27 ஜனவரி, 2010

பெயர் வரலாறு!


வைணவ - சைவ கலப்பு குடும்பத்தில் பிறந்து தொலைத்ததால் எந்த பாரம்பரிய பெயர் வைப்பது என்ற குழப்பம் நான் பிறந்தபோது என் குடும்பத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஜாதகத்தில் பார்த்தவரை “மோ”வில் தொடங்கும் பெயர் வைத்தால் மட்டுமே இந்தப் பயல் ஜீவிதம் செய்ய முடியும் என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கிறது. 'பையனுக்கு தண்ணியிலே கண்டம்', ‘ரெண்டு பொண்டாட்டி' போன்ற விவரங்களையும் கூட ஜாதகம் மூலமே அறிந்திருக்கிறார்கள். அம்மாவுக்கு அவர்கள் அம்மா வீட்டில் பிரசவம் ஆனதால் பெயர்சூட்டு விழாவும் அங்கேயே நடக்க இருந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட தாத்தா லபக்கென ‘மோகன சுந்தரம்' என்ற மொக்கை டைட்டிலை தேர்வு செய்துவிட்டிருக்கிறார்.

முருகபக்தரான அப்பாவோ முருகன் பெயரை சூட்டவேண்டும் என்ற கொலைவெறியில் இருந்திருக்கிறார். எனவே ”குமரன்” என்ற பெயரை சூட்டியே தீரவேண்டும் என்று ஒற்றைக்காலில் தவம் நின்றிருக்கிறார். பெரியப்பா அப்போது மடிப்பாக்கத்தில் கிருஷ்ணனுக்கு ஒரு பஜனைக்கோயில் கட்டியிருந்தார். எனவே கிருஷ்ணன் பெயரை தான் தன் தம்பி மகனுக்கு சூட்டவேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்தார்.

மூன்றுத் தரப்பும் பெயர் சூட்டும் விழா அன்று முட்டிக்கொள்ள, யாரோ ஒரு நாட்டாமை பஞ்சாயத்து செய்து, கூப்பிட்டால் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் அளவில் “மோகன கிருஷ்ண குமார்” என்று நாமகரணம் செய்துவிட்டிருக்கிறார். பட்டுத்துணி போர்த்தி என்னை அலங்கரிக்கப்பட்ட கூடையில் கிடத்தி 'காஞ்சிபுரம் சிறுணை மோகனகிருஷ்ணகுமார்' என்று பெற்றோர் மூன்று முறை அழைக்க வேண்டும். தான் வலியுறுத்திய பெயரோடு இன்னும் இரண்டும் பெயர் எக்ஸ்ட்ராவாக சேர்ந்துக் கொண்ட கோபத்தில் இருந்த அப்பா “குமரா, குமரா, குமரா” என்று தான் சூட்ட விரும்பிய பெயரை மட்டும் சுருக்கமாக அழைத்திருக்கிறார். பாவம் அம்மா தான் வினோதமான என் பெயரை மூன்று முறை கஷ்டப்பட்டு சொல்லி அழைத்தாராம்.

* - * - * - * - * - * - * - *

எல்.கே.ஜி. சேர்க்கும்போது எல்லாம் நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. பள்ளியில் சேர்ந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு அட்டெண்டனன்ஸில் பெயர் எழுதும்போது தான் முழுப்பெயரையும் எழுதமுடியாமல் மிஸ் அவதிப்பட்டார்.

”உன் பெயரை சுருக்கமா சொல்லு!”

சுருக்கம் என்ற வார்த்தைக்கு அப்போது பொருள் தெரியாத நான், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!” என்றேன்.

“அது புல் நேம். சுருக்கமா சொல்லு!”

மறுபடியும், “எல். மோக்கன க்ரிஸ்ண க்கும்மார்!”

எரிச்சலாகி, “சரி நானே சுருக்கிடறேன். இனிமே உன் பெயர் எல்.கிருஷ்ணகுமார்”

இந்த பெயர் எனக்கு கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.

