March 17, 2010

விலைவாசி உயர்வு - நிபுணர் கருத்து

விலைவாசி உயர்வு பற்றி பலரும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும்போது ஆன்லைன் டிரேடிங் செய்துவரும் வியாபாரியான ஈரோடு அருண் மட்டும் வேறு மாதிரியாக சொல்கிறார்.

“விலைவாசி உயர்வு என்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் உணவுப்பொருட்கள், தங்கம் மாதிரியான பொருட்களை தொடர்ச்சியாக வர்த்தகம் செய்து வருகிறோம். தங்கம் அதன் அதிகபட்ச விலை உயர்வை கண்டபோதும் கூட, எப்போதும் நடக்கும் வர்த்தகம் எங்களுக்கு நடந்துகொண்டே தானிருந்தது. விலை அதிகமாகி விட்டது என்று காரணம் கூறி, யாரும் எதையும் வாங்குவதையோ, வாங்கும் அளவையோ குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை.

என் பாட்டி காலத்தில் சவரன் முப்பது ரூபாய் விற்றதாக சொல்வார்கள். அப்போது என் தாத்தாவின் வருமானம் மாதம் நாற்பது ரூபாயாக இருந்திருக்கும். இன்று பண்ணிரெண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக ஒரு சவரன் விற்கிறது. எனது வருமானம் அதை வாங்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது இல்லையா? இதன் மூலமாக நான் உணர்வது என்னவென்றால், விலையேற்றத்தின் போது வாங்குபவனின் வருமானமும் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இப்போது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்களும், ஊடகங்களும் குற்றம் சாட்டுகின்றன. மத்திய அமைச்சர் ஒருவரும் ஒத்துக்கொண்டதாக செய்தித்தாள்களில் படித்தேன். பொருட்களின் தயாரிப்பு அளவு குறைந்திருப்பதால், ‘டிமாண்ட்’ ஏற்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். நாட்டின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவினை அதிகப்படுத்துவதின் மூலமாக இந்தப் பிரச்சினையை சரிசெய்துவிடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. விவசாயம் செழிக்க வேண்டியதின் அவசியத்தை இது உணர்த்துகிறது.

தக்காளி வியாபாரி, வெங்காயம் வாங்கும்போது விலைவாசி உயர்ந்துவிட்டது என்று புலம்புவார். தக்காளியின் விலையும் உண்மையில் உயர்ந்திருக்கும். வெங்காய வியாபாரி தக்காளி வாங்கும்போது அவரும் விலை உயர்ந்துவிட்டது என்று நொந்துகொள்வார். இரண்டு பேரின் விற்பனைப் பொருளின் விலையும் உயர்ந்துவிட்டதால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துவிடப் போவதில்லை. ஆயினும் ‘எண்கள்’ அடிப்படையில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

நான் சொல்வதெல்லாம் நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டும் பொருந்தும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஏழைகளின் அவதி பற்றி என் பேச்சில் எதுவுமேயில்லை என்றும் நீங்கள் சொல்லலாம். ஒரு வியாபாரியாக லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கறாராக பேசுவதாகவும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏழைகளின் அவதி எப்போதுமே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏதாவது அதிசயம் செய்து விலைவாசியினை குறைத்துவிட்டால் மட்டும் ஏழ்மை நீங்கிவிடாது. அப்படிக் குறைக்கப்பட்டாலும் அதன் பலன் பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்குமே போய் சேரும். அவர்களது சேமிப்பு அதிகமாகுமே தவிர்த்து ஏழ்மை ஒழிந்துவிடாது. வறுமை ஒழிப்புக்கு வேறு சாதுர்யமான திட்டங்கள் தேவை.”

அருணின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து யாரேனும் எழுத விரும்பினால் எழுதலாம். எழுதிய கட்டுரையை என் மின்மடலுக்கு புகைப்படத்தோடு அனுப்பலாம். பிரசுரிக்க தயாராக இருக்கிறேன்.

19 comments:

 1. ஆரோக்கியமான உரையாடல்களை எதிர் கொண்டு!

  ReplyDelete
 2. ஏழைகளின் நிலைமை எப்பொழுதும் கவலைக்கிடம்தான். நிபுணர் சரியாகத்தான் அனுகியிருக்கிறார்.

  புகைப்படத்தில் அப்பாவியாக தோற்றமளிக்கிறாரே அருண்.

  ReplyDelete
 3. ’ஈரோடு அருணின் வலையுலகப் பெயர் “வால்பையன்”’ என்ற ‘டச்’ சோடு முடிப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்!

