14 ஜூன், 2009

தேவதைகளும், கண்ணாடிகளும்!


தேவதைகள் எப்போதும் அருள் மட்டுமே பாலித்துக் கொண்டிருப்பதில்லை. அவ்வப்போது அச்சுறுத்தவும் செய்கிறார்கள். வாடிகன் தேவதைகள் ஏஞ்சல்ஸ் & டிமான்ஸில் உலகை அச்சத்தில் ஆழ்த்தியது மாதிரி.

போப்பாண்டவர் செத்துப் போகிறார். புதுப்போப்பை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் முக்கியமான நான்கு கார்டினல்கள் காணவில்லை. ஒரு ஆய்வுக்கூடத்தில் மிகமுக்கியமான ’வயல்’ (Vial) என்று சொல்லக்கூடிய விஷயம் ஒன்று கொள்ளையடிக்கப் பட்டிருக்கிறது. அந்த வயலால் வாடிகன் அழிவதை தடுக்க அமெரிக்காவில் இருந்து புரொபசர் ஒருவர் கிளம்பிவருகிறார். அவர் நாத்திகர். அவருக்கும் வாடிகனின் புனிதர்கள் சிலருக்கும் அவ்வப்போது நாத்திக, ஆத்திக விவாதம் நடைபெறுகிறது.

வாடிகனுக்கு புதியதாக வில்லன்கள் முளைத்துவிடவில்லை. அது முன்னூறு, நானூறு ஆண்டு பகை என்று புரொபசர் விளக்குகிறார். அவர்கள் பெயர் இலுமினாய்ட்ஸாம். அறிவியல் வெறியர்கள். மதஅடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிரான விஞ்ஞான தீவிரவாதிகள். கடத்தப்பட்ட கார்டினல் ஒவ்வொருவராக இலுமினாய்டிகள் கொன்றுகொண்டே வர, கடைசி கார்டினலையும் கொன்று விட்டு, அந்த வயல் மூலமாக வாடிக்கனையே அழிப்பது இலுமினாய்டுகளின் திட்டம்.

புரொபசரால் கார்டினல்களை காப்பாற்ற முடிந்ததா? வயலால் வாடிகன் அழியாமல் காக்கமுடிந்ததா என்பதே படம். படம் முழுக்க ஹிட்ச்காக் பாணியில் திடீர் திடீரென பலர்மீது சந்தேகத்தின் நிழல் விழுகிறது. யார் குணச்சித்திரம்? எவன் துரோகி? எவன் வில்லன்? என்பது யாரும் எதிர்பாராத அடுக்கடுக்கான சஸ்பென்ஸ்.

டான்பிரவுன் இந்த நாவலை எழுதியதுமே இதை தமிழில் தசாவதாரமாக உல்டா அடித்து எடுத்துவிட்டார்கள். ஹாலிவுட்காரர்கள் கொஞ்சம் சோம்பேறிகள். தசாவதாரம் வெளிவந்து ஒருவருடம் கழித்துதான் இப்படத்தை வெளியிட முடிந்திருக்கிறது.

* - * - * - * - * - * - * - *

அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அவரவர் முக அழகை கண்ணாடிதான் வெளிக்காட்டும். முகத்தை மட்டுமன்றி பேய்களையும் கண்ணாடிகள் காட்டுவது பைபிள்கால சினிமா ஸ்ட்ரேட்டஜி. மிர்ரர்ஸ் திரைப்படமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நியூயார்க் நகரில் டிடெக்டிவ்வாக பணியாற்றிய ஒருவர், ஒரு குற்றம் தொடர்பாக பணிநீக்கம் செய்யப்படுகிறார். வேறு பணி கிடைக்காத நிலையில் தீவிபத்தில் எப்போதோ எரிந்துப்போன மிகப்பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றில் நைட் வாட்சேமனாக பணியாற்றி வயிற்றைக் கழுவுகிறார்.

இரவு வேளைகளில் ரவுண்ட்ஸ் வரும்போது கிட்டத்தட்ட அழிந்துப்போன அந்த பிரம்மாண்ட கட்டத்தின் ஒரு பகுதியில் சில கண்ணாடிகள் மட்டும் பளிச்சென இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைகிறார். அக் கண்ணாடிகளுக்குள் அடைந்துக் கிடக்கும் ஆவிகள் அடுத்த சில நாட்களில் அவரது வாழ்க்கையில் ஆடும் பேயாட்டம் தான் மிர்ரர்ஸ். படத்தின் ஒலிப்பதிவு பயங்கரமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பயமென்னும் உணர்வை ஏற்படுத்திய படம் இது. இப்படத்தின் முடிவும் யாரும் எதிர்ப்பார்க்க இயலாதது.

கடந்த வாரம் இந்தியாவில் வெளியாகியிருக்கும் இப்படம், கடந்த வருடமே ஹாலிவுட்டில் வெளியாகியிருக்கிறது. இது இந்தியாவில் வெளியாகுவதற்கு முன்பே இப்படத்தை அச்சு அசலாக, சில காட்சிகளோடு சேர்த்து 13பி என்று இந்தியிலும், யாவரும் நலம் என்று தமிழிலும் படமெடுத்து துட்டு பார்த்துவிட்டார்கள். இந்த அழகில் 13பி படத்தை ஹாலிவுட்டில் ரீமேக் செய்ய யாரோ ஒரு கோயிந்து கேட்டிருப்பதாக இயக்குனர் பேட்டி வேறு தருகிறார்.

1 கருத்து:

  1. கண்ணாடிகள் பார்த்து சில நாட்கள் கண்ணாடி பார்பதையே தவிர்த்து வந்தேன். மிகவும் பயமுறுத்திய படம்.

    பதிலளிநீக்கு