1 பிப்ரவரி, 2010

கிராமி நாயகன்!


நான் பணிபுரியும் பத்திரிகைக்கு ஒரு ஒவ்வாமை உண்டு. அது பிரபலங்கள் குறித்தானது. மற்ற பத்திரிகைகளிடம் இருந்து எங்கள் பத்திரிகை வேறுபடும் புள்ளியும் அதுதான். எங்களுக்கு கலைஞரோ, புரட்சித்தலைவியோ, சூப்பர்ஸ்டாரோ பிரபலம் அல்ல. எங்களுடைய பிரபலங்கள் திருப்பூண்டியிலும், கொட்டிக்காரம்பட்டியிலும் இருக்கிறார்கள். சென்னையில் குளிர் அறைகளில் முன் அனுமதி பெற்று நாங்கள் யாரையும் பேட்டி எடுப்பதில்லை. அரசுப்பேருந்தில் முன்னூறு, நானூறு கிலோ மீட்டர் பயணித்து வயலில் களை பிடுங்கிக் கொண்டிருப்பவரையும், சைக்கிளை மாங்கு மாங்குவென்று மிதித்துக் கொண்டிருப்பவரையும் பேட்டி எடுப்பதே எங்களது வழக்கமாக இருக்கிறது.

முதல்வர் கலைஞரின் போட்டோ கூட ஒரே ஒருமுறைதான் எங்கள் பத்திரிகையில் இதுவரை வெளிவந்திருக்கிறது. அதுவும்கூட அட்டைப்படச் செய்தியாக வந்ததால், முக்கியத்துவம் கருதி, பாஸ்போர்ட் அளவில்தான்.

முதன்முறையாக ஒரு விதிவிலக்கு : பத்மபூஷன் ஏ.ஆர்.ரஹ்மான்!

நான் இங்கே பணிக்கு சேர்ந்தபோதே, என்னுடைய சீனியர் கல்யாண்சார் எங்கள் பத்திரிகையின் புதிய தலைமுறைக்கு ஒரு வாக்கு கொடுத்திருந்தார். “நாம எல்லாருமா போய் ஏ.ஆர்.ரகுமானை சந்திச்சு பேட்டி எடுக்கலாம்!”.

கல்யாண்சாரை பற்றி இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம். 80களின் தொடக்கத்தில் ‘திசைகள்’ கண்டெடுத்த முத்துக்களில் ஒருவர். சினிமா தொடர்பானவர் என்பதால் பிரபலமான சினிமா பத்திரிகையாளராக உருவெடுத்தவர். இந்தியா டுடே தமிழில் தொடங்கப்பட்டபோது அதில் பணியில் இருந்தவர். துணை ஆசிரியராக பணியாற்றியவர். இதெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது என்னவென்றால், ஏ.ஆர்.ரஹ்மானை ரோஜா வெளிவருவதற்கு முன்பாகவே முதன்முதலாக பேட்டி எடுத்த பத்திரிகையாளர். இதன்மூலமாக கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக தொழில் அடிப்படையில் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையிலும் ரஹ்மானுக்கு நண்பராக இருப்பவர். இன்று தமிழ் சினிமாத் தொழிலில் இருப்பவர்களில் கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து சதவிகிதம் பேராவது கல்யாண்சாரின் நண்பராக இருப்பார்கள்.

கல்யாண்சார் எங்களுக்கு வாக்கு கொடுத்து ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டதால், அவ்வப்போது அவரை நச்சரித்துக் கொண்டிருந்தோம். இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். பேட்டிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்புக்கொண்டார். தேதி மட்டும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் எங்கள் ஆசிரியரின் அனுமதிக்கு காத்திருந்தோம். ‘பிரபல ஒவ்வாமை’ காரணமாக ஆசிரியர் அனுமதிப்பாரா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது.

ஆசிரியருக்கு ரஹ்மானின் இசை குறித்த பெரிய அபிப்ராயம் இருப்பதாக அவரது பேச்சில் தெரியவில்லை. ‘அவரது இசையில் நேட்டிவிட்டி மிஸ்ஸிங்’ என்பதாக அவர் நினைக்கிறார் என்று கருதுகிறேன். மேலும் அவர் இளையராஜா ரசிகராகவும் இருக்கக்கூடும் என்றும் யூகிக்கிறேன். ஒவ்வொரு மேடையிலும் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று ரஹ்மான் க்ளிஷேவாக சொல்லுவார். ஆயினும் ஆஸ்கர் வாங்கியபோது ‘எனக்கு இரண்டு வழி இருந்தது. ஒன்று அன்பு, மற்றொன்று வெறுப்பு. அன்பு பாதையை தேர்ந்தெடுத்தேன். ஆஸ்கர் வரை வந்தேன்’ என்ற ரஹ்மானின் கருத்து ஆசிரியரை மிகவும் கவர்ந்திருந்தது. வாழ்ந்து முடித்த ஒருவருக்கு வந்து சேரவேண்டிய முதிர்ச்சி இளைஞரான ரஹ்மானுக்கு வாய்த்திருப்பது குறித்த ஆச்சரியம் ஆசிரியருக்கு இருந்தது. பாரம்பரியமிக்க ஆஸ்கர் மேடையில் ரஹ்மானால் தமிழ் முதன்முதலாக உச்சரிக்கப்பட்டு தமிழுக்கு பெருமையும் சேர்ந்தது. இதுவே நாங்கள் அவரை பேட்டியெடுப்பதற்கான நியாயத்தையும் தந்தது.

பொங்கல் விடுமுறை முடிந்து, ஒருநாள் மாலை ஐந்து மணிக்கு பேட்டி என்பதாக முடிவாகி இருந்தது. அன்றைய தினம் பிற்பகலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஆங்கிலப் படம் ஒன்றின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியும் சென்னையில் நடந்தது. ஐந்து மணியளவில் கோடம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் எங்கள் குழு ஆஜர். குழுவிலிருந்த நானும், தோழர் கவின்மலரும் தீவிர இளையராஜா ரசிகர்கள். அதிஷா ஒரு பலபட்டறை. சமீபமாக விஜய் ஆண்டனியின் குத்துப்பாடல்களுக்கு ரசிகராக இருக்கிறார். புகைப்படக் கலைஞர் அறிவழகன் மட்டும் தீவிர ஏ.ஆர். விசிறி. கல்யாண்சாருக்கும் ஏ.ஆரின் இசை பிடிக்குமா என்று தெரியாது. ஆனால் எம்.எஸ்.வியின் ரசிகர் என்று மட்டும் தெரியும்.

ஆங்கிலப்பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி நீண்டு கொண்டிருந்ததால், ஆறு மணி ஆகியும் ஏ.ஆர். வீடு வந்துசேரவில்லை. அந்த ஒரு மணி நேரத்தில் கல்யாண்சார் ரஹ்மானுடனான தனது முதல் பேட்டியில் தொடங்கி, அவருடனான அனுபவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். திரையுலகில் பெரும் பொருள் ஈட்டியும், அப்பாவுடைய அதே வீட்டில் ரஹ்மான் வசிக்கிறார் என்று குறிப்பிட்டார். ஒரு வெள்ளிக்கிழமை மதிய நேரத்தில் சந்திக்க வந்தபோது, ‘தொழுகை முடிச்சிட்டு வந்துடறேனே!’ என்று சொல்லி, ஒரு பிரைவேட் ஆட்டோவில் ஏறிச்சென்ற ரஹ்மானின் எளிமையை விவரித்துச் சொன்னார். ரஹ்மானின் வீட்டு மாடியில் பாகிஸ்தான் கொடி பறக்கிறது என்று ஒரு புலனாய்வு இதழ் பரபரப்பு கிளப்பியதின் பின்னணி குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

மூத்தப் பத்திரிகையாளரான கல்யாண்சாரின் அனுபவங்கள் சுவையாக ஓடிக்கொண்டிருந்தபோதே, ஆஸ்கர்நாயகன் வந்துவிட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவரது பிரத்யேக அலுவல் அறையில் அமர்த்தப்பட்டோம். ரோஜாவில் வாங்கிய விருதில் தொடங்கி, நூற்றுக்கணக்கான விருதுகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. ஆஸ்கரும், தேசிய விருதுகளும் மட்டும் மிஸ்ஸிங் என்று நினைக்கிறேன். ரோஜா படத்துக்கு இசையமைத்தபோது, அவர் வாசித்த கீபோர்டு சுவரில் மாட்டிவைக்கப்பட்டிருக்கிறது (படத்தில் பார்க்கவும்).

ஐந்து நிமிடத்தில் இசைப்புயல் கருப்புச் சட்டையில் நுழைந்தது. ஜீனியஸ், அமைதியானவர் என்றெல்லாம் ஊடகங்கள் மூலமாக அவர் குறித்த கற்பிதம் வைத்திருந்த எனக்கு, அவரது பழகும் முறை ஆச்சரியமளித்தது. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு டிபிக்கல் சென்னை இளைஞர். அவரது பேச்சுத்தமிழ் இலகுவானதும், நட்பானதும் ஆகும். இடையிடையே ஏதாவது ஜோக்கடித்துவிட்டு, இதையெல்லாம் எழுதாதீங்க என்கிறார். சக்கரைக்கட்டி படத்தின் தோல்வி அவரை நிரம்பவும் நோகடித்திருக்கிறது. ஒருவேளை நான் மியூசிக் போடலேன்னா அந்தப்படம் வேறமாதிரி வந்து ஹிட் ஆகியிருக்கும் என்கிறார்.

ஆஸ்கர் மேடையில் அவரது பேச்சுக்குறித்து கேட்டபோது, ”அன்பு பாதை என்பது அடக்கமான பாதை. விமர்சனங்களை கண்டு நான் பதிலளிக்க முனைந்திருந்தால் அது வெறுப்புப் பாதையாக இருந்திருக்கும். ஆஸ்கர் வரை என்னால் சென்றிருக்க முடியாது” என்று விளக்கமளித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீண்ட நீளமான பேட்டி அது. ஒரு நண்பரிடம் கேஷுவலாக உரையாற்றும் உணர்வையே தந்தது. எந்த ஒரு நொடியிலும் உலகரங்கில் உயரமான இடத்தில் இருக்கும் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணமே வரவில்லை.

‘விண்ணைத் தாண்டி வருவாயா?’ குறித்து நல்ல நம்பிக்கையில் இருக்கிறார். என்னை ஆச்சரியப்படுத்திய இன்னொரு விஷயம், தேவாவின் கானா பாடல்களை ஏ.ஆர். தீவிரமாக ரசிக்கிறார் என்பது. ஒவ்வொரு இசையமைப்பாளரும் இசையின் நல்ல வடிவங்களை மக்களிடம் பரவலாக்குகிறார்கள். தேவா சென்னை இசையை தமிழர்களிடையே பரவலாக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

நேரம் நீண்டுவிட்டதால், “முடிச்சுக்கலாமா?” என்று எங்களிடமே அனுமதி கேட்டார். முடிச்சுக்கிட்டப் பிறகு, பத்திரிகையாளர்களாக இல்லாமல் தனிப்பட்ட முறையில் அவரோடு தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம். தீவிர ஏ.ஆர். வெறியரான எங்கள் புகைப்படக் கலைஞர், அவரது மாஸ் ஹிட்டுகள் குறித்த தனது அபிப்ராயங்களை கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளோடு கொட்டியபோது, அமைதியாக புன்முறுவலோடு ரசித்தார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் அந்தப் பேட்டி, அடுத்தவார ‘புதிய தலைமுறை’ இதழில் வெளிவரும்.

17 கருத்துகள்:

 1. A.R.R அருகில் நிற்கும் ஹீரோ யாரு?

  :)))

  பதிலளிநீக்கு
 2. எளிமை-இறைபக்தி-பணிவு-மிகைக்கூச்சம்-கடும்உழைப்பு-திறமை, ஆகிய மாண்புகளின் உறைவிடமாய்த்திகழும் ஓர் ஒப்பற்ற ஒலிக்கலைஞர் திரு.ஏ.ஆர்.ரஹ்மான்.
  இவரை விஞ்சும் திறம் படைத்தோரும் இதே மண்ணில் உண்டெனிலும், இவர் அடைந்த உயரத்தை அவர்கள் எட்டமுடியாமைக்குக் காரணமாக நான் சுட்ட விரும்புவது, இவரிடமிருக்கும் 'அகந்தையற்ற' இயல்பையே!
  விருதுகளுக்கு பெருமை சேர்ப்பவர். அவரது பணி வளர்க !

  பதிலளிநீக்கு
 3. ஹீரோ லக்கியின் அருகில் நிற்கும் நபர் யார்?

  பதிலளிநீக்கு
 4. ஏ ஆர் ஆர் பக்கத்துல நிக்கற இந்த போட்டோ ரொம்ப பெரிய விஷயம்..நான் 5வருஷத்துக்கு முன்னையே அவர்வீட்ல சந்திச்சு ஒஒரு பேட்டி எடுத்தோம்.. அவருடைய பேச்சை கேசட்ல சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு திரும்பி பார்த்தா ஆளை கானோம்... எனக்கான சந்தர்பத்தை மிஸ் பண்ணியது அப்போதுதான்...

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள் பாஸ்! தலைப்புல இருக்கற முதல் வார்த்தை அவருக்கும்... ரெண்டாவது உங்களுக்கும் பொருந்துது!

  பதிலளிநீக்கு
 6. அசத்தல்..பிரபலங்களுடன் போஸ் குடுப்பது ஒரு கலை. முக்காவாசி பேருக்கு ஒரு அசட்டு சிரிப்பும் கூழை கும்பிடு உடல் மொழியும் தன்னை அறியாமல் வந்து விடும் (rediff spotted பேஜ்களில் பார்த்தால் தெரியும்). நீங்கள் நச்னு போஸ் கொடுத்திருக்கிறீர்கள். உங்கள் நியூ இயர் பதிவு ஞாபகத்துக்கு வந்தது. நீங்கள் தேர்ந்தெடுத்த பாதை உங்களை ARR வீடு வரவேற்பறை வரைக்கும் (இப்போதைக்கு) நிறுத்தி இருக்கிறது. வாழ்த்துக்கள் லக்கி..

  பதிலளிநீக்கு
 7. யுவகிருஷ்ணா! இசைப்புயல் எளிமை குறித்த பதிவு இனிய விருந்து. ஆமா, எனக்கொரு டவுட்! உங்க பக்கத்துல நிக்குறாரே, அவர் ஏ.ஆர்.ரஹ்மான்தானே?

  பதிலளிநீக்கு
 8. நீங்கள் " புதிய தலைமுறை " ஆள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி Y.K.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் லக்கி. உங்க பின்னாடி இருக்கிற ஏ.ஆர். ரஹ்மானின் கீ போர்டிக்கு பக்கத்துல சுவரில ஒரு கைத்தடம் பதிஞ்சிருக்கு. அது உங்க குசும்புதனம் தானா. ஏ.ஆர். ரஹ்மான் கீபோர்ட் பக்கத்துல உங்க தடத்தைபதிக்கௌம்னு ஒரு ஆசையா. (பய புள்ள எவ்வளவு நுனுக்கமா பக்கிறாங்க)

  பதிலளிநீக்கு