25 ஜனவரி, 2010

மூவர்ணக் கொடி!


தாயின் மணிக்கொடி பாரீர் – அதை
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!
பள்ளி நாட்களில் பாரதியாரின் இந்தப் பாடலை பாடாதவர் யார்?

ஒரு நாட்டின் மீது அந்நாட்டு மக்கள் கொண்டிருக்கும் பற்று தேசியக்கொடி வணக்கமாக வெளிப்படுகிறது. தேசியக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தியபிறகே நம் மத்திய, மாநில அரசுகளின் விழாக்களும், நிகழ்ச்சிகளும் தொடங்குகின்றன. தேசியக்கொடி என்பது நாட்டின் தேசிய இனம், குடிமக்களின் பண்புகள், ஆட்சி, இறையாண்மை உள்ளிட்ட விஷயங்களை குறிக்கின்ற ஒட்டுமொத்த சின்னம்.

மூவர்ண இந்திய தேசியக்கொடி இந்தியர்களின் நம்பிக்கைகளையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கிறது. இது தேசப்பெருமையின் சின்னம். பல்லாயிரம் பேர் இன்னுயிர் தந்து மூவர்ணக்கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்திருக்கிறார்கள் என்று இந்திய தேசியக்கொடி மரபுச்சட்டம் சொல்கிறது.

தேசியக்கொடியின் நிறங்களையும், நடுவிலிருக்கும் அசோகச்சக்கரம் குறித்தும் அரசியல் சட்ட நிர்ணயசபையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. “காவிநிறம் தியாகத்தையும், பற்றில்லாத தன்மையையும் குறிக்கிறது. தேசத்தின் தலைவர்கள் தங்கள் சுகதுக்கம் மீது பற்றுகொள்ளாது முழு ஈடுபாட்டோடு நாட்டுக்கான கடமைகளை செய்ய இந்நிறம் வலியுறுத்துகிறது. வெள்ளை நிறம் ஒழுக்கத்தின் குறியீடு. இந்நாட்டின் மண்ணின் மீதும், மரங்களின் மீதும் நமக்கிருக்கும் உரிமையை பச்சை நிறம் போதிக்கிறது. இடையில் இருக்கும் நீலநிற அசோக சக்கரம், அசோகர் காலத்து தர்மத்தை நினைவுறுத்துகிறது, இயக்கத்தை முன்வைக்கிறது. அவ்வியக்கம் முன்னேற்றத்தை நோக்கியதாக பயணிக்க வேண்டும்”

இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் ஜனாதிபதி யார்? சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? சுதந்திரநாள் எது? குடியரசுநாள் எது? என்றெல்லாம் கேட்டால் சொடுக்கு போடும் நேரத்தில் சடக்கென்று பதில் சொல்லிவிடுவோம். தேசியக்கொடியை வடிவமைத்தது யார்? என்று கேட்டால் உடனே சொல்லிவிட முடிகிறதா? இல்லைதானே!

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய சுதந்திரப் போராட்டம் பல்வேறு பரிமாணங்களை கொண்டிருந்தது. ’நீங்கள் வேறு, நாங்கள் வேறு’ என்று வெள்ளையர்களுக்கு கோடிட்டுக் காட்ட இந்தியர்களுக்கு ஒரு கொடி தேவைப்பட்டது. சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா இந்தியர்களுக்காக ஒரு கொடியை உருவாக்க முனைந்தார். அக்கொடியில் ‘வந்தேமாதரம்’ என்ற சொல் வங்கமொழியில் பொறிக்கப்பட்டு இருந்தது.

1906, ஆகஸ்ட் 7ஆம் தேதி, வங்கப் பிரிவினையை எதிர்த்து போராடிய ஒரு போராட்டத்தின் போது முதல் மூவர்ணக் கொடி அறிமுகப்படுத்தப் பட்டது. காவி, பச்சை நிறங்களோடு இடையில் இப்போதிருக்கும் வெள்ளைக்குப் பதிலாக மஞ்சள் நிறம் இடம் பெற்றிருந்தது. இக்கொடி ’கல்கத்தா கொடி’ என்று வரலாற்றில் பெயர் பெற்றது.

கல்கத்தா கொடி பிரபலமடைந்ததை அடுத்து, ஒவ்வொரு பிராந்தியங்களில் இருந்தவர்களும் ஒவ்வொரு மாதிரியான கொடியை உருவாக்க முயன்றார்கள். சுயாட்சிப் போராட்டத்தின் போது பாலகங்காதர திலகர், அன்னிபெசண்ட் அம்மையார் ஆகியோர் உருவாக்கிய கொடியில் பிரிட்டனின் யூனியன் ஜாக் கொடிகூட சிறியதாக இடம்பெற்றது.

1916ஆம் ஆண்டிலிருந்து ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தைச் சேர்ந்த பிங்கலி வெங்கைய்யா என்பவர் எல்லோருக்கும் பொதுவான ஒரு தேசியக்கொடியை உருவாக்க முனைந்தார். மகாத்மா காந்தியிடம் இதற்கான ஆலோசனையை அவர் கேட்டபோது, இந்தியாவின் எழுச்சியையும், தாழ்ச்சியின் விடுதலையையும் குறிக்கும் வகையில் சக்கரத்தை சேர்க்குமாறு வலியுறுத்தினார். சிவப்பு, பச்சை நிறங்களில் ராட்டைச் சக்கரத்தை ஆதாரமாகக் கொண்டு ஒரு கொடியை வெங்கைய்யா உருவாக்கினார்.

காந்திக்கோ இக்கொடி அனைத்து மதத்தினரையும் பிரதிநிதிப்படுத்துவதாக தோன்றவில்லை. இதையடுத்து மீண்டும் ஒரு கொடி உருவாக்கப்பட்ட்து. வெள்ளை, பச்சை, சிகப்பு நிறங்களுக்கு நடுவே ராட்டைச் சக்கரம் மூன்று வண்ணங்களிலும் இடம்பெறுமாறு உருவாக்கப்பட்ட இக்கொடி, தற்காலிகமாக அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது.

காங்கிரஸ் என்றாலே அந்தக் காலத்திலும் கோஷ்டிப் பூசல் அளவுக்கதிகமாக இருந்திருக்கிறது. கொடி விஷயத்திலும் கோஷ்டி சேர்ந்து ஆளாளுக்கு தங்களுக்குப் பிடித்த வண்ணங்கள் கொடியில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கினார்கள். ஆளாளுக்கு தனக்குப் பிடித்த வண்ணத்தில் கொடி அச்சிட்டு தூள்கிளப்பவும் ஆரம்பித்தார்கள். எனவே எந்த கொடி ‘ஒரிஜினல் கொடி’ என்ற குழப்பம் மக்களுக்கு ஏற்பட்டது.

ஒருவழியாக 1931ஆம் ஆண்டு கராச்சி நகரில் கூடிய காங்கிரஸ் குழு, பிங்கலி வெங்கைய்யா வடிவமைத்த காவி, வெள்ளை, பச்சை வண்ணங்களோடு நடுவில் ராட்டைச் சக்கரம் பொருத்தப்பட்ட கொடி ஒன்றினை ஒப்புக் கொண்டது. இன்றைய நம்முடைய மூவர்ணக் கொடிக்கு கிட்டத்தட்ட இக்கொடியே சரியான முன்னோடி எனலாம். இன்றும் இக்கொடியே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியாக அமைந்திருக்கிறது.

இதற்கிடையே இதே வண்ணங்களில் சுபாஷ் சந்திர போஸ் தன்னுடைய தேசியபடைக்கு ஒரு கொடியை உருவாக்கி பரபரப்பு ஏற்படுத்தினார். ராட்டைச் சக்கரத்துக்குப் பதிலாக பாயும் புலி சின்னத்தை பதிந்து உருவாக்கப்பட்ட கொடி அது. இக்கொடி வன்முறையை தூண்டுவதாக கூறி மகாத்மா காந்தியின் தொண்டர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது.

கடைசியாக இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு இருபத்துநான்கு நாட்களுக்கு முன்பாக இந்திய தேசியக்கொடி முழுப்பரிமாணத்தையும் அடைந்தது. காவி, பச்சை நிறங்களுக்கு இடையில் வெள்ளை, வெள்ளை நிறத்துக்கு நடுவில் நீலநிறத்தில் அசோகரின் தர்மசக்கரம் என்ற பிங்கலி வெங்கைய்யாவின் வடிவமைப்பே இறுதிவடிவம் பெற்றது. இந்தியா குடியரசாக மாறிய 1950, ஜனவரி 26 அன்று இந்தியாவின் தேசியக்கொடியாக இக்கொடி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டுக்கு முன்புவரை தேசிய விடுமுறை நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் தேசியக்கொடியை மக்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. நவீன் ஜிண்டால் என்ற தொழிலதிபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு இப்பிரச்சினையை தீர்க்குமாறு உத்தரவிட்டது. அதையடுத்து 2002 ஜனவரி 26 முதல், நாட்டு மக்கள் கொடியை எல்லா நாட்களிலும் உரிய மரியாதையோடு ஏற்றலாம் என்று இந்திய அரசு அறிவித்தது. தேசியக்கொடிச் சட்டம் 2002 அமல்படுத்தப்பட்டு கொடியை எப்படிப் பயன்படுத்தலாம், எப்படி பயன்படுத்தக் கூடாது என்று வழிமுறைகள் வரையறுக்கப்பட்டது.

இந்தியத் தேசியக்கொடி ஏதாவது ஒருவகையில் அவமதிக்கப் பட்டாலோ, அல்லது தேசியக்கொடிச் சட்டத்தின் மதிக்காத வகையில் நடந்து கொண்டாலோ மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம், இல்லையேல் இரண்டுமே சேர்த்தும் வழங்கப்படும் என்று தேச அவமதிப்புச் சட்டம் சொல்கிறது..

3 கருத்துகள்:

 1. பகிர்ந்தமைக்கு நன்றி 
  நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 2. நம் தேசியக்கொடி, தரையில்படுவதுகூட அவமதிப்பிற்குரியதென்று வகுத்துவைத்துள்ள நிலையில், அவ்வப்போது சவப்பெட்டிகளின்மேல் அக்கொடியை கிடத்தும் வினோத வழக்கத்தைக் காண்கையில்மட்டும் ஏதோ உறுத்தும்.

  பதிலளிநீக்கு
 3. வாவ் ...சூப்பர் தொகுப்பு, நிறைய வரலாற்று விஷயங்கள் தெரிந்து கொண்டேன், தக்க சமயத்தில் பகிர்த்து உள்ளீர்கள். நன்றி.

  //நவீன் ஜிண்டால் என்ற தொழிலதிபர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் இந்திய அரசுக்கு இப்பிரச்சினையை தீர்க்குமாறு உத்தரவிட்டது. அதையடுத்து 2002 ஜனவரி 26 முதல், நாட்டு மக்கள் கொடியை எல்லா நாட்களிலும் உரிய மரியாதையோடு ஏற்றலாம் என்று இந்திய அரசு அறிவித்தது.//

  இந்த வழக்கில் ஜிண்டால் சார்பாக ஆஜர் ஆனவர் ... அபிஷேக் மனோவர் சிங்க்ஹ்வி, தற்போதைய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளார்.....இந்த வழக்கில் தான் மிக பிரபலம் ஆனார்....

  பதிலளிநீக்கு