* - * - * - * - * - * - * - *

கிருஷ்ணகுமார் என்று பள்ளியில் அறியப்பட்டாலும் கூட வீட்டிலும், தெருவிலும் அவரவர் வாய்க்கு வந்த பெயரை சொல்லி தான் அழைத்தார்கள். பள்ளியில் கூட ஆசிரியர்கள் தவிர்த்து கூட படிக்கும் மாணவ, மாணவிகள் ‘கிருஷ்ணா' என்று சொல்லியே அழைத்தார்கள். எனக்கு ‘கிருஷ்ணர்' அப்போது இஷ்டதெய்வம் என்பதால் ‘கிருஷ்ணா' பிடித்திருந்தது.

அப்பா மட்டும் கடைசி வரை ‘குமரா' என்றே அழைத்து வந்தார். அம்மாவும் சில நேரங்களில் ‘குமரா' என்றும் பல நேரங்களில் 'நைனீ' என்றும் அழைப்பார். ‘நைனீ' என்பதற்கு என்ன பொருள் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை :-(

* - * - * - * - * - * - * - *

ரஜினி - கமல் உச்சத்தில் இருந்த நேரம் அது. தீவிர கமல் ரசிகன் என்பதால் ரஜினி ரசிகர்களோடு வாய்ச்சண்டையோடு, மல்யுத்தமும் போட்டிருக்கிறேன். சில நேரங்களில் முரட்டுத்தனமாக அடித்துக் கொண்டு சில்மூக்கு உடைந்து ரத்தமும் வந்ததுண்டு. துரதிருஷ்டவசமாக கூட படித்தவர்களில், தெருப்பசங்களில் எல்லோருமே ரஜினி ரசிகர்கள்.

ரஜினி நன்றாக சண்டை போடுவதால் ரஜினியை அவர்களுக்கு பிடித்திருந்தது. கமல் அட்டகாசமாக காதலித்ததால் கமலை எனக்கு பிடித்திருந்தது. ”கமல் கெட்டவன். பொம்பளைங்களை எல்லாம் கட்டிப் புடிக்கிறான். ரஜினி நல்லவன். அதனாலே தான் கெட்டவங்க கிட்டே சண்டையெல்லாம் போடுறான்” என்று பக்கத்து வீட்டு கோவாலு விளக்கம் அளித்தான். ”சண்டை போட்டதுக்கப்புறமா ரஜினி கூட பூர்ணிமாவை கட்டி புடிச்சிருக்காரே?” என்று கேட்டால் அவனுக்கு பதில் சொல்ல தெரியாது.

ரஜினி ஆண்மையின் அடையாளமாகவும், கமல்ஹாசன் பொம்பளைப் பொறுக்கியாகவும் என் சக பசங்களுக்கு தெரிந்திருக்கிறது, எனக்கு மட்டுமே கமலை ஹீரோவாக பார்க்கமுடிந்தது ஏனென்று தெரியவில்லை. கமல் ரசிகன் என்பதால் என்னை ரஜினி வெறியர்கள் “கமலா” என்று கூப்பிட்டு வெறுப்பேற்றத் தொடங்கினார்கள். “கமல்” என்று கூப்பிட்டிருந்தால் கூட பெருமையாக இருந்திருக்கும் “லா” சேர்த்து பெண்பாலில் கூப்பிட்டதால் கடுப்பாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்கு எனக்கு இந்த பட்டப்பெயர் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏதோ ஒரு கோடைவிடுமுறையில் அம்மம்மா வீட்டுக்கு போய் வந்ததற்கு பிறகு பசங்களுக்கு இந்த பட்டப்பெயர் மறந்து தொலைத்ததால் தப்பித்தேன்.

* - * - * - * - * - * - * - *

கிருஷ்ணகுமார் என்ற பெயரில் கடைசியில் இருக்கும் ‘குமார்' என்ற பெயரை விளித்து கூட நிறையப் பேர் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் ஓக்கே என்றிருந்தாலும் ‘குமார்' குமாரு ஆகி காலச்சக்கரம் சுழன்று ”கொமாரு” ஆகியபோது வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

* - * - * - * - * - * - * - *

கல்யாணராமன் தான் என்னை “கிச்சா” என்று முதலில் அழைத்ததாக நினைவிருக்கிறது. அவன் அண்ணன் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் ஆத்தில் கிருஷ்ணமூர்த்தியை சுருக்கி “கிச்சா” என்று தான் அழைப்பார்களாம். அதனாலேயே கிருஷ்ணகுமாரையும் “கிச்சா” ஆக்கிவிட்டான் கல்யாணம்.

கல்யாணத்தை தொடர்ந்து நிறைய பேர் ”கிச்சா”வென்று அழைக்க ஒரு மாதிரியாக உணர்ந்தேன். இன்றுவரை பலரும் என்னை ”கிச்சா” என்றுதான் அழைக்கிறார்கள். கிரேஸி மோகன் ஆனந்தவிகடனில் “கிச்சா” என்றொரு கோமாளி கேரக்டரை வைத்து சில காமெடிக்கதைகள் எழுத அந்தப் பெயர் ஏனோ சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. நான் பணிபுரியும் நிறுவனங்களில் மேலதிகாரிகள் கூட ”கிச்சா” என்று கூப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு ரொம்பவும் பிடித்த ”கிருஷ்ணா” என்ற பெயரை புதியதாக அறிமுகமாகுபவர்கள் தான் அழைக்கிறார்கள். சில சந்திப்புகளுக்கு பின்னர் அவர்களும் “கிச்சா” என்று கூப்பிட தொடங்கிவிடுகிறார்கள்.

* - * - * - * - * - * - * - *

எட்டாவது வகுப்பு வரை எல்.கிருஷ்ணகுமார் என்று அழைக்கப்பட்ட எனக்கு ஒன்பதாவது வகுப்பில் தமிழய்யா ரூபத்தில் சோதனை வந்தது. தனித்தமிழில் பெருத்த ஆர்வம் கொண்ட தமிழய்யா தான் வகுப்பாசிரியர். அட்டெண்டன்ஸ் அவரது பொறுப்பில் வந்தபோது வடமொழி சொற்களை நீக்கி தூயத்தமிழில் எல்லோரது பெயரையும் எழுதினார். அஷோக் “அசோகன்” ஆனான். சுரேஷ்குமார் “சுரேசுகுமார்” ஆனான். எல். கிருஷ்ணகுமாராகிய நான் “இல.கிருட்டிணகுமார்” ஆகி தொலைத்தேன்.

“இல.கிருட்டிணகுமார்” என்று ஆசிரியர் அழைக்கும்போது வேறு யாரையோ அழைக்கிறார் என்று பல நேரங்களில் சும்மா இருந்து கொட்டு வாங்கியது உண்டு. என் அட்டெண்டன்ஸ் பெயரை லேடீஸ் செக்‌ஷனிலும் (லேடிஸ் எல்லாம் ”பி” செக்‌ஷன், நாங்கள் “ஏ” செக்‌ஷன்) சரவணனோ யாரோ பரப்பிவிட, என்னை காதலிக்க திட்டமிட்டிருந்த குமுதா என் தமிழ்ப்பெயரை கேள்விப்பட்டு என்னை வெறுக்கத் தொடங்கினாள்.

* - * - * - * - * - * - * - *

ஒன்பதாவது படிக்கும்போது சந்தானகிருட்டிணன் தான் என்னை ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அவர்களது ஊர் பக்கத்தில் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சொல்லி ”சீன்னா”, ”கான்னா” என்றெல்லாம் அழைப்பார்களாம். அதுபோலவே கிருஷ்ணகுமார் என்று அழைக்க சோம்பேறித்தனப்பட்டு ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தான். அடுத்த இரு ஆண்டுகளுக்கு நண்பர்கள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் ஆசிரியர்களும் ‘கீன்னா' என்று அழைக்க ஆரம்பித்தார்கள். காமோசோமாவாக இருந்ததால் எனக்கு கொஞ்சமும் பிடிக்காத பெயர் அது.

* - * - * - * - * - * - * - *

பத்தாவது படித்தபோது பாடப்புத்தகங்களை சுமந்ததை விட காமிக்ஸ்களை சுமந்தது அதிகம். ஆர்.டி.முருகன், சுந்தரவேலு, சேதுராமன், ஏ.சுரேஷ்குமார் (கிளாஸில் மொத்தம் 4 சுரேசு) என்று என்னோடு நிறைய காமிக்ஸ் ஆர்வலர்கள் இருந்தார்கள். எக்சேஞ்ச் செய்துகொள்வது, யாரிடமாவது இருக்கும் காமிக்ஸை நான் வாங்கி ஜெராக்ஸ் செய்துகொள்வது என்று காமிக்ஸ் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் நிறைய லஞ்ச் நேரத்தில் நடக்கும். புத்தகப் பையில் எப்போதும் பத்து காமிக்ஸ்களாவது இருந்த காலக்கட்டம் அது.

கொஞ்சம் ஒல்லியாக இருந்ததால் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு அப்போது இருந்தது. இந்த ‘ஒல்லி' குறைப்பாடை சரிசெய்ய எதையுமே கொஞ்சம் வேகமாகவும், ஸ்டைலாகவும் வேண்டுமென்றே செய்ய ஆரம்பித்தேன். படிக்கட்டு ஏறும்போது ரெண்டு படிக்கட்டு தாண்டி, தாண்டி குரங்கு மாதிரி வேகமாக ஓடுவேன். நண்பர்களோடு சேர்ந்து நடக்கவே மாட்டேன், ஓட்டம் தான். எல்லாருக்கும் முன்பு ஓடிப்போய் நின்றுகொண்டு அவர்கள் வரும்வரை காத்திருப்பேன். சைக்கிளை வேகமாக கட்டு கொடுத்து, கட்டு கொடுத்து ஓட்டுவேன்.

கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்ததாலோ என்னவோ என் காமிக்ஸ் நண்பர்கள் என்னை “லக்கிலுக்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். “லக்கிலுக்” என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் ஹீரோ. தன் நிழல் செயல்படும் வேகத்தை விட வேகமாக செயல்படும் வீரன். கோமாளி ஹீரோ என்றாலும் ஒல்லியாக, கொஞ்சம் நீளமுகவாட்டில் பார்க்க என்னைப் போல இருந்ததால் அந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். லக்கிலுக் என்பது சில நாட்களில் சுருங்கி “லக்கி” ஆகிவிட்டது.

* - * - * - * - * - * - * - *

மறக்கப்பட்ட இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. பல பெயர்களில் அழைக்கப்பட்டு விட்டதால் இந்தப் பெயர்களில் ஏதேனும் ஒன்று பொது இடங்களில் உச்சரிக்கப்படும் போதெல்லாம் என்னை தான் அழைக்கிறார்களோ என்று ஒருகணம் திரும்பி ஏமாந்து விடுவேன். பலமுறை ஏமாந்தப் பின்னர் இப்போதெல்லாம் என்னையே யாராவது கூப்பிட்டால் கூட “வேற யாரையோ கூப்பிடறாங்க” என்று நினைத்து விடுகிறேன். அக்கப்போர் செய்து பெருசுகள் எனக்கு வைத்த நீளமான பெயரால் எந்த பிரயோசனமும் இல்லை. அந்தப் பெயரை வைத்து யாரும் அழைத்ததுமில்லை. உண்மையில் அந்தப் பெயரால் அஞ்சு காசுக்கும் பிரயோசனமில்லை என்பதே நிதர்சனம்.

