்டத்தில் போதிய வழிமுறைகள் இருக்கின்றன.


• இலவச மற்றும் கட்டாயக் கல்வி குழந்தைகளுக்கான உரிமைச் சட்டம் அமலுக்கு வந்திருக்கிறது. எனவே தனியார் பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு இருபத்தைந்து சதவிகித இடத்தை கட்டாயம் ஒதுக்க வேண்டும்.

• தனியார் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று குழு சோதனையிடவும், தேவைப்பட்டால் ஆவணங்களை சரிபார்க்கவும் அதிகாரத்தை இச்சட்டம் வழங்குகிறது. தேவைப்படும் ஆவணங்களை குழுவால் பறிமுதலும் செய்ய இயலும்.

கடைசியாக சொல்லப்பட்ட பிரிவினை தவிர்த்து இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த எந்த தடையுமில்லை என்றே இப்போது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கல்வி வணிகமயமாவதை தடுக்கும் நடவடிக்கைகள் இச்சட்டத்தில் இருப்பதாகவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

தனியார் பள்ளிகளிடையே இச்சட்டம் குறித்த அச்சம் நிலவுவதும் தெரிகிறது.

“25 சதவிகிதம் ஏழைக்குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் இடம் அளிக்க சொல்லி சட்டம் சொல்கிறது. இதற்கான கட்டணத்தை அரசு பங்கிட்டுக் கொள்கிறது என்றாலும், அரசு பங்கிடும் தொகை மிகக்குறைவானதாக இருக்குமோ என்ற ஐயம் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு இருக்கிறது.

சில பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்பதால் எல்லாப் பள்ளிகளையும் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்ப்பது நியாயமில்லை. குழு நிர்ணயிக்கும் கட்டணத்தொகை மிக அதிகமானதாக இருந்தால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்ப்பது குறித்து பயப்படுவார்கள். மிகக்குறைவான கட்டணம் நிர்ணயிக்கப்படுமானால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதும் கூட தனியார் பள்ளிகளுக்கு சிரமமானதாகிவிடும்” என்கிறார் ராமசுப்பிரமணியன். இவர் மண்ணிவாக்கம் நடேசன் வித்யாசாலா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தலைமை பிரின்சிபாலாகவும், கரெஸ்பாண்டெண்ட் ஆகவும் இருக்கிறார்.

“தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டனம் வாங்குகிறார்கள் என்றால் அரசுப் பள்ளிகளை விட அங்கே கூடுதல் வசதிகள் இருப்பதாக பெற்றோர் நம்புகிறோம். ஆசிரியர்கள் அதிகமாக இருப்பார்கள். குழந்தைகளுக்கு கல்விச்சூழல் வசதியானதாக இருக்கும். இதுபோன்ற காரணங்களுக்காகவே பணம் செலவழித்து தனியார் கல்வி நிலையங்களை நாடுகிறோம்.

அரசு இப்பள்ளிகளுக்கு குறைவான கட்டண நிர்ணயம் செய்துவிட்டால், ஏற்கனவே இருக்கும் வசதிகளை பள்ளிகள் குறைத்துவிடுமோ என்று அஞ்சுகிறோம். அதே வேளையில் சில கட்டணங்களை கட்டும்போது இது அநியாயக் கொள்ளையாக இருக்கிறதே என்று நினைப்போம். அதுபோன்ற கூடுதல் கட்டணங்கள் இச்சட்டத்தால் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்பதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று சென்னையை சேர்ந்த கமலக்கண்ணன் சொல்கிறார். இவரது இரண்டு மகள்களும் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்கள்.

“கிட்டத்தட்ட 11,000 தனியார் பள்ளிகள் நம் மாநிலத்தில் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு பள்ளிக்கும், அதன் வசதிகளைப் பொறுத்து தனித்தனியாக கட்டணம் நிர்ணயிப்பது என்பது மலையை உளியால் செதுக்கும் வேலை. 50 உறுப்பினர்கள் இதற்காக இரவும் பகலுமாக பணியாற்றி வருகிறார்கள்” என்று தனது குழுவைப் பற்றி சொல்கிறார் நீதிபதி கோவிந்தராஜ்.

இந்த சட்டம் மற்றும் குழுவின் செயற்பாடுகளால் கல்விக்கட்டணங்கள் குறித்த வெளிப்படையான ஒரு சூழல் உருவாக வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பினரின் எதிர்ப்பார்ப்பு.

(நன்றி : புதியதலைமுறை)

16 கருத்துகள்:

 1. //• நன்கொடை என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து கூடுதல் தொகையை பள்ளிகள் பெறக்கூடாது. அப்படி பெறப்படுவதாக தெரிந்தால் குழு தலையிடும்.//

  :)
  டிராபிக் போலிஸ்காரன் பிடிபடுபவர்களிடம் எதிரே உள்ள பெட்டிக்கடையில் பணம் கொடுக்கச் சொல்லிவிட்டுவிடுவார்கள். தனியார் பள்ளி உரிமையாளர்களுக்கும் பெற்றோர்களை பணம் கட்டச் சொல்லும் பினாமி கிடைப்பது கடினமா ?

  பதிலளிநீக்கு
 2. 50, 100ன்னா ஓக்கே. பெரிய தொகையை கருப்புலே வெச்சிக்குறது யாருக்கா இருந்தாலும் கொஞ்சம் காப்ராவான மேட்டர்தானே?

