30 செப்டம்பர், 2009

உளியின் ஓசை!


வேற என்னத்தைச் சொல்ல? :-(

* - * - * - * - * - * - * - *

இப்போது எல்லாம் திரைவிமர்சனம் செய்யவே பயமாக இருக்கிறது? உன் நண்பனை காட்டு, உன்னைப் பற்றி சொல்கிறேன் என்பது மாதிரி, உனக்குப் பிடித்த நாலு படங்களின் லிஸ்டைக் கொடு என்று பின்னூட்டத்தில் மிரட்டுகிறார்கள். முன்பெல்லாம் விஜய் படங்களையோ, ரஜினி படங்களையோ கொஞ்சம் அப்படி இப்படி விமர்சித்தால் பின்னூட்டத்தில் ஆபாசமாக திட்டுவார்கள். இப்போது கமல் ரசிகர்களும் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு ஆட்டையில் இறங்கிவிட்டதாக தெரிகிறது.

'திரு திரு.. துறு துறு'. லோ பட்ஜெட்டில் ஹை குவாலிட்டி. ஆட் ஏஜென்ஸிகளில் சீனியர் விஷுவலைஸராக சில காலம் குப்பை கொட்டிய அருகதையில் சொல்கிறேன். ஆட் ஏஜென்ஸி சூழலை அப்பட்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். படத்தின் டைட்டிலுக்கே நாக்கை மடித்துக் கொண்டு விசிலடிக்கலாம். ஹீரோ அஜ்மல் தேமேவென்று இருக்கிறார். ஹீரோயினின் கண்கள் (மட்டும்) கொள்ளை அழகு. மற்ற சமாச்சாரங்கள் பெரியதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இது காமெடி படமா, சீரியஸ் படமாவென்று தெளிவில்லாமல் இயக்குனர் திருதிருவென்று முழித்திருப்பது புரிகிறது. அதே நேரத்தில் திரைக்கதை துறுதுறுவென்று ஓடுகிறது. சத்யம் சினிமாஸ் இன்னும் கொஞ்சம் தாராளமாய் செலவழித்து, கிரேஸி மோகனை இப்படத்துக்கு வசனம் எழுத வைத்திருந்தால் நிறைவாக இருந்திருக்கும்.

இரண்டேகால் மணிநேர எண்டெர்டெயின்மெண்டுக்கு இந்த படம் காரண்டி!

* - * - * - * - * - * - * - *

'மதுரை டூ தேனி, வழி : ஆண்டிப்பட்டி' என்ற வித்தியாசமான டைட்டிலோடு போனவாரத்துக்கு போனவாரம் ரிலீஸ் ஆகி, இந்த வாரம் ஒரு படம் மூட்டையை கட்டிவிட்டது. படத்தைப் பற்றி பெரியதாக சொல்வதற்கு எதுவுமில்லை. யதார்த்த படம் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் ரொம்ப முக்கியிருக்கிறார். அட்டகாசமான ஒன்லைனர் மோசமான திரைக்கதையால் பேவென்று இளிக்கிறது. ஹீரோயின் மட்டும் பக்கத்து வீட்டு ஃபிகர் மாதிரி பாந்தம்.

இந்தப் படத்தை பொறுத்தவரை பாராட்டப்பட வேண்டியவர்கள் இருவர். ஒருவர் கேமிராமேன். இவருக்கு ஒரு நல்ல படம் கிடைத்தால் சீக்கிரமே முன்னுக்கு வந்துவிடுவார். இன்னொருவர் பி.ஆர்.ஓ சக்திவேல். ஒரு மொக்கைப் படத்துக்கு கூட இந்தளவுக்கு மக்கள் தொடர்பு செய்யமுடியுமா என்பது ஆச்சரியம். அதுவும் உன்னைப் போல் ஒருவன் வெளியான வாரத்தில் இந்தப் படமும் வெளிவந்து சொல்லிக்கொள்ளத்தக்க வகையில் பேசப்பட்டது ஆச்சரியம்.

* - * - * - * - * - * - * - *

தமிழ் பதிவுகளை எல்லாம் அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது எட்டிப் பார்த்தாலும் அரைகுறைகள் அரசியல் பேசுவதை கண்டால் அஜீரணமாக இருக்கிறது. கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதி தொலைக்கலாம். அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது.

சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!

27 செப்டம்பர், 2009

கமல் பற்றி சாருநிவேதிதா!


கமல்ஹாசனின் 50 ஆண்டுக் கால சினிமா வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் போது பலவிதமான கருத்துக்கள் மனதில் அலை மோதுகின்றன. தமிழ்நாட்டில் வாழும் மத்திய வயதை எட்டியிருக்கும் ஒருவருக்கு அவர் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் தமிழ் சினிமா என்பது அவரது வாழ்வில் ஒரு பிரிக்க முடியாத அங்கமாகவே இணைந்திருக்கும். அதைப் போலவே கமல்ஹாசனும் அவரது வாழ்வில் தவிர்க்க முடியாதவராகிறார். களத்தூர் கண்ணம்மாவின் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று துவங்கி, குணாவில் அபிராமி அபிராமி என்று உருகி, ஆளவந்தானில் மனிதன் பாதி மிருகம் பாதி என்று மிரட்டி, கடைசியில் தசாவதாரத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் முகமூடியை அணிந்து கொண்டது வரை நீளும் ஒரு நீண்ட வரலாறு அது.

ஆனால் இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான நாஸ்டால்ஜிக் நினைவுகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு, கமல்ஹாசனின் 50 ஆண்டு சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றங்கள் யாவை என்று தர்க்கரீதியாக யோசித்துப் பார்ப்போம். அவருடைய மகாநதியிலிருந்து தசாவதாரம் வரை ஒவ்வொரு படத்தைக் குறித்தும் பாராட்டுதலாகவும் சில சமயங்களில் எதிர்மறையாகவும் தொடர்ந்து வினையாற்றி வந்திருக்கிறேன். பாராட்டி எழுதியதே அதிகம்.

அந்த அளவுக்குத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாகத் திகழ்பவர் கமல்ஹாசன். ஆனால் அவருடைய இவ்வளவு நீண்ட சினிமா வாழ்வினால் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த மாற்றம் என்ன என்ற கோணத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சுகிறது.கமலுக்கு நேர் எதிர் உதாரணமாக, இயக்குநர் ஷங்கரை எடுத்துக் கொள்வோம். இவருடைய ஒரு படத்தைக் கூட நான் ரசித்ததில்லை. இவரது இயக்கத்தில் வந்த பாய்ஸ், அந்நியன், சிவாஜி போன்ற படங்களை நார்நாராய்க் கிழித்துத் தோரணமே கட்டியிருக்கிறேன். ஆனால் இதே ஷங்கர் வேறோர் விஷயத்திலும் ஈடுபட்டார். புதிய இயக்குனர்களை வைத்து குறைந்த பட்ஜெட் படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இதுவரை இருந்த அடையாளத்தை முற்றிலுமாக மாற்றியமைத்தது.

இது நடந்தது ஐம்பது ஆண்டுகளில் அல்ல; வெறும் ஆறே ஆண்டுகளில் ஆறே படங்களின் மூலம் இந்த மாற்றம் நடந்தது. இப்போது ஷங்கர் என்ற இயக்குனரையே பிடிக்காத நான் அவருடைய தயாரிப்பில் வரும் படங்களை ஓடிப் போய் பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஈரம் என்ற படத்தை முதல் நாள் முதல் காட்சியில் சென்று பார்த்தேன். தமிழில் அப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததில்லை. அந்த அளவுக்குப் புதிதாக இருந்தது ஈரம்.

ஷங்கர் மட்டுமல்ல; பிரகாஷ் ராஜின் தயாரிப்பில் வந்த மொழி போன்ற படங்களும் தமிழில் மாற்று சினிமாவுக்கான அசலான முயற்சிகளாக இருந்தன. அதேபோல் சசிகுமார் தயாரிப்பில் வந்த சுப்ரமணியபுரம், பசங்க என்ற இரண்டு படங்களும் பெரிதும் சிலாகிக்கப்பட்டவை.

இப்படியாக பலரும் மாற்று சினிமாவுக்கான முயற்சியில் தங்கள் முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் போது, அபாரமான நடிப்பாற்றல் கொண்ட, உலக சினிமாவும், இலக்கியமும் தெரிந்த கமலால் ஏன் இப்படி ஒரு படத்தைக் கூடத் தர முடியவில்லை? கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது என்னவென்று பார்த்தால், சத்யராஜ் நடித்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மொக்கைப் படம்.

ஷங்கர் தன்னை புத்திஜீவி என்று சொல்லிக் கொண்டதில்லை. ஆனால் இப்படிப்பட்ட மாற்று சினிமாவுக்கு தமிழில் ஒரு தேவை இருக்கிறது என்ற உண்மையைப் புரிந்து கொள்ளும் புத்திசாலித்தனம் அவரிடம் இருந்தது. இந்தப் படங்களை மெகா பட்ஜெட் படங்களை இயக்கும் ஷங்கர் இயக்கவில்லை. இதுவரை பெயரே கேள்விப்பட்டு அறியாத புதிய இளைஞர்களைக் கொண்டு இயக்க வைத்தார். இதுதான் இப்போது கமல் செய்ய வேண்டிய வேலை என்று நினைக்கிறேன்.

கமல்ஹாசனின் முக்கியமான எந்தப் படத்தை எடுத்துக் கொண்டாலும் அதன் இயக்குனர் பெயர் வேறாக இருக்கும். ஆனாலும் அது கிட்டத்தட்ட கமலின் இயக்கத்தில் வந்த படம்தான் என்பது தமிழ் சினிமாவில் அனைவருக்கும் தெரியும். இந்தக் குறுக்கீடு இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கமலின் பயணம் வேறு மாதிரி இருந்திருக்கலாம். மேலும், இதை குறுக்கீடு என்ற சாதாரண சொல்லால் குறுக்கி விட முடியாது. படத்தின் ஒட்டு மொத்த போக்கையே மாற்றி விட்டு, இயக்குனர் என்ற இடத்தில் யாரோ ஒருவரின் பெயரைப் போட்டு விட்டால் அந்தப் பொறுப்பிலிருந்து கமல் தப்பித்துக் கொள்ள முடியுமா என்ன?

கமல் படங்களின் முக்கியமான பிரச்சினை, அவருடைய படங்களில் அவர் தன்னை முன்னிலைப் படுத்துவதுதான் என்று தோன்றுகிறது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்ற நல்ல பொழுதுபோக்குப் படத்தை எடுத்துக் கொண்டால் அதன் இந்தி மூலமான முன்னாபாய் எம்.பி.பி.எஸ்ஸில் அதன் ஹீரோவான சஞ்சய் தத் அவருடைய பாத்திரமான முன்னாபாயாகத்தான் நடித்திருப்பார். ஆனால் வசூல்ராஜாவில் நடிகர் கமல்ஹாசன்தான் தெரிகிறாரே தவிர ராஜாராமன் என்ற பாத்திரம் அல்ல. அதில் வரும் பாடலையே எடுத்துக் கொள்வோம். ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா; வேட்டியைப் போட்டுத் தாண்டவா. இந்தப் பாடல் ஆழ்வார்ப்பேட்டை என்ற பகுதியில் வசிக்கும் கமல்ஹாசனைக் குறிக்கிறதே தவிர அந்த ராஜாராமன் என்ற பாத்திரத்தை அல்ல.

இது கமலின் ரசிகர்களை திருப்திப்படுத்தி, படம் ஓடுவதற்காகக் கையாளப்படும் யுத்தி. இந்த யுத்தி சினிமாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கமலுக்கு எதற்காக? ரசிகனுக்காக கலைஞனா; கலைஞனுக்காக ரசிகனா? உலக நாயகன் என்று சொல்லி கமலைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ரசிகனுக்கு உலக சினிமா தெரியாது. ஆனால் கமல் அதில் மூழ்கித் திளைப்பவர். அப்படியானால், உலக சினிமா தெரிந்த கமல் எதற்காக பாமர ரசனைக்காக படம் எடுக்க வேண்டும்? கமல் ஒன்றும் வாடிக்கையாளருக்கு ’ என்ன வேண்டும்?‘ என்று கேட்டு கொடுக்கும் பரோட்டாக் கடை மாஸ்டர் அல்லவே?

நான் ஒன்றும் பொழுதுபோக்குப் படங்களுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் எந்தப் படமாக இருந்தாலும் அதில் கமல் தன்னையும் தன் ஆளுமையையும் முன்னிறுத்திக் கொள்வதால் படத்தின் நம்பகத்தன்மை குலைந்து விடுகிறது. அதாவது, கமல் தன்னுடைய படங்களில் தனக்கு ஒரு நாயகத் தன்மையை உருவாக்குகிறார். கமலே எழுதி, இயக்கி, தயாரித்த விருமாண்டியில் இதுதான் நடந்தது. கமலின் தன்முனைப்பே பெரிதாகத் துறுத்திக் கொண்டிருந்ததால் படம் தோல்வியுற்றது. ஆனால் அதே கதை அமீரிடம் பருத்தி வீரன் என்ற கலாசிருஷ்டியாகப் பரிணமித்தது.இப்போது வெளிவந்துள்ள உன்னைப் போல் ஒருவனை எடுத்துக் கொள்வோம். அதன் இந்தி மூலமான ’ ஒரு புதன்கிழமை ’ யில் வரும் நஸ்ருத்தீன் ஷா ஒரு சாதாரண நடுத்தர வர்க்கக் குடிமகனாக வருகிறார். அந்த வேடத்தில் நடித்திருக்கும் கமலோ அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க மனிதனாகத் தெரியவில்லை. போலீஸ் கமிஷனருடன் அமெரிக்க ஆங்கிலத்தில் பேசுகிறார் கமல். காரணம், படத்தில் பேசுவது கதாபாத்திரம் அல்ல; கமல்ஹாசன். இந்த யுத்தியெல்லாம் ரஜினிக்கோ விஜய்காந்துக்கோ தேவையாக இருக்கலாம். கமலுக்கு எதற்கு?

மேலும், கமல் தமிழில் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுக்கும் இந்திப் படங்களின் அரசியலே மிகவும் விவாதத்திற்குரியது. இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் எல்லாம் சரியாகி விடும், பிரிட்டிஷ்காரன் காலத்தில் இந்தியா நன்றாக இருந்தது என்றெல்லாம் தமது அரசியல் ஞானத்தை வெளிப்படுத்தும் நடுத்தர வர்க்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் படங்களையே அவர் மொழியாக்கம் செய்யத் தேர்ந்தெடுப்பது ஏன் என்று புரியவில்லை.

உதாரணமாக, அப்பாவி மக்களைக் கொல்லும் தீவிரவாதிகளையெல்லாம் விசாரணையில்லாமல் தீர்த்துக் கட்டி விட்டால் இந்தியா அமைதிப் பூங்காவாகி விடும் என்ற நடுத்தர வர்க்கப் புரிதலே ’ ஒரு புதன்கிழமை ’ இந்திப் படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல். மற்றபடி, இளம் வயதில் தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டு போராளிகளாக மாறும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் உருவாவது ஏன் என்பது பற்றிய எந்தச் சிந்தனையும் அந்தப் படத்தில் இல்லை. அது ஒரு நல்ல த்ரில்லர் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் அதன் அரசியலில் மிகப் பெரிய அபாயம் உள்ளது. அதோடு, அப்படிப்பட்ட தீவிரவாதிகள் பிரச்சினையும் தமிழ்நாட்டில் இல்லை. தமிழ்நாடு என்ற பிரதேசத்தின் பிரச்சினைகள் வேறு. அந்தப் பிரச்சினைகளை கமல் எதிர்கொள்ள வேண்டுமானால் ஒன்று, அவர் ஒரு தீவிரமான இயக்குனரிடம் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அல்லது, மாற்று சினிமாவை நோக்கிய கனவுகளோடு வரும் இளைஞர் கூட்டத்தைக் கொண்டு குறைந்த செலவிலான புதிய படங்களைத் தயாரிக்க வேண்டும். இதைத் தவிர இதுவரை சென்றிராத வேறு வழிகளிலும் யோசிக்கலாம்.

நன்றி: இந்தியா டுடே

25 செப்டம்பர், 2009

நான் ஏன் செருப்பு வீசினேன்!

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது :


நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக்.

நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன.எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன.

ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன்.

ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.வாய்ப்பு வழிதேடி வந்தது.

நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?

எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்.

நன்றி – http://porattamtn.wordpress.com/

20 செப்டம்பர், 2009

கல்யாணம்!


கிருஷ்ணன் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பான். நாகேஷைப் போல ஒல்லியான வெடவெட தேகம். நிற்கும்போது கூட ஏதாவது சாய்மானம் அவனுக்கு தேவைப்படும். துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். கையையும், காலையும் வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கமாட்டியாடா என்று அவனை கேட்போம். இரவு 12 மணிக்கு முன்னதாக அவன் வீட்டுக்கு சென்றதாக சரித்திரமேயில்லை. தினமும் பீர், பீச்சு, பிகர், பார்க், சினிமா என்று அலுவலக நேரம் தவிர்த்தும் எந்நேரமும் பிஸியாகவே இருப்பான்.

பெயருக்கு ஏற்றாற்போலவே கிருஷ்ணலீலா தான் தினமும். முருங்கை மரத்துக்கு சேலை சுற்றினால் கூட சைட் அடிக்கும் தெய்வீகக் குணம் அவனுக்கு வாய்த்திருந்தது. சித்தாளுவிலிருந்து சிலுக்கு வரை அவன் ஜொள்ளு விடாத பிகர்களே இல்லை. சிலநேரங்களில் பொறாமையாக இருக்கும். இவனுக்கு மட்டும் எப்படி பிகரெல்லாம் மாட்டுது என்று. ஒரு பிகரைப் பார்த்துவிட்டால் ஏதேதோ மேஜிக்கெல்லாம் செய்து எப்படியாவது அவளிடம் பேசிவிடுவான். அவளை ஒருமுறையாவது சிரிக்க வைத்துவிடுவான்.

"கிளியோபாட்ராவா இருந்தாலும் என்னைப் பார்த்து குறைந்தபட்சம் ஒரு ஸ்மைலாவது அடிப்பாடா" என்று பீற்றீக் கொள்வான். இத்தனைக்கும் பையனின் பர்சனாலிட்டி ரொம்ப சுமார். மாநிறமாக இருப்பான். மூக்கு கொஞ்சம் நீளம். சுமாரான உயரம். வெடவெட உடலுக்கு சற்றும் பொருந்தாமல் லூசாக டிரஸ் செய்வான். ஆளும் கொஞ்சம் லூசுதான் என்பது வேறு விஷயம்.

எப்போதும் அவன் காதல் லீலைகளையே எங்களிடம் பேசிக்கொண்டிருப்பான். ஆறாம் கிளாஸ் படிக்கும்போதே கிருஷ்ணன் காதலித்தானாம். பத்தாம் கிளாஸ் படித்தபோது அவன் கிளாஸ் (கல்யாணமாகாத) டீச்சரை சைக்கிளில் கூப்பிட்டுக் கொண்டு சென்றதிலிருந்து, கிண்டி பார்க்கில் அவனை விட மூத்த பிகரை ப்ரபோஸ் செய்தது வரை கதை கதையாக சொல்லுவான். அவன் சொல்லும் கதைகள் உண்மைதான் என்று அவனுக்கு வரும் டெலிபோன் பேச்சுகள் வாயிலாக அறிந்திருந்தோம்.

அவனுக்கு வரும் டெலிபோன் அழைப்புகள் எல்லாமே ஒரே ரகம் தான். "கிருஷ்ணன் இருக்காரா?" என்று தேனை குழைத்து கேட்பாள்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குரல். ஒருநாள் கல்லூரி மாணவி பேசினாள் என்றால், மறுநாள் எக்ஸ்போர்ட் பிகர் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் பணிபுரியும் பிகர்) பேசுவாள். வெரைட்டி வெரைட்டியாக கேர்ள் பிரண்ட்ஸ் வைத்திருந்தான் கிருஷ்ணன். அய்யோ சொக்கா.. சொக்கா... எங்களுக்கெல்லாம் ஒண்ணுகூட அப்போ அமையலே.

ஒருவிஷயத்தில் கிருஷ்ணன் உத்தமன். ஏகப்பட்ட பெண்களுடன் நட்பு, காதல் என்றிருந்தாலும் எல்லாமே வெஜிட்டேரியன் அளவிலேயே இருந்தது. அதிகபட்சமாக சில பெண்களிடம் லிப் டூ லிப் கிஸ் மட்டும் வாங்கியிருக்கிறானாம். அவனே சொன்னான். நம்பித்தான் தொலைக்கவேண்டும்.

மச்சானுக்கு டவுசர் கிழிந்தது கல்பனா விவகாரத்தில் மட்டும் தான். எல்டாம்ஸ் சாலையில் எங்கள் அலுவலகம் அப்போது. ஒருநாள் யதேச்சையாக மாடியில் நின்று ஸ்டைலாக தம்மடித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் தடதடவென்று இறங்கி ஓடினான். மீண்டும் தபதபவென்று மேலே ஏறிவந்தான். லைட்டாக பவுடர் போட்டு தலைசீவி மீண்டும் ஓடினான். அந்த வாரம் முழுக்க "ரன் லோலா ரன்" மாதிரி கிருஷ்ணன் ஓடிக்கொண்டே இருந்தான். அப்புறம் சில மாதங்கள் கழித்து அவன் ஓட்டம் நின்றது.

பிறகு ஒருநாள் வேலுமிலிட்டரி ஒயின்ஷாப்பில் தான் கண்களில் நீர்பனிக்க அந்த ரகசியத்தை உடைத்தான். கல்பனா என்ற பிகரை கண்டவுடனேயே காதல்வசப்பட்டு எவ்வளவோ திருவிளையாடல்களை நிகழ்த்தியும் அவள் புறக்கணித்து விட்டாளாம். முதன்முறையாக ஒரு பெண்ணால் புறக்கணிக்கப்பட்ட வேதனை அவன் வார்த்தைகளில் தெரிந்தது.

காலச்சக்கரம் உருண்டு தொலைத்தது. அந்த அலுவலகம் எதிர்பாராத வகையில் இழுத்து மூடப்பட்டதால் திசைக்கு ஒன்றாக பறந்தோம். கிருஷ்ணனையும், அவனது பிகர்களையும், பீர் அடித்துவிட்டு அவன் செய்த அலம்பல்களையும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து ஒரு கட்டத்தில் முழுக்க கிருஷ்ணனையே மறந்துவிட்டேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒருநாள் நான் வேலைபார்க்கும் துணிக்கடைக்கு கிருஷ்ணன் வந்தான். புதியதாக பைக் வாங்கியிருக்கிறான். முன்பெல்லாம் டிவிஎஸ் சேம்ப் இல்லையென்றால் ஒரு ஓட்டை சில்வர் ப்ளஸ்ஸில் வருவான். பீர் புண்ணியத்தால் கொஞ்சமாக சதை போட்டிருந்தது. ஒட்டிப்போயிருந்த அவன் கன்னம் கொஞ்சம் பூசினாற்போல தெரிந்தது.

"எனக்கு கல்யாணம்டா மச்சான்!" மகிழ்ச்சியோடு சொன்னான்.

"ரொம்ப சந்தோஷம் கிருஷ்ணன். லவ் மேராஜா? ரிஜிஸ்ட்ரார் ஆபிஸ்லே சைன் பண்ணனுமா?"

"இல்லேடா. அரேஞ்ச்டு மேரேஜ் தான்"

ஆச்சரியமாக இருந்தது. கடைசியாக அவன் லவ்விக்கொண்டிருந்த விஜியையும் கழட்டி விட்டுவிட்டான் போலிருக்கிறது.

"விஜிக்கு என்னடா ஆச்சி?"

"அவளுக்கு கல்யாணம் ஆயி ஒரு குழந்தை இருக்குடா!"

பரஸ்பர விசாரிப்புகள், புதிய வேலை, பழைய நினைவுகள் பற்றிய பேச்சுகள் முடிந்ததும் பத்திரிகையை கையில் திணித்து விடைபெற்றான். அவன் கல்யாணத்துக்கு போகமுடியவில்லை. தொலைபேசியில் மட்டும் வாழ்த்து தெரிவித்தேன்.

சிலமாதங்களுக்கு முன்பு சைதாப்பேட்டை சிக்னலில் கிருஷ்ணனை பார்த்தேன். ரொம்ப அடக்க ஒடுக்கமாக பைக்கில் உட்கார்ந்திருந்தான். பில்லியனில் கொஞ்சம் ஒல்லியாக இருந்தது அவன் மனைவியாக இருக்கும். முகமெங்கும் மஞ்சள் பூசியிருந்தாள். கிருஷ்ணனின் மனைவியை பார்த்ததுமே புரிந்தது. வெள்ளிக்கிழமை தோறும் கோயிலுக்கு போகக்கூடிய பெண், ராமநாராயணன் படங்களில் வருவது போல அம்மன் பக்தையென்று.

கிருஷ்ணனுக்கு கை காட்டினேன். பார்த்து வெறுமனே ஒரு வெற்றுச் சிரிப்பு சிரித்து "நல்லாயிருக்கியாடா?" என்று கேட்டான். அதற்குள் சிக்னல் விழுந்துவிட அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கிருஷ்ணனின் மனைவி என் குறித்து ஏதோ கேட்டிருக்க வேண்டும். என்னை லேசாக திரும்பிப் பார்த்து சினேகமாக சிரித்துவிட்டு ஏதோ சொல்லிக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டு சென்றான்.

சென்றவாரம் கிருஷ்ணனை தி.நகரில் பார்த்தேன்.

"நல்லாயிருக்கியாடா. அவசரமா கெளம்பணும்" என்றான்.

"ஏண்டா பேசக்கூட நேரமில்லையா உனக்கு"

"நீ வேற டைம் இப்பவே 9 ஆவுது. 10 மணிக்கு மேல போனா ராட்சஸி வீட்டை ரெண்டாக்கிடுவா!"

"இரு மாப்பிள்ளை. ஒரு பீராவது அடிச்சிட்டு போலாம்"

"பீரா? மச்சான் சொன்னா நம்பமாட்டே இப்பவெல்லாம் தம்மு கூட மாசத்துக்கு ஒண்ணு தான் அடிக்கிறேன்"

"நெஜமாவா? அப்புறம் விஜி, அனுவெல்லாம் எப்படிடா இருக்காங்க?"

"அவங்களையெல்லாம் நினைக்கிறதே இல்லடா. எந்தப் பொண்ணையும் இப்போவெல்லாம் தலைநிமிர்ந்து கூட பாக்குறதில்லே"

"அடப்பாவி.. இவ்வளவு சீக்கிரம் நல்லவனாயிட்டியே? எப்படிடா?"

"ம்ம்ம்... ஒரு கல்யாணத்தை பண்ணிப்பாரு புரியும்" அவசரமாக கையில் ஏதோ பையை எடுத்துக் கொண்டு ஓடினான். பொண்டாட்டிக்கு புடவை வாங்கியிருப்பான் போலிருக்கிறது.

"இவனுக்கு தேவைதான்!" மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

19 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன்!


முழுமையாக வந்திருக்கும் முதல் தமிழ் படம்.

இத்தனைக்கும் தமிழில் வெற்றிப்படத்துக்குரிய கட்டாய அம்சங்களான ஹீரோயின், டூயட், குத்துப்பாட்டு, இத்யாதி.. இத்யாதி மசாலா சமாச்சாரங்கள் அறவே இல்லை. ’இருவர்’ படத்துக்குப் பிறகு மோகன்லால் தமிழில் ஹீரோவாக நடித்திருக்கிறார். டைட்டில் ரோல் கமலுக்குதான் என்றாலும் திரையின் பெரும்பாலான காட்சிகளை மோகன்லால் ஆக்கிரமித்துக் கொள்கிறார். மோகன்லாலின் பார்வையிலேயே படம் தொடங்குகிறது, முடிகிறது. ஆச்சரியகரமாக கமல் செகண்ட் ஹீரோவாக சொந்த தயாரிப்பில் நடித்திருக்கிறார். மோகன்லாலும், கமலும் அட்டகாசமாக நடித்திருக்கிறார் என்று சொன்னால், அது க்ளிஷேவாகி விடும். இருவருக்கும் ஒரே ஒரு கம்பைண்ட் ஷாட் மட்டுமே. கமல் உட்கார்ந்த இடத்திலிருந்தே நடிப்பின் நவரசங்களையும் கொட்டுகிறார். மோகன்லால் கம்பீரமான பாடி லேங்குவேஜ், கம்பீர நடை மூலம் அசத்துகிறார்.

கமல்ஹாசனின் கதாபாத்திரம் இந்துவா, முஸ்லிமா, கிறிஸ்துவனா என்பதை தெளிவாக சித்தரிக்காமல், படம் பார்க்கும் ரசிகனை யூகிக்க சொல்லுவது நல்ல புத்திசாலித்தனம். தாடி வைத்திருக்கிறார். வைணவர்களும் இதேபோல தாடி வளர்ப்பார்கள், இஸ்லாமியரும் தாடி வளர்ப்பார்கள். மதிய உணவுக்கு தயிர்ச்சாதம் சாப்பிடுவதைப் போல காட்டாமல், சாண்ட்விச் சாப்பிடுவதைப் போல காட்டியிருப்பது அருமையான குழப்பல். ஒரு பாங்கில் குமாஸ்தாவாகவோ, அரசு அலுவலகத்தில் அதிகாரியாகவோ கமலை உருவகப்படுத்திக் கொள்ள வைக்கும் இண்டலிஜெண்ட் காமன் மேன் பாத்திரத்துக்கு அச்சு அசலாக பொருந்துகிறது லேசான தொந்தியுடைய கமலின் தோற்றம்.

ஆங்கிலப்படங்களைப் போல ஒண்ணேமுக்கால் மணி நேரத்தில் தமிழில் படமெடுக்கவே முடியாது என்ற நிலையை வெற்றிகரமாக தகர்த்திருக்கிறார்கள். இந்திப் படத்தின் ரீமேக் தானே என்று சொன்னாலும், இதைக்கூட தமிழில் கமல்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ‘ரோஜா’ ரஹ்மானுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளக் கூடிய அறிமுக இசையமைப்பாளர் என்று ஆடியோ வந்ததுமே பலர் பேசினார்கள், எழுதினார்கள், மெச்சினார்கள். இந்த கூற்று நூறு சதவிகிதம் உண்மை என்று படம் பார்த்தபின் நம்பமுடிகிறது. தந்தை வழியில் சகலகலாவல்லியாக பரிணமித்திருக்கும் ஸ்ருதிஹாசனை இருகை தட்டி வரவேற்கலாம்.

படத்தில் இடம்பெறும் கமிஷனர் ஆபிஸ் கலை இயக்குனரால் உருவாக்கப்பட்டதாம். அட்டகாசம். சுஜாதா + கிரேஸி = இரா.முருகன். தமிழுக்கு வெற்றிகரமான வசனகர்த்தா ரெடி. அடுத்து ஷங்கர் எப்படியும் கூப்பிடுவார். தயாராக இருங்க முருகன் சார். இரா.முருகனை கமலுக்கு அறிமுகப்படுத்தியது எல்லே ராமா, கிரேஸி மோகனா என்று ஒரு விவாதம் இட்லிவடையில் ஓடிக்கொண்டிருக்கிறது. யார் அறிமுகப்படுத்தியிருந்தாலும் எந்தரோமாகானுபவலுக்கு நமஸ்காரம்.

தலைமைச் செயலாளராக லஷ்மி. சுவாரஸ்யம். முதல்வர் வீட்டு வாசலில் வியர்த்து, விறுவிறுக்க காத்திருப்பதும், முதல்வரோடு தொலைபேசியில் பவ்யம் காட்டுவதும், அடுத்த நொடியே கமிஷனர் மோகன்லாலிடம் தனது அதிகாரத்தை செலுத்த நினைப்பதும் என்று சரவெடியாய் வெடித்திருக்கிறார். முதல்வரையும் ஒரு கதாபாத்திரமாக இணைத்திருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. “எல்லாத்தையும் நீங்களே ஹேண்டில் பண்ணுங்கம்மா!”, “எதிர்க்கட்சிக்காரன் அறிக்கை விட்டுடப் போறான்!” போன்ற வசனங்கள், முதல்வர் மீதான அப்பட்டமான அவதானிப்பு.

தமிழின் மிகச்சிறந்த படங்கள் வரிசையில் இடம்பெறும் இப்படத்திலும் ஒரு விஷயம் நெருஞ்சிமுள்ளாக குத்துகிறது. இது அப்பட்டமான இந்துத்துவா படம். வசனகர்த்தாவை வைத்து சமன் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். ஆட்சியாளர், மோடியாக இருந்தாலும் சரி, கலைஞராக இருந்தாலும் சரி. மதக்கலவரங்களின் போது வேட்டையாடப்படுவது இஸ்லாமியர்களாகவே இருக்கிறார்கள். தீவிரவாதம் என்றாலே இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அதிகாரத்தையும் கைப்பற்றிவிட்ட இந்து தீவிரவாதத்தைப் பற்றிய விவாதங்கள் இங்கே கம்யூனிஸ்ட்கள் போன்ற சிறுபான்மையானவர்களாக மட்டுமே முன்னெடுக்கப் படுகிறது. கமல்ஹாசனும் பொதுப்புத்தி அடிப்படையில் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வேரறுக்க ஷங்கரின் கதாநாயகர்கள் பாணியில் கிளம்பியிருக்கிறார். பெஸ்ட் பேக்கரி, குஜராத் கலவரம் என்று கமல் வசனம் பேசி, பேலன்ஸ் செய்ய முற்பட்டாலும், படம் பார்க்கும் ஒவ்வொருவனுக்கும் படம் முடியும்போது இஸ்லாமிய வெறுப்பு மண்டிவிடும் என்பது நிதர்சனம். நான்கு தீவிரவாதிகளில் ஒருவன் இந்து, அதுவும் பணத்துக்காகதான் தீவிரவாதிகளுக்கு உதவுகிறான் என்று சித்தரித்திருப்பது சுத்த அயோக்கியத்தனம். என்னவோ இந்துக்கள் மத அபிமான தீவிரவாதிகளாக இல்லாததைப் போல காட்டும் முயற்சி. கமல்ஹாசன் தீவிரவாதத்தை நிஜமாகவே எதிர்க்க கிளம்பினால், இந்தியாவில் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆணிவேராக விளங்கும் இந்து தீவிரவாதம் குறித்து முதலில் அலாரம் அடித்திருக்க வேண்டும்.

கமலின் திரையுலக வரலாற்றில் அவருக்கு ஏராளமான மைல்கற்கள் உண்டு. இப்படம் இன்னுமொரு மைல்கல்.

உன்னைப்போல் ஒருவன் - தமிழ் சினிமாவின் முதல்வன்!

17 செப்டம்பர், 2009

தென்கச்சி!


சில மாதங்களுக்கு முன்பாக பத்திரிகையாளரான தோழர் ஆரா என்னைத் தொடர்பு கொண்டார்.

“ஜூ.வி.யில் மடிப்பாக்கம் ரவுண்டப் பண்ணப் போறோம். அந்தப் பகுதியில் வசிக்கும் விஐபிங்க யாருன்னு சொல்லமுடியுமா?”

அனிச்சையாக சொன்னேன். “தென்கச்சி கோ.சாமிநாதன்”

”அவருகிட்டே ஏற்கனவே பேசிட்டோம் பாஸ். மொத்தமா எழுதியே கொடுத்துட்டாரு. கட்டுரையோட டைட்டில் என்ன தெரியுமா? மழைப்பாக்கம்!”

மடிப்பாக்கத்துக்கும், மழைக்கும் என்ன சம்பந்தமென்று சென்னை வாசிகளுக்கு தெரியும். ஆனாலும் ‘மழைப்பாக்கம்’ என்ற டைட்டிலை இதுவரை யாரும் சிந்தித்தது கூட இல்லை. இந்த டைமிங்-கம்-ஹ்யூமர் சென்ஸ் தான் தென்கச்சி.

’இன்று ஒரு தகவல்’ மூலம் பிரபலமானவர் என்று சொல்லுவது மடிப்பாக்கத்திலும் வெள்ளம் வந்தது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. வானொலியை தெரிந்த யாருக்குமே தென்கச்சியை தெரியாமல் இருக்கவே முடியாது. 70களின் இறுதியில் அவர் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தபோது நடத்திய ஒரு நிகழ்ச்சியே பிற்பாடு சென்னை தூர்தர்ஷனில் கொஞ்சம் மாற்றப்பட்டு ‘வயலும், வாழ்வும்’ என மலர்ந்தது என்பார்கள். கான்செப்ட்களில் செம ஸ்ட்ராங்க் நம்ம தென்கச்சி.

மடிப்பாக்கத்தில் ஒரு நூலகம் கூட இப்போது இல்லையே என்று வருந்திக் கொண்டிருந்தார். தன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் “இவ்வளவு ஆயிரம் பேர் வசிக்கிற ஒரு ஊரிலே ஒரு லைப்ரரி கூட இல்லையே?” என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்.

நூலக எழுச்சி ஆண்டாக இவ்வாண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மடிப்பாக்கத்தில் விரைவில் மாவட்டக் கிளை நூலகம் அமைக்கப்படப் போகிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நூல்களை வாசிக்க தென்கச்சிதான் இருக்க மாட்டார்.

மடிப்பாக்கம் மவுனமாக அழுதுக் கொண்டிருக்கிறது!

12 செப்டம்பர், 2009

தேனீயார்!


ஸ் ஸ்டேண்ட் பக்கம் வந்து பல ஆண்டுகளாகிறது. வண்டி தற்காலிகமாக மண்டையைப் போட்டதால் இன்று ஆபிஸுக்கு பஸ் சர்வீஸ்தான். மூச்சிரைக்க எட்டரை மணிக்கு நடந்து வந்து சேர்ந்தேன். செப்டம்பர் மாதம் கூட காலையிலேயே வெயில் மண்டையைக் கொளுத்துகிறது. குளோபல் வார்மிங். ஸ்டேண்டில் நின்றிருந்த பஸ் ஒன்று காலியாக இருந்தது. ஆட்சி அருமையாக நடக்கிறது. இப்போதெல்லாம் எத்தனை சொகுசு பஸ்?

வசதியாக ஜன்னலோர சீட் ஒன்றில் அமர்ந்ததும் கையோடு வைத்திருந்த குமுதம் ரிப்போர்ட்டரை பிரித்தேன். மெதுவாக ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பினேன். எதிரே பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருந்த ப்ளெக்ஸ் போர்ட் ஒன்று கவனத்தை கவர்ந்தது. நாய்ச்சங்கிலி கனத்தில் பத்து சவரன் கழுத்துச் சங்கிலி, பட்டையாய் கையில் பிரேஸ்லேட், தாமரைக்கனி பாணியில் துணைமுதல்வர் படம் போட்ட அதிரசம் சைஸ் மோதிரம் என்று சர்வபூஷித அலங்காரத்தோடு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தவரை எங்கேயோ பார்த்த நினைவு.

பட்டையாக எழுதப்பட்டிருந்த வாசகத்தை கண்டதுமே நினைவு வந்துவிட்டது. “ஒன்றிய பிரதிநிதியாக தேனீயாரை நியமித்த தலைவருக்கு வாழ்த்துகள்”. ஆஹா தேனீயாரா? அசத்துறாங்களே? அதுவும் ஒன்றியப் பிரதிநிதி போஸ்டிங்? கட்சியின் ஜனநாயக மாண்பே மாண்பு!

நினைவுச்சக்கரம் மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்பாக சுழலத் தொடங்கியது. தேனீ டீ ஸ்டால். அப்போதெல்லாம் வேலை வெட்டி இல்லாத வெட்டி ஆபிஸர்களின் வேடந்தாங்கல். ஒரு கோல்ட் பில்டரை பற்றவைத்துக் கொண்டு, சிங்கிள் டீயை ஆர்டர் செய்துவிட்டு, நாள் முழுக்க ஃபேன் காற்றில் உட்கார்ந்து தினத்தந்தி படிக்கலாம். அரசியல் பேசலாம். வசூல் மன்னன் விஜய்யா? அஜீத்தா? என்று சினிமாவை விவாதிக்கலாம்.

யாராவது ஆளிருந்தாலும் சரி, ஆளில்லா விட்டாலும் சரி. ‘சர்ர்ர்’ரென்ற சவுண்டோடு, டீ போடுவதற்கென்றே பிறப்பெடுத்தவர் மாதிரி டீ ஆற்றிக் கொண்டிருப்பார் தேனீ ராமசாமி. ரொம்ப நேரம் ஆற்றிய டீக்கு கஸ்டமர் வரவில்லை என்றால் அவரே குடித்து விடுவார்.

“மச்சான் எலெக்‌ஷன் வரப்போவுதுடா, சிட்டிங்குக்கு சீட் கிடைக்குமா?”

“கிடைக்கும் மாதிரி தெரியலை மாமு. இந்த வாட்டி குன்றத்தூர் பார்ட்டிக்கு லக்கு இருக்குன்னு நெனைக்கிறேன். முழுக்க இளைஞர்களுக்கு வாய்ப்புன்னு தலைவர் சொல்லியிருக்காரே?”

“புது ஆளு வந்தா நல்லதுதான்யா. பழைய பெருசுங்க எல்லாம் எலெக்‌ஷன் வந்தா மட்டும் வந்து வேலை வாங்குறானுங்க. மத்த டைமுலே கலெக்‌ஷனுலே பிஸி ஆயிடுறானுங்க!”

இந்த மாதிரியாக விவாதங்கள் நடக்கும். சில நேரங்களிலும் ராமசாமியும் விவாதத்தில் கலந்து கொள்வார்.

“அப்போன்னா சிட்டிங்குக்கு பவர் இனிமே இல்லைன்னு சொல்லுங்கண்ணே!” – ‘சர்ர்ர்’ரென்று டீ ஆற்றியபடியே.

“யோவ் ராமு உனக்கெதுக்குய்யா கேடுகெட்ட அரசியலு எல்லாம். கடையை திறந்தமா? பொழைப்பை பார்த்தோமானு இல்லாம...”

ஜமாவில் இருந்து யாராவது நோஸ்கட் செய்வார்கள். ராமுவின் முகம் தொங்கிப் போகும். பாவமாக இருக்கும். அரசியல் என்றில்லை, வேறு எது பேசினாலும் ராமு ஆவலாக கலந்துகொள்ள வருவார். ஏனோ தெரியவில்லை. அவரை எனக்குத் தெரிந்தவரை யாரும் செட்டில் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்ததேயில்லை.

விடிகாலை மூன்றரை நாலு மணிக்கு கடையைத் திறந்து சுப்ரபாதம் போடுவார். நாள் முழுக்க டீ ஆற்றுவது. இரவு பத்து மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டுக்குப் போய்விடுவார். வாரவிடுமுறை எதுவும் கிடையாது. ஊரிலிருந்து அழைத்துவந்த ஒரே ஒரு பையன் மட்டும் ராமுவுக்கு துணை. மாதவன் கன்ஸ்ட்ரக்‌ஷனுக்கும், பார்பி பேன்ஸி ஸ்டோருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு முறை டீ எடுத்துச் சென்று சப்ளை செய்வது அந்தப் பையனின் வேலை.

செக்குமாடு மாதிரியான வாழ்க்கை ராமுவுடையது. அவருக்கு தோராயமாக முப்பத்தைந்து வயது இருந்திருக்கலாம். “என்ன வயசுண்ணே ஆவுது?” என்று கேட்டால் சொல்லத் தெரியாது. எழுதப் படிக்கவும் தெரியாது. அவருக்குத் தெரிந்த ஒரே வேலை டீ போடுவது.

பிற்பாடு ராமுவை தெரிந்த ஒருவரிடம் பேசியபோது ‘பகீர்’ தகவல்கள் நிறைய கிடைத்தன.

பாட்ஷா ரஜினி மாதிரி ராமுவுக்கும் பிளாஷ்பேக் இருந்திருக்கும் என்று நாங்கள் யாருமே நினைத்துப் பார்த்ததில்லை. பதிமூன்று வயதில் தேனீயில் சின்னம்மாவால் அடித்துத் துரத்தப்பட்ட ராமு செங்கல்பட்டில் சில டீக்கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். கடின உழைப்புக்குப் பிறகு டீமாஸ்டராக பதவி உயர்வு. அடுத்த சில வருடங்களில் செங்கல்பட்டு பைபாஸ் ரோட்டில், ரோடு ஓரமாக சின்ன அளவில் டீக்கடையை சொந்தமாக திறந்திருக்கிறார்.

இந்த நேரத்தில் ராமுவுக்கு திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. ராமு இல்லாத நேரத்தில் டீக்கடைக்கு வந்த ரவுடி ஒருவன் ராமுவின் மனைவியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்திருக்கிறான். விஷயத்தை கேள்விப்பட்ட ராமு அருவாளை எடுத்து ரவுடியின் கழுத்தில் ஒரே ‘சர்ர்ர்ர்ரரக்’.

கேஸ் செங்கல்பட்டு கோர்ட்டில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறதாம். ராமுவின் இந்த கொலைவெறி பிளாஷ்பேக்கை கேட்டதில் இருந்து அவரிடம் கொஞ்சம் உஷாராகவே நடந்துகொண்டோம். முன்புபோல யாரும் நோஸ்கட் விட்டு விடுவதில்லை.

அரசியல், இளைய தளபதி ரசிகர் மன்றம் என்றெல்லாம் சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று ஒருநாள் பள்ளிக்கரணை பனைமரத்தடி ஒன்றில் திடீர் ஞானம் பிறந்தது. எல்லா கந்தாயங்களையும் விட்டு ஒழித்து வேலை வெட்டி, குடும்பம் குட்டி என்று பிஸியாகிவிட்டோம். தேனீ டீ ஸ்டால் புதிய தலைமுறை வெட்டி ஆபிஸர்களால் நிறைய ஆரம்பித்தது.

இந்த கட்டத்தில் ராமு வேறு சில பிஸினஸ்களிலும் புகுந்து கலக்கி வந்ததாக கேள்விப்பட்டோம். ரியல் எஸ்டேட் தொழில் மடிப்பாக்கத்தில் கொடிகட்டிப் பறந்த காலம் அது. டீக்கடைக்கு வரும் யாராவது ஆட்கள் ‘வேங்கைவாசல்லே மொத்தமா 10 கிரவுண்டு கஸ்டமர் கிட்டே இருக்குண்ணே. ரெண்டரை ‘சி’க்கு பார்ட்டி கிடைச்சா முடிச்சிடலாம்’ என்று பேசிக்கொண்டிருப்பார்கள். வழக்கம்போல அவர்கள் பேச்சை ராமு செவிமடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்து வரும் கஸ்டமர்கள் யாராவது ‘மேடவாக்கம் தாண்டி மொத்தமா பத்து கிரவுண்டு கிடைச்சா நல்லாருக்கும்’ என்று பேசிக்கொள்வார்கள். இரண்டு பார்ட்டிகளையும் இணைக்கும் பாலமாக ராமு செயல்பட்டார். அடுத்தடுத்து தடாலடியாக ஏழெட்டு ‘சி’ பிஸினஸ்களை முடித்துக் கொடுத்ததுமே டீக்கடையை மூடிவிட்டார்.

‘தேனீ டீ ஸ்டால்’ சடக்கென்று ஒரு நாள் ‘தேனீ ரியல் எஸ்டேட்’ ஆக மாற்றம் பெற்றது. கண்ணாடிக் கதவெல்லாம் போட்டு, கூலிங் பேப்பர்கள் ஒட்டி கடையின் தன்மையே கார்ப்பரேட் ஆகிவிட்டது. ராமுவும் லுங்கியெல்லாம் கட்டுவதில்லை. டீசண்டாக கருப்பு பேண்ட், வெள்ளைச்சட்டையில் ஹீரோ ஹோண்டாவில் வலம் வந்தார். கூடமாட ஒத்தாசைக்கு இருந்த பையனும் ஜீன்ஸ், டீசர்ட் என்று பரிமாணம் பெற்றான்.

நினைவுச்சக்கரம் நின்று விட்டது. இப்போது பஸ்ஸின் ஜன்னலோரச் சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதிரில் சில கடைகளில் ’எட்டாவது வள்ளலே!’ என்று விளித்து ஒட்டப்பட்டிருந்த கலர் போஸ்டர்களில் கூலிங் கிளாஸ் போட்டு தேனீயார் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதுவரை இந்த கதையை படித்துக் கொண்டிருப்பவர்களில் சிலர் தேனீயாரின் வளர்ச்சிக்காக மகிழ்ச்சி அடைந்திருக்கலாம். அல்லது ஆச்சரியம் அடைந்திருக்கலாம். கதையை எழுதும் நான் அதிர்ச்சி மட்டுமே அடைகிறேன். ஏனெனில் போஸ்டரில், ப்ளக்ஸ் போர்டிலும் இருக்கும் தேனீயார், ஒரிஜினல் தேனீயார் அல்ல. ஆமாம் ராமசாமி அல்ல. ராமசாமியிடம் எடுபிடியாக இருந்தானே ஒரு பயல், அவன்தான் –மன்னிக்கவும்- அவர்தான் இப்போதைய ஒன்றியப் பிரதிநிதி தேனீயார். இந்த எதிர்பாராத மாற்றம் எவ்விதம் நிகழ்ந்த்து, எந்தக் கணத்தில் நேர்ந்த்து என்பது பற்றிய தகவல்களை எல்லாம் இனிமேல் விசாரித்துதான் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, ஒரிஜினல் தேனீயார் என்ன செய்கிறார்?

தெரிந்தவர்களிடம் விசாரித்ததில் ரியல் எஸ்டேட் தொழிலில் குறுகிய காலத்தில் உச்சிக்கு வந்து, அதைவிட மிகக்குறுகிய காலத்திலேயே அதலபாதாளத்துக்கு வீழ்ந்து விட்டாராம். இப்போது பல்லாவரம்-பெருங்குடி ரேடியல் சாலை ஓரத்தில் டீக்கடை பழையமாதிரியே டீக்கடை நடத்துவதாக சொல்கிறார்கள். இன்னேரத்தில் அங்கும் நாலு பேர் பெஞ்சில் உட்கார்ந்து அரசியலோ, ரியல் எஸ்டேட்டோ, சினிமாவோ பேசிக்கொண்டிருக்க கூடும்.

11 செப்டம்பர், 2009

கடவுள்!


ரவணன் செல்லும் நூற்றி எட்டாவது நேர்முகத்தேர்வு இது. “ஆண்டவா இந்த வேலையாவது எனக்கு கிடைச்சா லஸ் கார்னர் பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைக்கிறேன்” மனதுக்குள் வேண்டியவாறு அந்த அதிகாரியின் அறைக்குள் நுழைந்தான்.

“வாங்க மிஸ்டர் சரவணன்! வாட்ஸ் யுவர் குவாலிஃபிகேஷன்?”

“ப்ளீஸ் ஹேவ் எ லுக் சார்” சான்றிதழ்களோடு இருந்த கோப்பினை நீட்டினான்.

கோப்பினைப் புரட்டியவாறே, “குட். ஸ்போர்ட்ஸ்லயும் நல்ல இண்ட்ரஸ்ட் இருக்கு போலிருக்கே!”

”யெஸ் சார். ஐ ப்ளேட் ஃபார் ஃபோர்த் டிவிஷன் ஆல்சோ!”

“ம்.. நீங்க ஒரு நல்ல கேண்டிடேட் தான். உங்களை கேள்வியெல்லாம் கேட்டு துன்புறுத்த விரும்பலை!”

பலமுறை கேட்ட வாசகம். என்ன சொல்ல வருகிறார் என்று சரவணனுக்கு புரிந்துவிட்டது.

“சாரி சரவணன். ஆஸ் யூஸ்வல் இதுவும் ஒரு கண்துடைப்பு இண்டர்வ்யூ தான். ஏற்கனவே ரெகமண்டேஷன்லே வந்தவங்களுக்குள்ளேயே போட்டி நிறைய இருக்கு!” அதிகாரியின் கண்களில் தென்பட்டது நேர்மையா? பரிதாபமா? என்று சரவணனால் கண்டுபிடிக்க இயலவில்லை.

கோப்பினை வாங்கியவன் எதுவும் சொல்லாமல் புறப்பட்டான். இன்று காலை கையில் இருந்தது ஐம்பது ரூபாய் தான். இண்டர்வியூவுக்கு தாமதமாகி விட்டது என்று பஸ்ஸில் வராமல் ஆட்டோவில் வந்திருந்தான். பாக்கி பத்து ரூபாய் தான் பாக்கெட்டில் இருந்தது. ஊரில் இருந்து மணியார்டர் வந்திருந்தால் இன்று இரவு தண்ணி அடிக்க வேண்டும்.

களைப்பு தெரியக்கூடாது என்பதற்காக ஒரு வில்ஸ் ஃபில்டர் வாங்கி நெருப்பை பற்ற வைத்தான். இரண்டு சாந்தி பாக்கு வாங்கி, ஒன்றை பிரித்து வாயில் கொட்டி நடக்கத் தொடங்கினான். நந்தனத்தில் இருந்து திருவல்லிக்கேணி மேன்ஷன் வரை பாதயாத்திரை.

நல்லவேளையாக அப்பா மணியார்டர் அனுப்பி இருந்தார். ஆயிரத்து எட்டுநூறு ரூபாய். மேன்ஷனுக்கு அறுநூறு ரூபாய் காட்டியவன் மீதி ஆயிரத்து இருநூறு ரூபாயை பர்சில் வைத்தான். இன்னும் பதினைந்து, இருபது நாட்களுக்கு பிரச்சினையில்லை. அறை சாவியை வாங்கிக் கொண்டான். அறை எண் 786.

மது மட்டும் இல்லையென்றால் எப்போதோ அவன் மனநல காப்பகத்துக்கு சென்றிருப்பான். அன்று இரவு அவனுக்கு மதுவே துணை. ஒரு ஹாஃப் வாங்கியவன், அதில் பாதியை தண்ணீர் கூட கலக்காமல் ராவாகவே அடித்தான். லேட் பிக்கப்பாக போதை ஏறியது.

போதை ஏறியவுடன் வழக்கம்போல மொட்டை மாடிக்கு வந்தான். வானத்தைப் பார்த்தான். “டேய் கடவுளே! என்னை ஏண்டா படைச்சே?”

வானம் மவுனத்தையே பதிலாக தந்தது.

“த்தா... பாடு.. மரத்தை வெச்சவன் தண்ணிய ஊத்துவான்னு சொல்றது ரீலாடா? தண்ணி ஊத்துலன்னா கூட பராயில்ல.. ஆசிட் ஊத்துறியேடா கேணைப்பு....”

சரவணனுக்கு கடவுள் ரொம்ப நெருக்கமானவர். போதை ஏறியவுடன் தெரிந்த கெட்டவார்த்தைகளை எல்லாம் சொல்லி திட்டுவது வழக்கம். கடவுளை தவிர வேறு யாரையும் இதுவரை சரவணன் கெட்டவார்த்தைகளில் திட்டியதில்லை. இவனது இந்த வழக்கத்தை கடவுள் ஐந்தாண்டுகளாக பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்? காலையில் கண்டிப்பாக தெருமுனை பிள்ளையார் கோயிலுக்கு வந்துவிடுவான் என்று அவருக்கும் தெரியும். அப்படியே லூஸ்ல விட்டுவிடுவார்.


பாலைவனத்தில் தண்ணீருக்காக அலைபவன், தூரத்தில் ஏதாவது சோலைவனம் தெரிந்தால் குஷியாகிவிட மாட்டானா? சரவணனுக்கு அதுபோல தெரிந்தவள் சந்தியா. வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் இருபத்தாறு வயது சரவணனுக்கு அந்த வயதுக்கேயுரிய இளமை எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும்.

வேலை வெட்டிக்கு செல்பவனெல்லாம் சரியாக நேரத்துக்கு செல்வானோ இல்லையோ? தினமும் காலை எட்டரை மணிக்கு பேருந்து நிலையத்தில் சரவணனை டிப்டாப்பாக காணலாம். காரணம் சந்தியா.

அவளுக்கு இருபத்து மூன்று வயதிருக்கலாம். கண்கள் எப்போதும் பட்டாம்பூச்சியின் இறக்கையை போல படபடத்துக் கொண்டிருக்கும். சிகப்பு நிறம், வாளிப்பான தோற்றம். டிசைனர் புடவைகளில் தினுசு, தினுசாக கட்டிக்கொண்டு வருவாள். எங்கேயோ பணியாற்றுகிறாள் போலிருக்கிறது. அவள் பெயர் சந்தியா என்பதைத் தவிர்த்து சரவணனுக்கு வேறு விவரங்கள் தெரியாது. ஆறுமாதமாக காதலிக்கிறான்.

அன்று ஏனோ அவளிடம் தன் உள்ளத்தை திறந்துகாட்ட நினைத்தான் சரவணன்.

“ம்ம்ம்... மிஸ்...”

ஏறிட்டு நோக்கினாள். ஸ்டைலாக வாயைத் திறக்காமலேயே புருவங்களை தூக்கி என்னவென்று வினவினாள்.

“எம் பேரு சரவணன்... ஆறு மாசமா..”

“ஆறு மாசமா..?”

“வந்து... உங்களை லவ் பண்ணுறேன்!”

சுற்றும் முற்றும் பார்த்தாள். பஸ் ஸ்டேண்டிலிருந்தவர்களுக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகள். இவர்களை கவனிக்கும் ஆர்வம் யாருக்குமில்லை.

தன்னை ஒருவன் காதலிக்கிறான் என்ற விஷயம் அவளுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், காதலிக்கும் பையன் டொக்காக இருப்பது அவளுக்கு எரிச்சலைத் தந்தது.

“ராஸ்கல்.. உன் மூஞ்சிய கண்ணாடியிலே பார்த்திருக்கியா?”

“ஃபேஸ் கொஞ்சம் டம்மியா இருந்தாலும், என்னோட ஃஹார்ட் ஃபுல்லா நீங்களும், ரொமான்ஸும் தான் இருக்கு!”

“கொண்டு போய் குப்பைத் தொட்டியிலே போடு. ஒரு குரங்கை லவ் பண்ற அளவுக்கு நான் ஒண்ணும் பைத்தியமில்லே!” இவ்வளவு கடுமையாக தன் காதலை மறுப்பாள் என்று சரவணன் எதிர்பார்க்கவில்லை. கண்களில் நீர் முட்ட ஆரம்பித்தது. அழுதுவிட்டால் அசிங்கமாக நினைத்துவிடுவாளோ என்று அவசர அவசரமாக கர்ச்சீப் எடுத்து துடைத்தான்.

அன்றைய இரவும் அவனுக்கு மது தான் துணை. போதை ஏறியவுடன் மொட்டை மாடிக்கு சென்றான்.

“டேய் முட்டாக்...... கடவுளே! என்னை ஏண்டா சுமாரா படைச்சே?” வானத்தைப் பார்த்து கடவுளோடு வழக்கமாகப் பேசினான். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை. சுமார் அரைமணி நேரமாவது கடவுளை திட்டி இருப்பான். திட்டி முடித்தவன் அழுதபடியே தூங்கிப் போனான்.


ரண்டு இரவுகளாக வயிற்றில் ஈரத்துணியை போட்டு உறங்கவேண்டிய நிலை சரவணனுக்கு. ரூம் வாடகை தரவேண்டும், இன்னும் இரண்டு நாட்களில் செட்டில் செய்யாவிட்டால் பொட்டி, படுக்கையை தூக்கி எறிந்துவிடுவேன் என்று மேன்ஷன் மேனேஜர் மிரட்டிவிட்டு போனார். மேன்ஷனுக்கு கீழிருந்த பொட்டிக்கடைக்காரனுக்கு தரவேண்டிய பாக்கி எகிறிக்கொண்டிருந்தது, பழைய பாக்கி இல்லாமல் சிகரெட் தரமுடியாது என்று கைவிரித்து விட்டான்.

அப்பாவிடமிருந்து வரவேண்டிய மணியார்டர் ஏன் தாமதமாகிறது என்று அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. ஊரில் போன் என்ற ஒரு வஸ்துவே இல்லை. எனவே போன் செய்து அப்பாவிடம் பேசமுடியாது. அவராக டவுனுக்கு எப்போதாவது வந்தால் மேன்ஷனுக்கு போன் செய்வார். அந்த நேரத்தில் அறையில் இருந்தால் அவரிடம் பேசமுடியும்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் அப்பாவின் மணியார்டரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதோ என்ற விரக்தி ஏற்பட்டது. பணம் சம்பாதிக்க ஒரு வேலை இல்லை, காதலிக்க ஒரு பெண் இல்லை. என்ன வாழ்க்கை இது?

உச்சிவெயிலில் மொட்டைமாடிக்கு சென்றான். எப்போதும் போதை ஏறினால் (போதை ஏத்திக்க ஏது காசு?) மட்டுமே கடவுளை திட்டுபவன் அன்று ஆத்திரத்தில் அறிவிழந்து திட்ட ஆரம்பித்தான். “அடேய் பொறம்போக்கூ கடவுளே!” உச்சஸ்தாயியில் அவன் கத்தியது அவனுக்கே எதிரொலித்தது. நூற்றிபத்தை சென்னை வெயில் தொட்டு விட்டதால் அக்கம் பக்கத்தில் ஆளரவம் இல்லை. அவனவன் ஏசி ரூமில் அடங்கிக்கிடப்பான் போலிருக்கிறது. வழக்கம்போல வானம் மவுனத்தையே பதிலாக தந்து கொண்டிருந்தது. எதிர்தரப்பு மவுனம் தந்த தெம்பிலோ என்னவோ அன்று அரைமணி நேரம் காட்டுக்கத்தலாக கடவுளை திட்டினான் சரவணன். அவன் திட்டுவதை யாராவது பார்த்திருந்தால் உடனடியாக பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு போன் போட்டிருப்பார்கள். நல்லவேளையாக யாரும் வழக்கம்போல பார்க்கவில்லை.


சூடேறிப் போன மண்டையுடன் அறைக்கு திரும்பினான் சரவணன். இன்றிரவுக்குள் ஒரு மாற்றம் ஏற்படாவிட்டால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று நினைக்க ஆரம்பித்தான். பூட்டியிருந்த கதவை திறந்து உள்ளே எட்டிப்பார்த்தவன் ஒரு நொடி அதிர்ந்தான். அறையின் மத்தியில் சப்பணமிட்டு ஒருவர் அமர்ந்திருந்தார். வெள்ளை உடையோடு பார்க்க பிரகாஷ்ராஜ் மாதிரி இருந்தார். பூட்டப்பட்ட அறைக்குள் அவர் எப்படி வந்திருக்க முடியும்? ஒருவேளை ஜன்னல் வழியாக வந்திருப்பாரோ? ஜன்னலும் சாத்தப்பட்டிருந்தது!

“யோவ் யாருய்யா நீயி?” கொஞ்சம் பயத்தோடே அறைக்குள் பாதியாக நுழைந்து, தப்பி ஓடுவதற்கு வாகாக காலை தயார்செய்துகொண்டு கேட்டான்.

“நானா? கடவுள்!”

”கடவுளாவது, மசுராவது.. எப்படிய்யா ரூமுக்குள்ளே வந்தே?”

“நான் படைத்த உலகில் நான் எங்கு வேண்டுமானாலும் பிரவேசிப்பேன்!”

நட்டு கழண்ட கேசு போலிருக்கு என்று மனதுக்குள் நினைத்தவாறே கொஞ்சம் பயம் தெளிந்து அறைக்குள் பிரவேசித்தான்.

“நீ கடவுள்னு எப்படி நம்புறது?”

ஒரு சொடுக்கு போட்ட கடவுள் பழுப்பேறியிருந்த சுவற்றை காட்டினார். சுவற்றில் டிவி போன்ற ஒரு திரை தோன்றியது. சரவணனுடைய அப்பா கட்டிலில் படுத்திருந்தார். அம்மா ஏதோ ஒரு கஞ்சியை அவருக்கு புகட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்.

“உன் அப்பாவுக்கு மஞ்சக்காமாலை. அதனாலே தான் போஸ்ட் ஆபிஸுக்கு போய் உனக்கு மணியார்டர் கூட பண்ணமுடியாம படுத்துக் கிடக்கார்!”

அந்த வெள்ளுடை மனிதர் கடவுள் தான் என்று சரவணன் நம்பிவிட்டான். கடவுள் இருக்கிறார் என்று நிரூபிப்பது எவ்வளவு சுலபம்!

“நீங்க நெஜமாலுமே கடவுளா இருந்தா.. சாரி.. மன்னிச்சுக்கங்க.. உங்களை கண்டபடி திட்டியிருக்கேன்!”

“என்னை திட்டாத ஜீவராசிகள் எதுவும் உலகத்தில் இல்லை! மன்னிப்பதாக இருந்தால் மன்னிப்பைத் தவிர வேறெதையும் என்னால் செய்யமுடியாது. மன்னித்துக்கொண்டே.... இருக்கவேண்டும்!”

சடாரென காலில் விழுந்து வணங்கினான்.

“எவருக்கும் கிடைக்காத வாய்ப்பு உனக்கு கிடைத்திருக்கிறது சரவணா. உன்னைப் படைத்தவன் கேட்கிறேன். உனக்கு என்ன வேண்டும்? மூன்று கோரிக்கை வைக்கலாம். மூன்றையுமே நிறைவேற்றுவேன்”

திடீரென கடவுள் என்ன வேண்டும் என்று கேட்டதால் குழம்பிப் போனவன் என்ன கேட்பது என்று புரியாமல் முழித்தான். பொட்டிக்கடைக்காரன் பாக்கி, ரூம் வாடகை போன்றவை உடனடியாக நினைவுக்கு வந்தது.

”ம்ம்ம்... கடவுளே! என் கையில் இருக்கும் பையில் எப்போதும் பணம் இருக்கவேண்டும்!”

“சரி... அப்படியே ஆகட்டும்!”

”அடுத்ததா... ம்ம்ம்ம்...” யோசித்தவன், ஐந்து ஆண்டுகளாக வேலை இல்லாமல் அவமானப்பட்டு வருவதை யோசித்தான். தன் கவுரவத்தை மீட்க தனக்கொரு நல்ல வேலை வேண்டுமென நினைத்தான். “ஒரு கவுரவமான வேலை!”

“அதுவும் அப்படியே ஆகட்டும்!”

வேலை, பணம் இவை இரண்டுமே போதும், தான் விரும்பியது எல்லாவற்றையும் பெறலாம் என்றாலும் மூன்றாவதாகவும் ஏதாவது தருவதாக கடவுள் சொல்கிறாரே? அந்த வாய்ப்பை ஏன் வீணாக்குவது என்று யோசித்தான். மூன்றாவதாக என்ன கேட்கலாம்? சந்தியா... ச்சேச்சே... அது ஒரு மொக்கை ஃபிகர். கடவுள் நினைத்தால் சூப்பர் ஃபிகர் ஒன்றை தனக்கு தரமுடியும்.. ஒன்றா? வேண்டாம் ரெண்டு கேட்கலாமே? வேண்டாம்.. வேண்டாம்... நிறைய கேட்கலாம். ஃபிகர்களை தள்ளிக்கொண்டு போக ஒரு கார் வேணுமே? அதை கேட்டால் அது நான்காவது கோரிக்கையாகிவிடும். கடவுள் தரமாட்டார். மூன்றாவதையும், நான்காவதையும் ஒன்று சேர்த்து ஒரே கோரிக்கையாக வைத்து கடவுளை ஏமாற்ற முடிவுசெய்தான்.

“ம்ம்ம்... நான் எப்பவும் பெரிய வண்டி ஒண்ணுத்துலே போய்க்கிட்டே இருக்கணும்.. என்னை சுத்தி பொண்ணுங்களா இருக்கணும்!”

சரவணனின் புத்திசாலித்தனத்தை வியந்த கடவுள், “அப்படியே ஆகட்டும். நாளை முதல் நீ கேட்டதெல்லாம் உனக்கு கிடைக்கும்!” கடவுள் கடைசியாக சொன்னது அசரீரி போல கேட்டது. அவர் அமர்ந்திருந்த இடம் ஒளிவெள்ளமாக இருக்க, கடவுளைக் காணவில்லை. நடப்பது கனவா? நனவா? என்று புரியவில்லை சரவணனுக்கு. தன் தலையில் தானே ஒரு கொட்டு வைத்து பார்த்துக் கொண்டான், வலித்தது. 'நாளை'க்காக காத்திருக்க ஆரம்பித்தான் சரவணன்.


டிப்பாக்கம் டூ பாரிமுனை வண்டி அது. 51S லேடீஸ் ஸ்பெஷல். பெரிய வண்டி. நாற்பது பேர் உட்காரலாம். நூறு பேருக்கு மேல் நிற்கலாம்.

“டிக்கெட்.. டிக்கெட்..” கண்டக்டர் சரவணனுடைய குரல், போன மாதம் தான் கண்டக்டர் வேலைக்கு சேர்ந்திருந்தான்.

“யோவ் யாரைப் பார்த்து டிக்கெட்டு இன்றே?” பாரிமுனையில் ஏறிய கருவாடை கூடைக்காரி சரவணனை முறைத்தாள்.

“ஆமா. இது ஒரு சூப்பர் டிக்கெட்டு, இதைப்பார்த்து டிக்கெட்டுன்னு சொல்றாங்க. மூஞ்சியப்பாரு. டிக்கெட் எடுத்தியா? உன் கூடைக்கு லக்கேஜ் போட்டியா?” வெயில் தந்த வெறுப்பில் கடுப்பாக குரைத்தான் சரவணன்.

கருவாட்டுக்காரி இருபது ரூபாய் நோட்டை நீட்டினாள். அவளுடைய டிக்கெட் மற்றும் லக்கேஜ் டிக்கெட்டை கிழித்து அவளிடம் தந்தவன், மீதி சில்லறைக்காக பையினுள் கைவிட்டான். பை நிறையப் பணம்.

ஹிந்து நிறுத்தத்துக்கு வந்த பேருந்துக்குள் முட்டி மோதிக்கொண்டு ஏறினார்கள் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரி மாணவிகள். அதுவரை நடந்துகொண்டே டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த சரவணனுக்கு சிரமமாகி போனது. கால்வைக்க கூட இடமில்லை. சரவணனை சுற்றிப் பெண்கள்.

பிரகாஷ்ராஜ் ஜாடையிலிருக்கும் கடவுள் வானத்திலிருந்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்.

9 செப்டம்பர், 2009

படைப்பும், படைப்பாளியும்!

ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.

ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?

எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.

ஒரு நெருங்கிய தோழருக்கு சொல்ல விரும்பிய அட்வைஸ். நேரில் சொல்ல தயக்கமாக இருப்பதால் பதிவு மூலம் சொல்கிறேன்.

8 செப்டம்பர், 2009

“புதுவிசை” வாசகர் சந்திப்பு!


”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் வெளியாகியுள்ளதையொட்டி “புதுவிசை” வாசகர் சந்திப்பு நிகழவிருக்கிறது.

இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், (எல்.எல்.ஏ கட்டிடம்), அண்ணா சாலை.
நாள் : 9 செப்டம்பர், 2009, புதன்கிழமை

பங்கேற்பு :

எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்வாளர் வ.கீதா
முனைவர் ஆம்ஸ்ட்ராங்
ஜி.செல்வா, இந்திய மாணவர் சங்கம்.
முனைவர் செ.ரவீந்திரன்
சுதிர் செந்தில், ’உயிர் எழுத்து’ ஆசிரியர்
கவிஞர் குட்டிரேவதி
ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

“புதுவிசை” ஆசிரியர் குழுவிலிருந்து...

சம்பு
எஸ்.காமராஜ்
ந. பெரியசாமி
ஆதவன் தீட்சண்யா

வரவேற்பு
க.பிரகதீஸ்வரன்

தலைமை
பிரளயன்

நன்றியுரை
வா.அசோக் சிங்

அன்புடன் அழைக்கும்...
சென்னை கலைக்குழு - பூபாளம் புத்தகப் பண்ணை


அனைவரும் வருக!

7 செப்டம்பர், 2009

கர்ணன்!


சினிமா, சேட்டிலைட் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்களின் வீச்சு நாடகக்கலையின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கும் சூழல் இன்று நிலவுகிறது. நாடக அரங்குகள் பெரும்பாலும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் மீண்டும் நாடகக்கலையை மறுமலர்ச்சி அடையச்செய்ய பரவலான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஒரு முயற்சிதான் அடவு அமைப்பு வழங்கும் ‘கர்ணன்’ ஒருநபர் நாடகம்.

வெகுஜன சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவ்வப்போது கலைசினிமாவுக்காக கைக்காசை செலவழிக்கும் நடிகர் நாசர் கர்ணனாக நடிக்கிறார். ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் புனிதமாக்கப்பட்டிருக்கும் மகாபாரதத்தை இன்னொரு பரிணாமத்தில் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறார் இந்த நவீன கர்ணன். தொடக்கத்தில் ஒலிக்கப்படும் தற்கால போர் ஓலம், மகாபாரத போர் ஒலியோடு இணைவது அவல அழகியல். போர்க்களத்தில் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் மனித உறுப்புகளை கண்டு மனம் வெறுத்து கர்ணன் பேச ஆரம்பிக்கிறார். மனிதநேயத்தின் அவசியம் அவருடைய பேச்சின் அடிநாதம்.

“தந்திரத்தில் சிறந்தவர் சகுனி என்கிறார்களே? அப்படியென்றால் கண்ணனை என்ன சொல்ல?” என்று கேள்வி எழுப்புகிறார். துரியோதனனுக்கு நண்பனாக விதிக்கப்பட்டது தன்னுடைய விதி என்று நொந்துப்போகிறார். பாண்டவர்களின் மேன்மையையும், கவுரவர்களின் நயவசஞ்சகத்தையும் எடுத்துக்காட்ட பகடைக்காய் நான் தானா? என்று வியாசரையே சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார். பீஷ்மரில் தொடங்கி, தன் தாய் குந்திதேவி வரைக்கும் யாரையும் விடவில்லை இந்த கர்ணன். தன்னைப் போலவே ஒடுக்கப்பட்டவனாக, சக தோழனாக இவர் கருதுவது அரவானை மட்டுமே.

சுமார் நாற்பத்தைந்து நிமிடம் தொடர்ச்சியாக மிக நீண்ட வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு நல்ல உணர்ச்சி பாவத்தில், தெளிவாக உச்சரிக்கிறார் நாசர். அவருக்கு நடிக்க வருகிறது என்று சொல்லுவது, தேன் தித்திக்கிறது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. நல்ல நாடகக் கலைஞன் மேடையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனது நடிப்புக்குப் பயன்படுத்திக் கொள்வான். நாசர் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நொடியும் ஓயாமல் மேடையில் இங்கும், அங்கும் சுழன்றுக்கொண்டே இருக்கிறார்.

வசனங்களுக்கு ஏற்ப மாறும் ஒளி வண்ணங்களை மாற்றி மாற்றி வழங்குவது நல்ல சிந்தனை. நாடகங்களில் நடிப்பவர்கள் கடைசி வரிசை பார்வையாளனுக்கு கேட்கவேண்டுமே என்ற அக்கறையில் உரக்க பேசுவார்கள். இதனால் அவர்களது நடிப்பு சற்று மிகையாகத் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சி கார்ட்லெஸ் மைக் மூலமாக இக்குறையை நிவர்த்தி செய்கிறது. நாசர் நின்று நிதானமாக, பதட்டப்படாமல் வசனங்களை பேச வகை செய்கிறது. கர்ணனின் தோற்றமே பார்வையாளனுக்கு பிரதானமாக தெரியும் வகையில் மேடைப்பின்னணி எளிமையாக வசீகரிக்கிறது. மொத்தத்தில் இன்றைய தொழில்நுட்பத்தை மிகச்சரியாக மேடைநாடகத்துக்கு பொருத்தியிருக்கிறார்கள். இந்நாடகத்தை தொலைக்காட்சியில் கண்டாலோ, வானொலியில் கேட்டாலோ கூட, மேடையில் பார்க்கும் அனுபவமும், பரவசமும் கிஞ்சித்தும் கிடைக்காது.

கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கும் இந்நாடகத்தின் முதல் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடந்தது. வித்தியாசமான, புதிய முயற்சியாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது ஆச்சரியமான மகிழ்ச்சி. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் மீண்டும் மேடை நாடகம் மக்களிடையே வெற்றி வலம் வரக்கூடும்.

5 செப்டம்பர், 2009

உதிரத்துணி!

”இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி வருகின்றன.

இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன். பலாலி வங்கிக்கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.

புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியை, ஷோபாசக்தி எடுத்திருக்கும் நேர்காணல் இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.

“விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.

என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.”


ஏராளமான அதிர்வுகளையும், கேள்விப்பட்டிராத பல தகவல்களையும் ஒருங்கே கொண்டது அந்நேர்காணல். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்!

3 செப்டம்பர், 2009

சைபர் க்ரைம்!

வலைப்பதிவொன்றினில் சைபர் கிரிமினலான போலி டோண்டு என்பவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. போலி டோண்டுவோடு எனக்கு எந்த ஸ்நானப்ராப்தியும் இல்லையென்று எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
யுவகிருஷ்ணா

2 செப்டம்பர், 2009

சாருவுக்கு பணம் தேவை!

“நண்பரே நலமாக இருக்கிறீர்களா? என்னை மன்னிக்கவும். நான் மலேசியாவுக்கு வர இருப்பதை உங்களிடம் முன்கூட்டியே சொல்லியிருக்க வேண்டும். இளைஞர்களை இனவெறிக்கு எதிராக ஊக்குவிக்கும் மாநாடு ஒன்றிற்கு அவசரமாக கிளம்பி வந்திருக்கிறேன். இங்கே மாநாட்டை முடித்து வந்தபிறகு ஒரு துரதிருஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஆம். என்னுடைய கைப்பை ஒன்றினை நான் பயணித்த டாக்ஸியில் மறதியாக விட்டுவிட்டேன். என்னுடைய பணம், பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கியமான சமாச்சாரங்களை அந்த பையில் வைத்திருந்தேன். எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஹோட்டல் பில் கட்ட 1400 டாலரும், இந்தியாவுக்கு திரும்பிச்செல்ல 1800 டாலருமாக மொத்தமாக 3200 டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய்) உடனடியாக தேவைப்படுகிறது.

ஒரு நூலகத்திலிருக்கும் இணைய இணைப்பிலிருந்து இந்த மடலை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்களால் எவ்வளவு முடியுமோ அதை உடனே கொடுத்து உதவவும். ஊருக்கு சென்றதுமே கண்டிப்பாக திருப்பித் தந்து விடுகிறேன். உங்களால் பணம் தரமுடியுமென்றால் உடனடியாக வெஸ்டர்ன் யூனியன் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறேன்.
நன்றி!

அன்புடன்
சாரு நிவேதிதா”

இப்படி ஒரு மின்னஞ்சல் கடந்த ஆண்டு, தமிழின் பிரபல எழுத்தாளர் சாருநிவேதிதாவின் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் வந்ததுமே பதறிப் போனார்கள். தங்களுடைய அபிமான எழுத்தாளர் பணமின்றி தவித்துக் கொண்டிருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. உடனடியாக வெஸ்டர்ன் யூனியன் (மணியார்டரில் பணம் அனுப்புவது போல நவீன இணைய முறை) மூலமாக பல பேர் பணம் அனுப்பினார்கள்.

உண்மையில் சாருநிவேதிதா மலேசியாவில் பணத்தை தொலைத்துவிட்டு நிர்க்கதியாய் நின்றாரா? இச்சம்பவம் குறித்து அவரே அவரது இணையத்தளத்தில் விலாவரியாக எழுதியிருக்கிறார்.

“என்னுடைய ஹாட்மெயில் மற்றும் ரீடிப்மெயிலில் திருட்டுத்தனமாக நுழைந்த ஆள் ஒருவன் என்னுடைய இரண்டாயிரம் வாசகர்களுக்கு இதுபோன்ற மெயிலை அனுப்பியிருக்கிறான். என் அன்பான வாசகர்கள் பலரும் முடிந்த அளவு பணம் அனுப்பியிருக்கின்றனர். அல்லது அனுப்ப முயற்சித்திருக்கின்றனர். யாருக்குமே அவசரத்தில் என்னைத் தொடர்பு கொண்டு பேசத் தோணவேயில்லை.

விஷயம் தெரிந்ததுமே என்னுடைய மெயில் ஐடி பாஸ்வேர்டை மாற்ற முயன்றேன். ஆனால் அந்த கிரிமினல் பலே கில்லாடி. என்னுடைய மின்னஞ்சலில் நுழைந்ததுமே அதை மாற்றிவிட்டிருக்கிறான்.

கொடுமை என்னவென்றால், அந்த கிரிமினல் மின்னஞ்சல் அனுப்பிய இரண்டாயிரம் பேரில் என் மகன் கார்த்திக்கும் ஒருவன். அப்போது கப்பலில் பயிற்சியில் இருந்திருக்கிறான். பயிற்சி முடிந்ததும் தான் சம்பளம். இப்படிப்பட்ட நிலையில் தன் தந்தைக்கு இப்படி ஒரு நிலையா என்று பதறிப்போய், கப்பல் கேப்டனிடம் ‘என் தந்தையை காப்பாற்ற ஆயிரம் டாலர் உடனடியாக தேவை. என் இரண்டு வருட சம்பளத்தை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறான்.

நல்லவேளையாக இந்த மோசடி என்னுடைய கவனத்துக்கு வந்ததுமே என்னுடைய இணையத்தளத்தில் அறிவிப்பு கொடுத்தேன். என்னுடைய வாசகர் ஒருவர் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்துக்கு புகார் செய்து, வாசகர்களும் அன்பர்களும் அனுப்பிய பணம் அந்த மோசடிப்பேர்வழி கைக்கு சென்று சேர்வதை தடுத்துவிட்டார்.

ஒருவரின் மின்னஞ்சல் பெட்டிக்குள் நுழைந்து, அவரோடு தொடர்பில் இருப்பவர்களுக்கு அவர் போலவே மின்னஞ்சல் செய்து, இரண்டாயிரம் டாலர் கொடு.. மூன்றாயிரம் டாலர் கொடு என்று மிரட்டுவது எவ்வளவு பெரிய கிரைம்?

தமிழ் சினிமாவில் டபுள் ஆக்ட் பார்த்திருக்கிறேன். அதுபோல் நிஜ வாழ்விலும் நடக்கும் என்று என்னுடைய எளிய மனதுக்கு இப்போதுதான் புரிகிறது. என்னுடைய வேஷத்தில் ஒரு வில்லன் சாரு! இனிமேல் பாஸ்வேர்டை தினசரியும் மாற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான். வேறு வழியில்லை.”

இவ்வாறாக எழுதியிருக்கிறார். என்ன மோசடி நடந்திருக்கும் என்று இப்போது உங்களுக்கே புரிந்திருக்குமே? சாருநிவேதிதாவின் பெயரைப் பயன்படுத்தி, அவர் போலவே மின்னஞ்சல் செய்து, அவரோடு தொடர்பில் இருந்தவர்களிடம் பணம் பிடுங்கி ஏமாற்ற முயற்சித்திருக்கிறான் இந்த சைபர் கிரிமினல்.


மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசிக்கும் தொழிலதிபர் அல்-நசீர்-ஜக்கரியா மும்பை சைபர் க்ரைம் பிரிவைத் தொடர்பு கொண்டு ஒரு புகார் அளித்தார். அப்புகாரில் “என் மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்தி 1,800 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து இருபத்தேழாயிரம் ரூபாய்) பணத்தை என் உறவினர்களிடம் யாரோ மோசடி செய்ய முயற்சிக்கிறார்கள்” என்று புகார் கொடுத்தார். இதே காலக்கட்டத்தில் இதே மாதிரியான பல்வேறு புகார்களும் வந்து சேர சைபர் கிரைம் போலிசார் திணறித்தான் போனார்கள்.

விசாரித்துப் பார்த்ததில் அந்த மோசடி மெயில் அனுப்பியவன், பணத்தை லண்டனில் இருக்கும் வீடு ஒன்றின் முகவரிக்கு அனுப்புமாறு கோரியிருக்கிறான். போலிசார் மேற்கொண்டு விசாரணையை நீட்டித்தபோது, சம்பந்தப்பட்ட ஃப்ராடு, அந்த லண்டன் வீட்டை காலிசெய்துக் கொண்டு ஓடிப்போனது தெரியவந்தது. அதாவது மோசடியில் யாராவது ஏமாந்து லம்பாக பணத்தை கொடுத்ததுமே வாடகைக்கு எடுத்திருந்த வீட்டை காலிசெய்துவிட்டு ஓடிவிடுவது இவர்களின் வழக்கம்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு பணம் அனுப்பவேண்டுமானால், பணத்தை பெறுபவரின் வங்கி கணக்கு எண்ணும், ஏன் பணம் கைமாறுகிறது என்பதற்கான காரணமும் வழங்கப்படவேண்டும். நேரடியாக ஒரு முகவரிக்கு பணத்தை அனுப்பிவிட முடியாது. ஆனால் வெளிநாடுகளில் இதுபோன்ற நிர்ப்பந்தம் இல்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு பணத்தை கைமாற்ற கட்டுப்பாடுகள் இல்லாத எளியமுறை இருக்கிறது. வங்கிக்கணக்கு எண் இல்லாமலேயே ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு பணத்தை அனுப்ப இயலும். எனவேதான் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை குறிவைத்து இந்த மோசடி மெயில் சமாச்சாரம் தொடர்ந்து நடக்கிறது.

சைபர் கிரைம் போலிஸார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஜக்காரியாவின் மின்னஞ்சல் முகவரி, மேலதிக மோசடிகள் நடக்காத வண்ணம் உடனடியாக முடக்கப்பட்டது.

சாருநிவேதிதா, ஜக்காரியா போன்ற பலரின் மெயில் ஐடியும் இதுபோல களவாடப்பட்டு தினம் தினம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டு வருகிறது. பணத்தை இழந்து ஏமாந்தவர்கள் பெரும்பாலும் ஏனோ புகார் செய்வதில்லை. யார் பெயரை சொல்லி மோசடி செய்கிறார்களோ, அவர் இந்தியாவில் இருப்பார். பணத்தை அனுப்பி வைத்தவர் ஏதாவது வெளிநாட்டில் இருப்பார். இதையெல்லாம் விளக்கி ‘எப்படி ஏமாந்தோம்?’ என்று புகார் அளிக்க பலருக்கும் வெட்கமாக இருப்பது இம்மோசடி தொடர்ந்து நடைபெற ஏதுவாக இருக்கிறது.

எப்படி உங்கள் மின்னஞ்சலின் பாஸ்வேர்டு அவர்களுக்கு கிடைக்கிறது?

மின்னஞ்சலில் பாஸ்வேர்டை திருட கேப்மாறிகள் புதுப்புது தந்திரங்களை கையாளுகிறார்கள். உதாரணத்துக்கு ஒரு அரதப்பழசான முறையைப் பார்க்கலாம்.

நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் எனில், கூகிள் மெயில் நிறுவனத்திடமிருந்து உங்களுக்கு ஒரு மெயில் வரும். ”உங்கள் மெயில் அக்கவுண்டில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் குளறுபடியாகியிருக்கிறது. எனவே உங்கள் மின்னஞ்சல் பாஸ்வேர்டை கீழ்க்கண்ட பொட்டியில் டைப் செய்யவும். எல்லாம் சரியாகிவிடும்” என்றொரு மெயில் வந்திருக்கும்.

“அய்யய்யோ, மெயில்லே ஏதோ ப்ராப்ளமாமே?” என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக பாஸ்வேர்டை டைப்புவீர்கள். முடிஞ்சது ஜோலி. உங்களுக்கு வந்தது மோசடி மெயில்.

கொஞ்சநாட்கள் கழித்து ஐரோப்பாவில் இருக்கும் உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ ‘உங்களிடம்’ இருந்து கீழ்க்கண்டவாறு ஒரு மெயில் போகும், நீங்கள் அறியாமலேயே. “நான் லண்டனில் நடுரோட்டில் நிற்கிறேன். கையில் அஞ்சு பைசா கூட இல்லை. பிச்சை எடுக்காததுதான் பாக்கி. உடனடியா இந்த அட்ரசுக்கு துட்டு அனுப்புங்க”.

பாஸ்வேர்டு கேட்டது கூகிள் நிறுவனம் தானே? எப்படி கொடுக்காமல் இருப்பது என்று கேட்பீர்கள். கூகிள் உள்ளிட்ட மின்னஞ்சல் சேவை வழங்கும் எந்த நிறுவனமும் தனது பயனாளர்களிடம் எக்காலத்திலும் பாஸ்வேர்ட் கேட்பதில்லை. பாஸ்வேர்டை டைப் செய்யச்சொல்லி கோரிவரும் எந்த ஒரு மெயிலுமே மோசடி எண்ணத்தோடு அனுப்பப்பட்ட மெயில் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நகையை திருடுவார்கள், பணத்தைத் திருடுவார்கள், ஏன் சொம்பைக் கூட திருடுவார்கள். போயும், போயும் ஈமெயிலையா திருடுவார்கள் என்று கேட்டால், ஆம். திருடுவார்கள். திருடப்படும் ஈமெயில் ‘வெயிட்டான’ நபருடையது என்றால், மற்ற திருட்டுகளில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே அசால்ட்டாக அடித்துவிட முடியும். கன்னம் வைத்து, சுவரேறிக் குதித்து, போலிஸ் துரத்த மூச்சிறைக்க ஓடி... இதெல்லாம் தேவையே இல்லாமல் மவுஸை சொடுக்கி, லட்சங்களை ஆட்டை போட முடியும்.

சில பேர் தங்கள் மெயில் பாக்ஸில் ஏடிஎம், கிரெடிட் கார்டு போன்றவற்றின் எண்களையும், பாஸ்வேர்டுகளையும் இணையத்தில் பயன்படுத்தும் வசதிக்காக சேமித்து வைத்திருப்பார்கள். இதுபோன்றவர்களின் ஈமெயில் திருடப்பட்டால் போயே போச்சு. ஒட்டுமொத்தமாக டவுசரை உருவிவிடுவார்கள்.

உங்கள் ஈமெயில் பாஸ்வேர்டை திருடுபவன் உடனடியாக வெளிப்பட்டு விடமாட்டான். உங்கள் மின்னஞ்சல் நடவடிக்கைகளை வெகுகாலமாக நைசாக நோட்டமிட்டு, உங்களுக்கு யார் நெருக்கமானவர்கள், யாரெல்லாம் பண உதவி செய்யக்கூடியவர்கள் என்றெல்லாம் உங்களுக்கு தெரியாமலேயே உளவுப்பார்த்துக் கொண்டிருப்பான். தக்க சமயம் வந்துவிட்டால் டக்கராக கும்மியடித்துவிட்டுப் போய்விடுவான். இப்போதெல்லாம் பல பிஸினஸ் டீலிங்கே மின்னஞ்சலில் நடந்துவருகிறது என்பதால் ஈமெயில் எவ்வளவு முக்கியமானது என்பதை அதன் பயனாளிகள் உணரவேண்டும்.

உங்களுக்கு தெரியாத அநாமதேயம் யாராவது உங்களைப் பற்றிய பர்சனல் விவரங்களையோ, பாஸ்வேர்டையோ அல்லது உங்கள் வங்கி தொடர்பான தகவல்களையோ கேட்டால் உடனடியாக உள்ளூர் இணைய குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அந்த மின்னஞ்சலை பார்வேர்டு செய்யுங்கள்.

ஒருவர் மற்றொருவர் பற்றிய தகவல்களை எடுத்துக் கொண்டு, அந்தத் தகவல்களை கொண்டு பொருளாதார ஆதாயம் பெற உபயோகப்படுத்தினால் அது அடையாளத் திருட்டாக எடுத்துக் கொள்ளப்படும். இது கிட்டத்தட்ட ஆள்மாறாட்டம் போன்றது. வேறொருவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவது.

இணைய வழி பொருள் வாங்கும்போது, நீங்கள் உங்களது வங்கி, வங்கி கணக்கு எண் அல்லது உங்களது தாயாரின் முதல் பெயர் ஆகியவற்றை கொடுக்க வேண்டியதில்லை. அப்படி நீங்கள் கோரப்பட்டால், எச்சரிக்கையாக இருங்கள். அந்த இணையத்தளம் மோசடியான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

முன்பின் தெரியாத மின்னஞ்சல்களில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளில் கிளிக் செய்வதை தவிருங்கள், நீங்கள் தவறுதலாக கிளிக் செய்து விட்டால், அதில் கேட்கப்படும் எந்த தகவல்களையும் நிரப்பாதீர்கள்.

உங்களது கடவுச்சொற்களையோ அல்லது முகவரி, வங்கி விவரம் மற்றும் கடன் அட்டை விவரம் போன்ற சொந்த விவரங்களையோ எப்போதும் அரட்டை அறையில் யாருக்கும் கொடுக்காதீர்கள்.

இதெல்லாம் பொதுவான எச்சரிக்கைகள். நீங்கள் ஏமாறப்படாமல் இருக்க நீங்கள் தான் உஷாராக இருக்க வேண்டும்.

உங்களது தனிநபர் தகவல்கள் தவறாக உபயோகப் படுத்தப்பட்டிருப்பதாக நீங்கள் கேள்விபடும் பட்சத்தில், சோம்பேறித்தனப் படாமல் சைபர் கிரைமை அணுகுங்கள். இதனால் குற்றவாளி பிடிபடுவதற்கான வாய்ப்பு மட்டுமன்றி, உங்கள் நற்பெயரும் காப்பாற்றப்படும்.

(நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்)

ஸ்வீட் சிக்ஸ்டீன்!


சிக்ஸ்டீன் என்ற சொல்லே சிக்கென்று கவர்ச்சியாக இருக்கிறதல்லவா? கூடவே ஸ்வீட்டும் சேர்ந்தால் டூபீஸ் நமீதா மாதிரி கும்மென்று எஃபெக்ட்.

கிழக்கு டூரிங் டாக்கீஸில் இம்மாதம் திரையிடப்படும் படம் ‘ஸ்வீட் சிக்ஸ்டீன்!’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. படம் அடல்ட்ஸ் ஒன்லியா என்று தெரியவில்லை. இப்படத்தில் மொத்தமாக முன்னூற்றி சொச்சம் முறை FUCK என்று உச்சரிக்கப்படுகிறதாம். ரசிகர்களின் ’எதிர்ப்பார்ப்பு’ முழுமையாக பூர்த்தியாகுமா என்பதை திரையிடுதலில் தான் தெரிந்துகொள்ள முடியும்.

இப்படம் பற்றிய விவரங்களை அறிய விக்கிப்பீடியா சுட்டிக்கு இங்கே அமுக்கவும்!

இம்மாதம் சிறப்புப் போனஸ் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இனி மாதாமாதம் உலகப்படத்தோடு ஒரு ஆவணப்படமும் திரையிடப்படுமாம். எழுத்தாளர் மெளனி குறித்த ஆவணப்படமும், ஸ்வீட் சிக்ஸ்டீனுக்குப் பிறகு திரையிடப்படும் என்று உரையாடல் அமைப்பாளர்களால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கிழக்கு டூரிங் டாக்கிஸில் படம் பார்ப்பது ஒரு அலாதியான அனுபவம். திரையிடுதலுக்கான ஏற்பாடுகளை செய்யும் பைத்தியக்காரன், பத்ரி ஆகியோரும் தரை டிக்கெட் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். எனவே தரையில் உட்கார்ந்தும் பார்க்கக்கூடிய வசதி கடந்த திரையிடுதலின் போது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

நாள் : 06-09-2009, ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணி

இடம் : கிழக்குப்பதிப்பகம் மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை.

அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்!

1 செப்டம்பர், 2009

மூன்று சம்பவங்கள்!


வலையுலகப் பெருசு ஒருவரோடு வழக்கமாக டீ குடிக்கும் கடை அது. டீ குடிக்க போனால் ரெண்டு மூன்று தம்மை பற்றவைத்து விட்டு அரைமணி நேரம் ஏதாவது மொக்கை போடுவோம். அன்றும் அப்படித்தான். கடந்து போன சேட்டு ஃபிகர் (ஆண்டி?) ஒன்றின் வெள்ளைவேளேர் சதைப்பிடிப்பான இடுப்பை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தேன்.

திடீரென அவருக்கு பெண்ணுரிமை சிந்தனைகள் கிளர்த்தெழுந்து என்னை திட்டிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணை எப்படி பார்க்கவேண்டும் என்று ஆவேசமாக கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பெரியார் சொன்னவற்றை இடை இடையே உதாரணமாக காட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு பேர் எங்களை நெருங்கினார்கள். அவர்களை கவனிக்காமல் அண்ணாத்தையோ ஆவேசமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். எங்களை நெருங்கியவர்களில் ஒருவர் லுங்கி கட்டிக் கொண்டிருந்தார், இன்னொருவர் வெள்ளைச்சட்டையை கருப்புப் பேண்டில் டக்-இன் செய்திருந்தார்.

லுங்கி கட்டிக் கொண்டிருந்தவர் எங்களை சுட்டிக் காட்டி, “சார் நான் சொன்னேன்லே? இவங்க ரெண்டு பேரு தான்!” என்றவுடனே எனக்கு அடிவயிறு கலக்க ஆரம்பித்தது. வண்டி சாவியை இக்னீஷியனில் செருகி வண்டியை கிளப்ப மனதளவில் தயாரானேன். அண்ணாத்தையை லைட்டாக சீண்டி அவர்களை காட்டினேன்.

வெள்ளை சட்டை கருப்பு பேண்ட் போட்டவர் சினேகமாக சிரித்துக் கொண்டு எங்கள் அருகில் வந்து கை கொடுத்தார். “சார் உங்களை எங்கேயோ பார்த்திருக்கேன், உங்க முகம் எனக்கு நெருக்கமா தெரியுது, நான் ஞாபக மறதிக்காரன். உங்களை எங்கே பார்த்தேன்னு மறந்துடிச்சி” யாரைப் பார்த்தாலும் கொஞ்சம் கூட மனச்சாட்சி இல்லாமல் அண்ணாத்தை சொல்லும் முதல் டயலாக் இது.

“எங்கேயும் பார்த்திருக்க மாட்டீங்க, இங்கே தான் பார்த்திருப்பீங்க. உங்க ரெண்டு பேரையும் ஒரு ரெண்டுமாசமா நான் வாட்ச் பண்ணி இருக்கேன்” லுங்கி ஆசாமி.

“ஆமாங்க. நீங்க ரெண்டு பேரும் வித்தியாசமா ஏதோ பேசிக்கிறீங்கன்னு இவன் சொன்னான். என்னதான் பேசுறீங்கன்னு இன்னைக்கு இங்கே ஒருமணி நேரமா வெயிட் பண்ணி பார்த்தோம்” வெள்ளை சட்டை.

“பாருங்க, பெரியார் பேரை நம்ம மாதிரி யூத்துங்க (அவர்கள் இருவருக்கும் தலா 40, 42 வயதிருக்கலாம்) சொல்லவே பயப்படுறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரும் தைரியமா பப்ளிக்லே பேசுறீங்க. அதுமட்டுமில்லே நிறைய சமுதாயப் பிரச்சினைகளை போட்டு அலசு அலசுன்னு அலசுறீங்க. ஒருமுறை நீங்க ரெண்டு பேரும் ஓட்டலுக்குள்ளே பரோட்டா சாப்பிட்டுக்கிட்டிருந்தீங்க. நீங்க என்ன பேசுறீங்கன்னு கேட்குறதுக்காகவே ஓட்டலிலே உங்க பக்கத்து டேபிளுக்கு வந்து உட்கார்ந்து மசாலா தோசை சாப்பிட்டேன்!”

இருவரும் எங்களை பேசவிடாமல் வெள்ளமாய்க் கொட்டினார்கள். பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு வெள்ளைச் சட்டைக்காரர் லுங்கியை காட்டி, “பக்கத்து தெருவிலே பெரியார் சிலை பார்த்திருப்பீங்க. அதை நிறுவுனவரு இவரு தான். நான் வக்கீலா இருக்கேன், பெரியார் போட்ட பிச்சை!” என்றார்.

இரண்டு பேரும் ‘சமுகத்துக்கு ஏதாவது செஞ்சாகணும்!' என்ற வெறியில் இருந்தார்கள். கொஞ்ச நேரம் சம்பிரதாயமாக பேசிக்கொண்டிருந்து பின்னர் கிளம்பினோம்.

“ங்கொய்யால, இனிமே இந்த டீக்கடைப் பக்கமே வரக்கூடாதுடா, டெய்லி ஒரு மணி நேரம் மொக்கைய போட்டு டவுசரை கயட்டிடுவாங்க போலிருக்கு!” என்றார் அண்ணாத்தை.

* - * - * - * - * - * - * - * - * - *

அவர் நல்ல துடிப்பான இளம்பெண். நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் அவரை சந்தித்தோம். என்னோடு அதே வலையுலகப் பெருசு தானிருந்தார். இணையத்தில் தமிழ், வலைப்பூக்கள் என்றும் பல டாபிக்குகளுக்கு நடுவில் பேசிக்கொண்டிருந்தோம்.

திடீரென்று அந்தப் பெண் கேட்டார், “வலைப்பூக்களில் எழுதுவதால் சமூகத்துக்கு என்ன நன்மை?”

அண்ணாத்தை கொஞ்சம் திணறி, உடனே சுதாரித்து, “நேற்று ஏதோ படம் பார்த்தேன்னு சொன்னீங்கள்லே? அதனாலே சமூகத்துக்கு என்ன நன்மை செஞ்சிருக்கீங்க?” என்றார்.

“படம் என் திருப்திக்கு பார்க்குறேன்!”

“அதுமாதிரி தான் வலைப்பூக்களில் எழுதுறவங்க அவங்கவங்க திருப்திக்கு எழுதறாங்க?”

“சினிமா பார்க்குறதும், எழுதறதும் ஒண்ணா? என்ன சார் சொல்றீங்க? எழுத்துங்கிறது...” ஆவேசமாய் கேட்டார், கொஞ்சம் விட்டால் ‘ஏய் மனிதனே!' என்று ஆவேசக்கவிதை படிப்பார் போலிருந்தது.

“நீங்க மொதல்லே கேட்டதே ஒரு கோயிந்துத்தனமான கேள்வி. உலகத்துலே எவ்வளவோ விஷயம் நடக்குது. ஒவ்வொண்ணாலயும் சமூகத்துக்கு என்ன பயன்னு கேட்டுக்கிட்டிருந்தா எதுவுமே நடக்காது”

“அப்போ நீங்கள்லாம் எழுதறதால பயனேதும் இல்லைன்னு சொல்றீங்க?”

“அதுமட்டுமில்லே, நீங்க படம் பார்க்குறது, இப்போ நாம பேசிக்கிட்டிருக்கிறது இதனால எல்லாம் கூட சமூகத்துக்கு எந்த பயனுமில்லே!”

'ம்ஹூம், இது வேலைக்கு ஆகாது!' என்று அப்பெண் நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை, உடனேயே பேச்சை துண்டித்துவிட்டு கிளம்பி விட்டார்.

* - * - * - * - * - * - * - * - * - *

கொஞ்ச நாட்களுக்கு முன் தண்டையார்ப்பேட்டை மணிக்கூண்டு அருகில் ஒரு கல்யாண மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்புக்கு சென்றேன். லைட் ம்யூசிக்கில் பாடிக்கொண்டிருந்தவர் மிகக்கொடூரமாக பி.எஸ்.வீரப்பா குரலில் ‘உலக நாயகனே' பாடிக்கொண்டிருந்தார். இவர்களது அவஸ்தையில் இருந்து தப்பிக்க நினைத்து மிரண்டுப் போயிருந்த மணமகனிடம் மொய்க்கவரை திணித்துவிட்டு எஸ்கேப் ஆனேன். வண்டியை மண்டபத்துக்கு எதிரில் ஒரு டீக்கடைக்கு அருகில் நிறுத்தியிருந்தேன்.

வண்டியை எடுத்தபோது ஒருவர் என் தோளை சீண்டி “நீங்கதான் லக்கிலுக்கா?” என்று கேட்டார். எனது வண்டியில் லக்கிலுக் என்ற ஸ்டிக்கர் ஒட்டிவைத்திருந்ததை கவனித்திருப்பார் போலிருக்கிறது. நான் தான் என்று தெரிந்தால் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்பது தெரியாததால் ”இல்லைங்க. என் பேரு குமார்” என்றேன்.

“உங்க வீடு எங்கே இருக்கு?”

அனிச்சையாக “மடிப்பாக்கம்” என்றேன்.

“மாட்டிக்கிட்டீங்களா, நீங்க தான் லக்கிலுக்கு, நான் இங்கே தான் மிண்டுலே வேலை பார்க்குறேன்” அவர் பெயரோடு, அவர் பணிபுரியும் பிரபலமான அந்த அச்சகத்தின் பெயரை சொன்னார். இந்தியாவின் நெ.1 டயரியை தயாரிப்பவர்கள் அவர்கள். தொழில்நிமித்தமாக அவர்களோடு எனக்கு முன்பு தொடர்பு இருந்தது. மனிதர் பார்க்க வடிவேலுவிடம் ‘செத்து செத்து விளையாடலாமா?' என்று கேட்ட முத்துக்காளை கெட்டப்பில் இருந்தார்.

“நெட்டுலே இமேஜஸ் தேடுவேன் சார். அப்போ யதேச்சையா எப்படியோ தமிழ்மணம் மாட்டிச்சி. உங்க பிலாக் எல்லாம் எனக்கு அப்படித்தான் அறிமுகம். ஒரு வருஷமா தொடர்ந்து உங்க பிலாக் படிக்கிறேன்”

“ரொம்ப நன்றிங்க!”

“ஆனா பாருங்க. உங்களை மாதிரி பெரிய எழுத்தாளர்கள் (யாரும் நகைக்க வேண்டாம், அவர் சீரியஸாக தான் சொன்னார்) அன்றாட மக்களின் பிரச்சினைகளை பத்தி எழுதறது இல்லே!”

”அன்றாட மக்களின் பிரச்சினைன்னா எதுங்க?”

“நான் திருவொற்றியூர் போகணும். ஒருநாள் மகாராணி ஸ்டாப்பிங்க்லே நின்னிக்கிட்டிருந்தேன். 28ஆம் நம்பர் பஸ்காரன் பஸ் ஸ்டேண்டுலே நிறுத்தாம ரொம்ப தள்ளிப்போய் நிறுத்தினான். இதுமாதிரி பிரச்சினைகளை எழுதணும் சார்! அப்போதான் சமூகத்துலே மாற்றம் வரும்!”

“நான் எழுதினா கூட 28ஆம் நம்பர் பஸ் ட்ரைவர் பிலாக்கெல்லாம் படிக்கமாட்டாரே?”

“அட என்ன சார், உங்க பிலாக்கையெல்லாம் கலைஞரே படிப்பாருன்னு (?) கேள்விப்பட்டிருக்கேன். இதுமாதிரி நீங்கள்லாம் எழுதினீங்கன்னா உடனே அரசு அதிகாரிங்கள்லாம் நடவடிக்கை எடுப்பாங்களே?”

“தோழா. நாமல்லாம் சமூகத்தை புரட்டிப் போடவெல்லாம் முடியாதுங்க. சமூகம் எப்பவும் ஒருக்களிச்சு தான் படுத்துக்கிட்டிருக்கும். அதுவா புரண்டு படுத்தாதான் உண்டு”

“என்ன சார் இப்படி சொல்றீங்க? எழுத்தாளர்கள் நினைச்சா எது வேணும்னாலும் பண்ண முடியும் சார்! பிரெஞ்சுப் புரட்சி எப்படி நடந்தது?”

“இது இந்தியாவாச்சே? அதுவுமில்லாம நானெல்லாம் வால்டரோ, ரூசோவோ கிடையாது!”

நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை, தொடர்ந்து அடம்பிடித்தார். சரி இனி அன்றாட மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை எழுதறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனேன். இதோ 28ஆம் நம்பர் பஸ் மகாராணி ஸ்டாப்பிங்கில் நிற்பதில்லை என்று எழுதிவிட்டேன். ஏதாவது புரட்சி ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.

இன்னும் கூட எங்களையெல்லாம் இவங்க நம்பிக்கிட்டிருக்காங்களே? :-)