”பேர் எடுக்கணும், பேர் எடுக்கணும்” என்பார்கள். எவ்வளவோ பேர் எடுத்துவிட்டேன். இன்னமும் எவ்வளவு பேர் தான் எடுப்பேனோ தெரியவில்லை. இத்தனை பேர் இருப்பதால் உனக்கு என்ன தொல்லை என்று கேட்கிறீர்களா? சில நேரங்களில் யாராவது ”உங்கள் பெயர் என்ன?” என்று கேட்கும்போது சட்டென்று விடை சொல்லத் தெரியாமல் முழிக்கும்போது நான் படும் அவமானம் உங்களுக்கெல்லாம் பட்டால் தான் தெரியும்!

24 கருத்துகள்:

 1. ஆஹா....

  இவ்வளவு பெயர்களா...

  அனைத்தும் அழகா இருக்கு தலைவரே....

  பதிலளிநீக்கு
 2. யுவ எங்கேந்து வந்துச்சு?

  பதிலளிநீக்கு
 3. அப்பாடி பெயர் காரணம் இவ்ளோ பெரிசா..பெயர் மாதிரியே..ரொம்ப நல்லா ரசிக்கும் படி இருக்கு கிருஷ்ணா....

  பதிலளிநீக்கு
 4. கடைசிவரை அந்த "யுவ" எப்படி கிருஷ்ணாவுடன் வந்து ஒட்டியது என்று சொல்லவே இல்லையே...லக்கி.

  பதிலளிநீக்கு
 5. பெயர் வரலாறு நல்லா இருக்கு...

  யுவகிருஷ்ணா ஆன வரலாறு மிஸ்ஸாவுதே???

  பதிலளிநீக்கு
 6. ஒரு hilarious பதிவு.
  படிப்பவர்கள் எப்படிப்பட்ட சிடுமூஞ்சியாக இருந்தாலும் சிரித்துக் கொள்ளாமல் இருக்கமாட்டார்கள்.
  அப்படிச் சிரிக்க வில்லை என்றால், அவர்கள் உணர்ச்சியே இல்லாத மரக்கட்டைகள்.
  வாழ்த்துக்கள்.
  கிருஷ்ணமூர்த்தி

  பதிலளிநீக்கு
 7. யுவகிருஷ்னா தாங்க நல்லா இருக்கு!.......எல்லாத்திலயும்!

  பதிலளிநீக்கு
 8. காமிக்ஸ் கதாநாயகன் பெயர்
  லக்கிலுக் அல்ல; லக்கி ல்யூக் என்று நினைக்கிறேன். சரியா?

  http://en.wikipedia.org/wiki/Lucky_Luke

  //கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்ததாலோ என்னவோ என் காமிக்ஸ் நண்பர்கள் என்னை “லக்கிலுக்” என்று அழைக்கத் தொடங்கினார்கள். “லக்கிலுக்” என்பது ஒரு அமெரிக்க கார்ட்டூன் கவுபாய் ஹீரோ. தன் நிழல் செயல்படும் வேகத்தை விட வேகமாக செயல்படும் வீரன். கோமாளி ஹீரோ என்றாலும் ஒல்லியாக, கொஞ்சம் நீளமுகவாட்டில் பார்க்க என்னைப் போல இருந்ததால் அந்தப் பெயரை மனமுவந்து ஏற்றுக் கொண்டேன். லக்கிலுக் என்பது சில நாட்களில் சுருங்கி “லக்கி” ஆகிவிட்டது.//

  பதிலளிநீக்கு
 9. நண்பர்களே!

