March 25, 2010

சென்னை பதிவர் சந்திப்பு 27-03-09 - சில எண்ணங்கள்!

27-03-09, சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இது குறித்த தோழர்களின் பதிவுகள் :

தண்டோரா

கேபிள்சங்கர்

பதிவர் சந்திப்புகள் பரவலாக நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமே.

ஆயினும் இப்பதிவர் சந்திப்பைப் பொறுத்தவரை, அதன் நோக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக இரண்டு விஷயங்களில்.

1. இணைய எழுத்தாளர்

2. சென்னை இணைய எழுத்தாளர் குழுமம்.


ஒன்று.

ஏன் இணைய எழுத்தாளர் என்ற புதிய சொல்லாடல் முன்வைக்கப் படுகிறது என்றே எனக்குப் புரியவில்லை. வலைப்பதிவர் என்ற சொல் எழுத்தாளர் என்பதை விட பன்முகத்தன்மை கொண்டது. எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்பதை நண்பர்கள் உணரவேண்டும். ஒரு வலைப்பதிவரால் தன் வலைப்பக்கத்தில் ஆடியோ மற்றும் வீடியோ ஆகிய தொழில்நுட்பங்களையும் மிகச்சுலபமாக பயன்படுத்த இயலும். முன்பு ஜெர்மனியில் இருந்து ஒரு பெண் பதிவர் தனது கவிதைகளை, அட்டகாசமான பின்னணி இசையோடு ஆடியோ பிளாக்கிங் செய்து வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

அதுவுமின்றி வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய இரண்டு பணிகளை ஒருங்கே செய்துவருகிறார். எழுத்தாளர் வெறும் எழுத்தாளர் மட்டுமே. லாயிட்ஸ் ரோடு கோயில் இடிப்பு பற்றிய பத்ரியின் பதிவு நல்ல உதாரணம். எந்த ஊடகத்திலும் இச்செய்தி வெளிவருவதற்கு முன்பாக வரி மற்றும் ஒளி ஒலி வசதியோடு ப்ரிண்ட், டிவி மீடியாக்களை மிஞ்சும் பிரேக்கிங் நியூஸ். ஒவ்வொரு வலைப்பதிவரும் ஒரு சிட்டிசன் ஜர்னலிஸ்ட். எழுத்தாளர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் இல்லை. அவர்கள் அதிகபட்சம் செலிபிரிட்டீஸ் ஆகமுடியும். அவ்வளவுதான்!

தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் எழுத்தாளர்களுக்கும், அச்சு ஊடகங்களும் மாற்றாகவே வலைப்பதிவுகள் என்ற கருத்தாக்கம் ஆழமாக முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப எழுத்தில் செய்ய முடியாத சில மேஜிக்குகளை வலைப்பதிவுகளில் செய்யமுடியும் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. நிலைமை இப்படி இருக்கையில், ஏற்கனவே நாம் பதினாறு அடிதூரம் பாய்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ஏன் எட்டு அடி தூரத்தை கடப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்?

அதுவுமின்றி, இந்த ‘இணைய எழுத்தாளர்' என்ற சொல்லாடலை பிரபல எழுத்தாளர்கள் முன்மொழிகிறார்கள் என்பதில்தான் எனக்கு சந்தேகம் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது. அச்சு எழுத்தாளர்களிடமிருந்து (அவர்கள் இணையத்தில் இயங்கினாலும் கூட), இணையத்தில் எழுதுபவர்களை தரம்பிரிக்க தந்திரமாக சொல்லப்படும் வார்த்தையாகவும் இதை பார்க்கிறேன்.

மேலும், தனிப்பட்ட அளவில் என்னுடைய கருத்து என்னவென்றால், என்னை இதுவரை நான் எங்கும் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. நான்கு புத்தகங்கள் அச்சில் வெளிவந்திருந்தாலும் கூட 'எழுத்தாளர்' எனும் தகுதியை அடைந்துவிட்டதாக கருதவில்லை. இணையத்திலும் இயங்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இரா.முருகன், பா.ராகவன் போன்றோரும் எழுத்தாளர், நானும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் அபத்தம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. இதனால் மற்ற நண்பர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதை நான் நையாண்டி செய்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது என்னளவில் எனக்கான மதிப்பீடு.

எழுத்தளவில் என்னால் அவர்களை நிச்சயம் அடுத்த இரண்டு வருடங்களில் நெருங்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். கடுமையான பயிற்சியும், முயற்சியும் மட்டுமே இக்கனவை சாத்தியமாக்கும்.

இருப்பினும் இணையம் வேறு தளம். இங்கு ஒரு வலைப்பதிவராக என்னால் இறுமாப்பாக சொல்லிக் கொள்ளமுடியும். மேற்கண்ட எழுத்தாளர்கள் இங்கு எனக்கு வெறும் போட்டியாளர்கள் மட்டுமே. இவர்களில் சிலரை விட இங்கே நான் பிரபலமானவன். நான்தான் ராஜா. ஆகவே ‘இணைய எழுத்தாளர்கள்' என்றொரு சொல்லாடல் அறிமுகப்படுத்தப்படுமேயானால் என்னுடைய ராஜா பதவி பறிக்கப்பட்டு, சேவகனுக்கு கீழான செவிலியன் ஆகிவிடுவேன் என்ற இருத்தலியல் குறித்த பயமும் கூட இப்பதிவை எழுதுவதற்கு ஒரு நியாயமான காரணமாகிறது.


இரண்டு.

சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்ற பெயரில் பிராந்தியரீதியாக அடையாளப்படுத்துவதை, இணையம் என்ற அற்புதமான - உலகின் எம்மூலையையும் ஓரிரு வினாடிகளில் கடக்க சாத்தியப்படுத்தியுள்ள - தொழில்நுட்பத்தை கேவலப்படுத்தும் ஒரு செயலாகவே என்னால் பார்க்க முடிகிறது.

2007ஆம் ஆண்டில் வலைப்பதிவர் பட்டறை சென்னையில் நடந்தபோதே இதுபோன்ற விவாதங்கள் நடந்தது. இணையத்தில் பிராந்திய அடையாளங்கள் தேவையில்லை என்று அப்போது ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட பின்பே ‘தமிழ் வலைப்பதிவர் பட்டறை' என்ற பெயரில் சென்னையில் இருந்த வலைப்பதிவர்களால் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நன்றாக படியுங்கள். சென்னை வலைப்பதிவர் பட்டறை அல்ல, தமிழ் வலைப்பதிவர் பட்டறை. பாலபாரதி, மா.சிவக்குமார், விக்கி போன்ற பதிவர்களை கேட்டால் இதுகுறித்து நடந்த உள்வட்ட, வெளிவட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை குறித்து தெளிவாக விளக்கிக் கூறக்கூடும்.

தமிழ் வலைப்பதிவு சூழலில் பாண்டிச்சேரி பதிவர்கள் பிராந்திய அடையாளத்தை முதன்முதலாக முன்வைத்தவர்கள் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்தே திருப்பூர், ஈரோடு என்று தினந்தோறும் புதிய புதிய வலைப்பதிவர் சங்கங்கள் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது சென்னைப் பதிவர்களின் முறை போலும்.

கடந்த வாரம், இண்டிபிளாக்கர் சந்திப்புக்கு சில தமிழ்ப் பதிவர்கள் சென்றிருந்தோம். அங்கே வந்திருந்த வலைப்பதிவர்களும், விவாதிக்கப்படும் விஷயங்களும் வாய்பிளக்க வைத்தன. இந்திய வலைப்பதிவர்களை ஒன்றிணைக்க இண்டிபிளாக்கர் என்ற ஒரே குடை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தனித்தனியாக பிராந்தியரீதியாக பிரிந்திருந்தால் இண்டிபிளாக்கர் சாத்தியமாகி இருக்காது. நம் பதிவர்கள் அவ்வப்போது நடத்தும் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளைதான் அவர்களும் நடத்துகிறார்கள். ஆனால் முறைப்படுத்தப்பட்ட, தரமான முறையில் ‘யுனிவர்செல்' போன்ற பெரிய ஸ்பான்சர்களை பிடித்து அவர்களால் நடத்தப்படுகிறது.

எந்த நாட்டில் இருந்தாலும் ‘தமிழ் வலைப்பதிவர்கள்' என்ற ஒரே குடையின் கீழ் நாம் இணையாவிட்டால் எந்த காலத்திலும் இண்டிபிளாக்கர் சந்திப்பு போன்ற ஒரு சந்திப்பு நமக்கு சாத்தியமாகவே ஆகாது.

வேண்டுமென்றால் நிர்வாக வசதிக்காக 'தமிழ் வலைப்பதிவர் குழுமம், சென்னை', ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம், பாண்டி' என்று கிளையாக செயல்படலாம். எப்படியும் ஒரு ‘தலை' தமிழ்பதிவர்களுக்கு அவசியம். தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டி நிர்வாகங்கள், முன்னோடிகள் மற்றும் மூத்த பதிவர்களை கலந்தாலோசித்து விட்டு இப்படியொரு அமைப்பினை உருவாக்க நண்பர்கள் ஆலோசிக்கலாம்.

எதையுமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஓரிரு நண்பர்கள் கூடி, விவாதித்து செயல்படுத்தி விட முடியாது. பரவலான ஆலோசனைகளுக்கும், யோசனைகளுக்கும் பின்னரே செயல்படுத்தி பார்க்கப்பட வேண்டியது என்பது என் தாழ்மையான கருத்து.

எழுதிக்கொண்டே போனால் மிக நீண்டப் பதிவாக வரும் ஆபத்து இருப்பதால், வரும் 27ந்தேதி நடைபெறும் சென்னை பதிவர் சந்திப்பில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் இன்னும் விரிவாக பேசுவேன்.


தேதி : 27.03.10/சனிக்கிழமை

நேரம் : மாலை 5.30

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர் சென்னை –78

73 comments:

 1. ;-) பூ என்றும் சொல்லலாம் புய்பம் என்றும் சொல்லலாம்

  ReplyDelete
 2. நல்ல கருத்து கிருஷ்ணா!

  ReplyDelete
 3. உங்களுடைய இரண்டு கருத்துகளையும் முழு மனதாக ஆமோதிக்கிறேன்.

  ReplyDelete
 4. ஆழ்ந்த பார்வையுடன் லக்கியின் கருத்து... நூறு சதம் ஏற்புடையதாய் இருக்கிறது...

  பிரபாகர்.

  ReplyDelete
 5. நல்ல கருத்துதான் லக்கி. விவாதிக்கலாம்.

  ReplyDelete
 6. அருமையாக தெளிவாக சொல்லியிருகீங்க யுவா.

  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 7. அருமையாக தெளிவாக சொல்லியிருகீங்க யுவா.

  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 8. நல்ல கருத்து பாஸ் :)

  ReplyDelete
 9. வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 10. லக்கி.. நிச்சயம் உங்கள் கருத்துக்களை முன் வையுங்கள். உங்கள் அனுபவம் மூலம் வழிநடத்துங்கள். நிச்சய்ம் இண்டி ப்ளாக்கர் போல ஒரு நல்ல குழுமமாகத்தான் இந்த ஏற்பாடே. நிச்சயம் சென்னை என்றிலலமல் வெறும் இணைய குழுமமாய் கூட செயல் படலாம். நிச்சயம் இதை பற்றி பேசுவோம். உங்களின் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கும்
  கேபிள் சங்கர்

  ReplyDelete
 11. லக்கி அன்று ஆலோசிக்கவே கூடுகிறோம். விவாதித்து செயல்படுத்துவோம்.

  ReplyDelete
 12. இதுக்கு மேல வேற என்ன எழுதனும் ?

  ReplyDelete
 13. நன்றி நண்பர்களே!

  கொஞ்சம் தர்மசங்கடத்தோடுதான் இப்பதிவை 'ரிஸ்க்' எடுத்து வெளியிட்டேன். புரிந்து கொண்டமைக்கு நன்றி!

  சந்திப்பில் திறந்த மனதோடு விவாதிப்போம்.

  ReplyDelete
 14. ஆலோசனைகளை பற்றி விவாதித்து பிறகு முடிவு எடுப்பதே சரி. ஒரு சார் மக்கள் ஏற்று கொள்ளும்படி இருக்காமல் அனைவரும் ஏற்றுகொள்ளும் படி இருப்பது தான் நன்று.

  ReplyDelete
 15. முழுக்க உடன்படுகிறேன் லக்கி.

  ReplyDelete
 16. லக்கி,

  நிறைய இடங்களில் முழுமையாக உடன்படுகிறேன்.

  தமிழ் வலைப்பதிவுகளில் உச்சகட்ட நிலையே புத்தகம் வெளியிடுவதுதான் என்ற பரவலான புரிதல் உள்ளது. ஆனால் அது ஒரு எழுத்தாளரின் உச்சகட்ட நிலைதானே ஒழிய பதிவர்களுக்கில்லை. ஒரு பதிவராக இயங்குவதற்கு பல தளங்கள் உள்ளது. எழுத்தாளராக மாறுவது அதில் ஒன்று மட்டுமே.

  ”சென்னை இணைய எழுத்தாளர்” என சென்னைக்குள்ளே இணையத்துக்குள்ளே எழுத்தாளராக குறுக்கிக்கொள்வதைக்காட்டிலும் தமிழ்ப்பதிவராக அடையாளம் காட்டுவது மிகச்சிறந்த தேர்வாக அமையும்.

  நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது :). ஒருங்கிணைக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. நல்ல கருத்துதான்,
  விவாதிக்கலாம்.


  S.Ravi
  Kuwait

  Ps-I may be in chennai on 27-03-10

  ReplyDelete
 18. அதை நான் வலைமொழிகிறன்

  ReplyDelete
 19. சங்கி மங்கி6:04 PM, March 25, 2010

  இணைய எழுத்தாளர் என்றால் உதடுகள் ஒட்டாது..

  பதிவர் என்றால்தான் உதடுகள் கூட ஒட்டும்..

  ReplyDelete
 20. முதல் கருத்துக்கு ஆமாஞ்சாமி போட்டுக்கிறேன்.

  ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல்ல உங்க பேரும் இருக்குது. நீங்க இந்த விசயத்தையெல்லாம் கூடிப் பேசிக்கலாமே. பதிவு?

  எல்லார் கருத்தும் வரட்டுங்கிற பொதுவிவாதத்துக்கு வைப்பதற்காகவா?

  ReplyDelete
 21. I certainly agree with your point that there should not be any groups based on the regions. It should be an unified tamil bloggers...

  ReplyDelete
 22. சென்னை குழுமம் அவசியம்...

  ஆனால் நீங்கள் எதைவைத்து எஸ்ரா, ஜெயமோகன், சாரு அவர்களையெல்லாம் மேற்கோளாக காட்டி இருக்கீங்கன்னு தெரியல. அவர்கள் சிறந்தவர்கள் தான்......ஆனால் அவர்களே சிறந்தவர்கள் என்றாகி விடாது.


  நிகழ்ச்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள். புதிய வேலை என்பதால் ...கொஞ்சம் BUSY .அதனால் வர முடியாது சகா. மன்னிக்கவும்

  ReplyDelete
 23. இன்னும் கணிப்பொறி சரியாகததால், அலுவலகத்தில் , யாரவது பார்த்துவிடுவார்களோ என்று, பின்னால் பார்த்து பார்த்து எரிச்சலுடன்...

  வலைபதிவர், இணைய எழுத்தாளர், தட்டாளார் ஏதாவ்து ஒரு பெயர், எனக்கு வேண்டியது என் கருத்தை சொல்ல ஒரு வெளி என்பதால், முதல் விடயம் எனக்கு சீரியாசக படவில்லை...

  வரலாறு முன்பு வெற்றி பெற்றாவர்களால் எழுதப்பட்டது ஆனால் வலைப்பதிவுகள் வந்த்பின் சமானியர்களால் எழுதப்படுகிறது. அதனால், சமுதாயத்தில் மிக முக்கியமாக மொக்கை(எதுகை மோனை!!) பணி செய்பவர்கள் என்ற முறையில்,

  இராண்டாவது கருத்துக்கு முழு ஆதராவு, பெஙக்ளூர் மாதிரியான நகரத்தில பதிவர்கள் இருக்கலாம், அவர்களின் குழுவா? இப்பொழுது நான் என்னை எங்கு பதிவு செய்ய வேண்டும், நாளை அலுவலகம் மாறி கோயம்பத்தூர் போனால்? ஓவ்வொரு ஊர் சந்திப்பும் ஒவ்வொரு மாதிரியானது,ஒருவேளை வருங்காலத்தில் ஈரோடு குழுவில் சந்திப்பின் போது சட்டை போட கூடாது என சட்டம் போட்டுவிட்டால், மதுரை பதிவர்கள் கண்டிப்பாக கையில் மல்லிகை பூ சுற்றி வர வேண்டும் என்று சொல்லுவிட்டால்... பெஙக்ளூர் இணைய குழு என்பது கண்டிப்பாக ஆன்லையினால் தான் இயங்கும் என்பதால்...

  இண்டி ப்ளாகர் குழுவை விட அதிகமாக நாம் முன்னேற வேண்டும் என்ற ஆசையில்.. சந்திப்பில் விவாதியுங்கள்... பதிவிடுங்கள்...

  சந்திப்பு சந்தோஷமாக நடைப்பெற வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 24. தமிழ் பதிவராக ஒருங்கினைந்து இருப்போம். ஊர் பெயர் கொண்டு பிரிக்க வேண்டாம்.

  மனோ

  ReplyDelete
 25. உட்கார்ந்து யோசித்ததில்.. நாம் எப்படி 'எழுத்தாளர்கள்' ஆவோம் நாம் 'தட்டாளர்கள்' தானே ?

  ReplyDelete
 26. கேபிளுக்கு நிச்சயம் என்ற வார்த்தை எவ்வளவு பிடித்திருக்கிறது !

  ReplyDelete
 27. எழுத்தாளர் என்பதைவிட பதிவர் என்பதற்கான அர்த்தம் உயர்ந்தது என வாதிட்டிருக்கிறீர்கள் ஒரு வக்கீலைப்போல. ஆனாலும் எழுத்தாளர் என்ற சொல்லை ஏற்க மனம் மறுக்கவே செய்கிறது. ஏதோ ஒரு பதிவில் எழுதியதாக நினைவு..

  //ஈமெயில் ஐடி இருக்கிறது. இலவசமாக பிளாக் இருக்கிறது. ச.தமிழ்செல்வனைக்கூட சக பதிவர் என்றோ, எஸ்ராவை சக எழுத்தாளர் என்றோகூட டப்பென்று சொல்லிவிடலாம். கேட்க யார் இருக்கிறார்கள்?//

  குழுமம் குறித்த தங்கள் கருத்துகளை ஏற்கிறேன் லக்கி.

  அதென்ன தனியாக கருத்து சொல்றீங்க.? நடத்தப்போறதே நீங்கதானே.. ஹிஹி.!

  ReplyDelete
 28. இது என்னளவில் எனக்கான மதிப்பீடு.


  ஏற்புடையதாய் இருக்கிறது...

  ReplyDelete
 29. எழுத்தாளர் என்ற சொல்லாடலை நான் பெரிதும் வெறுக்கிறேன்.(தனிப்பட்ட முறையில் ஒரு வேளை நான் பெரிதாக எழுதி கிழித்துவிட்டால் கூட என்னை ஒரு கதாசிரியனாகவே கற்பனித்து கனவு கண்டு வந்திருக்கிறேனே தவிர எழுத்தாளனாகவேண்டும் என்பதல்ல. அதற்கான சாத்தியம் எனக்கு இல்லை என்பது தெரியும்)

  என்னை கூட ஒரு பதிவில் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தியபோது பெரும் எரிச்சல் வந்தது. எல்லாம் நான் செய்த வினை தான். தெரியாமல் மூன்று வருடங்களுக்கு முன்பு அதுவும் பிளாக் எழுத துவங்குவதுக்கு முன் இன்னும் கேட்டால் ஒரு பக்கம் கூட முழுதாக எழுதாத அளவில் எழுத தெரியாத அளவில் writervisa.blogspotஎன்ற பெயரில் தெரியாத்தனமா ஆர்வகோளாறில் பிளாக் திறந்ததுக்கு இந்த எரிச்சலை எல்லாம் சகித்துக்கொள்ளவேண்டியிருக்கு. யாராவது பிளாகின் பெயர் மாற்றும் வித்தை கற்றுத்தந்தால் மகிழ்வேன்.

  ReplyDelete
 30. நல்ல பகிர்வு. சனிக்கிழமை எப்படி போகிறது என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நல்லா இருந்தா சங்கம் இல்லாகாட்டி தங்க தாரகை தமன்னாவை பற்றி ஒரு கதை எழுதி தமிழ்மணத்துலேயும் தமிழிஷ்லையும் பப்லிஷ் பண்ணிட்டு போய்கிட்டே இருப்பேன் பாத்துகோங்க.

  ReplyDelete
 31. பின்னூட்ட விவாதங்களுக்கு நன்றி நண்பர்களே!

  தொடர்ச்சியான விவாதங்களுக்கு ஒரு கண்ணியாகதான் இப்பதிவு. சந்திப்பில் கலந்துகொள்பவர்கள் தவிர்த்து மற்றவர்களும் அவரவர் பதிவில் விவாதத்தை தொடர இது வசதியாக இருக்குமென்று நினைத்தேன்.

  மற்றபடி தனிப்பதிவு போடுவதற்கு சிறப்புக் காரணம் வேறெதுவுமில்லை.

  ReplyDelete
 32. PART - 1

  முன்குறிப்பு: எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதை நீங்கள் நையாண்டி செய்வதாக தவறாக நினைத்தோ, நான் writer என்ற prefixஐப் பயன்படுத்துபவன் என்பதாலோ ஆற்றப்படும் எதிர்வினையல்ல இது.

  *******

  சென்னை என்று அழைப்பது பிராந்தியரீதியாக அடையாளப்படுத்தும் செயல் என்றால், நீங்கள் குறிப்பிடும் இண்டிபிளாக்கர் அமைப்பும் அதைத் தானே செய்கிறது. இது நகரம், அது நாடு என்பது மட்டும் தானே வித்தியாசம். என்னைப் பொறுத்தவரை சென்னை என்பது ஓர் அடையாளம் மட்டுமே - அந்தச் சொல் geographical vicinityயில் இருப்பவர்களை மனோரீதியாக இணைக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.

  நான் பெங்களூரில் வசிப்பவன் என்பதால் என்னை உங்கள் குழுமத்தில் சேர்த்திக் கொள்ள மாட்டோம் என்றா சொல்லி விடுவீர்கள்?

  எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்று நீங்கள் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் அதனால் யாதொரு பயனும் இல்லை. நீங்களே பிற்பகுதியில் குறிப்பிடுவது போல், அதை வைத்துக் கொண்டு சில மேஜிக்குகளை வேண்டுமானால் வலைப்பதிவுகளில் செய்ய முடியுமேயொழிய இடுகைகளின் உள்ளடக்கத் தரத்தைக் கூட்ட அது உதவுமா என்பது சந்தேகமே.

  //வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய இரண்டு பணிகளை ஒருங்கே செய்துவருகிறார்// இதை நிச்சயம் ஏற்கவே முடியாது. பத்ரி உட்பட ஓரிருவர் தவிர இதையெல்லாம் அப்படி productiveஆய் பயன்படுத்துபவர்கள் யாரென்று சொல்லுங்கள். Google Reader வழி 700க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து வருபவன் என்கிற முறையில் சொல்கிறேன் - ம்ஹூம். யாருமே தென்படவில்லை.

  தவிர, தமிழ் வலைப்பதிவுலகில் தீவிரமாக செயல்பட்டு வரும்‌ யாருமே வீடியோ போன்ற சங்கதிகளை மருந்துக்குக் கூட பயன்படுத்துகிற மாதிரி தெரியவில்லை (அப்படித் தரமாக எழுதும் ராஜநாயகம், மாதவராஜ், சுரேஷ் கண்ணன், செல்வேந்திரன், ஜ்யோவ்ராம், பைத்தியகாரன், அய்யனார், கென் என்று யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்).

  ஆக, மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாய் செய்யப்படும் விஷயங்களை ஒட்டு மொத்த பதிவர்களுக்கு அடையாளமாக்குவது சரியல்ல. சுருக்கமாய், தமிழ் பதிவர்களில் 99%க்கும் மேற்பட்டோர் நீங்கள் சொல்லும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் வேலை பார்ப்பதில்லை.

  ReplyDelete
 33. PART - 2

  தவிர, ஆடியோ, வீடியோ, படங்கள் என இவ்வளவு தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் நிரம்பிய போதிலும் blog (பதிவு) என்பது முதிர்ச்சியடையாத எழுத்துக்களைத் தாங்கிய ஒரு வலைத்தொகுப்பாகுப்பாகவே பார்க்கப்படுகிறது. கிட்டதட்ட ஓர் அந்தரங்கமான டைரி போல். அதை எழுதுபவர் blogger (பதிவர்) எனப்படுகிறார். ஆனால் எழுத்தாளன் என்பவன் அப்படிப்பட்டவன் அல்ல என்பதை நான் விளக்க வேண்டியதில்லை.

  எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் அமன அமைப்பு பொறுத்து.

  ஓர் உதாரணம் சொல்கிறேன். ISRO, DRDO, BARC, CSIR போன்ற ம‌த்திய அரசின் விஞ்ஞான ஆராய்ச்சி நிலையங்களில் எஞ்சியனியரிங் முடித்து புதிதாய் வேலைக்கு சேரும் 22 வயதுப் பையனுக்கு அவர்கள் தரும் பதவியின் பெயர் - SCIENTIST. அங்கேயே 35 வருடங்களுக்கு மேலாக‌ பழம் தின்று கொட்டை போட்டு ரிட்டயர்ட் ஆகும் நிலையில் இருக்கும் 58 வயது ஆசாமியின் பதவிக்கும் அதே பெயர் தான். அதன் இறுதியில் B,C,D,E,F,G,H என்று மட்டும் போட்டு அவர்களின் நிலைகளை வேறுபடுத்துவார்கள்.

  இதில் புதிதாய்ச் சேரும் அந்த‌ 22 வயதுப் பையன் "இப்போது தான் சேருகிறோம்; இது வரை ஒன்றுமே சாதிக்கவில்லை. நம்மை எப்படி SCIENTIST என்று அழைத்துக் கொள்வது" என்று கேட்பது மாதிரி தான் இருக்கிறது உங்கள் பதிவர்களை எழுத்தாளர் என்று அழைப்பது பற்றிய நிலைப்பாடும்.
  இங்கு தான் அந்த‌ப் பையனின் மன அமைப்பு வருகிறது. அவனுக்குள் இருக்கும் அல்லது இருக்க வேண்டிய நம்ம்பிக்கை (over confidence அல்ல‌) தான் அவனைத் தீர்மானிக்கிறது. மேலும் முன்னேற செலுத்துகிறது.

  அதே தான் ஓர் ஆரம்ப எழுத்தாளனுக்கும் (உங்கள் பாஷையில் பதிவர்). கையெழுத்துப் பிரதியோ, உட்சுற்றுப் பத்திரிக்கையோ, வலைப்பதிவோ எழுதும் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னை எழுத்தாளனாக உணரும் அந்தத் திமிர் இருக்கும் என்றே நினைக்கிறேன். அது அணையாது உள்ளே எரிந்து கொண்டிருக்கும் வ‌ரை தான் அவன் தொடர்ந்து எழுத முடியும்.

  என்ன சொன்னாலும், பதிவர் என்பவர் எழுத்தாளனாக மாறுவது அடுத்த கட்டம். இங்கு நான் குறிப்பிடும் மாற்றம் என்பது பத்திரிக்கையில் படைப்பு வருவது, புத்தகங்கள் வெளி வருவது போன்ற புறம் சார்ந்த விஷய‌ம் அல்ல; மனதில், அதன் காரணமாக எழுத்தில் ஏற்படும் அகநிகழ்வை. தீவிரமாக எழுதும் எந்தப் பதிவரும் ஒரு கட்டத்தில் அடைதே ஆக வேண்டிய மாற்றம் அது. நானோ நீங்களோ அதை அடைந்து விட்டோமா என்பதைத் தான் தொடர்ந்து எழுத்தின் வாயிலாகத் தேடிக் கொண்டிருக்கிறோம் என நம்புகிறேன்.

  மற்றபடி, உங்களைப் போல் நானும் எங்கும் என்னை எழுத்தாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை - ஆனால் உள்ளே அப்படித் தான் உணர்கிறேன். வேண்டுமானால், வலைப்பதிவுகளில் எழுதுபவர்களை எழுத்தாளர் என்றும் ஜெமோ, சாரு, எஸ்ரா, பாரா போன்றவர்களை நல்ல எழுத்தாளர்கள் என்றும் வித்தியாசப்படுத்தி திருப்திப் பட்டுக் கொள்ளலாம்.

  *******

  பின்குறிப்பு: தீவிரமான தரமான எழுத்துக்கும் பதிவர்களுக்கும் சம்மந்தமில்லை என்று நீங்கள் நினைத்தால், மன்னிக்கவும்! - இதுவரை பேசிய எல்லாவற்றையும் வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 34. +1

  தலைவர், செயலாளர் போன்ற வழமையான சங்க அரசியல் குழப்பங்களில் சிக்காமல் நட்போடும் இளக்கத்தன்மையோடும் இருப்பது நன்று.

  ReplyDelete
 35. நல்ல பதிவு. நன்றி பத்ரி.

  ReplyDelete
 36. புது இணைய எழுத்தாளர்3:03 PM, March 26, 2010

  சங்கம் வைத்து தலைவர் செயலாளர் பொருளாலர் போன்ற பதவிகள் வழங்கப்படுமா. எனக்கும் ஏதாவது பதவிகள் கிடைக்குமா அல்லது பிரபல பதிவர்களுக்கு மட்டும்தான் பதவியா.

  ReplyDelete
 37. அன்பின் சரவணகார்த்திகேயன்!

  உங்களது இரண்டு பின்னூட்டங்களின் சாராம்சமும் முழுமையாக எனக்கு புரியவில்லை என்ற தன்னிலை விளக்கத்தை அளித்துவிட்டு புரிந்தவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கிறேன்.


  //சென்னை என்று அழைப்பது பிராந்தியரீதியாக அடையாளப்படுத்தும் செயல் என்றால், நீங்கள் குறிப்பிடும் இண்டிபிளாக்கர் அமைப்பும் அதைத் தானே செய்கிறது. இது நகரம், அது நாடு என்பது மட்டும் தானே வித்தியாசம். என்னைப் பொறுத்தவரை சென்னை என்பது ஓர் அடையாளம் மட்டுமே - அந்தச் சொல் geographical vicinityயில் இருப்பவர்களை மனோரீதியாக இணைக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை.//

  மிசோரம் பதிவர் - இந்தியப் பதிவர்... வித்தியாசம் தெரிகிறதா?

  சென்னைப் பதிவர் - தமிழ்ப் பதிவர்... வித்தியாசம் தெரிகிறதா?

  ஆம், தெரிகிறது என்று சொன்னாலொழிய மேற்கொண்டு உங்களோடு இதுசம்பந்தமாக மேலதிக விவாதத்தை வசதியாக இருக்காது என்று நினைக்கிறேன்.


  //எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்று நீங்கள் குறிப்பிடுவதை முழுமையாக ஏற்கிறேன். ஆனால் அதனால் யாதொரு பயனும் இல்லை. நீங்களே பிற்பகுதியில் குறிப்பிடுவது போல், அதை வைத்துக் கொண்டு சில மேஜிக்குகளை வேண்டுமானால் வலைப்பதிவுகளில் செய்ய முடியுமேயொழிய இடுகைகளின் உள்ளடக்கத் தரத்தைக் கூட்ட அது உதவுமா என்பது சந்தேகமே.//

  இடுகைகளின் உள்ளடக்கத் தரம் என்பது அவரவர் இயல்பு சம்பந்தப்பட்ட விஷயம்.

  தமிழர்கள் ஏன் கருப்பாக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு என்னால் எப்படி விடையளிக்க முடியாதோ, அதுபோல இக்கருத்துக்கும் விளக்கமளிக்க முடியாது என்று தோன்றுகிறது.


  //தவிர, தமிழ் வலைப்பதிவுலகில் தீவிரமாக செயல்பட்டு வரும்‌ யாருமே வீடியோ போன்ற சங்கதிகளை மருந்துக்குக் கூட பயன்படுத்துகிற மாதிரி தெரியவில்லை (அப்படித் தரமாக எழுதும் ராஜநாயகம், மாதவராஜ், சுரேஷ் கண்ணன், செல்வேந்திரன், ஜ்யோவ்ராம், பைத்தியகாரன், அய்யனார், கென் என்று யாரை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்).//

  என்ன கொடுமை சார் இது?

  நீங்கள் தரமாக எழுதும் என்று கொடுத்திருக்கும் லிஸ்ட்டை சொல்கிறேன் :-)

  இந்த லிஸ்டில் ஓரிருவரை வேண்டுமானால் விதிவிலக்காக சொல்லலாம்.


  //ஆக, மொத்த எண்ணிக்கையில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாய் செய்யப்படும் விஷயங்களை ஒட்டு மொத்த பதிவர்களுக்கு அடையாளமாக்குவது சரியல்ல. சுருக்கமாய், தமிழ் பதிவர்களில் 99%க்கும் மேற்பட்டோர் நீங்கள் சொல்லும் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் வேலை பார்ப்பதில்லை.//

  சிட்டிசன் ஜர்னலிஸ்ட் வேலை பார்க்கவில்லை என்றால் அது பதிவர்களின் குற்றம். தொழில்நுட்பத்தின் குறைபாடு ஆகிவிடாது இல்லையா?

  ReplyDelete
 38. மேலும் சரவணகார்த்திகேயன்!

  எனக்கு ‘எழுத்தாளர்' என்ற சொல்லின் மீது இருந்த பிரமை நிஜமாகவே விலகிவிட்டது.