  ReplyDelete
 4. படிச்சுப் பார்க்கும் போது சரியா இருக்கிற மாதிரித்தான் தெரியுது...

  ஆனாலும் எங்கோ இடிக்கின்றது... அது பிடிபடவில்லை..

  பிடிபட்டதும்... உங்களுக்கு தனிமடல் அனுப்புகின்றேன்.

  ReplyDelete
 5. வால்,
  இந்த பிரச்சனையை இன்னொரு கோணத்தில் பார்க்கணும், இது மாதிரி விலைவாசியும், சம்பளமும் உயர்ந்து கொண்டே போயிட்டு இருப்பதால், பணவீக்கமும் ஏறிக்கொண்டே இருக்கும், இதற்கு அர்த்தம் என்னானா, நம்மளோட பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே இருக்கு. இதை கொஞ்சமும் அசட்டையாக இருந்தால் ஜிம்பாபே மாதிரி தான் நிலைமை போகும்..

  ReplyDelete
 6. யாருங்க அவரு... படத்தப் பாத்தா ரொம்ப அப்புராணியா தெரியிராரு...

  ReplyDelete
 7. வால்,

  உங்களின் வறுமை ஒழிப்பு பற்றிய கடைசி பத்தியோடு முழுதும் ஒத்துப் போகிறேன். ஆனால் இந்த பதிவின் மொத்த சாராம்சம் அதுவல்ல என்பதால் மற்ற முக்காலே மூணு வீசம் கருத்துகளோடும் மாறுபடுகிறேன்.

  விலைவாசி ஏறி இருப்பதால் நீங்களும் நானும் பாதிக்கப்படவில்லை என்பது உண்மை. ஆனால் எல்லோருமே பாதிக்கப்படவில்லை என்று எப்படிக் கூறுகிறீர்கள்? தங்கத்தைப் பற்றி பேசி பிரயோஜனமில்லை, அரிசியைப் பற்றி பேசுவோம். நான் சென்னை வந்த புதிதில் (இரண்டரை வருடங்களுக்கு முன்பு), அரிசியின் விலை ரூ22. இன்றைக்கு அதே அரிசி ரூ37. பருப்பு உள்ளிட்ட குடும்பம் நடத்தத் தேவையான அனைத்துப் பொருள்களின் விலையும் அவ்வாறே.

  இப்போது இதனால் நான் பாதிக்கப்படவில்லை என்பதற்காக யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறுவது சரியல்ல. ஒரு சராசரியான நடுத்தர வர்க்கமும் அதற்கு கீழ் நிலையில் உள்ளவர்களையும் இது கண்டிப்பாக பாதித்திருக்கும்.

  உதாரணமாக மாதம் 2,000 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ஈரோடு அருகில் பள்ளிப்பாளையத்திலோ வெப்படையிலோ குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த விலைவாசி உயர்வு எந்த பாதிப்பையும் செய்திருக்காது என்று நம்புகிறீர்களா? அல்லது இரண்டு வருடத்திற்கு முன்பு 2,000 வாங்கியவர் இன்று 3,500 வாங்குகிறார் என்று சொல்வீர்களா? புரியவில்லை.

  ReplyDelete
 8. யாராவது பொருள் ஆதார நிபுணர் லைனுக்கு வாங்களேன் ப்ளீஸ்..
  மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் அப்டின்னு கொஞ்சம் வெளக்குங்களேன்..

  ReplyDelete
 9. விலை உயர்வு என்ற பதம் அனைத்து பொருள்களுக்கும் பொருந்துகிறது, நமது பணவீக்கமும் அதை வைத்தே கணக்கிடப்படுகிறது!

  விவசாய உற்பத்தி பொருள்கள் சீசனில்லாத பொழுது அதிக விலைக்கு விற்க்கபடுதலும், உற்பத்தி அதிகம் இருக்கும் பொழுது சந்தை அருகில் சாக்கடையில் கொட்டப்படுதலும் அனைவரும் அறிந்ததே!

  உயிர் வாழ தேவையான விவசாயத்தை நிறுத்தி பணபயிருக்கு திரும்பிய விவசாயிகளை நாம் குறை சொல்ல முடியாது, அது அவர்களது வாழ்வியல் ஆதாரப்பிரச்சனை, அவர்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் அவர்கள் எதிர்பார்த்தார்கள், நாம் கொடுக்கவில்லை, இன்று விலையேறிபோச்சேன்னு கத்திகிட்டு இருக்கோம்!

  வரும் வருமானத்திற்கேற்ப வாழ்கை தரமும் அமையும்! 2000 சம்பளம் வாங்குபவர்களும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள், 20000 சம்பளம் வாங்கியவர்களூக்கு தீடிரென்று வேலை போகும் போது தான் நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ளதே தெரியும் அவலம்!


  பாதிப்பு இருக்காது என்று நான் சொல்லவில்லை, விலைவாசி உயர்வு சகஜம் தான் என்று சொல்லவருகிறேன்!

  தீர்வு:கணிணிக்கும், காருக்கும் வரிவிலக்கு அளித்து, பெட்ரோலிய பொருள்களுக்கும், உரத்துக்கும் வரி வித்திக்கும் அரசியல்வாதிகளின் கையில் இருக்கிறது!

  ReplyDelete
 10. Dear Mr.Arun,

  Your comment that purchasing power has increased is misplaced. My purchasing power has remained constant for the last 2 years.But my savings has decreased considerably. Hopefully you will agree that it has been same for lower-income and middle-income level people.

  Regards
  Dhamodharan

  ReplyDelete
 11. @ அரட்டை

  பண்ட மாற்று முறையில் சிலரது உழைப்பு வீணாகிறது என்பதால் தான் பணம் வந்தது! உங்கள் பிரச்சனை உங்களது சேமிப்பு குறைந்திருக்கிறது என்று, நான் சொல்கிறேன் உங்கள் உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று!

  அனைத்துமே ஒன்றுகொன்று தொடர்புடயது அல்லது சார்ந்தது தான் வாழ்வில், விவசாயி தகுந்த வருமானம் இல்லாமல் மேலும் ஏழையாகிறான், உங்கள் முதலாளி உங்களுக்கு முறையாக தர வேண்டிய சம்பளம் தராமல் பணக்காரன் ஆகிறான், அடிப்படையில் உங்கள் சம்பளத்தால் விவசாயியும் பாதிக்கபடுகிறான் என்பதும் உண்மை தானே!

  விலை உயர்வு என்பது சட்டென்று நேற்று ஆனதல்ல, பணம் என்று கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்தில் வர ஆரம்பித்ததோ அன்றிலிருந்து ஏறி கொண்டு தான் இருக்கிறது, மோசமான பொருளாதார சூழ்நிலை மனிதர்களுக்கு இருக்கும் பொழுது அது வேகமாக ஏறுவது போல் தோன்றத்தான் செய்யும்! நம்மிடமும் என்ன குறை என்று கண்டுபிடிக்காமல் நாம் அடுத்தவர் மீதே குறை சொல்லி கொண்டிருக்கிறோம்!

  ReplyDelete
 12. //உழைப்புகேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று//

  எல்லாருக்கும் உழைப்புக்குகேற்ற ஊதியம் கிடைத்துவிட்டால் இந்த பிரச்சினை வராது என்று சொல்கிறிர்களா..

  கடந்த இரண்டு வருடமாக ஊதிய உயர்வு கொடுக்காமல் இருக்கும் முதலாளிகள்தான் இதற்க்கு பொறுப்பேறக்க வேண்டுமா..?

  அரசாங்கத்தின் கடமை என்று ஒன்றுமில்லையா?

  அன்புடன்
  அரவிந்தன்
  பெங்களுர்

  ReplyDelete
 13. ஏய் எங்களை வைத்து காமெடி செய்யவில்லையே ?

  பொருளாதாரத்தின் அடிப்படையே தெரியாமல் இப்படி மொக்கையாக வால்பையன் தத்துவத்தை உதிக்க அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓ

  அருண் இந்த கட்டுரையை டாஸ்மார்க்கில் இருந்து டெலிவரி செய்யவில்லையே ?

  ReplyDelete
 14. டாஸ்மாக் விலையும் ஏறிப்போச்சு!

  விலைவாசி ஏறிபோச்சுன்னு கத்துறதை விட, ஏன்? எங்கே? எதனாலன்னு யோசிக்கிறதுக்கு தான் இந்த கட்டுரை!

  ReplyDelete
 15. வால்,
  விலைவாசி உயர்வுக்கு இதுதான் காரணம் என்று கூறிவிட முடியாது. பொருளின் விலையை நிர்ணயிப்பத்தில் ஒவ்வொரு பொருளின் உற்பத்தி, தேவை மற்றும் இவை இரண்டையும் இணைக்கும் விநியோகம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

  இன்றைய செய்தி, பஞ்சாபில் 72 லட்சம் டன் கோதுமை பாழ், இங்கு உற்பத்தியும் இருக்கிறது, தேவையும் இருக்கிறது. ஆனால் பிரச்சினை விநியோகத்தில்.