  அப்படியே நீங்க சொல்றமாதிரி நடந்தாலும் கூட இதுநாள் வரைக்கும் அதெல்லாம் வெள்ளை கணக்குலே இல்லே இருந்திச்சி? அது ஓவரில்லையா?

  பதிலளிநீக்கு
 3. எந்த மாதிரியான சட்டங்கள் வந்தாலும் நம்ம ஆளுங்க ஏமாத்திட்டு தான் இருப்பாங்க. அரசு உதவி பெரும் பள்ளி ஒன்றில் அதிக கட்டணம் வசூலிப்பதால் RTI மூலம் தகவல் பெற முயற்ச்சித்து, தகவல் தர சொல்லி RTI COMMISSIONER உத்தரவிட்டு 2 வருடங்கள் ஆகியும் இன்னும் தகவல் கிடைக்க வில்லை.இந்த நிலைமையில் உள்ளது நமது சட்டங்கள்.

  Link Below..

  http://www.tnsic.gov.in/judgements/pdfs/case_No_3963_Enquiry_2008.pdf

  பதிலளிநீக்கு
 4. //உத்தரவிட்டு 2 வருடங்கள் ஆகியும்//

  உரியகாலத்துக்குள் தகவல் கிடைக்காவிட்டால் ஆர்.டி.ஐ.யில் மேல் முறையீடுக்கு வழி இருக்கிறதே டார்வின்?

  பதிலளிநீக்கு
 5. மேல் முறையீடு செய்து 1 1/2 வருடங்கள் ஆயிடுச்சு லக்கி. நோ responce.Sent 2 reminders also.. இதுக்குமேல யார்ட்ட போய் சொல்லுறதுன்னு தெரியல :-(.

  பதிலளிநீக்கு
 6. அப்படின்னா RTI மேலேயே ஒரு பொதுநல வழக்கு போடலாம்னு நெனைக்கிறேன். அந்த வழக்கும் அப்பீலுக்கு வரலைன்னு அடுத்து வந்து சொல்லாதீங்க. நான் அப்பீட்டு!

  பதிலளிநீக்கு
 7. இதுக்கு மேல இதுல தொங்குற ஐடியா எனக்கு இல்ல.. :-) விஷயம் என்னன்னா ஒரு சாதாரண informtation வாங்குறதுக்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டி இருக்கே..என்ன சட்டம் வந்து என்ன பண்ண ? ஏமாத்துறவன் ஏமாத்திட்டு தான் இருப்பான்..ஹ்ம்ம்.. cant help..

  பதிலளிநீக்கு
 8. தனியார் பள்ளிக்குச்
  சென்று பார்த்தால் தான்
  தெரியும்.
  அங்கு கிடைக்கும் செளகர்யம்
  மற்றும் ஆசிரியருக்குக்
  கொடுக்கும் சம்பளம்.
  இதெல்லாம் டூப்பு.
  டொனேஷன் தான் டாப்பு.

  பதிலளிநீக்கு
 9. அந்த குழுவுக்கு கொஞ்சம் பணம் சைட்ல வெட்டனும். அந்த பில்லும் படிக்கறவன் தலையில தான் விழும்.

  குழுவில் இடம்பெற என்னென்ன தகுதி வேணும் லக்கி ?

  விசாரிச்சு சொல்லுங்களேன்.

  பதிலளிநீக்கு
 10. எனக்கு தெரிந்து, எந்த தனியார் பள்ளிகளும், நன்கொடைகளுக்கு ரசீது தருவதில்லை. அப்படியே கொடுத்தாலும், அது நன்கொடை என்ற பெயரில் வராது!

  அதிக கட்டணம் வசூல் செய்யப்பட்டால், ஆதராங்களுடன் புகார் கொடுத்தால் மட்டுமே குழு நடவடிக்கை எடுக்கும் என்பது பம்மாத்து.

  பெரும்பாலான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள், புகார் செய்ய முன்வருவதில்லை. அப்படியே புகார் செய்தாலும், நீதிபதி தலைமையிலான குழு கூடி விவாதித்து முடிவுக்கு வருவதற்க்குள், மாணவனின் ஒராண்டு படிப்பு காலி.


  பொறியியல் கல்லூரிகளுக்கான குழு போலத்தான் இதுவும்!

  "நான் அடிக்காறாப்பல அடிக்கிறேன், நீ அழுகிறாப்ல அழு" ‍ நாடகம் இது!

  பதிலளிநீக்கு
 11. நல்ல பதிவு ! நன்றி அதிஷா!

  பதிலளிநீக்கு
 12. நல்ல பதிவு நன்றி பத்ரி

  பதிலளிநீக்கு
 13. எல்லாமே நல்லா இருக்கு. இதுவும் நல்ல கட்டுரை அட நம்ம ஊரு நலமா !

  பதிலளிநீக்கு
 14. 11000ரூபாய்க்கு மேல் வாங்கினால் நடவடிக்கை என எழுதுகிறார்கள். அது உண்மையா? ரசீதில் டியூசன் பீஸை குறைத்து காண்பித்து பல்வேறு வகையில் பெற்றுக் கொள்வார்கள். கல்விக்கொள்ளையை தடுக்க இனி முடியாது. அரசு சாராயத்தை விற்பதற்கு பதில் கல்வியை விற்றால் கொள்ளை லாபம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 15. Health and Eduction should be nationalised .Corruption must be eliminated atleast in this sectors. A country like india where 70 %of the people earning less than 2$ a day , no other way except to move in this direction.In a welfare state health and education must be avilable to their citizens at affordable cost .Then only our nations will prosper .

  பதிலளிநீக்கு