15 மார்ச், 2010

நாளைய குடியரசுத் தலைவர்!

டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

மாணவர்களை நோக்கிக் கேட்டார். “நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் பட்டென்று சொன்னார். “நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறினால் நான்தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்!”

சுற்றியிருப்பவர்கள் திடுக்கிட, கலாம் புன்னகைத்தார். அம்மாணவனின் வித்தியாசமான விருப்பத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டார். ஆசையே அழிவுக்கு காரணம் என்று புத்தர் சொன்னார். ஆசைப்படுவதுதான் படுகிறாய், ஸ்ரீகாந்தைப் போல மிகப்பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படு. சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதுதான் குற்றம் என்பது கலாமின் தத்துவம்.
“உங்களுடைய கனவு ஒருநாள் நனவாக ஆசைப்படுகிறேன். இதற்காக நீங்கள் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்!” என்று ஸ்ரீகாந்திடம் கேட்டுக் கொண்டார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஸ்ரீகாந்த் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? கனவு நோக்கிய அவரது பயணம் எந்த நிலையில் இருக்கிறது?

முதலில் ஸ்ரீகாந்த் யாரென்று பார்ப்போம்.

பிறவியிலேயே பார்வையற்றவரான ஸ்ரீகாந்த், ஆந்திரமாநிலம் மசூலிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பார்வையற்ற மகனை எப்படி பள்ளியில் சேர்ப்பது என்று அவரது தந்தை தவித்துப் போனார். பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டிய வயதில் அவர் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை.

ஆரம்பப்பள்ளியின் முதல் மூன்று ஆண்டுகள் தகுந்த வயதில் கிடைக்காத நிலையில் ஸ்ரீகாந்தின் மாமா ஒருவர், ஹைதராபாத் பேகம்பேட்டை தேவ்நார் பார்வையற்றோர் பள்ளியில் ஸ்ரீகாந்தை சேர்த்தார். தங்கிப்படிக்கும் வசதிகொண்ட இப்பள்ளியில் மழலையர் கல்வியில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பார்வையற்றவர்கள் படிக்கலாம். ஆங்கிலவழிக் கல்வி. மாநில அரசு பாடமுறைத்திட்டம். ஆறாம் வகுப்பில் இருந்து பார்வையற்றோருக்கான சிறப்பு கணினிப் பயிற்சியும் வழங்கப்படும். இந்தியாவின் சிறந்த பார்வையற்றோர் பள்ளியாக 2003 மற்றும் 2008 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி இது. இப்பள்ளியில் படிக்கும்போதுதான் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் கலாமை சந்திக்கும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைத்தது.

“மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்” என்ற கலாமின் அறிவுரை ஸ்ரீகாந்துக்கு அதன்பின்னர் ஒவ்வொரு நொடியும் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. விவேகானந்தரும், கலாமும் ஸ்ரீகாந்துக்கு இரண்டு கண்கள். இளைஞர்களுக்கான இவர்களது அறிவுரைகள் அனைத்தும் மனப்பாடம். ‘நம்முடைய விதியை நிர்ணயிக்கும் சக்தி, நம்முடைய கரங்களுக்கே உண்டு’ என்ற விவேகானந்தரின் கருத்து, ஸ்ரீகாந்துக்கு போதுமான தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்தது. கனவினை நோக்கி நகர ஆரம்பித்தார்.

ஓய்வு நேரங்களை தனக்கே தனக்கான ரசனையோடு வாழ்ந்தார். இயல்பிலேயே இயற்கை நேசிப்பாளர் என்பதால் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம். பூக்களின் வாசம், ஸ்ரீகாந்தின் சுவாசத்துக்கு மிகவும் நெருக்கமானது. தொட்டியில் மீன் வளர்த்தார்.

கிரிக்கெட் விளையாடினார். செஸ் விளையாடினார். ஆம், பார்வையற்றவர்களுக்கு எது எதெல்லாம் சவாலோ? அந்த சவால்களை தனது செவிகளை கொண்டு வென்றார். தேசிய செஸ் வீரராக தன்னை உயர்த்திக் கொண்டார். ஆந்திரப்பிரதேச மண்டலத்தின் பார்வையற்றோர் பிரிவுக்கான கிரிக்கெட் வீரராக களமிறங்கினார். தேசிய இளைஞர் விழாவின் சிறந்த உறுப்பினர் என்று பெயர் எடுத்தார். இந்திய தேசிய அறிவியல் காங்கிரஸின் (Indian National Science Congress) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பத்தாம் வகுப்பில் 90% மதிப்பெண். இண்டர்மீடியட் வகுப்பில் அறிவியலை பாடமாக எடுத்துக்கொண்டு படித்த அவர் 96% மதிப்பெண் வாங்கி தேறினார். பார்வையுள்ளவர்களுக்கே சவாலான விஷயங்களை, பார்வை சவால் கொண்டவர் அனாயசமாக தாண்டி வென்றார்.

ராயல் ஜூனியர் கல்லூரியில் இண்டர்மீடியட்டுக்கு அறிவியலை அவர் தேர்ந்தெடுத்தபோது, பார்வையற்றவர்களால் இந்த படிப்பினை படிக்க முடியாது என்று சொன்னார்கள். முழுப்பாடங்களையும் ஆடியோ டேப்பில் பதிவு செய்து, தொடர்ச்சியாக கேட்டு, கேட்டே உள்வாங்கிக் கொண்டார். கணிதப் பாடத்துக்கு மட்டுமே டியூஷன் வைத்துக் கொண்டார். மற்ற எல்லாப் பாடங்களுமே ஆடியோ டேப் முறையில் படித்ததுதான்.

சரி. இண்டர்மீடியேட்டையும் முடித்தாயிற்று. அடுத்தது என்ன?

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் (Massachusetts Institute of Technology) பொறியியல் படிக்க ஆசைப்பட்டார் ஸ்ரீகாந்த். அவரது வழக்கப்படி மீண்டும் பெரிய இலக்கினை தனக்கு நிர்ணயித்துக் கொண்டார். இது சாத்தியமா? இவ்வளவு பணம் செலவழிக்க முடியுமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவேயில்லை.

ஸ்ரீகாந்தின் விண்ணப்பத்தை கண்ட எம்.ஐ.டி. நிர்வாகம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. “ஸ்ரீகாந்த் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். இவருக்கு கட்டணமெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க கல்வி இலவசம்!”. உலகளவில் புகழ்பெற்ற தொழிற்கல்வி நிறுவனம் ஒரு இந்திய, பார்வையற்ற மாணவனுக்கு கட்டணமேயில்லை என்று அறிவித்திருப்பது ஆச்சரியம்தான். ஸ்ரீகாந்த் வாழ்வில்தான் ஆச்சரியங்களுக்கு பஞ்சமேயில்லையே?

பிரபலமான ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் சிலர் ஸ்ரீகாந்தின் அமெரிக்கப் பயணத்துக்கு ஆகும் செலவை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர், நம்மூரைச் சேர்ந்த அரசுசாரா தொண்டுநிறுவனம் ஒன்றின் உதவியோடு, ஸ்ரீகாந்த் கற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இப்போது எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்.

அதிருக்கட்டும், அவரது குடியரசுத்தலைவர் கனவு என்னவாயிற்று என்று கேட்பீர்களே?

ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பட்டம் முடிந்ததுமே எங்களிடம் பணிக்கு வாருங்கள். லட்சங்களை சம்பளமாக தருகிறோம் என்று இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. “நான் இந்தியாவுக்கு திரும்பி குடியரசுத்தலைவர் ஆக முயற்சிக்கிறேன். அந்த முயற்சியில் வெற்றி கிட்டாவிட்டால் அடுத்த நிமிடமே அமெரிக்காவுக்கு திரும்பி உங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிலை நகைச்சுவையாக சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லவேயில்லை. தன்னம்பிக்கையோடுதான் சொல்லியிருக்கிறேன் என்கிறார் ஸ்ரீகாந்த்.

எம்.ஐ.டி.யில் கற்க அவருக்கு பலவிதமான பாடங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கிறது. பொருளாதாரம், தொழில் மேலாண்மை, மார்க்கெட்டிங், உயிரியல் மற்றும் கணினி தொடர்பாக நிறைய படிக்க ஆசைப்படுகிறார். இவற்றிலெல்லாம் இளநிலை பட்டங்களை முடித்துவிட்டு சில முதுநிலைப் பட்டங்களையும் இதே பல்கலைக்கழகத்தில் பெற திட்டமிட்டிருக்கிறார்.

