23 பிப்ரவரி, 2010

தியாகம் மீதான வெறுப்பு!


சில நாட்களாக தியாகங்கள், தியாகிகள் மீதான பற்றோ, பிரமிப்போ கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பயமேற்பட்டு இப்போது வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறேன். ‘தன்னலமில்லாத பொதுநலம் பயனில்லாதது’ என்று கவுதம்சார் அடிக்கடி சொல்லுவார். அந்த கூற்றின் மீது ஆரம்பத்தில் எனக்கு பெரிய மதிப்பு இருந்ததில்லை. இப்போது இதுதான் யதார்த்தம் என்பதாக ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

2007ஆம் ஆண்டு தமிழ்செல்வன் மறைந்தபோது, ”இனத்துக்காக உயிரிழந்தாரே? வாழ்ந்தால் இவரைப்போல வாழவேண்டும்!” என்று உருகியதுண்டு. 2009ன் தொடக்கத்தில் முத்துக்குமாரின் தியாகத்தை அடுத்து, தியாகங்களை கண்டு அஞ்சத் தொடங்கினேன். வரலாறு நெடுகிலும் தியாகிகளும், தியாகங்களும் போற்றப்படுகிறார்கள். ஆயினும் பெரும்பாலும் தியாகத்துக்குப் பிறகான அவர்களது குடும்பங்கள் என்ன ஆயின என்பது குறித்த குறிப்புகள் கிடைப்பதில்லை. கிடைக்கும் ஓரிரு குறிப்புகளும் கூட வேதனையானவையே.

உச்சபட்சமாக மே 19. அடுத்தடுத்து தமிழீழத் தேசியத் தலைவரின் குடும்பத்தார் குறித்து ஊடகங்களில் வந்த செய்திகள், அவரை தீவிரமாக எதிர்த்து வந்தவர்களுக்கும் கூட கலக்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

’போராட்டமே தவறு!’ என்ற முட்டாள்தனமான முடிவுக்கு நான் அவசரமாக வந்துவிடவில்லை. நம்பியிருந்த இனத்துக்கான, வர்க்கத்துக்கான, மனிதகுலத்துக்கான தியாகங்கள் அனைத்துமே போற்றத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஆனால் மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.

பொதுநலவாதிகள் ஊருக்கு நல்லவர்களாக இருந்தாலும், குடும்பத்துக்கு வில்லன்களாகவே அறியப்படுகிறார்கள். நல்ல அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர் யாரையாவது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவரது மகனிடமோ, மகளிடமோ, மனைவியிடமோ பேசிப்பாருங்கள். அதிர்ச்சி அடைவீர்கள். மாணவப் பருவத்தில் இருந்து அரசியலில் ஈடுபட்டு நேர்மையான செயல்வீரராக வாழ்ந்த என் அப்பாவும் கூட குடும்பத்தில் சொல்லிக் கொள்ளும்படியான பெயர் எடுத்ததில்லை. நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.

லேட்டஸ்ட் அதிர்ச்சி தோழர் உ.ரா.வரதராசன்.

1989 ஜனவரியில் நடந்த சட்டமன்றத் தேர்தல் நேரம் நினைவுக்கு வருகிறது. எனக்குத் தெரிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உச்சபட்ச செல்வாக்கோடு இருந்த காலம் அது. தோழர் வரதராசன் வில்லிவாக்கம் தொகுதியின் வேட்பாளர். அக்கட்சியின் நட்சத்திர வேட்பாளர். மார்க்சிஸ்ட் செயல்வீரர்கள் வில்லிவாக்கம் மட்டுமன்றி சென்னை முழுவதுமே சிகப்புக்கொடியோடு சைக்கிள் பேரணிகளை நடத்துவார்கள்.

அக்கட்சியில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவர் என்னையும் சைக்கிளில் அமரவைத்து அழைத்துப் போயிருக்கிறார். முடிவில் பிரச்சார பொதுக்கூட்டம். சேத்துப்பட்டுக்கு அந்தப் பக்கம் என்பதாக நினைவு. வரதராசனை அப்போது பார்த்திருக்கிறேன். அப்பாவோடு சென்ற கூட்டங்களில் திராவிடக் கட்சிகளின் வேட்பாளர்களையே அதுவரை பார்த்திருந்ததால், ஒரு கம்யூனிஸ்டு வேட்பாளர் எனக்கு வேறுமாதிரியாக தெரிந்தார். ‘வெற்றி வேட்பாளர்’ போன்ற அடைமொழிகளின்றி தோழர் என்றே அவரை பேசியவர்கள் அனைவரும் விளித்தனர். அந்த தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வென்ற நிஜமான வெற்றி வேட்பாளர்.

கடந்த 18ஆம் தேதி மாலை நாளிதழ்களின் ’மார்க்சிஸ்ட் தலைவர் மாயம்’ என்ற போஸ்டரை கண்டபோது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படவில்லை. மாயமானவர் வரதராசன் என்று அறிந்தபோதுதான் இதயத்தைப் பிசைந்தது. குடும்ப வாழ்க்கையின் நெருக்குதல் காரணமாக தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார் என்று வாசித்தபோது, இப்பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட தியாகங்களின் மீதான வெறுப்பு எனக்கு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஊன், உறக்கமின்றி, நேர்மையாக ஒரு கட்சிக்கு உழைத்திருக்கிறார். பெரும்பாலான மார்க்சிஸ்ட் தலைவர்களைப் போலவே ஊழலுக்கு ஒவ்வாதவர். அவரது நேர்மையை ஊரே போற்றுகிறது. என்ன பிரயோசனம்?

இன்று தினகரன் நாளிதழின் தலையங்கத்தை வாசித்தேன். இம்மாத துவக்கத்தில் தோழரின் மனைவி மாநிலக்குழுக்கு அளித்த புகாரின் பேரில், கொல்கத்தாவில் நடந்த மத்தியக்குழு கூட்டத்தில் வரதராசன் மீது விசாரணை நடந்திருக்கிறது. பெண் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் கட்சியின் மத்தியக்குழு சீரியஸாகவே விசாரித்திருக்கிறது. எல்லா குற்றச்சாட்டுகளையும் வரதராசன் மறுத்திருக்கிறார். ஆனால் உறுப்பினர்கள் மத்தியில் ஓட்டெடுப்பு நடத்தி, ஒட்டுமொத்தமாக பொறுப்புகளில் இருந்து விடுத்தி, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்று தலையங்கம் குறிப்பிடுகிறது.

மனைவியின் சந்தேகத்தால் கூட மன உறுதி குறையாத வரதராசன், விபரீத முடிவை எடுக்க கட்சிதான் காரணமாக இருந்திருக்கிறது. இத்தனை ஆண்டு உழைப்புக்கும், தியாகத்துக்கும் இதுதான் பரிசு. பாவத்தின் சம்பளமாக அல்ல, தியாகத்தின் சம்பளமாக அவருக்கு மரணம் வாய்த்திருக்கிறது. அவரை கட்சி கைவிட்டு விட்ட சூழலிலும் கூட கட்சியை விட்டுக்கொடுக்காத அவரது உயர்ந்த மனம், அவர் எழுதிய கடைசிக் கடிதங்களில் வெளிப்படுகிறது.

நீங்களே சொல்லுங்கள். தியாகத்தை வெறுக்காமல் போற்றவா முடியும்?

18 கருத்துகள்:

 1. தோழர் உ.ரா.வரதராசன் அவர்களுக்கு அஞ்சலி. மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான். மானஸ்த்தன். நாட்டில் எத்தனை அரசியல்வாதிகள் இப்படி இருக்கிறார்கள். நேற்றுக்கூட ஒரு எம்.எல்.ஏ குடித்துவிட்டு கும்மாளமடிப்பதை செய்தியாக கண்டிருப்பீர்கள். என்னத்தசெய்யறது போங்க...

  பதிலளிநீக்கு
 2. அவர் வில்லிவாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்தபோது, வளசரவாக்கம் பஞ்சாயத்தில் எங்கள் காலனி சார்பாக சந்தித்து சில கோரிக்கைகளை வைத்தேன். அங்கு வந்திருந்தவர்களில் நான் மட்டுமே இளைஞன் என்பதால் பொது சந்திப்பு முடிந்த பின்னும், தனியே அழைத்து உற்சாகம் தந்தார்.

  எனக்கும் அவருடைய மரணம் ஒருவித வெறுமையை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.

  //
  மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது.
  //
  சத்தியமான வார்த்தைகள். யாரும் மறுக்க முடியாது.

  //
  நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.
  //

  இதுவும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் இந்த வரிக்கான பின்னூட்டங்கள் வரதராஜனை மறந்து கருணாநிதியை தொடருமானால் அதை தவிர்க்க உங்களால் முடியும்.

  இந்தப் பதிவும், பின்னூட்டங்களும் வரதராஜனைப் பற்றியே இருக்குமானால் அதுவே அவருக்குச் செய்யும் மரியாதை.

  பதிலளிநீக்கு
 3. // இத்தனை ஆண்டு உழைப்புக்கும், தியாகத்துக்கும் இதுதான் பரிசு. பாவத்தின் சம்பளமாக அல்ல, தியாகத்தின் சம்பளமாக அவருக்கு மரணம் வாய்த்திருக்கிறது.//
  கம்யூனிஸ்ட் தனது கடினமான வாழ்வை தியாகமாக நினைப்பவரல்ல. கடமையாக கருதுபவர். அநியாயமாக கொள்ளை அடிக்காமல் இருப்பது தியாகமா? தோழர் ஒரு கடமை வீரர் அப்பழுக்கற்ற அரசியல் வாதி என்பது உண்மை. தியாகி என்ற சொல் இங்கு பொருத்தமின்றி உள்ளது.

  // மூன்றாவது மனிதராக பார்க்காமல், உயிர்த்தியாகம் செய்தவரின் குடும்பத்தாரின் பார்வையில் பார்த்தோமானால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது//
  தோழர் உயிரை விட்டதற்கே இங்கு குடும்பம்தான் காரணம் என்று தோன்றுகிறதே!!

  செல்வா
  selva79.blogspot.com

  பதிலளிநீக்கு
 4. இயற்கை மரணம் இல்லாமல் இப்படி மரணம் என்றால் கொஞ்சம் வேதனையாக இருக்கிறது

  அது வயது பேதமின்றி

  பதிலளிநீக்கு
 5. பிரபலமில்லாத தோழன்!4:03 பிற்பகல், பிப்ரவரி 23, 2010

  தோழர் லக்கி!
  “கட்சிக் கட்டுப்பாடு என்று சொல்லிக் கண்களை மூடிக் கொண்டு எடுக்கப்பட்ட முடிவால் நேர்ந்த மரணம் இது!
  இந்த மரணம் மார்க்ஸிஸ்ட்டுக் கட்சிக்கு ஒரு பாடம்!.
  இனி வரும் காலங்களில் இப்படிச் செயல்படக் கூடாது என்பதை மார்க்ஸிஸ்ட் கட்சி உணர்ந்து வருந்துகிறது!”
  --- இப்படிச் சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல, நேற்று வரை மார்க்ஸிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் N.வரதராசன்(என்.வி).

  பதிலளிநீக்கு
 6. பிரபலமில்லாத தோழன்!4:08 பிற்பகல், பிப்ரவரி 23, 2010

  தோழர் லக்கி!
  பதிவிற்குச் சம்பந்தமில்லாவிட்டாலும் கூட......தினகரனின் தலையங்கம் முக்கியப் பிரச்சினைகளைப் பொறுப்புடன் அலசுவதாகவே நான் எண்ணுகிறேன், தினமும் தவறாமல் வாசிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. வருத்தமா இருக்கு லக்கி. நேத்துத்தான் இந்த விஷயங்களைத் தோழர் ஒருவர் சொன்னார். இன்னும் மானம் மரியாதைக்குப் பயப்படும் நபர்கள் இருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது.

  லால் சலாம் என்ற மலையாளப் படம் கிடைத்தால் பாருங்கள். படத்தின் மீதான் நம்பிக்கை தற்போதைய நடவடிக்கைக்குப் பின் வருகிறது.

  பதிலளிநீக்கு
 8. krishna,
  Karunanidhi ? U should be ashamed friend. I admire You for your maturity in this very early age. By bringing up Karuna you are insulting Varadharajan and his ilk. Karuna has single handedly ruined the future of tamilnadu. How selfish should a man be to put the interest of his family and spoiled sons, daughters and nephews before the crores of people he governs. I would have forgiven if he had shared just his loot among his family members - but he has decided to hand over the reigns of a state - not that he is the only corrupt politician in india\TN - but he doesnt deserve laurels even in a small forum like this - i guess You owe it to your regualar followers like me an explanation why U handed a "viruthu" on the go - like kavingars and cinema nadigars. U too brutus? Shouldnt there be a conviction on anything U write? oru naermai vaendama?

  -Solomon

  பதிலளிநீக்கு
 9. உ.ரா.வரதராசன் 1989-1990 என இரண்டு வருடங்கள் மட்டுமே வில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்... ஆனால் தொகுதிக்கு நிறைய செய்தவர்... அந்த தொகுதியில் இருந்த வில்லிவாக்கம் தெற்கு-வடக்கு, ஜி.கே.எம். காலனி போன்ற பகுதிகளை சென்னை மாநகராட்சியில் இணைத்து... பாதாள சாக்கடை திட்டம் போன்ற திட்டங்கள் வர காரணமாக இருந்தவர்...

  வங்கிகளின் ஒருங்கிணைந்த இடதுசாரி சங்கங்களின் தலைவராக இருந்தவர்...

  பிரகாஷ் காரத் இன்னும் எத்தனை பேரை... நடவடிக்கை என சொல்லி புண்படுத்தி பார்க்க போகிறார் என தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 10. சோகத்தைப் பகிர்ந்துகொள்ளுவோம்.
  கோல்கத்தா நாளிதழ்களில் வரதாவைப்பற்றி மிகவும் விரிவாகவே - அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் - செய்திகள் வெளிவந்துள்ளன. நமது தமிழக நாளிதழ்களில் - குறிப்பாக தி ஹிந்துவில் அவை மறைக்கப்பட்டுள்ளன.
  கம்யூனிஸ்டுகளுக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லைதான்.
  ஆனால், அறிவுஜீவியான வரதா உணர்வுஜீவியாக மாறியதும், தான்கட்டி வளர்த்த கட்சியே அவரது அவமானத்திற்குக் காரணாமாக அமைந்ததும், கடைசியில் தண்ணீரில் சாவு ஏற்பட்டதும் - விதியின் விசித்திர விளையாட்டு இல்லாமல் வேறு என்ன என்று பலரையும் சிந்திக்கவைத்துவிட்டது.
  அவர் உடல் இறுதியில் அக்னிக்கு இரையானதும் விதியின் பயனே!

  பதிலளிநீக்கு
 11. Excellent article - my father also knew Mr Varadarajan personally.
  Your article echoes the sentiments I had in my mind

  I dont agree with this statement
  நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்
  You need not have brought in MK's name in this article dedicated for this noble soul

  பதிலளிநீக்கு
 12. //நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.//

  இதற்கு மேலும் பல்லைக் கடித்துக் கொண்டு உங்கள் தளத்தை படிக்கத் தான் வேண்டுமா என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்...

  பதிலளிநீக்கு
 13. தியாகம் - இந்த சூட்டோடு பின் தொடரும் நிழலின் குரல் ஞாபகம் வருகிறது. தியாகத்தின் அர்த்தத்தை நானூறு பக்கங்களுக்கு ஜெமோ விவாதித்திருப்பார் - குடும்பத் தியாகம், தனி மனித ஆசைத் தியாகம், தனி மனிதன்Xசமூகம் உறவு குறித்த தியாகம் என பல தளத்துக்கு அர்த்தங்கள் மாறுபட்டாலும் முடிவு ஒன்றுதான் என்ற நிலைப்பாடுள்ள நவீன அரசியல் நாவல்.

  தியாகங்களை மனிதன் கடந்தே ஆகவேண்டும். அது மனிதனை ஏமாற்றும் சூழ்ச்சி என்றே முடித்திருப்பார்.

  பதிலளிநீக்கு
 14. நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.அதிகாரத்தை குடும்பத்துக்குள் பங்கிட்டு கொடுக்க தெரிந்த தலைவர்கள் ?!

  பதிலளிநீக்கு
 15. Hi Lucky

  Just because of one line - all the praise for your blog has turned into criticism - this clearly shows how unpopular MK is

  Sad to see people like you back him

  He has not encouraged any outsider to get power inhis party - only his family members - very sad state of affairs :-(

  பதிலளிநீக்கு
 16. //நாட்டுக்கான கடமை வேறு, குடும்பத்துக்கான கடமை வேறு. இரண்டையும் உருப்படியாக செய்தவர்களுக்கு உதாரணம், கலைஞர் போன்றவர்கள்.//

  சிறு பிழை. குடும்பம் என்பதற்கு பதிலாக குடும்பங்கள் என்றிருக்க வேண்டும்.
  ஒரு தகர டப்பாவை தூக்கிக்கொண்டு சென்னை வந்தவரின் குடும்பங்கள் இன்று ஆஹா ஓஹோவென வளர்ந்திருக்கிறது...ஆனா அவரை நம்பிய நாடு?
  தயவு செய்து ஊ.ரா.வ. யும் கருணாநிதியையும் ஒப்பிடாதீர்கள்....

  பதிலளிநீக்கு