  கோதுமை விலைவாசி உயர்வுக்கு, மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகி விட்டது என கூறுவது சரியா?

  - ரமேஷ்

  ReplyDelete
 16. //இன்றைய செய்தி, பஞ்சாபில் 72 லட்சம் டன் கோதுமை பாழ், இங்கு உற்பத்தியும் இருக்கிறது, தேவையும் இருக்கிறது. ஆனால் பிரச்சினை விநியோகத்தில்.//


  உண்மை தான்! அப்படி ஒன்றும் கெட்டு போகும் பொருளும் அல்ல கோதுமை, அதை ஏன் உள்நாட்டு தேவைக்கு திருப்பக்கூடாது!

  மேலும் தேவை பற்றி கவலைப்படாமல் ஏற்றுமதிக்கு அனுமதியளிக்கும் அரசின் மேலும் குற்றசாட்டு இருக்கிறது!

  ReplyDelete
 17. விலை அதிகமாகி விட்டது என்று காரணம் கூறி, யாரும் எதையும் வாங்குவதையோ, வாங்கும் அளவையோ குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை.
  ரொம்பச் சரி! Demand குறைந்தால் தானே விலை குறையும்!

  தக்காளியை உற்பத்தி செய்கிற விவசாயி கிலோ 2 ரூபாய்க்குத்தான் போனது என்பார். கிலோ 10 ரூபாய்க்கு நம்மிடம் விற்கும் வியாபாரி ஒரு கிலோக்கு 1 ரூபாய் தான் லாபம் என்பார். விலை ஏறினால் சிரித்துக்கொண்டே வேலை செய்வது புரோக்கர் வர்க்கம் தான்.

  "வறுமை ஒழிப்புக்கு வேறு சாதுர்யமான திட்டங்கள் தேவை.” கண்ணடிப்பா!!!

  ReplyDelete
 18. இன்றைக்கு ஆற்று மணலை அள்ளி வாக்கரிசி போட்டு விட்டு, நாட்டு மாடுகளை அடிமாடுகளாக கேரளாவுக்கு அனுப்பி வைத்து விட்டு, வாத்து மடையர்களை மந்திரிகளாக ஆக்கியிருக்கும் நமக்கு ஜனநாயத்தை பற்றி என்ன தெரியும் என்று வெள்ளைக்காரம் கேட்டது தப்பில்லை. அபரிமிதமான உற்பத்தியாக இருந்தால் தக்காளி போல் தெருவில் கொட்டி நாறடிக்கப்படுகிறது. தங்கம் போல் இருந்தால் காட்சிப் பொருளாகிறது. யாருக்கு எது தேவைப்படுகிறதோ அதன் தரத்தை பொறுத்து விலைவாசி பூணையாகவும, யானையாகவும் தெரியும் என்பதே உண்மை. துவரம் பருப்பு விலை கூடினால் சாம்பாருக்கு அல்லடுபவனுக்கு விலைவாசி உயர்வு.டொயட்டோ கார் விலை உயர்ந்தால் இப்போது அம்பாசிடர் வைத்து அல்லாடும் ஜீவன்களுக்கு விலைவாசி உயர்வு.
  இப்போது நிலைமை என்ன? உப்பு கொடி க்டடி பறக்கிறது. உப்பு போட்டு சாப்பிட்டால் சொரனை வந்து விடும் என்று கூட அரசியல் வாதிகள் நினைத்திருக்கலாம். குளங்கள்,கண்மாய்கள், ஆறுகள் எல்லாம் இன்னும் சிறிது நாளில் கண்காடசியில் தான் இருக்க போகிறது. அப்போது தண்ணீருக்கு அல்லாடலாம். இன்றைக்கு லிட்டர் 12 ரூபாய்க்கு விற்கும் தண்ணீர் இன்னும் சிறிது நாளில் 100 ருபாய்க்கு விற்கப்படலாம். அன்றைக்கு கிழிய போகிறது எல்லாம். ஒட்டுமொத்த்தில் அம்பானிக்கும் அய்யபோ,,,அலங்காநல்லூர் அய்யாசாமிக்கும் சொட்டு தண்ணீர் கானல் நீர்தான். எல்லாமே இயற்கையில் இருந்து தான் வருகிறது. அவற்றை மதிக்க தெரியாவிடடால் முடிவு ...சிலருக்கு விரைவில் வரும். சிலருக்கு தாமதமாக வரும். வித்தியாசிம் கொஞ்சம் தான்.

  ReplyDelete