24 மார்ச், 2009

ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள்!


துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டின் திரைப்பட சகாப்தம் 2008 வரை 22 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து நிற்கிறது.

வசூல் ரீதியாக பார்க்கப் போனால் இதுவரை வந்த 22 படங்கள் மூலமாக நான்கு பில்லியன்களுக்கு மேல் டாலர்களாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்பட வரிசை மட்டுமே இதைவிட அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயான் ப்ளெமிங் எழுத ஆரம்பித்து ஜேம்ஸ்பாண்டு பிரபலமான பின்னர் 1954ல் தொலைக்காட்சி வடிவமாக கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு படமான காசினோ ராயல் வெளியாகியது. அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்டை திரைக்கு கொண்டுவர பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மெனக்கெட்டு பல தடைகளால் தள்ளிப்போடப்பட்டது. 1962ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் ஜேம்ஸ்பாண்டு திரைப்படமான டாக்டர் நோ வெளியாகி வசூலை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் கோடைவிடுமுறை நேரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் ஆறு பேர் நடித்திருக்கிறார்கள். சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் அவர்கள்.

ஒலிப்பதிவு மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான அகாடமி விருதுகளை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் பெற்றதுண்டு.

ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கென பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஜேம்ஸ் பாண்டு கலக்கல் ம்யூசிக்கில் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும். ஒரு சில படங்களில் மட்டும் இந்த பாரம்பரியம் மிஸ்ஸிங்.

கதாநாயகியை முத்தமிடுவது அல்லது காதல்செய்வது எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கடைசி ரீலில் இடம்பெறும். ஆன் ஹெர் மெஜஸ்டி சர்வீஸ் மற்றும் காசினோ ராயல் படங்களின் இறுதியில் மட்டும் இந்த சம்பிரதாயம் இருக்காது. காரணம் இரண்டு படங்களிலும் ஜேம்ஸின் காதலி கடைசி காட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்.

ஜேம்ஸின் பாஸான மிஸ் எம்மின் செக்ரட்டரி மனிபென்னி ஜேம்ஸ்பாண்டை ஒரு தலையாக காதலிப்பது எல்லா படங்களிலும் வரும் காட்சி. ஜேம்ஸ் ஏனோ அவரது காதலை நிராகரித்தே வருவார். முதல் படமான டாக்டர் நோ மற்றும் கடைசியாக வெளிவந்த காசினோ ராயல் இருபடங்களிலும் மனிபென்னி கதாபாத்திரம் இல்லவே இல்லை. மற்ற அனைத்துப் படங்களிலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ஜேம்ஸை காதலிக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஜேம்ஸ் பாண்டுக்கு க்யூ பிராஞ்ச் வினோத அழிவு ஆயுதங்கள் உருவாக்கித் தருவது வாடிக்கை. அவற்றை வைத்து தான் தலைவர் க்ளைமேக்ஸில் எதிரிகளை ஒற்றை ஆளாய் அழித்தொழிப்பார்.

இன்று தமிழ்படங்களில் உச்சரிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் ஜேம்ஸ் படங்கள் தான் முன்னோடி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பஞ்ச் டயலாக் இருக்கும். தலைவரின் அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்திவிட்டு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார். ஜேம்ஸ்பாண்டு திரைப்பட வரிசையில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் இந்த சம்பிரதாயத்துக்கு விதிவிலக்கு.

ஜேம்ஸ்பாண்டு பார்களுக்கு சென்றால் வோட்கா மார்டினி விரும்பி குடிப்பார். பார் டெண்டரிடம் "Shaken, not stirred" என்றும் சொல்வார். கோல்டன் ஐ திரைப்படத்தில் இது கொஞ்சமாக மாற்றப்பட்டு "Shaken, but not stirred" ஆனது. காசினோ ராயல் திரைப்படத்தில் பார்டெண்டர் ஜேம்ஸ்பாண்டை பார்த்து "Shaken or stirred?" என்று கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றாலே பெண்கள் வெகுபிரசித்தம். இவர் காப்பாற்றும் பெண்கள் இவரை காதலிப்பார்கள் அல்லது சக பெண் ஏஜெண்டுகள் இவரை காதலிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் வில்லனின் ஆசைநாயகிகளுக்கு ஜேம்ஸ் மீது காதல் வந்துவிடும். பெண்களே இல்லாமல் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுப்பது நடக்காத காரியம்.

ஜேம்ஸ் பாண்டு படங்களில் அவருக்கு வழங்கப்படும் கார்கள் வெகுபிரசித்தம். நவீனவசதிகளோடு கூடிய அதிவேக கார்களை ஜேம்ஸ் பயன்படுத்துவார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கார்கள் பல மில்லியன் டாலர்களுக்கு ஏலத்துக்கு விடப்படும்.

எல்லா ஜேம்ஸ் படங்களிலும் அந்த படப் பெயர் ஒரு வசனத்திலாவது இடம் பெறும். உதாரணமாக சில....
Mr.Bond, You Only live Twice
You lived to Die Another Die.

மூவி டைட்டிலில் ஒரு பிரபலமான பாப் பாடகரின் பாடல் இடம் பெறும். அந்த பாடல் வரியிலும் பட பெயர் இடம் பெற்றிருக்கும். மடோனாவின் பாடல் Die Another Die படத்தை சிறப்பித்தது.

ஒரு சூதாட்ட காட்சியாவது 007 படங்களில் கண்டிப்பாக இடம் பெறும். அது என்ன ராசியோ தெரியவில்லை. பனி சறுக்கு காட்சிகளும் நிறைய படங்களில் வருவதுண்டு.

ஜேம்ஸாக நடிக்கும் நடிகர்களை எடுத்து கொண்டால், ஒருவரை விட்டு ஒருவர் தான் நிலையாக இருகின்றனர். கானரிக்கு பிறகு வந்த லெஸன்பி ஒரு படத்திலும், மூருக்கு பிறகு வந்த டிமோத்தி டால்டன் இரு படங்கள் மட்டுமே நடித்தனர். டானியல் கெரெக் தொடர்ந்து நிலைப்பாரா என்று பொறுத்து பார்ப்போம்

ஜேம்ஸின் உதவியாளராக, Money Penny என்று ஒரு பெண்மணி தோன்றுவார். பாண்டு தன் அலுவலகத்தில் நுழைந்த்தும், தன் தோப்பியை கழற்றி Stand-டை நோக்கி வீசுவது வாடிக்கை.


இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் :


டாக்டர் நோ (1962)ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)கோல்டுஃபிங்கர் (1964)தண்டர்பால் (1965)யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)லைவ் அண்ட் லெட் டை (1973)தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)மூன்ரேக்கர் (1979)ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)ஆக்டோபுஸ்ஸி (1983)எ வ்யூ டூ கில் (1985)தி லிவிங் டேலைட்ஸ் (1987)லைசென்ஸ் டூ கில் (1989)கோல்டன் ஐ (1995)டுமாரோ நெவர் டைஸ் (1997)தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)டை அனதர் டே (2002)கேசினோ ராயல் (2006)குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)
Font sizeஅடுத்து வர இருப்பது

பாண்ட் 23 (2011)

1 கருத்து: