April 26, 2010

சென்னைப் பள்ளிகள்!

சென்னையைச் சேர்ந்த இருபத்தெட்டு வயது கல்யாணியின் சொத்து வறுமை மட்டுமே. கணவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அவர்களை படிக்கவைக்க வேண்டும். வேறு வழியில்லை. நான்கைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் சேர்க்கிறார் கல்யாணி.

அவருக்கு ஒரு கனவு உண்டு. தனது பெரிய மகனை கலெக்டர் ஆக்க வேண்டும். இளைய மகனை போலிஸ் அதிகாரி ஆக்கவேண்டும். ஒரே வீட்டில் ஓர் ஐ.ஏ.எஸ், ஓர் ஐ.பி.எஸ். என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

முதல் கட்டமாக குழந்தைகளை படிக்கவைக்க வேண்டுமே? இரு குழந்தைகளுமே காண்வெண்டில் படிக்கிறார்கள். மாதாமாதம் பீஸ் கட்டவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ஜூன்மாதத்தில் பெரிய செலவு இருக்கும். அப்போது வசந்தி தவித்துப் போய்விடுவார்.

தான் வேலை செய்யும் வீட்டு முதலாளிகளிடம் கடன் கேட்பார். தன்னுடைய சம்பளத்தில் மாதாமாதம் கழித்துக்கொள்ள சொல்வார். வருடத்துக்கு ஒருமுறை கல்யாணி வாங்கும் பணத்தை மாதாமாதம் கட்டிமுடிப்பதற்குள் அடுத்த ஜூன் வந்துவிடும். மீண்டும் கடன். கேட்டது கிடைக்காதபட்சத்தில் ஐந்து, பத்து வட்டிக்கு வெளியில்கூட பணம் வாங்க கல்யாணி அஞ்சுவதில்லை.

இது கல்யாணியின் கதை மட்டுமே அல்ல. கல்யாணிகளின் கதை. சென்னையில் வசிக்கும் ஏழை/நடுத்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் கதையும் இதுதான். பெயர்கள்தான் வேறு வேறு.

கல்வியின் அவசியத்தை இந்த தலைமுறை நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான் தனது அடுத்த தலைமுறைக்கு தலையை அடகுவைத்தாவது நல்ல கல்வியை வழங்கியாக வேண்டுமே என்று தன்னைத்தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்கிறது.

ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியா என்ன?

அரசுப் பள்ளியிலோ, அருகிலிருக்கும் மாநகராட்சிப் பள்ளியிலோ ஏன் தன் குழந்தைகளை கல்யாணி சேர்க்கவில்லை?

“நானே கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சேன். என் புருஷனும் அங்குதான் படிச்சாரு. எங்க புள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிச்சு நல்ல நெலைமைக்கு வரணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? நல்லா கவனிச்சுப் பார்த்துட்டேன். நான் வேலை செய்யுற வீட்டுலே இருக்குற குழந்தைங்கள்லாம் காண்வெண்டுலேதான் படிக்குது. காண்வெண்டுலேதான் நல்ல படிப்பு கிடைக்குது” – கல்யாணி சொல்லக்கூடிய பதில் இதுதான்.

பலருக்கும் இருக்கும் மனத்தடை இதுதான். இது தவறென்றும் சொல்லிவிட முடியாது. அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கல்யாணியும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்?’

மாநகராட்சிப் பள்ளிகளில் ஒழுங்கு கிடையாது. தேவையான வசதிகள் கிடையாது. ஆசிரியர்கள் சரியாக கல்வி போதிக்க மாட்டார்கள். இங்கு படிப்பவர்கள் யாரும் பெரிய படிப்பு படிப்பதில்லை – இதெல்லாம் பொதுப்புத்தியாக நம் மக்கள் மனதில் ஆணியாய் அடித்து ஆழமாய் வேரூன்றப்பட்டிருக்கிறது.

ஆனால் நிலைமை அப்படியல்ல என்பதுதான் இன்றைய நிஜம். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளின் வசதிகளும், கல்வித்தரமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில் பிரபலமான தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வசதிகள் குறிப்பிடத் தகுந்தவை.

சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை 40 ஆரம்பப் பள்ளிகளோடு 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்று 30 மேல்நிலை, 37 உயர்நிலை, 99 நடுநிலை, 116 ஆரம்பப் பள்ளி, 30 மழலையர் பள்ளி, ஓர் உருது உயர்நிலை மற்றும் ஒரு தெலுங்கு உயர்நிலை பள்ளிகள் என்று விழுதுகளை விரிவாய் வேரூன்றியிருக்கிறது. 1,05,882 மாணவ மாணவியர் கல்வி பயிலுகிறார்கள். 4,062 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.

4 சமுதாய கல்லூரிகள் நடத்துகிறார்கள். ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ஐ.டி.ஐ) உண்டு. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இங்கே சேரமுடியும்.

சரி. கட்டணமெல்லாம் எப்படி?

அதிகபட்சமாக 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூட வருடத்துக்கு ரூ.148/- மட்டுமே செலவு ஆகும் என்பதை வைத்து மற்ற வகுப்புகளுக்கு ஆகும் கட்டணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பு வரை முற்றிலும் இலவசக் கல்வியையே சென்னைப் பள்ளிகள் வழங்குகிறது. மிகக்குறைந்த கட்டணத்தில் ஸ்பெஷல் ட்யூஷனும் தேவைப்படும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.

வேறென்ன வசதிகள்?

ஒன்று முதல் பண்ணிரெண்டு வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் முற்றிலும் இலவசம்.

மதிய உணவுத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி.

எஸ்.சி./எஸ்.டி, பி.சி./எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கு 11 மற்றும் 12 வகுப்புகளில் உதவித்தொகை. இதே பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.

இலவச பஸ் பாஸ்.

ஓவியம், நுண்கலைத்திறன் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.

தடகளம் மற்றும் இதரவிளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கணினி வழிக்கல்வி உண்டு. மாணவர்களுக்கு இண்டர்நெட் பரிச்சயம் படிக்கும்போதே ஏற்படுகிறது.

ஆளுமைத்திறன் மற்றும் ஆங்கிலப் பயிற்சி.

ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாகவே கண்ணாடியும் வழங்கப்படுகிறது.

முறையான கட்டிடம், விளையாட்டு மைதானம், தீயணைப்புச் சாதனங்கள், ஒலிபெருக்கி, கணினி, மின்சார மணி, நவீன இருக்கைகள், மாணவ மாணவியர்களுக்கு சாய்வு நாற்காலிகள் என்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே உண்டு.

இதுபோன்ற வசதிகளை ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளால் கூட தங்கள் மாணவர்களுக்கு தரமுடியுமா என்பது சந்தேகமே.

சரி, கட்டணமும் குறைவு. நிறைய வசதிகள் இலவசம். கல்வித்தரம் எப்படி?

ஒட்டுமொத்தமாக இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 83 சதவிகிதமும், 10ஆம் வகுப்பில் 82 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

இனியும் நாம் மாநகராட்சிப் பள்ளி என்றே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏப்ரல் 8 முதல் இவை ‘சென்னைப் பள்ளிகள்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியனால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடுமையான போட்டியைத் தரும் வகையில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே மாணவர் சேர்க்கையை சுறுசுறுப்பாக மாநகராட்சி தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டிலிருந்து வரவேற்கத்தக்க சில மாற்றங்களை சென்னைப் பள்ளிகளில் நாம் காணலாம்.

மாணவ மாணவியருக்கு மட்டுமல்ல. எல்லாப் பள்ளிகளுக்கும் யூனிஃபார்ம் உண்டாம். அதாவது சென்னைப் பள்ளிகள் அனைத்துமே ஒரே மாதிரியான வண்ணத்தில் அலங்கரிக்கப்படுமாம்.

நூலகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வாரத்துக்கு மூன்றுநாட்களாவது குறைந்தபட்சம் அரைமணி நேரம் மாணவர்கள் நூலகத்தில் செலவழிக்க நேரம் வழங்கப்படுமாம். இலக்கியங்களில் தொடங்கி காமிக்ஸ் வரை தங்கள் பள்ளி நூலகங்களில் கிடைக்கும் என்று உறுதிகூறுகிறார்கள் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள். கோடை விடுமுறைகளில் ஒரு சிறப்பு நூலகத்தை ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தலாம் என்றும் ஒரு ‘நச்’ ஐடியா மாநகராட்சிக்கு உண்டு.

மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கு இணையாக இன்னும் சில வருடங்களில் இந்த சென்னைப் பள்ளிகளை தரமுயர்த்துவதே தங்களது குறிக்கோள் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி சொல்கிறார்.

12ஆம் வகுப்பு வரை தங்களிடம் படித்த மாணவ/மாணவியர் உயர்கல்வி கற்கவும் மாநகராட்சியே ஊக்கத்தொகையும் தருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.25000, செவிலியர் ஆசிரியர் போன்ற பயிற்சிகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.5000, டிப்ளமோ படிப்பவர்களுக்கு ரூ.3000 என்று ஊக்கத்தொகை கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது மாநகராட்சி.

“எந்த மனத்தடையும் இன்றி குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்க்கலாம். கல்வித் தரத்திலும் வளர்ச்சிலும் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக எங்கள் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்துவிட்டு அவதிப்படும் பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன்.

கல்யாணிகள் இனி தங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா?

(நன்றி : புதிய தலைமுறை)

45 comments:

 1. சென்னையை விட சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள நடு மற்றும் மேல் நிலை பள்ளிகள் நிலைமை மிகவும் மோசமானது. பள்ளிகளில் வகுப்பு எதும் நடைபெறாது. கண்டிப்பாக வகுப்பு ஆசிரியரிடம் ட்யூசன் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த வருடம் பெயில். இந்த மாதிரி கொடுமைகளை விவரித்து 1000 பக்கம் புத்தகமே எழுதலாம்.

  ReplyDelete
 2. ந‌ல்ல‌ ப‌கிர்வு

  ReplyDelete
 3. Lucky, really good post...did you personally visit any of the "Chennai Schools"?.

  ReplyDelete
 4. சிவசுப்ரமணியம்!

  அரசுப்பள்ளிகள் குறித்து இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை என்பது என் கருத்து. கொடுமைகளை விவரித்து உங்களால் 1000 பக்கங்களில் எழுத முடியுமானால், சிறப்புகளை சொல்லி என்னால் லட்சம் பக்கங்கள் எழுத முடியும்.


  அனானி!

  பார்க்காமல் பத்திரிகைக்கு எழுதமுடியுமா?

  ReplyDelete
 5. what about other then Chennai corporate school? does they have all facility?
  Like fees are same like rs 148 or different? tuition fees, free meal and dress, computer education, spoken English?

  if you give more details, it will help for us. we are (working)planning to help them from 6th to 12th year student from our friends level.

  ReplyDelete
 6. மேக்!

  மற்ற மாநகராட்சிப் பள்ளிகளிலும் இவற்றில் பெருமளவு வசதிகள் இருக்கலாம். ஆனால் சென்னைப் பள்ளிகள் அளவுக்கு நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை.

  கட்டணம் அடிப்படையில் மட்டும் பெரிய வித்தியாசம் நிச்சயமிருக்காது என்று சொல்லமுடியும்.

  ReplyDelete
  Replies
  1. நான் சென்னைக்கு வேலை பார்க்க வரவேண்டியுள்ளது. எனக்கு சென்னை அரசு பள்ளிகள் உள்ள விபரங்களை யாராவது தெரிவிக்க முடியுமா? நண்பர்களே! எனக்கு
   என் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்கத்தான் விருப்பம். ஆனால் அரசு பள்ளிகளிலுடன் நல்ல வாழ்விடத்தையும் அமைத்து பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க ஆசை.
   யாருக்காவது சென்னை பள்ளிகள் உள்ள ஏரியாக்கள் தெரிந்தாலோ அதை தெரிந்து கொள்ள ஏதாவது வெப்சைட் இருந்தாலோ எனக்கு தெரிவிக்கவும். நன்றி! இது எனது நம்பர் 9943476587. இது எனது மெயில் முகவரி : srinesiga@gmail.com

   Delete
 7. உண்மையிலேயே அருமையான தகவல், நிறைய படித்தவர்களும் இந்த கோணத்தில் யோசிப்பதில்லை.

  எனக்கு தெரிந்து தனியார் பள்ளிகள் எல்லாவற்றையும் தடை செய்து, படிப்பை வியாபாரம் ஆவதைத் தடுத்தால் தான் இது முடிவுக்கு வரும்.

  இருந்தாலும் யார் பூனைக்கு மணி கட்டுவது ?

  ReplyDelete
 8. சென்னை பள்ளிகளின் தரத்தை அரசு பன்மடங்கு உயர்த்தி இருக்கிறது.
  அதே போல் ஆசிரியர்களுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு
  அவர்களும் முன்பை விட உற்சாகத்தோடு பாடம் நடத்துகிறார்கள்.

  ஆனால் இதில் பின்னடைவு ஏற்படும் ஒரு இடம் அதில் பயிலும் சில குழந்தைகள்.
  அவர்களின் குடும்ப சூழல்...பெற்றோர் அவர்களை பள்ளிக்கு அனுப்பும் நோக்கம்.

  பெற்றோர் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கத்தோடு நன்றாக படிக்கவேண்டும்
  என்று பிரியப்பட்டு அதை தங்கள் குழந்தைகளுக்கு அறிவுறுத்தினால்
  கலெக்டர் கமிஷனர் எல்லாம் மாநகராட்சி பள்ளிகளிலிருந்து உருவாக
  வேறெதுவும் தடையாய் இருக்க வாய்ப்பில்லை.

  ReplyDelete
 9. அசோக்நகர் பெண்கள் பள்ளி ஒரு நல்ல உதாரணம்..அங்கு இடம் கிடைப்பதே கஷ்டம் லக்கி...

  ReplyDelete
 10. //////Siva Subramaniam said...
  சென்னையை விட சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள நடு மற்றும் மேல் நிலை பள்ளிகள் நிலைமை மிகவும் மோசமானது. பள்ளிகளில் வகுப்பு எதும் நடைபெறாது. கண்டிப்பாக வகுப்பு ஆசிரியரிடம் ட்யூசன் சேர வேண்டும். இல்லையென்றால் அந்த வருடம் பெயில். இந்த மாதிரி கொடுமைகளை விவரித்து 1000 பக்கம் புத்தகமே எழுதலாம்.
  //////////

  ///////////யுவகிருஷ்ணா 1:13 PM, April 26, 2010
  சிவசுப்ரமணியம்!

  அரசுப்பள்ளிகள் குறித்து இவ்வளவு அவநம்பிக்கை தேவையில்லை என்பது என் கருத்து. கொடுமைகளை விவரித்து உங்களால் 1000 பக்கங்களில் எழுத முடியுமானால், சிறப்புகளை சொல்லி என்னால் லட்சம் பக்கங்கள் எழுத முடியும்./////////


  நண்பருக்கு வணக்கம் உங்களின் பதிவு சிறப்பாக உள்ளது .
  நண்பர் சிவசுப்ரமணியம் சொல்ல வருவதன் அர்த்தத்தை நீங்கள் தவறாக புரிந்துகொண்டு பதில் அளித்திருக்கிறீர்கள் என்று நான் நினைக்கின்றேன் .

  தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் உண்மை நிலை என்னவென்று உங்களுக்கும் எனக்கும் சரியாக தெரிய வாய்ப்புகள் இல்லை .

  அரசு பள்ளிகளின் பெருமைகள் பற்றியும் சிறப்புகள் பற்றியும் நீங்கள் லட்சம் பக்கங்கள் எழுதலாம் .

  பள்ளி என்பது ஒரு குழந்தைக்கு சிறந்த முறையில் கல்வி அளித்து அதன் வாழ்வை சிறப்பிக்கத்தான் ,சீரழிக்க இல்லை . அப்படிப்பட்ட பள்ளிகளில் அந்த நண்பர் சொல்லும் பல தவறுகள் நடக்கிறது என்றால்
  அது நாம் அனைவரும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒரு விசயம்தானே ?

  அவர் உங்களிடம் இதுபோன்று பல தவறுகள் நடக்கிறது என்று வருத்தத்தில்தான் தனது கோரிக்கையை மறுமொழியில் வைத்துள்ளாரே தவிர ., நீங்கள் சொல்லி இருப்பதுபோல் அரசு பள்ளிகளின் மீதான அவநம்பிக்கை அவர் வார்த்தைகளில் இல்லையே ??

  அதற்கு உங்களின் பதில் அவருக்கு சவால் விடுவதுபோல் தோன்றுகிறது . புரிதலுக்கு நன்றி !


  மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 11. //இதுபோன்ற வசதிகளை ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளால் கூட தங்கள் மாணவர்களுக்கு தரமுடியுமா என்பது சந்தேகமே//

  தர முடியும்.. ஆனால் தர மாட்டார்கள்.

  ReplyDelete
 12. நானும் ஒரு அரசு பள்ளியில் படித்தவன் என்கிற முறையில், நம் அரசு பள்ளிகளின் பெரும் பிரச்சினை அதன் ஆசிரியர்கள் தான். எந்த தனியார் பள்ளிகளிலாவது வகுப்பில் ஆசிரியர் தூங்க முடியுமா ?? ஆனால் அரசு பள்ளியில் இது தினசரி கூத்து. முக்கியமாக தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள். அரசு பள்ளி ஆசிரியர்களை நெறிபடுதவும் கண்காணிக்கவும் அதிகாரிகள் எவரும் இல்லை. இருந்தாலும் தங்கள் கடமையை ஒழுங்காக செய்வதில்லை. மெத்தனம் தான்.

  அதனால் அரசு எத்தனை கோடி செலவழித்தாலும், எவ்வளவு வசதிகள் ஏற்படுத்தினாலும் ஆசிரியர்களின் ஈடுபாடும் திறமையான நிர்வகமுமே பள்ளி மற்றும் மாணவன் தரத்தை உயர்த்தும்.

  தொடர்ந்த கண்காணிப்பு இல்லையென்றால் நீங்கள் சொல்லும் computer lab, spoken English, Library எல்லாமே போட்டோவிற்கு போஸ் கொடுக்க தான் உபயோகப்படும்.

  ReplyDelete
 13. நண்பர்களே!

  இன்றைய கல்வி குறித்த தவறான கற்பிதங்கள் - குறிப்பாக அரசுப் பள்ளிகள் குறித்து - நமக்கு நிறைய இருக்கிறது என்பதையே இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்கள் வாயிலாக உணரமுடிகிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பாக எனக்கும் இதுபோன்ற கற்பிதம் இருந்தது என்பதை சொல்லிக் கொள்கிறேன்.

  மாறாக இங்கே மணிஜீ எழுதியிருக்கும் பின்னூட்டத்தை காணும்போது நம் கற்பிதம் தவிடுபொடியாகிறது அல்லவா? ஒரு மாநகராட்சிப் பள்ளியில் இடம் கிடைப்பதே கடினம் என்ற தன் அனுபவத்தை - பார்த்து உணர்ந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

  இத்தகைய அனுபவம் இங்கே எத்தனை பேருக்கு வாய்த்திருக்கிறது? உங்கள் இல்லத்துக்கு அருகாமையில் இருக்கும் அரசுப் பள்ளியை (நீங்கள் கூட அதில் படித்திருக்கலாம்) கடைசியாக நீங்கள் நேரில் சென்று பார்த்தது எப்போது?

  நாம் பேசிக்கொண்டிருப்பது பழங்கதை. நான் பள்ளியில் படித்தபோது பத்தாம் வகுப்பை கூட மரத்தடியில் நடத்தினார்கள். மூன்று மாதத்துக்கு முன்பாக அப்பள்ளியை நேரில் சென்று பார்த்தபோது நான் அடைந்த இன்ப அதிர்ச்சிகள் ஏராளம். என் வாழ்நாளில் நான் கற்பனையே செய்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை இன்று அப்பள்ளி எட்டியிருக்கிறது.

  தேசம் முழுவதும் அமலாக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் கல்வி திட்டம், தமிழ்நாடு அரசின் செயற்வழி கற்றல் மற்றும் படைப்பாற்றல் கல்வித்திட்டம் மவுனப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. இப்புரட்சியின் விளைவுகள் நமக்கு அடுத்த பத்தாண்டுகளுக்குள்ளாக வெளிப்படையாக தெரியவரும்.

  80களில் தனியாருக்கு கல்வி தாரைவார்க்கப்பட மெட்ரிக்குலேஷன் கல்விமுறை ஒரு காரணமாக இருந்தது. சமச்சீர் கல்வி அறிமுகப்படுத்தப் படுவதின் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையேயான இடைவெளி வெகுசீக்கிரமாக இட்டு நிரப்பப்படும். (குறைந்தது ஐந்து ஆண்டுகளில்)

  ஓரிரண்டு பள்ளிகளை/ஓரிரண்டு ஆசிரியர்களை வைத்து மாநிலம் முழுவதும் கல்வி இப்படித்தான் இருக்கிறது என்று நாம் முடிவெடுத்துவிடக் கூடாது அல்லவா?

  மூன்று மாதங்களுக்கு முன்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளடங்கிய ஒரு கிராமமான கொட்டுக்காரம்பட்டி சென்றிருந்தேன். எந்தவித அடிப்படை வசதிகளுமில்லாத லட்சக்கணக்கான நம் கிராமங்களை போன்றதுதான் அந்த ஊரும்.

  தயவுசெய்து நம்புங்கள். அந்த ஊரின் நடுநிலைப்பள்ளி தரமான பள்ளிகளுக்கு வழங்கப்படும் யூனிசெஃப் நிறுவனத்தின் பத்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறது. அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஒரு இளைஞர். பெயர் ராஜேந்திரன்.

  இதுபோல கடந்த ஓராண்டில் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும், ஆசிரியத் தொழிலை உயிருக்கும் மேலாக நேசித்து பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களையும் கண்டு வருகிறேன்.

  சான்றாக இந்த வலைப்பூவில் இரண்டு பள்ளிகளை பற்றி பதிவிட்டிருக்கிறேன். உங்கள் பார்வைக்காக :

  http://www.luckylookonline.com/2010/02/blog-post_20.html

  http://www.luckylookonline.com/2009/10/blog-post_03.html


  தமிழகத்தில் கல்விப்புரட்சி நடந்து வருகிறது என்பதை தமிழர்கள் தவிர அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

  சில மாதங்களுக்கு முன்பாக இங்கே செயல்வழி/படைப்பாற்றல் முறை சிறப்பாக நடைபெறுவதை கேள்விப்பட்டு, அவர்கள் நாட்டிலும் செயல்படுத்த சீன அரசு ஒரு குழுவை அனுப்பி என்ன நடக்கிறது என்று பார்த்துவிட்டு வரச்சொன்னது தெரியுமா?

  ReplyDelete
 14. So you are going to put your child(ren) in Chennai School only, right?

  ReplyDelete
 15. ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம் என்ற பப்பு இங்கே வேகாது. அசோக் நகர் பள்ளி ஒரு exception . அனேகமாக பெரும்பான்மையான அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி ஒரு பொழுது போக்கு மையம். அனேக வாத்திகளுக்கு கந்து வட்டி முதல் கடப்பா கல்லு வரை சைடு பிசினஸ் கண்டிப்பாக உண்டு. ஒரு வாரத்திற்கு சேர்ந்தாற்போல் வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு போவது மிக சாதாரணம். மதம் மற்றும் சாதி சங்கங்களில் பொறுப்பான பதவி வகிப்பார். தன முயற்சியால் எதாவது செய்து முன்னேற துடிக்கும் மாணவ மாணவியரை கேலி பொருளாக்கி இன்பம் காண்பது அவர்கள் பொழுது போக்கு. ஒரு அரசு பள்ளி ஆசிரியையின் மகன் என்ற முறையில் எனக்கு தெரிந்தவை ஏராளம்.

  ReplyDelete
 16. லக்கி...பள்ளிகளின் இன்பிரா ஸ்ட்ரக்ச்சர் முன்னேறி இருந்தாலும் பள்ளியின் தரம் உயர அதில் பயிலும் மாணவர்களின் பின்னணியும் ஒழுக்கமும்
  அவசியம் இல்லையா?
  ஒரே கேள்வி பி.வி.ஆர் சினிமாஸ் ஏன் வட சென்னையின் ராயபுரத்திலோ வியாசர்பாடியிலோ வரவில்லை?

  ஏன் பணக்காரர்கள் குவியும் பிரதேசத்தில் அது அமைக்கப்படுகிறது?

  ReplyDelete
 17. //ஒரு அரசு பள்ளி ஆசிரியையின் மகன் என்ற முறையில் எனக்கு தெரிந்தவை ஏராளம்.
  //


  சென்னையில் அப்படி ஒரு அரசு பள்ளியை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம்.
  சென்னை மாநகராட்சியில் ஆசிரியையாக இருபத்தைந்து வருடம் குப்பை கொட்டி வரும் ஆசிரியையின் மகன் என்ற முறையில் கேட்கிறேன்.

