April 21, 2010

ஆடிட்டர் ஆக ஆசையா?

ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.

ஆடிட்டர் ஆக சி.ஏ., (Chartered Accountant) தேர்வு எழுதியிருக்க வேண்டும். நம் நாட்டில் இத்தேர்வினை நடத்தும் அமைப்பு ஐசிஏஐ என்று அழைக்கப்படும் இன்ஸ்டிடியூட் ஆஃப் சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்ஸ் ஆஃப் இந்தியா. சார்ட்டர்ட் அக்கவுண்ட் சட்டம் 1949ன் படி இந்திய பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு இது. தேர்வுகள் நடத்தவும், ஆடிட்டர் லைசென்ஸ்கள் வழங்கவும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அமைப்பு இதுமட்டுமே. உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான தொழிற்முறை கணக்குப் பணியாளர்களை வைத்திருக்கும் அமைப்புகளில் இதற்கு இரண்டாவது இடம்.

கம்பெனி சட்டம் 1956 மற்றும் வருமானவரிச் சட்டம் 1961ன் படி நிறுவனங்களின் கணக்கு வழக்கு ஆடிட்டர்களால் பரிசோதிக்கப்பட்டு சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆடிட்டர் சான்றிதழ் இல்லாத தணிக்கை அறிக்கைகள் அரசால் அங்கீகரிக்கப்படாது. எனவே ‘ஆடிட்டர்’ என்பவரின் பணி இந்தியாவின் இன்றியமையாத பணிகளில் ஒன்று. இவ்வளவு முக்கியமான பணி அது என்பதால்தான் சி.ஏ., தேர்வு என்பது இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

சரி. ஒருவர் ஆடிட்டர் ஆக என்ன தகுதி? என்னென்ன தேர்வுகள் எழுதவேண்டும்? தோராயமாக எவ்வளவு செலவாகும்?

சென்னை மயிலாப்பூரில் முப்பது வருடங்களாக இத்தேர்வுக்கு பயிற்சி வழங்கிவரும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வரும் ஆர்.நாகராஜன் விளக்கமளிக்கிறார். இவர் ஐசிஏஐ அமைப்பின் தென்மண்டல தலைவராகவும் இருந்தவர்.

நீங்கள் ஆடிட்டர் ஆக முடிவெடுத்துவிட்டால் மூன்று கட்டங்களை கடந்தாக வேண்டும். பத்தாம் வகுப்பு முடித்ததுமே ஒருவர் ஐசிஏஐ அமைப்பில் தனது பெயரை தேர்வுகளுக்காக பதிந்துவிடலாம். ஆனாலும் முதல்கட்டத் தேர்வினை எழுத பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது விதி. பத்தாம் வகுப்பு முடித்த மாணவன் தனது மேல்நிலைக் கல்வியை தொடர்ந்துகொண்டே முதல்கட்டத் தேர்வுக்கும் தன்னை தயார் செய்துக் கொள்ளலாம்.

முதல் கட்டமாக நடத்தப்படும் தேர்வு பொதுவானது. மாணவர்கள் இத்தேர்வினை எதிர்கொள்ள போதுமான அறிவோடு இருக்கிறார்களா என்று அறிவதற்காக நடத்தப்படுவது. சி.பி.டி. என்று அழைக்கப்படும் Common Proficiency Test இது. ஒரு கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு, சரியான பதிலை தேர்வு செய்யும் முறையில் இது நடத்தப்படும். மொத்தம் 200 கேள்விகள். சரியான ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு மதிப்பெண். ஒவ்வொரு தவறான விடைக்கும் 0.25 மதிப்பெண் கழிக்கப்படும். குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண் பெற்றவரே அடுத்தக்கட்டத்துக்கு நகர தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

அடுத்தகட்டமாக நடைபெறும் தேர்வு ஐ.பி.சி.சி. என்று அழைக்கப்படும் Integrated professional competence course. முதல்கட்டத் தேர்வு ஒரு வாசல் என்று எடுத்துக் கொண்டோமானால், இந்த இரண்டாம் கட்டம்தான் உண்மையில் ஒரு ஆடிட்டரை உருவாக்கக்கூடிய காலக்கட்ட்த்தினை கொண்டிருக்கிறது. சி.பி.டி. முடிந்து ஒன்பதுமாத காலம் இத்தேர்வுக்காக தயார் செய்துகொள்ள அவகாசம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே நூறு மணி நேரம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சியும், முப்பத்தைந்து மணிநேர முனைப்புப் பயிற்சியும் (Orientation programme) ஐ.சி.ஏ.ஐ. நிறுவனத்தால் வழங்கப்படும்.

ஐ.பி.சி.சி. தேர்வில் மொத்தம் ஏழு பாடங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் 100 மதிப்பெண்கள். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற்றவர்களே தேர்ச்சியடைந்தவர்களாக மதிப்பிடப் படுவார்கள். ஏழு பாடங்களும், இரண்டு பிரிவுகளாக பிரித்து தேர்வுகள் நடத்தப்படும். ஒவ்வொரு பாடத்திலும் 40 மதிப்பெண் எடுத்திருந்தாலும் கூட, ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் இலக்கை எடுத்திருக்க வேண்டும்.

இத்தேர்வில் தேறிவிட்டதுமே, நேரடி களப்பயிற்சிக்கு யாராவது ஆடிட்டர்களிடம் பணிக்கு சேரவேண்டும். அல்லது நிறுவனங்களிலும் கணக்கியல் தொடர்பான பணிகளில் சேரலாம். இந்த பயிற்சிக் காலத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அந்நிறுவனங்கள் எவ்வளவு வழங்கவேண்டும் என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோல்கள் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்டத்தேர்வு மற்றும் மூன்று வருட நேரடிப் பணிப்பயிற்சி முடிந்தவர்களே இறுதித் தேர்வு எழுதலாம். பணிப் பயிற்சியில் இருக்கும் கடைசி ஆறு மாதங்களிலேயே இறுதித் தேர்வினை எழுதமுடியும். இறுதித் தேர்வின் ஒரு கட்டமாக பொது நிர்வாகம் மற்றும் திறன் வெளிப்படுத்தும் பயிற்சி ஒன்றையும் முடித்தாக வேண்டும்.

அதன் பின்னரே சி.ஏ. என்று அழைக்கப்படும் Chartered Accountant தேர்வு. இதுவும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படும். ஒரு பிரிவுக்கு நான்கு என்ற அடிப்படையில் மொத்தம் எட்டு பாடங்கள். 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்றாலே தனிப்பாடத்தில் தேர்ச்சி என்றாலும், ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டுமொத்தமாக 50 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டும்.

ஓக்கே. இப்போது நீங்களும் ஆடிட்டர்தான்.

மிகச்சுலபமாக ‘ஆடிட்டர்’ என்று சொல்லிவிட்டாலும், இந்த நான்கு வருடக் காலம் என்பது ஒவ்வொரு சி.ஏ. மாணவனுக்கும் மிகக்கடுமையானது. இன்றியமையாத ஒரு பணிக்கு தேர்ந்தெடுக்கப்படப் போகும் மாணவன் என்பதால் பாடத்திட்டம் மிக நுணுக்கமானதாகவும், சிரமமானதாகவும் இருக்கும். கவனச்சிதறல் இன்றி கற்பவர்கள் மட்டுமே வெற்றிக்கனியை ருசிக்க முடியும். ஆடிட்டர் ஆகிவிட்டால் அதன்பிறகு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பு, வருமானம் இவற்றைப் பற்றியெல்லாம் நாம் சொல்லவே வேண்டியதில்லை. ஏற்கனவே எல்லோருக்குமே தெரியும்.

சி.ஏ. வரை போகமுடியாது. கணக்காளனாக வேலை பார்க்க ஏதாவது படிப்பு ஐ.சி.ஏ.ஐ.யில் இருக்கிறதா என்று கேட்டீர்களேயானால், அதற்கும் ஒரு படிப்பு இருக்கிறது. முதல்கட்டத் தேர்வினை முடித்தவர்கள், இரண்டாம் கட்டத்தில் ஐ.பி.சி.சி. தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக அக்கவுண்டிங் டெக்னிஷியன் கோர்ஸ் (ஏடிசி) என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

+2வுக்குப் பிறகு, கல்லூரியில் வேறு ஏதாவது படித்துக்கொண்டே சி.ஏ., தேர்வு எழுதலாம் என்று சிலர் நினைக்கலாம். அதுபோல எழுதமுடியாது. இரண்டாம் கட்டத்தில் மூன்றுவருட நேரிடைப் பயிற்சி இருக்கிறது இல்லையா? அந்த மூன்று ஆண்டுகள் பயிற்சி எடுக்கும் அலுவலக நேரம் முழுவதிலும், சம்பந்தப்பட்ட மாணவர் பணியாற்ற வேண்டும் என்பது ஐ.சி.ஏ.ஐ.யின் விதி.

எனவே ஏதேனும் பட்டம் படித்துக் கொண்டே சி.ஏ., தேர்வினையும் எழுதவேண்டும் என்று நினைப்பவர்கள், தபால் வழியில் பட்டம் பெறுவதே சரியான முறையாக இருக்கும். இல்லையெனில் பட்டம் முடித்தபிறகு சி.ஏ., தேர்வுக்கு படிக்கலாம். +2 முடித்த ஒருவர் வழக்கமான வழியில் தேர்வுகளையும், பயிற்சிகளையும் முடித்தால் 21 வயதில் ஐ.சி.ஏ.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்ட ஆடிட்டர் ஆகிவிடலாம்.

சரி, செலவு எவ்வளவு ஆகும்?

மொத்தமாக இந்த நான்கு வருட காலத்தில் தேர்வுக்கட்டணம், பயிற்சிக் கட்டணம் எல்லாம் சேர்த்து இன்றைய நிலையில் நாற்பத்தைந்து ஆயிரம் வரை செலவாகும். இதையும் கூட நேரடிப் பயிற்சிக் காலத்தில் பெறும் ஊக்கத்தொகை மூலமாக சரிகட்டி விடலாம். தனியாக கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படிப்பவர்கள் கூடுதலாக எழுபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கும்.

இந்திய ஆடிட்டர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உண்டு. இங்கே சி.ஏ., படித்தவர்கள் வளைகுடா நாடுகளில் பெரிய நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். இக்கல்வி பற்றிய மேலதிகத் தகவல்களை http://www.icai.org என்கிற ஐ.சி.ஏ.ஐ. அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையத்தள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நீங்களும் ஆடிட்டராக வாழ்த்துகள்!

(நன்றி : புதிய தலைமுறை)

11 comments:

 1. மிகவும் பயனுள்ள தகவல் . பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 2. மாணவர்களுக்கான நல்ல வழிகாட்டி கட்டுரை.

  ReplyDelete
 3. எல்லோருமே பொறியியல், மருத்துவம் என ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இது அவசியமான கட்டுரை

  ReplyDelete
 4. good one... lucky....

  ReplyDelete
 5. ACS, ICWA, CFA, .... etc patri ellam eluthi irukkalam. nalla padivu.

  yen marketing, Branding la kooda niraiya kasu parkkalam

  ReplyDelete
 6. நல்ல வழிகாட்டி கட்டுரை இது. நன்றி.

  ReplyDelete
 7. கச்சிதம். இன்னொரு விஷயம், எங்களை போன்ற software கோயிந்துகள் இங்கு அமெரிக்காவில் நல்ல fulltime வேலை கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்க, எனக்கு தெரிந்து நிறைய CA மக்களுக்கு கூப்பிட்டு நல்ல fulltime வேலை குடுக்கிறார்கள். CA படிப்பு US இலும் செல்லும், கிராக்கி உண்டு என்பதற்காக கூறுகிறேன்.

  ReplyDelete
 8. பயனுள்ள தகவலை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள் யுவகிருஷ்ணா !

  ReplyDelete
 9. //ஒரு சின்ன புள்ளி விபரம். இன்றைய இந்தியாவுக்கு குறைந்தபட்சம் ஏழு லட்சம் ஆடிட்டர்கள் தேவை. ஆனால் இருப்பதோ கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே. ஆண்டுதோறும் புதியதாக பத்தாயிரம் ஆடிட்டர்கள் வந்தாலும், ஐந்தாயிரம் ஆடிட்டர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். எனவே என்றைக்குமே இந்த வேலைக்கு தேவை இருந்துகொண்டேயிருக்கும் என்பது நிச்சயம்.//

  இதையும் சொல்லிட்டு,

  //இந்திய ஆடிட்டர்களுக்கு உலகளவில் நல்ல மதிப்பு உண்டு. இங்கே சி.ஏ., படித்தவர்கள் வளைகுடா நாடுகளில் பெரிய நிறுவனங்களில், இலட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் பணிக்கு சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள். //

  இதையும் சொன்னா எப்புடி?

  ReplyDelete
 10. முகிலன்!

  நான் வெளிநாட்டுக்குதான் போவேன். அதுக்கு ஒரே வழி சாஃப்ட்வேர் படிக்கிறதுதான் என்று அடம் பிடிப்பவர்களுக்காக, சி.ஏ., படித்தாலும் போகலான் என்று கன்வின்ஸ் செய்யவே அந்த வரிகள் :-)

  ReplyDelete
 11. தேடிக்​கொண்டிருந்த குறிப்புகள்!
  மிக்க நன்றி யுவா!

  ReplyDelete