  எழுத்தாளர் என்று சொல்லப்படுபவரை நெருங்கினால் பெரும்பாலும் பரிதாபகரமானவராகவே தென்படுகிறார்.

  ‘பதிவர்' என்ற சொல் உங்களுக்கு மட்டமாக தோன்றினால் அது உங்களின் பிரச்சினை.

  என்ஜினியர், டாக்டர், எழுத்தாளர் மாதிரி பதிவர்...

  டாக்டர் தன்னை என்ஜினியர் என்றோ விஞ்ஞானி என்றோ சொல்லிக் கொள்ள ஆசைப்பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து :-)

  ReplyDelete
 39. @யுவகிருஷ்ணா

  //ஆம், தெரிகிறது என்று சொன்னாலொழிய மேற்கொண்டு உங்களோடு இது சம்பந்தமாக மேலதிக விவாதத்தை வசதியாக இருக்காது என்று நினைக்கிறேன்// ஆம், தெரிகிறது. சொன்னதையே திருப்பி சொல்லியிருக்கிறீர்கள். ஆனாலும் இது தொடர்பாய், நான் கேட்டதற்கோ சொன்னதற்கோ இதில் ஏதும் பதிலில்லை என்பதால் மேலதிக விவாதம் செய்ய‌ வசதியாக இருக்காது. மன்னிக்கவும்!

  பதிவர்கள் சிட்டிசன் ஜர்னலிஸ்ட் வேலை பார்க்கவில்லை என்பதை தொழில்நுட்பத்தின் குறைபாடாக சொல்லவில்லை. அதே நேரம் அது பதிவர்களின் குற்றம் என்று நீங்கள் சொல்வதையும் ஏற்க மாட்டேன். பதிவர்களின் வேலை இது தான் என்று முடிவு செய்ய நீங்களோ நானோ யார்? அது அவரவர் இஷ்டம். தவிர, நீங்களே அதைச் செய்வதில்லையே (புதிய தலைமுறைக்கு எழுதுவதை பதிவுகளில் இடுவது கணக்கில் வராது அது உங்கள் தொழில் சார்ந்தது). அதனால் கறபனையாக ஓர் உலகத்தை சிருஷ்டித்து எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொண்டு அது போல் இல்லையே என்று குற்றம் சுமத்துவதில் பயனில்லை.

  அதே போல் பதிவர் என்ற பதத்தை மட்டமாக நினைப்பதாகவும் நான் எங்குமே குறிப்பிட்டதாக நினைவில்லை. மாறாக எழுத்தாளார் என்பது அதன் அடுத்த கட்டம் என்று தான் சொல்லியிருக்கிறேன். அதில் மாற்றமே இல்லை. நீங்களாக ஓர் அகராதி தயார் செய்து கொண்டு அதை எல்லோரும் பின்ப‌ற்ற வேண்டும் என்று கட்டளையிடுவது சரியா?

  உங்கள் என்ஜினியர், டாக்டர் உதாரணமே தவறு. நீங்கள் கம்பௌண்டர் என்று தான் அழைக்கப்பட‌ வேண்டும் என்று போராடுகிறீர்கள். நான் அடுத்த கட்டம் டாக்ட‌ர் என்கிறேன். நீங்கள் தொடர்ந்து எழுதும் பட்சத்தில், நீங்களே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதிர்காலத்தில் சமூகம் உங்களை எழுத்தாளர் என்றே அழைக்கும்; அடையாளப்படுத்தும்.
  யாரும் அதைத் தடுக்க முடியாது.

  மற்றொரு முக்கியமான விஷயம், உங்கள் கருத்தில், "நான் என்ன சாதித்து விட்டேன், எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள" என்கிற அடக்க‌த்தைக் காட்டிலும், "இவ்வளவு சாதித்திருக்கிறேன், நானே எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்வதில்லை" என்கிற தொனியே வெளிப்படுவதாய்த் தோன்றியதால் தான் பின்னூட்டமே இடத் தோன்றியது, அப்படித் திணிப்பதும் தவறென்று தோன்றியதால். இதைக்கூட‌ தவறாக நினைக்க மாட்டீர்கள் என்கிற நம்பிக்கையில் சினேக பாவ‌த்துடனேயே தான் சொல்கிறேன்.

  மற்றப‌டி, எனது பின்னூட்டங்களின் சாராம்சமும் உங்களுக்குப் புரியாததன் மர்மத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன். நவீன இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத ஓர் ஆசாமியை கலைஞர் என்றழைக்கும் ஒரு சமூகத்தில் பதிவர்களை இணைய எழுத்தாளர் என்றழைப்பதில் குற்றமில்லை என்பதே நான் சொல்ல நினைத்தது.

  ReplyDelete
 40. சரவண கார்த்திகேயன்!

  நிஜமாகவே உங்களது 3வது பின்னூட்டத்தையும் முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை :-(

  ஒருவேளை எனக்கு கற்றல் குறைபாடு இருக்கலாம்.

  மற்றபடி என்னை ‘டென்ஷன்' ஆக்க ஏதேதோ வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக எடுத்துக் கொள்கிறேன். இப்போது டென்ஷன் ஆகுமளவுக்கு நேரமில்லை. வேலை பிஸி.

  பிறிதொரு சந்தர்ப்பத்தில் இதை மீண்டும் படித்து டென்ஷன் ஆகும்பட்சத்தில் கச்சேரியை வைத்துக் கொள்கிறேன்.

  இருந்தாலும் ஒன்றே ஒன்று. நான் ஏதோ பெரியதாக சாதித்ததைப் போன்ற தொனி என்று சொல்லி இருக்கிறீர்கள். அது எங்கே என்றும் தங்களைப் போன்ற பிறவி எழுத்தாளர்கள் எடுத்துச் சொன்னால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 41. //அதே போல் பதிவர் என்ற பதத்தை மட்டமாக நினைப்பதாகவும் நான் எங்குமே குறிப்பிட்டதாக நினைவில்லை.//

  //உங்கள் என்ஜினியர், டாக்டர் உதாரணமே தவறு. நீங்கள் கம்பௌண்டர் என்று தான் அழைக்கப்பட‌ வேண்டும் என்று போராடுகிறீர்கள்.//

  கஜினி பட ஹீரோ சரவண கார்த்திகேயன் வாழ்க! :-)

  ReplyDelete
 42. மூடு வந்தாலும் வராவிட்டாலும் எழுதுபவன் பத்திரிகையாளன்,
  மூடு வந்தால் மட்டுமே எழுதுபவன் எழுத்தாளன்.

  ReplyDelete
 43. தில்லுதுர நீங்க எப்ப தெளிவு துர ஆகப்போறீங்க

  ReplyDelete
 44. சரவண கார்த்திகேயன் சொன்னது

  /ISRO, DRDO, BARC, CSIR போன்ற ம‌த்திய அரசின் விஞ்ஞான ஆராய்ச்சி நிலையங்களில் எஞ்சியனியரிங் முடித்து புதிதாய் வேலைக்கு சேரும் 22 வயதுப் பையனுக்கு அவர்கள் தரும் பதவியின் பெயர் - SCIENTIST. /

  இங்கே மட்டும் ஒரு சிறு திருத்தம்.scientist என்கிற நிலை அவ்வளவு எளீதாக அடையப்படுவதில்லை. அதற்கு நிறைய வரைமுறைகள் இருக்கிறது.ஊர்களில் நிறைய பேர் சொல்வார்கள். எங்கள் உறவினர் அங்கே scientist ஆக இருக்கிறார் என்று.இம்மாதிரியான புதியவர்களுக்கான பதவியின் பெயர் sceintific officer.(படிப்படியாக B,C,D,E,F என்று முன்னேறினாலும் scientist ஆகிவிடமுடியாது. )இதைத்தான் scientist என்று சொல்கிறார்கள். இது மக்களாகச் சொல்கிறார்களா? அல்லது அந்த ஊழியரே அப்படிச் சொல்லிவைப்பாரா என்பதில் மட்டும் எனக்கு இன்னும் சந்தேகமிருக்கிறது :)

  ReplyDelete
 45. ஆமோதிக்கிறேன்... வழிமொழிகிறேன். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 46. @ச.முத்துவேல்

  நான் எஞ்சினியரிங் முடித்த போது எனக்கு DRDOவில் வேலை கிடைத்தது- பதவியின் பெயர் SCIENTIST-B. ISROவில் அதற்கு இணையான பதவியின் பெயர் SCIENTIST-SC; BARCல் SCIENTIFIC OFFICER. அரசாங்கம் தரும் designationஆ அது தான்.

  ReplyDelete
 47. இப்ப தான் எனக்கு தெளிவா புரியுது.
  உக்காந்து யோசிக்கிறவன் சைன்டிஸ்டு....
  மல்லாக்க படுத்து யோசிக்கிறவன் எழுத்தாளன்.....
  கவுந்தடிச்சு படுத்து புரண்Dஉ புரண்டு யோசிக்கிறவன் நல்ல எழுத்தாளன்...

  உருண்டு புரண்டாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்றவன் தான்

  பதிவர்
  பதிவர்
  பதிவர்!!!

  ReplyDelete
 48. பின்னூட்டம் தட்டச்சு செய்யும்போது நினைத்துக்கொண்டிருந்தேன், BARC மட்டுமே நான் குறிப்பிட விரும்புவது என்பதை.
  SCIENTIFIC OFFICER என்பது SCIENTIST என்பதாகிவிடாது.எனவே BARC விசயத்திலும் இவர்களை SCIENTIST என்பதாகச் சொல்வதில் தகவல் பிழை வருகிறது அல்லவா?

  ReplyDelete
 49. @ச.முத்துவேல்

  ஆனால் நானறிந்த வரையில், இரண்டும் ஒரே மாதிரியான வேலை தான் (job natureஐச் சொல்கிறேன்). அவர்களது உள் நிர்வாக வசதிக்காக அப்படி மாறுபட்ட பெயர்கள் வைத்திருக்கக்கூடும். த‌விர இரண்டுமே GROUP-A GAZETTED OFFICER பதவிகள் - அதாவது பச்சை மசிக் கையெழுத்து. BARCல் இருக்கும் என்ற scientific assistant வேலை தான் இவற்றுக்கு சற்று கம்மி ரேங்க்.

  ReplyDelete
 50. பின்னூட்டம் மட்டும் போடுபவர் , பதிவரா ? எழுத்தாளரா ?

  ReplyDelete
 51. //பின்னூட்டம் மட்டும் போடுபவர் , பதிவரா ? எழுத்தாளரா ?//

  தெர்ரீயல்லீயேப்பா....

  ReplyDelete
 52. //நீங்கள் கம்பௌண்டர் என்று தான் அழைக்கப்பட‌ வேண்டும் என்று போராடுகிறீர்கள். நான் அடுத்த கட்டம் டாக்ட‌ர் என்கிறேன். //

  சமூகத்துல ’போலி’டாக்டர்கள் உருவாகறதைப் பத்தி இதைவிட எளிமையா யாராலயும் சொல்லி விட முடியாதுன்னு நெனைக்கிறேன்..

  ReplyDelete
 53. // எனக்கு ‘எழுத்தாளர்' என்ற சொல்லின் மீது இருந்த பிரமை நிஜமாகவே விலகிவிட்டது//

  கிருஷ்,

  இது உன் உள்ளத்தில் இருந்து வரும் வார்த்தை என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. மாயை விலகினால் உண்மை தெரியும். உள்ளது புரியும். உண்மை உனக்குத் தெரிந்து விட்டது. அதனால் ஞானம் பெற்று விட்டாயடா நீ. ஞானம் பெற்று விட்டாய். இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? தளபதி, அஞ்சா நெஞ்சர், ராகுல் என்று எல்லோரைப் பற்றியும் எழுதி நீ பெயரும் புகழும் அடையப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நினைக்கும் போது நிஜமாகவே (சக எழுத்தாளன் என்ற முறையில்)மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆஹா. ஆஹா! வாழ்க வாழ்க.

  // எழுத்தாளர் என்று சொல்லப்படுபவரை நெருங்கினால் பெரும்பாலும் பரிதாபகரமானவராகவே தென்படுகிறார்//

  நீ யாரைச் சொல்கிறாய் என்பது எனக்குப் புரிந்தும் புரியாமல் இருக்கிறது. என்னைச் சொல்ல மாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும். என்ன செய்வது தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பல எழுத்தாளர்களுக்கு மதிப்பில்லை. எல்லாம் காலத்தின் கோலம் தான்.

  படித்ததில் உனது கருத்துக்கள் எல்லாமே எனக்குப் பிடித்திருக்கிறது. நியாயமாகவும் இருக்கிறது. நாளைக்குச் சந்திக்கலாமா?

  சு தா

  ReplyDelete
 54. யுகி

  உங்கள் கருத்தில் முழு உடன்பாடு. அவசியம் அந்த கூட்டத்தில் கலந்துக் கொண்டு உங்கள் இந்த கருத்துகளை முன் வைக்கவும்.

  "எந்த நாட்டில் இருந்தாலும் ‘தமிழ் வலைப்பதிவர்கள்' என்ற ஒரே குடையின் கீழ் நாம் இணையாவிட்டால் எந்த காலத்திலும் இண்டிபிளாக்கர் சந்திப்பு போன்ற ஒரு சந்திப்பு நமக்கு சாத்தியமாகவே ஆகாது.

  வேண்டுமென்றால் நிர்வாக வசதிக்காக 'தமிழ் வலைப்பதிவர் குழுமம், சென்னை', ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம், பாண்டி' என்று கிளையாக செயல்படலாம். எப்படியும் ஒரு ‘தலை' தமிழ்பதிவர்களுக்கு அவசியம். தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டி நிர்வாகங்கள், முன்னோடிகள் மற்றும் மூத்த பதிவர்களை கலந்தாலோசித்து விட்டு இப்படியொரு அமைப்பினை உருவாக்க நண்பர்கள் ஆலோசிக்கலாம்...."

  நின்று, நிதானமாக, பொறுமையாக எழுதியமைக்கு பாராட்டுகள் பல...

  நன்றி
  மயிலாடுதுறை சிவா...

  ReplyDelete
 55. அக்னி பார்வை

  உட்கார்ந்து யோசித்ததில்.. நாம் எப்படி 'எழுத்தாளர்கள்' ஆவோம் நாம் 'தட்டாளர்கள்' தானே ?


  :) :)

  ReplyDelete
 56. லக்கி, உங்கள் கருத்துகளுடன் உடன்படுகிறேன்... இதை மொதல்லயே சொல்லிட்டு நடைய கட்டியிருக்கலாம் நானு.. பின்னூட்டங்களை படிச்சி தலை சுத்தி, வயித்தால போயி.... ம்ம்ம்ம் என்னமோ போங்க.... நான் மூணு மாசத்துக்கு ஒரு பதிவு (மாதிரி) போடுறேன், என்னை பதிவர்னு சொல்லிக்கட்டுமா வேணாமா, இதையும் முக்கியமா உக்காந்து பேசுவோம் எல்லாரும்..

  ReplyDelete
 57. லக்கி..என்ன இப்போ? உங்களுக்கு கமெண்ட் போட்ட 57 பேரில் ஒருத்தர் "ஆமோதிக்கிறேன்..வழிமொழிகிறேன்..தெளிவான பகிர்வு" அப்படின்னு போடாமல் தெரியாதனமா சற்று விவாதித்து விட்டார். அவ்ளோ தானே? மாற்று கருத்து என்று ஒன்று இருக்கவே கூடாதா? விவாதிக்கப்பட்ட பொருளுக்குள் நான் போகவில்லை. உங்கள் விவாதிக்கும் முறை நாகரீகமாக இல்லை, ஒருவரை சிறுமைப்படுத்தும் பகடி தூக்கலாக இருக்கிறது என்பதே இந்த எந்த லேபிளும் (எழுத்தாளர், பதிவர்) இல்லாத சாதாரண வாசகனின் கருத்து. தெரியாத்தனமா அவர் தனக்கு பிடித்த 5 பதிவர் பேரை உதாரணமா சொன்னால், அதை ட்விட்டரிலும் மாறி மாறி கேலி செய்கிறீர்கள். மிக மிக தாழ்வான அப்ப்ரோச் நண்பரே..

  ஒன்று பார்த்து விட்டேன். உங்களை தண்டோரா போன்று ஒருவர் அடாவடியாக தாக்கினால் பம்மி விடுகிறீர்கள். சற்று புதுசாக ஒருவர் நாகரீகமா எதிர்த்து சொன்னால் ரவுண்டு கட்டி அடிக்கிறீர்கள்.

  கடைசியாக, எனக்கு CSK கருப்பா, சிவப்பா, என்ன எழுதியிருக்கிறார் என்று எதுவும் தெரியாது. இது அவர் கருத்துக்கு சப்போர்ட் இல்லை. ரோட்டில் ஒருவரை போட்டு அடிக்கையில் என்ன எது என்று தெரியாமல் தடுக்க முனையும் ஒரு மனநிலையே இந்த பின்னூட்டம்.

  ReplyDelete
 58. அது என்ன கன்றாவியோ புரியவில்லை

  //இணையத்திலும் இயங்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இரா.முருகன், பா.ராகவன் போன்றோரும் எழுத்தாளர், நானும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் அபத்தம் எனக்கு தெளிவாகவே புரிகிறது//

  ஏன் எல்லோரும் இப்படி இவர்களுக்கு எங்கே சென்றாலும் என்ன பேசினாலும் இவர்களை மேற்கோள் காட்டியே பேசுகிறீர்கள்?
  எழுத்தாளரோ,பதிவரோ எதுவாகவோ இருக்கட்டும்.
  "இங்கு எழுதும் திறன் கொண்டவர்கள் நிறைந்துள்ளனர்"
  என்ற கணிப்பை இப்படி ஒருசில மனிதர்களுக்காக கேவலப்படுத்தி 'ஜால்ரா 'அடிக்க என்ன அவசியம் உங்கள் அனைவருக்கும்? மேல உள்ள நபர்களை விடவும் வலிமையாக எழுதும் திறன் உள்ளவர்கள் இங்கு உள்ளது உண்மை.புதிதாக வருபவர்களை நீங்கள் உதாசீனம் செய்தால், நாளை அவர்கள் ஒன்று கூடி அதையே உங்களுக்கும் செய்வார்கள்.
  சந்தியுங்கள் பேசுங்கள், ஆனால் உங்களுக்கு நீங்களே முதுகு சொறிந்துகொண்டு..........அசிங்கம்.

  ReplyDelete
 59. வழிமொழிகிறேன் நானும்..

  ReplyDelete
 60. கேபிளின் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்..


  எனக்கும் இந்த பிராந்திய பிரிவில் சுத்தமாக உடன்பாடில்லை. அது அமைப்பாக இருந்தாலும் சரி, அல்லது நம்ம ஊர்க்காரன் என்று சந்திப்புகளில் இருவர் பரஸ்பரம் பாராட்டிக் கொள்ளும்போதும் சரி.

  அதே போல் எழுத்தாளன். யார் வேண்டுமென்றாலும் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளலாம். வேண்டுமானால் அவன் ஒரு மோசமான எழுத்தாளன் என்று பிறர் முத்திரை குத்துக்கலாம்.

  அறிஞர் சொன்னார், எழுத்தால் சம்பாதித்து சாப்பிடுபவன் மட்டுமே எழுத்தாளன் என்று. இங்கே சொல்ல சம்பந்தமே இல்லை தான்.சொல்ல தோன்றியது :)))

  நான் ஒரு பதிவர். வெறும் பதிவர். அதுவே போதுமனக்கு :))

  மற்றபடி செம போஸ்ட். கலக்கல் சகா (வேறெப்படி நிரூபிப்பது நான் பதிவன் என்பதை)

  ReplyDelete
 61. உங்கள் கருத்தை வழிமொழிகின்றேன்.

  ReplyDelete
 62. Every one thinks that he is a Nobel laurate if they have an internet connection and a blog. Good realization.
  Karuththu Kandasamy

  ReplyDelete
 63. உங்கள் நேர்மை எனக்கு புடிச்சிருக்கு லக்கி. நன்றி.

  ReplyDelete
 64. என் கருத்துக்கள்

  http://blogsenthilnathan.blogspot.com/2010/03/blog-post_28.html

  ReplyDelete
 65. என்னது 98 பேர் ஆன்லைனா? அடங்ஙொக்கா மக்கா

  ReplyDelete
 66. www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

  ReplyDelete