  ReplyDelete
 18. //ஒரே கேள்வி பி.வி.ஆர் சினிமாஸ் ஏன் வட சென்னையின் ராயபுரத்திலோ வியாசர்பாடியிலோ வரவில்லை?//

  விசா நிஜமாகவே எனக்கு இந்த கேள்வி புரியவில்லை. ராயபுரத்தில் ஐட்ரீம்ஸ் இருக்கிறது.

  அதுவுமில்லாமல் பி.வி.ஆர், ஐனாக்ஸ் இவற்றை சுற்றி பங்களாக்கள் அதிகமிருப்பதை விட குடிசைகளும், நடுத்தர குடியிருப்புகளே அதிகம்.


  திரு. கண்ணன்!

  எல்லா ஆசிரியர்களுமே கந்துவட்டி விடுகிறார்களா? சாதிசங்கம் வைத்திருக்கிறார்களா?

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி நிச்சயமாக நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்குதான் ஒத்துவராது.

  நீங்கள் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையின் மகனாக இருக்கலாம். எங்கள் குடும்பத்திலும் ஆசிரியர்கள் உண்டு. கிட்டத்தட்ட எல்லா குடும்பத்துக்குமே நெருங்கிய உறவிலோ, நட்பிலோ ஆசிரியர்கள் இருப்பார்கள். எனவே நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கு எந்த சிறப்புச் சலுகையும் தரமுடியாது :-)

  ReplyDelete
 19. உங்களுக்கு புரியவில்லை என்பது என் துர்ரதிர்ஷ்டம்.
  இதை பின்னூட்டத்தில் புரிய வைப்பதும் கொஞ்சம் கடினம்.

  ஐ டிரீம்ஸ் இருப்பது நீங்கள் சொல்லித்தான் கேள்வி படுகிறேன்.

  பி.வி.ஆர் ஐநாக்ஸ் இவற்றை சுற்றி குடிசைகளும் நடுத்தர குடும்பங்களும் இருக்கிறதென்பதை நான் அறிவேன்.
  ஆனால் அவர்கள் அங்கு போய் படம் பார்ப்பதில்லை.

  இடுப்பில் மூக்கு சிந்தும் ஒரு குழந்தையையும், பின்னழுக்கு ஏறிய பள்ளி சீருடையோடு கட்டி அவிழ்க்காத ரிப்பனோடு
  கருப்பாய் இரண்டு பெண் குழந்தைகளை கூட்டிக்கொண்டு கூலி வேலை செய்யும் ஒரு பெண் கையில் காசு இருந்தாலும் ஐநாக்ஸில் போய்
  நெழியாமல் குனியாமல் கம்பீரமாக படம் பார்த்துவிட்டு வர முடியுமா?

  ஆனால் வடசென்னையில் உள்ள சதாரண திரையரங்கில் அவர்கள் அடால் பிடாலாக போய் சந்தோஷமாக சினிமாவை ரசிக்க முடியும்.

  நான் இங்கே சொல்ல வருவது ஏரியா கல்சர். ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு கல்சர் இருக்கிறது. சென்னையில் கூவம் நதி ஓரமாக போய் பாருங்கள்.
  ஏழைகள். அவர்களுக்கென்று ஒரு கலாசாரம். அது அண்ணா நகரில் பிரெஞ்ச் டியூஷன் போகும் பள பள பையனோடு ஒப்பிட்டு பார்த்தால் ?:(

  இந்த ஏற்றத்தாழ்வை நிர்ணையிப்பது பணம் !!

  நான் இந்த உதாரணம் சொல்ல வந்தது எதற்கு என்றால் ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்கும் குழந்தைகள் அவர்கள் வளரும் சூழலுக்கு ஏற்ப வேறுபடுகிறார்கள்.
  எனவே சென்னை பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்தாலும் இந்த ஏழை குழந்தைகளின் வாழ்க்கை தரம் உயராததால் அவர்களுக்கு பெற்றோரிடமிருந்து
  போதிய கண்காணிப்பும் பேணலும் கிடைக்காத காரணத்தால் பள்ளிகள் தங்களின் முன்னேற்ற பயனை முழுமையாக அடைய முடியாமல் போகிறது என்பதை சுட்டி காட்டவே.

  நீங்கள் லோக்கல் சினிமா தியேட்டர் - வட சென்னை குறிப்பாக போனால் படிக்கட்டு மூலைகளில் பான்பாராக் துப்பி வைத்திருப்பார்கள். ஐநாக்ஸில் அது முடியுமா?

  ஏன் துப்புகிறார்கள் என்பது வேறு. அது ஏரியா கல்சர். :)  இது உங்கள் கருத்துக்கு எதிரான விவாதம் இல்லை என்ற போதும் வெகு நாளாக என் மனதில் உறுத்திக்கொண்டிருக்கும் விஷயம் என்பதால் இங்கே சொல்லிவிட்டேன்.

  ReplyDelete
 20. உங்கள் வாதம் புரிகிறது விசா.

  ஆனால் இக்கட்டுரை யாரை விளித்து எழுதப்பட்டிருக்கிறது என்று பார்க்கவும்.

  //சென்னையைச் சேர்ந்த இருபத்தெட்டு வயது கல்யாணியின் சொத்து வறுமை மட்டுமே. கணவருக்கு நிரந்தரமான வேலை இல்லை. இரண்டு குழந்தைகளை காப்பாற்ற வேண்டும். அவர்களை படிக்கவைக்க வேண்டும். வேறு வழியில்லை. நான்கைந்து வீடுகளில் பத்து பாத்திரம் தேய்த்து குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் சேர்க்கிறார் கல்யாணி.//

  இதுபோன்ற கல்யாணிகளும் ஐனாக்ஸில்தான் தன் குழந்தை படம் பார்க்கவேண்டும் என்று தனது வறுமைக்கு மீறி கடன் வாங்கி செலவழிக்கக் கூடாது இல்லையா?

  அமைந்தகரை லட்சுமியிலேயே டி.டி.எஸ். வந்துவிட்டது. நமக்கு ஐனாக்ஸ் தேவையில்லை என்பதை என் அறிவின் எல்லைக்குட்பட்டு எழுதியிருக்கிறேன்!

  ReplyDelete
 21. //அமைந்தகரை லட்சுமியிலேயே டி.டி.எஸ். வந்துவிட்டது. நமக்கு ஐனாக்ஸ் தேவையில்லை என்பதை என் அறிவின் எல்லைக்குட்பட்டு எழுதியிருக்கிறேன்!//

  :)
  Fantastic reply!!! I love it.

  Thanks
  VISA

  ReplyDelete
 22. //அமைந்தகரை லட்சுமியிலேயே டி.டி.எஸ். வந்துவிட்டது. நமக்கு ஐனாக்ஸ் தேவையில்லை என்பதை என் அறிவின் எல்லைக்குட்பட்டு எழுதியிருக்கிறேன்!//

  நீங்கள் சொல்வது தியேட்டர் க்கு வேணா சரிப் பட்டு வரலாம்.

  ஆனால் எல்லாவருக்கும் ஒரே பள்ளிக் கூடம் தான் இருக்க வேண்டும்.

  அப்போது தான் கீழ் மட்டத்தில் உள்ளவரும், மற்றவரும் எல்லாவற்றையும் படிக்க முடியும், பள்ளியில் கூட ஏற்றத்தாழ்வு பார்ப்பது இன்றைய சமூகத்தின் சாபம்.

  ReplyDelete
 23. கிருஷ்ணா!

  உங்கள் கனவு உயர்ந்த நோக்கம் கொண்டது. ஆனால் உலகமயமாக்க சூழலில் உடனடியாக சாத்தியமில்லை.

  ReplyDelete
 24. கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு...

  ReplyDelete
 25. நிச்சயமாக சாத்தியம்தான். ஒரு சட்டம் ஒரே ஒரு சட்டம். எல்லா அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பிள்ளைகள்/பேர பிள்ளைகளும் அரசு கல்வி நிலையத்தில்தான் படிக்க வேண்டும் என்ற சட்டம் - எல்லாவற்றையும் மாற்றிவிடும்

  அன்புடன்
  ராமசந்திரன்

  ReplyDelete
 26. அருமை

  ஆனால் லாஜிக் இடிக்கு

  சென்னை MAYAR அவர் வாரிசுகள் அங்கு படிக்க வைப்பரா?

  இல்ல தமிழ் நாட்டின் முதல் குடும்ப வாரிசுகள் அங்கு படிக்குமா?
  அப்படி செஞ்சா மக்களுக்கு நம்பிக்கை வரும்.

  அவுக மட்டும் DONBASCO & CHURCHPARk ல படிக்க்னும்.

  என்ன ****ரு நாயம் இது

  ReplyDelete
 27. அன்பின் லக்கி,

  சென்னை பள்ளிகளில் மாறுதல்கள் 2001-லிருந்தே ஆரம்பித்துவிட்டன.

  அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் கணினி வசதி 2001-லிருந்தே இருக்கின்றது.

  கோடம்பாக்கம் ஆண்கள் அரசு பள்ளியிலும் இடம் கிடைப்பது மிகவும் கடினம்.

  அரசு நிதிஉதவி பெறும் பலதனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகவே நடைபெறுகிறது.

  மாநகராட்சி ஆரம்ப பள்ளிகள மேனினை பள்ளிகளை விட சற்றே சரியாக செயல்படாமலிருக்கலாம்.

  அரசு மாநகராட்சி பள்ளிகளில் டியூஷன் படிக்குமாறு மாணவர்கள் வற்புறுத்தப்படுவதில்லை.

  சில வருடங்களுக்கு முன்பு இப்பள்ளிகளில் சுற்றுபுரம் தூய்மையாக இல்லாமல் இருந்தது.இப்பொழுது எப்படியென்று தெரியவில்லை.

  கான்வெண்ட் என்ற பெயரில் மொட்டைமாடிகளில் சிமிண்ட் ஷீட் போட்ட டப்பா பள்ளிகளில் படிப்பதை விட காற்றோட்டமான விசாலமான அரசு பள்ளிகளில் படிக்கலாம்.

  அன்பின் விசா,

  பி.வி.ஆர் இல்லாமல் இருப்பது ஒன்றும் பெரிய இழப்பெல்லாம் கிடையாது.

  அன்புடன்
  அரவிந்தன்

  பெங்களூர்

  ReplyDelete
 28. பார்த்த‌சார‌தி5:21 AM, April 27, 2010

  யுவா
  நான் ஒரு கிராம‌த்து ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ன்..

  என்னால் உறுதியாக‌ சொல்ல‌ முடியும்...எங்க‌ள் ப‌ள்ளி ஒரு முன்னுதார‌ணம்...

  எங்கள் தெருவில் ம‌ட்டும் 15 பேர் பொறியிய‌ல் ப‌டிப்பை முடித்த‌வ‌ர்க‌ள்.

  எங்கள் கிராம‌த்தில் மொத்த‌ம் 300 பேராவ‌து இளங்க‌லை ப‌ட்ட‌ம் பெற்ற‌வ‌ர்க‌ள்....

  ReplyDelete
 29. லதானந்த்9:34 AM, April 27, 2010

  நல்ல எழுத்து நடை. நாளுக்கு நாள் மெருகேறுகிறது. வாழத்துக்கள்

  ReplyDelete
 30. லக்கி இதை படிக்க சந்தோஷமாதான் இருக்கு ஆனா, அந்த பள்ளிகளில் படிக்க வரும் மாணவர்களை கவனிக்க வேண்டும். அவர்களுக்கு படிக்க வேண்டும் என்ற உத்தேசம் ஏதும் இல்லாது வருகிறார்கள். நல்லதை விட நிறைய கேட்ட விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். அவர்களின் ஒழுக்கம் நன்றாக இருந்தால் பணம் உள்ளவர்களும் வருவார்கள். அவர்களின் நடத்தை மாறவேண்டும். இல்லையெனில் இந்த கட்டுரை வாழும் வள்ளுவருக்கு ஒரு ஜால்ரா.

  ReplyDelete
 31. லக்கி,

  முதலில் இந்த பதிவுக்காக என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

  நம்மிடம் மண்டிக்கிடக்கும் எதிர்மறை எண்ணங்கள், கவர்ன்மெண்டுன்னாலே இப்படித்தானயா என்ற கேவலமான எண்ணங்கள் என் எல்லாவற்றையும் தவிடு பொடியாக்கி விட்டீர்கள்.

  இதே சுறுசுறுப்பு, இதே லட்சிய தாகம் அரசின் மற்ற துறைகளையும் தொற்றிக் கொண்டால், பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடுதான்.

  ReplyDelete
 32. //இல்ல தமிழ் நாட்டின் முதல் குடும்ப வாரிசுகள் அங்கு படிக்குமா?
  அப்படி செஞ்சா மக்களுக்கு நம்பிக்கை வரு/

  துணை முதல்வர் அவரக்ள் அப்டித்த பள்ளிக்கு என்னுடன் வருகிறீர்களா? கோபாலபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி..

  செம பதிவு சகா

  ReplyDelete
 33. சின்னத்தம்பி!

  நான் விதவை மறுமணத்தை ஆதரித்துப் பேசினால், ஒரு விதவையை மணப்பீர்களா என்று கேள்வி எழுப்புவீர்கள் இல்லையா? அதே மாதிரி அபத்தமான ஒரு கேள்வியை முன்வைத்திருக்கிறீர்கள்.

  மேயரின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. அவரிடம் நிறைய பணமிருந்தால் அமெரிக்காவுக்கு அனுப்பிக்கூட படிக்க வைப்பார். அது அவருடைய விருப்பம்.

  அதற்காக மேயரின் குழந்தைகள் அமெரிக்காவில் படிக்கிறார்களே என்று நானும் என் வீட்டை விற்று, கிட்னியை அடமானம் வைத்து என் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியுமா என்ன?

  ‘விரலுக்கேத்த வீக்கம்' என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகிறது. நடுத்தர மக்கள் கடனாளியாகி தனியார் பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை. மாநகராட்சிப் பள்ளிகளே தரமுயர்த்தப் பட்டுள்ளன என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

  இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? மேயரின் குழந்தைகள் எங்கு படிக்கிறார்களோ அங்குதான் எல்லோரும் படிக்க வேண்டுமா என்ன?

  பின்னூட்டமிட்ட மற்றவர்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 34. A timely article..Wonderful.you have created a good image on govt schools...If SAMACHEER EDUCATION "implemented "many good changes in the educational system will come and stay..But already majority private schools are planing to shift to CBSE SYLLABUS.gOVT MUST INTERFERE AND DO SOMETHING...YOU WRITE ANOTHER ARTICLE ON THIS SUBJECT AGAIN pLEASE.

  ReplyDelete
 35. கடந்த பின்னூட்டத்தில் ஏற்பட்ட பல பிழைகளுக்கு வருத்தம் தெரிவித்து மீள பின்னூட்டமிடுகிறேன். மன்னிக்கவும்.
  கவி.செங்குட்டுவன்.
  அய்யா, வணக்கம். தங்களின் சென்னைப் பள்ளிகள் பற்றிய பதிவும் அதைத் தொடர்ந்து வந்துள்ள பின்னூட்டங்களும் அதற்கு தாங்கள் அளித்துள்ள பதில்களும் கண்ணுற்றேன். உண்மையிலேயே மிகவும் நெகிழ்ந்துதான் போனேன். காரணம் என்ன தெரியுமா? தங்களின் கருத்துக்களும், எதிர்பார்ப்புகளும் இன்றைய இளைஞர்களின் வழிகாட்டியாய் இருக்கும் மரியாதைக்குரிய முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவர் அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கணவை ஒத்ததே தங்களின் எதிர்பார்ப்புகள் வெகு விரைவில் மக்களின் மனநிலை மாறும் என்னைப் போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மனம் குளிரும்.
  தங்களின் பின்னூட்டத்தில் எனது பள்ளியான கொட்டுகாரம்பட்டி அரசுப் பள்ளி பற்றிய கருத்தை பகிர்ந்துக் கொண்டமைக்கு எனது நன்றியைத் தெரிவிக்கும் அதே வேளையில் ஓர் சிறு தகவலையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆம் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசியத் திறனாய்வுத் தேர்வில் எமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்வு பெற்ற மாணவர்கள் மொத்தம் 7 பேர் மட்டுமே. அதில் எமது பள்ளியைச் சேர்ந்த மாணவி மு.சூரியப் பிரியாவும் ஒருவர். இதில் கலந்துக் கொண்டவர்கள் தனியார் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகள் ஆகும். மாவட்டத்திலேயே அரசு நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு பெற்ற ஒரே மாணவி எமது பள்ளி மாணவியே.
  அன்பான பெற்றோர்களே தனியார் பள்ளிகளில் சேர்த்த உமது குழந்தைக்ளுக்கு நீங்கள் கொடுக்கும் அக்கறையில் சுமார் 25% லிருந்து 50% மட்டும் அரசு பள்ளிகளில் சேர்க்கும் உமது குழந்தைகளுக்கு கொடுங்கள். அவர்களை வாணத்தைத் தொட்டு விடச் செய்கிறோம். பூமியை ப்ரட்டி போடச் செய்கிறோம்.

  ReplyDelete
 36. ராஜேந்திரன் சார்!

  நலமா?

  சூரியப் பிரியாவுக்கு வாழ்த்துகள். தொடர்ச்சியாக தங்கள் பள்ளியின் வலைப்பூவை வாசித்து மகிழ்கிறோம்.

  ReplyDelete
 37. யுகி

  வழக்கம் போல் தரமான பதிவிற்கு நன்றிகள் பல. சென்னை பள்ளிகளுக்கு நேரில் சென்று பார்த்து நீங்கள் அளித்த விவரம் மனதிற்கு மிக மிக மகிழ்ச்சியை தருகிறது.

  சென்னை மேயருக்கு மனதார பாராட்டுகள் பல....

  நன்றி

  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 38. Govt schools ippo kojam paravillai enpathe unmai. Atharku karanam respective schools headmasters kadina uzhaipu than. Ration card,voter list,census etc work pakkave govt teachersku neram pothathu. Govt school ellam tharama irukkuna why all politicians mat school,eng college start panranga? Do u need list? Eg., anandavalli mat school-urapakkam saidai kittu ,siga res school - vilupuram ponmudi.

  ReplyDelete
 39. அவர் படிச்ச அப்ப metriculation கிடயாது.
  நான் கெட்பது அவர் குடும்பதில் இப்ப படிக்குற் பிள்ளைகள் எஙக படிக்கு?????????

  உன்மையில் எல்லா அரசு பள்ளிகளும் இப்படி இயஙவெண்டும்

  **********ashok nagar girls school is an example********

  but this is an exception exceptions are not examples.

  இப்ப அரசியல்வாதி, அரசு ஊழியர் குடும்ப வாரிசுகள் அஙக படிக்க்ட்டும்?

  எல்லா அரசு ஆசிரியருக்கும் electronic id card (finger print)கொடுத்து வெலைக்கு வர சொல்ல
  இந்த அரசு சட்டம் போடுமா?
  முடியாது? என்னா அவ்னக் பொடும் postel vote & கள்ள் வோட்டு போட
  அவஙக சப்பொர்ட் வெனும்.
  நான் நெல்லை மாவட்டம். எஙக ஊரில் முக்குக்கு முக்கு டாஸ்மாக் இருக்கு. பாதி வாத்தி அஙக தான் இருக்கார்,
  பொம்பள் பிள்ளைக படிக்க இடத்தில
  கக்கூஸ் இல்ல
  2000 பேர் படிக்க இடதில 5 கக்கோசு.

  ஆனா 1000 பெர் இருக்க ஓருக்கு 2 டாச்மாக்.

  எங்க ஊரில் நான் 88ஆம் வர்சம் பாதத பள்ளிக்கோடம் இப்ப கூட
  2 கட்டடம் மட்டும் தான் கோடி இருக்கு.(1950ல் ஆரம்பித்தது),
  இதுக்கு ஒரு வழி தான் சமச்சீர் கல்வி மற்றும் ஆசிரியர் திறன் ஆய்வு( எப்ரல்& may). கண்டிப்பாக
  ஆங்கில பயிற்சி மெட்ரிக் பள்ளிக்கு இனையாக இருக்க வெண்டும் (ஆசிரியர்க்கும் சேர்த்து).

  அரசு கண்டிப்பாக ஆசிரியர் , ச.ம.உ. குடும்ப, I.A.S,I.P.S குடுமப வாரிசுகள் அரசு பள்ளிடில் தான் படிக்கனும் என்ர்று சட்டம் பொடட்டும்.
  அப்ப எல்லா அர்சு பள்ளியும் எப்ப்டி இருக்கும் தெரியுமா?

  ஆனா லக்கி
  நீஙக
  அடுத்து அரசு மருத்துவமனை பத்தி பதிவு பொடுஙக.

  ஆளுங்கட்சி.,எதிர் கச்சி எல்லர்ரும் தனிய்யார் மருதுவமனை ஏன போராஙக? எண்டும் கேட்பென்.

  ஆனாலும் "" கல்வி அமைச்சர் தஙகம் தென்னரசு நன்றாக செயல்படுகிரார்"" என்னொட கருத்து.

  ReplyDelete
 40. இன்றைய இளைஞர்களின் வழிகாட்டியாய் இருக்கும் மரியாதைக்குரிய முன்னால் இந்தியக் குடியரசுத் தலைவர் அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் கணவை ஒத்ததே //

  வழிமொழிகிறேன் தோழர்! ;-)

  ReplyDelete
 41. நல்ல பதிவு ! PRE KGக்கு 1 லட்சம் கொடுத்து தனியார் பள்ளியில் சேர்த்தால் தான் குழந்தை நல்லா படிப்பான் என்பதில் உண்மையில்லை
  தரமான் நல்ல அரசு பள்ளிகளும் உண்டு ! எங்க ஊரில் இருந்து பெரிய ஆள ஆனா எல்லாரும் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில்தான் படித்தாங்க..ஆண்டுக்கு மினிமம் மருத்துவர்கள்.சராசியாக...ஆனால் கடந்த சில வருடங்களா என்னாச்சுனா நல்ல அரசு ஆசிர்யர்கள் VRS வாங்கிட்டி ஒரு தனியார் பள்ளி ஆரம்பிச்சாட்டாங்க ! இப்ப அந்த பள்ளிகூட போட்டி போட்டு அரசு பள்ளி கொஞ்சம் தள்ளாடுது..மக்கள் எல்லாம் இப்ப கொஞ்ச காசு புலங்கிறதால..தனியார் பள்ளியில பெருமைக்காக சேர்க்கிறாங்க..எங்க போய் அவன் முட்டை வாங்கினாலும் பெருமையா சொல்லுவாங்க போல !

  ReplyDelete
 42. விஜய்7:09 PM, May 01, 2010

  இலவசமாகவும், மிக குறைந்த பணத்தில் அதே சமயம் நல்ல தரத்தில் ஒரு அரசாங்கம் தரவேண்டியது கல்வி மருத்துவம் சுகாதாரம் போன்ற அடிப்படை வசிதகளைத்தானே தவிர டிவி நிலம் வீடு போன்றவற்றை அல்ல. அந்த வகையில் அரசுப்பள்ளிகளில் நீங்கள் சொன்ன கட்டணங்கள் மிகவும் மகிழியளிக்கின்றன. அமெரிக்க போன்ற முன்னேறிய நாடுகளில் கூட அரசுப்பள்ளிகள் கட்டணம் மிகவும் அதிகம். அங்குள்ள கறுப்பின மக்களுக்கு இன்றும் அடிப்படை பள்ளிக்கல்வி கட்டணங்கள் ஒரு சுமைதான்.

  வருங்காலத்தில், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஓரளவு சாதித்தால், அதை மிகவும் விளம்பரப்படுத்த வேண்டும், அப்போது தான் நடுத்தர மக்களின் கான்வென்ட் மோகமும் தனியார் பள்ளிகளின் அராஜகமும் குறையும்.

  எது எப்படியோ, அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எந்த விதத்திலும் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருந்தால், மிக மிக மகிழ்ச்சி. அநேகமாக நிலைமை அப்படிதான் என்று நினைக்கிறேன்.

  லக்கி, இப்படி ஒரு உருப்படியான பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!

  ReplyDelete
 43. அருமையான கட்டுரை.. ஆனால் இந்த கருத்துக்கள் கல்யாணிகளிச் சென்றடைய என்ன செய்யலாம்..

  கல்யாணி பின்பற்றுவது அவர் வேலை பார்க்கும் வீடுகளைத்தான்.. நம் வீடுகள்தாமே அவை.. நம் வீட்டிலும் கல்யாணி இருக்கலாம்..
  நாம் மாறுவோம்.. கல்யாணிகள் மாறுவர்..

  ReplyDelete
 44. நல்ல பதிவு. நான் ஏற்கனவே இதைப் படித்துவிட்டேன். ஆனால் நான் கேட்பது சென்னைப் பள்ளிகள் உள்ள இடங்களின் விலாசம் தெரிந்தால் நான் அந்த இடங்களை பார்வையிட
  முடியும். அதற்க்காகத்தான் உங்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். நன்றி!

  ReplyDelete