31 மே, 2009

புதுப்பேட்டை!


செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.

பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.

சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.

இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.

புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?

“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”

”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”

ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.

ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.

”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”

“இருக்குண்ணா”

வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.

“டேங்கு காட்டுண்ணா”

“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”

வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.

தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.

“சிடி டான் டேங்க் வேணும்னே”

“இன்னா கலரு”

“பிளாக்”

ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.

பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.

“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”

“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”

வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.

“எவ்ளோண்ணா”

“கொடுக்குறதை கொடு”

“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?

“ரெண்டாயிரம் கொடு”

“புதுசே அவ்ளோ தாண்ணா”

“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”

நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.

டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.

”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”

“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவனுக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக