22 டிசம்பர், 2009

நம்ம ஊரு ஆர்க்கிமிடீஸ்!


ஆந்திரமாநிலம் அடிலாபாத்தைச் சேர்ந்தவர்கள் அந்த என்ஜினியரிங் மாணவர்கள். தங்கள் படிப்பின் ஒரு பகுதியான புராஜக்ட் தொடர்பாக அவரை அணுகியிருந்தார்கள். என்ஜினியரிங் மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் ஏதாவது புராஜக்ட் செய்து சமர்ப்பிக்க வேண்டும். அவரோ தினம் தினம் அந்தப் பையன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அவ்வப்போது ஏதாவது சர்க்யூட்களை கொடுத்து, ஏதாவது செய்யச் சொல்வார். பழைய கார் பேட்டரிகளை கொண்டுவந்து கொடுத்து பழுதுபார்க்கச் சொல்வார். மற்றபடி புராஜக்ட் நடைபெறும் அறிகுறியே சுத்தமாக இல்லை.

பையன்கள் பயந்துவிட்டார்கள். “சார் நாங்க ஏதாவது உருப்படியா பண்ணியாகனும் சார்!” என்று அவரிடம் சீரியஸாகவே கேட்டார்கள்.

“ம்.. புராஜக்ட் பண்ணனும்லே? ஒண்ணு பண்ணுவோம், அடுத்த ஊருலே ஒரு அறிவியல் கண்காட்சி நடக்குது. நாம பண்ண புராஜக்ட்டை அங்கே காட்சிப்படுத்துவோம்” என்றார்.
அப்போதைக்கு சமாதானமானர்கள். ஆனால் பிறகுதான் புரிந்தது. “நாமதான் இன்னும் எந்த புராஜக்ட்டும் பண்ணலையே?”

அறிவியல் கண்காட்சிக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பேட்டரிகள், சர்க்யூட்டுகள் மற்ற எந்திரக் குப்பைகளையெல்லாம் கண்காட்சிக்கு எடுத்துச் செல்ல தயாராகுமாறு மாணவர்களிடம் அவர் சொன்னார்.

“ஒரு வேன் புடிச்சிடலாமா சார்!”

“வேண்டாம். மாட்டு வண்டி ஒன்னு ஏற்பாடு பண்ணியிருக்கேன்”

“மாட்டு வண்டியா?” மாணவர்களுக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.

அவர் சொன்னபடியே மாட்டு வண்டி வந்தது. பேட்டரிகளை மாட்டு வண்டியில் பொருத்தச் சொன்னார். சர்க்யூட்களை எடுத்து எங்கெங்கோ வயர்களில் இணைத்தார். சைக்கிள் டயனமோ போன்று இருந்த ஒன்றினை சக்கரங்களில் பொறுத்தினார். என்னதான் செய்கிறார் என்று மாணவர்கள் ஆச்சரியமாக வாய்பிளந்து நின்றார்கள். ‘ஓய் ஓய்யென்று’ வண்டியோட்டி சாட்டைகளைச் சொடுக்கி மாடுகளை அடிக்க, வண்டி கிளம்பியது.

அறிவியல் கண்காட்சியில் இவர்களுக்கு என்று ஒரு ஸ்டால் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கே ஒரு டிவி, ப்ரிட்ஜ், ஃபேன் என்று மின்சாதனப் பொருட்கள் நிரம்பியிருந்தது. நம் மாட்டுவண்டி நேராக ஸ்டாலுக்கு முன்பாக சென்று நிற்க, அவசர அவசரமாக வண்டியில் பொருத்தப்பட்டிருந்தவற்றை கழட்டி ஸ்டாலில் புது தினுசாக மாணவர்களை பொருத்தச் சொன்னார் அவர்.

அவர் சொன்னபடியே மின்சாதனப் பொருட்களின் பிளக்குகளை பேட்டரியில் இணைக்க, ‘ஆச்சரியம்!’. பேன் சுழலத் தொடங்கியது. டிவியில் என்.டி.ஆர். கர்ஜித்தார். எல்லாமே மின்சாரத்தில் இயங்குவதைப் போலவே இயங்க ஆரம்பித்தன. மாணவர்களின் புராஜக்ட் சக்சஸ்!

‘மாட்டு வண்டியின் மூலமாக மின்சாரம்!’ என்பதுதான் மாணவர்கள், அவர்களுக்கு தெரியாமலேயே செய்த புராஜக்ட். சைக்கிளில் சின்ன டயனமோ வைத்து ஒரு பல்புக்கு தேவையான மின்சாரத்தை உருவாக்குவதைப் போல மாட்டு வண்டியின், பெரிய சக்கரத்தைப் பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்து, ஜெனரேட்டருக்கு மாற்றாக மின்சாரம் உருவாக்கினால் என்ன என்ற ஐடியாவுக்கு சொந்தக்காரர் ‘அவர்’. டேவிட், வயது 63. ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் உலகப் புகழ்பெற்ற ஐ.ஐ.ஐ.டி.யின் (International Institute of Information Technology) பொறியியல் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தில் கண்டுபிடிப்பாளராக பணிபுரிகிறார்.

வீண் என்று நினைத்து தூக்கிப் போடப்படும் எந்திரக் கழிவுகளில் இருந்து புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதே பொதுவாக இவரது பாணி. சர்வதேச புகழ்வாய்ந்த நிறுவனத்தில் கண்டுபிடிப்பாளராக பணிபுரிகிறாரே, நிறைய படித்திருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். நம்புங்கள். பள்ளிப்படிப்பை கூட டேவிட் முடித்ததில்லை. இன்றுவரை இவரின் கல்வித்தகுதி ஏழாம் வகுப்பு மட்டுமே. தேசத்தின் பெரிய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் கல்வியின் அடிப்படையில் இல்லாமல், திறமையின் அடிப்படையில் இவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

டேவிட்டின் சொந்தக்கதையும் கூட அவரது கண்டுபிடிப்புக் கதைகளைப் போலவே சுவாரஸ்யமானது. ஆனால் சற்று சோகமானதும் கூட. ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில் டேவிட் பிறந்தார். அவரது தந்தை ஒரு மருத்துவர், தமிழர். அவரது தாய் ஆந்திராவைச் சேர்ந்தவர், படிப்பறிவில்லாதவர். டேவிட்டுக்கு நான்கு வயதிருந்தபோதே அவரது தந்தை இறந்துவிட்டார். படிப்பிறவில்லாத தாயை, தந்தைவழி உறவினர்கள் ஏமாற்றி, சொத்துக்களை பிடுங்கிக் கொண்டு குழந்தைகளோடு நடுதெருவில் விட்டனர்.

ஒருவேளை உணவுக்கே வழியில்லாத நிலையில் டேவிட் ஒரு அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டார். அங்கேதான் ஏழாம் வகுப்பு வரை படித்ததாக சொல்கிறார். ஒரு கட்டத்தில் விடுதி வாழ்க்கை கசந்துவிட மீண்டும் தாயிடமே சென்றிருக்கிறார். பிழைப்புக்காக டெல்லிக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. டேவிட்டின் தாய் பத்துப் பாத்திரம் தேய்த்து குடும்பத்தைக் காப்பாற்ற, இவரும் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறார். ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு நாளில் டேவிட்டுக்குள் ஒளிந்திருந்த கண்டுபிடிப்பாளர் பிறந்திருக்கிறார்.

அவருக்கு திடீர் திடீரென ஏதாவது ஐடியாக்கள் தோன்றும். கையில் கிடைத்த ஓட்டை, உடைசல் பொருட்களை வைத்து அவற்றை செயல்படுத்தத் தொடங்கிவிடுவார். எந்த ஒரு நவீன சாதனத்தைப் பார்த்தாலும், “இது ஏன் இப்படியிருக்கு? இப்படி பண்ணியிருக்கலாமே?” என்று எல்லாவற்றையுமே மாற்றி சிந்திக்க ஆரம்பித்தார் (Lateral Thinking). இம்மாதிரியான மாற்று சிந்தனைகள் அவருக்கு இருபது வயது வாக்கில் தோன்றியதாக சொல்கிறார்.

‘ஒரு சின்ன ஐடியா உலகத்தையே மாற்றக்கூடும்!’ என்பது பிரபல விளம்பர வாசகம். இருபத்து நான்கு மணி நேரமும் ஐடியா மணியாக வாழ்ந்துகொண்டிருந்த டேவிட்டுக்கும் உலகம் மாறியது. ஆரம்பத்தில் சிறிய சிறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து, ஏரியாவாசிகளை அசரடித்துக் கொண்டிருந்தவருக்கு, திடீரென பெரிய ஐடியாக்களும் உதிக்கத் தொடங்கியது.

தன்னுடைய கண்டுபிடிப்புகளை செயல்படுத்த பணம் தேவை. டெல்லியிலிருந்த தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்துக்கு (NRDC) பணத்துக்காக படையெடுக்க ஆரம்பித்தார். “இதை கண்டுபிடித்திருக்கிறேன், அதை கண்டுபிடித்திருக்கிறேன். இவற்றை செயல்படுத்த பணம் தேவை” என்று கஜினி முகம்மது மாதிரி தினமும் நிறுவனத்துக்கு போய் நின்று கொண்டிருப்பார். இவரது கண்டுபிடிப்புகள் சரியானதுதானா என்று ஆராய அந்த அமைப்பு டெல்லி ஐஐடியில் பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர் சாமிநாதனிடம் அனுப்பி வைப்பார்கள்.

’டேவிட் ஒரு கண்டுபிடிப்பாளர்’ என்பதை முதலில் ஒத்துக்கொண்டவர் பேராசிரியர் சாமிநாதனே. இவரது கண்டுபிடிப்புகளை பல்வேறு நிறுவனங்களுக்கும் பேராசிரியரே சிபாரிசு செய்திருக்கிறார்.

ஆயினும் போதுமான கல்வியறிவு இல்லாத நிலையில் டேவிட் பலமுறை மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அப்போது டேவிட் புதியதாக ஒரு பல்பினை கண்டறிந்திருந்தார். மிக சிறிய ஐடியாதான் அது. ஆனால் நல்ல பலன் தரக்கூடியதாக இருந்தது. நாம் வழக்கமாக உபயோகப்படுத்தும் குண்டு பல்பின் உள்ளே ஒரு டங்ஸ்டன் இழை இருப்பதை பார்த்திருப்பீர்கள். ஸ்விட்ச் போட்டதுமே இந்த இழை ஒளிரும். வெளிச்சம் கிடைக்கும். இந்த இழை அறுந்துவிட்டால் ப்யூஸ் போய்விட்டது என்று கூறி பல்பினை தூக்கிப் போட்டுவிட்டு, வேறு பல்பு வாங்க வேண்டியதுதான்.

ஒரு இழை அறுந்துவிட்டால் ஒட்டுமொத்த பல்பையே தூக்கிப்போட்டுவிட வேண்டும் என்ற நிலையை டேவிட்டால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரே பல்பில் இரண்டு இழைகளை வைத்து தயாரித்தால் என்ன குறைந்துவிடப் போகிறது? ஒன்று அறுந்தாலும் இன்னொன்றின் மூலமாக பல்பு மேலும் சிலகாலம் இயங்குமல்லவா? என்று யோசித்தார். செயல்படுத்தினார். நீண்டகாலத்துக்கு உழைக்கக்கூடிய பல்பினை கண்டறிந்தார். இது மிகச்சிறிய ஐடியாதான். யாருக்கு வேண்டுமானாலும் தோன்றக்கூடும். ஆனால் யாருக்கும் தோன்றாமல் டேவிட்டுக்கு தோன்றியது. அதை அவர் செயல்வடிவத்திலும் கொண்டுவந்தார்.

ஒரு பல்பு கம்பெனிக்காரர்கள் டேவிட்டை அணுகினார்கள். இந்த இரண்டு இழைரக பல்புகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை டேவிட்டை பங்குதாரராக வைத்துத் தொடங்கினார்கள். நிறைய தயாரித்தார்கள். நிறைய லாபம் வந்தது. ஒருக்கட்டத்தில் லாபத்தோடு அவர்கள் கம்பியை நீட்டிவிட, தொழிலதிபராக மாறியிருந்த டேவிட் மீண்டும் தெருவுக்கு வரநேர்ந்தது. இதுபோல நான்கைந்து முறை டேவிட் மற்றவர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட அனுபவங்களுக்குப் பிறகே கண்டுபிடிப்புகளை முறைப்படி பேடண்ட் (Patent) செய்யவேண்டும் என்பதை அறிந்தார் டேவிட். நூற்றுக்கணக்கான கண்டுபிடிப்புகள் இன்று இவரது வசம்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் சூரியஒளியில் கதிரறுக்கும் இயந்திரம், மாட்டுச்சாணம் மூலமாக மின்சாரம் தயாரித்தல், மிகக்குறைவான மின்சாரத்தில் இயங்கக்கூடிய நெசவு இயந்திரம், இப்போது நாம் பயன்படுத்தும் மின்விசிறிகளின் மின் தேவையில் பாதியளவே பயன்படுத்தி இயங்கக்கூடிய மின்விசிறிகள் என்று மக்களின் பயன்பாடுகளின் அடிப்படையில் ஏகப்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டறிந்திருக்கிறார்.

சமீபத்தில் சென்னை வந்திருந்தவரை சந்தித்தோம். கிரேக்க தத்துவவாதி, விஞ்ஞானி ஆர்க்கிமிடீஸ் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நெம்புகோல் தத்துவத்தை (Lever Principle) கண்டுபிடித்தார். அதையும் விடச் சிறந்ததாக, முற்றிலும் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறாராம் டேவிட். அதற்கு பேடண்ட் வாங்கவே சென்னை வந்திருக்கிறார். இந்த கண்டுப்பிடிப்பு உலகின் மற்ற அறிவியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் அறிவியல் உலகின் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக டேவிட்டும் இடம்பெறுவார்.

“என் தோற்றத்தை கண்டு நிறைய பேர் ஆச்சரியப்படுகிறார்கள். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதால் இளமையான தோற்றம் வாய்த்திருக்கிறதா என்று கேட்கிறார்கள். நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா, சோகமாக இருக்கிறேனா என்பதைவிட இயற்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதே முக்கியம். அது மகிழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் தன் குழந்தைகளான மனிதர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நாம் முதலில் பழகவேண்டியது மனிதர்களிடமல்ல. இயற்கையிடம்!” என்று தத்துவம் பேசுகிறார்.
குடும்பம் பற்றி கேட்டால், “அது ஒரு பெரிய சோகக்கதை. நீங்க அவசியம் தெரிஞ்சுக்கணுமா?” என்று கேட்கிறார்.

உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்களது சொந்தக்கதை எப்போதுமே சோகக்கதையாகவே அமைகிறது. டேவிட்டும் விதிவிலக்கல்ல.

(நன்றி : புதிய தலைமுறை)

17 கருத்துகள்:

 1. அருமையான பதிவு லக்கி..வாழ்த்துகள்!!

  //நான் மகிழ்ச்சியாக இருக்கிறேனா, சோகமாக இருக்கிறேனா என்பதைவிட இயற்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா என்பதே முக்கியம். அது மகிழ்ச்சியாக இருக்கும்பட்சத்தில் தன் குழந்தைகளான மனிதர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும். நாம் முதலில் பழகவேண்டியது மனிதர்களிடமல்ல. இயற்கையிடம்!//

  சூரீர், பளார் & நெத்தியடி!!

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  பதிலளிநீக்கு
 2. //உலகின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அவர்களது சொந்தக்கதை எப்போதுமே சோகக்கதையாகவே அமைகிறது. டேவிட்டும் விதிவிலக்கல்ல.//

  truth., may god bless him ....

  பதிலளிநீக்கு
 3. Krishna

  Good post. It will be better to give Badri post's link:
  http://thoughtsintamil.blogspot.com/2009/11/blog-post_13.html

  Mohan

  பதிலளிநீக்கு
 4. நிச்சயமாக பாராட்டுக்குரியவர். உழைப்பு என்றும் வீண்போகாது என்பதையும் நிருபித்துக்கொண்டே இருக்கிறார். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. நல்ல பதிவு கிருஷ்ணா. நன்றி.

  பதிலளிநீக்கு
 6. இந்த பதிவுக்கும், இதற்கு முந்தைய பதிவுக்குமான பொது பின்னூட்டம் இது. ஒரு திரைப்படம் எடுப்பதற்கான அருமையான கதை டேவிட் வாழ்க்கையில் உள்ளது. Interesting and inspirational. எப்படி உங்கள் எழுத்தில் இது மேருகேரியிருக்கிறதோ, அதுபோல் ஒரு நல்ல இயக்குனர் கையில் இது மிகச்சிறந்த படமாகும் வாய்ப்பு இருக்கிறது. இலக்கிய தரமுள்ள (?) உலகப்படங்களை விலக்கிவிட்டு வியாபார ரீதியாக வெற்றியடைந்த சில ஹாலிவுட் திரைப்படங்களை எடுத்துக்கொள்வோம். Denzel Wazhington, Tom Hanks நடித்த அனேக படங்கள் உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டவை. சில Russel Crowe படங்களும் இதில் அடக்கம். Some are very inspirational and edge of the seat types. "Proof Of Life" படம் ஒரு fiction என்றாலும் படம் ஒரு உண்மைச்சம்பவம் போல் விருவிருப்பாக இருக்கும். ஜேம்ஸ் காமரூன் அவதார் கதை எழுதிவிட்டு வருடக்கணக்கில் காத்திருந்து இப்போது படமாக்கியிருக்கிறார். வேட்டைகாரனும் அப்படிதான். என்ன ஒரு வித்தியாசம். இது ரொம்பவே முன்னாடி எழுதப்பட்ட கதை (?), நடுவில் பலபேர் இதை படமாக்கியும் விட்டார்கள். இதில காமெடி என்னன்னா, நம்ம தமிழ் ஹீரோக்கள் நல்ல கதைக்காக வெயிட் பண்றேன்னு சொல்றதுதான்.

  பதிலளிநீக்கு
 7. ஜெய்சங்கர் ஜெகனாதன்,

  உங்களது பின்னூட்டங்களை நான் அனுமதிப்பதற்கு இல்லை. இனிமேல் தயவுசெய்து என் வலையில் பின்னூட்டம் இட வேண்டாம்!

  பதிலளிநீக்கு
 8. நம்பிக்கைக்கும் முயர்ச்சிக்கும் ஒரு நல்ல எடுத்துக்காட்டான மனிதர்.

  பதிலளிநீக்கு
 9. அன்புடன்
  கோடியில் ஒரு ஆள் நமது இந்தியாவில் இருக்கிறார் என்பது பெருமை நல்லபடியாக அவரை
  நமது அரசாங்கம் பயன் படுத்துமா??? குறைந்தபட்சம் அந்த மாணவர்கள் போல நல்லவர்கள் பயன்படுத்தட்டும் ....

  பதிலளிநீக்கு
 10. இதே மாதிரி எண்ணங்களை/கண்டுபிடிப்புகளை அவசர காலத்தில் எப்படி உபயோகப்படுத்துவது என்பதை 1995 வாக்கில் வந்த Best of Maccavyer என்ற தொடரில் காண்பிப்பார்கள். நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 11. நல்ல வேளையாக நம் கல்வி முறையிலிருந்து தப்பித்து இருக்கிறார்.
  மிகவும் அருமையான மனிதர்கள்!

  அன்புடன்,
  சிவாஜி
  http://greenworldindia.org

  பதிலளிநீக்கு
 12. நண்பர் வடுவூர் குமார் கூறிய Best of maccavyer தற்போது எதிலாவது பார்க்க முடிமா ??? thiru .
  டேவிட்கண்டுபிடிப்புகள் பற்றிய தொகுப்பு பார்க்க இயலுமா நண்பர்கள் யாராவது உதவுங்களேன்
  நட்புடன் s.n.கணபதி

  பதிலளிநீக்கு
 13. நமது கல்வி முறையானது, மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்ககளாக மாற்றி வைத்திருக்கிறது. இது எப்போது மாறுமோ அப்போது இன்னும் பல டேவிட்கள் தோன்றுவார்கள்.
  கண்டுபிடிப்புகள் செய்வதற்கு படிப்பை விட ஆர்வமும், முயற்சியுமே தேவை என்பதை நிருபித்துள்ளார் டேவிட்.
  வாழ்த்துகள். சார்…….

  பதிலளிநீக்கு
 14. நமது கல்வி முறையானது, மாணவர்களை மனப்பாடம் செய்யும் இயந்திரங்ககளாக மாற்றி வைத்திருக்கிறது. இது எப்போது மாறுமோ அப்போது இன்னும் பல டேவிட்கள் தோன்றுவார்கள்.
  கண்டுபிடிப்புகள் செய்வதற்கு படிப்பை விட ஆர்வமும், முயற்சியுமே தேவை என்பதை நிருபித்துள்ளார் டேவிட்.
  வாழ்த்துகள். சார்…….

  பதிலளிநீக்கு