28 செப்டம்பர், 2012

துரத்துதலும், ஓட்டமும்!


புலிகள் துரத்துகின்றன. கனவில் அல்ல. எருமைமாடு அளவில் ஒன்பது புலிகள். மஞ்சள் உடலில் கறுப்பு கோடுகள். ஒன்பதுமே அச்சு அசலாக ஒரே மாதிரி. நேற்று துரத்திய புலி இன்றைய கூட்டத்தில் இருக்கிறதா என்று அடையாளம் தெரியவில்லை. பெண் புலி தன் கணவனையும், மகனையும் எப்படி பிரித்தறிந்து அடையாளம் காணும்? ஓடுவதிலோ, துரத்துவதிலோ சுணக்கம் ஏற்பட்டால் ஒரு தரப்புக்கு வெற்றி. ஒரு தரப்புக்கு தோல்வி. வெற்றி, தோல்வி இரண்டுமே தவிர்க்க முடியாதது.

ஓடிக்கொண்டேயிருக்கிறேன். ஸ்பார்ட்டாவிலிருந்து ஒலிம்பியாவுக்கு ஓடிய கிரேக்க வீரனை போல். அடர்கானகத்தில் நான் மட்டும் மனிதன். என்னை துரத்துவது ஒன்பது புலிகள். என்னுடைய பூட்ஸ் சத்தம் நாராசமாக கேட்கிறது. கீச் கீச்சென்று அசந்தர்ப்பமாக கத்தும் பட்சிகள் எங்கே போனது. புலிகளின் குளம்புச் சத்தம் துளியும் கேட்கவில்லை. குதிரை ஓடினால் மட்டும் எப்படி டக் டக்கென்று சத்தம் வருகிறது? குதிரைக்கு லாடம் அடிக்கலாம். புலிகளுக்கு யார் அடிப்பது?

நான் ஓடுவதின் நோக்கம் உயிர்வாழ்வது. துரத்தும் புலிகளின் நோக்கமும் அதுதான். அடுத்த சில நாட்கள் உயிர்வாழ நான் மட்டுமே அவற்றுக்கு இரை. ஒளிபுகமுடியா கானகத்தில் நான் மட்டுமே மனிதன். எஞ்சியிருந்த மான்களையும், காட்டெருமைகளையும் இந்த அடாத புலிகள் ஏற்கனவே புசித்து விட்டது. புதர்களுக்குள் ஒளிந்திருந்த நான்கைந்து நரிகளும் நாட்டுக்கு போய்விட்டது. மிஞ்சியிருப்பது நானும், ஒரு சில முயல்களும். புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, முயலையும் தின்னாது. புலிப்பசிக்கு சோளப்பொறி போல முயல்கறி. கட்டுப்படியாகுமா?

உயிர்வேட்கையில் ஓடிக்கொண்டிருக்கிறேன். புலிகள் என்னை துரத்துவது போல நான் புலிகளை துரத்த முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யோசித்துப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. புலிகள் போல எனக்கு கூரிய பற்களும், நகங்களும் இல்லையே? ஒரு நரியை கூட துரத்திப் பிடிக்க என்னால் ஆகாது. ஆயினும் இன்று புலிகளை விட வேகமாய் ஓடுகிறேன். துரத்துதலும், ஓடுதலும் தவிர்க்க முடியாதது. துரத்தும்போது இருப்பதை காட்டிலும் ஓடும்போது உடலில் சக்தி அபரிதமாக அதிகரிக்கிறது.

பிறந்ததிலிருந்து ஓடிக்கொண்டு தானிருக்கிறேன். இப்போது ஓடுவதை விட முன்னெப்போதும் வேகமாக ஓடியதில்லை. காடதிர, நிலம் குலுங்க உறுமும் புலிகள் இன்று சத்தமில்லாமல் ஏன் துரத்துகிறது? உறுமி நேரத்தை வீணடிப்பானேன்? துரத்துவதில் உன்னிப்பாக இருக்கலாம், வேட்டையை விரைவில் முடித்து விடலாம் என்று நினைத்திருக்கலாமோ? என் பூட்ஸ் ஒலி மட்டும் எனக்கு கேட்கிறது. புலிகளின் வேகத்தால் காற்று தடைபடும் விஸ்ஸென்ற மெல்லிய ஓசை மட்டுமே புலிகள் என்னை துரத்துவதற்கு அடையாளம். இரண்டு புலிகள் நெருங்கி விட்டிருக்கலாம். நான்கு புலிகள் பரவி ஓடி என்னை மடக்க முயற்சிக்கலாம். மூன்று புலிகள் பின் தங்கியிருக்கலாம். கிழட்டுப் புலிகள்.

