May 22, 2012

+2


+2 ரிசல்ட் வெளியாகும் போதெல்லாம் இந்தப் பரபரப்பை நீங்களும் அனுபவித்திருக்கலாம். அலுவலகத்தில் கணினி இருக்கும் எல்லோரது மேஜையும் காலையிலேயே பரபரப்பாக இருக்கும். அலுவலக உதவியாளர்களில் ஆரம்பித்து மேலதிகாரிகள் வரையும் கூட “என் மச்சினிச்சி எழுதியிருக்கா, இந்தாங்க நம்பர், பாஸ் பண்ணிட்டிருப்பா.. ஆனா மார்க் என்னன்னு பாருங்க” என்பார்கள். நான் +2 தேர்வெழுதியபோது இணையம் அவ்வளவாக புழக்கத்தில் இல்லை. மாலைமுரசு அல்லது மாலைமலர் சிறப்பு பதிவைப் பார்த்துதான் நம்பர் வந்திருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

இன்றைய சூழலில் பார்த்தால் கிட்டத்தட்ட எல்லாருமே தேறிவிடுகிறார்கள். அப்போதெல்லாம் பத்துக்கு மூன்று பேர் அல்லது நாலு பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிடுவார்கள். மறுநாள் காலை தினத்தந்தி பார்த்தால் ”மாணவன் தற்கொலை - பெற்றோர் கதறல்!” ரீதியிலான செய்திகளை நிறைய பார்க்கமுடியும்.

பலவருடங்களுக்கு முன்பு நடந்தது என்றாலும் அந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கெல்லாம் அப்பா என்னை எழுப்புகிறார். அவர் நாலு, நாலரைக்கெல்லாம் எழுந்து கார்த்திகேயபுரம் பால் பூத்துக்கு சென்று பால் வாங்கிவருவது வழக்கம். நானோ ஏழரை, எட்டு மணிக்கு எழுந்து “அம்மா காப்பி ரெடியா?” என்று கேட்பேன்.

“சீக்கிரம் எழுந்திருடா. இன்னைக்கு உனக்கு ரிசல்ட் வருது!”

“ரிசல்ட் பதினொரு மணிக்கு தாம்பா வரும். கொஞ்ச நேரம் தூங்குறேனே?”

“ச்சீ.. இன்னைக்கு கூட இவனுக்கு தூக்கமா? புள்ளைய பெத்துக்கறதுக்கு பதிலா ஒரு தொல்லைய பெத்து வெச்சுருக்கேன்! எழுந்துர்றா.. கோயிலுக்கு போவணும்!”

வேண்டாவெறுப்பாக எழுந்தேன். குளித்து முடித்து அப்பாவின் சொல்படி பட்டை அடித்துக்கொண்டு தாத்தா - பாட்டி படம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்தேன். சாமி படங்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. அப்போதே எனக்குள் கடவுள் மறுப்பு சிந்தனை இருந்திருக்கிறது என்பதை நினைத்தால் இப்போது பெருமையாக இருக்கிறது. கல்யாண கந்தசாமி கோயிலுக்கு சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துப் போனார் அப்பா.

“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.

நான் ஒழுங்காக எழுதி இருந்தால் பாஸ் செய்யப்போகிறேன். இதற்கு போய் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்க நினைக்கிறாரே அப்பா என்று கோபம் வந்தது. வேண்டா வெறுப்பாக நவக்கிரகங்களை அப்பாவோடு சுற்றினேன். கோயிலில் என்னைப் போல நிறைய மாணவர்களும், மாணவிகளும்.. என் அப்பாவைப் போல நிறைய அப்பாக்களும் வந்திருந்தார்கள். அன்றைக்கு கல்யாண கந்தசாமிக்கும், அர்ச்சனை செய்த அய்யருக்கும் நல்ல வசூல்.

வீட்டுக்கு திரும்பும் வழியில் மூர்த்தி எதிர்பட்டார். அவர் ஒரு ஈழத்தமிழர். எங்கள் வீட்டுக்கு முன்பிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார். சிறுவயதில் எப்போதோ ஒருமுறை அவரிடம் ”பெரியவன் ஆகி பிரபாகரன் மாதிரி துப்பாக்கியெல்லாம் வெச்சுப்பேன், கெட்டவங்களை சுடுவேன்” என்று சொல்லியிருந்தேன். அதனால் அவருக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்.

“என்ன சார்? குமாருக்கு இன்னைக்கு ரிசல்ட்டா?” ஜாலியாக கேட்டார்.

“ஆமாம் மூர்த்தி. பையன் விளையாட்டுப் பையன் தான்னாலும், எப்படியாவது பாஸ் பண்ணிடுவான்!”

அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப். தமிழ், ஆங்கிலம் மொழிகள் தவிர்த்து காமர்ஸ், எகனாமிக்ஸ், மேத்ஸ், அக்கவுண்டன்ஸி சப்ஜெக்டுகள் இருந்தது. பத்தாவது வரை தமிழ்வழிக்கல்வி படித்திருந்த என்னை தேவையில்லாமல் +1 சேரும்போது ஆங்கிலவழிக்கு மாற்றியிருந்தார் அப்பா.

தமிழைப் பொறுத்தவரை எனக்கு பிரச்சினையில்லை. தமிழில் நான் தோல்வியடைந்தால் தான் அது அதிசயம். ஆங்கிலமும் பரவாயில்லை. காமர்ஸ், எகனாமிக்ஸ் இரண்டுமே கதை எழுதி சமாளித்துவிட்டேன். அக்கவுண்டன்ஸி பிட் அடித்திருந்தேன். மேத்ஸ் மட்டுமே எனக்கு பெருத்த சந்தேகத்தை விளைவித்தது, இரண்டு ஆண்டுகளாக மேத்ஸ் க்ளாஸ் அட்டெண்ட் செய்ததாக நினைவில்லை, ட்யூஷனும் வைத்துக்கொள்ளவில்லை. தேர்வெழுதும் போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த ஆனந்தராஜ் ஒழுங்காக எழுதியிருந்தான் என்றால் நான் தேறிவிடுவேன், என்னைப் பார்த்து எழுதிய சிவராமனும் தேறிவிடுவான்.

எட்டு மணிக்கு அப்பா அலுவலகத்துக்கு கிளம்பிவிட்டார். பதினொரு மணிக்காக நான் காத்திருக்க ஆரம்பித்தேன். மடிப்பாக்கம் கூட்டுரோடுக்கு பதினொரு மணிக்கு மாலைமுரசு வந்துவிடும். ஆனால் பத்தரை மணிக்கே செயிண்ட்தாமஸ் மவுண்டுக்கு பேப்பர் வந்துவிடும். சைக்கிளை எடுத்துக்கொண்டு செயிண்ட் தாமஸ் மவுண்டுக்கு சென்று பேப்பரை வாங்கிவிட தீர்மானித்தேன். உதவிக்கு பக்கத்து வீட்டு கோபாலையும் அழைத்துக் கொண்டேன்.

பத்தேகால் மணிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன். அங்கிருந்த நியூஸ் பேப்பர் ஸ்டால் முன் பெரிய கூட்டம். ரஜினிபடத்தை முதல் நாள் பார்க்க க்யூவில் நிற்பதைப் போல டென்ஷன். பத்தரை மணிக்கு மாலைமலர் வந்தது. காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது. செங்கை-எம்.ஜி.ஆர் மாவட்ட முடிவுகளை பார்க்கத் தொடங்கினேன். என் ரெஜிஸ்டர் எண்ணை நினைவில் வைத்திருந்தாலும், பதட்டத்தில் மறந்துவிடுவேனோ என்று கையிலும் எழுதி வைத்திருந்தேன். கோபாலும் ஆர்வத்தோடு எண்களை பார்த்துக்கொண்டே வந்தான்.

ம்ஹூம்... என் எண் மட்டுமல்ல, என் எண்ணுக்கு அருகிலிருந்த பல எண்கள் கண்ணுக்கு தெரியவில்லை. இருந்தால் தானே தெரிவதற்கு? வாழ்க்கையிலே முதல் தடவையாக பெரிய தோல்வி. விளையாட்டில் கூட தோற்க விரும்பாத என் மனம் உடைந்து, கண்கள் கலங்கியது. அப்பா எப்படியும் ரிசல்ட் பார்த்திருப்பார். வீட்டுக்கு வந்து மிதிப்பாரா தெரியவில்லை. அப்பா அடிப்பாரோ இல்லையோ கண்டிப்பாக அம்மாவிடம் அடி உண்டு.

சோர்வாக சைக்கிளை மிதித்தேன். என்னைவிட கோபாலுக்கு தான் சோகம் அதிகமாக இருந்தது. வரும் வழியில் ஒரு சூப்பர் ஃபிகர் அவள் அம்மாவோடு எதிரில் வந்துகொண்டிருந்தாள். “தம்பி! ரிசல்ட்டு தானே? கொஞ்சம் பேப்பர் காட்டுப்பா!” என்று அத்தை (அழகான பெண்ணுக்கு அம்மாவெல்லாம் நமக்கு அத்தைதானே?) கேட்க, தாராளமாக பேப்பரை கொடுத்தேன். ஃபிகர் ஆர்வத்தோடு அது எண் இருக்கிறதா என்று தேடிப்பார்த்தது.

“அம்மா. நான் பாஸ் ஆயிட்டேன்!” குதூகலமாக அந்த ஃபிகர் சொல்ல, எனக்கு வெறுப்பாக இருந்தது. போலியாக சிரித்தேன்.

“ரொம்ப தேங்க்ஸ் தம்பி. நீ பாஸ் ஆயிட்டியா?” அத்தை கேட்க, ஃபிகர் எதிரில் என் கவுரவத்தை காத்துக் கொள்வதற்காக “பாஸ் ஆயிட்டேங்க..” என்று பொய் சொன்னேன்.

நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். அவனுடைய எண் வேறு எனக்குத் தெரியாது. நேராக செந்தில் வீட்டுக்கு சைக்கிளை விட்டேன். நல்லவேளையாக வீட்டில் தான் இருந்தான்.

"மச்சான்.. பேப்பர் வந்துடிச்சாடா?” ஆர்வத்தோடு கேட்டான்.

“ம்ம்.. வந்துருச்சிடா.. உன் நம்பர் என்ன?”

“நானே பார்த்துக்கறேன். கொடுடா!” என்றான். அவனுடைய அம்மா எட்டிப் பார்த்தார்.

”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.

எந்த பதிலும் சொல்லாமல், செந்தில் ரிசல்ட் என்ன ஆயிற்று என்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் நிலைமையே பரவாயில்லை. செந்தில் தேடிக்கொண்டே இருந்தான். இருந்த எல்லாப் பக்கங்களையும் புரட்டி, புரட்டி தேடினான். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு முடிவுகளையெல்லாம் கூட தேடிப் பார்த்தான்.

“மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”

“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!

“செந்திலு! என்னாடா ஆச்சி?” செந்தில் அம்மா கேட்டார்.

“பார்த்துக்கிட்டே இருக்கேம்மா!”

“எத்தனை தடவை பார்த்தாலும் நம்பர் இருந்தாதானேடா தெரியும்?”

செந்திலுக்கு சொல்ல விடையேதும் இல்லை. எங்கள் வகுப்பில் இருந்த இருபத்தாறு பேர்களில் பத்தொன்பது பேர் வெற்றிவாய்ப்பை இழந்துவிட்டார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவித்தது. பரவாயில்லை மெஜாரிட்டி எங்கள் பக்கம் தான்.

ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.

33 comments:

 1. தல... என்ன இவ்வளோ கோபம் படறீங்க??/ நீங்க கோப பட்டு நான் பார்த்ததே இல்ல . :-)

  விடுங்கே... பார்த்து எழுதி தானே பெயில் ஆனோம்.. படிச்சு எழுதி இல்லையே!!! :-)

  ReplyDelete
 2. கிரேசி மோகன் நாடகம் என நினைக்கிறேன். மாது தனக்கு முன் டெஸ்கில் உட்கார்ந்த மாணவனை பார்த்து காப்பி அடிக்க, மாதுவின் பின் டெஸ்கில் இருந்த பையன் மாதுவை பார்த்து காப்பி அடிக்க, மாது மட்டும் ஃபெயில்.

  பிறகு விசாரித்ததில் மாதுவுக்கு கெமிஸ்ட்ரி பரீட்சை, மற்ற இருவருக்கு ஃபிசிக்ஸ் பரீட்சையாம், என்ன கணக்கு சரிதானே?

  //அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன்தான் இருப்பான்//
  சூப்பர்!!

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 3. இன்று முதல் இனிதே தொடக்கம் +12வில் பிகில் ஊதியோர் சங்கம்!

  தலைவர்: லக்கி

  உபதலைவர்: ஆதி

  கொ.ப.ச :குசும்பன்

  இந்த சங்கத்தை உடனடியா ஆரம்பிச்சிடலாமா பாஸ்?:))) அண்ணன் பைத்தியக்காரனிடம் ஒரு வார்த்தை கேட்டுக்குங்க!!!

  ReplyDelete
 4. :)

  //“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.//

  /”கிருஷ்ணா.. நீ பாஸ் ஆயிட்டியாடா?” அம்மா நிலைமை புரியாமல் கேள்வி கேட்டார்.//

  கதைக்கு கொஞ்சமே சம்பந்தம் இருக்குற மாதிரி ஒரு கேள்வி. கதையின் நாயகன் கிருஷ்ணாவா? குமாரா?

  ReplyDelete
 5. ஈடில்லாததும்,வீடில்லாததுமான அந்த நாய்..(நன்றி க.சீ,சி

  ReplyDelete
 6. +2-வில் நடந்ததை மறைக்காமல்,சொன்ன
  உண்மை விளம்பி கிருஷ்ணா...வாழ்க..! வாழ்க..!! (உங்க நேர்மை ரொம்ப பிடுச்சிருக்கு கிருஷ்ணா :-)
  பழசெல்லாம் ஞாபகம் வருது நண்பா !

  ReplyDelete
 7. //கதையின் நாயகன் கிருஷ்ணாவா? குமாரா?
  //

  கிருஷ்ணகுமார்!

  ReplyDelete
 8. அந்த கிருஷ்ண குமாரும் கோட்டு என்றுதான் நினைக்கிறேன் :))

  ReplyDelete
 9. கடைசி பத்தி கலக்கல்!!!
  // உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று.///

  ReplyDelete
 10. +1 -க்கு சங்கம் ஆரம்பிச்சா ஒரு கடுதாசி அனுப்பிச்சு விடுங்க. வந்து சேர்ந்து கொள்கிறேன். நாங்களும் ரௌடி தான்.

  ReplyDelete
 11. arupathukalil vaaththiyaarkal veettileye paper thiruththuvarkal.+1,+2 ellaam kidayaathu 11th-public exam.avaridam tuition padikkum 15 maanavarkal aalukku 25 paper eduththukkolluvom.boardil vidaikal irukkum.avarum padippaar.tick adiththu mark poduvom(!).naan thiruththiya paperkalil 50 kuraiththu podave matten.etho nammaala aanatu pass poduvom.appuram avan thalaiyezhuththu.ippothellam appadi seyya mudiyaathu!(lucky paper yaar kaiyil maatiyatho avar enna moodil iruntharo.)

  ReplyDelete
 12. ஐ நீங்களும் ஆயில்யம், கடக ராசியா நானுமதர்ன் சார். ஆனா ஒரு‍ சின்ன வித்தியாசமம். +2வில் கோட்டு‍ அடிச்சாலும் வாழ்வில் வெற்றி பெற்றவர். ஆனால் நானோ..... டண்டணக்காவாகத்தான் இருக்கிறேன்.

  ReplyDelete
 13. நீங்கள், இரண்டு நல்ல புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்கள், உங்களுக்கு சகமனிதர்களிடம் மரியாதை கிடையாதா ? அவன், நாய், தறுதலை ...
  கனி இருப்ப காய் கவர்வது ஏன்? நல்ல வார்த்தைகளை பயன் படுத்துங்கள்.

  விஜயன்.

  ReplyDelete
 14. //கார்த்திகேயபுரம் பால் பூத்//

  இப்டி ஒண்ணு இன்னும் இருக்கா? பாத்த நினைவில்லையே?

  ReplyDelete
 15. தமிழ் அன்பர்களே ! 09/05/2011 தேதியிட்ட தினமணி நாளிதழில் வந்த இதுவல்ல சமூகநீதி! என்ற தலையங்கத்தைப் படிக்கவும்.

  ReplyDelete
 16. தினமணியின் தலையங்கம் +2 தேர்வு முடிவுகள் வெளியான இத்தருணத்தில், இந்த விஷயத்தை அலசுவது சிந்தனைக்குரியது. அரசாங்கமே 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளை நடத்துவது நடைமுறை சாத்தியமா என்று தினமணி ஆசிரியர் யோசிக்க வேண்டும். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு டியூஷன் வசதிகள் இல்லாத காரணங்களாலும், பெற்றோர்கள் அதிகம் படிக்காத விவசாயி அல்லது தொழிலாளியாக இருப்பதாலும், பிள்ளைகளுக்கு வீட்டில் சொல்லித்தர இயலாத காரணத்தாலும், கிராமத்து மாணவர்களால் கூடுதல் மதிப்பெண்கள் பெற இயலவில்லை. நீங்கள் சொல்லிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அதிகம் கிராமத்தில்தான். அவர்களுக்கும் விகிதாச்சார அடிப்படையில் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும் தானே. மேலும் தனியார் கல்லூரிகள் என்ன மடமா? இலவச கல்வி தர ! அப்படி மடங்களும், மிஷனரிகளும், அரசு சலுகை பெறும் சிறுபாண்மையினரால் நடத்தப்படும் கல்லூரிகளும்கூட நிர்வாக ஒதுக்கிட்டின் கீழ் நன்கொடை வாங்கவே செய்கிறார்கள். அது தாங்களுக்கு தெரியாதா? தற்பொழுது அதிக கல்லூரிகள் ஆனதால் போட்டிகள் ஏற்பட்டதால், நல்ல ரிசல்ட் கிடைக்கிறது, அவர்கள் வாங்கும் நன்கொடை 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைவே! எல்லாவற்றிற்கும் மேலாக பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள குடும்பத்தில், முதல் பட்டதாரிக்கு அரசு கொடுக்கும் உதவித் தொகையையும் மறைத்துவிட்டீர்கள்! தனியார் கல்லூரியில் சேர்ந்தாலும், மாணவருக்கு கிடைக்கிறது. அரசு உதவியை அரசியலாக தாங்கள் நோக்கியதன் கோளாறு இது. அரசியல்வாதிகள் சமீபத்தில் தான் பொறியியல் கல்லூரிகள் தொடங்கினார்களா? எம்.ஜி.ஆர்., ஜெ. காலத்தில் தொடங்கி இன்றும் நடத்தி வரவில்லையா? கூடுதல் கல்லூரிகள் இருப்பதால் இன்று நல்ல மதிப்பெண் எடுத்த அனைத்து மாணவர்களுக்கும் இடம் உறுதியாக கிடைத்துவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? அதனால் தானே, அவர்களுக்கு போக மீதி இடங்களும் நிரப்பப் படாமல் இருப்பதால் தானே, தாங்கள் சொல்லியபடி கூவி கூவி கவுன்சலிங்குக்கு அழைக்கிறார்கள். நீங்கள் கூறும் கருத்து உங்களுக்கே முரண்பாடாகத் தெரியவில்லையா? நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்றால்தான், உங்களின் வாதம் எடுபடும். மொத்தத்தில் உங்கள் தலையங்கம் முரண்பாட்டின் மொத்த உருவம்.
  பெற்றோர்களின் கோணத்தில் இருந்து பார்த்து, ஆராய்ந்து எழுதினால் மட்டுமே தினமணியாரின் தலையங்கம் முழுமை அடையும். அல்லது தங்களின் நடுவுநிலைக்கு கேள்விக்குறியே ! நீங்கள் கூறிய அந்த திரைப்படப் பாடலை (எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...) பத்திரிக்கை துறையினரை நோக்கி பாட வேண்டியிருக்கும். எது ஆசிரியரின் சமூகநீதி என்பதனை ஆசிரியர் தெளிவுபடுத்தியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும்.

  அன்பன்
  இராம்கரன்

  ReplyDelete
 17. தினமணி நாளிதழில் வந்த இதுவல்ல சமூகநீதி! என்ற தலையங்கத்தைப் படிக்க :
  http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=415830&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

  ReplyDelete
 18. யுவா,

  எப்போ பார்த்தாலும் நான் +2 வில் பெயில் ஆகிவிட்டேன் என்று சமயம் கிடைக்கும் போது எல்லாம் சொல்வது நன்றாகவா உள்ளது?

  அது எந்த அளவிற்கு காயப்படுத்தி இருக்கிறது என்று நீங்கள் ஒவ்வொரு முறை சொல்வதில் இருந்தே தெரிகிறது.

  முதலில் அந்த உணர்வில் இருந்து வெளியெ வரப் பாருங்கள்.

  ReplyDelete
 19. //ஆயினும் பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான். அந்த ராஸ்கலுக்கு கிடைத்த மார்க் இருநூறுக்கு பதிமூன்று. அவனைப் பார்த்து அட்சரம் பிசகாமல் எழுதிய அப்பாவியான நான் பெற்றதோ இருநூறுக்கு முப்பத்தொன்று. என்னைப் பார்த்து எழுதிய சிவராமன் எழுபது மதிப்பெண் பெற்று வெற்றியே பெற்றுவிட்டான். என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.//

  :)

  ReplyDelete
 20. சிவராமன் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால்... ; )

  //காசுகொடுத்து வாங்கிய பேப்பர் கசங்கி இருந்தது கொஞ்சம் கடுப்படித்தது //

  ரசித்தேன்.

  ReplyDelete
 21. //என்னத்தை தான் பேப்பர் திருத்தினான்களோ தெரியவில்லை.//
  ஹா ஹா ஹா உண்மைதான் வாத்தியரே இது மாதிரி நிறைய பேருக்கு நடந்து இருக்கு

  சுமாரா எழுதுனவன் 90 மார்க் எடுகிறதும் சூப்பரா எழுதுனவன் 50 மார்க் எடுக்கிறதும்

  பெயிலு ஆனதையும் சிரிக்க சிரிக்க எழுத உங்களால மட்டுமே எழுத முடியும்

  சுஜாதா விருது குடுத்ததுல தப்பே இல்லை

  ReplyDelete
 22. மீள்பதிவு போல எங்கேயோ படித்த ஞாபகம்..

  ReplyDelete
 23. சுஜாதா விருதுக்கு பிறகு உங்களோட ப்ளாக் இன்னும் சுவாரஸ்யமா இருக்கு . தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. " +2 " ரிசல்ட் பற்றி அனுபவம்
  எழுத்தில் வடித்துள்ளது "good" .

  "+2" blog - result day எல்லாருக்கும் நினைக்க தோன்றிய நாள்

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. ப்ளாக் சுவாரஸ்யமா இருக்கு . தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. மீள்பதிவு போல எங்கேயோ படித்த ஞாபகம்..//

  repeatu

  ReplyDelete
 28. \\“கடகராசி, ஆயில்ய நட்சத்திரம். பேரு குமரன். இன்னைக்கு ரிசல்ட் வருது. பாஸ் பண்ணனும்னு சொல்லி ஒரு அர்ச்சனை பண்ணுங்கோ சாமி!” அர்ச்சனைத் தட்டில் ஒரு இருபது ரூபாய்.

  \\ அண்ணே! பதிவு என்னமோ நல்லா தான் இருக்கு. ஆனால் மேற்கண்ட வரிகள் படிக்கும் போது சிரித்து விட்டேன். அப்படின்னா நீங்க விருச்சிககாந்து இல்லையோ என்கிற குழப்பத்தை வாசகர்களிடம் மீண்டும் மீண்டும் தோற்றுவிக்கும் அபாயம் உள்ளதை உணருங்கள்:-))

  ReplyDelete
 29. //நான் ஃபெயில் ஆனது குறித்து கூட எனக்கு பதட்டமில்லை, என்னோடு ஒண்ணாம் வகுப்பில் இருந்து கூட படித்த செந்தில் பாஸ் ஆகியிருக்கக்கூடாது என்று மனதுக்குள் வேண்டிகொண்டேன். //

  HA HA HAHA... Same feeling at that time...

  ReplyDelete
 30. நான் + 2 பாஸ் ..நீங்க பெயிலு. அதுக்கு மேல படிக்கவும் இல்ல .

  நான் பாஸ் பண்ணியதற்கு காரணம் '' பிட்டு பிட்டு பிட்டு ''

  ReplyDelete
 31. சிந்திப்பவன்12:44 PM, May 23, 2012

  இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்டதை மீள பதிவு செய்யும்போது, அது மீள பதிவு என்று
  கூறவேண்டும் எனும் அடிப்படை நாகரீகம் கூட உமக்கு இல்லையே இளைய கிருட்டினரே?

  ReplyDelete
 32. Brother

  நான் பாஸ் பண்ணியதற்கு காரணம் '' பிட்டு பிட்டு பிட்டு and Ashok, Ram all my group friends

  My belated thanks to all my பிட்டு friends

  ReplyDelete
 33. /// இன்று முதல் இனிதே தொடக்கம் +12வில் பிகில் ஊதியோர் சங்கம்!///

  +2 க்கே வழிய காணோம், இதுல +12 வேறயா?

  ReplyDelete