22 மார்ச், 2010

வாத்தியார் வீட்டு மாஸ்டர்!

ஒரு விபத்து : கிருஷ்ணாவிடம் எப்போதும் இதே பிரச்சினை. எங்காவது வண்டியை நிறுத்தும்போது சைட் ஸ்டேண்ட் தான் போடுவான். திரும்பவும் வண்டியை ஓட்டும்போது சைட் ஸ்டேண்ட் எடுக்க மறந்துவிடுவான். ஒருமுறை இப்படித்தான் சைட் ஸ்டேண்ட் எடுக்காமல் அதிவேகமாக ஓட்டிச் சென்றான். கோவையின் புறநகர் பகுதியில் அவனது வீடு. ஒரு திருப்பத்தில் வேகத்தைக் குறைக்காமல் திரும்ப, எடுக்கப்படாத சைட் ஸ்டேண்ட் ஒரு கல்லில் மோதி, நிலைத்தடுமாறி, கீழே விழுந்து, வண்டி தேய்த்துக்கொண்டு போக...

பெட்ரோல் காலி : ஜெனிஃபர் தென்மாவட்ட நகரம் ஒன்றில் வசிக்கும் பெண். தனியார் பண்பலை வானொலி ஒன்றில் அறிவிப்பாளர். பணி நிமித்தமாக நடுஇரவில்தான் வீட்டுக்கு திரும்புவார். இயல்பிலேயே பரபரப்பானவர். தன்னுடைய இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட மறந்துவிடுவார். எவ்வளவு பெட்ரோல் டாங்கில் மீதம் இருக்கிறது என்பதை துல்லியமாக அறியமுடியாததே இதற்கு காரணம். ஒருநாள் 12 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். வண்டி நின்றுவிட்டது. பெட்ரோல் சுத்தமாக காலி. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பெட்ரோல் பங்க் எதுவும் அருகில் இல்லை. வீடு இன்னும் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. வண்டியை எங்கும் விட்டுவிட்டும் செல்ல முடியாது. தள்ளிக்கொண்டே 7 கிலோ மீட்டர், நடு இரவில் நடப்பதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பான செயல் கிடையாது...

காற்று புஸ்.. : சலீம்பாய் பெட்டிக்கடைகளுக்கு வெத்தலை, வாழைப்பழம் சப்ளை செய்பவர். சொந்த ஊர் சாயல்குடி. சென்னையில் வியாபாரம் செய்கிறார். தண்டையார் பேட்டையில் தொடங்கி, வண்டலூர் வரை நிறைய பெட்டிக்கடைகள் இவருடைய கஸ்டமர்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 200 கிலோ மீட்டர் வண்டி ஓட்டவேண்டும். வண்டியில் சரக்குகளை ஏற்றி சுற்றிக்கொண்டேயிருப்பார். அன்று இரவு பத்துமணிக்கு பெருங்களத்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இரும்புலியூர் பாலத்தில் ஏறும்போது வண்டியில் லேசான தடுமாற்றத்தை உணர்கிறார். பின் சக்கரத்தில் காற்று குறைவாக இருக்கக்கூடும். இன்னும் நான்கைந்து கிலோ மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும். அங்கே காற்றடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். பாலத்தை விட்டு கீழே இறங்கும்போது ஓட்டமுடியாத அளவுக்கு வண்டி தடுமாறுகிறது. பஞ்சர். பெட்ரோல் பங்க் வரை வண்டியை தள்ளிக்கொண்டு போனால் பஞ்சர் போட்டுவிடலாம். சுத்தமாக காற்று இல்லாத நிலையில் அது சாத்தியமில்லை. ட்யூப் கிழிந்துவிடும். கொஞ்சமே கொஞ்சம் காற்று இருந்தாலும் போதும். அக்கம்பக்கம் எந்த கடையுமில்லை. என்னதான் செய்வது?

செயின் கழட்டிக்கிச்சி : குன்றத்தூரில் வசிக்கும் சங்கருக்கு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தொழிற்சாலையில் பணி. காலையில் 7 மணிக்கெல்லாம் பணியிடத்தில் இருக்க வேண்டும். 6 மணிக்கு எழுந்து இருசக்கரவாகனத்தை உதைத்து, எதிர்காற்று முகத்தில் மோத பறப்பார். அன்று என்னவோ தெரியவில்லை செயின் லொடலொடவென்று சத்தமிட்டுக் கொண்டேயிருந்தது. வண்டியை சர்வீஸ் செய்து 2 மாதம் ஆகிவிட்டது. சர்வீஸுக்கு முன்பாக செயின் லொடலொடப்பது சகஜம். திடீரென வண்டி சுத்தமாக நின்றுவிட்டது. ஆக்ஸிலேட்டரை கொடுத்தால் விரூம்.. விரூம்.. என்று சத்தம் மட்டும் வருகிறது. இறங்கிப் பார்த்தால் செயின் கழட்டிக்கொண்டிருக்கிறது. சைக்கிள் செயினை மாற்றுவது போல சுலபமாக பைக் செயினை மாட்டிவிடமுடியாது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் தொழிற்சாலையில் இருக்கவேண்டும். இதுபோல நடப்பது சங்கருக்கு முதல் முறையல்ல...

நீங்கள் இருசக்கர வாகனம் ஓட்டுபவராக இருந்தால் இதே அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்த எல்லா அனுபவங்களும் உங்களில் ஒருவருக்கே ஏற்பட்டிருந்தால் நீங்கள் மகா துரதிருஷ்டசாலி. ஆயினும் காற்று குறைவது, பஞ்சர் ஆவது, செயின் கழட்டிக் கொள்வது, பெட்ரோல் இல்லாமல் போவதெல்லாம் சகஜம்தானே? இதற்கெல்லாம் பயந்தால் வண்டி ஓட்டமுடியுமா என்று கேட்பீர்கள்.

இதெற்கெல்லாம் மிக எளியத் தீர்வுகள், குறைந்த செலவில் கிடைக்கிறது என்றால் வேண்டாமென்றா சொல்லப் போகிறீர்கள்?

குரோம்பேட்டையில் முப்பது வருடங்களுக்கு முன்பாக சண்முகம் என்ற மெக்கானிக் மிகவும் பிரபலம். 100சிசி வாகனங்கள் வருவதற்கு முன்பான அந்த காலக்கட்டத்தில் மெக்கானிக் கடைகளே அபூர்வம். ஸ்கூட்டர் உள்ளிட்ட எல்லா வகையான வாகனங்களையும் திறமையாக பழுது பார்ப்பார் என்றாலும், சண்முகம் புல்லட் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்தவர். சென்னையில் புல்லட் வைத்திருந்தவர்கள் நிறைய பேர் கம்பெனி சர்வீஸுக்கு கொடுக்காமல், சண்முகத்திடம் வருவார்கள். நேர்மையான மெக்கானிக் என்று பெயரெடுத்தவர்.

இன்று குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் கடை வைத்திருக்கும் மெக்கானிக்குகளில் பெரும்பாலானவர்கள் சண்முகத்திடம் தொழில் கற்றுக்கொண்டவர்கள்தான். இதனாலேயே மெக்கானிக்குகள் மத்தியில் ‘வாத்தியார்’ என்று பெயரெடுத்தார் சண்முகம். இந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட, கஸ்டமர்களும் கூட சண்முகத்தை ‘வாத்தியார்’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். விவரம் புரியாதவர்கள் சிலர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார் என்றுகூட நினைத்ததுண்டு.

அவருக்கு இரண்டு மகன்கள். ஊருக்கே தொழில் கற்றுக்கொடுக்கும் வாத்தியார் தனது மகன்களுக்கு கற்றுக் கொடுத்திருக்க மாட்டாரா? அவரது மகன்கள் மூர்த்தியும், ரவியும் இதே மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டார்கள். இப்போது குரோம்பேட்டை மேம்பாலத்திலிருந்து, சிட்லப்பாக்கம் செல்லும் சாலையில் ‘பாலாஜி சர்வீஸ் சென்டர்’ என்ற பெயரில் கடை வைத்திருக்கிறார்கள்.

கடை என்று சொல்லமுடியவில்லை. ஒரு பெரிய நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு வரும் அளவுக்கு நூற்றுக்கணக்கில் தினமும் இவர்களை தேடி கஸ்டமர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மூர்த்தி நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள, இளையவர் ரவி கஸ்டமர்களை கவனித்துக் கொள்கிறார்.

மேற்கண்ட நான்கு பிரச்சினைகளுக்கும் தீர்வினை கண்டறிந்திருக்கிறார் வாத்தியாரின் இளையமகனான ரவி. இதில் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு பேடண்ட் விண்ணப்பித்து, ஒன்றுக்கு வாங்கிவிட்டார். மற்றொரு கண்டுபிடிப்புக்கு விரைவில் பேடண்ட் கிடைத்துவிடும்.

சைட் ஸ்டேண்ட் எடுக்காமல் வண்டி ஓட்டி விபத்து ஏற்படும் பிரச்சினைக்கு இவர் கண்டறிந்திருக்கும் தீர்வு மிக எளிமையானது. உங்கள் வண்டியில் சைட் ஸ்டேண்ட் போட்டிருந்தால், வண்டியை ‘ஆன்’ செய்யவே முடியாது. சாவி போடாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாதில்லையா? அதே தொழில்நுட்பம்தான் இதற்கும். இதுவரை சுமார் முப்பது வண்டிகளுக்கும் மேலாக இந்த தொழில்நுட்பத்தை செய்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு ஆகும் செலவு தோராயமாக ரூபாய் முன்னூற்றி ஐம்பது மட்டுமே. CIPR (Centre of Intellectual Property rights) நிறுவனம், இந்த கண்டுபிடிப்புக்கான பேடண்ட் உரிமையை ரவிக்கு வழங்கியிருக்கிறது.

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் சில, இந்த தொழில்நுட்பத்தை தங்கள் வண்டிகளில் பயன்படுத்திக் கொள்ள ரவியை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பெரிய தொகையை சொல்லி ஆசை காட்டியபோதும், ரவி மறுத்திருக்கிறார். சைட் ஸ்டேண்ட் விபத்து பொதுவானது. எல்லா பிராண்ட் வண்டிகளிலும் ஏற்படக்கூடியது. ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு மட்டும் இந்த உரிமையை வழங்குவதின் மூலம், அந்த நிறுவனத்தின் வண்டிகளில் மட்டுமே இது செயல்படக்கூடும். இனி வரக்கூடிய எல்லா வண்டிகளிலும் இத்தொழில்நுட்பம் சாத்தியப்பட வேண்டும் என்பது ரவியின் ஆசை.

“குடித்துவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம் என்று சொன்னால் குடிப்பவர்கள் கேட்பதில்லை. சைட் ஸ்டேண்ட் எடுக்காமல் வண்டி ஓட்டி பெரும்பாலும் விபத்துக்குள்ளாபவர்கள் அவர்கள்தான். குடித்துவிட்டால் வண்டியை ஸ்டார்ட் செய்யமுடியாது என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆசைதான். அது சாத்தியமில்லை என்பதால், சைட் ஸ்டேண்டை எடுக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்யமுடியாது என்ற நுட்பத்தை கண்டுபிடித்தேன். கவனக்குறைவாக வண்டியை எடுப்பவர்கள் எல்லோருக்குமே இது பயன்படும். இதனால் விபத்தின் எண்ணிக்கை குறைந்தால், அதுவே எனக்கு மனத்திருப்தி” என்று நகைச்சுவை கலந்து சொல்கிறார் ரவி. எல்.ஐ.சி.யில் பணிபுரியும் சுப்பிரமணி என்ற கஸ்டமர், இந்த கண்டுபிடிப்பை செய்யுமாறு ஊக்கப்படுத்தினாராம்.

இப்போது பெரும்பாலான வண்டிகளில் பெட்ரோல் எவ்வளவு டாங்கில் இருக்கிறது என்று கண்டறியும் தொழில்நுட்பம் இருக்கிறது. அது துல்லியமானதல்ல. வெறும் 100 மில்லி பெட்ரோல் இருக்கும்போது கூட ஒரு லிட்டருக்கும் மேல் பெட்ரோல் இருப்பதாக மீட்டர் காட்டுகிறது. இது வண்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் தெரியும். துல்லியமான மீட்டரை கண்டறியும் ஆராய்ச்சிக்கு பல லட்சங்களை இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன.

ரவி இதற்கான தீர்வை மிக எளிமையாக கண்டறிந்திருக்கிறார். பெட்ரோல் டாங்கில் சில மாற்றங்களை செய்தால் போதும். டாங்கில் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது என்பதை துல்லியமாக வண்டி ஓட்டுபவர் தெரிந்துகொள்ளலாம். இதனால் பெட்ரோல் பங்கில் குறைவாக பெட்ரோல் போடுகிறார்களா என்பதையும் கண்காணிக்க முடியும். இந்த பெட்ரோல் ரீடரை நம் வண்டியில் பொருத்த தோராயமாக ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டுமே ஆகும். இதற்கு இணையான கண்டுபிடிப்பினை ஒருவர் அமெரிக்காவில் கண்டறிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இக்கண்டுபிடிப்புக்கு ரவி இன்னமும் பேட்டண்ட் உரிமைக்காக விண்ணப்பிக்கவில்லை.

வண்டி ஓட்டுபவர்களுக்கு பெரிய பிரச்சினை செயின் கழண்டுக்கொள்வது. சர்வீஸ் செய்யும்போது சரியாக ‘டென்ஷன் செட்’ செய்துக் கொடுக்கிறார்கள். ஓட்ட, ஓட்ட லூஸ் ஆகி லொடலொடவென்று வரும் சத்தம் வண்டி ஓட்டிகளுக்கு பெரிய எரிச்சல். இதற்கான தீர்வுதான் ‘ஆட்டோமேட்டிக் செயின் டைட்டர்’. செயின் லூஸ் ஆனால், அதுவே ‘அட்ஜஸ்ட்’ ஆகுவதுதான் இந்த தொழில்நுட்பம். கடையில் வேலை பார்க்கும் பையன் ஒருவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதை கண்டறிந்திருக்கிறார் ரவி. சுமார் இருநூற்றி ஐம்பது ரூபாய் மட்டுமே இதற்கு செலவு ஆகும்.

வண்டியிலேயே அளவுபார்த்து காற்றடிக்கும் இயந்திரம்தான் ரவியின் கண்டுபிடிப்புகளில் மாஸ்டர்பீஸ். உங்கள் வண்டியில் காற்று குறைவாக இருந்தால், காற்றடிக்கும் கடையை தேடி அலையவேண்டாம். ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு பத்து, பதினைந்து நொடிகளுக்குள் ஒரு சக்கரத்துக்கு காற்று அடித்துவிடலாம். அளவு பார்க்க மீட்டரும் வண்டியிலேயே பொருத்தப் பட்டிருக்கும். பஞ்சர் ஆகும் பட்சத்தில் கூட வண்டியை நிறுத்தாமல், தற்காலிகமாக காற்றடித்துவிட்டு வண்டி ஓட்டலாம் என்பது எவ்வளவு பெரிய விடுதலை? இக்கண்டுப்பிடிப்பின் மூலமாக இருசக்கர வாகனங்களின் ட்யூபையும், டயரையும் நீண்டகாலத்துக்கு பாதுகாக்க முடியும். மிக விரைவில் இக்கண்டுப்பிடிப்புக்கும் பேட்டண்ட் உரிமை கிடைத்துவிடுமாம்.

பெரிய நிறுவனங்களில் இயந்திரவியலில் பெரிய படிப்புகள் படித்தவர்கள் பலகால ஆய்வுக்குப் பிறகு கண்டறியக்கூடிய கண்டுபிடிப்புகள் இவை. +2 முடித்துவிட்டு, ஐ.டி.ஐ.யில் படித்த 40 வயது ரவி, அனாயசமாக அடுத்தடுத்து கண்டுபிடித்துக் கொண்டே போகிறார். பெட்ரோல் இல்லாமல் காற்றின் அழுத்தத்தில் வண்டிகளை ஓடவைக்கும் கண்டுபிடிப்புக்கான முயற்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

“சாலையில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வண்டிகளை தயாரிப்பவர்களுக்கு தெரியாது. எங்களைப் போன்ற மெக்கானிக்குகளுக்குதான் தெரியும். அந்த நிறுவன்ங்களிடம் போய், இதுபோல செய்துகொடுங்களேன் என்று கேட்டால், எங்களைப் போன்ற சிறுமெக்கானிக்குகளை மதிப்பதேயில்லை. எனவே என் கஸ்டமர்களுக்கு எது தேவையோ, அதை நானே கண்டுபிடித்துக் கொள்கிறேன்!” என்கிறார்.

இதுபோன்ற லோக்கல் மெக்கானிக்குகளின் படைப்பாற்றல் திறனை ஊக்கப்படுத்தும் வண்ணம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹரின் ஏற்பாட்டில் அவ்வப்போது பயிற்சிப்பட்டறைகள் நடக்கிறது. இது நிறைய மெக்கானிக்குகளுக்கு ஊக்கம் அளித்துவருகிறது.

கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், லேத் பட்டறையில் தான் கேட்ட வடிவங்களில் எல்லாம் இயந்திரங்களை மாற்றியமைத்துத் தருபவர்கள், டிங்கரிங் பணியாளர்கள் என்று பலரின் உழைப்பில்தான் இந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமானது என்று தனக்கான பாராட்டுகளை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்கிறார் ரவி. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட இயந்திரங்களை வெறுமனே பழுதுபார்த்துக் கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்தியதாலேயே, கண்டுபிடிப்புகளின் மீதான ஆர்வம் இவருக்கு ஏற்பட்டதாம்.

வாத்தியார் வீட்டு பிள்ளை மக்கு என்று யார் சொன்னது?

(நன்றி : புதிய தலைமுறை)

பி.கு : இந்த கட்டுரை அச்சாகிக் கொண்டிருந்த நேரத்தில் அடுத்த கண்டுபிடிப்பை கண்டறிந்துவிட்டதாக ரவி தொலைபேசினார். கிளட்ச் கேபிள் திடீரென்று கட்டாகி உயிரை வாங்குகிறதில்லையா? இதற்கும் தீர்வை கண்டறிந்திருக்கிறாராம்.

பதிவர் சென்னை தமிழன் அறிமுகப்படுத்திய நண்பர் இந்த மெக்கானிக்!

20 கருத்துகள்:

 1. நானும் சண்முகத்தின் கஸ்டமர்தான் யுவா. லேப்ரெட்டா வைத்திருந்தேன். PYZ 9704

  பதிலளிநீக்கு
 2. நடைமுறைக்குகந்த சிறந்த கண்டு பிடிப்புகள்.

  //குடித்துவிட்டால் வண்டியை ஸ்டார்ட் செய்யமுடியாது என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆசைதான். அது சாத்தியமில்லை என்பதால், //

  அமெரிக்காவில் கண்டு பிடித்திருக்கிறார்கள். :-)
  http://www.upi.com/Health_News/2010/03/15/Ignition-device-detects-alcohol-of-driver/UPI-64351268633102/

  பதிலளிநீக்கு
 3. இது போன்ற பலரையும் வெளிக்கொணர்வதில் உங்கள் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 4. யுவா ஒவ்வொரு வாரமும் புதிய தலைமுறைக்காக உங்களின் வித்தியாசமான மனிதர்களுடனான சந்திப்பும் பேட்டிகளும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன.

  வாழ்த்துகள். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. அசத்துறீங்க யுவா! நீங்கள் ஒரு நடமாடும் டார்ச் லைட்

  பதிலளிநீக்கு
 6. இதைப்போன்று இளம் சாதனையாளர்களை பேட்டி கண்டு அவர்களை உற்சாகப்படுத்துவதுடன் அவரகளைப்பற்றி மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தும் புதிய தலைமுறை, மற்றும் யுவகிரிஷ்ணாவும் பாராட்டுக்குரியவர்களே.. Keep Going.

  பதிலளிநீக்கு
 7. பகிர்ந்தமைக்கு நன்றி 
  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 8. 'ப்” என்பது ஒற்றுப் பிழையா....?

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு வாரமும் புதிய லேப்ரெட்டா வைத்திருக்க சாத்தியமில்லை என்பதால்,உற்சாகப்படுத்துவதுடன் உருப்படியான லேப்ரெட்டா சாதனையாளர்களை பேட்டி கண்டு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் பாராட்டுக்குரியவர்ரெ யுவா! நடைமுறைக்குகந்த உங்கள் நடமாடும் பணி மிகவும் பாராட்டத்தக்கது.

  பதிலளிநீக்கு
 10. good post.
  On a lighter note.
  In a Rajini film, his taxi won't allow drunkens to board :-)

  பதிலளிநீக்கு
 11. ரொம்ப நாள் கழித்து, ஒரு நல்ல பதிவு ..பாராட்டுகிறோம்

  பதிலளிநீக்கு
 12. இப்போதுதான், கடவுளை மறந்து விட்டு, மனிதனை நினைத்து இருக்கிறீர்கள்....
  உண்மையில் , பாராட்ட வார்த்தை இல்லை

  பதிலளிநீக்கு
 13. லக்கி,

  நல்லதொரு கட்டுரை!!! தொடரட்டும் இந்தப் பணி...வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. ரவி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஆனால் மேலே நீங்க குறிப்பட்ட தகவல் புதிய விஷயமில்லை. நான் 2000 ஆண்டில் வாங்கிய யமஹா ( விரகோ 535 CC ) மோட்டார் சைக்கிளில் இந்த வசதியெல்லாம் உண்டு. ஒரு மாறுதல்...என் மோட்டாரில் சைட் ஸ்டேண்ட் எடுக்காவிட்டால் கியர் போடமுடியாது. 15 வருட பின் தங்கிய தொழில் நுட்பம். இது தான் நம்மவர்களின் பிரச்னை. வெளியுலக விஷயங்களை நாம் கண்டு கொள்வதில்லை.

  பதிலளிநீக்கு
 15. நன்றி லக்கி....

  தங்கள் கட்டுரை வெளிவந்தவுடன், ரவி உற்சாகமாகி நான்கு கால் பாய்ச்சலில் ஊக்கமுடன் தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

  'இவரது முக்கிய குறிக்கோள் 1.பாதுகாப்பான பயணம்,
  2. அறிவியல் உயிரை காக்க உதவவேண்டும்.
  3.கைக்கெட்டும் விலையில் கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும். என்பதாகும்.

  மெக்கானிக் இரவியை தொடர்புகொள்ள 9841 222413 (90% நேரம் 'டெஸ்ட் டிரைவில்' இருப்பார். பார்த்து டயல் செய்யவும்)

  - சென்னைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 16. CIPR (Centre of Intellectual Property rights) நிறுவனம், இந்த கண்டுபிடிப்புக்கான பேடண்ட் உரிமையை ரவிக்கு வழங்கியிருக்கிறது.
  :).When did the government of India outsource the job of Patent Office to CIPR?

  பதிலளிநீக்கு
 17. First of all lighter vehicles upto 150 cc doesnt need side stand at all which are lighter than scooters!!!

  And also Idiots in India who manufactures 350cc and 500cc bike shouldnt have kick start rather they should have electronic start.

  Bikes in overseas have this technology long before. Even in India, all the imported bikes have this tech.

  Anyways he is been doing good job. My appreciation to him.

  My humble request is Please dont involve names like CIPR before verifying since you are involved in print media.

  பதிலளிநீக்கு