November 26, 2009

விமர்சனம் எனும் அரிப்பு!


கால்நடைகள் புல்லை அசைப்போடுவதை போல மனிதனுக்கு எதையாவது விமர்சித்துக் கொண்டோ அல்லது கிசுகிசுத்துக் கொண்டோ இல்லாவிட்டால் தலை வெடித்து விடும் என்று எந்த வேதாளமோ எந்த யுகத்திலோ சாபமிட்டிருக்க வேண்டும். அரசு, அரசியல்வாதிகளுக்கு அடுத்தபடியாக இப்போது அதிகமாக விமர்சிக்கப்படும் துறையாக திரைத்துறை மாறியிருக்கிறது. திரையில் மின்னும் நட்சத்திரங்களின் தொழில் திறமை மீதான விமர்சனம் மட்டுமல்லாது அவர்களின் அந்தரங்க கிசுகிசுகளை ஆவலோடு வாசித்து அதுகுறித்தும் விமர்சிக்காவிட்டால் நமக்கும் பொழுதுபோவதில்லை.

சமீபகாலமாக அறிவுஜீவிகள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் சிலர் நடத்தும் திரைத்துறை மீதான கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பின்னால் “சீச்சீ, இந்தப் பழம் புளிக்கும்!” கதை மட்டுமே பின்னணியில் தெரிகிறது. திரையில் கதை எழுதவோ, வசனம் எழுதவோ வாய்ப்பு பெறும் அறிவுஜீவிகள் அவசர அவசரமாக தங்களது அறிவுஜீவி அரிதாரத்தை அழுந்தத் துடைத்து “பஞ்ச் டயலாக்” எழுதும் அழகையும் நாம் இருகண் திறந்து ரசிக்க முடிகிறது. ஆதலால் ‘வாய்ப்பு பெற்றவர்கள் வசனம் எழுதுகிறார்கள்', 'வாய்ப்பு கிடைக்காதவர்கள் விமர்சனம் எழுதுகிறார்கள்' என்று இருபிரிவுகளாக சினிமா குறித்த அறிவுஜீவிகளின் கருத்துக்களை மிக சுலபமாக பிரித்துக் கொள்ளலாம். முன்பு இதே அறிவுஜீவிகள் வெகுஜன இதழ்களில் கதை எழுத சான்ஸூ எதிர்பார்த்து, சான்ஸூ மறுக்கப்பட்டதும் அப்பத்திரிகைகளை ஆபாசப்பத்திரிகைகள் என்று விமர்சிப்பார்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பாக மாற்று திரைப்படம் (Parrallel Cinema) என்ற பெயரில் அறிவுஜீவிகளுக்கான திரைப்படங்கள் பத்து பேர் மட்டுமே நிரம்பிய திரையரங்குகளில் திரையிடப்படும். படம் பார்த்த பத்து பேரும் தலா நூறு பேர் வாசிக்கக்கூடிய அவரவருக்கு தோதான சிற்றிதழ்களில் நாற்பது அல்லது ஐம்பது பக்கங்களுக்கு மிகாமல், அப்படம் குறித்த தங்களது பார்வையை பதிப்பார்கள். இதனால் பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு அதிகமாக இல்லாமல் இருந்தது.

’உலக சினிமா க்ரூப்’ இதே காலக்கட்டத்தில் தோன்றியது. இந்த க்ரூப்பால் பெரிய பிரச்சினையில்லை. ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் இந்திய சினிமாக்களை பார்ப்பதில்லை. பார்த்தாலும் ரகசியமாக பார்த்துவிட்டு, கமுக்கமாக இருந்து விடுகிறார்கள். இவர்களில் ஒரு சில அரைகுறைகள் மட்டுமே, அவ்வப்பொது வில்லு ரேஞ்சு படங்களையும் பார்த்துவிட்டு “இந்த தமிழ் சினிமாவே இப்படித்தான்!” என்று விமர்சிக்க கிளம்பிவிடுகிறார்கள். பி.எச்.டி. முடித்தவர்கள், ஏன் எல்.கே.ஜி. பாடப்புத்தகத்தை புரட்டிவிட்டு, நொட்டை சொல்ல வேண்டும்? எல்.கே.ஜி. பையன் வேண்டுமானால் ஒரு குறுகுறுப்புக்கு அவ்வப்போது பி.எச்.டி. தீஸிஸை புரட்டிப் பார்த்துக் கொள்ளட்டும். உலக சினிமா ஆர்வலர்கள் தயவுசெய்து வெகுஜன தமிழ் சினிமாவோ, தெலுங்கு சினிமாவோ பார்த்து தொலைக்கவே வேண்டாம். பார்த்தால் உங்களுக்கெல்லாம் பேதியாகும் என்று எந்த முனிவராலோ, எந்த ஜென்மத்திலேயோ சாபம் இடப்பட்டிருக்கிறீர்கள்.

சமீபகாலமாக மாற்றுத் திரைப்படங்கள் படைத்தவர்களும் சில வணிகலாபங்களை முன்னிட்டோ அல்லது வயிற்றுப்பாட்டினை முன்னிட்டோ வெகுஜன சினிமாவை நெருங்கி வந்து, வெகுஜன சினிமாவுக்குள்ளே கிட்டத்தட்ட ஐக்கியமாகி விட்டார்கள். இன்றைய தேதியில் மாற்று திரைப்படம் என்பது புதியதாக திரைத்தொழிலை கற்கும் மாணவர்களுக்கும், வெகுஜன சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத ஒரு சில திறமையாளர்களுக்கும் மட்டுமே என்ற அளவில் குறுகிப்போய் கிடைக்கிறது. மாற்று திரைப்படம் எடுப்பவர்களும் கூட வெகுஜன பத்திரிகைகளின் ஆதரவில் தங்களுக்கு வேண்டிய விளம்பர வெளிச்சத்தை பெற தவமிருக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில் முன்பு மாற்றுப் படங்களுக்கு திரைப்பார்வை எழுதிக்கொண்டிருந்த அறிவுஜீவிப் பறவைகளுக்கு குளம் வற்றி விட்ட நிலையில், வேறுவழியில்லாமல் ‘வெகுஜன சினிமாவுக்கான விமர்சனம்' என்ற வேடந்தாங்கலை நாடிவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வந்தவர்கள் சும்மா இருந்தால் பரவாயில்லை. 'தமிழ் சினிமா அபத்தத்தின் உச்சம்', ‘சித்தாந்தங்களுக்கும் சினிமாக்களும் என்ன தொடர்பு?', ‘நடிகைகளின் தொப்புள்களிலா ஆம்லெட் போடுவது?' ‘பெண்மையை இழிவுப்படுத்துகிறார்கள்', ‘அதிகார ஆண்மய்யத் திமிர்' ‘விளிம்புநிலை' என்றெல்லாம் ஏதேதோ நமக்கு அறிமுகமில்லாத வார்த்தைகளாலும், வாக்கியங்களாலும் திரைப்பார்வை (அவர்கள் எழுதினால் மட்டுமே அது திரைப்பார்வை. மற்றவர்கள் எழுதுவது விமர்சனம்) எழுத ஆரம்பித்து விடுகிறார்கள். வெகுஜன சினிமா குறித்து இவர்கள் எழுதுவதால் வெகுஜன பத்திரிகைகளும், அவசரத்துக்கு அல்லது பரபரப்புக்கு பக்கத்தை நிரப்ப இவர்களது விமர்சனங்களை பிரசுரித்து விடுகின்றன. படிக்கும் வாசகர்களுக்கு தான் தாவூ தீருகிறது.

எழுபத்தைந்து ஆண்டுகால சினிமா வரலாற்றில் இப்போது தான் புதியதாக ஆண்மய்யத் திமிரையும், அபத்தங்களையும் சினிமா காட்டுவது போல இவர்கள் பேசுவது நல்ல நகைச்சுவை. ஹரிதாஸ் காலத்திலிருந்து இதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்பது அவர்களுக்கு தெரியாது. பாவம். அப்போதெல்லாம் உலகப் படங்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்களாம். ”இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளை!” என்று எம்.ஜி.ஆர் பாடியதெல்லாம் துயிலில் இருந்தவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. இப்போது “கைய வெச்சுக்கிட்டு சும்மா இருடா” என்று ரீமாசென் பாடும்போது தான் கொதித்தெழுந்து, மாய்ந்து மாய்ந்து ஐம்பது, அறுபது பக்கங்களில் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இவர்களது திரைப்பார்வையை படித்தபின்னர் தான் படத்தை இயக்கிய இயக்குனருக்கே அவரது படம் குறித்த பல பரிமாணங்கள் தெரிகிறதாம். ”இப்படி எல்லாம் கூட நாம எடுத்திருக்கோமா?” என்று இயக்குனர்கள் அதிசயிக்கிறார்களாம்.

வெகுஜனப் படங்கள் மக்களின் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்படுபவை. சராசரி பார்வையாளன் தான் எதையெல்லாம் அடையவில்லையோ அதையெல்லாம் திரைநாயகன் அடையும்போது அதை கண்டு மகிழ்கிறான். தனக்கு தான் காதலி கிடைக்கவில்லை தன் அபிமான நாயகனாவது படத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறானே? என்று சிலிர்க்கிறான். மரத்தை சுற்றி டூயட் பாடுவதெல்லாம் நமக்கு நடக்கக்கூடிய காரியமா? திரையில் வண்ணமயமாக நடக்கும்போது அதை நம் மனது கொண்டாடுகிறது. சோனி உடம்பை வைத்து அவனால் ஒருத்தனை கூட அடிக்கமுடியாது. அவனை மாதிரியே சினிமா ஹீரோவும் ஒரே ஒருத்தனிடம் அடிவாங்குகிறான் என்றால் அந்த கருமத்தை அவன் ஏன் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? அவனுடைய ஹீரோ சூப்பர்மேனாக ஐம்பது பேரை பறந்து, பறந்து அடித்தால் தானே அவனுக்கு சுவாரஸ்யம்? அவனுடைய சூழலில் ஒரு பெண்ணின் தொப்புளையோ, Cleavageயோ பார்ப்பது அவனுக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அது சினிமாவில் கிடைக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே?

வெகுஜன சினிமா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டத்துக்கான ஊடகம். அதில் லாஜிக்கோ, மேஜிக்கோ பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம். வெகுஜன சினிமாவுக்கான விமர்சனங்களும் வெகுஜன பாணியிலேயே அமைவது தான் சரியானது. மாறாக ரஜினி படத்திலோ, விஜய் படத்திலோ யதார்த்தம், பின்நவீனத்துவம், சமூக அக்கறை இத்யாதிகளை எதிர்பார்த்து அறிவுஜீவிகள் யாராவது ஏமாந்து கொதித்தெழுவதில் எந்தப் பயனும் இல்லை. வணிக லாபத்துக்காக எடுக்கப்படும் சினிமா அதன் பார்வையாளர்கள் எதை கேட்டாலும் தர தயாராகவே இருக்கும். மாறவேண்டியது சினிமாக்காரர்கள் மட்டும் அல்ல, சமூகமும் சமூகத்தின் ரசனையும்! சமூகத்தை இந்த நிலையில் வைத்திருப்பது அச்சமூகத்தில் தோன்றிய அறிவுஜீவிகளின், சிந்தனையாளர்களின் குற்றமே தவிர சினிமாக்காரர்களின் குற்றமல்ல.

30 comments:

 1. நல்ல பதிவு..சிந்திக்க வைத்த பதிவு

  நன்றி...

  அன்புடன்,
  சுவாசிகா
  http://ksaw.me

  ReplyDelete
 2. இதுவும் கரக்டாக தான் தெரியுது..

  ஒகே இனிமேல் அதிமேதாவித்தனம் காட்டாமல் இருக்க try பண்றன் லக்கி :)

  ReplyDelete
 3. வெகுஜன சினிமா என்பது வெறுமனே ஒரு கொண்டாட்டத்துக்கான ஊடகம். அதில் லாஜிக்கோ, மேஜிக்கோ பார்ப்பது அபத்தத்திலும் அபத்தம்.

  சிறப்பான கண்ணோட்டம் லக்கி

  ReplyDelete
 4. நண்பா,

  இந்தப் பதிவு உங்கள் 'குருநாதர்' சாருவிற்கும் சேர்த்தா என்று தெரியவில்லை. மொக்கைப் படம் என்று தெரிந்துதான் நீங்கள் ஒரு புதுப்படத்திற்குச் சென்று வந்து பிறகு அய்யோ அம்மா என்று போலியாக அலறி விமர்சனம் எழுதுகிறீர்கள். அப்படியெனில் நீங்கள் செய்வதும் பிழைதானே? வெகுஜனப்படங்களைப் பற்றி அறிவுஜீவிகள்தான் எழுத வேண்டுமென்பதில்லை. சமூகச் சொரணையுள்ள பாமரன் கூட எழுதலாம். அந்தளவிற்கு சீர்கெட்டு கிடக்கிறது தமிழ்ச்சினிமா. எப்படி அவர்களை வெகுஜன சினிமாவிலிருந்து விலகியிருக்க 'உபதேசம்' செய்கிறீர்களோ, அதைப் போலவே நீங்களும் அவர்களின் விமர்சனங்களிலிருந்து விலகியிருக்கலாமே, ஏன் அவற்றைப் படித்து விட்டு இப்படி வயிற்று வலிக்காரன் போல் அவஸ்தைப் படுகிறீர்கள்.

  ReplyDelete
 5. நல்ல பதிவு லக்கி...

  //
  சராசரி பார்வையாளன் தான் எதையெல்லாம் அடையவில்லையோ அதையெல்லாம் திரைநாயகன் அடையும்போது அதை கண்டு மகிழ்கிறான். தனக்கு தான் காதலி கிடைக்கவில்லை தன் அபிமான நாயகனாவது படத்தில் இரண்டு பெண்களை காதலிக்கிறானே? என்று சிலிர்க்கிறான். மரத்தை சுற்றி டூயட் பாடுவதெல்லாம் நமக்கு நடக்கக்கூடிய காரியமா? திரையில் வண்ணமயமாக நடக்கும்போது அதை நம் மனது கொண்டாடுகிறது. சோனி உடம்பை வைத்து அவனால் ஒருத்தனை கூட அடிக்கமுடியாது. அவனை மாதிரியே சினிமா ஹீரோவும் ஒரே ஒருத்தனிடம் அடிவாங்குகிறான் என்றால் அந்த கருமத்தை அவன் ஏன் காசு கொடுத்துப் பார்க்க வேண்டும்? அவனுடைய ஹீரோ சூப்பர்மேனாக ஐம்பது பேரை பறந்து, பறந்து அடித்தால் தானே அவனுக்கு சுவாரஸ்யம்? அவனுடைய சூழலில் ஒரு பெண்ணின் தொப்புளையோ, Cleavageயோ பார்ப்பது அவனுக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அது சினிமாவில் கிடைக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே?
  //
  ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அதன் படைப்பாளி சொன்ன அதே அலைவரிசையில் உங்களின் இந்த கருத்துகள்.. அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 6. மிகவும் சரி.
  ஒரு முறை இந்தியன் பட டெலிபோன் மணிபோல் பாடலுக்கு சன் தொலைகாட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் ஒருவர் விளக்கம் கொடுத்தார் பாருங்க...
  இப்படியெல்லாம் ஒரு அர்த்தம் கொடுக்க முடியும்னு அப்பதான் புரிஞ்சுது..
  அதே போல் பாய்ஸ் படத்துல ஜெனிலியா ஜொள்ளுல நனையதீங்கனு short skirt தூக்குர மாதிரி ஒரு சீன வரும், அதுக்கு துக்ளக்கில் ஒருத்தர் விமர்சனம் எழுதியிருந்தார் பாருங்க சாமி முடியல ..

  ReplyDelete
 7. நடத்துங்க ஜீ நடத்துங்க..

  ReplyDelete
 8. இதுனாலதான்... படத்துக்கு போன நான் கண்ணையும் காதையும் மூடிக்குவேன்..எங்க நாமளும் இந்த மாதிரி விமர்சனம் எழுதிற போறோம்னு ஒரு பயம்...

  ReplyDelete
 9. கரெக்டுதான் பாஸ். ஆனா யாரையெல்லாம் சொல்றீங்கன்னுதான் பிடிபடலை..

  ReplyDelete
 10. நீங்கள் சொல்வது யதார்த்தம்தான்... இவர்களை போலவே நீங்களும் இன்னொரு வகை "அறிவுஜீவி" என்பதையும் மறுக்க முடியாது...

  ReplyDelete
 11. \\மாறவேண்டியது சினிமாக்காரர்கள் மட்டும் அல்ல, சமூகமும் சமூகத்தின் ரசனையும்!// ஸாரி யுவகிருஷ்ணா! கொஞ்சம் நேர்மையாக எழுதக்கூடிய நீங்களே தடம் புரண்டு எழுதியிருக்கிறீர்கள். சமூகமும் சமூகத்தின் ரசனையும் மாறவேண்டும் என்று எழுதிவிட்டு, \\அவனுடைய சூழலில் ஒரு பெண்ணின் தொப்புளையோ, Cleavageயோ பார்ப்பது அவனுக்கு சாத்தியமில்லாததாக இருக்கலாம். அது சினிமாவில் கிடைக்கும்போது அவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுவது இயல்புதானே?// என்று சமூகத்தின் தவறை நியாயப்படுத்தவும் செய்கிறீர்கள். உங்கள் கட்டுரையை என்னால் வரிக்கு வரி ஏற்க முடியவில்லை. ரொம்ப ஸாரி!

  ReplyDelete
 12. கிருஷ்ணா, உங்கள் கருத்தை முற்றிலும் வரவேற்கிறேன், ஆமோதிக்கிறேன். காரணம், எனக்கும் வேறு பலருக்கும் ஆங்கிலம் மற்றும் மற்ற மொழி படங்களை தேடி பிடித்து பார்க்கும் வாய்ப்பு அமையும், அமைந்தது. ஆனால், மோகன்லால் ஸ்டைலில் ஒரு குப்பனுக்கோ சுப்பனுக்கோ (i mean common man - வெகுஜன பிரஜை) அதே போல வாய்ப்பு இருக்கும் என கருத முடியாது. அவர்களை அதற்காக வற்புறுத்தவும் முடியாது.
  ஒருவர் ஒரு விஜய், அஜித் நடித்த லாஜிக் இல்லாத மேஜிக் மட்டுமே கொண்ட படத்தை ரசிக்கிறார் என்பதற்காக அவரை கேவலமாக பார்க்கும் அளவிற்கு தமிழ் சினிமா ஒன்றும் அவ்வளவு மோசமில்லை என்பது என் கருத்து. ஏனென்றால் மேலே சொன்ன அறிவு ஜீவிகள் யாரும் ஹாலிவூடிலும் பேரரசுக்கள் உண்டு என்பதை உணர்வதில்லை. உதாரணம்: Nicolas cage, Chiwetel Ejiofor, etc - இவர்களின் படங்களை பார்த்தால் நான் சொல்வது என்னவென்று புரியும்.
  அதே சமயம், தங்கள் இப்பதிவு மற்ற மொழி படங்களை ரசிப்பவர்களை நோக்கி அல்ல, ரசிப்பதோடு நின்று விடாமல் "இங்கு இவன் சரியில்லை, அது சரியில்லை - எடுத்தால் இங்கிலிஷ்காரன் மாதிரி படம் எடுக்க வேண்டும்" என புலம்புவோரை நோக்கியே என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.

  - இவண் ராஜீவ்

  ReplyDelete
 13. chumma nachi'nu erukku... 100% true..

  ana yara kuthi katturingaennu sollittinganna romba nalla erukum.:P

  ReplyDelete
 14. நீங்கள் சொல்வது மிகவும் சரி தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

  ReplyDelete
 15. முன்பு தனியார் தொலைகாட்சியில் மதன் திரைவிமர்சனம் செய்வதை பற்றி தமிழ் சினிமாவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று எழுத்தாளர் சுஜாதா சொன்னதாக சொல்வார்கள்

  ReplyDelete
 16. அப்போ இனிமேல் திரை பார்வையோ , திரை விமர்சனோ லக்கி எழுதபோறதில்லையா...

  ReplyDelete
 17. யுவா,
  "இன்றைய பின்நவீனத்துவ தமிழ்ச்சூழலில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள், அடுத்த காட்சிக்கு வரிசையில் நிற்பவர்களை செருப்பால் அடித்து துரத்துகிறார்கள்"

  - இது மரியாதை படத்தின் உங்கள் விமர்சனம்.

  "இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்"

  - இது பொக்கிஷம் படத்தின் உங்கள் விமர்சனம்.

  சோ, நீங்களும் இது போன்ற விமர்சனங்களை எழுதிக் கொண்டுதானே இருக்கின்றீர்கள். பிறகு எதற்காக இந்தப் பதிவு?

  - உங்கள் இந்தக் கருத்துப்படி இசையையும் ரசிக்க உலக இசை தெரிந்திருக்க வேண்டிய நியாயம் இல்லைதானே? ஒரு பாமரனுக்கு இளையராஜா இசை பிடிக்கும் என்றால், அவனுக்கு உலக இசை அறிவு இல்லை, அதனால்தான் இளையராஜா இசை அவனுக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்வதும் தவறுதானே???

  ReplyDelete
 18. hi lucky

  did u write this article after watching "arumugam"? :-)

  friend from bangalore

  ReplyDelete
 19. அன்பு யுவகிருஷ்ணா, பொதுவாக இணையத்தில் விவாதங்களுக்குள் நான் போவதில்லை. ஆனாலும் உங்களது இந்த பதிவு சற்று ஓவராக தோன்றுவதால் இந்த பதில்.

  எல்லா காலகட்டத்திலும் அறிவுஜீவிகளாய் தங்களை நினைத்து சுற்றும் கூட்டம் எப்போதும் உண்டு. அதில் பெரும்பாலனோர் வயிற்றுபாட்டிற்காக தடம் மாறி பின்னாளில் இக்கூட்டத்தில் இருந்து விலகி விடுகிறார்கள். மிச்சமிருப்பவர்களில் 99% பேர் வேறு கூட்டத்தால் அல்லது தங்களுக்குள்ளாகவே வலுவை இழந்து விடுகிறார்கள். இதில் யார் அறிவாளி என்பது கேள்விக்குறி! அது அந்தந்த 'நபருக்கும்,' 'அந்த காலத்தின் பார்வைக்கும்' தக்க மாறுப்படும். ஆங்கில கவிஞர் டி.எஸ்.எலியட் சக இலக்கியவாதி டி.எச்.லாரண்ஸை ஆபாச எழுத்தாளர் என்று விமர்சித்தார். இன்று காலம் வேறு விதமாக இதை மதிப்பிடுகிறது.

  புலவர்களுக்குள் அகந்தையும் செருக்கும் மற்றவர்களை மதிக்காத போக்கும், தானே பெரியவன் என்கிற மனநிலையும் இருப்பதை வரலாறு திரும்ப திரும்ப நிரூபித்து இருக்கிறது. ஆனால் இதில் யாரோ ஒருவன் சமூகத்தை மாற்ற வல்ல ஓர் ஓடையை தொடங்கி வைக்கிறான். அந்த கூட்டத்தை மேற்சொன்ன நெகட்டிவ் விஷயங்களுக்காக புறந்தள்ளினால் அந்த 'யாரோ ஒருவன்' தோன்றியிருக்கவே மாட்டான்.

  மேற்சொன்ன கூட்டத்தில் நீங்களும் ஒருவராகவே நான் பார்க்கிறேன். அப்படியிருக்க 'ரொட்டி துண்டுக்கு அலையும் கும்பல்' என்பது போன்ற வார்த்தைகள் அனாவசியம். இன்று நமக்கு தேவை தெளிவு. சும்மா கல்லெறிந்தால் அந்த நேரத்திற்கு எல்லார் பார்வையும் நம் மீது திரும்பலாம். உங்களை போன்றோர் பெருந்திறனை ஆற்றலை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதனை கல் எறிதலுக்காக வீண்படுத்த வேண்டாம்.

  ReplyDelete
 20. http://nithyananda-cult.blogspot.com/2009/11/nithyananda-denied-entry-to-us-and-gets.html

  ReplyDelete
 21. இனிமே நீங்க விமர்ச்னம் எழுத மாட்டீங்களா லக்கி..?:(((((

  கேபிள் சங்கர்

  ReplyDelete
 22. நண்பர்களே!

  கருத்துகளுக்கு நன்றி.

  இவ்விமர்சனம் பொதுமையானது. சில சமயங்களில் எனக்கும் பொருந்தும். தமிழ் சினிமாவை ரொம்ப மட்டப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரையை படித்த காண்டில், அவசர அவசரமாக எழுதப்பட்ட எதிர்வினை இது. எனவே இதில் அறிவுப்பூர்வமாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிப் பூர்வமானதாகவே இருக்கும்.


  தோழர் சாய்ராம்!

  அவ்வப்போது அறிவினை, உணர்ச்சி வென்று விடுகிறது. அதுபோன்ற நேரத்தில் தோன்றும் அரிப்பால் இதுபோல ஏதாவது அபத்தமாக எழுதிவிட நேர்கிறது :-)


  தோழர் கேபிள்!

  ரொம்பவும் மகிழ்ச்சியடைந்து விட வேண்டாம். நம் விமர்சனங்கள் தொடரவே செய்யும்.


  திரு என். உலகநாதன்!

  மரியாதை, பொக்கிஷம் தொடர்பான என்னுடைய பழைய விமர்சனம், இப்போதும் எனக்கு ஏற்புடையதே. நான் வெகுஜனங்களின் ரசனையில் இருப்பவன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் உண்டு. நான் காட்டமாக விமர்சித்த படங்கள் பலவும் படுதோல்வி அடைந்ததும், மற்றவர்கள் மோசமாக விமர்சித்து, நான் பாராட்டிய படங்கள் வெற்றி கண்டதையும் இதற்கு உதாரணமாக காட்டுகிறேன்.

  இளையராஜாவின் இசை பற்றிய உங்களது இக்கருத்தை இங்கே ஏன் பின்னூட்டமிட்டீர்கள் என்று தெரியவில்லை. நான் தீவிர இசைராசா ரசிகன்.

  ReplyDelete
 23. யுவா,

  முதலில் மாறுபட்ட கருத்து இருந்தும் என் பின்னூட்டத்தை வெளியிட்டமைக்கு நன்றி.

  //இவ்விமர்சனம் பொதுமையானது. சில சமயங்களில் எனக்கும் பொருந்தும். தமிழ் சினிமாவை ரொம்ப மட்டப்படுத்தி எழுதப்பட்ட ஒரு கட்டுரையை படித்த காண்டில், அவசர அவசரமாக எழுதப்பட்ட எதிர்வினை இது. எனவே இதில் அறிவுப்பூர்வமாக எதுவும் இருக்க வாய்ப்பில்லை. உணர்ச்சிப் பூர்வமானதாகவே இருக்கும்.//

  - இதைப் படித்ததும் புரிந்து கொண்டேன். ஏன் அப்படி எழுதினீர்கள் என்று!

  //இளையராஜாவின் இசை பற்றிய உங்களது இக்கருத்தை இங்கே ஏன் பின்னூட்டமிட்டீர்கள் என்று தெரியவில்லை. நான் தீவிர இசைராசா ரசிகன்.//

  உண்மைதான் யுவா. நீங்களும் இளையராஜா ரசிகன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

  இளையராஜாவின் இசை பற்றிய எனது கருத்து வேறு ஒருவருக்காக எழுதப் பட்டது. அதை இங்கு எழுதியிருக்கக் கூடாதுதான்!

  ReplyDelete
 24. Hi Yuva,
  Simply an ugly post.

  ReplyDelete
 25. சாதாரண ரசிகனுக்கு இதுதான் பிடிக்கும் என்று தங்கள் வக்கிரபுத்தியை வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை எடுப்பது அயோக்கியத்தனம்.இப்படி எடுக்கப்படும் படங்கள் வியாபாரரீதியில் பெரிய வெற்றி அடையாதது ஏன்? உதாரணம்:குருவி,வில்லு,ஏகன்,குசேலன்.சூப்பர் ஸ்டாரே நடித்திருந்தாலும் ஒரு அளவிற்கு மேல் ஹீரோயிஸம் காட்டும் படங்களை சாதாரண ரசிகன் கூட நிராகரித்து விடுவான் என்பதற்கு பாபாவைவிட பெரிய உதாரணம் எதுவும் தேவையில்லை.இயக்குனர் நினைக்கும் இடங்களில் வந்து புட்டத்தை ஆட்டிவிட்டு போவதுதான் கதாநாயகியின் வேலையா?கதபறயும்போள் படம் மலையாளத்தில் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.அந்த ஒரு அருமையான கதையை நயந்தாராவின் கவர்ச்சி,வடிவேலுவின் மூன்றாந்தர காமெடி என்று சிதைத்துவிட்டு இதுதான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியவர்களுக்கு செருப்படி கொடுத்தது சாதாரண பார்வையாளந்தான்.

  ReplyDelete
 26. //வடிவேலுவின் மூன்றாந்தர காமெடி என்று சிதைத்துவிட்டு இதுதான் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று கூறியவர்களுக்கு செருப்படி கொடுத்தது சாதாரண பார்வையாளந்தான்//

  இதை என்னால் ஒப்புக் கொள்ள இயலவில்லை. மணிசித்திரதாழ் என்ற நல்ல படத்தை மேலே சொன்ன இத்யாதிகளோடு எடுத்துதான் சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இன்னும் பல நூறு படங்கள் உண்டு தமிழில் இப்படி வெற்றி பெற்று.

  லக்கி, ஒரு சந்தேகம். சமூகத்தை சினிமா என்ற புள்ளியை நோக்கி மட்டும் எப்படி முன்னேற்ற முடியும்? அனைத்து வகையிலும் நம் சமூகம் முன்னே செல்லும் போது அது போன்ற படங்கள் குறையலாம்.

  என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு ஊடகம். அதை கலையாகவும் பார்க்கலான், வணிக ஊடகமாகவும் பார்க்கலாம். கலையாக பார்ப்பவரக்ள் அவர்களுக்கான சினிமாவை மட்டும் பார்க்கட்டும். வணிக சினிமாவில் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஏனெனில் பெரும்பாலான மக்களின் தேவையை பொறுத்தே அது இருக்கும். அது தொப்புளையும் காட்டலாம், நடிகன் பறப்பதையும் காட்டலாம். அது தேவையில்லை என்று மக்கள் நினைக்கும் போது தானாக மாறும்.

  ReplyDelete
 27. கார்க்கி!

  வெகுஜன திரைப்படங்கள் குறித்த உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

  ReplyDelete
 28. Meeendum solkiren,

  Vimarasanam enpatharkku u laippu thevai illai, vice varsa athu thevai...

  There is no standard to fix a standard....

  Ellapukalum iraivan oruvanuuke.....


  Ulaipaali,
  (Ulaikka mattum).

  ReplyDelete