May 3, 2010

வானில் மர்ம வெளிச்சம்!

நேற்று இரவு பத்து மணிக்கு மேல் சென்னையின் சில பகுதிகளில் (மடிப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி இத்யாதி) வானில் ஒரு வித்தியாசமான வெளிச்சம் தெரிவதாக சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஃப்ளாஷ் நியூஸ் வெளியாகியது. அவசர அவசரமாக சென்று வானைப் பார்த்தபோது நிலவொளியைத் தவிர வேறு ஒளி எதையும் என்னால் காணமுடியவில்லை.

இப்படி ஒரு ஒளியை தாங்கள் காணவில்லை. எனவே கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்று அறிவியலாளர்கள் கைவிரித்துவிட்டதாகவும் இன்று காலை செய்தித்தாள்களில் காண நேர்ந்தது. சென்ற வாரம் ஸ்டீபன் ஹாக்கிங் வேறு வேற்றுக்கிரக வாசிகள் நிச்சயமாக இருக்கிறார்கள் என்று சொல்லி உலகம் முழுக்க பரபரப்பாகியிருக்கிறது. ஒருவேளை வித்தியாசமான விண்கலம் ஏதாவது கும்மியடித்திருக்கலாமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

சிறுவயதில் இதுபோல ஏராளமான ஒளிகளை மடிப்பாக்கத்துக்கு தென்மேற்கு திசையில் கண்டு வியந்திருக்கிறேன். அது கொள்ளிவாய்ப் பிசாசின் வேலை என்று அறிவியலாளர் எவரிடமும் உறுதிசெய்யாமல் நானே பல இரவுகள் முடிவு கட்டி அஞ்சி நடுங்கியிருக்கிறேன்.

மேடவாக்கம் பகுதியில் யூகலிப்டஸ் காடொன்று முன்பு இருந்தது. இப்போதும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு ஓரளவுக்கு காடு என்று சொல்லிக் கொள்ளும் வகையில் (காயிதேமில்லத் காலேஜூக்கு பின்புறம்) இருக்கிறது. அக்காடு பெரும்பாலும் பாலியல் தொடர்பான கசமுசாக்களுக்கு சமூகவிரோதிகளால் பயன்படுத்தப் பட்டதாக சொல்வார்கள். அக்கால இளைஞர்களுக்கு தண்ணியடிக்கவும், காதலர்களுக்கு சுதந்திரமாகப் பேசி பழகவும் வாகாக இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது குமுதா 'செட்' ஆனால், அங்கேதான் அழைத்துச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் என்பது இங்கே தேவையில்லாத இடைச்செருகல்.

அந்த காட்டினையொட்டி சமவெளிப் பகுதி ஒன்றும், கரடுமுரடான குன்று ஒன்றும் இன்றும் உண்டு. அங்கே ராணுவப்பயிற்சி அவ்வப்போது நடக்கும். இரவுகளில் ராணுவ சமிக்ஞைகள் குறித்த பயிற்சி வீரர்களுக்கு வழங்கப்படும்போது, வித்தியாசமான வண்ணங்களில் வானவேடிக்கை நிகழ்த்தப்படும். வண்ண வண்ணப் புகைகள் வானில் வட்டமிடும். இதைத்தான் தூரத்தில் இருந்து பார்த்து கொள்ளிவாய்ப் பிசாசின் சேட்டை என்று நினைத்திருக்கிறேன்.

இப்போது அங்கே ராணுவப்பயிற்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. கோவிலம்பாக்கம், கீழ்க்கட்டளை பயல்கள் பகலில் கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பது மட்டும் தெரியும். இதைப்போன்ற ஏதோ பட்டாசுப்புகை நேற்று வானில் வட்டமிட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அனேகமாக தென்னாப்பிரிக்காவை இந்தியா வென்ற மகிழ்ச்சியில் ஏதோ ஒரு கிரிக்கெட் ரசிகர் விட்ட வான வேடிக்கையாக அந்த 'மர்ம' வெளிச்சம் இருந்திருக்கலாம் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

‘தி ஹிண்டு'வுக்கு லெட்டர் போடும் மாமா யாரோ ஒருவர், மின்வெட்டால் காற்றுவாங்க மொட்டை மாடிக்குப் போகும்போது இந்த ‘மர்ம' வெளிச்சத்தை கண்டு அஞ்சி, சன் நியூஸுக்கு தகவல் கொடுத்திருக்கலாம். ஆனாலும் மடிப்பாக்கத்துக்கும், மயிலாப்பூருக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தூரம் இருக்கிறது. இருவேறு பகுதிகளில் ஒரே வெளிச்சம் எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வியை பகுத்தறிவு தட்டி எழுப்புகிறது. அப்படியெனில் இடையில் இருக்கும் வேளச்சேரி, தரமணி, அடையாறு பகுதிகளிலும் இந்த ‘மர்ம' வெளிச்சம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் லாஜிக்.

சரி, லூசில் விடுங்கள். மர்மமான விஷயங்கள் எப்போதுமே மர்மமாக இருப்பதுதான் மர்மத்துக்கான குறைந்தபட்ச அளவுகோல்.

23 comments:

 1. மர்மமோ மர்மம். மாமா மர்மம்.

  ReplyDelete
 2. யுவா எம்ஜிஆர் நகர் பகுதியிலும் தெரிந்ததாக நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை. உங்கள் எழுத்து நடை ரசிக்க வைக்கிறது. தொடரட்டும்.

  ReplyDelete
 3. ஸ்வாரஸ்யம்.

  ReplyDelete
 4. அட, மறுபடி தமிழ்மணத்துல வருது ? வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 5. Last week, when there was power shutdown in the night,our family was sleeping outside. At about 10 pm, suddenly I saw a similar light in the sky (not too far to be declared as a shooting star). It just appeared for about 2 seconds and disappeared. Before I could guess about what happened ,my mother said, she also see the same light. But no one else was watching the sky and they didn't noticed this. After reading this news,UFO va irukkumonu doubta irukku????
  It was at Ramapuram.
  - Suresh

  ReplyDelete
 6. very good one lucky!! Enjoyed reading it.

  ReplyDelete
 7. ஒட்டுமொத்த படமும் சூட்கேஸுக்குள் இருந்த சமாச்சாரம் மாதிரிதான் இருக்கிறது.


  he he he

  ReplyDelete
 8. வேற்றுக்கிரக வாசிகள் ”சுறா” பார்க்கலாம்னு வந்திருப்பாங்களோ?

  ReplyDelete
 9. நப
  நன்றி அதிஷா!

  ReplyDelete
 10. மாமா 'தி ஹிந்து' வுக்கு எழுதுனா என்ன, சக்கிலியன் சரோஜாதேவில எழுதுனா என்ன,
  அத பார்த்த பயபுள்ளைங்க அறிவு எங்க போச்சு?

  ReplyDelete
 11. சன் டீவியில மர்ம வெளிச்சம் பாத்தவிங்க பேட்டிய பாத்தா ஸ்டீபன் ஹாக்கிங் சொன்னது உண்மையோன்னு பயந்துட்டோமுங்கோ.

  ReplyDelete
 12. //
  பத்தாம் வகுப்பு படிக்கும்போது குமுதா 'செட்' ஆனால், அங்கேதான் அழைத்துச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் என்பது இங்கே தேவையில்லாத இடைச்செருகல்.
  //

  லக்கி ஸ்பெஷல்!

  ReplyDelete
 13. வான வேடிக்கையா? வாண வேடிக்கையா?

  ReplyDelete
 14. // மர்மமான விஷயங்கள் எப்போதுமே மர்மமாக இருப்பதுதான் மர்மத்துக்கான குறைந்தபட்ச அளவுகோல்//

  எப்டீங்க இப்படி??!!! உங்களை அடிச்சுக்கவே முடியாது!

  ReplyDelete
 15. உட்கார்ந்து யோசிப்பீங்களோ...

  ReplyDelete
 16. ஒருவேளை இது வெளி நாட்டு சதியா இருக்குமோ சார்?..

  ஹா..ஹா..

  ReplyDelete
 17. //
  பத்தாம் வகுப்பு படிக்கும்போது குமுதா 'செட்' ஆனால், அங்கேதான் அழைத்துச் செல்வதாக திட்டமிட்டிருந்தேன் என்பது இங்கே தேவையில்லாத இடைச்செருகல்.
  //


  லக்கி உமக்கு இமேஜ் மெயின்டெயின் பண்ண தெரியல.
  மிஸ்டர் கிளீன் இமேஜ் ரொம்ப முக்கியம். என்ன தான் நாம அயோக்கியன இருந்தாலும் இந்த மாதிரி மேட்டர பப்ளிக்ல எழுதப்டாது.
  பிளாகுல அப்படியே ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கணும்/எழுதணும். அப்போ தான் பெரிய ஆள ஆக முடியும்

  சன் டி.வி.யில் இந்த பிளாஷ் அடித்ததால் ஒரு வேளை நித்திய வீடியோவின் ஒளிவட்டமாகவும் இருக்கலாம்.
  எதற்கும் இன்று பத்து மணி சன் நியூஸ் பார்க்கவும்.  நன்றி
  பக்கிரி.

  ReplyDelete
 18. Oh! We are not alone ??? :)

  ReplyDelete
 19. /* ஆனாலும் மடிப்பாக்கத்துக்கும், மயிலாப்பூருக்கும் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் இருக்கும் தூரம் இருக்கிறது. இருவேறு பகுதிகளில் ஒரே வெளிச்சம் எப்படி தெரிந்திருக்கும் என்ற கேள்வியை பகுத்தறிவு தட்டி எழுப்புகிறது. அப்படியெனில் இடையில் இருக்கும் வேளச்சேரி, தரமணி, அடையாறு பகுதிகளிலும் இந்த ‘மர்ம' வெளிச்சம் தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் லாஜிக். */

  அந்த மர்ம வெளிச்சம் தாழ்வாக பறந்ததாக கூறுகிறார்கள். தாழ்வாக பறந்தால் வெகு தொலைவிற்கு தெரியாது. இதுவும் லாஜிக். எப்படியெல்லாம் மர்மத்தை maintain பண்ண வேண்டியிருக்கு. விடுங்க சார் இந்த மாதிரி ஏதாவது இருந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும். PKS படத்துல வரும் வசனம் போல் " பழமொழி சொன்ன அனுபவிக்கணும். ஆராயக்கூடாது. " அது போல் எல்லாரும் சொன்னா, நாமும் நம்ம பங்குக்கு " அப்படியா ? இப்படிதான் கொஞ்ச நாள் முன்னடின்னு " கதை விடணும்.

  ReplyDelete
 20. @@ &%$*(( (*&&%$#@@ )((*(&^%%$#
  )()_+)(****

  %^^*(((
  ^^&*** (& )(*%$
  இங்கே கடைசி இரண்டு வரிகள் :
  இப்படிக்கு
  வேற்று கிரகவாசி

  ReplyDelete
 21. //பெரும்பாலும் பாலியல் தொடர்பான கசமுசாக்களுக்கு சமூகவிரோதிகளால்//

  பாலியல் தொடர்பு - சமூகவிரோதிகள் எப்படீங்க??!!!

  ReplyDelete
 22. நானும் பார்த்தேன் ஆனால் 3ம் தேதிய‌ல்ல‌.9 ம‌ணி அள‌வில் ந‌ங்க‌ந‌ல்லூரில் மாடியில் நின்றுகொண்டு இருக்கும் போது க‌ழுத்து வ‌லிக்கு இத‌மாக‌ சிறிது தெற்கு ப‌க்க‌ம் சாய்த‌ போது ஒரு ஒளி உய‌ர‌ம் க‌ம்மியாக‌ போய் ம‌றைந்துவிட்ட‌து.ஷூட்டிங் ஸ்டாரின் கோண‌ம் போல் இல்லாம‌ல் ஓர‌ள‌வு ச‌மமாக‌வே போன‌து.ந‌ம‌க்கு தான் ஒளி அடிக்க‌டி தெரியுதே என்று க‌வ‌லைப்ப‌ட‌வில்லை. :-‍))

  ReplyDelete
 23. கூகுளில் வேறு என்னவோ தேட வந்து இந்தப் பதிவு கண்ணில் பட்டது. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பது மாதிரியே ஒரு வெளிச்சம் நகர்ந்து போவதை ஆஃபிஸின் ஆறாவது மாடியிலிருந்து கொஞ்சநாள் முன்னால் பார்த்தேன். சாயங்காலம் 3 அல்லது 4 மணி இருக்கலாம். ஆனால் நிச்சயம் அது ஒரு விமானம் அல்ல. வானில் இதுவரை பார்க்காத ஒரு விஷயம். கொஞ்சம் வால் நட்சத்திரம் மாதிரி - தாழ்வான உயரமா என்று சொல்ல முடியவில்லை - ஆனால் கொஞ்சம் நீளமாக பிரகாசமாக நகர்ந்து போய்க்கொண்டிருந்தது. நண்பர் காஞ்சி ரகுராமை விளித்து காண்பிப்பதற்குள் ட்ரில் ஐ.டி.பார்க்கின் பின்னால் மறைந்துவிட்டது. என்னவென்று தெரியவில்லை.

  ReplyDelete