31 மார்ச், 2010

அப்படியொன்றும் அழகில்லை!

இருநாட்களுக்கு முன்பாக மதியம் இரண்டரை மணியளவில் அண்ணாசாலை வழியாக இருசக்கர வாகனத்தில் தோழரோடு சென்றுக் கொண்டிருந்தேன். டி.வி.எஸ். பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக போக்குவரத்து சிக்கல்.

ஊர்ந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்தபோது ஒரு மாதிரியான கவுச்சி வாடை. காவலர்கள் துண்டு எடுத்து முகத்தை மூடிக்கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.

ஒரு ஆயிரம் பேர் சாலையோரம் நின்று வேடிக்கை பார்க்க சாலையோரமாக 'அது' கிடந்தது. ஏதோ கோணி போன்ற சமாச்சாரங்கள் அவசரத்துக்கு மேலே மூடப்பட்டிருக்க அவற்றையும் மீறி சாலையில் கசிந்து கொண்டிருந்தது மனிதக்கூழ்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் சென்னையின் பெரிய பைனான்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாராம். 54எச் என்ற மாநகர தொடர்பேருந்தில் அன்று அவர் படிக்கட்டில் பயணம் செய்து கொண்டிருந்திருக்கிறார். ஓட்டுநர் சடன்பிரேக் போட தவறி கீழே விழுந்தவரின் மீது அப்பேருந்தின் பின்சக்கரம் ஏறி, அவரது தலை கூழாகியிருக்கிறது. பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், நடத்துனரும், பயணிகளும் இறங்கிப் பார்த்திருக்கிறார்கள்.

“செத்துடாம்பா. நீ பஸ்ஸை எடு. அவசரமா போவணும்!” என்று பயணிகள் வற்புறுத்த, 54எச் பிராட்வே நோக்கி சென்றிருக்கிறது. ஒரு நாய் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தால், எந்த மனோபாவத்தோடு கடந்து செல்வோமோ, அதே மனோபாவத்தோடு 54எச் பயணத்தை தொடர்ந்திருக்கிறது.

இரண்டாவது பத்தியில் வந்த கவுச்சிவாடை எங்கிருந்து வந்தது என்று இன்னேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்னும் குறைந்தது ஆறு மாதத்துக்காவது அப்பகுதியை கடக்கும்போதெல்லாம் அதே மனித கவுச்சி வாடையை என் நாசிகள் உணரும். உடல் படபடக்கும். மனம் அச்சத்தால் நடுநடுங்கும்.

வேறு ஒரு இடத்திலும் அதே கவுச்சி வாடையை அன்று மாலையே உணர்ந்தேன். குளிரூட்டப்பட்ட அத்திரையரங்கின் திரையில் அதே மனிதக்கூழை முதல் காட்சியின் முடிவில் கண்டேன். படம் முடியும் வரை வாடை போகவேயில்லை. இரண்டு நாட்களாகிறது இன்னமும் தூக்கத்தில் கூட அவ்வாடை என்னை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது.

* - * - * - * - * - *

அங்காடித்தெரு அறிவுஜீவிகள் பாராட்டும் வகையில் யதார்த்தப் படமாகவே வெளிவந்திருக்கிறது. அசட்டுஜீவியான எனக்கு என்னவோ அதுகொஞ்சம் ஓவர்டோஸ் யதார்த்தமாகவே படுகிறது. ஏனெனில் படத்தில் அப்பட்டமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் கதைமாந்தர்கள் சிலரோடு எனக்கு நேரடிப் பழக்கம் உண்டு.

இயக்குனரின் தொலைக்காட்சிப் பேட்டி பார்த்தேன். ஒருநாள் ரங்கநாதன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த கதை மாந்தர்களைப் பார்த்ததாகவும், “எங்க இருந்துடா இவ்ளோ பேரு வர்றீங்க?” என்று ஆச்சரியப்பட்டு அவர்களை பின் தொடர்ந்து, பலவருட அவதானிப்புகளுக்குப் பிறகும், அதற்குப் பின்னரான உழைப்புக்குப் பின்னரும் இப்படியொரு காவியத்தை படைக்க முடிந்ததாக சொன்னார். பிரமிப்பாக இருந்தது.

ஆனால் படம் பார்த்த இன்னொரு நண்பர் வேறு மாதிரியாக சொல்கிறார். 2007லேயே இதே கதைக்களத்தோடு, ரங்கநாதன் தெருவுக்குப் பதிலாக மும்பையின் போக்குவரத்து சிக்னல் ஒன்றினை வைத்து 'டிராஃபிக் சிக்னல்' என்ற பெயரில் ஒரு படம் வந்திருக்கிறதாம். அப்படத்துக்கு தேசியவிருதுகள் கூட கிடைத்திருக்கிறதாம்.

* - * - * - * - * - *

மனிதக் கவுச்சி வாசனையை மட்டுமன்றி அஞ்சலியின் வியர்வை மற்றும் மல்லிகைப்பூ கலந்த கவர்ச்சி வாசனையையும் என்னால் உணரமுடிந்தது. அதுபோலவே மகேஷின் ஆண்மையான வாசனையும்.

கதைநாயகன் மகேஷ், கதைநாயகி அஞ்சலி இருவருமே அப்பட்டமாக திரையில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டுமல்ல. கதையின் மற்ற மாந்தர்களிடமும் - ஓரிருவர் தவிர்த்து - நடிப்பு என்பதாக இல்லாமல் இயல்பான வெளிப்பாடு அமைந்திருக்கிறது. குறிப்பாக சூப்பர்வைசராக நடித்திருக்கும் இயக்குனர் வெங்கடேஷ்.

நாயகனின் தோழனாக வரும் டிவி நடிகரின் நடிப்பு கொஞ்சம் நெருடுகிறது. குறிப்பாக ஸ்னேகா விளம்பரக் காட்சிக்காக அவர் செய்யும் அலப்பறைகள் அக்மார்க் மொக்கை. திரைப்படத்தின் நகைச்சுவை பெரும்பாலும் இவரையே சார்ந்திருப்பதால் நகைச்சுவை அவ்வளவாக வேலைக்கு ஆகவில்லை.

‘நான் கடவுள்' படத்தில் நன்கு எடுபட்ட ‘ப்ளாக் ஹ்யூமர்' இப்படத்தில் இயக்குனரின் காலை வாரி விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அருவருப்பாக கூட இருக்கிறது. குறிப்பாக நாயகனின் முதல் காதல் தொடர்பான காட்சிகள். அந்த காதல் உடைவதற்கு காரணமாக சொல்லப்படும் காரணம். உவ்வே!

* - * - * - * - * - *

படத்தின் முதல் காட்சியே க்ளைமேக்ஸ்தான். ஆடியன்ஸை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கப்போகும் ஒரு காட்சிக்கு முன்பாக பாட்டு வைத்தே தொலைத்தாக வேண்டும் என்று இயக்குனருக்கு யார் ஆலோசனை சொல்லியிருப்பார்கள் என்று தெரியவில்லை. நியாயமாக கிடைக்க வேண்டிய அதிர்ச்சியின் சதவிகிதம் வெகுவாக குறைகிறது.

அதற்குப் பின்பும் படம் ‘செல்ஃப்' எடுக்கும் என்று நம்பி, நம்பி இடைவேளை வரை ஏமாந்துக்கொண்டே போகிறோம். திராபையாக, மெதுவாக நகரும் காட்சிகள். ஒருவேளை ‘அங்காடித் தெரு' மெகாசீரியலாக வந்திருக்குமானால் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் பின்னியிருக்கலாம்.

கலை, ஒளிப்பதிவு, ஒப்பனை என்று இப்படம் முழுக்க தொழில்நுட்ப கலைஞர்களின் ராஜ்ஜியம். இசை மட்டும் படுமோசம். என்ன இருந்து என்ன பயன்? அந்த காலத்து ‘துலாபாரம்' ரேஞ்ச் சோகம் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க விடாமல் துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் பெரும் வெற்றி பெற்ற யதார்த்தப் படங்களில் சிலவான சேது, பிதாமகன், காதல், சுப்பிரமணியபுரம் போன்ற படங்களில் இருந்த ‘எண்டெர்டெயினிங் எலிமெண்ட்' சுத்தமாக இல்லாமல் ராவான தார் பாலைவனம் மாதிரி வறண்டுப் போய் கிடக்கிறது அங்காடித்தெரு.

* - * - * - * - * - *

பதினெட்டு பந்துகளில் நாற்பத்தி ஒன்பது ரன்கள் அடித்த ஹர்பஜன்சிங் மாதிரி அடித்து ஆடியிருப்பவர் உரையாடலாசிரியர் ஜெயமோகன். இவரது உரையாடல்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் படம் ஆரம்பித்த முப்பதாவது நிமிடத்திலேயே எழுந்து வீட்டுக்குப் போயிருப்பேன். ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று' போன்ற வார்த்தை விளையாட்டுகளை உரையாடல் ஆசிரியர் நிகழ்த்தியிருந்ததால் மட்டுமே ஒப்புக்குச் சப்பாணியாய் ஓரளவு படத்தில் சுவாரஸ்யம் கைகூடுகிறது.

தங்கச்சிக்கு நாய் கடிச்சிடிச்சி. அம்மாவுக்கு மஞ்சக்காமாலை. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஆயாவுக்கு பேதி என்று சகலகவலைகளோடு பொழுதுபோக்க திரையரங்குக்கு வரும் அப்பாவித்தமிழனை நிற்கவைத்து சவுக்கால் அடித்திருக்கிறார் இயக்குனர். இப்படம் முப்பது நாட்களை தமிழகத் திரையரங்குகளில் கடந்தால் அதுவே உலக அதிசயம்.

* - * - * - * - * - *

சில வருடங்களுக்கு முன்பாக உதயம் தியேட்டர் அருகில் சாலையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறிய விபத்து, சரவணா ஸ்டோர் மாடியில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்த பெண், ரயில்வே லெவல் கிராஸிங்கில் ஏற்பட்ட லாரி விபத்து என்று செய்தித்துணுக்குகளை சேகரித்து திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

படம் முழுக்க விரவியிருக்கும் சிறுகதைகளை நிறைய பேர் சிலாகிக்கிறார்கள். இதைவிட அருமையான ஓ பாசிட்டிவ் சிறுகதைகளை விக்கிரமன் படங்களில் இருபது வருடங்களாக கண்டு களித்துக் கொண்டிருக்கிறோம்.

அங்காடித்தெரு - அப்படியொன்றும் அழகில்லை!

30 மார்ச், 2010

சங்கம்!

மேற்படி வருத்தமில்லா வாலிபர் சங்கத்துக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் இப்போது வருந்துகிறேன். உண்மைத்தமிழன் என்ற பதிவர் தற்போது எழுதியிருக்கும் பதிவின் பாணியை வைத்துப் பார்த்தால் சங்கத்தை வைத்து உப்புமா வாங்கி சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

நான் ஆதரித்துப் பேசிய குழுமம் வேறு. உருவாகப் போகும் குழுமம் வேறு என்று தெரிகிறது. அப்பதிவு மூலமாக வெளிப்பட்டிருக்கும் வக்கிர சிந்தனைகள் மிக மோசமானது. இப்படிப்பட்ட ஆட்களின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்படும் சங்கம் அல்லது குழுமம் என்பதின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை ஜோசியம் பார்க்காமலேயே உணர்ந்துவிடலாம்.

தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்ற முறையில் பேசிக்கொள்ளும் பர்சனல் விஷயங்களை கூட பதிவுகளுக்கு எடுத்துவந்து பொதுவிவாதமாக எடுத்துச் செல்லும் போக்கு மிக மிக மோசமானது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். அதிலும் ஒரு பதிவரின் பணிக்கு வேட்டு வைக்கும் எண்ணத்தோடு விஷமத்தனமான முறையில் அந்த கடைசி பத்திகள் எழுதப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பதிவர் சந்திப்புகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது கூட தடைபடும். சந்திப்புகளில் கலந்துகொள்ளவே பலரும் யோசிப்பார்கள்.

ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இவ்வளவு ஆடுபவர்கள், ஆரம்பித்த பின்பு எவ்வளவு ஆடுவார்களோ? :-(

சங்கம், கிங்கம் என்றில்லாமல் வழக்கம்போல பதிவராகவே செயல்பட விரும்புகிறேன். கூட்டத்தில் ‘சங்கம் தேவை' என்று நான் கொடுத்த ஆதரவை, இப்பதிவின் மூலமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று மனவருத்தத்தோடு என்னை கூட்டத்துக்கு அழைத்து கருத்து சொல்லச் சொன்ன மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

29 மார்ச், 2010

வானிலை அதிகாரி விளக்கம்!

கடந்த அக்டோபர் மாதம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பினை கேட்டுவிட்டு ரெயின்கோட் போட்டு வந்து மழையே வராமல், கடுமையான வெயில் அடித்த ஒரு தினத்தில் எழுதிய பதிவு இது.

சென்னை வானிலை ஆய்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியான திரு கே.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பதிவினை வாசித்துவிட்டு, தனது விளக்கத்தினை நம்முடைய மின்மடல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.

திரு. கே.வி.பி. அவர்களின் கடிதம் கீழே :


திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,

இது தங்களுடைய வானிலை ஆராய்ச்சிமையம் பற்றிய அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ள செய்தி பற்றிய மின்னஞ்சல், தாமதத்திற்கு மன்னிக்கவும், இடையில் நான் தங்களின் வலைப்பூவில் என்னுடைய கருத்துக்களைப் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன், ஆனால் அது உங்கள் வலைப்பூவில் பதிவாகவில்லை,  எனவே இந்த மின்னஞ்சல்.

என் பெயர் கு,வை, பாலசுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் உதவி வானிலையாளராகப் பணிபுரிகிறேன், முனைவர் எஸ்.ஆர்.இரமணன் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான பணிகளின் அதிகார பூர்வ ஊடகத் தொடர்பாளர். அவர் விடுமுறையில் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் வெளியில் சென்றாலோ அவருக்குப் பதிலாக முனைவர் எஸ், பாலச்சந்திரன் என்பவரும் திரு ஈ.குழந்தைவேலு என்பவரும் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றுவர்.

வானிலை ஆய்வு மையம் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானவை. பல்வேறு விதமான தலைப்புக்கள் பற்றிய தங்களின் வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் அறிவியல் படித்தவராக் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.

வானிலை என்பது வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும், அதாவது பூமியை ஓட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றே இல்லாமல் அமைதியாக உள்ளதா? அல்லது புயல் வீசுகிறதா? வானம் மேகமற்று உள்ளதா அல்லது மேகமூட்டமாக உள்ளதா? என்பதனையே வானிலை என்கிறோம்.

வெதர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வானிலை மாற்றம். புயல். லேசான மழை. பெருந்துளி மழை.  துன்பங்களைச் சமாளித்தல். காற்றோடு கப்பலைச் செலுத்துதல்’  போன்ற பிற விளக்கங்களும் உள்ளன.

‘வானிலை. தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை. ஈர்ம்பதக்  குளிர்வாடை நிலை. காற்றின் திசை. காற்று விசையாலையின்  பாய்த்திரையின் சாய்கோண அளவு’ என்று பல விதமான பொருள் அளிக்கப்பட்டுள்ளது,

எனவே வானிலை என்பதனை ஓரு குறிப்பிட்ட இடத்தின் ஓரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக்கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாக சென்னையில் காலை எட்டு மணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி ஆகியவை உள்ளனவா? போன்ற வானிலைக் கூறுகளின் தொகுப்பே சென்னையின் அப்போதைய வானிலையாகும்.

எனவே வானிலையை அளவீட்டு முறையில் [Quantitative method] சொல்வதானால் இதனை பத்திற்கும் மேற்பட்ட மாறிகளால் [Variables] குறிப்பிடவேண்டும். இந்தியா முழுவதும் 559 தரைநிலைக் கண்காணிப்புக்கூடங்களிலிருந்து பெறப்படும் வானிலைத் தகவல்களை non linear equationஆக மாற்றி, கணினியில் கொடுத்து அடுத்தநாள் வானிலையின் சில கூறுகள் எவ்வாறு இருக்கும் என்று விடைகாண முயன்றால் தற்போது வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள கணினி வகைகள் 3 முதல் 12 மணி நேரத்தில் விடையளிக்கும். இவ்வகை கணினி வழி வானிலை முன் எச்செரிக்கைகளும் தவறாக இருக்கக்கூடும்.

இது தங்களின் குற்றச்சாட்டிற்கு ஓரு சிறிய விளக்கமே.  தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் எங்கள் அலுவலகத்திற்கு ஓரு நாள் வாருங்கள், மேலும் அதிக விளக்கங்ளைப் பெறலாம்.

இப்படிக்கு தங்கள்
கே.வி.பாலசுப்பிரமணியன்
M.Sc  (Physics), M.A (Tami), M.A(History,) M. Phil
Assistant Meteorologist,
Regional Meteorological Centre,
Chennai – 600006கே.வி.பி. சார்!

நான் அறிவியல் படித்தவனல்ல. ஒரு சராசரி மனிதனுக்கு வானிலை ஆய்வு மையம் மீது இருக்கும் அசட்டு கோபமே அப்பதிவில் வெளிபட்டது. அது எவ்வளவு அபத்தமானது என்பதை தங்களது கடிதம் மூலமாக உணர்கிறேன். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இதுபோன்ற அசட்டுக் கோபங்களை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிப்பது என்பது அரசுத்துறை மீதான என்னுடைய மதிப்பினையும், நம்பகத்தன்மையையும்  மேலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது. தங்களைப் போன்ற அதிகாரிகளால் தேசம் பெருமையடையும். நன்றி!

சென்னையில்தான் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

27 மார்ச், 2010

இணையக் கவிஞன்!


வண்ண வண்ண
சுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள்
பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை
இடித்துவிட்டான்
சத்தம் கேட்டு திரும்பிய
வண்ணத்துப் பூச்சிகள்
சத்தம் வராமல் சிரித்தன
அப்போது நான்
பெட்ரோல் பங்குக்கு
பக்கத்தில் இருந்த
பொட்டிக்கடையில்
சிகரெட்டு
பிடித்துக் கொண்டிருந்தேன்!

26 மார்ச், 2010

நீச்சல் கற்றுக் கொள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு சென்னையில் கீழ்க்கண்ட நீச்சல் குளங்களில் ‘நீச்சல் கற்றுக் கொள்' வகுப்பினை நடத்தி வருகிறது.

1. அண்ணா நீச்சல்குளம், மெரீனா

2. வேளச்சேரி நீச்சல்குளம்

3. ஷெனாய் நகர் நீச்சல்குளம்


'நீச்சல் கற்றுக்கொள்' தினமும் ஒருமணிநேர வகுப்பாக காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 12 நாட்கள் கொண்ட தொகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு நீச்சல்குள பொறுப்பாளர்களை அணுகலாம்.

அண்ணா நீச்சல் குளம். போன் : 2901250. கைப்பேசி : 9940341476

வேளச்சேரி நீச்சல் குளம். போன் : 22354381. கைப்பேசி : 9940341473

ஷெனாய் நகர் நீச்சல் குளம். போன் : 26474794. கைப்பேசி : 9940341480


முந்தையப் பதிவின் பின்னூட்டத்தில் உலக பிரபல எழுத்தாளர் ரைட்டர் சி.எஸ்.கே. அவர்கள் வலைப்பதிவுகளில் சிட்டிசன் ஜர்னலிசம் இல்லவே இல்லையென்றும், குறிப்பாக அதுகுறித்துப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருப்பதாலும் சமூகநலன் நோக்கில் இப்பதிவை இட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!


:-(

25 மார்ச், 2010

சென்னை பதிவர் சந்திப்பு 27-03-09 - சில எண்ணங்கள்!

27-03-09, சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இது குறித்த தோழர்களின் பதிவுகள் :

தண்டோரா

கேபிள்சங்கர்

பதிவர் சந்திப்புகள் பரவலாக நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமே.

ஆயினும் இப்பதிவர் சந்திப்பைப் பொறுத்தவரை, அதன் நோக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக இரண்டு விஷயங்களில்.

1. இணைய எழுத்தாளர்

2. சென்னை இணைய எழுத்தாளர் குழுமம்.


ஒன்று.

ஏன் இணைய எழுத்தாளர் என்ற புதிய சொல்லாடல் முன்வைக்கப் படுகிறது என்றே எனக்குப் புரியவில்லை. வலைப்பதிவர் என்ற சொல் எழுத்தாளர் என்பதை விட பன்முகத்தன்மை கொண்டது. எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்பதை நண்பர்கள் உணரவேண்டும். ஒரு வலைப்பதிவரால் தன் வலைப்பக்கத்தில் ஆடியோ மற்றும் வீடியோ ஆகிய தொழில்நுட்பங்களையும் மிகச்சுலபமாக பயன்படுத்த இயலும். முன்பு ஜெர்மனியில் இருந்து ஒரு பெண் பதிவர் தனது கவிதைகளை, அட்டகாசமான பின்னணி இசையோடு ஆடியோ பிளாக்கிங் செய்து வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.

அதுவுமின்றி வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய இரண்டு பணிகளை ஒருங்கே செய்துவருகிறார். எழுத்தாளர் வெறும் எழுத்தாளர் மட்டுமே. லாயிட்ஸ் ரோடு கோயில் இடிப்பு பற்றிய பத்ரியின் பதிவு நல்ல உதாரணம். எந்த ஊடகத்திலும் இச்செய்தி வெளிவருவதற்கு முன்பாக வரி மற்றும் ஒளி ஒலி வசதியோடு ப்ரிண்ட், டிவி மீடியாக்களை மிஞ்சும் பிரேக்கிங் நியூஸ். ஒவ்வொரு வலைப்பதிவரும் ஒரு சிட்டிசன் ஜர்னலிஸ்ட். எழுத்தாளர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் இல்லை. அவர்கள் அதிகபட்சம் செலிபிரிட்டீஸ் ஆகமுடியும். அவ்வளவுதான்!

தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் எழுத்தாளர்களுக்கும், அச்சு ஊடகங்களும் மாற்றாகவே வலைப்பதிவுகள் என்ற கருத்தாக்கம் ஆழமாக முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப எழுத்தில் செய்ய முடியாத சில மேஜிக்குகளை வலைப்பதிவுகளில் செய்யமுடியும் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. நிலைமை இப்படி இருக்கையில், ஏற்கனவே நாம் பதினாறு அடிதூரம் பாய்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ஏன் எட்டு அடி தூரத்தை கடப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்?

அதுவுமின்றி, இந்த ‘இணைய எழுத்தாளர்' என்ற சொல்லாடலை பிரபல எழுத்தாளர்கள் முன்மொழிகிறார்கள் என்பதில்தான் எனக்கு சந்தேகம் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது. அச்சு எழுத்தாளர்களிடமிருந்து (அவர்கள் இணையத்தில் இயங்கினாலும் கூட), இணையத்தில் எழுதுபவர்களை தரம்பிரிக்க தந்திரமாக சொல்லப்படும் வார்த்தையாகவும் இதை பார்க்கிறேன்.

மேலும், தனிப்பட்ட அளவில் என்னுடைய கருத்து என்னவென்றால், என்னை இதுவரை நான் எங்கும் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. நான்கு புத்தகங்கள் அச்சில் வெளிவந்திருந்தாலும் கூட 'எழுத்தாளர்' எனும் தகுதியை அடைந்துவிட்டதாக கருதவில்லை. இணையத்திலும் இயங்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இரா.முருகன், பா.ராகவன் போன்றோரும் எழுத்தாளர், நானும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் அபத்தம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. இதனால் மற்ற நண்பர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதை நான் நையாண்டி செய்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது என்னளவில் எனக்கான மதிப்பீடு.

எழுத்தளவில் என்னால் அவர்களை நிச்சயம் அடுத்த இரண்டு வருடங்களில் நெருங்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். கடுமையான பயிற்சியும், முயற்சியும் மட்டுமே இக்கனவை சாத்தியமாக்கும்.

இருப்பினும் இணையம் வேறு தளம். இங்கு ஒரு வலைப்பதிவராக என்னால் இறுமாப்பாக சொல்லிக் கொள்ளமுடியும். மேற்கண்ட எழுத்தாளர்கள் இங்கு எனக்கு வெறும் போட்டியாளர்கள் மட்டுமே. இவர்களில் சிலரை விட இங்கே நான் பிரபலமானவன். நான்தான் ராஜா. ஆகவே ‘இணைய எழுத்தாளர்கள்' என்றொரு சொல்லாடல் அறிமுகப்படுத்தப்படுமேயானால் என்னுடைய ராஜா பதவி பறிக்கப்பட்டு, சேவகனுக்கு கீழான செவிலியன் ஆகிவிடுவேன் என்ற இருத்தலியல் குறித்த பயமும் கூட இப்பதிவை எழுதுவதற்கு ஒரு நியாயமான காரணமாகிறது.


இரண்டு.

சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்ற பெயரில் பிராந்தியரீதியாக அடையாளப்படுத்துவதை, இணையம் என்ற அற்புதமான - உலகின் எம்மூலையையும் ஓரிரு வினாடிகளில் கடக்க சாத்தியப்படுத்தியுள்ள - தொழில்நுட்பத்தை கேவலப்படுத்தும் ஒரு செயலாகவே என்னால் பார்க்க முடிகிறது.

2007ஆம் ஆண்டில் வலைப்பதிவர் பட்டறை சென்னையில் நடந்தபோதே இதுபோன்ற விவாதங்கள் நடந்தது. இணையத்தில் பிராந்திய அடையாளங்கள் தேவையில்லை என்று அப்போது ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட பின்பே ‘தமிழ் வலைப்பதிவர் பட்டறை' என்ற பெயரில் சென்னையில் இருந்த வலைப்பதிவர்களால் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நன்றாக படியுங்கள். சென்னை வலைப்பதிவர் பட்டறை அல்ல, தமிழ் வலைப்பதிவர் பட்டறை. பாலபாரதி, மா.சிவக்குமார், விக்கி போன்ற பதிவர்களை கேட்டால் இதுகுறித்து நடந்த உள்வட்ட, வெளிவட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை குறித்து தெளிவாக விளக்கிக் கூறக்கூடும்.

தமிழ் வலைப்பதிவு சூழலில் பாண்டிச்சேரி பதிவர்கள் பிராந்திய அடையாளத்தை முதன்முதலாக முன்வைத்தவர்கள் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்தே திருப்பூர், ஈரோடு என்று தினந்தோறும் புதிய புதிய வலைப்பதிவர் சங்கங்கள் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது சென்னைப் பதிவர்களின் முறை போலும்.

கடந்த வாரம், இண்டிபிளாக்கர் சந்திப்புக்கு சில தமிழ்ப் பதிவர்கள் சென்றிருந்தோம். அங்கே வந்திருந்த வலைப்பதிவர்களும், விவாதிக்கப்படும் விஷயங்களும் வாய்பிளக்க வைத்தன. இந்திய வலைப்பதிவர்களை ஒன்றிணைக்க இண்டிபிளாக்கர் என்ற ஒரே குடை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தனித்தனியாக பிராந்தியரீதியாக பிரிந்திருந்தால் இண்டிபிளாக்கர் சாத்தியமாகி இருக்காது. நம் பதிவர்கள் அவ்வப்போது நடத்தும் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளைதான் அவர்களும் நடத்துகிறார்கள். ஆனால் முறைப்படுத்தப்பட்ட, தரமான முறையில் ‘யுனிவர்செல்' போன்ற பெரிய ஸ்பான்சர்களை பிடித்து அவர்களால் நடத்தப்படுகிறது.

எந்த நாட்டில் இருந்தாலும் ‘தமிழ் வலைப்பதிவர்கள்' என்ற ஒரே குடையின் கீழ் நாம் இணையாவிட்டால் எந்த காலத்திலும் இண்டிபிளாக்கர் சந்திப்பு போன்ற ஒரு சந்திப்பு நமக்கு சாத்தியமாகவே ஆகாது.

வேண்டுமென்றால் நிர்வாக வசதிக்காக 'தமிழ் வலைப்பதிவர் குழுமம், சென்னை', ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம், பாண்டி' என்று கிளையாக செயல்படலாம். எப்படியும் ஒரு ‘தலை' தமிழ்பதிவர்களுக்கு அவசியம். தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டி நிர்வாகங்கள், முன்னோடிகள் மற்றும் மூத்த பதிவர்களை கலந்தாலோசித்து விட்டு இப்படியொரு அமைப்பினை உருவாக்க நண்பர்கள் ஆலோசிக்கலாம்.

எதையுமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஓரிரு நண்பர்கள் கூடி, விவாதித்து செயல்படுத்தி விட முடியாது. பரவலான ஆலோசனைகளுக்கும், யோசனைகளுக்கும் பின்னரே செயல்படுத்தி பார்க்கப்பட வேண்டியது என்பது என் தாழ்மையான கருத்து.

எழுதிக்கொண்டே போனால் மிக நீண்டப் பதிவாக வரும் ஆபத்து இருப்பதால், வரும் 27ந்தேதி நடைபெறும் சென்னை பதிவர் சந்திப்பில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் இன்னும் விரிவாக பேசுவேன்.


தேதி : 27.03.10/சனிக்கிழமை

நேரம் : மாலை 5.30

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர் சென்னை –78

24 மார்ச், 2010

அழகுப்புயல் ஷீபா!

அழகுப்புயல் ஷீபாதான் இப்போது இந்திய ட்விட்டர்களின் ஹாட் ட்ரெண்ட். ட்விட்டரில் #PrincessSheeba என்ற ட்ரெண்டில் அம்மணியின் அழகுப் பெருமைகளை புட்டு புட்டு வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

http://princesssheeba.com/ போய் பாருங்கள். பேஜாராகிவிடுவீர்கள். இவர் மிஸ் தமிழ்நாடு 2007 ஆக தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்பது கூடுதல் தகவல்.

அம்மணி விஜய் ரசிகையாக இருக்கக்கூடும். தன்னை சுருக்கமாக இவ்வாறான பஞ்ச் டயலாக்கோடு அறிமுகப்படுத்திக் கொள்கிறார் : To tell about my character shortly. I will be DEAR TO THE NEAR ONES and TERROR TO THE REAR ONES.

எப்படியோ சாம் ஆண்டர்சன், வில்ஃப்ரட் ரேஞ்சில் ஷீபாவும் இணைய வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

22 மார்ச், 2010

வாத்தியார் வீட்டு மாஸ்டர்!

ஒரு விபத்து : கிருஷ்ணாவிடம் எப்போதும் இதே பிரச்சினை. எங்காவது வண்டியை நிறுத்தும்போது சைட் ஸ்டேண்ட் தான் போடுவான். திரும்பவும் வண்டியை ஓட்டும்போது சைட் ஸ்டேண்ட் எடுக்க மறந்துவிடுவான். ஒருமுறை இப்படித்தான் சைட் ஸ்டேண்ட் எடுக்காமல் அதிவேகமாக ஓட்டிச் சென்றான். கோவையின் புறநகர் பகுதியில் அவனது வீடு. ஒரு திருப்பத்தில் வேகத்தைக் குறைக்காமல் திரும்ப, எடுக்கப்படாத சைட் ஸ்டேண்ட் ஒரு கல்லில் மோதி, நிலைத்தடுமாறி, கீழே விழுந்து, வண்டி தேய்த்துக்கொண்டு போக...

பெட்ரோல் காலி : ஜெனிஃபர் தென்மாவட்ட நகரம் ஒன்றில் வசிக்கும் பெண். தனியார் பண்பலை வானொலி ஒன்றில் அறிவிப்பாளர். பணி நிமித்தமாக நடுஇரவில்தான் வீட்டுக்கு திரும்புவார். இயல்பிலேயே பரபரப்பானவர். தன்னுடைய இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட மறந்துவிடுவார். எவ்வளவு பெட்ரோல் டாங்கில் மீதம் இருக்கிறது என்பதை துல்லியமாக அறியமுடியாததே இதற்கு காரணம். ஒருநாள் 12 மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார். வண்டி நின்றுவிட்டது. பெட்ரோல் சுத்தமாக காலி. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பெட்ரோல் பங்க் எதுவும் அருகில் இல்லை. வீடு இன்னும் 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. வண்டியை எங்கும் விட்டுவிட்டும் செல்ல முடியாது. தள்ளிக்கொண்டே 7 கிலோ மீட்டர், நடு இரவில் நடப்பதும் ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பான செயல் கிடையாது...

காற்று புஸ்.. : சலீம்பாய் பெட்டிக்கடைகளுக்கு வெத்தலை, வாழைப்பழம் சப்ளை செய்பவர். சொந்த ஊர் சாயல்குடி. சென்னையில் வியாபாரம் செய்கிறார். தண்டையார் பேட்டையில் தொடங்கி, வண்டலூர் வரை நிறைய பெட்டிக்கடைகள் இவருடைய கஸ்டமர்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 200 கிலோ மீட்டர் வண்டி ஓட்டவேண்டும். வண்டியில் சரக்குகளை ஏற்றி சுற்றிக்கொண்டேயிருப்பார். அன்று இரவு பத்துமணிக்கு பெருங்களத்தூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். இரும்புலியூர் பாலத்தில் ஏறும்போது வண்டியில் லேசான தடுமாற்றத்தை உணர்கிறார். பின் சக்கரத்தில் காற்று குறைவாக இருக்கக்கூடும். இன்னும் நான்கைந்து கிலோ மீட்டரில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கும். அங்கே காற்றடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார். பாலத்தை விட்டு கீழே இறங்கும்போது ஓட்டமுடியாத அளவுக்கு வண்டி தடுமாறுகிறது. பஞ்சர். பெட்ரோல் பங்க் வரை வண்டியை தள்ளிக்கொண்டு போனால் பஞ்சர் போட்டுவிடலாம். சுத்தமாக காற்று இல்லாத நிலையில் அது சாத்தியமில்லை. ட்யூப் கிழிந்துவிடும். கொஞ்சமே கொஞ்சம் காற்று இருந்தாலும் போதும். அக்கம்பக்கம் எந்த கடையுமில்லை. என்னதான் செய்வது?

செயின் கழட்டிக்கிச்சி : குன்றத்தூரில் வசிக்கும் சங்கருக்கு ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தொழிற்சாலையில் பணி. காலையில் 7 மணிக்கெல்லாம் பணியிடத்தில் இருக்க வேண்டும். 6 மணிக்கு எழுந்து இருசக்கரவாகனத்தை உதைத்து, எதிர்காற்று முகத்தில் மோத பறப்பார். அன்று என்னவோ தெரியவில்லை செயின் லொடலொடவென்று சத்தமிட்டுக் கொண்டேயிருந்தது. வண்டியை சர்வீஸ் செய்து 2 மாதம் ஆகிவிட்டது. சர்வீஸுக்கு முன்பாக செயின் லொடலொடப்பது சகஜம். திடீரென வண்டி சுத்தமாக நின்றுவிட்டது. ஆக்ஸிலேட்டரை கொடுத்தால் விரூம்.. விரூம்.. என்று சத்தம் மட்டும் வருகிறது. இறங்கிப் பார்த்தால் செயின் கழட்டிக்கொண்டிருக்கிறது. சைக்கிள் செயினை மாற்றுவது போல சுலபமாக பைக் செயினை மாட்டிவிடமுடியாது. இன்னும் பதினைந்து நிமிடத்தில் தொழிற்சாலையில் இருக்கவேண்டும். இதுபோல நடப்பது சங்கருக்கு முதல் முறையல்ல...

நீங்கள் இருசக்கர வாகனம் ஓட்டுபவராக இருந்தால் இதே அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இந்த எல்லா அனுபவங்களும் உங்களில் ஒருவருக்கே ஏற்பட்டிருந்தால் நீங்கள் மகா துரதிருஷ்டசாலி. ஆயினும் காற்று குறைவது, பஞ்சர் ஆவது, செயின் கழட்டிக் கொள்வது, பெட்ரோல் இல்லாமல் போவதெல்லாம் சகஜம்தானே? இதற்கெல்லாம் பயந்தால் வண்டி ஓட்டமுடியுமா என்று கேட்பீர்கள்.

இதெற்கெல்லாம் மிக எளியத் தீர்வுகள், குறைந்த செலவில் கிடைக்கிறது என்றால் வேண்டாமென்றா சொல்லப் போகிறீர்கள்?

குரோம்பேட்டையில் முப்பது வருடங்களுக்கு முன்பாக சண்முகம் என்ற மெக்கானிக் மிகவும் பிரபலம். 100சிசி வாகனங்கள் வருவதற்கு முன்பான அந்த காலக்கட்டத்தில் மெக்கானிக் கடைகளே அபூர்வம். ஸ்கூட்டர் உள்ளிட்ட எல்லா வகையான வாகனங்களையும் திறமையாக பழுது பார்ப்பார் என்றாலும், சண்முகம் புல்லட் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயரெடுத்தவர். சென்னையில் புல்லட் வைத்திருந்தவர்கள் நிறைய பேர் கம்பெனி சர்வீஸுக்கு கொடுக்காமல், சண்முகத்திடம் வருவார்கள். நேர்மையான மெக்கானிக் என்று பெயரெடுத்தவர்.

இன்று குரோம்பேட்டை, தாம்பரம் பகுதியில் கடை வைத்திருக்கும் மெக்கானிக்குகளில் பெரும்பாலானவர்கள் சண்முகத்திடம் தொழில் கற்றுக்கொண்டவர்கள்தான். இதனாலேயே மெக்கானிக்குகள் மத்தியில் ‘வாத்தியார்’ என்று பெயரெடுத்தார் சண்முகம். இந்தப் பெயரே அவருக்கு நிலைத்துவிட, கஸ்டமர்களும் கூட சண்முகத்தை ‘வாத்தியார்’ என்றே அழைக்கத் தொடங்கினார்கள். விவரம் புரியாதவர்கள் சிலர் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பவர் மெக்கானிக் கடை வைத்திருக்கிறார் என்றுகூட நினைத்ததுண்டு.

அவருக்கு இரண்டு மகன்கள். ஊருக்கே தொழில் கற்றுக்கொடுக்கும் வாத்தியார் தனது மகன்களுக்கு கற்றுக் கொடுத்திருக்க மாட்டாரா? அவரது மகன்கள் மூர்த்தியும், ரவியும் இதே மெக்கானிக் தொழிலில் ஈடுபட்டார்கள். இப்போது குரோம்பேட்டை மேம்பாலத்திலிருந்து, சிட்லப்பாக்கம் செல்லும் சாலையில் ‘பாலாஜி சர்வீஸ் சென்டர்’ என்ற பெயரில் கடை வைத்திருக்கிறார்கள்.

கடை என்று சொல்லமுடியவில்லை. ஒரு பெரிய நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு வரும் அளவுக்கு நூற்றுக்கணக்கில் தினமும் இவர்களை தேடி கஸ்டமர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். மூர்த்தி நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள, இளையவர் ரவி கஸ்டமர்களை கவனித்துக் கொள்கிறார்.

மேற்கண்ட நான்கு பிரச்சினைகளுக்கும் தீர்வினை கண்டறிந்திருக்கிறார் வாத்தியாரின் இளையமகனான ரவி. இதில் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு பேடண்ட் விண்ணப்பித்து, ஒன்றுக்கு வாங்கிவிட்டார். மற்றொரு கண்டுபிடிப்புக்கு விரைவில் பேடண்ட் கிடைத்துவிடும்.

சைட் ஸ்டேண்ட் எடுக்காமல் வண்டி ஓட்டி விபத்து ஏற்படும் பிரச்சினைக்கு இவர் கண்டறிந்திருக்கும் தீர்வு மிக எளிமையானது. உங்கள் வண்டியில் சைட் ஸ்டேண்ட் போட்டிருந்தால், வண்டியை ‘ஆன்’ செய்யவே முடியாது. சாவி போடாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாதில்லையா? அதே தொழில்நுட்பம்தான் இதற்கும். இதுவரை சுமார் முப்பது வண்டிகளுக்கும் மேலாக இந்த தொழில்நுட்பத்தை செய்துக் கொடுத்திருக்கிறார். இதற்கு ஆகும் செலவு தோராயமாக ரூபாய் முன்னூற்றி ஐம்பது மட்டுமே. CIPR (Centre of Intellectual Property rights) நிறுவனம், இந்த கண்டுபிடிப்புக்கான பேடண்ட் உரிமையை ரவிக்கு வழங்கியிருக்கிறது.

இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் சில, இந்த தொழில்நுட்பத்தை தங்கள் வண்டிகளில் பயன்படுத்திக் கொள்ள ரவியை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பெரிய தொகையை சொல்லி ஆசை காட்டியபோதும், ரவி மறுத்திருக்கிறார். சைட் ஸ்டேண்ட் விபத்து பொதுவானது. எல்லா பிராண்ட் வண்டிகளிலும் ஏற்படக்கூடியது. ஏதாவது ஒரு நிறுவனத்துக்கு மட்டும் இந்த உரிமையை வழங்குவதின் மூலம், அந்த நிறுவனத்தின் வண்டிகளில் மட்டுமே இது செயல்படக்கூடும். இனி வரக்கூடிய எல்லா வண்டிகளிலும் இத்தொழில்நுட்பம் சாத்தியப்பட வேண்டும் என்பது ரவியின் ஆசை.

“குடித்துவிட்டு வாகனம் ஓட்டவேண்டாம் என்று சொன்னால் குடிப்பவர்கள் கேட்பதில்லை. சைட் ஸ்டேண்ட் எடுக்காமல் வண்டி ஓட்டி பெரும்பாலும் விபத்துக்குள்ளாபவர்கள் அவர்கள்தான். குடித்துவிட்டால் வண்டியை ஸ்டார்ட் செய்யமுடியாது என்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆசைதான். அது சாத்தியமில்லை என்பதால், சைட் ஸ்டேண்டை எடுக்காமல் வண்டியை ஸ்டார்ட் செய்யமுடியாது என்ற நுட்பத்தை கண்டுபிடித்தேன். கவனக்குறைவாக வண்டியை எடுப்பவர்கள் எல்லோருக்குமே இது பயன்படும். இதனால் விபத்தின் எண்ணிக்கை குறைந்தால், அதுவே எனக்கு மனத்திருப்தி” என்று நகைச்சுவை கலந்து சொல்கிறார் ரவி. எல்.ஐ.சி.யில் பணிபுரியும் சுப்பிரமணி என்ற கஸ்டமர், இந்த கண்டுபிடிப்பை செய்யுமாறு ஊக்கப்படுத்தினாராம்.

இப்போது பெரும்பாலான வண்டிகளில் பெட்ரோல் எவ்வளவு டாங்கில் இருக்கிறது என்று கண்டறியும் தொழில்நுட்பம் இருக்கிறது. அது துல்லியமானதல்ல. வெறும் 100 மில்லி பெட்ரோல் இருக்கும்போது கூட ஒரு லிட்டருக்கும் மேல் பெட்ரோல் இருப்பதாக மீட்டர் காட்டுகிறது. இது வண்டி தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் தெரியும். துல்லியமான மீட்டரை கண்டறியும் ஆராய்ச்சிக்கு பல லட்சங்களை இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் செலவழித்து வருகின்றன.

ரவி இதற்கான தீர்வை மிக எளிமையாக கண்டறிந்திருக்கிறார். பெட்ரோல் டாங்கில் சில மாற்றங்களை செய்தால் போதும். டாங்கில் எவ்வளவு பெட்ரோல் இருக்கிறது என்பதை துல்லியமாக வண்டி ஓட்டுபவர் தெரிந்துகொள்ளலாம். இதனால் பெட்ரோல் பங்கில் குறைவாக பெட்ரோல் போடுகிறார்களா என்பதையும் கண்காணிக்க முடியும். இந்த பெட்ரோல் ரீடரை நம் வண்டியில் பொருத்த தோராயமாக ரூபாய் ஆயிரத்து ஐநூறு மட்டுமே ஆகும். இதற்கு இணையான கண்டுபிடிப்பினை ஒருவர் அமெரிக்காவில் கண்டறிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே இக்கண்டுபிடிப்புக்கு ரவி இன்னமும் பேட்டண்ட் உரிமைக்காக விண்ணப்பிக்கவில்லை.

வண்டி ஓட்டுபவர்களுக்கு பெரிய பிரச்சினை செயின் கழண்டுக்கொள்வது. சர்வீஸ் செய்யும்போது சரியாக ‘டென்ஷன் செட்’ செய்துக் கொடுக்கிறார்கள். ஓட்ட, ஓட்ட லூஸ் ஆகி லொடலொடவென்று வரும் சத்தம் வண்டி ஓட்டிகளுக்கு பெரிய எரிச்சல். இதற்கான தீர்வுதான் ‘ஆட்டோமேட்டிக் செயின் டைட்டர்’. செயின் லூஸ் ஆனால், அதுவே ‘அட்ஜஸ்ட்’ ஆகுவதுதான் இந்த தொழில்நுட்பம். கடையில் வேலை பார்க்கும் பையன் ஒருவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இதை கண்டறிந்திருக்கிறார் ரவி. சுமார் இருநூற்றி ஐம்பது ரூபாய் மட்டுமே இதற்கு செலவு ஆகும்.

வண்டியிலேயே அளவுபார்த்து காற்றடிக்கும் இயந்திரம்தான் ரவியின் கண்டுபிடிப்புகளில் மாஸ்டர்பீஸ். உங்கள் வண்டியில் காற்று குறைவாக இருந்தால், காற்றடிக்கும் கடையை தேடி அலையவேண்டாம். ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு பத்து, பதினைந்து நொடிகளுக்குள் ஒரு சக்கரத்துக்கு காற்று அடித்துவிடலாம். அளவு பார்க்க மீட்டரும் வண்டியிலேயே பொருத்தப் பட்டிருக்கும். பஞ்சர் ஆகும் பட்சத்தில் கூட வண்டியை நிறுத்தாமல், தற்காலிகமாக காற்றடித்துவிட்டு வண்டி ஓட்டலாம் என்பது எவ்வளவு பெரிய விடுதலை? இக்கண்டுப்பிடிப்பின் மூலமாக இருசக்கர வாகனங்களின் ட்யூபையும், டயரையும் நீண்டகாலத்துக்கு பாதுகாக்க முடியும். மிக விரைவில் இக்கண்டுப்பிடிப்புக்கும் பேட்டண்ட் உரிமை கிடைத்துவிடுமாம்.

பெரிய நிறுவனங்களில் இயந்திரவியலில் பெரிய படிப்புகள் படித்தவர்கள் பலகால ஆய்வுக்குப் பிறகு கண்டறியக்கூடிய கண்டுபிடிப்புகள் இவை. +2 முடித்துவிட்டு, ஐ.டி.ஐ.யில் படித்த 40 வயது ரவி, அனாயசமாக அடுத்தடுத்து கண்டுபிடித்துக் கொண்டே போகிறார். பெட்ரோல் இல்லாமல் காற்றின் அழுத்தத்தில் வண்டிகளை ஓடவைக்கும் கண்டுபிடிப்புக்கான முயற்சியில் இப்போது தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறார்.

“சாலையில் வண்டி ஓட்டுபவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், வண்டிகளை தயாரிப்பவர்களுக்கு தெரியாது. எங்களைப் போன்ற மெக்கானிக்குகளுக்குதான் தெரியும். அந்த நிறுவன்ங்களிடம் போய், இதுபோல செய்துகொடுங்களேன் என்று கேட்டால், எங்களைப் போன்ற சிறுமெக்கானிக்குகளை மதிப்பதேயில்லை. எனவே என் கஸ்டமர்களுக்கு எது தேவையோ, அதை நானே கண்டுபிடித்துக் கொள்கிறேன்!” என்கிறார்.

இதுபோன்ற லோக்கல் மெக்கானிக்குகளின் படைப்பாற்றல் திறனை ஊக்கப்படுத்தும் வண்ணம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹரின் ஏற்பாட்டில் அவ்வப்போது பயிற்சிப்பட்டறைகள் நடக்கிறது. இது நிறைய மெக்கானிக்குகளுக்கு ஊக்கம் அளித்துவருகிறது.

கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள், லேத் பட்டறையில் தான் கேட்ட வடிவங்களில் எல்லாம் இயந்திரங்களை மாற்றியமைத்துத் தருபவர்கள், டிங்கரிங் பணியாளர்கள் என்று பலரின் உழைப்பில்தான் இந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமானது என்று தனக்கான பாராட்டுகளை மற்றவர்களோடும் பகிர்ந்துகொள்கிறார் ரவி. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட இயந்திரங்களை வெறுமனே பழுதுபார்த்துக் கொண்டிருப்பது சலிப்பை ஏற்படுத்தியதாலேயே, கண்டுபிடிப்புகளின் மீதான ஆர்வம் இவருக்கு ஏற்பட்டதாம்.

வாத்தியார் வீட்டு பிள்ளை மக்கு என்று யார் சொன்னது?

(நன்றி : புதிய தலைமுறை)

பி.கு : இந்த கட்டுரை அச்சாகிக் கொண்டிருந்த நேரத்தில் அடுத்த கண்டுபிடிப்பை கண்டறிந்துவிட்டதாக ரவி தொலைபேசினார். கிளட்ச் கேபிள் திடீரென்று கட்டாகி உயிரை வாங்குகிறதில்லையா? இதற்கும் தீர்வை கண்டறிந்திருக்கிறாராம்.

பதிவர் சென்னை தமிழன் அறிமுகப்படுத்திய நண்பர் இந்த மெக்கானிக்!

20 மார்ச், 2010

வரலாறு படியுங்க எழுத்தாளரே!

நைஜீரியாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை எழுத்தாளருக்கு ஒரு வாசகர் அனுப்பினாராம். உடனே ஞானமரபு துணைகொண்டு எழுத்தாளரும் ஒரு நைஜீரிய-இந்திய ஒப்புமை கட்டுரை வரைந்திருக்கிறாராம். பாழாய்ப்போன தமிழ் இலக்கிய எழுத்துச்சூழலில்தான் இதுமாதிரி நகைச்சுவைகள் நடக்கும். நாவலாசிரியர்கள், பத்தி எழுத்தாளர்கள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாக மாறும் கூத்து இங்கேதான் நடக்கும்.

எழுத்தாளர் நைஜீரியச் சூழலை ஆழமாக ஆற அமர நீண்டகாலமாக அவதானித்து வருகிறாராம். ஏனெனில் அங்கே ‘இஸ்லாம்’ இருக்கிறது. அரேபியாவில் இருந்து இஸ்லாம் அங்கே போனதுதான் இன்றைய நைஜீரிய அவலங்களுக்கு காரணம் என்று வருத்தப்படுகிறார் எழுத்தாளர். எழுத்தாளரின் மனிதநேயத்தை கண்டு நாமெல்லாம் புல்லரித்துப் போகலாம்.

இதோடு விட்டுவிட்டிருக்கலாம் நம் எழுத்தாளர். அடுத்து வரலாற்றினை நோண்டி, நொங்கெடுக்கிறார்.

இந்தியவரலாற்றில் என்ன வேறுபாடு? இங்குள்ள இஸ்லாம் அல்லாத பேரரசுகள் இஸ்லாமை கட்டுப்படுத்தி பேரழிவில் இருந்து இந்தியாவைக் காத்தன என்பதே. தங்குதடையிலா அதிகாரம் இஸ்லாமுக்கு எப்போதுமே கிடைத்ததில்லை. ராஜபுத்திரர்கள், அதன்பின் விஜயநகரம், அதன் பின் மராட்டியர்கள் என வலுவான எதிர்விசை எப்போதும் இருந்தது. எந்நிலையிலும் போர் நிகழ்ந்துகொண்டே தான் இருந்தது. ஆகவே சமரசம் மூலமே இஸ்லாமியர் ஆளமுடிந்தது. நேரடி ஆட்சி அமையவில்லை, கப்பம் கட்டும் நாடுகளின் தொகையாகவே இஸ்லாமிய ஆட்சி நீடிக்க முடிந்தது.

என்ன கொடுமை சார் இது? இதுவரை இந்திய வரலாற்றை ஆராய்ந்த எந்த ஆராய்ச்சியாளருமே இவ்வளவு நுட்பமான விஷயத்தை சொன்னதேயில்லையே?

அவுரங்கசீப் காலக்கட்டத்தில்தான் socalled இந்துஸ்தானம் என்று சொல்லப்படுகிற இந்தியா மிகப்பரந்த நிலப்பரப்பை கொண்டிருந்ததாக தவறாக இதுவரை நாம் வரலாற்றைப் புரிந்துக் கொண்டிருக்கிறோம். தங்குதடையில்லா அதிகாரம் இஸ்லாமுக்கு இங்கே கிடைக்காததால்தான் ஒருவேளை பல இந்திய சிற்றரசர்கள் அவர்களாகவே முன்வந்து இஸ்லாமை தழுவினார்களோ?

ராஜபுத்திரர்கள், விஜயநகரம், மராட்டியர்கள் எல்லாம் இஸ்லாமை இங்கிருந்து ஓட ஓட விரட்டியடித்ததாக இப்போதுதான் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுக்கு எல்லாம் பயந்து, பணிந்து போய்தான் முகலாயர்களால் நூற்றாண்டுக்கால சாம்ராஜ்யத்தை இங்கே நிறுவமுடிந்தது என்பதையும் எழுத்தாளர் தனது ஞானமரபு தந்த உள்ளொளி தரிசனத்தால் உணர்ந்து நமக்கு எடுத்தியம்புகிறார்.

சொல்வது எழுத்தாளர் ஆயிற்றே? நாமும் நம்பிவிட்டு வாசகர் கடிதம் அனுப்புவோம். பாராட்டி பின்னூட்டம் போடுவோம்.

எழுத்தாளருக்கு அவரது வாசகர் அனுப்பியிருக்கும் நைஜீரிய படத்தைப் போன்று சில படங்களை, நமக்கும் நம் வாசகர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். அவற்றில் பல படங்களை இங்கே பிரசுரிக்கவே இயலாத வகையில் இருக்கின்றன. யாருக்காவது நேரம் நிறைய இருந்தால் Gujarat atrocity என்று டைப் செய்து கூகிளில் தேடி பார்க்கலாம். ஒரு சில படங்களை மட்டும் இங்கே பிரசுரிக்கிறோம்.

நைஜீரியாவுக்கும், இந்தியாவுக்கும் இந்த விஷயத்தில் என்ன வேறுபாடு என்று எழுத்தாளர் ரேஞ்சில் நாமும் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். அங்கெல்லாம் இனக்குழுக்களின் மோதலில் இதுபோன்ற வன்முறைகள் நிகழும். இங்கே மோதலுக்கு காரணமாக இருப்பவரே அப்பகுதியினை ஆளக்கூடிய அதிகாரத்தில் இருப்பார். எதிர்குழு பெண்களின் யோனிகள் நம் குழு இளைஞர்களின் விந்துகளால் நிரம்பட்டும் என்று மேடையில் முழங்குவார்.


கனவில் விமானம் பிடித்து, நைஜீரியாவுக்குப் போய் மனிதநேயம் காட்டும் எழுத்தாளரே, கூரை ஏறிப் பாருங்கள் போதும். குஜராத் தெரியும்.

19 மார்ச், 2010

கென்ய புரட்சித்தலைவி!

வாங்கரி முடா மாத்தாய் (Wangari Muta Maathai). கென்ய நாட்டைச் சேர்ந்த முனைவர். தொடர்ச்சியான வளர்ச்சி, ஜனநாயகம் மற்றும் அமைதிக்காக பாடுபட்டவர் என்ற அடிப்படையில் 2004ஆம் ஆண்டு நோபல் பரிசு வென்றவர். இப்பரிசினை வென்ற ஆப்பிரிக்காவின் முதல் பெண்மணி இவர்தான். நோபல் வென்ற முதல் சுற்றுச்சூழலாளர் என்ற பெருமையையும் மாத்தாய் பெறுகிறார்.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்த கென்யாவின் நைரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் ஏப்ரல் 1, 1940 அன்று மாத்தாய் பிறந்தார். கிக்குயூ என்ற கென்ய பழங்குடி இனத்தைச் சார்ந்த மாத்தாயின் தந்தை ஒரு வெள்ளையரின் பண்ணையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஆரம்பக் கல்வியை ஒரு கிறிஸ்தவ மெஷினரி பள்ளியில் மாத்தாய் கற்றார். பதினாறு வயதில் பள்ளி படிப்பை முடித்திருந்தபோது, அப்பள்ளியின் சிறந்த மாணவியாக மாத்தாய் இருந்தார்.

பட்டம் முடித்தபிறகு உகாண்டாவில் ஒரு பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது மாத்தாயின் ஆவல். காலனி ஆதிக்கத்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்கா விடுபட்டுக் கொண்டிருந்த காலம் அது. வளர்ச்சி காரணங்களுக்காக ஆப்பிரிக்க நாட்டினருக்கு அமெரிக்காவில் கல்விச்சலுகை தொடங்கிய நேரமும் கூட. அமெரிக்க பல்கலைக் கழகங்களில் 300 கென்யர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களில் மாத்தாயும் ஒருவர்.

கான்சாஸ் நகரில் ஒரு பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டத்தை பெற்றார். பின்னர் ஜெர்மனியின் பிட்ஸ்பர்க் நகரில் உயிரியல் முதுகலை பட்டம் வென்றார். பிட்ஸ்பர்க் நகரில் படித்துக் கொண்டிருந்தபோது மாத்தாயுக்கு சுற்றுச்சூழல் குறித்த அக்கறையும், ஆர்வமும் ஏற்பட்டது. நகரின் காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த முன்வந்தார். அக்காலக் கட்டத்தில் கென்யர்கள் பட்டப்படிப்பு படிப்பதே அதிசயம். அதிலும் பெண்ணான மாத்தாய் பட்டங்களுக்கு மேல் பட்டங்களாக குவித்துக் கொண்டிருந்தது, அதிசயத்திலும் அதிசயம்.

படிப்பு போதும் என்று முடிவெடுத்தவர் தன்னுடைய 26வது வயதில் தாய்நாட்டுக்கு திரும்புகிறார். கென்ய தலைநகர் நைரோபியில், ஒரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு உதவியாளராக பணிக்கு சேருகிறார். சேர்ந்த சில மாதங்களிலேயே இப்பணி வேறொருவருக்கு வழங்கப்பட்டது. தான் பழங்குடியினத்தில் பிறந்த பெண் என்பதாலேயே தன்னை நிராகரிக்கிறார்கள் என்பதை உணர்ந்தார்.

இரண்டுமாத தீவிர வேலை தேடுதலுக்குப் பிறகு கால்நடைப் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆராய்ச்சி உதவியாளர் பணி மீண்டும் கிடைக்கிறது. குடும்ப வருமானத்துக்காகவும், தன்னுடைய தங்கைகளுக்கு வேலை கொடுக்க வேண்டுமென்ற காரணத்துக்காகவும் வாடகைக்கு ஒரு கடையை நடத்துகிறார். ஓரளவுக்கு பொருளாதார நிலைமையை சரி செய்துவிட்டு மீண்டும் ஜெர்மனிக்கு படையெடுக்கிறார்.

படிப்பு முடிந்து மீண்டும் நைரோபிக்கு திரும்புகிறார். இதே காலக்கட்டத்தில் தான் மாத்தாய், அமெரிக்காவில் படித்த ஒருவரை தனது கணவராக தேர்ந்தெடுக்கிறார். 1971ஆம் ஆண்டு பி.எச்.டி (Doctorate of Anatomy) பட்டம் பெறுகிறார். கிழக்கு ஆப்பிரிக்காவிலேயே இப்பட்டத்தை பெற்ற முதல் பெண்மணி இவர்தான். அடுத்தடுத்து இவர் பெற்ற பெருமைகள் பெரும்பாலானவற்றை முதலில் பெற்றவராக அவர் இருக்க இதுதான் முதல்படி.

யூனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் நைரோபியில் பேராசிரியராக பணிக்கு சேர்ந்தார். அங்கு ஆண்களுக்கு இணையான முக்கியத்துவம் பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று போராடினார். பல்கலைக்கழக பணியாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களது உரிமைகளை வென்றெடுக்க ஒரு சங்கமும் அமைத்தார்.

பணியிடம் மட்டுமன்றி, வெளியிலும் மாத்தாய் சமூகப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். கென்ய ரெட் க்ராஸ் அமைப்பின் இயக்குனராக பணியாற்றினார். ஐக்கியநாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி கென்யாவில் தொடங்கப்பட்ட ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிலும் தீவிர உறுப்பினராக இருந்தார். தேசிய கென்ய பெண்கள் அமைப்பிலும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தார். பல்வேறு அமைப்புகளிலும், பல்வேறு பொறுப்புகளில் ஈடுபட்டிருந்ததால், அவரது நாட்டின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்று அவரால் அறிந்துகொள்ள முடிந்தது. அது, சுற்றுச்சூழல் சீர்கேடு.

இதற்கிடையே மாத்தாயின் கணவர் பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பேன் என்று மக்களுக்கு வாக்குறுதி தந்திருந்தார். மரங்கள் வளர்ப்பதின் மூலமாக வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியும் என்று மாத்தாய் தனது கணவருக்கு யோசனை சொன்னார். மரங்கள் வளர்க்கப்படுவதின் மூலமாக தனிமனிதனுக்கும், ஒவ்வொரு மனிதனும் வளர்ப்பதால் ஒட்டுமொத்தமாக காடுகள் உருவாகி நாட்டுக்கும் பொருளாதார ஆதாயம் கிடைக்கும் என்பது அவரது திட்டம். இதற்காக என்வைரோகேர் என்றொரு நிறுவனத்தை தொடங்கினார்.

யார் கண் பட்டதோ தெரியவில்லை. மாத்தாய்க்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. விவாகரத்து செய்துகொண்டார்கள். விவாகரத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பையடுத்து, நீதிபதியை மாத்தாய் விமர்சிக்க, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு அவர்மீது பாய்ந்தது. மூன்றுநாட்கள் சிறையில் கூட இருந்தார். பின்னர் அவ்வழக்கின் மேல்முறையீட்டில் விடுதலை ஆனார். கணவரின் ஆதரவை இழந்தவர், வழக்கு தொடர்பாகவும் நிறைய செலவு செய்திருந்தார். சேமிப்பு மொத்தமாக கரைந்த நிலையில் தன்னுடைய மூன்று குழந்தைகளை வளர்க்க இயலாமல், முன்னாள் கணவரிடம் கண்ணீர் மல்க சேர்ப்பித்தார்.

ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்நேரத்தில் கிழக்கு ஆப்பிரிக்க பொருளாதார கமிஷன் நியமிக்கப்பட்டது. அதில் பணியாற்றும் வாய்ப்பு மாத்தாய்க்கு வீடு தேடிவந்தது. தேசிய கென்ய பெண்கள் அமைப்பின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன்னை நாடிவந்த பொறுப்புகளை சிறப்பாக செய்ததால், அவருக்கு மேலும் மேலும் பல அமைப்புகள் பொறுப்பினை வழங்க முன்வந்தன.

க்ரீன்பெல்ட் என்று அழைக்கப்படும் பசுமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐக்கிய நாடுகள் சபை, பெண்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கும் நிதியை பெற்று, ‘பணத்தை விதையுங்கள்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தினார்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, மரங்கள் விதைப்பதின் மூலம் சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்க முடிந்தது. மரங்களின் மூலமாக பொருளாதார ஆதாயத்தையும் பெண்கள் பெற்றார்கள். மரங்களை விதைக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. அவற்றை பரமாரிப்பது தொடர்பான வேலைவாய்ப்புகளும் பெருகின. நர்சரி எனப்படும் தோட்டக்கலை தொழில் பரவலாக்கப்பட்டது.

1985ல் நைரோபியில் ஐ.நா.சபையின் உலகளாவிய பெண்கள் மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு வந்தவர்களிடம், பசுமை இயக்கத்தின் மூலமாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, எப்படி வேலைவாய்ப்பையும் பெருக்கி வருகிறோம் என்பதை மாத்தாய் விளக்கின் சொன்னார். திட்டத்தின் வெற்றியை கண்டவர்கள் இத்திட்டத்தை கென்யா தாண்டி, மற்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதைத் தொடர்ந்து இத்திட்டம் Pan-African Green Belt network என்ற பெயரில் விரிவாக்கப்பட்டது. அடுத்த மூன்று வருடங்களில் பதினைந்து நாடுகளை சேர்ந்த நாற்பத்தைந்து பிரதிநிதிகள் கென்யாவுக்கு வந்து மாத்தாய் நிகழ்த்திய அதிசயத்தை நேரில் கண்டு, தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சொன்னார்கள்.
இப்போது கென்யாவில் மட்டுமே மாத்தாயின் இயக்கத்துக்கு சுமார் 600 சமூகக்கிளைகள் உண்டு. சுமார் இருபது நாடுகளில் மூன்று கோடியே பத்து லட்சம் மரங்களை புதியதாக வளர்த்திருக்கிறார்கள். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். அவரும், அவருடைய அமைப்பும் இப்பணிக்காக ஏராளமான விருதுகளை குவித்துக் கொண்டேயிருக்கிறார்கள். முத்தாய்ப்பாக 2004ஆம் ஆண்டு கிடைத்த நோபல் பரிசு.

“நாம் நடுவது மரங்களை அல்ல, திட்டங்களை” என்கிறார் மாத்தாய். ‘திட்டம்’ என்ற ஒரு சொல்லுக்கு ஏராளமான பொருள் உண்டு. பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் என்று மாத்தாய் விதைத்த திட்டங்களின் பலனை இன்று ஆப்பிரிக்க நாடுகள் அனுபவித்து வருகின்றன.

அவர் கென்ய அரசியலிலும் ஈடுபட்டு வெற்றிகளையும், தோல்விகளையும் மாறி, மாறி மாறி கண்டு வருகிறார். கென்ய ஜனநாயகத்துக்கு வலிமை சேர்த்துவரும் உரத்த குரல் மாத்தாயினுடையது. இந்திய அரசும் ஜவஹர்லால் நேரு விருது கொடுத்து மாத்தாயை கவுரவித்திருக்கிறது.

பழங்குடியினத்தில் பிறந்த பெண் என்பது மாத்தாய்க்கு ஆரம்பகாலத்தில் பெரிய தடைக்கல்லாக இருந்தது. குடும்பத்திலும், சமூகத்திலும் ஏற்பட்ட பிரச்சினைகளை கண்டு மலைத்துப்போய் உட்கார்ந்துவிடாமல், விடாமுயற்சியோடு அடுத்தடுத்து ஓடிக்கொண்டே இருந்ததால்தான் நோபல் என்னும் உயரத்தை அவர் எட்ட முடிந்தது. பெண்கள் எல்லோருக்குமே மாத்தாயின் வாழ்க்கை கலங்கரை விளக்கம்தான் இல்லையா?

18 மார்ச், 2010

ஓடு.. ஓடு.. ஓடு.. ஓடு..

ஞாயிறு விடியல்கள் கொஞ்சம் சோம்பலாகவே சென்னையில் விடியும். அந்த ஞாயிறு விதிவிலக்கு. அதிகாலையிலேயே கடற்கரைச்சாலை கலர்கரைசாலையாக கலகலத்துக் கொண்டிருந்தது. பதினைந்தாயிரம் பேர் அண்ணாசமாதி எதிரில் குவிந்துவிட, போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடற்கரைச் சாலையின் ஒட்டுமொத்த போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
கூடியிருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள்.

மேடையில் விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான், சென்னை மாநகர மேயர் சுப்பிரமணியன் என்று முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தார்கள். நூற்றுக்கணக்கான போலிசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தார்கள்.
சிகப்பு வண்ண ஆடையில் பேண்ட் குழுவினர் இசையமைத்துக் கொண்டேயிருக்க, என்.சி.சி. மாணவர்களின் மிடுக்கான நடை, ஒரே வண்ண ஆடையில் மாநகராட்சி மாணவிகளின் அணிவகுப்பு என்று அச்சூழலே திருவிழாக் கொண்டாட்டமாக இருந்தது.

கூட்டத்தை அடக்குவது போலிசாருக்கு சிரமமாக இருந்தது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஜோக் அடித்துக் கொண்டும், கலாய்த்துக் கொண்டும், வயதுக்கேயுரிய குறும்பர்களாக இருந்தார்கள். டீஷர்ட்டில் மிடுக்காக தொப்பி அணிந்து வந்திருந்தார் தமிழ்நாடு தடகளச் சங்கத்தின் தலைவரான வால்டர் தேவாரம். ‘பசங்க’ளின் கலாய்ப்பு கண்டு, வீரப்பன் கண்களில் விரல்விட்டு ஆட்டியவரே கொஞ்சம் விரக்தி ஆகிவிட்டார்.

இந்த கொண்டாட்டமும், கோலாகலமும் எதற்காக?

ஸ்பீக்கர்களில் காதைப் பிளக்கும் சத்தத்தோடு ஒரு பாப் பாடல் ஒலிபரப்பாகிறது. “நான் மாறத்தான், நீ மாறத்தான், ஊர் மாறத்தான், எல்லாமே மாறத்தான்.. சென்னை மாரத்தான்!”

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சென்னையில் ஆண்டுக்கொரு முறை மாரத்தான் போட்டிகளை நடத்தி வருகிறது. இம்முறை நடந்தது எட்டாவது மாரத்தான். தமிழகத்தில் சர்வதேச அளவில் நடத்தப்படும் மாரத்தான் போட்டி இது. சர்வதேச வீரர்கள் பலரும் வெளிநாடுகளில் இருந்து கலந்துகொள்ள வந்திருந்தார்கள்.

மொத்தம் ஒன்பது பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ஆண்களுக்கான முழு மாரத்தான், அரை மாரத்தான், 10 கி.மீ. தூரம் ஓடக்கூடிய மினி மாரத்தான், மாணவ-மாணவியருக்கான 5 கி.மீ மாரத்தான், நிறுவன அலுவலர்களுக்கான மினி மாரத்தான் என்று தனித்தனியாக போட்டிகள் நடந்தது.

போட்டிகள் துவங்குவதற்கு முந்தைய நாள், பங்கேற்பாளர்கள் அனைவருக்குமே மருத்துவப் பரிசோதனை நடந்தது. போட்டியின் போது மருத்துவர்கள் மற்றும் முதலுதவிக்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. பந்தயம் நடைபெற்ற ஒட்டுமொத்த தூரமும் முதலுதவி, குடிநீர், ஆம்புலன்ஸ் மருத்துவ வசதி என்று எல்லாமே ‘பக்கா’வாக இருந்தது.

ஒவ்வொரு பிரிவாக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட, வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக வீரர்கள் ஓடத்தொடங்கினர். ஆண்கள், பெண்கள், பள்ளி மாணவர்கள் என்று அடுத்தடுத்து ஓடத்தொடங்க, மேடையில் இருந்த மேயருக்கும் ஆசை வந்துவிட்டது. திடீரென்று அவரும் போட்டியாளர்களோடு ஓடுவதற்கு கோதாவில் குதிக்க, வேடிக்கை பார்த்தவர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள்.

ஓடத்தொடங்கும்போது இருக்கும் உற்சாகம் ஒரு கிலோ மீட்டரிலேயே பலருக்கும் வடியத் தொடங்கி விடுகிறது. ஓட்டப் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே தொடர்ச்சியாக ஓடுகிறார்கள். மற்றவர்கள் மெதுவாக பேசியப்படியே நடக்கத் தொடங்கிவிடுகிறார்கள். போட்டி முடியும் இடத்துக்கு ஓடிவருபவர்கள் நிறைய பேர் மயங்கி விழுந்துவிடுவதை காணமுடிகிறது. கலந்து கொண்டவர்களில் பாதிபேர்தான் ஓட்டத்தூரத்தை முழுமையாக கடக்கிறார்கள். மீதி பேர் ஆங்காங்கே கழண்டு கொள்கிறார்கள்.

முழுமையான பந்தயத்தை முடித்தவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்னை மேயர் 5 கிலோ மீட்டர் தூரத்தையும் ஓடிக்கடந்தார் என்றாலும், சான்றிதழ் வாங்க மறந்துவிட்டார். நம்மோடு ஓடிக்கொண்டிருந்தவர் மேயர் என்பதையே பலரும் நம்பாமல் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள்.

ஒட்டுமொத்தமாக வழங்கப்பட்ட பரிசுத்தொகை பதினொன்றரை லட்ச ரூபாய். முழு மாரத்தான் பந்தயத்தில் வென்றவர் வழக்கம்போல ஒரு கென்ய வீரர். பெயர் அகஸ்டின் ரோனோ. 42.2 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி 14.5 நிமிடங்களில் கடந்து வென்றார்.

17 மார்ச், 2010

விலைவாசி எதிர்வினை - Writer Visa

விலைவாசி குறித்த ஈரோடு அருணின் கருத்துக்கு எழுத்தாளர் விசாவின் எதிவினை இது :

சில வருடங்களுக்கு முன்பு அமைச்சர் ஆற்காட்டார் ஒரு அறிக்கை விட்டார் அதில் "எல்லோரும் நன்றாக சம்பாதிக்கிறார்கள். எல்லோரிடமும் பணம் இருக்கிறது. அதனால் செலவு செய்ய யாரும் தயங்குவதில்லை. விலை வாசி உயர்ந்தால் என்ன? விலை வாசி உயர்வால் யாரும் பாதிக்கப்படவில்லை". இப்படி ஒரு பாமரத்தனமான அறிக்கையை நான் ஒரு தமிழக அமைச்சரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.ஆனால் தமிழக மக்களுக்கு இது தான் தரமான அறிக்கை. காரணம் அவர்களுக்கு எட்டியது அவ்வளவு தான்.

எழுத்தாளர்களை விட சினிமா ஹீரோக்களை அதிகம் நேசிக்கும் நம்மை போன்றவர்கள் வாழும் ஒரு தேசத்தில் தான் ஒரு அமைச்சர் இவ்வாறான ஒரு அறிக்கையை விட்டும் தொடர்ந்து அமைச்சராக இருக்க முடியும்.

நான் ஜெர்மனியில் வேலை பார்த்த போது என்னுடைய சம்பளம் 2600 ஈரோக்கள். எல்லா வரி பிடித்தங்களும் போக. நான் நண்பர்களோடு சமைத்து சாப்பிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு நான்கு நாட்கள் கறியோ மீனோ சமைப்போம்.எந்த வித தடைகளும் இன்றி விரும்பியதை வாங்கி சமைத்து உண்டு வந்தோம்.

அப்படி ஆடம்பரமாக உணவுக்கு செலவு செய்த போதும் எங்களின் ஒரு மாத உணவு செலவு வெறும் 100 ஈரோக்கள் தான். அதாவது நான் வாங்கிய சம்பளத்தில் 26-ல் ஒரு பங்கு தான் நான் உணவுக்கு செலவு செய்திருக்கிறேன்.

இந்தியாவில் 26000 ரூபாய் சம்பளம் பெற்றால் வெறும் ஆயிரம் ரூபாயில் என்னால் அப்படி ஒரு லக்சுவரி உணவை கனவில் கூட எதிர் பார்க்க முடியாது. இந்தியாவில் வாரத்துக்கு 2000 என்பதாக 8000 ரூபாய் வரை செலவாகும்.

அதாவது நான் வாங்கும் சம்பளத்தில் நான்கில் ஒரு பங்கை உணவுக்காக செலவு செய்ய வேண்டும். இப்போது சொல்லுங்கள். விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கும் ஜெர்மனி போன்ற நாடு சிறந்ததா அல்லது எல்லோரிடமும் பணம் இருக்கு, விலைவாசி இஷ்டத்துக்கும் ஏறட்டும் என்று சாடிஸ்ட்தனமாக சிந்திப்பது சிறந்ததா? இத்தனைக்கும் ஜெர்மனி ஒரு வளம் கொழிக்கும் விவசாய நாடல்ல.

விலைவாசி ஏற்றத்திற்கு அடிப்படை காரணிகளாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் :

Supply – Depends on the Availability of a commodity. சந்தையில் விற்பனைக்காக வரும் ஒரு பொருளின் அளவு. இதுக்கு மேல இதை தமிழில் சொல்ல முடியவில்லை. நீங்களே உங்களுக்கு வாகாக மொழி பெயர்த்துக்கொள்ளவும்.

Demand – Varies with the need and purchasing power of the individuals. சந்தையில் அந்த பொருளின் தேவை. இது இரண்டு காரணிகளால் கூடும். ஒன்று அதன் அத்தியாவிசியம் மற்றொன்று அதை வாங்கும் அளவுக்கு மக்களிடம் அதிகபடியான பணம் இருக்க வேண்டும்.

Excess purchasing power. சப்ளை அதிகமாக இருந்து டிமாண்ட் குறைவாக இருக்கும் போது விலைவாசி குறைவாக இருக்கும் என்பது எளிதாக விளங்கிக்கொள்ள முடிகிற விஷயம்.
இப்போது விலைவாசி ஏறுகிறதென்றால் சப்ளை குறைவாக இருக்க வேண்டும். Demand அதிகமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் விலைவாசி ஏறுகிறது. தற்போதைய விலை வாசி ஏற்றத்திற்கும் Demand மற்றும் Supply ஏற்றத்தாழ்வுகளே காரணம்.

இதை யார் சரி கட்டுவது?

இதை அரசாங்கம் தான் சரி கட்ட வேண்டும். சும்மா மக்களிடம் போலியாக அறிக்கைகள் விடுவதையும் ரிசர்வ் வங்கியின் மூலம் சில கட்டுப்பாடுகள் விதிப்பதையும் விட்டுவிட்டு நிஜமாக அரசாங்கம் களத்தில் குதித்து தீர்வு காணவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஒரு வருடத்திற்கு முன்பு பண வீக்கம் அதிகமாக இருந்Tஹது விலைவாசியும் அதிகமாக இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கம் குறைவாக இருந்Tஹ போதும் விலைவாசி விண்ணை முட்டி நின்றது .

இதற்கு காரணம் யார்?

இதை கட்டுக்குள் கொண்டு வராத அரசாங்கம். எப்படி என்று கேட்பீர்களானால் விளக்குகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வீட்டு மனைகளின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதற்கு ஐ.டி. துறை தான் காரணம் என்று பாமரத்தனமாக கட்டுரைகள் எழுதி ஐ.டி. துறையில் இல்லாத மக்கள் கைத்தட்டி ஆர்ப்பரித்து சபித்து மகிழ்ந்தார்கள்.

உண்மையில் ஐ.டி. துறை தான் அந்த விலை ஏற்றத்திற்கு காரணமா?

அப்போது வீட்டு மனைகளின் விலை உயர்ந்தது. வீடுகளின் விலை உயர்ந்தால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் வீடுகளின் விலை உயர்கிறதென்று சமாதானம் அடையலாம். ஆனால் வெறும் தரையும், மண்ணும் இப்படி ஒரு வகை தொகை இல்லாமல் விலை ஏறிக்கொண்டிருக்க காரணம் யார்?

நூறு மனைகள் இருக்கிறது. ஆயிரம் பேர் வாங்குவதற்கு தயாராஇ இருக்கிறார்கள். அந்த ஆயிரம் பேரில் நூறு பேர் தான் உண்மையில் வாங்க பண வசதி படைத்தவர்கள். மீதி 900 பேர் வங்கிகளால் பணம் வழங்கப்பட்டு அந்த போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். இப்போது அந்த நூறு மனையை வைத்திருக்கும் ஓனர்களும் விற்பனையில் ஈடுபடும் இடை தரகர்களும் என்ன விலை சொன்னாலும் ’வாங்க ஆளிருக்குடா மாமே அதனால இஷ்டத்துக்கு விலையை ஏத்து’.

‘இன்னைக்கு வந்தா அம்பது லட்சம் நாளைக்கு வந்தா அறுபது லட்சம்’ - இந்த டயலாக்கை என் காது பட கேட்டிருக்கிறேன். இப்படி இஷ்டத்துக்கு ஏற்றிவிட்டது யார்? இப்போது இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் என்ன சொல்கிறது. 1000 பேர் வாங்க தயாராய் இருக்கிறார்களே? பிறகு என்ன நம்ம நாட்டில் கஷ்டம் வந்துவிட்டது. கேக்குற விலையை கொடுத்து வாங்க வேண்டியது தானே என்று பொறுப்பற்ற தனமாய் சைக்கோ தனமாய் சாடிஸ்ட் தனமாய் இருந்துவிட்டு பொதுமக்கள் ஐ.டி. துறை மேல் பாய விட்டு வேடிக்கை பார்ப்பதையும் கை தட்டி வரவேற்ற நாம் முட்டாள்கள் தானே?

இந்த எடுத்துக்காட்டின் மூலமாக நான் சொல்ல வருவது என்ன வென்றால் விலைவாசியை Supply - Demand எனும் காரணிகளிடம் கண்ணை மூடி அரசாங்கம் ஒப்படைத்துவிட்டால் சப்ளை எனும் ஒரு காரணியை குறைத்து விலை வாசியை யார் வேண்டுமானாலும் ஏற்றலாமே.

உதாரணமாக பத்து பேர் ஒரு தெருவில் இருக்கிறார்கள். ஒரு கடை இருக்கிறது. பத்து பேரும் காலையில் சிகிரெட் வாங்கி பிடிப்பார்கள். இப்போது சிகிரெட்டின் விலை ஐந்து ரூபாய். அடுத்த நாள் கடைக்காரன் என்னிடம் ஐந்து சிகிரெட்டுகள் தான் இருக்கிறது (மற்ற ஐந்தை வீட்டில் ஒளித்து வைத்துவிட்டு) எனவே உங்களில் யார் ஒரு சிகிரெட்டுக்கு பத்து ரூபாய் தருகிறார்களோ அவர்களுக்கு நான் சிகரெட் கொடுக்க தயார் என்கிறான்.

உடனே அதில் வசதி படைத்த இரண்டு பேர் ஐ.டி. துறையில் மூன்று பேர் பத்து ரூபாய்க்கு சிகிரெட் வாங்கி பிடிக்கிறார்கள். சிகிரெட் கிடைக்காத மீதி ஐந்து பேர் சிகிரெட் விலை உயர ஐ.டி. துறை தான் காரணம் என்று கட்டுரை எழுதி சாந்தமடைகிறார்கள். இது தான் இன்றைய நிலை.

எனவே அரசாங்கம் போலியாக சந்தையில் சப்ளையை குறைத்து விலை வாசியை ஏற்றிவிடும் இடைத்தரகர்களை கண்டறிய வேண்டும். மேலும் இலவசத் திட்டங்களுக்கு செலவிடும் உணவு தானியங்களால் கூட பொது மார்க்கெட்டில் விலை வாசி உயர வாய்ப்புண்டு. அதையும் அரசாங்கம் கண்காணிக்க வேண்டும்.

இதையும் மீறி நிஜமாகவே சப்ளை குறைகிறதென்றால் அது எதனால் என்றும் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக விவசாயத்திற்கு அதிக சலுகைகள் வழங்கலாம்.
மேலும் இந்திய வணிகத்தில் இந்தியா கோதுமையை குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மிக அதிக விலைக்கு அதே கோதுமையை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பது தெரியுமா? அதற்கு டிரேட் டிபிசிட்டை காரணம் காட்டுகிறது அரசாங்கம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு அரசாங்கம் சரியான நேரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்படி நடவடிக்கை எடுக்கிற போது சில உடன்பிறப்புக்கள் தங்கள் அரசியல் தோழர்களே பாதிக்கப்படலாம் என்பதால் அரசும் அத்தனை தீவிரமாய் நடவடிக்கை எடுப்பதில்லை. வெங்காயத்தின் விலை உயர்வை பற்றி தெரிந்திருக்கும். எந்த ஒரு பொருளின் சப்ளையையும் கட்டுப்படுத்தி விலைவாசியை உயர்த்த முடியும். அப்படி யார் கட்டுப்படுத்துகிறார்கள்? அல்லது எது கட்டுப்படுத்துகிறது? அரசாங்கத்தின் எந்த திட்டம் கட்டுப்படுத்துகிறது? என்பதை ஆராய்ந்து அதற்கான எதிர் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லாருக்கும் நல்ல சம்பளம் இருக்கு விலைவாசி ஏறினா என்னான்னு கேட்டு பாமரத்தனமா பேசுறது எப்படி இருக்குதுன்னா, ‘கேளேன்.. நீ கேளேன்.. மச்சி நீ கேளேன்’ன்னு சொல்றமாதிரி இருக்கு.

எவனும் கேக்க வேண்டாம் போங்கய்யா.

அன்புடன்
விசா

* - * - * - * - * - *

- இந்த விவாதம் என்னுடைய வலைப்பூவை பொறுத்தவரை முடிவடைகிறது. இப்பதிவுக்கான எதிர்வினைகளை இங்கே பின்னூட்டமாக இடலாம். அல்லது அவரவர் வலையில் பதிந்து மேற்கொண்டு விவாதம் நீள வழிவகுக்கலாம். வலைப்பதிவு இல்லாதவர்கள் யாரேனும் கட்டுரையாக வரைந்தால் மட்டுமே என்னுடைய வலைப்பூவில் வெளியிட முயற்சிக்கிறேன்.

இச்சூழலுக்கு முக்கியமான விவாதத்தை தொடங்கிய அருணுக்கும், தொடர்ந்த விசாவுக்கும் எனது நன்றி.

அன்புடன்
யுவகிருஷ்ணா

விலைவாசி உயர்வு - நிபுணர் கருத்து

விலைவாசி உயர்வு பற்றி பலரும் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்ளும்போது ஆன்லைன் டிரேடிங் செய்துவரும் வியாபாரியான ஈரோடு அருண் மட்டும் வேறு மாதிரியாக சொல்கிறார்.

“விலைவாசி உயர்வு என்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் உணவுப்பொருட்கள், தங்கம் மாதிரியான பொருட்களை தொடர்ச்சியாக வர்த்தகம் செய்து வருகிறோம். தங்கம் அதன் அதிகபட்ச விலை உயர்வை கண்டபோதும் கூட, எப்போதும் நடக்கும் வர்த்தகம் எங்களுக்கு நடந்துகொண்டே தானிருந்தது. விலை அதிகமாகி விட்டது என்று காரணம் கூறி, யாரும் எதையும் வாங்குவதையோ, வாங்கும் அளவையோ குறைத்துக் கொள்வதாக தெரியவில்லை.

என் பாட்டி காலத்தில் சவரன் முப்பது ரூபாய் விற்றதாக சொல்வார்கள். அப்போது என் தாத்தாவின் வருமானம் மாதம் நாற்பது ரூபாயாக இருந்திருக்கும். இன்று பண்ணிரெண்டாயிரம் ரூபாய்க்கு மேலாக ஒரு சவரன் விற்கிறது. எனது வருமானம் அதை வாங்குமளவுக்கு உயர்ந்திருக்கிறது இல்லையா? இதன் மூலமாக நான் உணர்வது என்னவென்றால், விலையேற்றத்தின் போது வாங்குபவனின் வருமானமும் உயர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

இப்போது அன்றாட வாழ்வுக்கு பயன்படுத்தும் உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கிறது என்று பொதுமக்களும், ஊடகங்களும் குற்றம் சாட்டுகின்றன. மத்திய அமைச்சர் ஒருவரும் ஒத்துக்கொண்டதாக செய்தித்தாள்களில் படித்தேன். பொருட்களின் தயாரிப்பு அளவு குறைந்திருப்பதால், ‘டிமாண்ட்’ ஏற்பட்டிருப்பதாகவே நான் நினைக்கிறேன். நாட்டின் ஒட்டுமொத்த தயாரிப்பு அளவினை அதிகப்படுத்துவதின் மூலமாக இந்தப் பிரச்சினையை சரிசெய்துவிடலாம் என்று எனக்கு தோன்றுகிறது. விவசாயம் செழிக்க வேண்டியதின் அவசியத்தை இது உணர்த்துகிறது.

தக்காளி வியாபாரி, வெங்காயம் வாங்கும்போது விலைவாசி உயர்ந்துவிட்டது என்று புலம்புவார். தக்காளியின் விலையும் உண்மையில் உயர்ந்திருக்கும். வெங்காய வியாபாரி தக்காளி வாங்கும்போது அவரும் விலை உயர்ந்துவிட்டது என்று நொந்துகொள்வார். இரண்டு பேரின் விற்பனைப் பொருளின் விலையும் உயர்ந்துவிட்டதால், அவர்களது வாங்கும் சக்தி குறைந்துவிடப் போவதில்லை. ஆயினும் ‘எண்கள்’ அடிப்படையில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று சொல்கிறார்கள்.

நான் சொல்வதெல்லாம் நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் மட்டும் பொருந்தும் என்றுகூட நீங்கள் நினைக்கலாம். ஏழைகளின் அவதி பற்றி என் பேச்சில் எதுவுமேயில்லை என்றும் நீங்கள் சொல்லலாம். ஒரு வியாபாரியாக லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு கறாராக பேசுவதாகவும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஏழைகளின் அவதி எப்போதுமே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஏதாவது அதிசயம் செய்து விலைவாசியினை குறைத்துவிட்டால் மட்டும் ஏழ்மை நீங்கிவிடாது. அப்படிக் குறைக்கப்பட்டாலும் அதன் பலன் பெரும்பாலும் நடுத்தர மக்களுக்கும், பணக்காரர்களுக்குமே போய் சேரும். அவர்களது சேமிப்பு அதிகமாகுமே தவிர்த்து ஏழ்மை ஒழிந்துவிடாது. வறுமை ஒழிப்புக்கு வேறு சாதுர்யமான திட்டங்கள் தேவை.”

அருணின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து யாரேனும் எழுத விரும்பினால் எழுதலாம். எழுதிய கட்டுரையை என் மின்மடலுக்கு புகைப்படத்தோடு அனுப்பலாம். பிரசுரிக்க தயாராக இருக்கிறேன்.

16 மார்ச், 2010

பிரம்மச்சரியம்!


ரு ”கட்டை” பிரம்மச்சாரி பிரம்மச்சரிய விரதத்தை கடுமையாக பேணி காத்து வந்தார். இருப்பினும் அவ்வப்போது மேனகைகள் புண்ணியத்தால் அவரது பிரம்மச்சரிய விரதத்துக்கு கேடு வந்துவிடுமோ என்று அஞ்சினார். ”இவ்வளவு கடுமையாக பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பதால் என்ன நன்மை?” என்றொரு இயல்பான சந்தேகம் அவருக்கு எழுந்தது.

அகிலம் புகழும் ரிஷியான தன் குருவிடம் இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள சென்றார்.

“குருவே! வணக்கம். உலகிலேயே பாபமான செயல் எது?”

“பெண் தொடர்பு!”

“புரியவில்லை?”

“ஒரு பெண்ணை கூட தொடாமல் வாழ்க்கையில் கடுமையாக பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பவன் மேலுலகத்துக்கு செல்லும்போது மலர்களால் அலங்கரிக்கப்பட்ட, நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் ஒன்றில் ராஜமரியாதையோடு அழைத்துச் செல்லப்படுவான்”

“ஆஹா. அருமை!!”

“உடல்தேவைக்காக இல்வாழ்க்கையில் ஒரு பத்தினியோடு இணைபவன் ஒரு சாதாரண ரதத்தில் பத்து பேரோடு ஒருவராக நெருக்கமாக உட்கார வைக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவான்!”

“சரி குருவே!”

“பத்தினி தவிர்த்து பலரோடு உடல்தொடர்பான உறவு வைத்துக் கொள்பவன் பல நூறு பேரோடு நெருக்கமாக அடைக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் எந்த மரியாதையும் இன்றி அழைத்துச் செல்லப்படுவான்”

“அப்படிப்பட்ட ஒரு பிழைப்பு தேவையா?”

“அடுத்தவன் மனைவியை அபகரித்தவன், ஆயிரக்கணக்கான பெண்களோடு இழித்தொடர்பு வைத்திருந்தவன் கல்லும், முள்ளும் நிறைந்த நெருப்புப் பாதையில், கிங்கரர்கள் சாட்டையால் அடிக்க வண்டியை இழுக்கும் மாடு போல மற்றவர்களின் பாரங்களை சுமந்து செருப்பில்லாமல் நடந்தே மேலுலகத்துக்கு செல்லவேண்டும்”

“அய்யய்யோ. அப்படிப்பட்ட நிலை யாருக்குமே வரக்கூடாது. குருவே! நான் அலங்கரிக்கப்பட்ட ரதத்திலேயே மேலுலகுக்கு செல்ல விரும்புகிறேன்”காலச்சக்கரம் உருண்டோண்டுகிறது.

காலம் முழுக்க பிரம்மச்சாரியாக இருந்தவர் இயற்கையாக மரணம் அடைகிறார். மேலுலகத்துக்கு அழைத்துச் செல்ல மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம் வந்திருக்கிறது.

தேவகன்னிகைகள் அவரை குளிப்பாட்டி உடலுக்கு நறுமணம் வீசும் வஸ்துகளைப் பூசி, உயர்தர ஆடைகளை அணிவித்து அழைத்துச் செல்கிறார்கள். அவரை அழைத்துச் செல்லவந்த தேவதூதரோ, “அய்யா. பிரம்மச்சரிய விரதம் இருந்த தாங்கள் நேரடியாக சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் உலகில் அனுபவிக்க முடியாத சந்தோஷங்களை அங்கே நிரந்தரமாக அனுபவிப்பீர்கள்” என்றார்.

பிரம்மச்சாரிக்கு மெத்த மகிழ்ச்சி. தன்னுடைய கடுமையான விரதத்துக்கு கிடைத்த பலனை எண்ணி மகிழ்ந்தவாறே ரதத்தில் விரைகிறார். வழியில் நிறைய பேரை பார்க்கிறார். சாதாரண ரதங்களில் சில பேரும், மாட்டு வண்டிகளில் ஆடுகள் போல அடைக்கப்பட்டு பல நூறு பேரும், பெரும் பாரங்களை சுமந்து கூன் விழுந்த முதுகோடு நடந்து செல்லும் லட்சக்கணக்கான பேரையும் பார்க்கிறார்.

ஒரு மாட்டு வண்டியில் கூட்டத்தோடு கூட்டமாக தன் குருவும் அடைத்துச் செல்லப்பட்டிருப்பதை கண்ட பிரம்மச்சாரிக்கு கடுமையான அதிர்ச்சி.

“என்ன கொடுமை குரு சார் இது? இப்படி ஏமாத்திட்டீங்களே?”

“அடப்போய்யா. நமக்கு முன்னாடி பாரத்தை தூக்கிக்கிட்டு கல்லிலும், முள்ளிலும், நெருப்பிலும் நடந்து போறது யாருன்னு தெரியுதா?”

“தெரியலையே குருவே!”

“ஒருவனுக்கு ஒருத்தி என்ற சொல்லுக்கு இலக்கணமா உலகத்துலே நாம சொல்லிக்கிட்டிருந்த அயோத்தி இராமபிரான் தான். வேற யாரு?”

15 மார்ச், 2010

நாளைய குடியரசுத் தலைவர்!

டாக்டர் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்தபோது, இந்தியத் தலைமை 2020 (Lead India 2020) இயக்கத்தைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்கள் சிலரை 28, ஆகஸ்ட் 2006 அன்று சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். கலாமின் வழக்கமான கேள்வி-பதில் பாணியில்தான் உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

மாணவர்களை நோக்கிக் கேட்டார். “நீங்களெல்லாம் என்னவாக விரும்புகிறீர்கள்?”
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடை சொல்ல, பார்வையற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஸ்ரீகாந்த் பட்டென்று சொன்னார். “நாட்டின் குடியரசுத் தலைவராக வர விரும்புகிறேன். என் விருப்பம் நிறைவேறினால் நான்தான் இந்தியாவின் முதல் பார்வையற்ற குடியரசுத் தலைவராக வரலாற்றில் பதிவு செய்யப்படுவேன்!”

சுற்றியிருப்பவர்கள் திடுக்கிட, கலாம் புன்னகைத்தார். அம்மாணவனின் வித்தியாசமான விருப்பத்தையும், நோக்கத்தையும் புரிந்துகொண்டார். ஆசையே அழிவுக்கு காரணம் என்று புத்தர் சொன்னார். ஆசைப்படுவதுதான் படுகிறாய், ஸ்ரீகாந்தைப் போல மிகப்பெரிய இலக்குகளை அடைய ஆசைப்படு. சிறிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வதுதான் குற்றம் என்பது கலாமின் தத்துவம்.
“உங்களுடைய கனவு ஒருநாள் நனவாக ஆசைப்படுகிறேன். இதற்காக நீங்கள் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்!” என்று ஸ்ரீகாந்திடம் கேட்டுக் கொண்டார்.

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஸ்ரீகாந்த் இப்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? கனவு நோக்கிய அவரது பயணம் எந்த நிலையில் இருக்கிறது?

முதலில் ஸ்ரீகாந்த் யாரென்று பார்ப்போம்.

பிறவியிலேயே பார்வையற்றவரான ஸ்ரீகாந்த், ஆந்திரமாநிலம் மசூலிப்பட்டணத்தைச் சேர்ந்த ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பார்வையற்ற மகனை எப்படி பள்ளியில் சேர்ப்பது என்று அவரது தந்தை தவித்துப் போனார். பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டிய வயதில் அவர் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை.

ஆரம்பப்பள்ளியின் முதல் மூன்று ஆண்டுகள் தகுந்த வயதில் கிடைக்காத நிலையில் ஸ்ரீகாந்தின் மாமா ஒருவர், ஹைதராபாத் பேகம்பேட்டை தேவ்நார் பார்வையற்றோர் பள்ளியில் ஸ்ரீகாந்தை சேர்த்தார். தங்கிப்படிக்கும் வசதிகொண்ட இப்பள்ளியில் மழலையர் கல்வியில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பார்வையற்றவர்கள் படிக்கலாம். ஆங்கிலவழிக் கல்வி. மாநில அரசு பாடமுறைத்திட்டம். ஆறாம் வகுப்பில் இருந்து பார்வையற்றோருக்கான சிறப்பு கணினிப் பயிற்சியும் வழங்கப்படும். இந்தியாவின் சிறந்த பார்வையற்றோர் பள்ளியாக 2003 மற்றும் 2008 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி இது. இப்பள்ளியில் படிக்கும்போதுதான் குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் கலாமை சந்திக்கும் வாய்ப்பு ஸ்ரீகாந்துக்கு கிடைத்தது.

“மிகக்கடுமையாக உழைக்க வேண்டும்” என்ற கலாமின் அறிவுரை ஸ்ரீகாந்துக்கு அதன்பின்னர் ஒவ்வொரு நொடியும் நினைவில் இருந்துகொண்டே இருந்தது. விவேகானந்தரும், கலாமும் ஸ்ரீகாந்துக்கு இரண்டு கண்கள். இளைஞர்களுக்கான இவர்களது அறிவுரைகள் அனைத்தும் மனப்பாடம். ‘நம்முடைய விதியை நிர்ணயிக்கும் சக்தி, நம்முடைய கரங்களுக்கே உண்டு’ என்ற விவேகானந்தரின் கருத்து, ஸ்ரீகாந்துக்கு போதுமான தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளித்தது. கனவினை நோக்கி நகர ஆரம்பித்தார்.

ஓய்வு நேரங்களை தனக்கே தனக்கான ரசனையோடு வாழ்ந்தார். இயல்பிலேயே இயற்கை நேசிப்பாளர் என்பதால் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகம். பூக்களின் வாசம், ஸ்ரீகாந்தின் சுவாசத்துக்கு மிகவும் நெருக்கமானது. தொட்டியில் மீன் வளர்த்தார்.

கிரிக்கெட் விளையாடினார். செஸ் விளையாடினார். ஆம், பார்வையற்றவர்களுக்கு எது எதெல்லாம் சவாலோ? அந்த சவால்களை தனது செவிகளை கொண்டு வென்றார். தேசிய செஸ் வீரராக தன்னை உயர்த்திக் கொண்டார். ஆந்திரப்பிரதேச மண்டலத்தின் பார்வையற்றோர் பிரிவுக்கான கிரிக்கெட் வீரராக களமிறங்கினார். தேசிய இளைஞர் விழாவின் சிறந்த உறுப்பினர் என்று பெயர் எடுத்தார். இந்திய தேசிய அறிவியல் காங்கிரஸின் (Indian National Science Congress) வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். பத்தாம் வகுப்பில் 90% மதிப்பெண். இண்டர்மீடியட் வகுப்பில் அறிவியலை பாடமாக எடுத்துக்கொண்டு படித்த அவர் 96% மதிப்பெண் வாங்கி தேறினார். பார்வையுள்ளவர்களுக்கே சவாலான விஷயங்களை, பார்வை சவால் கொண்டவர் அனாயசமாக தாண்டி வென்றார்.

ராயல் ஜூனியர் கல்லூரியில் இண்டர்மீடியட்டுக்கு அறிவியலை அவர் தேர்ந்தெடுத்தபோது, பார்வையற்றவர்களால் இந்த படிப்பினை படிக்க முடியாது என்று சொன்னார்கள். முழுப்பாடங்களையும் ஆடியோ டேப்பில் பதிவு செய்து, தொடர்ச்சியாக கேட்டு, கேட்டே உள்வாங்கிக் கொண்டார். கணிதப் பாடத்துக்கு மட்டுமே டியூஷன் வைத்துக் கொண்டார். மற்ற எல்லாப் பாடங்களுமே ஆடியோ டேப் முறையில் படித்ததுதான்.

சரி. இண்டர்மீடியேட்டையும் முடித்தாயிற்று. அடுத்தது என்ன?

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் (Massachusetts Institute of Technology) பொறியியல் படிக்க ஆசைப்பட்டார் ஸ்ரீகாந்த். அவரது வழக்கப்படி மீண்டும் பெரிய இலக்கினை தனக்கு நிர்ணயித்துக் கொண்டார். இது சாத்தியமா? இவ்வளவு பணம் செலவழிக்க முடியுமா? என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்கவேயில்லை.

ஸ்ரீகாந்தின் விண்ணப்பத்தை கண்ட எம்.ஐ.டி. நிர்வாகம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. “ஸ்ரீகாந்த் எங்களுக்கு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். இவருக்கு கட்டணமெல்லாம் கிடையாது. முழுக்க முழுக்க கல்வி இலவசம்!”. உலகளவில் புகழ்பெற்ற தொழிற்கல்வி நிறுவனம் ஒரு இந்திய, பார்வையற்ற மாணவனுக்கு கட்டணமேயில்லை என்று அறிவித்திருப்பது ஆச்சரியம்தான். ஸ்ரீகாந்த் வாழ்வில்தான் ஆச்சரியங்களுக்கு பஞ்சமேயில்லையே?

பிரபலமான ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள் சிலர் ஸ்ரீகாந்தின் அமெரிக்கப் பயணத்துக்கு ஆகும் செலவை தங்களுக்குள் பகிர்ந்துகொண்டார்கள். வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவர், நம்மூரைச் சேர்ந்த அரசுசாரா தொண்டுநிறுவனம் ஒன்றின் உதவியோடு, ஸ்ரீகாந்த் கற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இப்போது எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார்.

அதிருக்கட்டும், அவரது குடியரசுத்தலைவர் கனவு என்னவாயிற்று என்று கேட்பீர்களே?

ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பட்டம் முடிந்ததுமே எங்களிடம் பணிக்கு வாருங்கள். லட்சங்களை சம்பளமாக தருகிறோம் என்று இவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. “நான் இந்தியாவுக்கு திரும்பி குடியரசுத்தலைவர் ஆக முயற்சிக்கிறேன். அந்த முயற்சியில் வெற்றி கிட்டாவிட்டால் அடுத்த நிமிடமே அமெரிக்காவுக்கு திரும்பி உங்கள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்திருக்கிறார். இந்தப் பதிலை நகைச்சுவையாக சொல்லியிருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். இல்லவேயில்லை. தன்னம்பிக்கையோடுதான் சொல்லியிருக்கிறேன் என்கிறார் ஸ்ரீகாந்த்.

எம்.ஐ.டி.யில் கற்க அவருக்கு பலவிதமான பாடங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சிக்கு தேவையான வசதிகள் அனைத்தும் இருக்கிறது. பொருளாதாரம், தொழில் மேலாண்மை, மார்க்கெட்டிங், உயிரியல் மற்றும் கணினி தொடர்பாக நிறைய படிக்க ஆசைப்படுகிறார். இவற்றிலெல்லாம் இளநிலை பட்டங்களை முடித்துவிட்டு சில முதுநிலைப் பட்டங்களையும் இதே பல்கலைக்கழகத்தில் பெற திட்டமிட்டிருக்கிறார்.

ஆசைப்பட்ட அனைத்து படிப்புகளையும் முடித்துவிட்டு, இந்தியாவுக்கு திரும்பி ஒரு மென்பொருள் நிறுவனத்தை தொடங்கி நிறைய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பது ஸ்ரீகாந்தின் குறிக்கோள்.

அதற்குப் பிறகு?

வேறென்ன? குடியரசுத் தலைவர் பதவியினை நோக்கிய அவரது கனவு நனவாக பாடுபட்டுக் கொண்டேயிருப்பாராம்.

நம் நாட்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது கல்வி குறித்த போதுமான வழிகாட்டுதல் இல்லாததுதான். ஸ்ரீகாந்துக்கு கிடைத்ததுபோல சரியான வழிகாட்டுதல்களும், உதவிகளும் கிடைக்கும் பட்சத்தில் நம் மாணவர்கள் ஒவ்வொருவரும் பெரிய கனவை இலக்காக வைத்து, அதை அடைவது நிச்சயம்!

ஸ்ரீகாந்தின் அனுபவ அட்வைஸ்!!

நம்மைப் போன்ற இளைஞர்கள் கல்வியின் மதிப்பையும், நமது பொறுப்பையும் உணரவேண்டும். பொன் போன்ற காலத்தை வீணடிக்கவே கூடாது. விவேகமற்ற அறிவு வீணானது என்று விவேகானந்தர் சொல்வார். அதுபோலவே, பொறுப்புகள் இல்லாத சுதந்திரமும் வீணாகிவிடும், மனிதனை வீணாக்கிவிடும். தாமஸ் ஆல்வா எடிசன் பல்பினை கண்டறிய தொடர்ச்சியாக முயன்றுக் கொண்டேயிருந்தார். பத்தாயிரமாவது முயற்சியின் போதுதான் வெற்றி கண்டார். அதுபோலவே நம் கனவு நோக்கிய பயணம் இலக்கினை அடையாமல் எங்கும் நின்றுவிடக்கூடாது.

(நன்றி : புதிய தலைமுறை)

13 மார்ச், 2010

வில்லனாக இருங்கள்!


’வில்லனாக இருங்கள்!’ - இந்த டைட்டிலில் இன்னமும் கிழக்குப் பதிப்பகம் புத்தகம் போடாதது ஆச்சரியமாக இருக்கிறது. வில்லனாக இருப்பது சவுகர்யம். ஹீரோவாக இருப்பது அசவுகர்யம். இந்தக் கூற்று உங்களுக்கு ஆச்சரியமூட்டலாம். உண்மைகள் எல்லாமே ஆச்சரியம் நிறைந்தவைதான்.

எம்.ஜி.ஆருக்கான புனிதப்பிம்பம் தமிழகத்தில் நிரந்தரமானது. நம்பியாரும், வீரப்பாவும், அசோகனும் இருந்திருக்காவிட்டால் எம்.ஜி.ஆர் இவ்வளவு புனிதமாக போற்றப்பட்டு இருக்கமாட்டார். அடிப்படையில் பார்க்கப்போனால் எம்.ஜி.ஆர்.தான் நிஜமான வில்லன். எப்படியென்றால் நம்பியார் இறுதிக்காட்சியில் கதாநாயகியுடன் பாலியல் வல்லுறவு கொள்ள முயற்சிப்பார். எம்.ஜி.ஆர் வந்து மூன்றுமுறை அடிவாங்கி, உதட்டோரம் ரத்தம் வழிந்தபின் நம்பியாரை அடித்து நொறுக்கிவிட்டு என்ன செய்வார்? நம்பியார் கதாநாயகியை என்ன செய்யநினைத்தாரோ அதைத்தான் அவரும் படத்தில் எண்ட் கார்ட் போட்டபிறகு செய்யப்போகிறார்?

பொதுவாக சிவாஜி படங்களில் வில்லன்களின் ரோல் ரொம்பவும் குறைவு. அதனால் தான் புரட்சித்தலைவர் ஆகமுடியவில்லை. அவர் முன்னூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் வெற்றி பெற்ற படங்களை எடுத்துக் கொண்டோமானால் வில்லன்களை வீழ்த்திய படங்களே மிக அதிகமாக இருக்கும். சிவாஜி மசாலாப்படங்களில் அதிகமாக தோன்றமாட்டார். ஆனால் மசாலாவில் இறங்கி பெரிய வெற்றிகளை கண்டதுமுண்டு. ராஜா, திரிசூலம் போன்ற படங்களில் ரொமான்ஸ், ஆக்சன் என்று பட்டையைக் கிளப்பியதுமுண்டு.

சினிமாவில் எடுத்துக் கொண்டால் வில்லனை சிற்பம் மாதிரி இயக்குனர்கள் செதுக்கிய படங்களே பெரும் வெற்றிப் பெற்றதை காணலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் மசலா வெற்றிகளுக்குப் பின்னால் எவ்வளவு வில்லன்கள்? ரஜினியின் மாஸ்டர் பீஸான பாட்ஷாவில் ரகுவரனை விலக்கிவிட்டு படத்தை நினைவுபடுத்த முடிகிறதா? ‘பாபா’ ஏன் தோல்வி அடைந்தது? ‘இப்போ’ ராமசாமி ரஜினி கெத்துக்கு செட் ஆகவில்லை. காக்கிச்சட்டை, சகலகலாவல்லவன் என்று கமலின் வெற்றிப்பட வரலாற்றில் வில்லன்களுக்கும் முக்கியப் பங்குண்டு. சத்யராஜ், சரத்குமார் என்று பலமாக ரசிக்கப்பட்ட வில்லன்களை மக்கள் பிற்பாடு சூப்பர்ஹீரோக்களாகவே ஏற்றுக்கொண்டார்கள்.

வில்லன்களே இல்லாத விக்கிரமன் படங்கள் வெற்றி கண்டது எப்படி என்ற கேள்வி எழலாம். படம் பார்ப்பவர்களுக்கு பொறுமையை சோதித்தவர் என்ற அடிப்படையில் விக்கிரமன் தான் வில்லன். விஜய்யின் சூப்பர்ஹிட் படமான குஷியில் வில்லன் இல்லையே என்று கேட்கலாம். ஹீரோ, ஹீரோயினின் ஈகோதான் அங்கே வில்லன். காதலுக்கு மரியாதையில் குடும்பப்பாசம் மிக மோசமான வில்லன். ‘தல’க்கு சொல்லிக்கொள்ளும்படி ஹிட்டான ஒன்றிரண்டு படங்களில் வாலிக்கே முதலிடம். வாலி வில்லனை தவிர்த்து அந்தப் படத்தில் வேறென்ன சிறப்பம்சம் இருக்கமுடியும்? இப்படியே குத்துக்காலிட்டு யோசித்து, யோசித்து ஏராளமான உதாரணங்களை காட்ட முடியும்.

ஹிட்லரும், முசோலினியும் இல்லாதிருந்தால் சர்ச்சிலுக்கு இன்று என்ன மரியாதை இருந்திருக்கும்? அமெரிக்காவும், ரஷ்யாவும் வல்லரசுகளாக மாறியிருக்க முடியுமா? இந்திராகாந்தி இருந்திருக்காவிட்டால் இந்தியாவில் ஜனநாயகத்தின் அருமை, பெருமை மக்களுக்கு தெரிந்திருக்குமா? கலைஞர் வில்லனாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆர் இங்கே ஹீரோவாக இருக்க முடிந்தது. ஜெயலலிதா வில்லியாக இருப்பதால் தான் கலைஞர் இப்போது ஹீரோவாக வலம் வர முடிகிறது. ஜெயவர்த்தனேவும், ராஜபக்‌ஷேவும் பிரபாகரனுக்கு தமிழ்வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்துத் தந்திருக்கிறார்கள்.

வில்லன்களை புறக்கணித்துவிட்டு ஹீரோக்களை நினைத்துகூட பார்க்கமுடியவில்லை. ஹீரோக்களின் தனித்தன்மை வில்லன்களின் வில்லத்தனத்தால் பூஸ்ட் செய்யப்படுகிறது. வில்லனாக இருப்பது நிஜமாகவே வசதி. வெற்றி பெறுவதில் வில்லன்களுக்கு இயற்கையே இடஒதுக்கீடு அளித்திருக்கிறது. வில்லனைவிட ஹீரோ புத்திசாலியாகவும், பலசாலியாகவும் இல்லாதபட்சத்தில் வில்லனுக்கு வெற்றி உறுதி. ஹீரோ அவனுடைய புனிதப்பிம்பத்தை கட்டிக் காப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். இமேஜ் இல்லாத வில்லனுக்கு அந்தப் பிரச்சினையே இல்லை.

கோமாளிகள் சிலர் ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு அவர்களாகவே புனிதப்பிம்பத்தை கட்டியெழுப்பி பாதுகாத்தும் கூட, அவ்வப்போது ‘எக்ஸ்போஸ்’ ஆகி காமெடியன்களாகிவிடும் காட்சியை அன்றாடம் நாம் காணமுடிகிறது. எனவே வில்லனாகவே எப்போதும் இருங்கள். வெற்றி மேல் வெற்றி கண்டு கொண்டாடுங்கள்.

12 மார்ச், 2010

சென்னை 600015


உலகமே ஆவலோடு எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த வருடாந்திர திருவிழா ஐபிஎல் ஆரம்பமாகி விட்டது. ஐபிஎல்-லுக்கு இருக்கும் இதே எதிர்ப்பார்ப்பு சென்னையில் வேறொரு டோர்ணமெண்டுக்கு உண்டு. அது தளபதி கோப்பை. மார்ச் 1 தளபதியின் பிறந்தநாள். அதைத் தொடர்ந்து நடத்தப்படும் போட்டியில் சுமார் 2000 அணிகள் வரை கலந்துக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 25000 வீரர்கள் விளையாடும் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி இது. அதாவது அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றப் போகும் 25000 இளைஞர்கள் என்றும் சொல்லலாம். தேர்தலுக்காக இளைஞர்களை ஆள் பிடிக்கும் இந்தப் பாணியை வெற்றிகரமாக 2000களில் தென்மாவட்டங்களில் கையாண்டவர் நயினார் நாகேந்திரன்.

சீரியஸ் கிரிக்கெட் அல்ல என்பதால் டென்னிஸ் பால்தான். சென்னை 600028 படத்தின் கிளைமேக்ஸில் உணர்ந்திருப்பீர்களே ஒரு டென்ஷன்? அதே டென்ஷன் தளபதி கோப்பை போட்டிகளிலும் அட்சரம் பிசகாமல் இருக்கும். பின்னே? 50, 100 என்று பெட் கட்டி விளையாடிக் கொண்டிருக்கும் லோக்கல் டீம்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதல் பரிசு என்றால் கசக்கவா செய்யும்? சொக்கா சொக்காவென்று சொக்கிப் போய் மொய்க்கிறார்கள் இளைஞர்கள். தளபதி படம் போட்ட டீஷர்ட் ஃப்ரீ.

முன்பெல்லாம் கோல்டன் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்தும் தளபதி கோப்பை மின்னொளி கிரிக்கெட் போட்டி என்று விளம்பரப்படுத்தப் படும். இப்போது டைரக்டாகவே தென்சென்னை திமுக இளைஞரணி நடத்தும் போட்டி என்று விளம்பரப்படுத்தப் படுகிறது. இந்த சீஸனுக்கு சென்னையில் மூன்று மைதானங்களில் தரமான மின்னொளி ஏற்பாட்டில் பரபரப்பாக நடந்து வருகிறது. அடையார், டிரஸ்ட்புரம், சைதாப்பேட்டை.

எட்டு ஓவர் போட்டிகள். சராசரியாக 60, 70 அடித்துவிட்டாலே நல்ல ஸ்கோர். பவுலர்களுக்கு இங்கே மதிப்பேயில்லை. சிக்ஸர்களும், ஃபோர்களுமாக விளாசும் சச்சின்களும், தோனிகளும்தான் ஹீரோக்கள். பங்கேற்கும் வீரர்களில் 99.99 சதவிகிதம் பேர் கேஸுவல் ப்ளேயர்கள் என்பதால் ஏகப்பட்ட கேட்ச் மிஸ் ஆகிக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு பத்து போட்டிகள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் அணிகள் என்பதால் இது மிகப்பெரிய கடினமான பிராசஸ் கொண்ட விஷயம். சென்னையில் இருப்பவர்கள் டைம்பாஸுக்காக மாலை வேளைகளில் இந்த கிரவுண்டுகளுக்கு போகலாம்.

ஒருபக்கம் மரத்தால் கட்டப்பட்ட கேலரி இருக்கும். 100 பேர் வரை அமர்ந்துப் பார்க்கலாம். கமெண்ட்ரி பாக்ஸ் என்ற பெயரில் ஒரு மேடை இருக்கும். யாராவது கரைவேட்டி எப்போதும் நிரந்தரமாக அமர்ந்திருப்பார். கமெண்ட்ரிகள் சுவாரஸ்யம்.

“எங்கள் நடுவர்கள் துல்லியமானவர்கள் என்பதை கேள்விப்பட்டு ஐபிஎல் நிர்வாகம் தங்களது போட்டிக்கு இவர்களை அழைத்திருக்கிறது. நடுவர்களை இழந்துவிடுவோமோ என்று வருந்திக் கொண்டிருக்கிறோம்”

“153வது வட்டச் செயலாளர் உங்களோடு போட்டியை ரசித்துக் கொண்டிருக்கிறார். அகலப்பந்து வீசாமல் ஒழுங்காக பந்து வீசப் பாருங்கள் பவுலர்களே!”

“இது தளபதி கோப்பை. எனவே நடுவரிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப் படுவார்கள்”

“அட்டகாசமான ஆர்ர்ர்ரூ... ராஜேஷ் அடித்த அடியில் பந்து தொலைந்துவிடுமோ என்று அஞ்சிவிட்டோம்”

- இந்த ரேஞ்சில்தான் வர்ணனை இருக்கும். வர்ணனையாளரின் தொல்லை ஒருபுறம் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டிருக்க, பார்வையாளர்கள் வேறு தங்கள் மேதமையை மறுபுறம் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

“அவன் லைன் அண்ட் லெந்தா போட்டிருக்கணும். ஃபுல் டாஸ் போட்டதாலதான் சிக்ஸ் அடிச்சான். ஸ்ட்ரெயிட்டா ஸ்லோ பால் போட்டா கூட இவனுக்கு ஆடத் தெரியாது” எனுமளவில் நுணுக்கங்களை கரைத்துக் குடித்து வாந்தியெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

இடையிடையே மைதானத்தின் துப்புரவுப் பணியாளர் டவுசர் பாண்டிக்கு வேறு நன்றி சொல்லி கொண்டிருப்பார் வர்ணனையாளர். டவுசர் பாண்டியோ தன்னுடைய பெயர் மைக்கில் அறிவிக்கப்படும் பிரக்ஞையேயின்றி ஒரு கையில் துடப்பத்தோடும், மறுகையில் காஜாபீடியோடும் சுற்றிக் கொண்டிருப்பார்.

பார்வையாளர்களின் பசியாற்ற பிரெட் ஆம்லெட் போட்டுத் தரும் உணவு விடுதி ஒன்றும் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சிகரெட், பான்பராக் வாங்க சைதாப்பேட்டை மைதானத்துக்கு அருகில் கடையேயில்லை. எனவே சில சிறுவர்கள் வெளி மார்க்கெட்டில் வாங்கிவந்து பிளாக்கில் கொள்ளை ரேட்டுக்கு விற்கிறார்கள்.

போட்டிகளில் கலந்துக் கொள்ளும் அணிகளின் பெயர்களும் வித்தியாசமானவை. இம்பார்ட்டண்ட் லெவன் ஸ்டார்ஸ், ஸ்பேரோஸ், லெவன் டெர்மினேட்டர்ஸ், தந்தை பெரியார் சிசி, ஏவிபி ஆசைத்தம்பி சிசி என்று வரைமுறையே இல்லாமல் பெயர் வைத்திருப்பார்கள்.

தினமும் திமுக விஐபி யாராவது மேட்ச் பார்க்க ஆஜராகிவிடுவதுண்டு. தென்சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன் அடிக்கடி வந்துவிடுவார். அவர் வரும்போதெல்லாம் வர்ணனையாளருக்கு உதறல்தான். “அண்ணன் மாவட்டம் பெண்ணாகரம் தேர்தல் பணி பிஸிகளுக்கு இடையேயும் வீரர்களை ஊக்கப்படுத்த இங்கே வந்திருக்கிறார். அண்ணன் மாவட்டத்தை வரவேற்கிறோம்” என்று உச்சஸ்தாயியில் கத்துவார்.

அண்ணன் மாவட்டத்தின் மகன் ராஜாவும் அவ்வப்போது வருவதுண்டு. அவர் பார்க்கும்போது வெற்றியடையும் அணிக்கு ஆயிரம் ரூபாய் இன்ஸ்டண்ட் பரிசும் வழங்குவதுண்டு. வட்ட மற்றும் சதுரச் செயலாளர்களும் கூட தங்கள் வட்ட டீம்கள் விளையாடும்போது 500, 1000 என்று அள்ளிவிடுவதுண்டு. பசங்களுக்கு பீர் செலவுக்கு ஆச்சி.

கடந்த வாரத்தில் நடந்த ஒரு போட்டியில் இதுவரை இப்போட்டி வரலாற்றில் நடைபெறாத அதிசயம் ஒன்று நடந்தது. குரோம்பேட்டை பகுதியைச் சார்ந்த அணி ஒன்று எதிரணியைப் போட்டு புரட்டியெடுத்து விட்டது. 8 ஓவரில் 128 ரன். அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான பெர்னார்ட் 15 சிக்ஸர், 4 நான்கு என்று விளாசி 109 ரன்கள் எடுத்திருந்தார். தளபதி கோப்பையில் அணியின் ஒட்டுமொத்த ஸ்கோர் என்ற அடிப்படையிலும், தனிமனித செஞ்சுரி என்ற அடிப்படையிலும் இது புதிய சாதனை.

தோற்றுப் போகும் அணியினர் வெறுத்துப் போய் தங்கள் டீஷர்ட்டுகளை தூக்கியெறிந்து விட்டுச் செல்லுவதுண்டு. ஏரியா பொடிசுகள் இதனாலேயே எந்த டீம் தோற்கிறதோ அந்த டீமிடம் சென்று டீஷர்ட்களை தங்களுக்கென்று கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

சுமார் ஒருமாதத்துக்கும் மேலாக நடைபெறப் போகும் இப்போட்டியில் வெல்லும் அணிக்கு பரிசினை அளிக்க தளபதியை நேரம் கேட்டிருக்கிறாராம் மாவட்டம். தளபதி கையால் பரிசு பெறப்போகும் அதிர்ஷ்டம் எந்த அணிக்கோ?

ஓட்டம்தான் மூச்சு!


ஒரு மாரத்தான் ஓட்டக்காரருக்கு என்ன தேவை? புரோட்டின், சமவிகிதத்தில் கார்போ-ஹைட்ரேட், விட்டமின் இவையெல்லாம் அதிகளவில் இருக்கும் உணவுப்பொருட்கள், உடல் ஊட்டத்துக்கு தேவையான மருந்துகள் இதெல்லாம் அவசியம் என்பீர்கள். ஐம்பத்து மூன்று வயதான ராஜம் கோபிக்கு துரதிருஷ்டவசமாக இதெல்லாம் கிடைக்கவில்லை.

“இட்லி, சாப்பாடு, ரொட்டி, ஆம்லெட், அப்பளம் - இவைதான் என் ஓட்டத்துக்கு ஊட்டம். என்னிடம் இருக்கும் பணத்துக்கு அதிகபட்சமாக இவற்றைதான் என்னால் வாங்கமுடியும்” என்கிறார்.

சிறுவயதிலிருந்தே தடகளப் போட்டிகளில் ராஜமுக்கு ஆர்வம் அதிகம். ஒன்பதாம் வகுப்போடு பள்ளியை ஏறக்கட்டி விட்டார். துப்புரவுப் பணியாளராக கொச்சியில் பணிபுரிந்திருக்கிறார். இடையில் திருமணமும் ஆனது. கணவர் கோபி, அரசுப் பேருந்து நிலையம் ஒன்றில் சுமை தூக்குபவர். பொருளாதாரக் காரணங்களுக்காக அவ்வப்போது இடம்பெயர நேரிட்டது. மகன், மகள் என்று இரண்டு குழந்தைகள்.

திடீரென ஒரு நாள் ராஜமுக்கு மீண்டும் தடகளப் போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பொதுவாக இந்தியக் கணவர்கள் தங்கள் இல்லத்தரசிகளின் இல்லம் தாண்டிய ஆர்வங்களை ஊக்குவிப்பதில்லை. கோபி ஒரு விதிவிலக்கு. கோட்டயத்தில் நடைபெற்ற மூத்தோருக்கான ஒரு போட்டியில் பங்குகொண்டு ராஜம் குறிப்பிடத்தக்க அளவில் சாதித்தார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் போட்டிகளிலும், நடைப்போட்டியிலும் தங்கம் வென்றார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயானபிறகும் ராஜம் விளையாட்டுத் துறையில் மீண்டும் நுழைந்து வெற்றி கண்டதற்குப் பின்னால் அவரது கணவர் மட்டுமே இல்லை. இன்னொருவரும் உண்டு. ராஜமுக்கு பயிற்சியளித்த கோச் ஏ.ராமச்சந்திரன். இவர் திரிச்சூர் போலிஸ் அகாடமியில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர்.

இதெல்லாம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம். அதன்பின் நடந்தது வரலாறு. ராஜம்கோபியின் ஓட்டத்தை காலத்தால் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. இப்போது கிட்டத்தட்ட 80 பதக்கங்கள் அவரது வசம். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் வென்ற 40 பதக்கங்களும் அவற்றுள் அடக்கம்.

கடந்த 2008ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த மூத்தவர்களுக்கான ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இரண்டு தங்கப்பதக்கம் மற்றும் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை இவர். கடந்த ஆண்டு நடந்த 22வது மலேசிய மூத்தோர் தடகளப் போட்டியில் நான்கு தங்கம். கடந்த 2000ஆம் ஆண்டின்போது பெங்களூரில் உலக மூத்தோர் தடகளப்போட்டி நடந்தபோது, 5 கி.மீ நடைப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, மூத்தோர் தடகளப்போட்டியில் முதல் பதக்கம் வென்ற இந்தியராய் தன் பெயரை பதிவு செய்துகொண்டார்.

2007ஆம் ஆண்டு இத்தாலியில் மூத்தோர் உலக தடகளப்போட்டி நடந்தபோது, இவர் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட போதும், துரதிருஷ்டவசமாக விசா பிரச்சினைகளால் இவரால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. இதுபோலவே 2005ல் இங்கிலாந்திலும், 2006ல் ஆஸ்திரேலியாவிலும் நடந்த சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டிகளில் பொருளாதாரம் காரணமாக இவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

போதுமான ஊட்டச்சத்துகளோடு கூடிய உணவு கிடைக்காவிட்டாலும், இன்றும் பத்தாயிரம் மற்றும் ஐயாயிரம் மீட்டர் ஓட்டம், பத்தாயிரம் மீட்டர் நடை, நானூறு மீட்டர் தடைதாண்டிய ஓட்டம் மற்றும் மாரத்தான் போட்டிகளில் கலந்துகொள்ள தேவையான உடல் தகுதிகளோடு இருக்கிறார்.

பொதுவாக தடகள வீராங்கனைகள் ஐம்பது வயதிற்குள்ளாக ஓய்வு பெற்று தங்கள் வாழ்க்கையை வாழதான் விரும்புவார்கள். பேரன், பேத்தியோடு நேரத்தை செலவிடுவார்கள். ராஜம் கோபியோ தன்னுடைய வாழ்க்கையே இப்போதுதான் தொடங்கியிருப்பதாக பெருமிதப்படுகிறார். “என் ஒரு நாள் உணவை உட்கொள்ள நான் மறந்தாலும் மறப்பேனே தவிர, ஓட்டப்பயிற்சியை ஒருநாளும் மறந்ததில்லை” என்று சிரிக்கிறார். மலையாளம் சரளமாகப் பேசும் இவருக்கு இந்தியும், ஆங்கிலமும் கொஞ்சம் கொஞ்சம் வருகிறது.

என்னதான் பதக்கங்களும், பெருமையுமாக குவிந்தாலும் ராஜம்கோபியின் பொருளாதார நிலைமை ஒன்றும் பெரியதாக மேம்பட்டு விடவில்லை. அவரது கணவர் இப்போது வேலை எதுவும் இல்லாமல் இருக்கிறார். மகன் ஆட்டோ ஓட்டுகிறார். மகளை ஒரு கார்பெண்டருக்கு கட்டி கொடுத்திருக்கிறார். தற்போது கொச்சியின் தல்வால்க்கர் மைதானத்தில் ராஜமும் பயிற்சியாளராகப் பணிபுரிகிறார். வருமானம் போதாமல் லேப் ஒன்றிலும் துப்புரவுப் பணிகளுக்குப் போகிறார். “நான் சம்பாதிக்கும் பணம் என் குடும்பத்துக்கு போதவில்லை என்பது நிஜம்தான்!” என்று வருத்தப்படுகிறார்.

துப்புரவு பணியாளர் பணிக்கு கேரள அரசின் முதல்வரிடமும், விளையாட்டுத் துறை அமைச்சரிடமும் விண்ணப்பித்திருக்கிறார். பல்வேறு விண்ணப்பங்களை அளித்தும் பலன் ஒன்றுமில்லையாம். இத்தனைக்கும் ‘2008ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீராங்கனை’ விருதினை கேரள மூத்தோர் விளையாட்டு அமைப்பிடம் இருந்து பெற்றவர் ராஜம்கோபி.

ஐம்பத்தி இரண்டு வயதானாலும் பயிற்சியில் இவர் எந்தக் குறையும் வைப்பதில்லை. தினமும் ஒருமணி நேர ஓட்டப் பயிற்சி. இதுமட்டுமன்றி வாரம் ஒருமுறை தொடர்ச்சியாக பதினைந்து கிலோ மீட்டர் ஓட்டம். “ஓடிக்கொண்டிருக்கும் போதே என் மூச்சு நின்றுவிட வேண்டும்!” என்பதுதான் ராஜம்கோபியின் இறுதிவிருப்பமாம்.


எக்ஸ்ட்ரா மேட்டர் 1 :

ராஜம் கோபியின் டயட் ரகசியம்!

காலை 6.30 - 8.30 :
ஓட்டப் பயிற்சியின் போது தண்ணீர் மட்டும்

காலை 8.45 :
ஒரு கப் தேனீர்

காலை 10.45 :
பால் மற்றும் இரண்டு கப் ஓட்ஸ்
இரண்டு இட்லி அல்லது ஒரு வாழைப்பழம் அல்லது ஒரு முட்டை

பிற்பகல் 12.30 :
சாம்பார் சாதம், ஏதாவது ஒரு காய்கறியுடன்.

மாலை 4.00 :
டிக்காஷன் காஃபி, நான்கு மேரி பிஸ்கட்டுகளுடன்
அல்லது இரண்டு சிறிய தோசை

மாலை 6.00 :
ஒரு கப் பூஸ்ட் (சுடுதண்ணீர் கலந்தது)

இரவு 8.30 :
சாம்பார் சாதம், ஒரு ஆம்லெட்

இரவு 11.30 :
ஒரு ஆப்பிள் மற்றும் கைநிறைய திராட்சைப்பழம்

(நன்றி : புதிய தலைமுறை)

11 மார்ச், 2010

வச்ச குறி தப்பாது!


’தில்லுதுர’ என்ற மொக்கையான சீண்டல் விளம்பரத் தொடரின் தொல்லை இப்போதுதான் முடிந்திருக்கிறது. அடுத்தது ஆரம்பித்து விட்டார்கள். வெச்சகுறி தப்பாதாம்.

அதிருக்கட்டும். அதென்ன சீண்டல் விளம்பரம்?

‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது :

சீண்டல் விளம்பரங்களை (Teaser ads) நீங்கள் அதிகம் கண்டிருக்க முடியும். இங்கே சீண்டுதல் என்பது மக்களை சீண்டுவதாக பொருள்படும். ஒரு விளம்பரத்தை கண்டதுமே தலையும் புரியாமல், வாலும் புரியாமல் அந்த விளம்பரத்தை தந்த நிறுவனம் எது, விற்க விரும்பும் பொருள் எது என்று தெரியாமல் நீங்கள் குழம்பினால் அதுதான் சீண்டல் விளம்பரம்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?’ என்ற கேள்வியை எங்கு பார்த்தாலும் கேட்டுக் கொண்டிருந்தார்கள் இல்லையா? அதுதான் சீண்டல் விளம்பரம். சீண்டல் விளம்பரங்கள் எந்த பொருளையும் உடனடியாக விற்றுத் தராது, எந்த நிறுவனத்தையும் பற்றி உடனே மக்களை பேசவைக்காது. ஆனாலும் சீண்டலை மக்கள் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட மாட்டார்கள். சீண்டல் விளம்பரங்கள் மூலமாக நிறுவனத்தின் பிராண்டை மக்கள் மத்தியில் வெகுவாக பரவலாக்க முடியும்.


ஓக்கே, கமிங் பேக் டூ த பாயிண்ட்.

‘வச்ச குறி தப்பாது’ யாரை குறிவைத்து விளம்பரப் படுத்தப் படுகிறது என்று கடந்த ஒருவாரமாய் பல்வேறு வேண்டுகோள்களை ஏற்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். இந்த விளம்பரத்துக்கான மீடியம் மூன்று வகைகளாக இருக்கிறது. 1) போஸ்டர், 2) பத்திரிகை விளம்பரம், 3) டிவி விளம்பரம்.

சினிமா சுவரொட்டிகளுக்கு நடுவில் வச்ச கண்ணு வாங்காமல் பார்த்தால்தான் இந்த போஸ்டர்களை காணமுடிகிறது. பொதுவாக அரசியல் போஸ்டர்களும், ஏனைய அடாசுகளும் ஒட்டப்படும் இடங்களில் காணமுடிவதில்லை. எனவே சினிமா போஸ்டர் ஒட்டும் ஆட்களே இதையும் ஒட்டுகிறார்கள் என்று கண்டுகொள்ளலாம்.

பத்திரிகை விளம்பரங்களிலும் விண்ணை தாண்டி வருவாயாவுக்கு கீழேயும், தம்பிக்கு இந்த ஊருக்கு மேலேயும் நம் வச்சகுறி இடம்பெறுகிறது. டிவி விளம்பரம் என்று பார்த்தால் விஜய் டிவியில் மட்டும் கவுபாய் இசையோடு ஒளிபரப்பாகிறது.

விசிபிலிட்டி மற்றும் டார்கெட் ஆடியன்ஸ் அடிப்படையில் பார்த்தோமானால் இது சினிமா விளம்பரமென்று அதிநிச்சயமாக சொல்லலாம். அப்படி மட்டும் இல்லையெனில் விளம்பரத்தை தரும் விளம்பர ஏஜென்ஸியின் கிரியேட்டிவ் டைரக்டர்கள் அதிபுத்திசாலிகள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

விளம்பரத்துக்கு பயன்படுத்தியிருக்கும் எலிமெண்ட்ஸை வைத்துப் பார்த்தோமானால் இது ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ படத்துக்கான விளம்பரங்களாக இருக்கக்கூடும் என்று கணிக்க முடிகிறது. பொதுவாக சினிமாவுக்கு இதுபோல சீண்டல் விளம்பரங்கள் சரியாக எடுபடுவதில்லை. ஓரிரு விதிவிலக்குகள் இருக்கலாம். விதிவிலக்குக்கு உதாரணம் : ‘ஜெயம்’ படம் வெளியானபோது செய்யப்பட்ட சாதாரணமான போஸ்டர் கேம்பைன்.

என் விளம்பர அனுபவத்தில் உணர்வது என்னவென்றால் புராடக்டுக்கு டீசர் வேலைக்கு ஆகாது. சர்வீஸுக்கு தான் இந்த உத்தியை பயன்படுத்தலாம். புராடக்ட்டை டமாலென்று காட்சிக்கு வைத்து சிறப்பம்சங்களை வரிவரியாக அடுக்குவதே இந்திய மனோபாவத்துக்கு வேலைக்கு ஆகும்.

சினிமா என்பது ஒரு புராடக்ட். சர்வீஸ் அல்ல. ’இரும்புக்கோட்டை முரட்டு’ படத்தைப் பொறுத்தவரை குழந்தைகளை டார்கெட் செய்து அடித்தால் மட்டுமே வெச்சகுறி தப்பாமல் வசூலை அள்ளலாம். கோடைவிடுமுறை ரிலீஸ் என்பது அருமையான வாய்ப்பு. ஆனால் இதுபோல சீண்டலாக மாற்றி மாற்றி அடிப்பது என்பது இலக்கில்லாத வெத்து அடியாக மட்டுமே இருக்கும்.

சிம்புதேவன் ‘இம்சை அரசன்’ விளம்பரங்களில் டக்கர் அடி அடித்திருந்தார். குழந்தைகளை சரியாக டார்கெட் செய்து அடிக்கப்பட்ட சரியான அடி அது. அதே பாணியையே இப்படத்துக்கும் தொடர்ந்திருக்கலாம். இப்பொழுதே கவுபாய் எலிமெண்ட்ஸை (தொப்பி, பொம்மை துப்பாக்கி போன்றவை) விற்பனைக்கு வைத்து அல்லது குழந்தைகளுக்கு பரிசுகளாக கொடுத்து படத்துக்கு ஹைப்பை ஏற்றமுடியும்.

இவ்வளவு நாளாக இறைக்கப்பட்டது விழலுக்கு இறைத்த நீர் என்றே நினைக்கிறேன்.

தொடர்புடைய பழையப் பதிவு ஒன்று இங்கே!