2 ஜனவரி, 2010

லிச்சி ஜூஸ்!


33வது புத்தகக் காட்சியில் எது சூப்பர் என்று கேட்டால் லிச்சி ஜூஸைதான் கைகாட்டுவேன். என்ன மணம்? என்ன சுவை? விலை ரூ.10/- மட்டுமே. வழிய, வழிய எச்.பி.எம்.சி. ஜூஸ் ஸ்டாலில் பேப்பர் கப்பில் கொடுக்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்களை யாராவது எனக்கு வாங்கித் தருவதைவிட, ஒரு கப் லிச்சி ஜூஸ் வாங்கிக் கொடுப்பதையே விரும்புவேன். “எங்கூட வர்றப்ப தயவுசெய்து உன் பர்ஸை தொறக்காதே!” என்ற அன்புக்கட்டளையோடு நாளுக்கு இருமுறை லிச்சி ஜூஸ் வாங்கித் தரும் அன்பர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்கவென வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன்.

லிச்சி ஜூஸின் வரலாறு, நன்மை மற்றும் பலன்களை இந்தச் சுட்டியில் காணலாம்!

* - * - * - * - * - * - *

ஆச்சரியப்பட வைத்த இருவரை இப்புத்தகக் காட்சியில் அடிக்கடி சந்திக்கிறேன்.

ஒருவர் ஹாரிஸ். புத்தகக் காட்சிக்கு வழக்கமாக பத்துநாளும் வருவாராம். கிட்டத்தட்ட எல்லாப் புத்தகங்களையும் ஒட்டுமொத்தமாக வாங்கிவிடுவாராம். அடுத்த புத்தகக் காட்சி வருவதற்குள் எல்லாவற்றையும் படித்துவிட்டு மீண்டும் புதிய புத்தகங்களுக்காக படையெடுப்பாராம். எழுத்தாளர் ஒருவர் மூலமாக இந்த தீவிர(வாதி) வாசகரின் அறிமுகம் கிடைத்தபோது கையெடுத்து கும்பிடத் தோன்றியது. துரதிருஷ்டவசமாக அவர் என்னை வலைப்பூ மூலமாக அறிந்திருக்கிறார். எனவே இதுவரை நான் எழுதிய எந்தப் புத்தகத்தையும் அவர் படிக்க விரும்பியதில்லை.

மற்றொருவர் கிருஷ்ணபிரபு. வலைப்பதிவு வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். கும்மிடிப்பூண்டிக்கு பக்கத்தில் ஏதோ ஒரு கிராமமாம். புத்தகக் காட்சி நடக்கும் பத்து நாட்களுக்கும் வந்துவிடுவாராம். இரு கைகளிலும் பைகள் தளும்ப தளும்ப, கடைசியாக செக்யூரிட்டி 'கெளம்புங்க சார்' என்று வாசல்வரை வந்து தள்ளிவிடும் வரைக்கும் கதியாக கிடப்பாராம். இவரைப் பார்க்கும்போதெல்லாம் நினைப்பேன், ‘புத்தகம் வாசிப்பதற்கே பிறவி எடுத்தவரோ?' என்று.

* - * - * - * - * - * - *

உயிர்மைக்கு புத்தகம் வாங்க வருகிறார்களோ இல்லையோ. சாருவைப் பார்க்க கூட்டம் கும்முகிறது. உயிர்மையில் முதல்நாள் புத்தகம் வாங்கிய சில வாசகர்களை நேற்று பார்த்தேன். செஞ்சுரி அடிப்படையில் இவ்வருடம் புதியதாக வெளியிடப்பட்ட சில புத்தகங்களின் உள்ளடக்கத் தரம் குறித்து வெம்பிப்போய் பேசினார்கள். உயிர்மை போன்ற ஒரு பதிப்பகம் குவாலிட்டியை பின்னுக்கு தள்ளிவிட்டு குவாண்டிட்டிக்கு முக்கியத்துவம் தருவது இலக்கிய வளர்ச்சிக்கு நல்லதல்ல என்றெல்லாம் சொல்லி என்னை இலக்கியவாதியாக காட்டிக்கொள்ள ஆசைப்பட மாட்டேன். நன்றாக விற்கிறதென்றால் எந்த குப்பையை வேண்டுமானாலும் போட்டு துட்டு பார்க்க இலக்கிய/இலக்கியமல்லாத எந்த பதிப்பகத்துக்கும் உரிமையுண்டு.

காலச்சுவடு இம்முறை ஜாலச்சுவடு. ஒரு சர்ட்டுக்கு இன்னொரு சர்ட்டு ஃப்ரீ பாணியில், ஒரு புத்தகம் எடுத்தால் இன்னொரு புத்தகம் இலவசம் என்றொரு திட்டம். இத்திட்டத்தில் கிட்டத்தட்ட 60 புத்தகங்கள் இருக்கின்றன. இரண்டு புத்தகம் எடுத்தால் மூன்றாவது புத்தகம் இலவசம் என்று மற்றொரு திட்டம். இலவச கலர் டிவி திட்டத்தை மிஞ்சிவிடுவார்கள் போலிருக்கிறது. ஏதோ ஒரு ஸ்டாலில் 600 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் சூட்கேஸ் இலவசம் என்று போர்டு மாட்டியிருந்தார்கள். காலச்சுவடு அடுத்த புத்தகக் காட்சிக்கு இந்தத் திட்டத்தையும் முயற்சித்துப் பார்க்கலாம்.

* - * - * - * - * - * - *

பாரதி புத்தகாலயத்தின் ஐந்து, பத்து, பதினைந்து ரூபாய் வெளியீடுகளுக்கு நான் ரசிகன். தரமான உள்ளடக்கம் மற்றும் தயாரிப்பு, பாரதியின் பலம். நியூட்டன், டார்வின் என வெ.சாமிநாதசர்மாவின் எழுத்துக்கள் பத்து, பதினைந்து விலைக்கு கிடைக்கின்றன. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.

* - * - * - * - * - * - *

உ.வே.சா. நூலகத்தின் ஸ்டாலில் அய்யரின் ‘என் சரிதம்' சல்லிசாக ரூ. 300/- (டிஸ்கவுண்ட் போக ரூ.270/-) கிடைக்கிறது. சுமார் 90 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்டிருந்தும் உரைமொழி ஆச்சரியப்படுத்துகிறது. அரிய புத்தகம் என்பதால் வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டேன்.

* - * - * - * - * - * - *

சென்ற புத்தகக் காட்சியில் இந்தியா மேப்ஸ் ஸ்டாலில் லயன், முத்து காமிக்ஸ்கள் கிடைத்தன. இம்முறையும் அதே ஸ்டாலில் தமிழ் காமிக்ஸ்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. காமிக்ஸ் வாசகர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.

9 கருத்துகள்:

 1. P 5 ஸ்டாலில் காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருப்பதாக சென்ற ஆண்டு நமக்கு காமிக்ஸ் விற்ற நண்பர் போனில் சொன்னார். அதற்குள் நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். நாளை ஞாயிறு காலைதான் மீண்டும் செல்வேன். அதற்குமுன் வேண்டுமானால் P 5-ல் நுழைந்து பாருங்களேன்.

  பதிலளிநீக்கு
 2. லக்கி,

  சென்னையில் நடைபெற்று கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் நமது லயன் குழும இதழ்கள் INFO MAPS STALLல் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாசகப் பெருமக்கள் அனைவரும் இந்த வாய்பை தவறாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 3. நன்றி விஸ்வா.

  பதிவிலும் மேட்டரை சேர்த்துவிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 4. நிறைய அப்பாக்கள் கூட்டம் வந்து சைபர் க்ரைம் விற்று தீர்க்க வாழ்த்துகள்.

  இங்கே கூட போமே லிச்சி என்று ஒன்று கிடைக்கிறது.

  பதிலளிநீக்கு
 5. லயன் காமிக்ஸ் தகவலுக்கு நன்றி. இப்பவே பெரிய கூட்டம் அங்கே இருக்கும் :)

  பதிலளிநீக்கு
 6. Hi Mr.Yuva,

  in western world they pronounce it
  'LY-chee'

  Nandha

  பதிலளிநீக்கு
 7. >>உயிர்மைக்கு புத்தகம் வாங்க வருகிறார்களோ இல்லையோ. சாருவைப் பார்க்க கூட்டம் கும்முகிறது.
  - (எழுத்துலக) கோமாளியைப் பார்க்க கூட்டம் கூடுவது இயற்கைதான் :) (கோச்சுக்காதீங்க).

  காலச்சுவடு இலவச புத்தக விற்பனை: அப்படியாவது சு.ரா புத்தகங்கள் விற்க கண்ணன் ட்ரை பண்ணுகிறார் போல...

  பதிலளிநீக்கு