29 ஆகஸ்ட், 2009

QUICK GUN முருகன்!


QUICK GUN முருகன் ஒரு மாட்டுப்பையன். அதாவது கவ்பாய். க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டை அப்பட்டமாக, அபத்தமாக காப்பி அடிப்பவன். அவனுடைய செயினில் தொங்கிக் கொண்டிருக்கும் லாக்கெட்டுக்குள்ளிருந்து, முருகனின் காதலி திட்டிக்கொண்டே இருக்கிறாள். ரைஸ்ப்ளேட் ரெட்டி என்ற மொக்கை வில்லனோடு கேணைத்தனமாக மோதிக் கொண்டிருப்பது முருகனின் வாடிக்கை. மேங்கோ டாலி என்ற குஜால் ஃபிகரும் முருகனை பிராக்கெட் போட முயற்சிக்கிறாள். ரைஸ் பிளேட் ரெட்டியிடம் வித்தியாசமான அடியாட்கள் உண்டு. கன்பவுடர் என்பவன் முருகனை மாதிரியே இன்னொரு முரட்டு கவ்பாய். ரவுடி, எம்.பி.ஏ, என்ற நவீன அடியாளும் ரைஸ்பிளேட் ரெட்டிக்காக உழைக்கிறான்.

முதல் பத்தியை படித்ததுமே குயிக்கன் முருகன் ரொம்ப சுவாரஸ்யமானவன் என்று நீங்கள் நினைத்துவிடலாம். சுவாரஸ்யமான் தீம் கிடைத்தும் ரொம்ப மொக்கையான பிரசண்டேஷனை தான் இயக்குனர் சஷாங்காகோஸால் தரமுடிந்திருக்கிறது. உடைகள், செட்டிங், கிராபிக்ஸ் எல்லாமே உலகத்தரம் என்று ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஆனால் தொழில்நுட்பத்தில் காட்டிய கவனத்தை உள்ளடக்கத்தில் காட்டத் தவறியதால் குயிக்கன் முருகன் அந்தோ பரிதாபமாகி விட்டிருக்கிறார்.

ஷாருக்கின் ஓம் சாந்தி ஓம் பார்த்திருப்பீர்கள். ஒரு போலி படப்பிடிப்புக் காட்சியில் நம்ம ரஜினிகாந்தை நக்கலடித்து கவ்பாயாக தூள் கிளப்பியிருப்பார் ஷாருக். அக்காட்சி குயிக்கன் இயக்குனருக்கு ஒரு முழுநீளப்படத்தை உருவாக்க இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம். நன்கு கவனிக்கவும். ஓம் சாந்தி ஓமில் பரோடி செய்யப்பட்டது நம்ம சவுத் இண்டியன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குயிக்கன்னிலோ க்ளிண்டன் ஈஸ்ட்வுட்டை பரோடி செய்ய முயன்றிருக்கிறார்கள். நம்ம ஊரு ஆட்கள் லட்சத்தில் ஒருவர் கூட ஈஸ்ட்வுட் படங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள். இதனாலேயே நம்ம படம் என்ற நேட்டிவிட்டி மிஸ்ஸிங் ஆகிறது. லுங்கி கட்டிக்கொண்டு தப்பாங்கூத்துதான் ஆடவேண்டும். பரதநாட்டியம் ஆடினால், செல்லாது.. செல்லாது..

டாக்டர் ராஜேந்திரபிரசாத் மிகச்சிறந்த நடிகர். காமெடி அனாவசியமாக முகபாவங்களில் எப்போதுமே தொக்கி நிற்கிறது. நடையும், உடையும், நடிப்பும் அபாரம். நீண்டநாள் கழித்து ரம்பா. அறிமுகப்பாடலில் இன்னமும் அவரது தொடை, பதிமூன்று ஆண்டுகள் கழித்தும் அதே பழைய வனப்போடு, கட்டுக்குலையாமல் இருப்பதை உணர்ந்து தமிழர்கள் உவகை அடைகிறார்கள். இரண்டு மூன்று காட்சிகளில் வெளிப்படும் அவரது திறந்த முதுகு பரந்த புல்வெளி மாதிரி மனசுக்கு மகிழ்ச்சி தருகிறது. பார்பீ பொம்மை மாதிரி அழகோ அழகாக இருக்கிறார் ரம்பா. ரைஸ்ப்ளேட் ரெட்டி நாசர் கெட்டப்புகளில் அசத்துகிறார். அவரே டப்பிங் கொடுக்காதது பெரிய மைனஸ் பாயிண்ட். கன்பவுடர் சண்முகராஜனுக்கு இன்னும் சில காட்சிகள் எக்ஸ்ட்ராவாக கொடுத்திருக்கலாம்.

படத்தின் இரண்டு பாடல்களும் சூப்பரோ சூப்பர். படமாக்கிய விதமும் அட்டகாசம். எல்லாமே இருந்தும் நல்ல கதையோ, திரைக்கதையோ அமையாததால், படக்குழுவினரின் உழைப்பு பீருக்கு தண்ணீர் மிக்ஸ் பண்ணி ஊற்றியது மாதிரி ஆகிவிடுகிறது. இந்த கேரக்டர்களை சிம்புதேவனிடம் தந்திருந்தால் அடி பின்னியிருப்பார். அடுத்து அவர் இயக்கும் ‘இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம்’ கவ்பாய் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.

இப்படம் லண்டன் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் படவிழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறதாம். ஒருவேளை ஆங்கிலத்தில் பார்த்தால் பக்காவாக இருக்குமோ என்னவோ. தமிழ் டப்பிங் படுமோசம். இந்தி விளம்பரப் படங்களை தமிழில் டப்புவார்களே அதுபோல த்ராபையாக வந்திருக்கிறது. வழக்கமாக ஆங்கிலப்படங்களை டப்படிக்கும் நம் ஆட்களிடமே கொடுத்திருந்தால் தூள் கிளப்பியிருப்பார்கள்.

குயிக்கன் முருகன் - சிக்கன் க்ரேவியோடு தரப்பட வேண்டிய தலப்பாக்கட்டு பிரியாணிக்குப் பதிலாக தயிர்சாதமும், வடுமாங்காயும் பரிமாறியிருக்கிறார்கள்!

28 ஆகஸ்ட், 2009

முதல் பாவம்!


ஏவாளுக்கு சஸ்பென்ஸ் தாங்கமுடியவில்லை. அந்த மரத்திலிருந்து மட்டும் ஏன் கனிகளை பறித்து சாப்பிடக்கூடாது என்று கடவுள் சொல்லி இருக்கிறார். மற்ற மரங்களை ஒப்பிடும்போது அந்த மரத்தில் தானே கனிகள் அதிகமாக காய்க்கின்றன. நல்ல சிகப்பில் பெரிய பெரிய கனிகளை கண்டதுமே சாப்பிட அவளுக்கு நாவூறுகிறது. ஆனாலும் கடவுளின் எச்சரிக்கை காதில் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

“உங்களுக்காக நான் படைத்த இந்த உலகில் நீங்கள் எங்கும் போகலாம், எதையும் சாப்பிடலாம். ஆனால் அதோ அந்த ஆப்பிள் மரத்தின் கனிகளை மட்டும் பறித்துவிடக்கூடாது. அதை பறித்து உண்டால் புனித உயிரிகளாய் வாழும் நீங்கள் சராசரி மனிதர்களாகி விடுவீர்கள். மனித உயிரிக்கு என்றிருக்கும் சில உணர்வுகள் உங்களுக்கு ஏற்பட்டு விடும். அது நல்லதல்ல, மீண்டும் சொல்கிறேன். அந்த மரத்து கனிகளை மட்டும் எடுத்து உண்ணாதீர்கள்”

கடவுள் சொன்னதில் 'சராசரி மனிதர்' என்ற வார்த்தைக்கு மட்டும் ஏவாளுக்கு இன்னமும் அர்த்தம் புரியவில்லை. ஆதாமுக்கு இதுகுறித்த எந்த பிரக்ஞையும் இல்லை. கடவுள் என்ன சொன்னாலும் அதை வேதவாக்காக எடுத்துக் கொள்கிறான். யோசனையுடன் நடந்தாள் ஏவாள்.

“ஏவாள். உங்களை நீங்களே எவ்வளவு காலத்துக்கு ஏமாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்?” புதரிலிருந்து குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தாள் ஆளில்லை ஒரு அரவம் மட்டும் புதருக்குள்ளிருந்து வெளிவந்தது.

“நீ எந்த வகையிலான உயிரி? இதுவரை உன்னை பார்த்ததில்லையே?”

“என் பெயர் சாத்தான். கடவுளுக்கு நிகரான சக்தி படைத்தவன்”

“அப்படியா? வணக்கம். உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஆதாமும் உன்னை சந்தித்தால் மகிழ்ச்சியடைவான்!”

“ஒரு நிமிடம். ஆதாம் ஒரு முட்டாள், உன்னைப்போல அவன் புத்திசாலி இல்லை. நான் சொல்லுவதை உன்னால் மட்டுமே புரிந்துகொள்ள இயலும்!”

ஆதாமை முட்டாள் என்றதுமே ஏவாளுக்கு கொஞ்சம் கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது. “சரி சொல். என்ன சொல்லப்போகிறாய்?”

“ஆப்பிள் மரத்தில் இருந்து கனிகளை பறித்து உண்ணக்கூடாது என்று கடவுள் சொன்னானில்லையா? அது ஏனென்று தெரியுமா?”

“தெரியாது!”

“இப்போது நீங்கள் கடவுளின் அடிமையாக இருக்கிறீர்கள். அந்த கனியை உண்டால் என்னைப் போல நீங்களும் சுதந்திர உயிர்களாக பரிமாணம் பெற்றுவிடுவீர்கள். உங்களுக்கு வெட்கம், கோபம், சூடு, சொரணை என்று எல்லா உணர்ச்சிகளும் வந்துவிடும். நீங்களும் கடவுளுக்கும், எனக்கும் இணையான சக்தி பெற்றுவிடுவீர்கள்!”

“அப்படியா? நீங்கள் சொன்ன உணர்வுகள் இல்லாமலேயே வாழ்வது சாத்தியமில்லையா?”

“சாத்தியமில்லை. இப்படியே எவ்வளவு நாட்களுக்கு நீயும், ஆதாமும் செக்குமாடு மாதிரி சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? ஆதாமை காதலிக்கும் எண்ணமே உனக்கு இல்லையா?”

”காதலா? அப்படியென்றால்?”

”அண்டத்தில் இருக்கும் உணர்வுகளிலேயே புனிதமான உணர்வு. இது கொடுக்கும் மகிழ்ச்சிக்கு இணையான மகிழ்ச்சியை யாராலும் தர இயலாது”

“காதல் உணர்வை அடைய நானென்ன செய்யவேண்டும்?”

“அந்த மரத்திலிருந்து ஆப்பிள் கனியை பறித்து உண்ணவேண்டும்”

ஏற்கனவே ஏவாளுக்கு அந்த கனியை உண்டால் என்ன என்ற எண்ணம் இருந்தது. அரவத்துடன் பேசிய பின்னர் காதல் உணர்வை அடையவேண்டுமென்ற ஆவலும் அதிகரித்தது. அம்மரத்தின் கனிகளை பறித்து உண்ண ஆதாமை வற்புறுத்தினாள்.

“வேண்டாம் ஏவாள். கடவுள் தான் நம்மை படைத்தார். அவர் அறிவுரையை நாம் பின்பற்ற வேண்டும்”

“கடவுள் நம்மை அவர் விளையாடும் பொம்மைகளாக தான் படைத்திருக்கிறார். காதல் உணர்வு உனக்கு வேண்டாமா ஆதாம்!”

“காதல் உணர்வா? அப்படியென்றால்?”

“கனியை பறித்து தின்போம். அதன் பின்னர் புரியும்!”

அரைகுறை மனதோடு ஆதாம் சம்மதித்தான். ஒரு கனியை பறித்து ஏவாளிடம் தந்தான். அவள் பாதி கடித்து தந்ததுமே இவன் மீதியை கடித்தான். உடனடியாக அவர்களுக்கு காதல் உணர்வு வரவில்லை. இதுவரை ஏவாளை சக உயிரியாக மட்டுமே பார்த்த ஆதாம் அவளை பெண்ணாக கண்டான். அவள் எதிரில் தான் ஆடையில்லாமல் இருப்பது குறித்து வெட்கம் கொண்டான். இதே நிலைதான் ஏவாளுக்கும், ஆதாமை விட அதிகமாய் வெட்கப்பட்டாள்.

ஆதாம் சில ஆப்பிள் இலைகளை பறித்து ஏவாளிடம் தந்தான், தானும் சில இலைகளை பறித்துக் கொண்டான். தங்களது அந்தரங்கப் பகுதிகளை ஆப்பிள் இலைகளால் மறைத்துக் கொண்டார்கள் இருவரும். உலகின் முதல் ஜட்டி ஆப்பிள் இலைகளால் உருவானது.

தியாகம்?


“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான்.

“அது ஒரு பெரிய கதை நவீனா!” மஜூம்தார் பதிலளித்தார். சமகால புரட்சி தமிழ் எழுத்துக்களை வாசித்தவர்கள் யாரும் மஜூம்தாரை புறக்கணிக்க முடியாது. மிகப்பிரபலமான மாற்று சிந்தனை எழுத்தாளர்.

“கதை கேட்பது எனக்கு பிடிக்கும் என்பது உனக்கு தெரியாதா? சொல்லு.. சொல்லு!” பேரன் கேட்கும் எல்லா கேள்விகளுக்குமே விடையளிப்பது மஜூம்தாருக்கு பிடித்தமான விஷயம். எழுதிக் கொண்டிருந்தவர் பேனாவை மூடிவிட்டு, கண்ணாடியை சரிசெய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

“நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக நடந்த விஷயம் அது. நீ பார்த்த தேசத்தலைவர் அப்போதெல்லாம் முழுமையான உடையை தான் அணிந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நம்முடைய மதுரைக்கு வந்திருந்தார். மதுரை தெரியுமில்லையா உனக்கு? ஒரு கோயிலுக்கு கூட கூட்டிச் சென்றிருக்கிறேனே?”

“தெரியும். மேலே சொல்லு!”

“மதுரையில் அப்போது நிறைய பேர் இப்போது நீ பார்த்தாயே அந்த தலைவரை போல தான் உடையணிந்திருந்தார்கள். அவர்களை பார்த்ததுமே அவருக்கு மனம் உடைந்துப் போனது. எனது நாட்டில் உடலை முழுமையாக மறைக்க உடை கூட இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்களே? என்று நொந்துப் போனவர், நானும் இனி இவர்களை போல தான் உடையணியப் போகிறேன் என்று தனது வழக்கமான உடைகளை துறந்தார்”

“சாகும் வரை இப்படித்தான் உடையணிந்திருந்தாரா?”

“ஆம். அரசியல் பேச்சுவார்த்தை நிமித்தமாக அயல்நாடுகளுக்கு சென்றபோது கூட இதே உடையோடு தான் சென்றார். எப்பேர்ப்பட்ட தியாகம் பார்!”

“இதிலென்ன தியாகம் இருக்கிறது? அவரது உடையை அவர் துறந்து விட்டதால் நாட்டில் எல்லோருக்கும் முழுமையான உடை கிடைத்து விட்டதா என்ன? அவர் உடையை துறந்து எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லையே? சென்ற வாரம் கூட ஒரு கட்டைவண்டி கிழவர் வெறும் கோவணத்துடன் வண்டி இழுத்துச் சென்றதை நீயும் தானே பார்த்தாய்?”

“மாற்றம் வந்துவிடவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் அவரது தியாகம் மெச்சக்கூடியது தானே? இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் நிலையை தன் உடையில் கூட அவர் பிரதிநிதித்துவப் படுத்தினாரே?”

“ரெட்டைமலை சீனிவாசன் என்பவரை பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இதே தலைவர் சென்ற அயல்நாடுகளுக்கு அவர் கோட்டும், சூட்டும் அணிந்து சென்றாரே? அம்பேத்கர் என்றதுமே நீலக்கலர் கோட், சிகப்பு கலர் டை அணிந்த உருவம் தானே நமக்கு நினைவு வருகிறது? இவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்கிறீர்களா?”

“உன்னிடம் பேசி என்னால் கூட ஜெயிக்க முடியாது. அந்த தலைவர் இந்த உடையில் இருந்ததில் உனக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நல்லவேளையாக நான் இப்போது இருக்கும் கோலத்தை கண்டு எந்தத் தலைவராவது உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்று விரும்புகிறேன்”

நவீனன் அப்போது ஜட்டி மட்டுமே அணிந்திருந்தான். ஒரு நாளைக்கு அறுபது முறை மின்சாரம் தடைபடும் நாட்டில் அவனுக்கு இந்த உடையோடு வீட்டில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.

27 ஆகஸ்ட், 2009

சவிதா அண்ணி!


விதா பாபி ஒரு நடுத்தர வயது குடும்பப் பெண். கொஞ்சம் மாடர்னாக இருப்பாள். சேலைதான் அணிவாள். கோதுமை நிறம். நல்ல உயரம். மதமதர்த்த உடல்வாகு. அந்தக் காலத்து கர்ணன் பட கதாநாயகிகள் மாதிரி மாராப்பு விஷயத்தில் தாராளம். திருமணமான இவருக்கு தனிப்பட்ட தாம்பத்ய வாழ்க்கையில் போதிய திருப்தி இல்லை. எனவே சவிதா எப்போதும் செக்ஸுக்காக அலைந்துக் கொண்டிருக்கிறாள். சவிதா என்பது அவள் பெயர். பாபி என்றால் இந்தியில் அண்ணி என்று பொருள்.

அவளுடைய காமத்தேவைகளுக்கு இரையாவது வீடு வீடாக பிரா விற்கும் சேல்ஸ்மேன், கிரிக்கெட் விளையாடும் ஸ்கூல் பசங்க, பேமிலி டாக்டர், கஸின்... இப்படியெல்லாம் வக்கிரமாக, வரைமுறையற்ற காம சிந்தனைகளோடு சித்தரிக்கப்படும் படக்கதைத்தொடர் (காமிக்ஸ்) ஒன்று இந்தியாவில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது தெரியுமா?

வேறெங்கு? நம்ம இண்டர்நெட்டில் தான். பல வருடங்களாக ‘பிட்டு, பிட்டாக’ ஆங்காங்கே போடப்பட்டு வந்த இந்த கதைத்தொடர், கடந்த மார்ச் 2008ல் பிரத்யேக தனி இணையத்தளம் ஒன்றில் தோன்றி சக்கைப்போடு போட்டது. குறிப்பிட்ட அந்த இணையத்தளத்தில் வெகுவிரைவில் ஐம்பதாயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்தார்கள். மாதத்துக்கு ஆறு கோடி முறை அந்த இணையத்தளம் ரசிகர்களால் சுடச்சுடப் பார்வை இடப்பட்டது. இந்தியாவில் அதிகம் பார்வையிடும் இணையத்தளங்களின் பட்டியலில் 82வது இடத்தைப் பிடித்த இணையத்தளம் அது. ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட பத்து இந்திய மண்டல மொழிகளிலும் இந்த களத்தில் கதைகளை படிக்கலாம்.

அப்படி என்னதான் சவிதாபாபி இணையத்தளத்தில் இருக்கிறது என்று குறுகுறுப்பு வருமே?
சவிதா ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்டில் வசிக்கிறாள். அவளது கணவன் அசோக் ஒரு தேவாங்கு. கம்பெனி ஒன்றில் நேரம் காலம் பார்க்காமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். வீட்டு வேலை பார்ப்பதில்லை. தாம்பத்யம் அவனுக்கு எப்போதாவது தொட்டுக்கொள்ள ஊறுகாய் மாதிரி.

சவிதாவோ தாம்பத்திய சுகத்துக்கு ஏங்குகிறாள். வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனில் தொடங்கி, அவளுடன் பழகும் பல ஆண்களோடு திகட்ட, திகட்ட உறவு கொள்ளுகிறாள். கடைசியாக ஒரு பிரபல நடிகனோடும் கூட. சவிதாவின் செக்ஸ் அனுபவங்கள் மட்டுமே சதைகள். மன்னிக்கவும், கதைகள். கதைகளுக்கான தலைப்புகள் கூட வித்தியாசமாக இருக்கும். உதாரணத்துக்கு, சேல்ஸ்மேன் கதைக்கு “பிரா விற்பனையாளனின் விசிட்”,
நம்மூரின் வழக்கமான மூன்றாந்தர பிட்டு படங்களின் கண்ணறாவி கதைகள் தான் சவிதா பாபி கதைகளும். மொத்தம் பண்ணிரண்டு கதைகள் இந்த தொடரில் வண்ணச் சித்திரங்களோடு வெளிவந்திருக்கிறது. சவிதா கதை சொல்வதைப் போன்ற பாணியிலேயே எல்லாக் கதைகளும் அமைந்திருக்கின்றன. நகைச்சுவையும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால் பெண்களுக்கான பாலியல் சுதந்திரம் குறித்த பார்வையை தருகிறோம், ‘இந்தியப் பெண்களுக்கும் செக்ஸ் ஆசைகள் உண்டு’ (?) என்கிற யதார்த்தத்தை உலகுக்கு சொல்கிறோம் என்ற போர்வையில் அருவருக்கத்தக்க, வரைமுறையில்லாத செக்ஸ் கதைகளாக போட்டுத் தள்ளியிருக்கிறார்கள். இந்தியக் கலாச்சாரத்தில் மதிப்போடு பார்க்கப்படும் ‘அண்ணி’ என்ற உறவுமுறையை இதற்காக பயன்படுத்திக் கொண்டதும் ஆபாசத்தின் உச்சம்.

யிரக்கணக்கான செக்ஸ் இணையத்தளங்கள் இருக்க, சவிதா பாபி தளம் அடைந்த பரபரப்பான புகழுக்கு ஒரே ஒரு காரணத்தை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். “எல்லா இணையத் தளங்களிலும் எடுத்த உடனேயே ‘முழுக்க’ காட்டி விடுகிறார்கள். ஒரேயடியாக எல்லாமே புஸ்ஸென்று அடங்கிப் போய்விடுகிறது. ஆனால் சவிதா பாபியோ கதைகளின் ஆரம்பத்தில் புடவை அணிந்திருக்கிறாள். செந்தூரம் வைத்திருக்கிறாள். தாலி கட்டியிருக்கிறாள். ஒவ்வொரு கதையிலும் கொஞ்சம் கொஞ்சமாக டெம்போ ஏற்றுகிறாள். ஒவ்வொன்றாக அவிழ்க்கிறாள். இந்தப் போதை அளப்பறியது. அனுபவித்து பார்த்தால் தான் புரியும்” என்கிறார்கள்.

இத்தனைக்கும் மற்ற செக்ஸ் தளங்களில் நேரடியாக பெண்களின் அரை மற்றும் முழு நிர்வாணமாக போட்டோக்களே உபயோகப்படுத்தப் படுகிறது. சவிதா பாபியிலோ ஓவியரால் வரையப்பட்ட படங்கள்தான். “டைரக்ட் போட்டாவா இருந்தாலும் கூட சில ஆங்கிள்ஸை ரசிக்க முடியாது. சவிதா பாபியிலே வரையப்படுற ஆங்கிள்ஸ் நாம சற்றும் எதிர்பார்க்காதது. நம்ம கற்பனைக் குதிரைய தட்டிவிட்டு, தடதடன்னு ஆர்வத்தை தூண்டுது” என்று கிறங்கிப்போய் கிசுகிசுக்கிறார்கள் ரசிகர்கள்.

சவிதாபாபியை நடத்துபவர்கள் ஐரோப்பாவில் இருக்கிறார்கள் என்கிறார்கள். இந்தியாவில் போர்னோ சைட்டுகள் (செக்ஸ் இணையத்தளங்கள்) நடத்த தடை இருப்பதாலேயே, வெளிநாட்டு சர்வரில் இருந்து நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இண்டியன் போர்ன் எம்பயர் என்ற நிறுவனத்தின் பேரில் இந்த தளம் பதியப்பட்டிருக்கிறது. இந்த அற்புதமான இலக்கியத்தை எழுதுபவர் தேஷ்முக் என்றும் ஓவியங்கள் வரைபவர்கள் டெக்ஸ்டார் மற்றும் மேட் என்றும் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இவை பொய்யான புனைபெயர்கள்.

இந்த தளம் சரியாக சர்ச்சைக்கு கச்சை கட்டியது ஒரு நடிகனோடு சவிதா சல்லாபித்த கதை வந்தபோது. நடிகராக சித்தரிக்கப்பட்டு வரையப்பட்டது அமிதாப் பச்சனின் உருவம் என்பதால் வட இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செக்ஸ் கதையில் எப்படி அமிதாப்பை தவறாக சித்தரிக்கலாம் என்று அவரது ரசிகர்கள் பாய்ந்தார்கள். ஆனால் தளத்தை நடத்துவது யாரென்றே தெரியாத நிலையில், காற்றில் கத்தி சுத்துவதைப் போல சில நாட்களுக்கு கொந்தளித்துவிட்டு பிறகு வேறு வழியில்லாமல் அடங்கிப் போனார்கள். இதே நேரத்தில் மும்பை மீடியாக்கள் பலவும் சவிதாபாபி தளம் குறித்த ஆபத்தை இந்திய கலாச்சார அமைச்சகத்துக்கு அலாரம் அடித்தார்கள். வழக்கம் போல பிரச்சினை கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.

விதாபாபிக்கு இரையானவர்கள் பெரும்பாலும் டீனேஜர்கள். குறிப்பாக மாணவர்கள். இந்த கதைவரிசையை தொடர்ந்து வாசித்து வந்த பள்ளி மாணவன் ஒருவன், தனது ஆசிரியைக்கு ஆபாசமான எம்.எம்.எஸ். ஒன்றினை அனுப்பியபோது பெங்களூரே அதிர்ந்துப் போனது. இத்தனைக்கும் பயல் ஐந்தாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தான். அவசர அவசரமாக கர்நாடகா காவல்துறையின் சைபர் கிரிம் பிரிவு சவிதாபாபி தளத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதுமட்டுமன்றி தொடர்ந்து வந்த பல புகார்களின் அடிப்படையிலும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் சவிதாபாபி தளத்தை தடை செய்தது. ஆபாசம், ஆணாதிக்கம், பெண்களை பலவழிகளிலும் கொச்சைப்படுத்துவது என்று காரணங்களை அடுக்கியது. இந்த தளம் பொதுமக்கள் பார்வைக்கு தெரியப்படுத்தப்படக் கூடாது என்று இண்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சேவை நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டது.

சவிதாபாபியை தரிசிக்கும் கோடிக்கணக்கானவர்களில் 80 சதவிகிதம் பேர் இந்தியர்களாகவே இருந்தார்கள். இந்தியாவில் முடக்கப்பட்டதால் தளம் ஆட்டம் கண்டு விட்டது. உடனே தளத்தை நிர்வகித்து வந்தவர்கள் ‘சேவ் சவிதா’ (சவிதாவை காப்பாற்றுங்கள்) என்றொரு அமைப்பை இண்டர்நெட்டில் நிறுவி, இந்திய அரசுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள்.

“ஆயிரக்கணக்கான செக்ஸ் தளங்கள் இந்தியாவில் காணக்கிடைக்கையில் சவிதாபாபிக்கு மட்டும் ஏன் தடை என்று இந்தியர்களில் யாராவது ஒருவர் தகவல் அறிமை உரியும் சட்டத்தைப் பயன்படுத்தி அரசை கேள்வி கேட்கவேண்டும். நாங்கள் ஐரோப்பாவில் இருப்பதால் இதுபற்றி இந்திய அரசிடம் பேசமுடியவில்லை” என்று தளத்தை நிர்வகித்து வந்ததாக கூறப்பட்ட தேஷ்முக் கேட்டுக் கொண்டார்.

இதுவரை தளத்தை ரசித்து வந்தவர்களாக இருந்தாலும், தடை என்றதும் பலரும் பதுங்க ஆரம்பித்தார்கள். சவிதாவுக்கு ஆதரவாக அரசை எதிர்த்து யாரும் சவுண்டு விட தயாராக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் பொறுத்துப் பார்த்த நிர்வாகம் பூனைக்குட்டி மாதிரி நைசாக வெளியே வந்தது. புனீத் அகர்வால் என்பவர் தளத்தை தான் நடத்தி வந்ததாக ஒத்துக் கொண்டார். சவிதாபாபி தளத்தின் சேவைகளை உடனடியாக நிறுத்திக் கொள்வதாக அறிக்கையும் விட்டார். இவர்தான் தேஷ்முக் என்ற பெயரில் தளத்தின் நிர்வாகியாகவும், கதையாசிரியராகவும் இருந்தவர்.

“சவிதாபாபியின் சொந்தங்களே! கனத்த இதயத்தோடும், கண்களில் வழியும் கண்ணீரோடும் சவிதாபாபி தளத்தின் சேவைகளை நிறுத்திக் கொள்கிறேன். இதுவரை ஆதரவு கொடுத்த வந்தவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை. சொந்த குடும்பப் பிரச்சினைகளால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன்!” என்று செண்டிமெண்டலாக அறிக்கை விட்டு தப்பித்துக் கொண்டார். கொஞ்சநஞ்ச நம்பிக்கையோடு மீண்டும் சவிதாபாபி வருவாள் என்று ஆவலோடு ஜொள்ளு விட்டு, கணினி மேல் விழிவைத்து காத்திருந்தவர்கள் நொந்துப் போனார்கள்.
சவிதாபாபியின் சகாப்தம் இந்த ஜூலை மாதத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது.

செக்ஸ் தளங்கள் எதுவும் இந்தியாவிலிருந்து அனுமதி பெற்று செயல்பட முடியாது. அதே நேரம் அயல்நாடுகளில் தினமும் ஆயிரக்கணக்கான தளங்கள் அஜால் குஜாலாக , புதிது புதிதாக, புற்றீசல் மாதிரி தொடங்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சவிதாபாபியின் வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற மகத்தான வெற்றிக்குப் பிறகு, குறிப்பாக இந்தியப் பெண்களை ஆபாசமாக சித்தரித்து ஏராளமான தளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட முப்பதாயிரம் இணையத் தளங்கள் இவ்வகையில் இருப்பதாக கணக்கெடுப்புகள் தெரிவிக்கிறது. இவற்றில் மூவாயிரம் தளங்கள் தொடர்ந்து கொலைவெறியோடு இயங்கி வருகிறது என்பது முக்கியமானது. ஒரு சவிதாபாபியை முடக்கிவிட்ட இந்தியா, மீதியிருக்கும் முப்பதாயிரத்து சொச்சம் தளங்களை என்ன செய்யப்போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.

நம்ம ஊரில் கூட சில வருடங்களுக்கு முன்பாக பெண்களை ஆபாசமாக படம் பிடித்து இணையத்தளங்களில் பிரசுரித்ததாக கூறி ஒரு டாக்டர் கைதானார். அவர் மேல் பல பிரிவுகளிலு வழக்கு தொடரப்பட்டு இன்னமும் சிறையில் இருக்கிறார். எல்லாம் ஓக்கே. ஆனால் அவர் நடத்தி வந்த இணையத்தளம் இன்னமும் வெற்றிகரமாக நடந்துகொண்டு தானே இருக்கிறது? டாக்டர் எடுத்த செக்ஸ் படங்கள் இன்னமும் அத்தளத்தில் இருக்கத்தானே செய்கிறது? காரணம். அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு நடத்தப்படும் தளம் அது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் அனுமதி பெற்று செக்ஸ் தளங்களை நடத்திக் கொள்ளலாம். இண்டர்நெட் பாவிப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் பன்மடங்காக பெருகி வருவதால், இந்தியர்களை குறிவைத்து அயல்நாடுகளில் இருந்து ஆபாசத்தளங்களை நடத்தி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக இந்தத் தளங்களை இங்கே இருப்பவர்கள் பார்வைக்கு தடை செய்வதுதான் இதற்கிருக்கும் ஒரே தீர்வு. அப்படியில்லாமல் ஏதோ ஒரு தளத்தை அப்போதைக்கு தடை செய்து, ஆயிரம் தளங்களை சுதந்திரமாக விட்டு வைத்திருப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

வளைகுடா நாடுகளில் வழங்கப்படும் இண்டர்நெட் சேவையில் இப்பிரச்சினைக்கு சரியான முன்னுதாரணம் உண்டு. அந்நாடுகளில் ஆபாச இணையத்தளங்களை பயனாளர்கள் பாவிக்க முற்றான தடை உண்டு. இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களே இணையத்தளங்களை வடிகட்டி அனுப்புவதால் தடை வெற்றிகரமாக தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவும் வளைகுடா நாடுகளை இவ்விஷயத்தில் பின்பற்றுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய நேரமிது.


(நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்)

24 ஆகஸ்ட், 2009

சென்னை-பை-நைட்


'பாரிஸ் பை நைட்' என்பார்கள். அந்த லெவலுக்கெல்லாம் சென்னை எப்போதும் இருந்ததில்லை, எதிர்காலத்தில் மாறலாம். பத்து, பதினைந்து ஆண்டுகளாக சென்னையின் இரவுகளை உன்னிப்பாக கவனித்ததில் ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது. சென்னைவாசிகளுக்கு தூக்கம் முக்கியம். பத்து மணி ஆனாலே அலாரம் அடித்தது மாதிரி தூங்கப் போய்விடுகிறார்கள் அல்லது சன் டிவியில் பத்தரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்குகிறார்கள். கால் சென்டர்களிலும், பிபிஓக்களிலும், பத்திரிகைகளிலும், சினிமாக்களிலும், விளம்பரத்துறையிலும், அச்சுத்துறையிலும், இன்னும் சில துறைகளில் பணிபுரியும் கோட்டான்கள் தவிர்த்து மீதி அனைவருமே தூக்கப் பிரியர்கள். செக்யூரிட்டிகளும், காவலாளிகளும் கூட உட்கார்ந்த இடத்திலேயே இங்கு தூங்கிப் பழகியவர்கள்.

ஓவராக குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வழி தெரியாதவர்களும், வானமே கூரையாய் வாழ்பவர்களும் பிளாட்பாரங்களில் ஒதுங்கி வாழ்கிறார்கள். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாசாலை பிளாட்பார தூங்குமூஞ்சிகளை நிறைய கண்டிருக்க முடியும். 'சென்னை ஈஸ் எ காஸ்மோபாலிட்டன் சிட்டி, நேஸ்ட்டி அக்லி சிடிசன்ஸ்' என்று முகஞ்சுளித்தவர்கள் புண்ணியத்தால் இப்போது அண்ணாசாலை பிளாட்பார்ம்கள் வெறிச்சோடிப் போயிருக்கிறது. கே.கே.நகர், வடபழனி பிளாட்ஃபார்ம்கள் பரபரப்பாகியிருக்கிறது.

தினமலர் காலத்தில் என்னுடைய டிவிஎஸ் சேம்ப் தின அண்ணாசாலை பரபரப்புக்கும், இப்போதிருக்கும் அண்ணாசாலை பரபரப்புக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. அப்போதும் சரி, இப்போதும் சரி ஸ்பென்சர்ஸ்க்கு எதிரில் இருக்கும் காவல்நிலையத்தை தாண்டுவது அடிவயிற்றில் புளியைக் கரைக்கும் விஷயம். அப்போதாவது பரவாயில்லை “ப்ரெஸ்சுங்க” என்று மிதப்பாக சொன்னால் சலாம் விட்டு அனுப்பி வைப்பார்கள். இப்போது “ப்ரெஸ்” என்று சொன்னாலும் டவுசரைக் கயட்டி செக் செய்து தான் அனுப்புகிறார்கள். பேருந்து நிலையம் கோயம்பேடுக்கு போய்விட்டதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை, மைக்கேல் ஜாக்சனை உச்சபட்ச ஒலியில் அலறவிட்டுப் பறக்கும் நவீனரக கார்கள் வெற்றிகரமாக நிரப்புகின்றன. இரவுகளில் டூவீலர் மாதவன்கள் லேன் மாறி ஓட்டுவது உயிருக்கு ஆபத்து.

பிலால் இருந்தவரை நைட்டு ஒரு மணிக்கெல்லாம் கூட பிரியாணி சுடச்சுட கிடைக்கும். பிலால் இல்லாத குறையை அண்ணாசாலை மசூதிக்கு எதிரிலிருக்கும் ஒரு ஹோட்டல் சரிகட்டுகிறது. மதுரையில் அதிகாலை ஒரு மணிக்கு கூட இட்லி கிடைக்கும் என்பார்கள். சென்னையில் பொதுவாக பதினொன்று, பதினொன்றைக்கு மேல் உணவு கிடைப்பது சிரமம். பாண்டிபாஜார் டீலக்ஸை மட்டும் நம்பிப் போகலாம். தெருவோர பிரியாணி கடைகளும், கையேந்தி பவன்களும் கூட குடிகாரர்கள் தொல்லையாலும், போலிஸின் அதிகாரத்தாலும் பத்தரை மணிக்கே மூட்டை கட்டிவிடுகிறார்கள்.

கமிஷனர் சேகர் பதவி ஏற்றாலும் ஏற்றார், பலராம் நாயுடுவுக்கு வந்த சிக்கல்கள் மாதிரி சிக்கலோ சிக்கல். பிரஸ்மீட்களில் கம்பீரமாக முழங்கினாலும் சைக்கோ கொலைக்காரன் தண்ணி காட்டுகிறான். போதாக்குறைக்கு பெங்களூர், ஆமதாபாத் குண்டுவெடிப்புகள் போலிசாருக்கும், சென்னைவாசிகளுக்கும் பீதியையும், பேதியையும் சமவிகிதத்தில் கொடுத்திருக்கிறது. பெண் போலிசாரை நைட் ரவுண்ட்ஸில் முன்பெல்லாம் காணமுடியாது. ஆள் பற்றாக்குறை போலிருக்கிறது. பெண் போலிசாரும் ஆங்காங்கே ”வாயை ஊது!” என்று சோதித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பையை நோண்டி டிபன்பாக்ஸை திறந்து பார்க்கிறார்கள். குண்டுகள் கடத்த டிபன்பாக்ஸ் தான் சவுகரியம் போலிருக்கிறது.

இரண்டு நாட்கள் முன்னதாக நீண்டநாள் கழித்து சென்னையை இருசக்கர வாகனத்தில் ஒரு ரவுண்டு அடிக்க முடிந்தது. சைக்கோ பீதி, வெடிகுண்டு பயம் இதையெல்லாம் நேரில் காண ஆவல். பண்ணிரண்டரை மணிவாக்கில் தேவி தியேட்டருக்கு அருகிலிருந்து கிளம்பியவன் அண்ணாசாலை காவல்நிலையத்தை தவிர்க்க வேண்டி (வாயை ஊத சொல்லிட்டாங்கன்னா சங்காச்சே?) லெப்ட் அடித்து மணிகூண்டை அடைந்தேன். இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை மருத்துவமனை வழியாக போயிருக்க வேண்டும். அங்கிருக்கும் ராயப்பேட்டை காவல்நிலையத்தை தாண்டிச் செல்லவேண்டுமென்ற விதி இருந்ததால் நேராக திருவல்லிக்கேணிக்கு வண்டியை விட்டேன். ராயப்பேட்டையில் மாட்டினால் உடனடியாக ராயப்பேட்டை ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்று டிரிங் & ட்ரைவ் சர்ட்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். பீச் ரோட்டில் பொதுவாக ஓவர்ஸ்பீடாக வருகிறானா என்றுதான் பார்ப்பார்கள், நார்மல் ஸ்பீடில் செல்பவனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதால் பீச் ரோடை தேர்ந்தெடுத்தேன்.

முன்பெல்லாம் இரவுகளில் பீச் ரோட்டில் ஆட்டோ ரேஸ் நடக்கும். போலிஸ்காரர்களின் நெருக்கடியால் பீச் ரோட்டில் நடந்த ரேஸ் இப்போது சாந்தோமில் இருந்து சத்யா ஸ்டுடியோ வரை நடக்கிறதாம். அதிவேக கொலைவெறி ஆட்டோக்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள விரும்பாமல் சாந்தோமில் இருந்து ரைட் அடித்து மயிலைக்கு வந்தேன். மயிலாப்பூர் போலிஸ் ஸ்டேஷனை தவிர்க்க தினகரனுக்கு முன்பாக வந்த ஏதோ ஒரு சந்தில் நுழைந்து கபாலீஸ்வரர் கோயிலை தொட்டு, குளத்தை சுற்றி மந்தைவெளியை நோக்கி வண்டியை முறுக்கினேன். எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்து விட்டது. மேற்கு மாடவீதியும், வடக்கு மாடவீதியும் சந்திக்கும் சந்திப்பில் போலிஸ் செக்கப். ஒரு பெண் போலிஸ் சுறுசுறுப்பாக வண்டி டாக்குமெண்டுகளை டார்ச் அடித்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஃபோர்டு ஐகானில் இருபதுகளில் ஆறு பேர் அதிவேகமாக வந்து பிரேக் அடித்து நின்றார்கள். ‘கண்களிரண்டால்' பாட்டை சத்தமாக அதிரவிட்டிருந்தார்கள். டிரைவர் சீட்டில் இருந்தவர் காரிலிருந்தபடியே டாக்குமெண்ட்களை காட்டினார். ”வாயை ஊதுங்க” என்று சொன்னதுமே “டாக்குமெண்ட்ஸ் சரியா இருக்கில்லே? அப்புறம் எதுக்கு வாயை ஊதச்சொல்றே?” என்று ஒருமையில் போலிஸ்காரரை கேட்டதுமே, கோபமடைந்த போலிஸ்காரர் வண்டிச்சாவியை பிடுங்கிக் கொண்டுப் போனார்.

பயத்தில் ஹெல்மெட்டை கழட்டாமலேயே டாக்குமெண்ட்ஸை காட்டினேன். ”பாலிசி பேப்பர் வர ஒரு வாரமாகும். இன்சூரன்ஸ் ரிசீப்ட் மட்டும் இருக்கு” என்று சொல்லிவிட்டு என் கம்பெனி ஐடெண்டிகார்டை காட்டினேன். நல்ல வேளையாக அந்த பெண் போலிஸ் வாயை ஊத சொல்லவில்லை. மாணிக்சந்தையும், பாஸ் பாஸையும் சரிவிகிதத்தில் மிக்ஸ் செய்து போடுபவன் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவன். ஃபோர்டு ஐகான் காரரிடம் “பேரு சொல்லுங்க சார்!” என்றவாறே நகர்ந்தார் அந்த பெண் போலிஸ். “நான் அட்வகேட்” என்று ஃபோர்டு சொல்ல, “பேரை தான் கேட்டேன், ப்ரொபஷனை கேட்கலை!” என்று கடித்துக் கொண்டிருக்க நூறு ரூபாய் மிச்சமான குஷியில் வண்டியைக் கிளப்பினேன்.

இரண்டாண்டுகளுக்கு முன்புகூட மந்தைவெளி பஸ்ஸ்டாண்டை சுற்றி நிறையப் பேர் பிளாட்பார்ம்களில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். இப்போது வெறிச்சோடியிருக்கிறது. சைக்கோ பீதி. அடையார் பிரிட்ஜ் அமைதியாக இருந்தது. வழியெங்கும் பிளாட்பார்ம் வாசிகளை எங்கேயுமே காணமுடியவில்லை. மத்திய கைலாஷை தவிர்க்கவே முடியவில்லை. சாதாரண நேரத்திலேயே அங்கே வசூல்ராஜாக்கள். இரவில் சொல்லவும் வேண்டுமா?

பத்து கார்கள், இருபது டூவீலர்கள் மடக்கப்பட்டிருந்தன. கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்தவாறே பைக்கை ஓரம் கட்டினேன். கார்களின் டிக்கிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ப்ரகாஷ்ராஜ் ஜாடையில் இருந்த போலிஸ்காரர் ஒருவர் ஹெல்மெட்டையெல்லாம் கழட்ட சொல்லவில்லை. ”ஐடெண்டி கார்டு மட்டும் காட்டு, குடிச்சிருக்கியா, ஆர்சி புக் இருக்கானெல்லாம் கேட்கமாட்டேன்” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ஐடெண்டி கார்டை காட்டியதுமே நன்றி சொல்லி அனுப்பிவைத்தார்.

சென்னையில் ஒரு பிரச்சினை. பதினொரு மணிக்கு மேல் தம் அடிப்பதற்கும், பாக்கு போடுவதற்கும் பொட்டிக்கடைகளே இருக்காது. ரெகுலர் தம்மர்கள் பாக்கெட்டாக வாங்கி ஸ்டாக் செய்துகொள்வார்கள். திருட்டு தம்மர்கள் பாடு தான் திண்டாட்டம். ஏதாவது பொட்டிக்கடை இருந்தாலாவது லூசில் வாங்கி அடிக்கமுடியும். தரமணி ரோட்டில் டிசிஎஸ் அருகே இருபத்தி நாலுமணி நேர பொட்டிக்கடை ஒன்று மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகிறது. எந்த நேரத்திலும் டீ, சமோசா, சிகரெட், பாக்கு தாராளமாக கிடைக்கிறது.

வேளச்சேரி விஜயநகரில் ஆட்டோக்காரர்களை தவிர்த்து யாரையுமே காணோம். போலிஸ் விழிப்பாக இருக்க வேண்டிய ஜங்ஷன் அது. வேளச்சேரி மேம்பாலத்தில் முன்பெல்லாம் அடிக்கடி ஷூட்டிங் நடக்கும், (அறிந்தும் அறியாமலும், வேட்டையாடு விளையாடு, பரட்டை (எ) அழகுசுந்தரம் etc.) இரவுகளில் பரபரப்பாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் இயங்க ஆரம்பித்தப் பிறகு சினிமாக்காரர்கள் ஏனோ அந்த மேம்பாலத்திடம் பாராமுகம் காட்டுகிறார்கள்.

மடிப்பாக்கம் சதாசிவம் நகர் சுடுகாட்டுக்கு அருகே இருக்கும் சொறி நாய்கள் எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் அனாயசமாக ஓடுகின்றன. டூவீலர்காரர்கள் சிகாகோ பேண்டோடு வீட்டுக்கு போகவேண்டியிருக்கிறது. ஒன்றரை மணிக்கு வீடு போய் சேர்ந்தேன். சென்னை மாநகர, புறநகர காவலர்களிடம் மாணிக்சந்த் உதவியால் தப்பினாலும் வீட்டில் மாட்டிக்கொள்ளும் ஆபத்து அதிகம். திக்கற்றவர்களுக்கு கொய்யா இலையே துணை. வீட்டிற்கொரு கொய்யா மரம் வளர்ப்போம்.

பிறந்தநாள்!


காலையில் இருந்து ரத்தக்கண்ணீர் செகண்ட் ஹாஃப் எம்.ஆர்.ராதா மாதிரி புலம்பிக் கொண்டிருக்கிறேன்.

முன்பெல்லாம் பிறந்தநாள் வந்தால் புது டிரஸ் கிடைக்கும். பள்ளிக்கு அன் யூனிபார்மில் போகலாம். எல்லோருக்கும் சாக்லேட் கொடுக்கலாம். அன்றைக்கு மட்டுமாவது யாரும் அடிக்க மாட்டார்கள், திட்டமாட்டார்கள். இதே சலுகை நியூ இயருக்கும் உண்டு. அந்த தேதிகளில் அடி வாங்கினால், வருஷம் முழுக்க அடிவாங்கிக் கொண்டே இருப்போமாம். கோயிலில் அர்ச்சகர் ‘மோகனகிருஷ்ணகுமார நாமஸ்தேயே’ என்று ஏதோ சொல்லுவார். அர்ச்சகரால் பலபேருக்கு முன்பாக நம் பெயர் உச்சரிக்கப்படும் போதை சுகமானது.

ஏழெட்டு வயதில் கமல்ஹாசன் மாதிரி ஸ்டெப்கட்டிங்குக்கு ஆசைப்பட்டு, அம்மாவின் கட்டாயத்தால் அது நடக்காமல் குருதிப்புனல் கமல் மாதிரி ‘அரைவட்டை’ அடித்துக் கொண்டிருந்த வயதுகளில் ஒவ்வொரு பிறந்தநாளும் எதிர்பார்ப்பை கூட்டிக்கொண்டே இருந்தது. ‘எனக்கும் வயசு ஆவுதுல்லே. ஒரு நா இல்லாக்கா ஒரு நா ஸ்டெப்கட்டிங் வெட்டிப்பேன்’. ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொள்ளும் வயது வந்தபோது, அது ஓல்டு பேஷன் ஆகிவிட்டது வருத்தமான சோகம். அதே போல பெருத்த எதிர்ப்பார்ப்போடு இருந்து, இழந்த இன்னொரு விஷயம் பேக்கீ பேண்ட். தகுந்த வயது வரும்போது பேரல்லல் பேஷன் ஆகிவிட்டது.

கைவலிக்க ஹோம் ஒர்க் எழுதும் காலத்தில் வேலைக்குப் போகிறவர்களை பார்த்து பொறாமையாக இருக்கும். ’அவங்களுக்கு எந்த கமிட்மெண்டும் இல்லை. வேலை முடிஞ்சா ஜாலி, சினிமாவுக்குப் போகலாம், ஊர் சுற்றலாம்’. அதிலும் பஸ்ஸில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு ஏதாவது பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால், ‘நானும் பெரியவனாகி இதே மாதிரி குமுதம், விகடன் வாங்கிப் படிக்கணும்’ என்று நினைத்துக் கொள்வேன். அனேகமாக நான் சிறுவயதில் ஏங்கிக் கொண்டிருந்தது ‘தேர்ந்தெடுக்கும் உரிகைக்காக’ என்று நினைக்கிறேன். இப்போது இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால், சின்னப்பயலாக இருக்கும்போது எல்லோரையும் போலவே நானும் எவ்வளவு அபத்தமாக சிந்தித்திருக்கிறேன் என்பது புரிகிறது.

மீசை என்று சொல்லிக்கொள்ளும்படி ஏதாவது முளைக்காதா என்று ஏங்கில காலமும் இருந்தது. சரியாக முளைக்காத மீசையை கத்தையாக காட்டிக்கொள்ள கோத்ரேஜ் ஹேர் டை ஸ்டிக் எடுத்து தடவைக்கொண்டதும் நினைவுக்கு வருகிறது. உங்களைவிட ஒருவயது குறைந்த பெண், உங்கள் தோற்றத்தைக் கண்டு குறைவாக மதிப்பிட்டு, ‘தம்பி’ என்று அழைத்த கொடுமையை நீங்கள் அனுபவித்தது உண்டா? எப்படியோ மீசை என்ற வஸ்து முளைத்த பிற்பாடு லேசாக ‘வயதாகி விட்டதோ!’ என்றொரு ஃபீலிங்கும் வந்ததுண்டு. இதனாலேயே நன்கு வளர்ந்த மீசை முடிகளின் அடர்த்தியை கத்தரிக்கோல் கொண்டு குறைத்ததும், அப்படியும் லேசாக கண்ணுக்கு கீழே உருவாகிய கருவளையம் கொண்டு கவலை அடைந்ததும் மறக்கக் கூடிய விஷயங்களா?

பூஞ்சை உடம்பைக் கண்டு வெறுத்துப்போய் ஒயின்ஷாப்பில் தினமும் பீர் அடித்து (சளிபிடித்து), அப்படியும் உடம்பு ஏறாமல் சொப்பன ஸ்கலித டாக்டர்களிடம் போகலாமா என்று ஆலோசித்து, அதுவும் சரிபடாமல் ‘வாட்டர்பரீஸ் காம்பவுண்ட்’ குடித்து, அரைகுறையாய் எக்சர்ஸை செய்து, உடல் வலித்து... ச்சே... கொடுமையானது மானிடப்பிறவி!

இப்போது பிறந்தநாள் என்றாலே பகீர் என்கிறது. ட்ரீட் மாதிரி விஷயங்களில் பர்ஸு பழுத்து விடுகிறது என்ற சோகம் ஒருபுறம் இருந்தாலும், உயிர்வாழும் நாட்களில் ஒரு வருடம் குறைகிறது என்ற யதார்த்தம் முகத்தில் அறைகிறது. ’மவனே உனக்கு சாவு நெருங்குதுடா’ என்று காலண்டர் பயமுறுத்துகிறது. அவசர அவசரமாக சம்பாதிக்க வேண்டிய தேவையை உணரமுடிகிறது. பணத்தை தேடி அசுர ஓட்டம் ஓட வேண்டியிருக்கிறது. நாற்பது வயதில் இந்த ஓட்டத்தை பலரும் ஓடி முடித்து விடுகிறார்கள். ஓடி முடிக்க முடியாவிட்டால்? வாழும் மீதி நாளையும் நரகமாகவே கழித்துத் தொலைக்க வேண்டும். தெனாலி கமல் மாதிரி எதைப் பார்த்தாலும் பயமாக இருக்கிறது. அனுபவத்தில் கண்டதில் வயோதிகம் மோசமானது. வயோதிகன் ஆவதைவிட விபத்தில் எதிர்பாராவிதமாக செத்துவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

பள்ளிச்சீருடை அணிந்த ஒரு மாணவி ஒருவளால் எவன் ஒருவன் முதல் தடவையாக ’அங்கிள்’ என்று விளிக்கப்படுகிறானோ, அன்றே அவன் பாதி செத்து விடுகிறான், லைட்டாக மூப்படைந்து விடுகிறான். அவனுடைய யூத்து என்கிற அகங்காரம் அழிந்துவிடுகிறது. இன்றோடு என் அகங்காரம் அழிந்தது, ஈகோ ஒழிந்தது.

22 ஆகஸ்ட், 2009

நொந்தசாமி!

நொந்தசாமியின் ஒருநாள் நிகழ்வு :

காலை

7.30 : லேட்டாக எழுந்ததற்காக பொண்டாட்டியிடம் திட்டு. பெட் காஃபி கட்டு.

7.45 : காலை நாளிதழ் தினப்பலன் ராசியில் ‘வாயையும், சகல வஸ்துகளையும் மூடிக்கொண்டு சும்மா இருக்கவும். இன்று சந்திராஷ்டமம்’

8.00 : குளிக்கும்போது, குறிப்பாக முகத்துக்கு சோப்பு போடும்போது குழாயில் தண்ணீர் நின்றுவிட்டது. மோட்டார் ஸ்விட்சைப் போட்டால் ஆற்காட்டார் புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.

8.59 : ஆபிஸுக்கு கிளம்ப ஒரு நிமிடம் பாக்கி இருக்கும் நிலையில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச, இஸ்திரி செய்து போடப்பட்ட புது வெள்ளைச் சட்டையில் பாப்பா ஆய். கசங்கிப்போன பழைய சட்டை ஒன்றை எமர்ஜென்ஸிக்கு எடுத்து மாட்டிக் கொள்ளுதல்.

9.25 : இடம் : சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகே. இரண்டு காலையும் தரையில் தேய்த்துக்கொண்டே வேகமாக வந்த, முகம் முழுக்க தாலிபான் மாதிரி முகமூடி போட்ட ஸ்கூட்டி பாப்பா அடுத்த இரண்டு நொடியில் இடிப்பதற்காக, வருமுன் காப்போம் திட்டம் மாதிரி ”சாரி.. சாரி.. சார்ரீ...” என்று கேட்டுக்கொண்டே வந்து இடிக்கிறாள். மூட்டு எலும்பு ஒரு நொடி இடம்மாறி, மறுநொடி இயல்பானது. ஜீன்ஸ் பேண்ட் முழுக்க டயரின் மண்கறை.

9.45 : பொட்டிக்கடையில் தம்மை தலைகீழாக பற்றவைத்ததால் நான்கு ரூபாய் ஐம்பது பைசா நஷ்டம்.

10.30 : எல்டாம்ஸ் ரோடில் மொக்கைச்சாமி ஒருவருடன் சந்திப்பு. ஒன்றரை மணி நேர ஆக்‌ஷா ப்ளேடு. கழுத்தறுப்பட்டு கதற கதற, இரத்தம் சொட்ட வெளியே வந்தால், பிளாட்பாரத்தில் ஏற்றி நிறுத்தப்பட்டிருந்த வண்டியை கடமையில் கண்ணும், கருத்துமாக இருக்கும் தமிழ்நாடு போக்குவரத்து போலிஸார் ஆட்டையைப் போட்டுவிட்டார்கள்.


பிற்பகல்

01.30 : இடம் - தேனாம்பேட்டை ஈ-3 ஸ்டேஷன்.

“சார் அங்கே நோ பார்க்கிங் போர்டு இருக்கான்னே தெரியலை. அதுவுமில்லாமே பிளாட்பார்ம்லே ஏத்திதான் வண்டியை நிறுத்தியிருந்தேன்”

“வண்டியை லெப்ட்டுலே விடக்கூடாதுன்னு ஏசி மூணு நாளா அந்த ஏரியாவில் மைக்லே கத்திக்கிட்டிருக்கார். நீங்க ஏன் சார் லெப்ட்லே பார்க் பண்ணீங்க”

“நாங்க ப்ரெஸ்ஸூ சார்”

“பிரிண்டிங் ப்ரெஸ்ஸா? எதுவா இருந்தாலும் வண்டியை கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்காங்க. பசங்களுக்கு மட்டுமாவது ஏதாவது கொடுத்துட்டு போங்க”

ரூபாய் நூற்றி ஐம்பது எள்ளு.

3.00 : ஹோட்டலில் சாப்பாடு தீர்ந்து விட்டதால் சிக்கன் பிரியாணி. லெக் பீஸை கடித்ததுமே தெரிந்துவிட்டது. சமையல்காரருக்கு கண் தெரியாது போலிருக்கிறது. கோழிக்குப் பதிலாக காக்காயை கொடுத்து கறிக்கடைக்காரன் ஏமாற்றி விட்டிருக்கான். தொட்டுக்க வைத்த கத்தரிக்காய் கொட்சு, டோங்குரா சட்னிக்கு இணையான காரம். கண்களில் கண்ணீர் தளும்ப பசியாறுதல்.

4.30 : ‘டோ’ பண்ணிக்கொண்டு வந்த டிராபிக் பசங்க வண்டியில் ஏற்ற வாகாக ஹேண்டில்பாரை அசைத்து அசைத்தே மென்மையாக சைட் லாக்கை உடைத்திருக்கிறார்கள். சிடி டான் சைட் லாக் செட் ரூபாய் தொண்ணூறு. ஃபிட் செய்ய தனியாக ரூபாய் பதினைந்து.


மாலை

6.00 : பார்க்கிங்கில் “கசுமாலங்க ஆளாளுக்கு அறிவில்லாம சைட் ஸ்டேண்ட் போட்டுட்டு போயிடறானுங்க. செண்டர் ஸ்டேண்ட் போடுறதுக்கு கூட ........... நோவுது” - சாடைப்பேச்சு தாங்காமல் மரியாதையாகப் போய் செண்டர் ஸ்டேண்ட் போடுதல்.

6.30 : மூன்றேகால் மணிநேர முழுநீளக் காவியம் ‘கந்தசாமி’ திரையிடப்படுகிறது.

11.00 : டாஸ்மாக் குளோஸ்டு. ”எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி. பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வழி எப்படி?” நொந்தசாமி பாடிக்கொண்டே இல்லத்துக்கு திரும்புதல்.

21 ஆகஸ்ட், 2009

மீசை!


குமரனுக்கு அந்த கனவு ஆறாவது படிக்கும்போது வந்திருக்கலாம். பத்தாவது படிக்கும் அண்ணன்கள் வெள்ளிக்கிழமை மாலை குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓடுவதும் அந்த வயதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்ன ஏதுவென்று விசாரித்தபோது தான் தெரிந்தது ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் காலை 9 மணி காட்சி ஸ்பெஷல் காட்சியாம். நானும் பத்தாவது போகும்போது அண்ணன்கள் மாதிரி ‘அந்த' மாதிரி படத்துக்கெல்லாம் போகணும் என்று கனவுகளை வளர்த்துக் கொள்ள தொடங்கினான் குமரன்.

ஆறாவதில் வகுப்பில் முதல் மாணவனாக, முதல் பெஞ்சு மாணவனாக இருந்த குமரன் ஏழாவது, எட்டாவது போகும்போது தனது ஸ்பெஷல் திறமைகள் சிலவற்றை வளர்த்துக் கொண்டதால் கடைசி பெஞ்சுக்கு அடித்து துரத்தப்பட்டான். ரேங்க் கார்டில் ரேங்கே இருக்காது. அப்பா மாதிரி அவனே கையெழுத்து போட்டுக் கொள்வான். இந்த காலக்கட்டத்தில் தான் அவனுக்கு அருமையான நண்பர்கள் கிடைத்தார்கள். அருள், சாமி, மீனாட்சி, சேகர், சுதாகர், செந்திலு, சுரேஷு, சரவணன், மோகன், வாழைக்கா விஜி என்று ஏகப்பட்ட பேர். இதில் அருளுக்கு 'அந்த' மேட்டரில் அனுபவமே உண்டு என்று வகுப்பு நம்பியது. அவன் சொன்ன அனுபவ கிளு கிளு கதைகளை பின்னர் மருதம், விருந்து புத்தகங்களில் வாசித்தபோது தான் பயல் அந்த கதைகளோடு தன்னையும் கதாபாத்திரமாக்கி கற்பனையை கலந்து கட்டி தந்திருக்கிறான் என்பது புரிந்தது. இருந்தாலும் அவன் கதை சொன்ன பாணி சுவாரஸ்யமாகவே இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது படிக்கும்போது சரவணனுக்கு கொஞ்சம் கத்தையாக மீசை இருந்தது. மோகனுக்கு அரும்புமீசை இருந்தது. ஆனால் குமரனுக்கோ மீசை வருவதற்கான அறிகுறியே இல்லை. சரவணனும், மோகனும் ஒருநாள் ஆர்.கே. போவலாம்டா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். ஆர்.கே. என்பது தியேட்டர் ராமகிருஷ்ணா என்பதாக அறிக. ஆலந்தூரில் இந்த தியேட்டர் நீண்ட நாட்களாக கலைச்சேவை புரிந்து வருகிறது. இப்போது எஸ்.கே. என்ற பெயரில் அந்த கலாச்சாரப் பெருவெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. “டேய் எனக்கும் ஆசையா இருக்குடா. நானும் வர்றேண்டா” என்று சொன்ன குமரன் ஏளனமாக புறக்கணிக்கப்பட்டான். புறக்கணித்ததற்கு சரவணனும், மோகனும் சொன்ன காரணம் ‘மீசை'. தியேட்டருக்குள் மீசை இல்லாதவர்களை உள்ளே விடமாட்டார்களாம்.

“பெரிய ஆளுங்க நெறைய பேரு மீசையை ஷேவிங் பண்ணிடுறாங்களே? அவங்களை மட்டும் எப்படி தியேட்டருக்குள்ளே அனுப்புறான்!”

“மச்சான் மீசையை ஷேவிங் பண்ணிக்கிட்டவங்களுக்கெல்லாம் வேற இடத்துலே வேற விஷயம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு தான் அனுப்புவாங்க. உன்னையும் அதுமாதிரி செக் பண்ணுவாங்க பரவாயில்லையா?” - சரவணன் சொன்ன 'வேற விஷயம்' கொஞ்சம் அந்தரங்கமானது. அந்த வேற விஷயத்துக்கும் கூட அப்போது குமரன் தகுதியோடு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்குக்கு போகும் இந்திய அணிக்கு கூட அப்படி ஒரு வழியனுப்பு விழா நடந்திருக்காது. ஆர்.கே.வுக்கு சென்ற சரவணன், மோகன் தலைமையிலான குழுவுக்கு விசில் மற்றும் பலத்த கைத்தட்டலோடு வகுப்பு வழியனுப்பு விழா நடத்தியது. குமரனை போலவே அந்த குழுவில் இடம்பெற விரும்பி நிராகரிக்கப் பட்டவர்களில் சுவாமிநாதனும் ஒருவன்.

ஆனால் ஆர்.கே.வுக்கு சென்று திரும்பிய குழு அவ்வளவு உற்சாகமாக இல்லை. போஸ்டரில் இருந்ததை விட ஸ்க்ரீனில் ரிசல்ட் கம்மி தான் என்று அருள் சொன்னான். சரவணனும், மோகனும் மட்டும் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளினார்கள். ”ஹேய் மவுனராகம் மோகன் கூட இருக்காருடா.. ராஜாதி ராஜாலே வருமே ஒரு ஆண்ட்டி ஒய்.விஜயா, செக்கச்சேவேன்னு இருக்குமே அந்த ஆண்ட்டி தான் ஹீரோயின்” என்று மோகன் சொன்னான். மோகனும், சரவணனும் சொன்ன அந்தப் படத்தின் மேட்டர், அருள் சொன்ன மேட்டரை விட மொக்கையாக இருந்தது. எனவே கொஞ்ச நாட்களுக்கு 'அந்த' விஷயம் மீதான ஆர்வம் அப்போதைக்கு குமரனுக்கு குறைந்தது.

பாட்டிலுக்குள் அடைத்து வைத்திருந்த பூதத்தை வெளியே விட்டது மாதிரி மறுபடியும் சுவாமிநாதனால் அந்த ஆர்வம் குமரனுக்கு கிளர்த்தெழுந்தது. அப்போதெல்லாம் அதுமாதிரி படங்களை டிடியே இரவு பதினொரு மணிக்கு சனிக்கிழமைகளில் ஒளிபரப்பத் தொடங்கியிருந்தது. வீட்டில் எல்லோரும் தூங்கியபிறகு சுவாமிநாதன் 'அந்த' படங்களை பார்த்துவிட்டு வந்து சதை சொல்லத் தொடங்கினான். ஈவில் டெட் மாதிரி எப்போதாவது விசிஆரில் பார்த்த இங்கிலீஷ் படங்களில் ஓரிரண்டு காட்சிகளை மட்டுமே பார்த்து புல்லரித்துப் போயிருந்தவர்களுக்கு சுவாமிநாதனின் இந்த சனிக்கிழமை புரட்சியால் திடீர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. எப்படியாவது ஒரே ஒரு முறை ஆர்.கே.வுக்கு போய்விட வேண்டும் என்ற தீராத தாகம் ஏற்படத் தொடங்கியது. பத்தாவது வந்த பின்னர் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கக் கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

வாழைக்கா விஜி மட்டும் பழைய தமிழ்ப்படங்களில் வரும் சில காட்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் சொல்லுவது பெரும்பாலும் ஸ்ரீகாந்த் படக்காட்சிகளாக இருக்கும். அந்த காட்சிகளை காட்ட இயக்குனர்கள் பயன்படுத்தும் சில உத்திகள் குறித்து, அது எப்படி ஒரிஜினலுக்கு பதிலாக சிம்பாலிக்காக காட்டப்படுகிறது என்பது குறித்த பேச்சு வரும். பதினாறு வயதினிலே படத்தில் தேங்காய் உரிப்பது, வேறொரு படத்தில் பருந்து கோழிக்குஞ்சை குறிவைத்து பறப்பது போன்றவை பற்றி எப்போதாவது பேசுவதுண்டு.

இருந்தாலும் கற்பூரம் ஜெகஜோதியாய் எரிந்து அணைந்துவிடுவதை போல அந்த கனவு குமரனுக்கு கிட்டத்தட்ட அணைந்து விட்டிருந்தது. அது முற்றிலும் அணைந்துவிடவில்லை நீறுபூத்த நெருப்பாக உள்ளுக்குள்ளேயே கனலாக இருந்திருக்கிறது என்பதை முரளியோடு பழகிய பின்னர் தான் அவன் உணர்ந்தான். இப்போது குமரன் +1க்கு வந்துவிட்டிருந்தான். மீசை என்று சொல்லிக்கொள்ளும்படி பெரியதாக எதுவும் வளர்ந்துவிடவில்லை என்றாலும் குரல் கொஞ்சம் உடைந்து ஆண்குரல் போலிருந்தது. அப்பாவின் கோத்ரேஜ் ஹேர்டை ஸ்டிக்கை எடுத்து அவ்வப்போது மீசைபோல வரைந்து கொண்டான்.

முரளியும், குமரனும் பரங்கிமலை ஜோதிக்கு போக திட்டமிட்டார்கள். காலை பத்து மணி காட்சி என்று ஒரு அஜால் குஜால் போஸ்டர் நங்கநல்லூர் வட்டாரங்களில் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சனிக்கிழமை அந்த படத்துக்கு போயே தீருவது என்று முடிவெடுத்தார்கள். முரளிக்கு கட்டை மீசை, பிரச்சினையில்லை. குமரனுக்கு மீசை சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் கொஞ்சம் தொளதொளவென்று ஒரு சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பினான். கொஞ்சம் பெரிய பையனாக தெரிய ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டான்.

ஜோதியில் காலை சனி, ஞாயிறு காலை காட்சி மட்டும் ‘அந்த' படம். மீதி நாலு காட்சிகள் “அம்மன்”. என்ன கொடுமை பாருங்கள்?. ”மச்சான் காலையிலே அந்த மாதிரி படத்தை போட்டுட்டு, மத்தியானம் ‘அம்மன்' போடுறாங்களே? எப்படிடா?” முரளியிடம் சந்தேகம் கேட்டான். ”அந்தப் படம் முடிஞ்சதும் தியேட்டரை கழுவித் தள்ளிட்டு 'அம்மன்' போடுவாங்கடா” என்று முரளி சொன்னான். ஏதோ தீட்டு கழிப்பது போல சொன்னாலும், உண்மையில் முரளிக்கும் எப்படி ரெண்டு நேரெதிர் படங்களை போடுகிறார்கள் என்ற லாஜிக் புரியவில்லை.

அது புரட்டாசி சனிக்கிழமை. கவுண்டரில் நின்றவர்கள் நிறைய பேர் நாமம் போட்டிருந்தார்கள். நாமம் + காமம் = ? தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதுதான். குமரன் கர்ச்சிப்பால் முகத்தை மூடியிருந்தான். அப்பாவுக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடும் வாய்ப்பு இருந்தது. டிக்கெட் கவுண்டரில் இரண்டு டிக்கெட் வாங்கியாயிற்று. டிக்கெட் கிழிக்கும் இடத்துக்கு செல்லும்போது தான் குமரனுக்கு உதற ஆரம்பித்தது. எப்படியும் முரளி உள்ளே போய்விடுவான், சின்னப்பையனாக தெரிந்த தனக்கு மட்டும் தான் பிரச்சினை என்று உள்ளுக்குள் புலம்பினான். மீசை கத்தையாக இல்லாவிட்டால் 'வேறு' சோதனை நடத்துவார்கள் என்ற சரவணனின் கூற்று வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. முரளி ஒரு டிக்கெட்டை உஷாராக கையில் வாங்கி வைத்துக் கொண்டான். பிரச்சினை வந்தால் அவன் மட்டும் போய் பார்த்துவிடும் கள்ளத் திட்டம் அவனிடம் இருந்தது.

டிக்கெட் கிழித்தவர் “தொப்பியை எடு, கர்ச்சிப்பை கயட்டு” என்றதுமே புரிந்துவிட்டது, குமரனால் உள்ளே போகமுடியாது என்று. “என்னடா சின்னப்பயலா இருக்கே? இந்தப் படத்துக்கு வந்திருக்கே?” என்று டிக்கெட் கிழித்தவர் மிரட்ட, திருதிருவென விழித்தான் குமரன். சட்டென்று, “அண்ணே ‘அம்மன்' படம்தானே?” என்று பிளேட்டை திருப்பிப் போட, டிக்கெட் கிழித்தவர் சிரித்துக் கொண்டே, “ஆமாமா.. அம்மன் படம் தான். ஆனா நீ பார்க்க வந்த அம்மன் படமில்லே. ஒரு ஒன் ஹவர் வெளியே வெயிட் பண்ணு. இந்த டிக்கெட்டை கவுண்டர்லே யாருக்காவது வித்துடு. அடுத்த ஷோ உள்ளே வா!” என்று திருப்பி அனுப்பினார். ஏற்கனவே துரோகி முரளி உள்ளே போய்விட்டான்.

இவ்வாறாக குமரனின் அந்த கனவு நீண்டநாட்களாக மெய்ப்படாமல் இழுத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு வழியாக கண்ணன் காலனி வெங்கடேசனால் அந்த கனவு மவுண்ட்ரோடு கெய்ட்டி தியேட்டரில் ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் நிறைவேறியது. ஆனாலும் ‘எதிர்பார்த்த' லெவலுக்கு இல்லாததால் மீண்டும் மீண்டும் ஜோதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினான். ஜோதி அலுத்துவிட ஜெயலட்சுமி, பானு, விக்னேஸ்வரா, காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியர், கொட்டிவாக்கம் திருமலை, ஆவடி ராமரத்னா என்று அவனது கனவு பிற்பாடு விரிந்துகொண்டே சென்றது. இப்போதும் கூட எப்போதாவது சனிக்கிழமை மாலைவேளைகளில் குமரனை நீங்கள் போரூர் பானுவில் காணலாம்.

20 ஆகஸ்ட், 2009

ஷகீரா!ஷகீயை பார்த்த நொடியிலிருந்தே எனக்கு "அந்த" விபரீத ஆசை துளிர்விட ஆரம்பித்தது. இதுவரை நான் கண்ட அழகிகளிலேயே பேரழகி அவள். அவளது குரல் தரும் போதைக்கு நிகரில்லை. அவளது கண்கள் டூமா கோலி குண்டுகள். அளந்துவைத்த மூக்கு. மல்லிகை மொட்டுகளாய் உதடு. செக்கச் சிவந்த நாக்கு. சங்கு கழுத்து. அப்புறம்....

எப்படியாவது ஒரே ஒரு முறை அவளை...

ஆறு மாதத்துக்கு முன்பு சங்கரோடு கடைவீதியில் சைட் அடித்து கொண்டிருந்தபோது தான் அவளை பார்த்தேன். மேகத்திலிருந்து இறங்கும் வெள்ளை தேவதையாய், அலைபோன்ற கேசத்தை தலையாலேயே அசைத்து ஸ்டைலாக ஒதுக்கி ஒயில் நடையுடன் அசைந்தாடி வந்தாள். பார்த்தவுடனேயே என் உள்ளத்தில் பற்றிக் கொண்டது. பற்றிக் கொண்டதின் பெயர் காதல் அல்ல.

காதலுக்கும், எனக்கும் வெகுதூரம்! காதலா? ச்சீ.. கெட்டவார்த்தை!!

என்னடா இது காதலை கூட வெறுப்பானா ஒரு இளைஞன்? என்று நீங்கள் ஆச்சரியப்படுவது தெரிகிறது. என்ன செய்வது? என் கடந்தகால அனுபவங்கள் கசப்பானது. உண்மையான காதலுக்கு எங்கே மதிப்பிருக்கிறது? என்னை காதலித்து ஏமாற்றியவர்கள் பலபேர். காதலிப்பதாக கூறி அவர்கள் காரியத்தை முடித்துக் கொண்டவர்கள் சில பேர். அதிலும் என் கடைசி காதலி ரோஸி ஒரு முறை என் கண் முன்னாலேயே இன்னொருவனோடு.. சேச்சே..சே என்ன கருமம்டா இந்த காதல்?

காதல் என்ற வார்த்தையே ஒரு பம்மாத்து. காதல் போய் சங்கமிக்கப் போவது எப்படியும் காமத்தில் தானே? அப்புறம் எதற்கு இடையில் இந்த அபத்தமான "ஐ லவ் யூ" நடிப்பெல்லாம்? விருப்பமிருந்தாலோ அல்லது வலுக்கட்டாயமாகவோ நேரடியாகவே "அதை" அடைந்துவிட வேண்டியது தான் என்று எண்ணத் தொடங்கி விட்டேன். என் எண்ணங்களுக்கு பிள்ளையார் சுழி போட ஷகீரா தான் முதலாவதாக கிடைத்திருக்கிறாள். வாய்ப்பை நழுவவிட்டு விடக்கூடாது.

ஷகீராவை பற்றி நண்பர்கள் வட்டாரத்தில் விசாரித்தேன். பெரிய இடமாம். வீட்டுக்கு ரொம்ப செல்லமாம். கிட்டே நெருங்குவதைப் பற்றி நெனைச்சி கூட பாக்காதேடா என்றான் சங்கர். நானோ அன்றாடங்காய்ச்சி. அவளோ அரண்மனைவாசி. இது என் மூளைக்கு எட்டுகிறது. மனசுக்கு புரியமாட்டேன் என்கிறதே? என் உள்ளத்தில் அந்த "தீ" கொளுந்து விட்டெரிய ஆரம்பித்தது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவளைப் பார்க்கும் போதெல்லாம் மன்மதன் விட்ட அம்புகள் என் மலர்நெஞ்சை கொஞ்சம் கொஞ்சமாய் காயமாக்கி உயிரை உருக்கிக் கொண்டிருந்தது.

கார்த்திகை மாத நள்ளிரவு. மாலைபெய்த மழையில் தெருவெல்லாம் மசமசவென்றிருந்தது. லேசாக பனிபெய்து கொண்டிருந்தது. பனிமூட்டத்தால் மந்தமான சூழல் நிலவியது. என் உடல் தூங்கிக் கொண்டிருக்க உள்ளமென்னும் அரக்கன் எழுந்தான். இன்று எப்படியாவது ஷகீரா மேட்டரை முடிச்சாகணும் என்று முடிவுசெய்தேன்.

ஓசைப்படாமல் எழுந்து நடந்தேன். தெருவே நிசப்தமாக இருந்தது. என் இதயம அடித்துக் கொள்ளும் லப்-டப் சப்தம் எனக்கே கேட்டது. "இந்த" விஷயத்தில் எனக்கு முன்னனுபவமும் இருந்து தொலைக்கவில்லை. ஷகீராவின் இல்லத்தை நெருங்கிவிட்டேன். பெரிய இரும்புகேட். தொட்டாலே சத்தமிடும் என்று தோன்றியது. காம்பவுண்டை பார்த்தேன். அவ்வளவாக உயரமில்லை. எப்படியும் தாண்டி குதித்து விடலாம்.

நான்கு அடி பின்னால் சென்று ஓடிவந்து தாவி குதித்தேன். "தொப்"பென்ற சத்தம் கேட்டு தோட்டத்தில் சின்ன சலசலப்பு எழுந்தது. மூச்சை இழுத்துப் பிடித்து தரையோடு, தரையாக பதுங்கினேன். ஐந்து நிமிடம் கழிந்தவுடன் மெல்ல எழுந்தேன். பூனை போல் நடைவைத்து வீட்டை நெருங்கினேன்.

ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்துக் கொண்டே சென்றேன். எங்கேதான் இருக்கிறாளோ ஷகீரா? நேரம் வேறு ஆகிக்கொண்டே போகிறது. விடிந்துவிட்டால் காரியம் கெட்டுவிடும். வீட்டின் கடைசி அறை இதுதான். மெல்ல எட்டிப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஷகீரா. வாடாமல்லி போன்ற வசீகரம் ஷகீராவுக்கு. ஒரு நிமிடம் அப்படியே அவளை இமைகொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அவள் மீது பாயும்போது அவள் சத்தம் போட்டுவிடக்கூடாதே என்ற பயமும் இருந்தது. வலுக்கட்டாயமாக நான் ஒரு பெண்ணை அடையப் போவது இதுவே முதல் முறை.

கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. இருந்தாலும் ஷகீயின் வனப்பை நினைத்துக் கொண்டே அவளை நெருங்கும்போது "டொம்" என்று என் மண்டையில் ஏதோ விழுந்தது. ஒரு நொடி மூளை இயங்குவதை மறந்துவிட, அடுத்த நொடி "வள்"ளென்று கத்திக் கொண்டே வாலை வேகமாக ஆட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். கையில் லத்தியோடு அந்த வீட்டு வாட்ச்மேன் என்னை துரத்த ஆரம்பித்தான். தூக்கம் கலைந்த ஷகீராவும் "லொள்.. லொள்" என்று கத்த ஆரம்பித்தாள். வாட்ச்மேன் துரத்த லாவகமாக ஓடி காம்பவுண்டை தாண்டிக் குதித்து ஓட ஆரம்பித்தேன். என் சத்தத்தைக் கேட்டு ஆங்காங்கே உறங்கிக் கொண்டிருந்த மற்ற தெருநாய்களும் நரிகளைப் போல ஊளையிட்டு இரவின் நிசப்தத்தை கலைக்கத் தொடங்கின. இன்னும் சில நாழிகைகளில் சூரியன் கிழக்கில் வெளுக்கப் போவதற்கான அறிகுறியும் தெரிய ஆரம்பித்தது.

காண்டம்.. காண்டம்..


ய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை கமர்சியல் செக்ஸ் ஒர்க்கர்ஸ் மத்தியில் ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் அது. இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு விளம்பர கேம்பைன் சம்பந்தமாக பேச என்னுடைய பாஸோடு போயிருந்தேன். அந்நிறுவனத்தின் தலைவர் ஒரு நடுத்தர வயதுப் பெண். அவரது டேபிளில் இருந்த பேப்பர் வெயிட் விவகாரமான ஷேப்பில் (லிங்க வடிவத்தில்) இருந்தது. எங்களோடு பேசிக்கொண்டேயிருந்தவர் ஒரு ஆணுறையை எடுத்து அந்த பேப்பர் வெயிட்டில் கேஷுவலாக மாட்டினார். எனக்கு கொஞ்சம் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது.

என் முகத்தைப் பார்த்த அந்த பெண், “இதுக்கே கூச்சப்பட்டா எப்படி நீங்க எங்களுக்கு கிரியேட்டிவ்ஸ் பண்ணித் தரப் போறிங்க?” என்று கூறி சிரித்தார். ஆணுறை மாட்டப்பட்ட அந்த பேப்பர் வெயிட்டுகள் 'அந்த மாதிரியான' லாட்ஜூகளுக்கு தரப்படுமாம். ஆணுறை என்ற மேட்டரை யாரும், எப்பவும் மறந்துவிடக்கூடாது என்பதால் அதுபோல பேப்பர் வெயிட்டுகள் தயாரிக்கப்பட்டதாம். ஆணுறையை நினைவுபடுத்தும் எந்த ஐடியாவாக இருந்தாலும் தாருங்கள், பரிசீலிக்கிறோம் என்றார்.

மீபத்தில் சென்னை சத்யம் சினிமாஸுக்கு போயிருந்தபோது வரிசையில் எனக்கு முன்பாக ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். அவருக்கும் முன்பாக ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். திடீரென்று 'காண்டம்.. காண்டம்.. காண்டம்' என்று இளைஞனின் செல்போன் அலற, எனக்கு முன்பாக நின்று கொண்டிருந்த பெரியவருக்கு முகம் வேர்த்துவிட்டது. அருகிலிருந்த பெண்கள் சிலர் நாணத்தால் முகம் சிவந்தார்கள். அந்த இளைஞன் எந்த டென்ஷனுமில்லாமல் போனை எடுத்து பேசத் தொடங்கினான்.

வேறொன்றுமில்லை, ஆணுறை விழிப்புணர்வுக்காக பிபிசி வெளியிட்டிருக்கும் ஸ்பெஷல் ரிங்டோன் இது. டிவி விளம்பரங்களில் கூட இந்த ரிங்டோனை நீங்கள் கேட்டிருக்கலாம். பில் & மெலிடா கேட்ஸ் பவுண்டேஷன் நிதியுதவியோடு பிபிசி நிறுவனம் உருவாக்கியிருக்கும் இந்த ரிங்டோன் மூலமாக 'காண்டம்' என்ற சொல் மக்கள் மத்தியில் பரவலாக்கப்படும் என நம்பப்படுகிறது. அடிக்கடி இந்த சொல்லை கேட்டுக் கொண்டேயிருப்பதால் அச்சொல்லை கேட்கும்போது தோன்றும் வெட்கம் மக்களுக்கு மறையும் என்று நம்புகிறார்கள். டிவி, ரேடியோ மற்றும் இண்டர்நெட் மூலமாக இந்த விழிப்புணர்வு பரப்பப்படுகிறது. "புத்திசாலி ஆண்கள் ஆணுறையை உபயோகிக்கிறார்கள்" என்ற தலைப்போடு வரும் விளம்பரங்கள் ஆண்களை கட்டாயம் கவரும். "பேசுறவன் தான் புத்திசாலி" என்று ஒரு கிளி வந்து சொல்லுவதைப் போன்ற விளம்பரம் உங்களுக்கும் நினைவுக்கு வருகிறது தானே?

25 லட்சம் பேர் எச்.ஐ.வி. கிருமி பாதிப்போடு வசிக்கும் இந்தியாவுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு விளம்பரங்கள் மிகவும் அவசியம். இப்போதெல்லாம் ரிங்டோன்கள் மிக சீரியஸாக இளைஞர்களால் பரிசீலிக்கப்படுகிறது. வித்தியாசமான ரிங்டோன் வைத்திருப்பவர்கள் அனைவரையும் எளிதில் கவருகிறார்கள். ஆணுறை குறித்த விழிப்புணர்வை கொஞ்சம் நகைச்சுவையோடு ரிங்டோனில் சொன்னால் அது எளிதில் பலரையும் கவருகிறது. இந்த ரிங் டோனை மிக சுலபமாக இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இதன் பயனாளிகள் தங்கள் ரிங்டோன் மூலமாக ஒரு சிறிய விழிப்புணர்வை சமூகத்துக்கு ஏற்படுத்தும் வாய்ப்பை பிபிசி வேர்ல்டு ட்ரான்ஸ் இந்தியா சர்வீஸ் நிறுவனம் வழங்கியிருக்கிறது.

இப்போதே ஒரு கோடி பேரையும் தாண்டி இவர்களது தொடர் விளம்பரங்கள் சென்றடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இந்த விளம்பரங்களை கண்டவர்களில் 70 சதவிகிதம் பேர் தங்கள் நண்பர்களோடு இதுபற்றி பேசியிருக்கிறார்களாம். ஆணுறை குறித்த வெளிப்படையான கலந்துரையாடல் மக்கள் மத்தியில் நிலவவேண்டும் என்பதற்காக இந்த விளம்பரங்களை உருவாக்கியிருக்கிறார்கள் எனும்போது, அவர்களது நோக்கத்தில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இந்த விளம்பரங்களை கண்டவர்கள், கேட்டவர்கள் இதுவரை நாலு லட்சம் பேர் தொலைபேசி ஆணுறை குறித்த விவரங்களை அறிந்து கொண்டிருக்கிறார்களாம்.

எக்ஸ்ட்ரா பாக்ஸ் மேட்டர் : அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் பலவும் இவ்வாறாக பல கோடியை கொட்டி நூதனமுறையில் விளம்பரங்கள் செய்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு இந்த விவகாரத்துக்கு செலவழிக்கும் பணம் என்னவாகிறது என்று பார்த்தோமானால் வருத்தமே மிஞ்சுகிறது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சிலகாலம் முன்பாக நாடெங்கும் பல்லாயிரம் இடங்களில் ஆணுறை வழங்கும் இயந்திரத்தை நிறுவியது. ஒரு ரூபாய் போட்டு போன் பேசுவது போல மிக சுலபமாக காசினை இயந்திரத்துக்குள் செருகி ஆணுறை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதி அது. மருந்துக்கடைகளில் ஆணுறை சொல்லி வாங்க கூச்சப்படுபவர்களுக்காக இதுபோன்ற இயந்திரங்கள் நிறுவப்பட்டது.

படத்தில் இருப்பது சென்னை தேவி தியேட்டர் காம்ப்ளக்ஸில் ஒரு பெட்டிக்கடை வாசலில் இருக்கும் ஆணுறை வழங்கும் இயந்திரம். நிறுவியதோடு சரி, எந்த பராமரிப்பும் இன்றி சில மாதங்களிலேயே வெறும் பெட்டியாகிப் போனது. இப்போது சிகரெட் பற்றவைக்க விரும்புபவர்களுக்காக அதில் தீப்பெட்டியையும், கயிறு ஒன்றில் தீயையும் பற்றவைத்து நூதனமாக அந்த இயந்திரத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார் அந்த பெட்டிக்கடைக்காரர். நகரின் முக்கியப் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரத்தின் கதியே இதுவென்றால் மற்ற இடங்களில்

18 ஆகஸ்ட், 2009

என் இனிய மானிட்டரே!


என் இனிய மானிட்டரே..

நாம் இருவரும் சந்தித்துக் கொண்ட முதல் நிகழ்வை இப்போது நினைத்தாலும் மனம் குஜாலாக இருக்கிறது. ஒரு சனிக்கிழமை நைட்டு எட்டுமணிக்கு பாரெங்கும் பீரும், வாந்தியுமாக, அவனவன் அடித்த சரக்கில் நாறிக் கொண்டிருக்க.. டாஸ்மாக் கடைக்காரன் ஒரு குவார்ட்டர் பாட்டிலை உருவி ஒரு கட்டிங்கை மட்டும் காலி பாட்டிலில் ஊற்றி தந்தான். உனக்கு நினைவிருக்கிறதா..?

வாழ்க்கையில் என் சம்பாத்தியத்தில் நான் வாங்கிய முதல் கட்டிங் நீதான் என்ற வகையில் உன் மீது எனக்கு அதிகப் போதை உண்டு.

நல்லதொரு சைட் டிஷ்ஷுடன் தான் நீ வந்தாய். மிளகு அதிகமாக போடப்பட்ட பொடிமாஸ்.. மிக காட்டாக காரம் தூவப்பட்ட நெத்திலி.. தொட்டாலே விரல்கள் நாறும் சாதா கோல்டு ஃபில்டர் என்று உன் செட்டப்பே அன்று முதல் என் போதைக்கு ஊறுகாய் ஆனீர்கள்.

அன்று முதல் நீயும் நானும் ஜெயலலிதா, சசிகலாவாக உடன் பிறவா சகோதரிகளாக போதையும், வாந்தியுமாக ஜோதி தியேட்டருக்கு போனதை இன்றைக்கும் நினைத்துப் பார்த்தால் காஜூ ஏறுகிறது..

என் கை நடுங்கியபோதெல்லாம் உன்னை ராவாக அடித்து ஸ்டெடி ஆன நாட்கள் எத்தனை? எத்தனை? எத்தனை ஆண்டுகள் உன்னை மிக்ஸ் செய்யாமலேயே அடித்திருப்பேன். அனைத்தையும் இப்போது நினைத்தால் நான் எடுத்த வாந்திகளே எவனோ எடுத்த வாந்தியாக தோன்றுகிறது.

அனாயசமாக ஒரே நாளில் நாலு காட்சியும் பிட்டு படங்களை ஜோதி, பானு, கெயிட்டி, எஸ்.கே. தியேட்டர்களில் பார்க்க 210 ரூபாய் செலவழிக்க வைத்தது மானங்கெட்ட மானிட்டரான நீ தான் என்பதை நான் மறுப்பதற்கில்லை.. வேளச்சேரி நூறு அடி ரோடு அம்மன் ஒயின்ஸ் பார் இன்றைக்கும் எனக்கும் போதைதரும் நினைவுகளாக இருக்கிறது.

காலை எழுந்தவுடன் பாத்ரூம் செல்லும் முன்பு, நேற்று அடித்து மிச்சம் வைத்த கட்டிங்கால் வாய்கொப்பளித்ததை ஒருநாளும் தவறவிட்டதில்லை. உனக்கே தெரியும்.

எனக்கு துன்ன சோறு இல்லையென்றாலும்கூட ஒரு நாள்கூட கட்டிங் அடிக்காமல் இருந்ததில்லை.. அம்மன் ஒயின்ஸில் மானிட்டர் ஸ்டாக் இல்லையென்றால் மனம் துடித்துப்போய் தி.நகர் நக்மா ஒயின்ஸுக்கு ஓடியிருக்கிறேன்.

வெறும் டபுள் எக்ஸ் பிட்டுகளையே பார்த்து காஞ்சி போயிருந்த என்னை குதூகலிக்க வைக்க அவ்வப்போது பல ‘த்ரிபிள் எக்ஸ்’களையும் சேர்த்தே நான் பார்த்துக்கொள்ள நீ தான் உதவினாய். யோசித்துப் பார்த்தாயா..? இதையெல்லாம் வெளியில் சொன்னால், எனக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பது உனக்குத் தெரியுமா? இருந்தாலும் ‘வரவிருக்கும் புகழை’ நான் சமாளித்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழியில்லை. என்னை மன்னித்துவிடு மானிட்டரே..

‘த்ரிபிள் எக்ஸ்’ ஒன்றா, இரண்டா? எதைச் சொல்வது..? இதோ பார் அந்த லிஸ்ட்டை..

மனிஷா கொய்ராலா என்ற பெயரில் எவனோ ஒரு கபோதி நூற்றி ஐம்பது ரூபாய் கறந்து ஒரு மொக்கை சிடி தந்ததை மறந்துவிட்டாயா?

ரிச்சா பலோட் ரியாலிட்டி ஷோ என்று கூறி ஒரு மொள்ளமாறி பத்தையாய் ஒரு நூறு ரூபாய் நோட்டை பிடுங்கி சென்றது கூடவா உனக்கு ஞாபகமில்லை?

லோக்கல் என்று கூறி ஒரு உராங் உடான் ஆப்பிரிக்காவின் கொடூர அனிமல் பிட்டு தந்தது உனக்கு நினைவில்லையா மானிட்டர் தம்பீ.. அந்தக் காலமெல்லாம் எங்கே போனது..?

இவை மட்டுமா? காண்டம் விட்டு காண்டம் வாங்குவது போல் பக்கத்து மாநிலமான கேரளாவில் போய் ‘சிட்டுக் குருவி லேகியங்களை’ சுட்டு வந்தேனே.. நினைவில்லை..

நாள் முழுவதும் குடித்து, குடித்து ஓடாய்த் தேய்ந்து போய் நானிருந்த வேளையில் குளிர் காற்றும், அதிக மழையும் எனக்கு ஒத்துக் கொள்ளாது என்பதனால் இரவில் உன்னை ராவாக மிளகு போட்டு அடித்து எனக்குப் பிடித்திருந்த சளியை விரட்டினேன். விடிந்த பின்பு மீண்டும் ஒரு பீர் அடித்து எனக்கு சளி பிடித்தது. மூக்கை உறிஞ்சி, உறிஞ்சி எனக்கு மூக்கே காணாமல் போனது. டாக்டர் செலவுக்காக அப்போது நான் ஆசை, ஆசையாக வாங்கி வைத்திருந்த மேட்டர் சிடிக்களை பிளாட்பாரத்தில் விரித்து மலிவுவிலைக்கு விற்றேனே..

இவ்வளவும் எதுக்காக? ஒரு கட்டிங் அடிக்கத்தான்.. “நான் ராவா ஃபுல் அடிச்சிடுவேனோன்னு பயமாயிருக்கு.. பீரை அப்படியே கல்ப்பா ஒரே கவுத்து கவுத்திடுவோனோன்னு பயமாயிருக்கு” என்று மணிரத்னம் பட டயலாக் போல நான் புலம்பி நிற்கவில்லை..

என் பலான வியாதிக்கு நான் மருந்தையும், மாத்திரைகளையும் வகை, வகையாக அருந்தினேன்.. ஒன்றா? இரண்டா? என்னைக் கழட்டிப் போட்டுவிட்டு கையில் பணம் கொடுத்தால்தான் ஆபரேஷன் என்று சொல்லி என்னை மிரட்டி நான் கட்டியிருந்த கோவணத்தையும் உருவிவிட்டானே அந்த ஜெயராஜ் தியேட்டருக்கு பக்கத்தில் இருந்த மருத்துவன்.. அந்தக் கண்றாவி காட்சியையும் பார்த்துவிட்டுத்தான் அந்த நிலையிலும் ஒரு கட்டிங் அடித்தேன்.. நானும் எனது வெட்கத்தை மறைத்து அதே கோலத்தில் ஒயின்ஷாப்புக்கு போயிருந்தேன். இதை எங்கே போய் சொல்வது?

நேற்றும் வழக்கமாக ஒயின்ஷாப்புக்கு வந்து ‘கட்டிங்’ அடித்துவிட்டு பொடிமாஸ் சாப்பிட்டேன். பொடிமாஸ் சாப்பிட்டதால் வாந்தி வராது என்று தைரியமாக இருந்தேன்.

நான் கட்டிங் அடித்த சில நிமிடத்தில் பார் முழுக்க ஒரு கெட்ட வாடை; கும்பியும், குடலும் கருகுவது போல்.. அக்கம் பக்கம் தேடினேன்.. டேபிளை முகர்ந்துப் பார்த்தேன் புரியவில்லை; தெரியவில்லை. குனிந்து எனக்கு பின்னால் பார்த்தேன். அரண்டு போய்விட்டேன்.. வாந்தி.. அலைஅலையாய் வாந்தி.. சுனாமி என்பார்களே அது போல என் வாய்க்குள் இருந்து வாந்தியாய் கொட்டிக் கொண்டிருக்கிறது எனக்கு தெரியாமலேயே. அடுத்தவன் எடுப்பதைப் பார்த்தாவுடன் நக்கலாக சிரிக்கும் அந்த வாந்தியை, இப்போது நானே எடுத்தவுடன் பயத்துடன் அலறிவிட்டேன்..

பதட்டத்தில், சிக்கனை கடிப்பதற்கு பதிலாக பக்கத்துச் சீட்டுக்காரனின் உதட்டை கடித்துவிட்டேன். ஈராக் மாதிரி அதகளப் பிரதேசமாயிற்றே நம்ம பாரு. பக்கத்து சீட்டுக்காரனின் உதட்டைக் கடித்ததுமே அவனவன் என்னைப் பார்த்து பயந்து வாயை (உதட்டை) மூடிக்கொண்டு ஓட ஆரம்பித்தான், மறக்காமல் அவனவன் பாட்டிலை எடுத்துக் கொண்டு.

சுண்டல் போட்டுக் கொண்டிருந்த முனியப்பன் ஓடிவந்து விசாரித்தான் என்ன ஆச்சியென்று. சொல்ல முடியவில்லை.. உதடு கடிபட்டவன் திரும்ப வர வேண்டும்.. அவனுடைய கிழிந்த உதடுக்கு எத்தனை தையல் போட்டார்கள் என்ற பதைப்பில் இருந்த எனக்கு 2 மணி நேரம் கழித்து ஓடோடி வந்த அவனைப் பார்த்து கதறியேவிட்டேன். அவனுக்கு வாய் இருந்த இடத்தில் உதடே இல்லை. அந்த பொறம்போக்கு அப்போதும் கட்டிங் அடிக்க வந்திருந்தான்.

இதுநாள்வரையில் அவ்வப்போது கட்டிங், கட்டிங்காக மட்டுமே அடித்துக் கொண்டிருந்த நான் இனிமேல் குவார்ட்டர், குவார்ட்டராக அடித்து போதை ஏற்றிக் கொள்வேன். இதற்காக உதடிழந்தவனின் தியாகத்தினை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்.

ஷகீலா! இனி என் போதைக்கு நீயே ஊறுகாய்..!

போதையுடன்
காண்டு கஜேந்திரன்

எப்படி கேட்பது?


அவளிடம் இதை எப்படி சொல்வது.. எப்படி கேட்பது என்பதில் அவனுக்கு நிறைய தயக்கம் இருந்தது. பிரம்மன் ஓவர்டைம் செய்து அவளை உருவாக்கியிருப்பான் போலிருக்கிறது. கயல்விழி என்ற பெயரைவிட அவளுக்கு பொருத்தமான ஒரு பெயரை அவளது அப்பனால் தேர்வு செய்திருக்கவே முடியாது. அவளது விழிகள் அலெக்சாண்டரின் போர்வாள் போல கூர்மையானது. பார்வையால் ஒரு வெட்டு வெட்டினாள் என்றால் எப்படிப்பட்ட ஆணும் இதயம் அறுந்து உயிரிழந்துவிடுவான்.

அவள் வேலை பார்த்த கவுண்டரில் இருந்த எல்லாப் பெண்களுமே கொள்ளை அழகு தான். இருந்தாலும் நிலவோடு நட்சத்திரங்கள் போட்டியிட முடியுமா? அவளுடைய உயிர்த்தோழி ஒருத்தி டைட்டானிக் கேட் வின்ஸ்லட் மாதிரியே இருப்பாள், நல்ல கலர், செம்ம கட்டை. அவள் இவளை 'கைல்' என்று அழைப்பதே ஸ்டைலாக இருக்கும். அவளிடம் தான் முதலில் 'இதை' கேட்க நினைத்தான். ஆனாலும் கயலைப் பார்த்த பின் வேறு எந்தப் பெண்ணிடமும் 'இதை' கேட்க வேண்டுமென்று அவனுக்கு தோன்றவில்லை.

யதேச்சையாக ஒரு நாள் கர்ச்சிப்பை மறந்துவைத்து விட்ட தினத்தில் தான் அந்த கடைக்கு கர்ச்சிப் வாங்க வந்தான் அவன். அப்போது தான் அவளைப் பார்த்தான். தினமும் அவள் வேலை செய்யும் துணிக்கடையை தாண்டிப் போகும்போதெல்லாம் அவளிடம் வெட்கத்தை விட்டு இதை கேட்டுவிட வேண்டும் என்று நினைப்பான். ஒரு நாகரிகமான பணியில் இருக்கும் கணவானான அவன் இதை நாலு பேர் எதிரில் கேட்டு அவள் ஏதாவது சொல்லி.. பொது இடத்தில் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று அச்சப்பட்டான். கடைமுதலாளி வேறு பயில்வான் ரங்கநாதன் மாதிரி க்ரிப்பாக இருந்தார்.

அந்த பிரச்சினைகளை எல்லாம் பார்த்தால் 'இதை' தள்ளிப் போட்டுக் கொண்டே போகவேண்டும். எப்படியிருந்தாலும் இதை வேறு யாரிடமாவது கேட்கத்தான் போகிறோம், இவளிடமே கேட்டு விட்டாலென்ன? ‘அதை' அவளிடம் கேட்க ஒரு சுபமுகூர்த்த சுபதினத்தை குறித்துக் கொண்டான். காலண்டரில் நல்ல நேரம் பார்த்தான். மனதுக்குள் ‘தில்'லை லிட்டர் லிட்டராக ரொப்பிக் கொண்டான். அவனுக்கு பிடித்த கருப்பு - சிவப்பு டீஷர்ட்டை அணிந்துகொண்டான். பெண்கள் மையல் கொள்வார்கள் என்று சொல்லி விளம்பரப்படுத்தப்பட்ட நறுமண வஸ்துவை தாராளமாக உடலுக்கு உபயோகித்தான்.

அவன் குறித்து வைத்திருந்த நல்ல நேரத்திற்கு இன்னமும் அரைமணி நேரம் இருந்தது. டென்ஷனாக இருந்ததால் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். ஐந்து நிமிடத்தில் முடியும் கிங்ஸ், இவன் டென்ஷனில் உறிஞ்சு உறிஞ்சுவென்று உறிஞ்சியதால் மூன்றே நிமிடத்தில் காலியானது. ஸ்மெல் தெரியக்கூடாது என்று ஒரு மாணிக்சந்தையும் ஒரு பாஸ்பாஸ் பாக்கையும் வாங்கி மிக்ஸ் செய்து வாயில் நிரப்பிக் கொண்டான்.

நேராக கயல் வேலை பார்த்த அந்த துணிக்கடைக்கு போனான். நல்லவேளையாக பயில்வான் ரங்கநாதன் முதலாளி இல்லை. அன்று கடையிலும் கூட்டம் குறைவு. நேராக கயல் இருந்த கவுண்டருக்கு போனான். கயலுக்கு பின்னால் கண்ணாடி அடுக்குகளில் அடுக்கப்பட்டிருந்த ‘அந்த' துணிவகைகளை வெறித்துப் பார்த்தான். கயலின் அந்த கேட்வின்ஸ்லட் தோழி குறும்பாக பார்த்தாள். கயலிடம் மெதுவாக ”ம்ம்.. நடக்கட்டும்.. நடக்கட்டும்” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் தொலைவுக்கு நகர்ந்தாள்.

கயலின் முகமும் லேசாக நாணத்தால் சிவந்திருந்தது போல தெரிந்தது.

“என்ன சார் வேணும்?” கோல்டன்பிஷ் வாய் திறந்து பேசினால் கயல் பேசியது போலவே இருக்கும்.

“ம்ம்... வந்து.. வந்து”

“சொல்லுங்க சார்!”

“கயல்.. என்னை கல்யாணம் பண்ணிப்பீங்களா?”

17 ஆகஸ்ட், 2009

சிறுகதை எழுதுவது எப்படி?


“சிறுகதை எழுதுவது எப்படி?”

இந்த கேள்வியை யாராவது பெருசுகளிடம் கேட்டால், “சுஜாதா புக் எழுதியிருக்கிறார். வாங்கிப்படி!” என்கிறார்கள். உண்மையில் அந்தப் பெருசுகள் அப்புத்தகத்தை படித்திருக்க வாய்ப்பேயில்லை என்று கருதலாம். ‘சிறுகதை எழுதுவது எப்படி?' என்பதே ஒரு சிறுகதைதான். அந்த சிறுகதை அடங்கிய சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு சூட்டப்பட்ட பெயர் அது.

”சுஜாதா சிறுகதை எழுத சொல்லித் தருகிறார்!” என்று யாராவது சொன்னால் பரலோகத்தில் இருக்கும் சுஜாதாவே அதை மன்னிக்க மாட்டார். சிறுகதை எழுதுவதை பாடமாக எல்லாம் சொல்லித்தர முடியாது என்று நம்பியவர் அவர். ஆனால் ஒரு தேர்ந்த வாசகன் நிறைய சிறுகதைகள் வாசிப்பதின் மூலமாக சிறுகதைகளை எழுதும் ஆற்றலை பெற்றிட முடியும். குறிப்பாக சுஜாதாவின் சிறுகதைகளை நிறைய வாசிக்கலாம்.

சுஜாதா எழுதிய காலத்தில் அவரை ஒரு கமர்சியல் ரைட்டராகவும் ஏற்றுக் கொள்ளப் படாமல், இலக்கிய எழுத்தாளராகவும் ஒத்துக் கொள்ளப்படாமல் திரிசங்கு சொர்க்கத்தில் வாழ்வின் பெரும்பகுதியை வாழ்ந்திருக்கிறார். உண்மையில் அவருக்கு இலக்கிய அந்தஸ்து என்பது கடைசிக்காலத்தில் தான் கிடைத்தது என்று நம்புகிறேன். அதிலும் ஒரு தலைமுறையே, ”தங்களை சுஜாதா பாதித்திருக்கிறார்” என்று ஒட்டுமொத்தமாக சொன்னதின் பின்னால்தான் வேண்டாவெறுப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டார். அதிர்ஷ்டவசமாக சுஜாதாவுக்கு வாழும் காலத்திலேயே இந்த அந்தஸ்து கிடைத்துவிட்டது. சாண்டில்யன் எல்லாம் ரொம்ப பாவம். இப்போதும் கூட அவரை சரோஜாதேவிரக எழுத்தாளராகவே பல இலக்கிய விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

எதையோ பேசவந்து எதையோ பேசிக்கொண்டிருக்கிறேன். எதை பேசவந்தேன்? ஆங்.. சிறுகதை எழுதுவது எப்படி?

சுஜாதா கருதியதைப் போல யாரும் விரல் பிடித்தெல்லாம் சொல்லித் தந்துவிட முடியாது. ஆனால் இப்போது பத்திரிகைகளில் எழுதி பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்களை விட பல திறமையான கதை சொல்லிகள், தங்கள் திறமையை அறியாமலேயே ஆயா வடை சுட்டக் கதையை தினுசு தினுசாக தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறார்கள். நேரமும், வாய்ப்பும் வாய்த்தவர்கள் இன்று இணையங்களில் எழுதுகிறார்கள். எதை எழுதவேண்டும் என்று தெரிந்தவர்கள் கூட எப்படி எழுதுவது என்று தெரியாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் ஒரு நல்ல கதைசொல்லி கிடையாது என்பது எனக்கே தெரியும். அப்படிப்பட்ட நான் கூட தைரியமாக கதை என்று எதையோ எழுதி, இணையங்களில் சில பரிசுகளை கூட வாங்கிவிட்டேன். ஒரு சில கதைகள் பத்திரிகைகளிலும் பிரசுரம் ஆகிவிட்டது என்பதெல்லாம் பெருங்கொடுமை. இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்னைவிட மிகத்திறமையான கதைசொல்லியாக இருக்கலாம். உங்களிடம் நிறைய தீம் இருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு கதையை எந்த வடிவில் எழுத்தில் வழங்கலாம் என்பதில் மிகப்பெரிய குழப்பம் உங்களுக்கு மட்டுமல்ல, பல வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கும் பலருக்கும் இருக்கிறது.

ஒரு நல்ல காஃபியில் டிக்காஷனும், பாலும் சரியான விகிதத்தில் கலந்திருக்க வேண்டியது அவசியம். அது போலவே ஒரு நல்ல சிறுகதையில் கதையின் உள்ளடக்கமும், அந்த உள்ளடக்கத்தை நல்ல முறையில் வாசகனுக்கு கையளிப்பதற்கான பொருத்தமான வடிவமும் மிக முக்கியமானது.

தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாக சுயநலமானவர்கள். தாங்கள் கற்ற வித்தைகளை, அனுபவத்தில் அறிந்த நுணுக்கங்களை அவ்வளவு சுலபமாக மற்றவர்களிடம் பகிர்ந்துவிட மாட்டார்கள். அரிதிலும் அரிதாக ஒருசிலர் பகிர்ந்துக் கொள்வார்கள். தமிழின் மிக முக்கியமான நான்கு எழுத்தாளர்கள் சிறுகதைப் பட்டறை ஒன்றினில் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களை, தாங்கள் கற்றவைகளை, அடிபட்டு தெரிந்துகொண்டவைகளை பகிர்ந்துக்கொள்ளப் போகிறார்கள் என்பது எவ்வளவு அருமையான விஷயம்?

தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவரான சுகுமாரன் உலகச் சிறுகதைகள் குறித்தும், தான் எப்படி சிறுகதைகள் எழுதுகிறேன் என்று சிறுகதை மற்றும் நாவலாசிரியரான யுவன்சந்திரசேகரனும், சிறுகதைகளுடனான தனது அனுபவங்கள் குறித்து சிறுகதை ஆசிரியரும், சினிமா வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தியும், 'சிறுகதை எழுதுவது எப்படி?' என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளரும், கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியருமான பா.ராகவனும் பேச இருக்கிறார்கள்.

இந்நிகழ்வுக்காக சுஜாதாவின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?' கதையில் வருவதைப் போலவே இதற்காகவே ஒரு பட்டறையை நடத்த 'உரையாடல் கலை இலக்கிய அமைப்பு' முன்வந்திருக்கிறது. ஆனால் சுஜாதா கதையின் இறுதியில் வருவதைப் போல உங்கள் வீட்டு அண்டா, குண்டாவையெல்லாம் உரையாடல் அமைப்பினர் ஆட்டை போட்டுக் கொண்டு போக மாட்டார்கள் என்பதற்கு நான் நூறு சதவிகித உத்தரவாதம் தருகிறேன்.

சிறுகதைப் பட்டறை குறித்த முழுவிவரங்கள் பைத்தியக்காரன் அவர்களின் இப்பதிவில் இருக்கிறது. க்ளிக்கிப் பார்த்து, மறக்காமல் உங்களது பெயரை முன்பதிவு செய்துக் கொள்ளவும். இப்போது கந்தசாமி படத்தின் முன்பதிவை விட இந்த சிறுகதைப் பட்டறைக்கான முன்பதிவே பரபரப்பாக நடந்து வருகிறது.

அமைப்பாளர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். பட்டறையில் கலந்து கொள்பவர்களுக்கு பலதரப்பட்ட விஷயங்களை இணைத்து தொகுப்பாக வழங்குவதாக கூறியிருக்கிறீர்கள். இந்தத் தொகுப்போடு தமிழர் தந்தை ஆதித்தனார் எழுதிய ‘இதழாளர் கையேடு' நூலையும் வழங்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.

16 ஆகஸ்ட், 2009

ரகசிய சிநேகிதியும், கள்ளக்காதலனும்!


"ஹலோ யாரு பேசுறது"

"ஹலோ எங்கிட்டே பேசிக்கிட்டிருக்கிறது ரகசிய சிநேகிதியா?"

"ஆமாங்க நான் ரகசிய சிநேகிதி தான் பேசுறேன். நீங்க யாரு"

"என் பேரைச் சொல்ல விரும்பலீங்க. என் ப்ரெண்ட்ஸ்ஸெல்லாம் என்னை தோஸ்த்துன்னு கூப்பிடுவாங்க. நீங்களும் அப்படியே கூப்பிடுங்க"

"சரி தோஸ்த். உங்க காதலி பேரு என்ன? எவ்வளவு நாளா காதலிக்கிறீங்க. இப்போ உங்க காதல் எந்த கண்டிஷன்லே இருக்கு?"

"என் காதலியோட பேரை சொல்ல விரும்பலீங்க. அவங்களுக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சி"

"ஸோ பிட்டி. என்ன ஆச்சி? எப்படி பிரிஞ்சீங்க? ஏன் பிரிஞ்சீங்க?"

"என் காதலியோட அப்பா ஒரு அரசியல் கட்சி பிரமுகர். எந்தக் கட்சின்னு சொல்ல விரும்பலை மேடம். அவரால என் உயிருக்கு ஆபத்து வருமுன்னு என் காதலியே என்னை பிரிஞ்சி வேற கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க"

"அடப்பாவமே. உங்க காதலியை கடைசியா எப்போ பார்த்தீங்க?"

"இப்பக்கூட அவங்க கூட தியேட்டர்லே தான் இருக்கேன் மேடம். கல்யாணத்துக்கு அப்புறமா கூட எங்க ரெண்டு பேருக்கும் தொடர்பு இருக்கு"

"அய்யய்யோ. இது அவங்க ஹஸ்பெண்டுக்கு தெரியுமா?"

"அது எப்படிங்க தெரியும்? எனக்கு என்ன வருத்தம்னா அவங்க எனக்கு கிடைக்காம போயிட்டாங்களேங்கிறது தான். அப்படியும் சொல்ல முடியாது. இப்பவும் நாங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சிக்கிட்டு தான் இருக்கோம்"

"இண்ட்ரஸ்டிங்.... உங்களுக்குள்ளே வேற என்னவெல்லாம் இருக்குன்னு சொல்ல முடியுமா?"

"அதெல்லாம் வெளிப்படையா சொல்ல முடியாதுங்க"

"உங்களுக்கு எப்போ கல்யாணம்"

"எனக்கும் கல்யாணம் சீக்கிரமா நடக்கப் போவுதுங்க. பொண்ணெல்லாம் கூடப் பார்த்தாச்சி"

"தேங்க்ஸ் பார் யுவர் காலிங் தோஸ்த். உங்க காதலியோட நீங்க லைப்பை என்ஜாய் பண்றதுக்கு இந்த ரகசிய ஸ்நேகிதியோட வாழ்த்துக்கள். இப்போ உங்களுக்கு புடிச்ச ஒரு லேட்டஸ்ட் சாங் வந்துக்கிட்டே இருக்கு"

- வெட்டியாக இருந்த பொழுதில் ஏதோ ஒரு எஃப்.எம்.மில் எப்பொழுதோ கேட்டது!

15 ஆகஸ்ட், 2009

பொக்கிஷம்!


தமிழ் சினிமாவை இவர்தான் தாங்கிப் பிடிக்கப் போகிறாராம். எவனுக்குமே படமெடுக்கத் தெரியாது. இவருக்கு மட்டும்தான் சர்வதேசத் தரத்தில் படம் எடுக்கத் தெரியுமாம். இவர் ஒருவர் தான் மேதாவி. மற்றவெனெல்லாம் வெத்து என்று கர்வமாகப் பேசித்திரியும் சேரனுக்கு அடுத்தடுத்து ஆப்பு அடித்துவிட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயக்கண்ணாடி. இப்போது பொக்கிஷம். பாவம், தயாரிப்பாளர் ஜபக்கின் லுங்கிதான் ஒட்டுமொத்தமாக உருவப்பட்டிருக்கிறது. பெரிய இயக்குனர் நடித்து, இரண்டு ஆண்டுகளாக பிரேம் பை பிரேமாக செதுக்கப்பட்டிருக்கும் படம் முதல்நாளே தியேட்டர்களில் காத்தாடுகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்தே ரசிகர்கள் ஒரு காட்சியைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் நெளிந்துக்கொண்டே இருக்கிறார்கள். இடைவேளையில் படத்தின் கோராமை தாங்காமல் ஓடியவர்களை பார்த்திருக்கிறோம். இடைவேளைக்கு முன்பே துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பதறியடித்துக் கொண்டு ஓடுகிறார்கள்.

சேரன் தன் காதலி பத்மபிரியாவுக்கு கடிதம் எழுதுகிறார். பத்மபிரியா பதிலுக்கு கடிதம் எழுதுகிறார். அந்த பதில் கடிதத்துக்கு சேரன் இன்னொரு பதில் கடிதம் எழுதுகிறார். பதில் கடிதத்துக்கு மறுபடியும் பதில். ஒவ்வொரு கடிதக் கருமத்தையும் முழுமையாக சேரனும், பத்மபிரியாவும் படிக்கிறார்கள். இப்படியாக ஒரு இருபது, முப்பது கடிதம் முழுமையாக படிக்கப்படுகிறது. இதுதான் படம். ஐம்பது ரூபாய் கொடுத்து படம் பார்க்க தியேட்டருக்கு வருபவர்கள் எல்லாரும் கேணைப்பசங்கள் என்று படமெடுக்கும் போதே சேரன் முடிவெடுத்து விட்டார் போலிருக்கிறது.

இந்த கருமாந்திரப் படத்துக்கு எதற்கு கல்கத்தா, எதற்கு 70 காலக்கட்டம், எதற்கு கம்யூனிஸ்ட், எதற்கு முஸ்லிம், எதற்கு மலேசியா என்று புரியாமலேயே சீத்தலைச் சாத்தனார் மாதிரி தலையை பிய்த்துக் கொண்டு சாக வேண்டியிருக்கிறது. தயாரிப்பாளரின் பணத்தில் சேரன் மஞ்சக் குளிக்க மலேசியா என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

இந்தப் படம் பார்க்கும் எந்தத் தயாரிப்பாளரும், 'சேரனை வைத்து இனி படமெடுக்க மாட்டேன்' என்று ஏ.வி.எம். பிள்ளையார் கோயிலில் சத்தியமாக சத்தியம் செய்வார்கள். 'ஆட்டோகிராப்' வெளிவந்தபோது உலகத்தரத்தில் ஒரு தமிழ்படம் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய தமிழ்ரசிகர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் அடுத்தடுத்து காறி உமிழ்ந்துக் கொண்டு வருகிறார் சேரன். சேரனுக்கு இப்போது உடனடித் தேவை இன்னொரு ‘வெற்றிக் கொடி கட்டு', ஆட்டோகிராப் பார்ட்-3 அல்ல என்பதை யாராவது அவருக்கு எடுத்துச் சொன்னாலும் ஆணவமும், அகம்பாவமும் நிறைந்த அவரது மனசின் ஈகோவுக்கு முன்பாக எடுபடப் போவதில்லை.

இந்தப் படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை ஏற்படுவதை விட, பன்றிக்காய்ச்சல் வந்து செத்துப் போகலாம். படத்தை முழுவதுமாகப் பார்ப்பவர்களை ஆம்புலன்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டுப் போகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

13 ஆகஸ்ட், 2009

பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மகேந்திரன்!


எழுத்தாளர் ஞாநியின் ‘கோலம் குறுந்தகடு இயக்கம்’ பற்றி இந்தவார குமுதத்தில் வாசித்திருப்பீர்கள். படங்கள் எடுக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடாமல் நேரடியாக மக்களுக்கு குறுந்தகடு வாயிலாக (துட்டு வாங்கிக் கொண்டுதான்) அனுப்பும் இயக்கம் இது. இந்த இயக்கத்தின் தொடக்கம் இன்று மாலை சரியாக 6.30 மணிக்கு (13-08-09) சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது.

இயக்குனர்கள் கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். அனைவரும் நண்பர்களோடு வரலாம் என்று ஞாநி அறிவித்திருக்கிறார்.

ஞாநியின் விழாக்களில் கவர்ச்சிகர அம்சமாக அவருடைய டிசைனர் பைஜாமா உடையலங்காரத்தை முக்கியமாக குறிப்பிடலாம். எங்கேயாவது ரெடிமேடாக கிடைக்கிறதா? இல்லை அவருக்கென்று ஆர்டர் செய்து தைக்கிறாரா என்று நேரில் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம்.

கோகுலாஷ்டமி கும்பிடாத புண்ணியவான்கள் வந்துசேரலாம். சென்னை பிலிம் சேம்பர் அரங்கு, அண்ணா மேம்பாலத்துக்கு கீழே இருக்கிறது.

12 ஆகஸ்ட், 2009

சும்மா டைம்பாஸ்!

பன்றிக் காய்ச்சல் - ஊடகங்கள்!

பாரதிக்கு வயது 20. கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் நடந்தது. கணவர் மாடசாமி. மடிப்பாக்கத்தில் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஆடிமாசத்துக்காக தாய்வீட்டுக்கு வந்த பாரதிக்கு திடீர் காய்ச்சல். உள்ளூர் மருத்துவர்களிடம் சிகிச்சைப் பெற்றும் காய்ச்சல் சரியாகவில்லை. சீரியஸான நிலையில் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பன்றிக்காய்ச்சலுக்கான சோதனை அவருக்கு செய்யப்பட்டது. சோதனை முடிவுகளுக்கு முன்பே பாரதி பரிதாபமாக மரித்துப் போனார்.

மடிப்பாக்கம் பகுதியில் தீயென பரவியது பாரதியின் மரணச்செய்தி. ஏற்கனவே கடந்த சில நாட்களாக செய்தித்தாள்களிலும், வார இதழ்களிலும், தொலைக்காட்சி சேனல்களிலும் பார்த்துப் பதறிய பன்றிக்காய்ச்சல் தங்கள் ஊருக்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி நடுங்கினார்கள். இடையில் வேளச்சேரியில் ஒரு குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியானது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியானது.

தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினார்கள். மெடிக்கல் ஷாப்களில் விற்கப்படும் ‘மாஸ்க்’ வாங்கி அணிய ஆரம்பித்தார்கள். இன்று மடிப்பாக்கம், வேளச்சேரி சுற்றுவட்டாரங்களில் எந்த மெடிக்கல் ஷாப்பிலும் ‘மாஸ்க்’ ஸ்டாக் இல்லை. தென்சென்னையில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. ”எதுக்கும் உஷாரா இருந்தோப்பமே?” என்று கிங் இன்ஸ்ட்டிட்யூடில் வரிசையில் நின்று பன்றிக்காய்ச்சலுக்கான பரிசோதனையை செய்துக் கொள்கிறார்கள். மொத்தமாக பரிசோதனைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதால் பரிசோதகர்களே திணறிப் போயிருக்கிறார்கள்.

பாரதிக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் இப்போது வெளிவந்திருக்கிறது. அவருக்கு பன்றிக்காய்ச்சல் இல்லையாம்.

* - * - * - * - * - * - * - * - *

பன்றிக்காய்ச்சல் காரணமாக ஊரே பிணக்காடாகி விட்டது போன்ற பீதியை ஊடகங்கள் கிளப்பி வருகின்றன. நூற்றி பத்து கோடி பேர் வசிக்கும் நாட்டில் ஆயிரத்துக்கு ஏழு பேர் இறப்பதும், புதியதாக இருபத்து மூன்று பேர் பிறப்பதும் இயல்பாக நடந்து வரும் விஷயம். ஆயிரத்துக்கு ஏழு பேர் என்றால் நூற்றி பத்து கோடிக்கு எத்தனை பேர் இறக்கிறார்கள் என்று கணக்குப் போட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். மரணங்களும், பிறப்புகளும் நம் நாட்டுக்கு புதியதல்ல.

சுனாமி பேரிடரின் போது நம் பத்திரிகைகள் நடந்துகொண்ட விதம் உலகுக்கே முன்னுதாரணம். ஆனால் இப்போது பன்றிக்காய்ச்சல் போன்ற அசாதாரண சூழலில் நடக்கும் ஒவ்வொரு சாதாரண மரணமும் கூட ஊடகங்களால் பெரிதுப்படுத்தப்பட்டு உயிரோடு இருப்பவர்களை வதைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு உதாரணம்தான் மேலே கண்ட பாரதியின் மரணம். மரணம் கொடுமையானதுதான். ஒவ்வொரு மரணத்தின் போதும் அவர்களது குடும்பத்தார் கதறியழுவது சகஜமாக நடப்பதுதான். இதையெல்லாம் படம் பிடித்து டிவியில் போட்டு, பத்திரிகைகளில் படமாக்கி, பல கோடி பேரை அச்சமடையச் செய்வது நம் ஊடகங்களின் இன்றைய டிரெண்ட் ஆக இருக்கிறது. ’மும்பை 26/11’ சம்பவத்தின் போதே நம் ஊடகங்களின் யோக்கியதை சந்தி சிரித்தது.

போலியோ மருந்து போடப்படும் தினங்களிலும் இதுபோலவே பொறுப்பின்றி ஊடகங்கள் நடந்துகொள்வதால் பல்லாயிரம் குழந்தைகளுக்கு அந்தச் சொட்டுமருந்து போடப்படாமல் போவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு தினமும் தமிழகத்தில் குறைந்தது நான்கு அல்லது ஐந்து குழந்தைகளாவது மரித்துப் போகிறது. போலியோ சொட்டு மருந்து போடப்படும் தினத்திலும் இது தவிர்க்க இயலாதது. ஆனால் சொட்டு மருந்து போட்டுக் கொண்டதால் நான்கு குழந்தைகள் பலி என்று டிவியில் ஸ்க்ரோல் ஓட்டுவதாலும், மாலைச் செய்திகளில் குழந்தையின் பெற்றோர் கதறியழும் படத்தை அச்சிடுவதாலும் ஏற்படும் விளைவுகள் என்ன?

மக்களுக்கு செய்திகளை கொண்டு சேர்ப்பது அவசியமென்றாலும், வீணான வதந்திகளையும் இலவசமாக கொண்டு சேர்க்கும் பொறுப்பற்றத் தனத்தையும் நம் ஊடகங்கள் செய்துவருகிறது. இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பணியாற்றி, பாடுபட்டு வரும் அரசுக்கும், அரசின் ஊழியர்களுக்கும் இவை சிக்கலையும், சோர்வையும், சங்கடத்தையும் ஏற்படுத்தும்.

குறிப்பாக, பிராந்திய மொழி ஊடகங்களிடமே இந்த ’பரபரப்பு’ தொற்றுநோய் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தேசிய அளவில் செயல்படும் ஆங்கில ஊடகங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை. நிபுணர்களின் கருத்துகள், தவிர்க்கும் முறைகள் என்று கொஞ்சம் ஆழமாக செய்திகளை வெளியிடுகிறார்கள். இன்று காலை ஒரு தமிழ் நாளிதழில் பன்றிக்காய்ச்சல் குறித்து ஒரு ஜோசியர் சொன்னதை கட்டம் கட்டி வெளியிடப்பட்டதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டேன். விரோதி வருடம் பிறந்தபோதே, அவர் ஒரு உபன்யாசத்தில் இதை கோட்டிட்டுக் காட்டியிருந்தாராம். பன்றிக்காய்ச்சல் வருவதைத் தடுக்க சிவ வழிபாடு செய்யவேண்டுமாம். சிவன் கோயிலில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடப்போகிறார்கள். யாராவது பன்றிக்காய்ச்சல் வந்தவரும் அந்தக் கூட்டத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், முடிந்தது ஜோலி.

உலகளவில் ஊடகங்களிடம் இரண்டு பாணி உண்டு. ஒன்று பிபிசி பாணி. மற்றொன்று சி.என்.என் பாணி. நடந்ததை நடந்ததாக சொல்லுவது பிபிசி பாணி. நடந்த விஷயங்களை வைத்து என்னவெல்லாம் இனி நடக்கும் என்று யூகித்து செய்து வெளியிட்டு, சென்சேஷனல் ஆக்குவது சி.என்.என். பாணி. பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பரவும் காலங்களிலும், பேரிடர் சமயங்களில் மட்டுமாவது பிபிசி பாணியை நம் ஊடகங்கள் பாவித்தால் தேவலை.

11 ஆகஸ்ட், 2009

டாப் 10 தமிழ் வலைப்பூக்கள்!


இப்பொழுது போட்டி முடிவில் வென்றால் கூட ‘நான் ஏன் வென்றேன்?’ என்று காரணம் விசாரிக்கிறார்கள். எனவே, தமிழ்ப்பதிவுகளில் டாப் 10 சொல்லுமுன், அதற்கான நியாயங்கற்பித்தல் பட்டியல்:

இன்றைய தேதியில் யாருடைய பதிவு அனேக இணைய வாசகர்களால் மொயக்கப்படுகிறது?

எவர் எழுதினால் தமிழ்மணம் துவங்கி ட்விட்டர் வரை இரத்த பீஜனாக ரணகளமாகும்?

உயிர்மை போன்ற இலக்கிய குறு பத்திரிகை அளவிலும் சரி; குமுதம் போன்ற பெரு சஞ்சிகை வாசகர் ரேஞ்சிலும் சரி… ரீச் உண்டா?

அலெக்ஸா தர வரிசை எண் கணிதம்.

கூகிள் பேஜ் ரேங்க் என்ன?

பத்ரியின் பக்கவாட்டு பட்டியலில் பெயர் பெற்றிருக்கிறாரா?

கூகிள் ரீடரில் எவ்வளவு பேர் சந்தாதாரர் ஆகியிருக்கிறார்? செய்தியோடையை ப்ளாக்லைன்ஸ் மூலம் வாசிக்கும் எண்ணிக்கை எவ்வளவு?

‘புதுசு… கண்ணா… புதுசு’ மட்டுமில்லாமல், பச்பச்சென்று பார்த்ததும் கொள்ளை கொள்வதில் மேகன் ஃபாக்சாக எவர் உள்ளார்?

போன புல்லட் பாய்ன்ட்டிற்கு நேர் எதிராக கே பாலச்சந்தர் போல் வயசான காலத்திலும் சின்னத்திரை, மேடை நாடகம் என்று பழைய காவேரியை பாடில்ட் வாட்டர் ஆக்குபவரா?
என்னுடைய இதயத்தில் இடம் உண்டா?

டாப் 10 வலைப்பதிவுகளை காண இங்கே அழுத்தி அமுக்கவும்!

10 ஆகஸ்ட், 2009

அனார்கலி!


போர் - வாள் - இரத்தம் - வெற்றி! இடையில் இளைப்பாற அரண்மனை - அந்தப்புரம் - மது - மாது - இசை - நடனம்! இது தான் மொகலாயப் பேரரசர்கள்!

புத்திரப் பாக்கியம் வேண்டி பாலைமணலில், கடும் வெயிலில் வெறும்காலுடன் இந்துஸ்தானை ஆளும் மொகலாயப் பேரரசர் அக்பர் பாதயாத்திரை நடத்தும் காட்சியில் படம் தொடங்குகிறது. தவமாய் தவமிருந்து மாமன்னர் அக்பரின் மனைவி ஜோத்பாய்க்கு ஒரு மகன் பிறக்கிறார். அவர் இளவரசர் சலீம்.

மொகலாயப் பேரரசின் ஒரே வாரிசாகிய சலீம் அந்தப்புர மகளிரின் மென்மையான கரங்களுக்குள் செல்லமாய் வளர்கிறார். எட்டு வயதிலேயே மது, மாது என கேளிக்கைகளில் கலந்து, தந்தையைக் கலவரப்படுத்துகிறார். மகனின் இந்த மனம் போன போக்கை கண்ட மாமன்னர் அவர் போராடித் திருந்த வேண்டும் என்பதற்காக அந்த வயதிலேயே போர்க்களத்துக்கு அனுப்பி வைக்கிறார். வாளின் இடையறா 'கிளிங், கிளிங்' சத்தம், பீரங்கி குண்டுகளின் 'டமார் டுமீர்'. இதற்கிடையே போர்க்களத்தில் வளர்கிறார் இளவரசர். அசராத வீரம் காட்டி வெற்றி மேல் வெற்றியாக குவித்து தன் தந்தையின் காலடியில் சமர்ப்பிக்கிறார்.

சுமார் 14 ஆண்டுகள் கழித்து மாமன்னருக்கு புத்திரப் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. போர் போதும், அரண்மனைக்கு திரும்பு என ஆணையிடுகிறார். மகனைப் பிரிந்த மகாராணி மகனின் வரவை எண்ணி மகிழ்ச்சியடைகிறார். மாவீரனை வரவேற்க அரண்மனையே விழாக்கோலம் பூணுகிறது. இளவரசரை வரவேற்கும் விதமாக அவரை அசத்தும் வகையில் ஒரு சிலையை செய்யுமாறு அரண்மனைச் சிற்பிக்கு ஆணை போகிறது.

குறித்த நேரத்துக்குள் சிலையைச் செய்து முடிக்க இயலாத சிற்பி, ஒரு சித்து விளையாட்டைச் செய்கிறார்! சிலைக்கு மாடலாக நின்ற அந்த அழகுப் பெண்ணையே சிலையாக நிறுத்தி முத்துத் தோரணங்களால் மூடி வைக்கிறார். சிலைப்பெண்ணின் அழகு இளவரசரை சொக்க வைக்கிறது. தான் உயிர்ப்பெண் என்பதை அவள் ஒப்புக் கொண்டுவிடுகிறாள். அதன்பின் வேறென்ன நடக்கும் என்று சொல்லவும் வேண்டுமா? காதல் தான்! இளவரசரை சிலிர்க்கவைத்த அந்த சிங்காரச் சிலை தான் அனார்கலி.

சாதாரணப் பணிப்பெண்ணை மகாராணியாக்க இளவரசர் முடிவெடுக்கிறார். மொகலாயப் பேரரசரும், அவர் மனைவியும் பாரம்பரியத்தை காரணம் காட்டி இளவசரின் காதலை நிராகரிக்கிறார்கள். அரசர் அனார்கலியை சிறை வைக்கிறார். காதல் போதை ஏறிய இளவரசர் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் படையை கொண்டு மன்னர் மீதே போர் தொடுக்கிறார். இடையில் அனார்கலியை தன் ராஜபுத்திர நண்பனின் துணைகொண்டு சிறையில் இருந்து கடத்துகிறார் சலீம்.

என்னதான் வீர, தீரம் இளவரசர் சலீமுக்கு இருந்தாலும் அவர் மோதுவது இந்துஸ்தானின் பேரரசரிடம் ஆயிற்றே. பப்பு வேகுமா? மன்னரின் வீரத்துக்கு முன் சலீமின் படை சின்னாபின்னம் ஆகிறது. கலகம் விளைவித்ததாக குற்றம் சாட்டி இளவரசருக்கு மரணதண்டனை விதிக்கிறார் அரசர். மரணதண்டனையை வாபஸ் வாங்குமாறு நாடே கேட்டுக் கொள்கிறது அரசரை. அரசர் வாபஸ் வாங்க ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது அனார்கலியை திரும்ப ஒப்படைத்தால் இளவரசருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்கிறார். மாமன்னர் அக்பரின் மகனாயிற்றே சலீம். ஒத்துக் கொள்வாரா?

சலீமுக்கு மரணதண்டனை என்பதை கேள்விப்பட்ட அனார்கலி அவராகவே வந்து சரணடைகிறார். மரணதண்டனை மாற்றி அமைக்கப்படுகிறது. சலீமுக்கு பதிலாக அனார்கலிக்கு மரணதண்டனை. உயிருடன் அவருக்கு கல்லறை கட்ட வேண்டுமென்பது மன்னரின் ஆணை. அனார்கலியிடம் கடைசி ஆசை என்ன என்று கேட்கப்படுகிறது. ஒரு நாளாவது மொகலாயப் பேரரசுக்கு மகாராணியாக இருக்க வேண்டுமென்பது அனார்கலியின் ஆசை. மன்னரும் இதற்கு ஒத்துக் கொள்கிறார் வழக்கம்போல ஒரு நிபந்தனையுடன்.

அதாவது மகாராணியாகும் அனார்கலி முதலிரவுக் கொண்டாட்டம் முடிந்து மறுநாள் விடிவதற்குள் சலீமை மயங்கவைத்து விட்டு (ரோஜாப்பூவில் மயக்க மருந்து) மரணதண்டனைக்கு சம்மதிக்க வேண்டும் என்பதே நிபந்தனை. அவ்வாறே நடக்கிறது. சலீம் மயங்கியவுடன் மாமன்னரின் சிறப்பு மெய்க்காவல் படையினர் அனார்கலியை அழைத்துச் சென்று உயிருடன் கல்லறை கட்டுகின்றனர். கல்லறை 99 சதவிகிதம் முடிந்து விட்டது. அனார்கலியின் கண்கள் மட்டுமே வெளியே தெரிகிறது.

என்ன ஆச்சு? அனார்கலி மரணமடைந்தாரா? இல்லை மயக்கம் தெளிந்த சலீமால் காப்பாற்றப் பட்டாரா? கருணை நிறைந்தவராக வரலாற்றில் குறிப்பிடப்பட்ட பேரரசர் அக்பரின் கருணை இவ்வளவு தானா? பரபரப்பான கிளைமேக்ஸை நீங்களும் வண்ணத்திரையில் காணுங்களேன். ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இப்படம் வரும் பதினான்காம் தேதி திரையரங்குகளில் திரையிடப்படுவதாக விளம்பரப் படுத்தப் பட்டிருக்கிறது.

1960ல் வெளியிடப்பட்ட முகல்-இ-ஆஸம் என்ற இந்தித் திரைப்படம் கருப்பு வெள்ளையில் வெளியானது. மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம். நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை மவுண்ட் ரோட்டில் "ப்ளாக்கில்" டிக்கெட் வாங்கி பெருசுகள் படம் பார்த்தார்களாம். இந்த மாபெரும் காவியம் 2004ல் வண்ணமாக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 3 லட்சம் பிரேம்களை வண்ணமாக்கியிருப்பது என்பது மாபெரும் அதிசயம். அசுர உழைப்பு உழைத்திருக்கிறார்கள் கம்ப்யூட்டர் வல்லுனர்கள்.

சலீம் - அனார்கலி கதை வரலாற்றில் இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை. இது கட்டுக்கதையே. பீர்பால் மற்றும் தெனாலிராமன் கதைகளில் நம் ஆட்கள் சுவாரஸ்யத்திற்காக எவ்வளவு கற்பனை செய்திருக்கிறார்களோ அதுபோலவே அக்பர் மற்றும் அவரது மகன் வாழ்வையும் சுவாரஸ்யமான காதல் கதை ஆக்கியிருக்கிறார்கள்.

படம் வரலாறோடு எந்த அளவுக்கு ஒத்துப் போகிறது என்று பார்த்தோமானால் அக்பர் குழந்தை வரம் வேண்டி ஒரு முஸ்லிம் துறவியை சந்திப்பது போல முதல் காட்சி அமைந்திருக்கிறது. அது உண்மையே அக்பர் சந்தித்த முஸ்லிம் துறவியின் பெயர் ஷேக் சலீம் சிஸ்டி. இது அக்பரின் 27ஆவது வயதில் நடந்தது. அக்பரின் சுயசரிதையான "அக்பர் நாமாவை" எழுதிய அப்துல் பஸல் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்.

அக்பரின் மகன் பெயர் சலீம் என்பதும் உண்மையே. பிற்காலத்தில் இவர்தான் "ஜஹாங்கீர்" என்ற பெயரில் மொகலாயப் பேரரசை கட்டிக் காத்தவர். அக்பரின் பட்டத்து மகாராணி ஒரு இந்து என்பதும் உண்மையே. அவர் பெயர் ஜோத்பாய். இவர் ஆம்பர் நாட்டு இராஜபுத்திர மன்னர் பீர்மால்சிங்கின் மகள்.

சலீம் படத்தில் காட்டியபடி காதலுக்காக உயிர் விடும் அளவுக்கு போனவர் தான். வரலாற்றில் இவருக்கு 20 மனைவிகள் வரை இருந்ததாக குறிப்புகள் இருக்கிறது (இவர் தந்தையின் மனைவிகள் எண்ணிக்கை செஞ்சுரியைத் தாண்டி விட்டிருக்கிறது) சலீமின் முதல் மனைவியும், பட்டத்து மகாராணியும் கூட ஆம்பர் நாட்டு இந்து இளவரசி தான். சலீம் ரொம்பவும் காதல் செய்து மணந்தது நூர்ஜகான் எனும் கைம்பெண் ஒருவரை. இன்றளவில் மிக உயர்ரக வாசனைத் திரவியமான அத்தர் எனும் ரோஜாப்பூவில் தயாரிக்கப்படும் வாசனைத் திரவியத்தை கண்டுபிடித்தது இந்த நூர்ஜகான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அனார்கலி என்ற ஒரு கேரக்டரே வரலாற்றில் கிடையாது. அப்துல் பஸல் மட்டுமல்ல மற்ற வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கூட அனார்கலி - சலீம் காதலை கட்டுக்கதை தான் என்று உறுதிப்படுத்துகிறார்கள். கற்பனை தான் என்றாலும் கூட சுவாரஸ்யமாக இருப்பதால் இந்தக் கட்டுக்கதை எழுதியவர்களை மன்னித்து விட்டு விடலாம்.

உண்மை வரலாற்றுக்கும், இந்த திரைப்படத்துக்கும் நிறைய வேறுபாடுகளும், ஒரு சில ஒற்றுமைகளும் மட்டுமே இருக்கிறது. படத்துக்கு செய்யப்பட்ட லைட்டிங் கருப்பு வெள்ளைக்காக செய்யப்பட்டிருப்பதால் இப்போது வண்ணத்தில் பார்க்கும் போது ஒரு சில இடங்களில் கண்ணை உறுத்துகிறது. பாடல்காட்சிகளில் எக்ஸ்ட்ரா கேர் எடுத்து வண்ணம் அமைத்திருக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணஜெயந்தி பாடலும், கிளைமேக்ஸ் பாடலும் கண்ணைக் கொள்ளை கொள்கிறது. பாடல்கள் எல்லாமே "ஆஹா, ஓஹோ" ரகம் தான். மனதை மயக்கும் இசை. பாடல்களில் பெரும்பாலானவை கோட்டைகளிலும், அசரவைக்கும் செட்கள் அமைத்தும் படமாக்கப் பட்டிருக்கின்றன.

படத்தின் வசனங்கள் முழுக்க முழுக்க கவிதை நடையிலேயே அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது. போருக்கு சென்று விழுப்புண்களுடன் திரும்பும் தன் மகனைப் பார்த்து தாய் சொல்கிறார் "நான் பாலூட்டி உனக்கு கொடுத்த இரத்தத்தை எல்லாம் விவசாயிகள் வயலுக்கு நீர் பாய்ச்சுவது போல போர்க்களத்தில் உன் இரத்தத்தை எல்லாம் பாய்ச்சினாயா?"

ஒருநாள் பட்டத்து ராணியாக அக்பர் கைகளால் கிரீடம் சூட்டிக்கொள்ளும் அனார்கலி திரும்பிப் போகும் போது நின்று அக்பரைப்பார்த்து, "மொகலாயப் பேரரசின் மகாராணியாக இப்போது முடிசூட்டடப் பட்டிருக்கும் அனார்கலி, சக்கரவர்த்தி அக்பர் நாளை காலையில் செய்யப்போகும் குற்றத்தை மன்னித்தருள்கிறாள்" என்று சொல்வது கவிதைச் சவுக்கடி!

இவ்வாறாக படம் முழுவதும் வசனக் கவிதையாக இருப்பதால் பெரும் இடங்களில் ரசிக்க முடிகிறது. சில நேரம் அதுவே ஓவர்டோஸோ என்று கூட நினைக்க வைக்கிறது. சரித்திரக் கதைகளை இனி டப்பிங் செய்யும்போது "இம்சை அரசன்" படத்தின் வசனநடையில் எழுதினாலேயே போதுமானது. இன்றைய தலைமுறை புரிந்துக் கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும். செந்தமிழை எல்லாம் தியேட்டரில் இளைஞர்கள் எந்த அளவுக்கு ரசிப்பார்கள் என்று தெரியவில்லை. "தம்" அடிக்க வெளியே எழுந்துப் போய்விட வாய்ப்புகள் அதிகம்.

போர்க்கள காட்சிகளை 45 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பிரம்மாண்டமாக எப்படி எடுத்திருப்பார்கள் என்று வியப்பு மேலிடுகிறது. சந்திரலேகா போன்ற பிரம்மாண்ட படங்களை மிஞ்சும் வகையில் ஆயிரக்கணக்கான வீரர்களைப் பயன்படுத்தி நம் கண்களையே நம்ப முடியாத வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே மிக இயல்பாக (ஓவர் ஆக்டிங் இல்லாமல்) தங்கள் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அக்பராக நடித்திருக்கும் பிருத்விராஜ்கபூர் (ராஜ்கபூரின் நைனாவா?) கம்பீரமாக கலக்கலாக நடித்திருக்கிறார். அக்பர் அறிஞர் அண்ணாவைப் போல ரொம்பவும் குள்ளம் என்று படித்திருக்கிறேன். இவர் கொஞ்சம் உயரமாக இருப்பதுபோல படுகிறது.

சலீமாக நடித்த திலீப்குமார் போர்க்களத்தில் செங்கிஸ்கான் மாதிரி வீரம் காட்டுகிறார். அவர் பார்வையும், நடையும் அருமை. காதலிக்கும் போது தான் "சொங்கி"ஸ்கான் மாதிரி சோம்பல் காட்டுகிறார். எப்போது பார்த்தாலும் காதல் ததும்பும் கண்களுடனேயே போதையுடன் இவர் இருப்பது கடுப்பாக இருக்கிறது. அனார்கலியாக நடித்த மதுபாலா கொள்ளை அழகு. கண்களாலேயே காதல் சுனாமி ஏற்படுத்துகிறார். பொறாமைக்கார அந்தப்புர பணிப்பெண்ணாக பாகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரும் அழகாக இருக்கிறார். அருமையாக நடிக்கிறார்.

45 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்தாலும் இந்தப் படத்தின் முக்கியக் கருவான "காதல்" எல்லா காலக்கட்டத்துக்கும் பொருந்தும் ஒரே டிரெண்ட் என்பதால் எவர்க்ரீன் ஹிட் இந்தப்படம்!