  யுவகிருஷ்ணா பெயருக்கு பெயர் வரலாறு-பார்ட் டூ எழுதித் தொலைக்க வேண்டும். பதிவு அரைகிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டுவிட்டதால், அதை மட்டும் தற்காலிகமாக கட் செய்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 10. நீங்க பரவால்ல கிருஷ்ணா , பெரிய பேர்ல கஷ்டபட்டீங்க, என் பெயர் வெறும் மூன்றேழுத்து தமிழில் , 6 எழுத்து ஆங்கிலத்தில் . இதில் நான் பட்ட கஷ்டம் , படுகின்ற கஷ்டம் படிக்க

  http://mathar-itsallaboutmine.blogspot.com/2009/11/blog-post_19.html

  நேற்று கூட ஒரு interview கால் , பேசின பொண்ணு என்னை மாதர் நு இழுக்க , பிறகு "how can i call u " ?, இதான் என்கிட்டே கேக்குற முதல் கேள்வி , இன்னமும் இது தொடர்கின்றது .

  பதிலளிநீக்கு
 11. ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், மறுபடி படிக்கவும் சுவாரசியமாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 12. நீங்கள் குறிப்பிடாமல் விட்டுவிட்ட "டமாரு" தான் என்னை மிகவும் கவர்ந்த பெயராகும்!

  பதிலளிநீக்கு
 13. வித்தியாசமான மனிதரய்யா நீர்... :)

  பதிலளிநீக்கு
 14. அப்படியே லக்கிகிருஷ்ணாவின் (ட்விட்டர்) வரலாற்றையும் எழுதுமாறு கேட்டுக்கறேன். :)

  பதிலளிநீக்கு
 15. வினவு என்ற முற்போக்கு வேடமிட்ட மாவோயிஸ்ட்டு மரமண்டைகளின் இணையதளத்தின் வேஷம் கலைகின்றது.
  தொடர்ந்து முற்போக்கு வேஷம் போட முயற்சிக்கும் இவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்துவதற்கான முதல் முயற்சி.
  http://athikkadayan.blogspot.com/2010/01/blog-post_6141.html

  பதிலளிநீக்கு
 16. நல்ல பேர் எடுக்குறது எவ்ளோ கஷ்டம்னு இப்பத்தானே புரியுது! :)

  பதிலளிநீக்கு
 17. எஸ்ரா அவர்கள் கனவெங்கும் காமிக்ஸ் என்ற தலைப்பில் அவரது வலையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில், "லக்கிலுக்கின் வேடிக்கையான சாகசம் பெரிதும் ரசிக்கபட்டது" என்ற ஒரு வரி இருக்கும். அப்போதுதான் உங்களின் பெயர் எங்கிருந்து வந்தது எனத் யூக்த்துக்கொண்டேன். ரசிக்கத்தக்க இடுகை..
  "தமிழ்மொழி" இந்தப் பெயர் வரலாறை அறியவும் ஆசை :-)

  பதிலளிநீக்கு
 18. ஆஹா...

  பெயர் காரணம் மிகவும் சிறப்பு.

  'லக்கி' எனும் பெயர் மிகவும் பிரபலமே.

  'யுவகிருஷ்ணா'வும் நன்றாகத்தான் இருக்கிறது.

  உங்கள் பெயர் எனக்கு ஞாபகத்தில் வந்துவிட்டது.

  இல.மோகனகிருட்டிணகுமார். எத்தனை அழகான பெயர்.

  இப்போ சான்றிதழ்களில் எல்லாம் எப்படி?

  பதிலளிநீக்கு
 19. Very hilarious :)
  Amma kashtapattu pilla pethallum amma pechaa.. appavo, yaarum kekaama istam vandha pera vechidaranga.. Athanalaa than 'nainu' ellamm vera enna panna mudium.. Paavam ammakal..

  Unga ponnu per 'Tamil Selvi' or something else.. couldn't remember exactly.. Neengalavathu, unga wife pidichi irukaa nu keteengala??? Magal valarantha piraku matri kollalam nu soonenga?? But how easy is it to change with which we had grown for years.. ?? Ennavo pogna... Indha aambilagalaiey pudikamatienkuguthu ippalam..

  பதிலளிநீக்கு