ஆசைப்பட்ட அனைத்து படிப்புகளையும் முடித்துவிட்டு, இந்தியாவுக்கு திரும்பி ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் குறிக்கோள்.

அதற்குப் பிறகு?

வேறென்ன? குடியரசுத் தலைவர் பதவியினை நோக்கிய அவரது கனவு நனவாக பாடுபட்டுக் கொண்டேயிருப்பாராம்.

நம் நாட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது கல்வி குறித்த போதுமான வழிகாட்டுதல் இல்லாததுதான். ஸ்ரீகாந்துக்கு கிடைத்ததுபோல சரியான வழிகாட்டுதல்களும், உதவிகளும் கிடைக்கும் பட்சத்தில் நம் மாணவர்கள் ஒவ்வொருவரும் பெரிய கனவை இலக்காக வைத்து, அதை அடைவது நிச்சயம்!

ஸ்ரீகாந்தின் அனுபவ அட்வைஸ்!!

நம்மைப் போன்ற இளைஞர்கள் கல்வியின் மதிப்பையும், நமது பொறுப்பையும் உணரவேண்டும். பொன் போன்ற காலத்தை வீணடிக்கவே கூடாது. விவேகமற்ற அறிவு வீணானது என்று விவேகானந்தர் சொல்வார். அதுபோலவே, பொறுப்புகள் இல்லாத சுதந்திரமும் வீணாகிவிடும், மனிதனை வீணாக்கிவிடும். தாமஸ் ஆல்வா எடிசன் பல்பினை கண்டறிய தொடர்ச்சியாக முயன்றுக் கொண்டேயிருந்தார். பத்தாயிரமாவது முயற்சியின் போதுதான் வெற்றி கண்டார். அதுபோலவே நம் கனவு நோக்கிய பயணம் இலக்கினை அடையாமல் எங்கும் நின்றுவிடக்கூடாது.

(நன்றி : புதிய தலைமுறை)

10 கருத்துகள்:

 1. அருமையான கட்டுரை . என்னுடன் லயோலா கல்லூரியில் படித்த நண்பரும் இவர் போல் திறமையானவர். அது நினைவுக்கு வருகின்றது . நன்றி .

  பதிலளிநீக்கு
 2. நல்லதொரு பயனுள்ள கட்டுரை. கலாமின் வழிக்காட்டல் மூலம் இது போல ஒரு சில இளைஞர்களாவது வெற்றியடைந்தால் அதுவே கலாமுக்கான மிகப்பெரிய பரிசாகும்.

  பதிலளிநீக்கு
 3. படிப்பவர்க்கு உத்வேகத்தைக் கொடுக்கக்கூடிய இடுகை

  பதிலளிநீக்கு
 4. கல்லூரியில் படித்த இளைஞர்களாவது வெற்றியடைந்தால் அதுவே அருமையான,பயனுள்ள,நல்லதொரு பரிசாகும்.
  அதுவே தொட்ட நினைவுக்கும் கட்டறியாக் கனலாகும்,அற்புதமான காதலாகும்

  "காயல்" வருன்

  பதிலளிநீக்கு
 5. நம் வாழ்வில் இதுவரை சந்த்தித்த ஸ்ரீகாந்துகளை நாம் கவனிக்கவில்லை; இந்த பதிவு படித்த அனைவரும், இனி நம் கண்ணில் தெரிகிற ஸ்ரீகாந்துகளுக்கு நம்மால் ஆன உதவி செய்து, வழி காட்டுவோம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.

  பதிலளிநீக்கு
 6. எழுத வரவில்லை.

  கண்ணீர் வருகிறது.உழைப்பின் மகத்துவம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 7. அற்புதமான கட்டுரை யுவா. ஸ்ரீகாந்த் உழைப்பின் மனிதன். இலக்குகளை பெரிதாக வைத்து அதை நோக்கி விடாமுயற்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் போராடினால் எதையும் சாதிக்கலாம் என்ற மகத்தான பாடத்தை சொல்லிக்கொடுக்கும் மற்றொரு ஆசிரியன்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு