13 மார்ச், 2010

வில்லனாக இருங்கள்!


’வில்லனாக இருங்கள்!’ - இந்த டைட்டிலில் இன்னமும் கிழக்குப் பதிப்பகம் புத்தகம் போடாதது ஆச்சரியமாக இருக்கிறது. வில்லனாக இருப்பது சவுகர்யம். ஹீரோவாக இருப்பது அசவுகர்யம். இந்தக் கூற்று உங்களுக்கு ஆச்சரியமூட்டலாம். உண்மைகள் எல்லாமே ஆச்சரியம் நிறைந்தவைதான்.

எம்.ஜி.ஆருக்கான புனிதப்பிம்பம் தமிழகத்தில் நிரந்தரமானது. நம்பியாரும், வீரப்பாவும், அசோகனும் இருந்திருக்காவிட்டால் எம்.ஜி.ஆர் இவ்வளவு புனிதமாக போற்றப்பட்டு இருக்கமாட்டார். அடிப்படையில் பார்க்கப்போனால் எம்.ஜி.ஆர்.தான் நிஜமான வில்லன். எப்படியென்றால் நம்பியார் இறுதிக்காட்சியில் கதாநாயகியுடன் பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பார். எம்.ஜி.ஆர் வந்து மூன்றுமுறை அடிவாங்கி, உதட்டோரம் ரத்தம் வழிந்தபின் நம்பியாரை அடித்து நொறுக்கிவிட்டு என்ன செய்வார்? நம்பியார் கதாநாயகியை என்ன செய்யநினைத்தாரோ அதைத்தான் அவரும் படத்தில் எண்ட் கார்ட் போட்டபிறகு செய்யப்போகிறார்?

பொதுவாக சிவாஜி படங்களில் வில்லன்களின் ரோல் ரொம்பவும் குறைவு. அதனால் தான் புரட்சித்தலைவர் ஆகமுடியவில்லை. அவர் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் வெற்றி பெற்ற படங்களை எடுத்துக் கொண்டோமானால் வில்லன்களை வீழ்த்திய படங்களே மிக அதிகமாக இருக்கும். சிவாஜி மசாலாப்படங்களில் அதிகமாக தோன்றமாட்டார். ஆனால் மசாலாவில் இறங்கி பெரிய வெற்றிகளை கண்டதுமுண்டு. ராஜா, திரிசூலம் போன்ற படங்களில் ரொமான்ஸ், ஆக்சன் என்று பட்டையைக் கிளப்பியதுமுண்டு.

சினிமாவில் எடுத்துக் கொண்டால் வில்லனை சிற்பம் மாதிரி இயக்குனர்கள் செதுக்கிய படங்களே பெரும் வெற்றிப் பெற்றதை காணலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் மசலா வெற்றிகளுக்குப் பின்னால் எவ்வளவு வில்லன்கள்? ரஜினியின் மாஸ்டர் பீஸான பாட்ஷாவில் ரகுவரனை விலக்கிவிட்டு படத்தை நினைவுபடுத்த முடிகிறதா? ‘பாபா’ ஏன் தோல்வி அடைந்தது? ‘இப்போ’ ராமசாமி ரஜினி கெத்துக்கு செட் ஆகவில்லை. காக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் என்று கமலின் வெற்றிப்பட வரலாற்றில் வில்லன்களுக்கும் முக்கியப் பங்குண்டு. சத்யராஜ், சரத்குமார் என்று பலமாக ரசிக்கப்பட்ட வில்லன்களை மக்கள் பிற்பாடு சூப்பர்ஹீரோக்களாகவே ஏற்றுக்கொண்டார்கள்.

வில்லன்களே இல்லாத விக்கிரமன் படங்கள் வெற்றி கண்டது எப்படி என்ற கேள்வி எழலாம். படம் பார்ப்பவர்களுக்கு பொறுமையை சோதித்தவர் என்ற அடிப்படையில் விக்கிரமன் தான் வில்லன். விஜய்யின் சூப்பர்ஹிட் படமான குஷியில் வில்லன் இல்லையே என்று கேட்கலாம். ஹீரோ, ஹீரோயினின் ஈகோதான் அங்கே வில்லன். காதலுக்கு மரியாதையில் குடும்பப்பாசம் மிக மோசமான வில்லன். ‘தல’க்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டான ஒன்றிரண்டு படங்களில் வாலிக்கே முதலிடம். வாலி வில்லனை தவிர்த்து அந்தப் படத்தில் வேறென்ன சிறப்பம்சம் இருக்கமுடியும்? இப்படியே குத்துக்காலிட்டு யோசித்து, யோசித்து ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும்.

ஹிட்லரும், முசோலினியும் இல்லாதிருந்தால் சர்ச்சிலுக்கு இன்று என்ன மரியாதை இருந்திருக்கும்? அமெரிக்காவும், ரஷ்யாவும் வல்லரசுகளாக மாறியிருக்க முடியுமா? இந்திராகாந்தி இருந்திருக்காவிட்டால் இந்தியாவில் ஜனநாயகத்தின் அருமை, பெருமை மக்களுக்கு தெரிந்திருக்குமா? கலைஞர் வில்லனாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆர் இங்கே ஹீரோவாக இருக்க முடிந்தது. ஜெயலலிதா வில்லியாக இருப்பதால் தான் கலைஞர் இப்போது ஹீரோவாக வலம் வர முடிகிறது. ஜெயவர்த்தனேவும், ராஜபக்‌ஷேவும் பிரபாகரனுக்கு தமிழ்வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்துத் தந்திருக்கிறார்கள்.

வில்லன்களை புறக்கணித்துவிட்டு ஹீரோக்களை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. ஹீரோக்களின் தனித்தன்மை வில்லன்களின் வில்லத்தனத்தால் பூஸ்ட் செய்யப்படுகிறது. வில்லனாக இருப்பது நிஜமாகவே வசதி. வெற்றி பெறுவதில் வில்லன்களுக்கு இயற்கையே இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. வில்லனைவிட ஹீரோ புத்திசாலியாகவும், பலசாலியாகவும் இல்லாதபட்சத்தில் வில்லனுக்கு வெற்றி உறுதி. ஹீரோ அவனுடைய புனிதப்பிம்பத்தை கட்டிக் காப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இமேஜ் இல்லாத வில்லனுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை.

கோமாளிகள் சிலர் ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு அவர்களாகவே புனிதப்பிம்பத்தை கட்டியெழுப்பி பாதுகாத்தும் கூட, அவ்வப்போது ‘எக்ஸ்போஸ்’ ஆகி காமெடியன்களாகிவிடும் காட்சியை அன்றாடம் நாம் காணமுடிகிறது. எனவே வில்லனாகவே எப்போதும் இருங்கள். வெற்றி மேல் வெற்றி கண்டு கொண்டாடுங்கள்.

10 கருத்துகள்:

 1. நீங்க ஹீரோவா? வில்லனா? இல்ல.. டூயோரோலா?

  பதிலளிநீக்கு
 2. MGR இப்போதும் மக்கள் மனதில் நாயகனாய் இருக்கிறாரே?

  பதிலளிநீக்கு
 3. ஆளப்PadaP பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்!

  Exotic-Essay.

  பதிலளிநீக்கு
 4. அவ்வளவு எதுக்குங்க? வில்லன் பிரிட்டிஷ் இல்லேன்னா ஹீரோ காந்தி வந்திருக்க முடியுமா?

  பதிலளிநீக்கு
 5. இன்று நித்யானந்தா என்னும் வில்லன் இல்லாவிட்டால் சாரு என்னும் ஹீரோ இல்லையே........

  பாவம்யா சாருவை வுட்டுருங்க.

  பதிலளிநீக்கு
 6. லக்கி, வில்லன்களுக்கும் பிம்பத்தைக் கட்டிக்காக்கும் பிரச்னை இருக்கிறதே! அந்த கால சினிமாவில் மொட்டைத்தலை, காஜா பீடி, பூ போட்ட லுங்கி, பெரிய கிருதா/மீசை இதெல்லாம் இல்லாத வில்லன்களைப் பார்த்து சிரிக்க மாட்டாங்க?

  பதிலளிநீக்கு
 7. ஓரு வில்லத்தனமான யோசனை..!! இருந்தாலும் நல்லாருக்கு யுவகிருஷ்ணா..!!

  பதிலளிநீக்கு
 8. //கலைஞர் வில்லனாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆர் இங்கே ஹீரோவாக இருக்க முடிந்தது. ஜெயலலிதா வில்லியாக இருப்பதால் தான் கலைஞர் இப்போது ஹீரோவாக வலம் வர முடிகிறது//

  எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாலாம் யார்னு தெரியுது. அது யாரு கலைஞர். அவர் எந்த வாத்தியத்தில் கலைஞர்? அப்பகூட அவருக்கு பேர் இருக்குமே? எதுவுமே சொல்லாம மொட்டையா கலைஞர்னு சொன்னா? நீங்க எழுதுவது கிசு கிசு தானே?

  பதிலளிநீக்கு
 9. வில்லனா இருக்க நிறைய தைரியமும் நேர்மையும் வேணும் பாஸ்... ஆனா போலி ஹீரோக்கு கொஞ்சம் புத்திசாலித்தனமும் கவர்ச்சியான தோற்றமும் போதும் பாருங்க...

  பதிலளிநீக்கு