18 மார்ச், 2010

ஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு..

ஞாயிறு விடியல்கள் கொஞ்சம் சோம்பலாகவே சென்னையில் விடியும். அந்த ஞாயிறு விதிவிலக்கு. அதிகாலையிலேயே கடற்கரைச்சாலை கலர்கரைசாலையாக கலகலத்துக் கொண்டிருந்தது. பதினைந்தாயிரம் பேர் அண்ணாசமாதி எதிரில் குவிந்துவிட, போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடற்கரைச் சாலையின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள்.

மேடையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் என்று முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தார்கள்.
சிகப்பு வண்ண ஆடையில் பேண்ட் குழுவினர் இசையமைத்துக் கொண்டேயிருக்க, என்.சி.சி. மாணவர்களின் மிடுக்கான நடை, ஒரே வண்ண ஆடையில் மாநகராட்சி மாணவிகளின் அணிவகுப்பு என்று அச்சூழலே திருவிழாக் கொண்டாட்டமாக இருந்தது.

கூட்டத்தை அடக்குவது போலிசாருக்கு சிரமமாக இருந்தது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஜோக் அடித்துக் கொண்டும், கலாய்த்துக் கொண்டும், வயதுக்கேயுரிய குறும்பர்களாக இருந்தார்கள். டீஷர்ட்டில் மிடுக்காக தொப்பி அணிந்து வந்திருந்தார் தமிழ்நாடு தடகளச் சங்கத்தின் தலைவரான வால்டர் தேவாரம். ‘பசங்க’ளின் கலாய்ப்பு கண்டு, வீரப்பன் கண்களில் விரல்விட்டு ஆட்டியவரே கொஞ்சம் விரக்தி ஆகிவிட்டார்.

இந்த கொண்டாட்டமும், கோலாகலமும் எதற்காக?

ஸ்பீக்கர்களில் காதைப் பிளக்கும் சத்தத்தோடு ஒரு பாப் பாடல் ஒலிபரப்பாகிறது. “நான் மாறத்தான், நீ மாறத்தான், ஊர் மாறத்தான், எல்லாமே மாறத்தான்.. சென்னை மாரத்தான்!”

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சென்னையில் ஆண்டுக்கொரு முறை மாரத்தான் போட்டிகளை நடத்தி வருகிறது. இம்முறை நடந்தது எட்டாவது மாரத்தான். தமிழகத்தில் சர்வதேச அளவில் நடத்தப்படும் மாரத்தான் போட்டி இது. சர்வதேச வீரர்கள் பலரும் வெளிநாடுகளில் இருந்து கலந்துகொள்ள வந்திருந்தார்கள்.

மொத்தம் ஒன்பது பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ஆண்களுக்கான முழு மாரத்தான், அரை மாரத்தான், 10 கி.மீ. தூரம் ஓடக்கூடிய மினி மாரத்தான், மாணவ-மாணவியருக்கான 5 கி.மீ மாரத்தான், நிறுவன அலுவலர்களுக்கான மினி மாரத்தான் என்று தனித்தனியாக போட்டிகள் நடந்தது.

போட்டிகள் துவங்குவதற்கு முந்தைய நாள், பங்கேற்பாளர்கள் அனைவருக்குமே மருத்துவப் பரிசோதனை நடந்தது. போட்டியின் போது மருத்துவர்கள் மற்றும் முதலுதவிக்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. பந்தயம் நடைபெற்ற ஒட்டுமொத்த தூரமும் முதலுதவி, குடிநீர், ஆம்புலன்ஸ் மருத்துவ வசதி என்று எல்லாமே ‘பக்கா’வாக இருந்தது.

ஒவ்வொரு பிரிவாக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக வீரர்கள் ஓடத்தொடங்கினர். ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என்று அடுத்தடுத்து ஓடத்தொடங்க, மேடையில் இருந்த மேயருக்கும் ஆசை வந்துவிட்டது. திடீரென்று அவரும் போட்டியாளர்களோடு ஓடுவதற்கு கோதாவில் குதிக்க, வேடிக்கை பார்த்தவர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள்.

ஓடத்தொடங்கும்போது இருக்கும் உற்சாகம் ஒரு கிலோ மீட்டரிலேயே பலருக்கும் வடியத் தொடங்கி விடுகிறது. ஓட்டப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொடர்ச்சியாக ஓடுகிறார்கள். மற்றவர்கள் மெதுவாக பேசியப்படியே நடக்கத் தொடங்கிவிடுகிறார்கள். போட்டி முடியும் இடத்துக்கு ஓடிவருபவர்கள் நிறைய பேர் மயங்கி விழுந்துவிடுவதை காணமுடிகிறது. கலந்து கொண்டவர்களில் பாதிபேர்தான் ஓட்டத்தூரத்தை முழுமையாக கடக்கிறார்கள். மீதி பேர் ஆங்காங்கே கழண்டு கொள்கிறார்கள்.

முழுமையான பந்தயத்தை முடித்தவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை மேயர் 5 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடிக்கடந்தார் என்றாலும், சான்றிதழ் வாங்க மறந்துவிட்டார். நம்மோடு ஓடிக்கொண்டிருந்தவர் மேயர் என்பதையே பலரும் நம்பாமல் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.

ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட பரிசுத்தொகை பதினொன்றரை லட்ச ரூபாய். முழு மாரத்தான் பந்தயத்தில் வென்றவர் வழக்கம்போல ஒரு கென்ய வீரர். பெயர் அகஸ்டின் ரோனோ. 42.2 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 14.5 நிமிடங்களில் கடந்து வென்றார்.

4 கருத்துகள்:

 1. //முழுமையான பந்தயத்தை முடித்தவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை மேயர் 5 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடிக்கடந்தார் என்றாலும், சான்றிதழ் வாங்க மறந்துவிட்டார். நம்மோடு ஓடிக்கொண்டிருந்தவர் மேயர் என்பதையே பலரும் நம்பாமல் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.//

  நம்பபட்டது

  பதிலளிநீக்கு
 2. 1990களின் ஆரம்பத்தில் வந்த ரெடிமணி ஷாப் விளம்பரம் ஞாபகமிருக்கா லக்கி?

  பதிலளிநீக்கு
 3. எனக்கு இது பற்றிய சந்தேகம் நீண்ட நாட்களாக உண்டு. இப்படி ஓடுவதால் யாருக்கு என்ன பயன்? ஆப்பிரிக்கா குழந்தைகளின் வறுமையை போக்குகிறோம், பெண் விடுதலைக்காக ஓடுகிறோம் என்று லண்டனில் பல ஓட்டங்களை பார்த்திருக்கிறேன். ஆனால் ஓடுவதால் வறுமையை எப்படி தீர்க்க முடியும் என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும் போது விளக்கினால் நல்லது.

  பதிலளிநீக்கு
 4. Dear Kannan,

  Each participant has to pay entrance fee. After the race is over, the execess money will be given to charity. This is common practice. I have been involved in marathon runs for the past 2 years... and it is healthy and funny and little bit charity...

  Regards
  Rangarajan

  பதிலளிநீக்கு