10 ஏப்ரல், 2009

விஜயகாந்த்!

கறுப்பு என்று ஒதுக்க நினைத்தது திரையுலகம். தி.மு.க., அ.தி.மு.க., தவிர்த்து இன்னொரு சக்தி சாத்தியமில்லை என்று அவநம்பிக்கை அளித்தது அரசியல் வட்டம். ஆகட்டும் பார்க்கலாம் என்று அடியெடுத்து வைத்தார் இரண்டிலும். இரண்டிலும் ஒன்று ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அங்கே கேப்டன். இங்கே கறுப்பு எம்.ஜி.ஆர். போட்டியிட்ட முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே எட்டு சதவிகித வாக்குகளை தேசிய முற்போக்கு திராவிட கழகம் பெற்றபோது அரசியல் உலகமே நிமிர்ந்து பார்த்தது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி 2009 நாடாளுமன்றத் தேர்தல் வரை விஜயகாந்தின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் யுவகிருஷ்ணா.


நூலின் பெயர் : விஜயகாந்த்

ஆசிரியர் : யுவகிருஷ்ணா

பக்கங்கள் : 144

விலை : ரூ. 70/-

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
எண் 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701
மின்னஞ்சல் : support@nhm.in
இணையம் : www.nhm.in
ஆன்லைனில் வாங்க : http://nhm.in/shop/978-81-8493-118-1.html

* - * - * - * - * - * - *

தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது. பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார். நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த கண்கள். சீப்புக்கு அடங்காத பரட்டைத் தலை. ஐ.எஸ்.ஓ 9001 தரச்சான்று பெற்ற அக்மார்க் தமிழ் சினிமா வில்லன் மாதிரியான தோற்றம். அந்த வட்டாரத்தில் அடாவடிக்காக அவர் ரொம்பவும் பிரபலம். எப்போதும் எவரிடமாவது எதற்காகவாவது சண்டை. வெறும் வாய்ச் சண்டையல்ல. இரும்பு உலக்கை மாதிரியான அவரது கைகள் தான் பேசும். எதிராளியின் வாய் உடனே வெத்தலைப் பாக்கு போடும்.

பேருந்து கூட்டத்தால் பிதுங்கி வழிந்தது. இருந்தாலும் வழக்கம்போல ஏடாகூடமாக அங்குமிங்குமாக ஸ்டியரிங்கை திருப்பி தெனாவட்டாகவே ஓட்டிக் கொண்டு வந்தார் அந்த டிரைவர். எடக்கு மடக்காக சாலையில் வரும் இவரது பேருந்தை பார்த்து பாதசாரிகளும், மிதிவண்டிக் காரர்களும் அலறியடித்து ஓடுவதை காண்பது டிரைவருக்கு விருப்பமான பொழுதுபோக்கு. என்னாயிற்றோ, ஏதாயிற்றோ திடீரென சடக்கென்று சடன் பிரேக் அடித்தார்.

கீச்சென்ற பெரும் சத்தத்தோடு பேருந்து அதிர்ந்து குலுங்கி நின்றது. கம்பியை பிடித்தப்படியே நின்றுக் கொண்டிருந்த கருவாட்டுக் கூடை கிழவி நிலைதடுமாறி கண்டக்டர் மேல் விழுந்தாள். கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளான சில பெண்கள் ‘ஓ'வென கீச்சுக் குரலால் அலறினார்கள். ஆண்கள் முணுமுணுவென்று அவர்களுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் சடன் பிரேக் அடித்த முரட்டு டிரைவரை திட்டினார்கள்.

என்னவென்று எட்டிப்பார்க்க பஸ்ஸில் இருந்து இறங்கினார் கண்டக்டர். கொஞ்சம் இளம் வயதினராகவே இருந்தார். பூஞ்சை உடம்பு. மீசை சரியாக வளரவில்லை. இந்த டிரைவரோடு ட்யூட்டி பார்ப்பது அவருக்கும் தான் பிடிக்கவில்லை. எப்போது பார்த்தாலும் யாரிடமாவது சண்டை. அடிதடி. இப்போது என்ன பிரச்சினையோ?

பேருந்துக்கு முன்னால் சீருடையில் நூற்றுக் கணக்கில் பள்ளி மாணவர்கள் திரண்டிருந்தார்கள். எந்த வாகனத்தையும் செல்லவிடாமல் சாலையை மறித்திருந்தார்கள். சாலை மறியல். கூட்டத்தை மீறி முரட்டுத்தனமாக வண்டி ஓட்டிய ஓரிரு லாரிகள் கல்வீச்சால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. திரண்டிருந்தவர்கள் பொதுவாக பத்திலிருந்து பதினைந்து வயதுக்கு உட்பட்டவர்கள். ஆர்வம் தாங்காமல் என்ன கலாட்டாவென்று பஸ்ஸில் இருந்த சிலரும் இறங்கிப் பார்த்தனர்.

இந்தி எதிர்ப்புப் போர்.

இந்தி ஒழிக. தமிழ் வாழ்க.

தேவக்கோட்டையில் ஒழுக்கத்துக்கு பெயர் போன பள்ளி டி.பிரிட்டோ பள்ளி. மறியல் செய்த மாணவர்கள் இப்பள்ளியைச் சேர்ந்தவர்கள். தலைமை ஆசிரியர் அருள் பிரகாசம் மிகக் கண்டிப்பானவர். அடங்காத மாணவர்களை தடியான பிரம்பால் விளாசித் தள்ளி விடுவார். அவரது பிரம்பையும் மீறி மறியலுக்கு வந்திருந்தார்கள் மாணவர்கள்.

“டேய் பசங்களா ஒழுங்கு மருவாதையா வழியை உடுங்க. இல்லேன்னா பஸ்ஸை எல்லார் மேலயும் ஏத்தி தள்ளி கொன்னுப்புட்டு போயிக்கிட்டே இருப்பேன். என்னைப் பத்தி தெரியுமில்லே. எங்கிட்டே உங்க வேலையை வெச்சுக்காதீங்க” முரட்டு பஸ் டிரைவர் சன்னல் வழியாக தலையை நீட்டி மாணவர்களை பார்த்து எச்சரிக்கைத் தொனியில் கத்தினார். ஷிப்ட் முடித்து சீக்கிரம் வீட்டுக்குப் போகும் அவசரத்தில் இருந்தார் அவர்.

ம்ஹூம். அந்த எச்சரிக்கையால் பலனில்லை. குறிப்பாக அரசு பஸ்கள் மீதுதான் மாணவர்களுக்கு கோபம் அதிகமாக இருந்தது. பஸ்ஸில் எழுதப்பட்ட எழுத்துக்கள் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இருந்தது. தமிழுக்கு கொஞ்சம் கூட இடமில்லை.

“தமிழ்நாட்டில் தமிழனுக்காக ஓடுற பஸ்ஸுலே தமிழுக்கு இடமில்லை. உங்க பஸ்ஸை ஊருக்குள்ளே அனுமதிக்க முடியாது” மாணவர்களில் யாரோ ஒருவன் சத்தமாக டிரைவரைப் பார்த்து சொன்னான். மாணவர்களின் கண்களில் தமிழுணர்வு தகித்தது. போர்.. போர்.. இந்தி எதிர்ப்புப் போர்.

“ம்ம்.. இதுக்கு முன்னாடி எவ்ளோ பிரச்சினைங்க பார்த்திருப்பேன். இந்த தம்மாத்தூண்டு பசங்க வேலைக்கு ஆவ மாட்டானுங்க. பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணி கூட்டத்துக்குள்ளே விட்டோமுன்னா அவனவன் சிதறி ஓடிடுவான்” டிரைவர் பயணிகளிடம் முணுமுணுத்தார். வண்டியை ஸ்டார்ட் செய்தார். விர்ரூம்.. விர்ரூம்.. ஆக்ஸிலேட்டரை அழுத்தி மிதித்தார்.

‘அய்யய்யோ இந்த பைத்தியக்காரன் ரெண்டு மூணு பசங்களை போட்டுத் தள்ளிடுவான் போலிருக்கே?' கண்டக்டர் உள்ளுக்குள் அச்சப்பட்டார். நிலவரம் மோசமாகிக் கொண்டிருப்பதை கண்ட பயணிகளுக்கும் உள்ளுக்குள் நடுக்கம். மதுரையில் பல பேருந்துகள் கொளுத்தப்பட்டதாகவும், கல்வீசி தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.

கியரை போட்டு வண்டியை சில அடிதூரம் விருட்டென்று ஓட்டி மாணவர்களை டிரைவர் அச்சமடைய வைத்த சமயம்... யாரும் எதிர்பாரா வகையில்..

டிரைவருக்கு முன்பாக இருந்த பேருந்து கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது. நொறுக்கப்பட்டது. கண்ணாடியை உடைத்துக்கொண்டு வந்த நீளமான இருகால்கள் டிரைவரின் மார்பில் எட்டி உதைத்தது. பல அடிதூரம் பறந்துப் போய் விழுந்த டிரைவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. மூளைக்குள் பல வண்ணங்களில் பூச்சி பறந்தது. தலை மீது இடிவந்து விழுந்ததோ என்று அஞ்சினார். ஒருபக்க காது செவிடாகிப் போனது. ங்கொய்யென்று ரீங்காரம். நிமிர்ந்துப் பார்த்தார். பார்வையே மங்கலாகி விட்டது. ஆயிரம் வயலின்கள் அகோரமாக இசை எழுப்ப.. டிரம்ஸ் ஒலி திடும்.. திடும்..மென திடுதிடுக்க.. நெருப்பும், ஒளியும் மாறி மாறி பளீரிட, டிரைவரின் கண்கள் கூசியது.

திரை முழுக்க நெருப்பு. நெருப்பு மறைந்து கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறம் கொடியாய் பளிச்சிட.. கொடிக்கு நடுவே கருப்புநிலா இளம்வயது கேப்டன் என்ட்ரி. கோபத்தில் கண்கள் எரிமலையாய் நெருப்பை கக்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் வந்து விழுந்த முடியை அனாயசமாக தலையை வெட்டியே ஒதுக்கினார். இரு புருவமும் வில்லாக தெரித்தது. இடி போன்ற அடியை வாங்கிய டிரைவர் பயந்துபோய் கையெடுத்து கேப்டனை கும்பிட..

“தமிழுக்காக தண்டவாளத்துலே தலையை வைக்கவும் தெரியும். தேவைப்பட்டா தமிழ் எதிரிகளோட தலையை எடுக்கவும் தெரியும்” - சவுண்டாக பஞ்ச் டயலாக் பேசிவிட்டு கேப்டன் திரும்ப, இம்முறை வெற்றியிசை பின்னணியில் இசைக்க.. நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஓடிவந்து கேப்டனை தங்கள் தோள்மீது தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். யாரோ ஒருவர் பெரிய ஆளுயர ரோஜாமாலையை கேப்டனின் கழுத்தில் போடுகிறார். டாப் ஆங்கிளில் லாங் ஷாட். நடுவில் கேப்டன், சுற்றி மாணவர்கள்.

“வெற்றி மேல வெற்றி தான் உங்கள் கையிலே” ரோட்டில் சென்று கொண்டிருந்த வழிப்போக்கர் யாரோ பெருங்குரலெடுத்து பாட, ஓபனிங் சாங்.

ம்... நியாயமாகப் பார்க்கப் போனால் கேப்டனைப் பற்றிய புத்தகம் இப்படித்தான் தொடங்கப் படவேண்டும். இது சினிமாப் படமல்ல, புத்தகம் என்பதாலும்.. இப்புத்தகத்தை எழுதுவது இயக்குனர் பேரரசு அல்ல என்பதாலும் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.


தும்பை நிறத்தில் வெள்ளை ஜிப்பா, கதர்வேட்டி, மாயவரம் பெல்ட் - இதுதான் அந்நாளைய விஜயராஜின் காஸ்ட்யூம். முறுக்கேறிய வாலிப வயசு. வீரமும், காதலும் தமிழரின் இருகண்கள் அல்லவா? வீரத்தை பலமுறை நிரூபித்திருந்த விஜயராஜும் கூட ஓரிருமுறை வெட்கத்தோடு காதல் வயப்பட்டார்.

உழைப்புக் களைப்புக்கு சிரமபரிகாரமாக மில்லுக்கு அருகிலிருக்கும் டீக்கடையில் அவ்வப்போது டீயும், தம்மும் போடுவது நம்மாளுக்கு வழக்கமாக இருந்தது. ஸ்டைலான நம் கருப்புச்சூரியனை கண்ட எதிர்வீட்டு ஜன்னல் ஒன்று பரவசப்பட்டுப் போனது. சூரியனைக் கண்டதும் தாமரை மலராமல் போனால் தானே ஆச்சரியம்?

நம் கருப்புச் சூரியனோ அப்போதெல்லாம் ஆஞ்சநேயர் மாதிரியிருந்தார். பெண்கள் விஷயத்தில் தாலிபான் லெவல் ஒழுக்கம். எந்தப் பெண்ணையும் காதல் நோக்கத்தில் கண்டதே இல்லை. தங்கைகளின் தோழிகளும் கூட இவரை ‘எங்கள் அண்ணா' என்றே அழைத்துக் கொண்டிருந்தார்கள். காதலிப்பதற்கான சந்தர்ப்பம் அதுவரை அமைந்ததில்லை. காதலிக்கும் எண்ணமும் இவருக்கு இல்லை.

எதிர்வீட்டு ஜன்னலை ஆரம்பத்தில் கண்டும் காணாமலும் போய்க்கொண்டிருந்தார் விஜயராஜ். விழி அம்புகள் தொடர்ந்து இதயத்தை தைத்துக்கொண்டேயிருக்க ஒரு கட்டத்தில் நம் விசுவாமித்ரனும் வேறு வழியின்றி அந்த மேனகையிடம் நிலைதடுமாறிப் போனார். தனது ‘ஆண்'மீக தவக்கோலத்தை களைந்தார். கால்கள் தரையில் வட்டமாக கோலமிட வெட்கத்தோடு இவரும் எதிர்வீட்டு ஜன்னலை அவ்வப்போது பார்க்க ஆரம்பித்தார்.

எதிர்வீட்டு ஜன்னலைப் பார்ப்பதற்கென்றே வேலைகளை ஒத்திவைத்து அடிக்கடி டீக்கடைக்கு வந்தார். சில நேரங்களில் ஸ்டைலாக பைக் மீது சாய்ந்துக் கொண்டு சிகரெட் பிடிப்பார். பார்வைகளின் பரிமாற்றங்கள் வழியாகவே காதல் தொடர்ந்தது. நேரில் கண்டு பேச இருவருக்கும் பயம். ஆனால் பேச செம விருப்பம்.

அக்காலத்து இளைஞர்கள் கட்டம் போட்ட பேண்டும், பூப்போட்ட கலர் சட்டையுமாக அலைய நம்மாளோ நம்பியார் மாதிரி வில்லன் பாணியில் உடையணிந்திருந்தார். இந்த உடையலங்காரம் எதிர்வீட்டு ஜன்னலுக்கு பிடிக்கவில்லையாம். ஒருநாள் காகித ராக்கெட் சர்ரென்று வந்து இவரது ஜிப்பா பாக்கெட்டில் குத்தியது.

எடுத்துப் படித்துப் பார்த்தார்.

‘இந்த ட்ரெஸ் ரொம்ப கேவலமா இருக்கு. ஒழுங்கு மருவாதையா பேண்டும், சர்ட்டும் போடுங்க, நல்லாருக்கும். இப்படிக்கு எதிர்வீட்டு ஜன்னல்' - கடிதத்தைக் கண்டவருக்கு ஒருநொடி கோபம் வந்தது. எதிர்வீட்டு ஜன்னலைப் பார்த்து நாக்கைத் துருத்தி கண்களை உருட்டினார். புருவங்களை மேலும் கீழும் வில் போல நெரித்தார். ஜன்னல் சட்டென்று பயந்துவிட்டது. அப்போதைக்கு பறந்தும் விட்டது.

ஆனால் மறுநாள் கட்டம்போட்ட சட்டை, பெல்ஸ் பேண்டில் வந்த விஜயராஜை பார்த்து மில்லில் எல்லோருமே ஆச்சரியப்பட்டார்கள். நண்பர்களும் “தலைவா. இந்த ட்ரெஸ் உங்களுக்கு சூப்பரா இருக்கு. இப்படியே கண்டினியூ பண்ணுங்க” என்றார்கள். எதிர்வீட்டு ஜன்னலுக்கு மெத்த மகிழ்ச்சி. அண்ணலும் நோக்க, அவளும் நோக்க.. மாற்றி மாற்றி நோக்கிக் கொண்டேயிருக்க, இதற்குமேல் வளராமல் இவர்களது காதல் ‘கண்ணும் கண்ணும் நோக்கியா' லெவலில் மட்டுமே இருந்தது.

திடீரென்று ஒருநாள் எதிர்வீட்டு ஜன்னல் திறக்கப்படவேயில்லை. விஜயராஜ் மனசு நொந்துப் போனார். மறுநாளும், அதற்கடுத்த நாளும் கூட ஜன்னல் மூடியே இருந்தது. விசாரித்துப் பார்த்ததில் உறவினர் வீட்டுக்கு லீவுக்கு வந்த பறவையாம் அது. லீவு முடிந்ததும் சொந்த ஊருக்கு பறந்து விட்டிருக்கிறது.

எ.வீ.ஜன்னல் பற்றி வேறு எந்த உருப்படியானத் தகவலும் தெரியாததால் விஜயராஜின் தீவிரக்காதல் இவ்வாறாக சோகமாக முற்றுப் பெற்றது. இதே பாணியில் விஜயராஜ் வேறு இரு பெண்களையும் கூட காதலித்திருக்கிறார்.

ஆனால் இதெல்லாம் காதல்தானா என்பது சந்தேகத்துக்குரியதாக இருப்பதாலும், அவற்றில் இரண்டு விஜயராஜின் ஒரு தலை காதல் என்பதாலும் அவை பற்றிய வேறு குறிப்பிடத்தக்க தகவல்கள் எதுவும் வரலாற்றில் இடம்பெறவில்லை.

2 கருத்துகள்:

  1. நானும் விருதகிரி படத்தோட விமர்சனம்னு நினைத்துக் கொண்டு தான் வந்தேன்.

    கடைசியில் இதுவும் ஒரு மீள்பதிவு தானா ?

    பதிலளிநீக்கு
  2. பாராட்டுறீங்களா... ஓட்றீங்களா....

    ஒன்னும் புரிய மாட்டேங்குது தல...

    பதிலளிநீக்கு