பிறந்த மேனியாய் ஓடுவது அசவுகரியம். குளிர் காற்று உடலை ஊடுருவுகிறது. இடுப்பு வரை வளர்ந்த மயிர் அவ்வப்போது முகத்தில் விழுந்து பார்வையை மறைக்கிறது. தாவரங்களின் முள் மார்பையும், இடையையும், இடைக்கு கீழான பகுதிகளையும் இரக்கமின்றி குத்தி ரணமாக்குகிறது. இந்த பூட்ஸ் கூட எனக்கு எங்கேயோ மலைப்பிரதேசத்தில் எப்போதோ கிடைத்தது. ஒரு எலும்புக்கூட்டின் காலெலும்பில் கண்டெடுத்தேன். இதன் பெயர் பூட்ஸ் என்று கூட எனக்குத் தெரியாது. இடதுபூட்ஸை இடது காலுக்கும், வலது பூட்ஸை வலது காலுக்கும் போடவேண்டும் எனுமளவுக்கும் எனக்கு அறிவு கிடையாது. நகர மனிதனுக்கும், காட்டுமிராண்டிக்கும் இதுதான் வித்தியாசம். ஆனால் காடு சொர்க்கம், நகரம் நரகம் என்றே எண்ணுகிறேன்.

நகரத்திலும் ஓடுவார்களா? அவர்களை புலி துரத்துமா? புலிகள் வசிக்க நகரத்தில் குகையுண்டா? அங்கு முயல்கள் இருக்குமா? மரங்கள் இருக்குமா? மரத்தில் பழங்கள் காய்க்குமா? நீரருந்த குளங்கள் இருக்குமா? நகரம் எப்படியிருக்கும்? அங்கு யார் ஓடுவார்கள்? யார் துரத்துவார்கள்? ஓடுவதும், துரத்துவதும் உயிர்கள் பிறந்ததிலிருந்து நடந்துகொண்டிருக்கிறது. அங்கும் யாராவது ஓடுவார்கள். அல்லது விரைவாக நடப்பார்கள். யாராவது துரத்துவார்கள். அல்லது மெதுவாக துரத்துவார்கள். காட்டு மனிதனாகட்டும், நாட்டு மனிதனாகட்டும். உயிர் வாழ்வது அவசியம் தானே?

புலிகள் துரத்துகின்றன. நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

10 கருத்துகள்:

 1. நான் ஓடுவதின் நோக்கம் உயிர்வாழ்வது. துரத்தும் புலிகளின் நோக்கமும் அதுவே.//

  பதிவும் பின்னுட்டமும் போல

  பதிலளிநீக்கு
 2. புலிகள் துரத்துகின்றன.. உயிர்வேட்கையில் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.

  ஜாலி என்று டாக் போட்டதுதான் அழகு..

  பதிலளிநீக்கு
 3. //புலி பசித்தால் புல்லை மட்டுமல்ல, முயலையும் தின்னாது.//

  விளக்கம் சூப்பர்....

  பதிலளிநீக்கு
 4. //எருமைமாடு அளவிலான ஒன்பது புலிகள்//
  Very imaginative comparision! God bless those tigers!

  பதிலளிநீக்கு
 5. Nice :) but no one can think so much when 9 tigers are behind their bum! :D

  but why 9? is there any symbolic value attached this to post with any current affairs?!

  பதிலளிநீக்கு
 6. துரத்தியதால் தான் கானகம் எவ்வளவு பெரியது என்று நீ அறிந்தாய்................மாதவி இல்லை என்றால் கண்ணகி ஏது இங்கே.

  பதிலளிநீக்கு
 7. பல படி நிலைகளை தாண்டி இருக்கிறீர்கள் போல!!!

  முதல்ல என்ன சொன்னீங்க இலக்கியம் பக்கமெல்லாம் கடைசிகாலத்துல போய்க்கலாம் இப்போ மசலாவே போதும் என்றீர்கள் !!!

  இப்போ அந்தப் பக்கம் சென்று விட்டீர்களே .:-)

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு