27 ஏப்ரல், 2009

கோஷங்கள்!


”பனைமரத்துலே வவ்வாலா? பாமகவுக்கே சவாலா?” மாதிரியான கோஷங்கள் ஆண்டு முழுவதும் ஒலிக்கக் கூடியவை. நாம் பேசவரும் கோஷம் தேர்தல் கோஷம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட அந்த தேர்தலுக்காக ஏற்படுத்தும் கோஷம். 67 தேர்தலில் தமிழகத்தில் அரிசிப்பற்றாக்குறை இருந்த நேரத்தில் ’ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என்ற கோஷம் திமுகவுக்கு கைகொடுத்ததாக சொல்வார்கள்.

1989 தேர்தல் தான் எனக்கு நன்கு விவரம் தெரிந்து நடந்த முதல் தேர்தல். அதிமுக இரண்டாக பிளவுற்ற நிலையில் காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கட்டில் ஏறும் நப்பாசையில் “காமராஜர் ஆட்சி” என்ற கோஷத்தை முன்வைத்தது. ராஜீவ் மிக அதிகமுறை தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்தார், காமராஜர் ஆட்சியை வலியுறுத்தினார். இன்றளவும் அந்த கோஷத்தை தவிர வேறு கோஷத்தை அறிமுகப்படுத்த தமிழக காங்கிரஸ் தயாரில்லை.

இரண்டாக பிளவுற்ற நிலையில் “யார் உண்மையான அதிமுக?” என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் இருந்த இருபிரிவு அதிமுகவும் தங்கள் சின்னங்களை பரவலாக்கிட பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். கோஷம் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் அதற்கு முந்தைய தேர்தல்களில் அதிமுக “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற கோஷத்தை முன்வைத்ததாக தெரிகிறது. இறைவன் என்று அந்த கோஷத்தில் வரும் வாசகம் எம்.ஜி.ஆரை குறிப்பதாகவும் சொல்லப்பட்டது. அதாவது ’அல்லாஹூ அக்பர்’ என்பது மாதிரி. அக்பர் தான் அல்லா என்றொரு பொருளும் இந்த கோஷத்துக்கு உண்டாம். அக்பர் காலத்து கோஷமிது.

“நாடு நலம்பெற, நல்லாட்சி மலர” என்று கோஷத்தை முன்வைத்து திமுக களமிறங்கியது. இதே வாசகம், உதயசூரியன் சின்னம், சிகப்புத்துண்டு போட்ட கலைஞரின் படம் (கருப்பில் இருந்து அப்போதுதான் மாறியிருந்தார்) கொண்ட ஸ்டிக்கர்கள் லட்சக்கணக்கில் அச்சிடப்பட்டு சென்னை மாநகரமெங்கும் ஒவ்வொரு வீட்டின் கதவுகளிலும் ஒட்டப்பட்டது. சொல்லிக்கொள்ளும்படியான வெற்றி இந்த கோஷம் போட்ட திமுக கூட்டணிக்கு கிடைத்தது.

1991ல் திமுக குறிப்பிடும்படியாக எந்த கோஷத்தையும் முன்வைக்கவில்லை. “எங்கள் ஆட்சியை அநியாயமாக கலைத்துவிட்டார்கள். நீதி தாருங்கள்!” என்றே திமுகவினர் பிரச்சாரங்களில் பேசினார்கள். ‘ஆட்சிக்கலைப்பு’ திமுவின் USP (Unique Selling Proposition) ஆக இருந்தது. USP என்பதை எப்படி தமிழில் விளக்குவதென்று தெரியவில்லை. பொதுவாக எல்லாப்பிரிவையும் ஈர்க்கும் ஒரு அம்சம் என்றளவுக்கு புரிந்துகொண்டால் போதும்.

பிரச்சாரத்துக்கு வந்த ராஜீவ் கொல்லப்பட்டு விட்டதால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி “ராஜீவைக் கொன்றவர்களுக்கா உங்கள் ஓட்டு?” என்ற வாசகத்தை தேர்தல் கோஷமாக பயன்படுத்தியது. ராஜீவ் படுகொலை நடந்த போட்டோ (ஜெயந்திநடராஜன், மூப்பனார் ஆகியோர் சிதறிக்கிடந்த ராஜீவை தேடுவது போல) ஒன்று போஸ்டர்களிலும், பத்திரிகை விளம்பரங்களிலும் பயன்படுத்தப்பட்டது. திமுக கூட்டணி படுதோல்வி. பாஜக என்ற கட்சி தமிழர்களுக்கு ஓரளவுக்கு அறிமுகமான தேர்தலாக இதை சொல்லலாம். அப்போதெல்லாம் அக்கட்சியினர் “அகண்ட பாரதம்” என்று சொல்லி வாக்கு கேட்பார்கள்.

96 தேர்தலில் சொல்லிக் கொள்ளும்படியான கோஷம் எதுவும் திமுக வசமில்லை. ‘ஜெ. எதிர்ப்பு’ என்ற USP திமுக கூட்டணிக்கு போதுமானதாக இருந்தது. சேப்பாக்கம் தொகுதியில் ஒரு சுவற்றில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஆசிபெற்ற வேட்பாளர் கலைஞர்” என்று எழுதியிருந்த அவலத்தை கண்டு நாம் நொந்துப்போனோம். பொதுவான ஒரு கோஷம் இல்லாவிட்டாலும் திமுக - தமாகா கூட்டணியின் விளம்பர யுக்தி பட்டையைக் கிளப்பியது. “சுடுகாட்டுக் கூரையிலும் சுரண்டிய பேய்களை விரட்டியடிப்போம்”. திமுக கூட்டணி 72 தேர்தலுக்குப் பிறகான மகத்தான வெற்றி கண்டது.

புதியதாக உருவான மதிமுக மட்டுமே “அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை” என்ற தரமான ஒரு கோஷத்தை முன்வைத்தது. இதுவரை நான் கேட்ட கோஷங்களிலேயே என்னை மிகவும் கவர்ந்த கோஷமிது. துரதிருஷ்டவசமாக மக்களை கவரத் தவறி விட்டது. வைகோ மொழியிலேயே சொன்னால் ‘காட்டு மரங்களை அடித்துச் சென்ற காட்டாற்று வெள்ளம் ஒரு சில சந்தன மரங்களையும் அடித்துச் சென்றுவிட்டது’.

98ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக மூன்றாவது அணியிலேயே நீடித்துக் கொண்டிருந்தது. பாஜகவை தமிழகத்துக்கு வெளிப்படையாக அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. “நிலையான ஆட்சி, வலிமையான பிரதமர்” என்ற நாடுதழுவிய பாஜகவின் பிரச்சாரம் தமிழகத்திலும் வெகுவாக எடுபட்டது. பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட விஷயங்களில் கடுப்பாக இருந்த மக்கள் திமுகவோடு சேர்த்து மூன்றாவது அணியையும் செம மிதி மிதித்தார்கள்.

அடுத்த ஆண்டே சு.சாமி, சோனியா ஏற்பாட்டின் பேரில் தேநீர் விருந்து நடந்தது. ஜெ.வின் கோபத்துக்கு ஆளான பாஜக ஆட்சி கவிழ்ந்தது. இம்முறை கூட்டணி தலைகீழ். இடையில் கார்கில் யுத்தமும் நடந்தது. “கார்கில் வீரருக்கே உங்கள் ஓட்டு!” என்று கலைஞர் சென்னை மெரீனாவில் கோஷமிட, நாடு முழுவதும் இதே கோஷம் பாஜகவால் பரவலாக்கப்பட்டது. கார்கில் வெற்றி தேர்தல் USP ஆக்கப்பட்டு, மக்களை வெகுவாக கவர்ந்தது.

2001ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல். அதிமுக வலுவான கூட்டணியை அமைத்திருந்தது. திமுகவோ பாஜக உள்ளிட்ட சில சப்பை சாதிக்கட்சிகளை கொண்டு தேர்தலை சந்தித்தது. “தொடரட்டும் இந்த பொற்காலம்!” என்ற கோஷத்தை திமுக முன்வைத்தது (இந்த விளம்பர கேம்பைனில் நானும் பணிபுரிந்தேன்). அதிமுக கூட்டணி வலிமை திமுகவை மண்கவ்வ வைத்தது.

2004ல் பாராளுமன்றத் தேர்தல். தேர்தலுக்கு சிலமாதங்களுக்கு முன்பாகவே இந்தியாவெங்கும் “இந்தியா ஒளிர்கிறது” என்ற கோஷத்தோடு அரசு விளம்பரங்கள் பெருவாரியாக வெளியிடப்பட்டது. அரசுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத்தொடர்ந்து பாஜக அதே கோஷத்தை தனது கட்சிக்காக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது. சொல்லிக் கொள்ளும்படியான கோஷம் எதுவும் காங்கிரஸ் வசமில்லை. தமிழகத்தில் 2001ல் ஜெ. வைத்திருந்த கூட்டணியை இம்முறை கலைஞர் வைத்திருந்தார். பெரியதாக கோஷமோ, அலையோ இல்லாத இத்தேர்தலில் 40க்கு 40ம் திமுக கூட்டணி வென்றது.

இதோ 2009 தேர்தல் வந்துவிட்டது. இத்தேர்தலிலும் சொல்லிக்கொள்ளும்படியான கோஷம் எதுவும் பிரபலமாகவில்லை. நாடு தழுவிய அளவில் ஏ.ஆர்.ரஹ்மானின் “ஜெய் ஹோ” கோஷத்தை காங்கிரஸ் காசு கொடுத்து வாங்கி முழங்குவதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் ‘ஜெய் ஹோ’ சொன்னால் செருப்பால் அடிப்பார்கள். இங்கே கோஷம் தமிழில் தான் இருக்க வேண்டும். ‘தமிழ் ஈழம்’ என்ற சொல்லை அதிமுக கூட்டணி USP ஆகப் பயன்படுத்துகிறது. தேசிய அளவில் பாஜக இன்னமும் அரதப்பழசான ‘வலிமையான பிரதமர்’ கோஷத்தையே முன்வைப்பதாக தெரிகிறது.

மேலோட்டமாக பார்த்தால் கலைஞரும் தமிழ் ஈழத்தை வைத்து கேம் ஆடிக்கொண்டிருப்பதாக மீடியாவில் தெரிகிறது. பின்னணியில் திமுகவினர் சத்தமில்லாமல் இலவச டிவி, ஒரு ரூபாய் அரிசி, உள்ளாட்சிப் பணிகள் போன்றவற்றை சொல்லி அடித்தட்டு மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்கள். அதிமுக கூட்டணியோ ஈழத்தையே நம்பியிருக்கிறது. ஈழத்தில் நிஜமாகவே போர்நிறுத்தம் வந்துவிடுமோ என்றுகூட இக்கூட்டணியினர் அஞ்சுவதாக தெரிகிறது. மே 16ல் தான் எந்தக் கூட்டணியின் யுக்தி மக்களைக் கவர்ந்தது என்பதை உணரமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக