9 டிசம்பர், 2008

ஒபாமா பராக்!


'மாற்றம்' என்ற சொல் இன்று அமெரிக்கர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. அதிபரை தந்திருக்கிறது. மாற்றத்தின் இன்னொரு பெயர் ‘பராக் ஹூசேன் ஒபாமா'. நாம் ஒத்துக் கொள்கிறோமோ இல்லையோ.. அமெரிக்காவின் அதிபர் தான் உலகத்துக்கே ஆக்டிங் அதிபர் என்பது இன்றைய யதார்த்தம். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உலகத்தை ஆளப்போகும் அதிபர் பற்றி தமிழில் நிறைய தரவுகளோடு வந்திருக்கும் நூல் ‘ஒபாமா பராக்!'

ஒபாமா

பராக் ஒபாமா

பராக் ஹூசேன் ஒபாமா

அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் வென்ற கணத்தில் ஒரு கருப்பரினப் பெண் பெற்ற பரவசத்தோடும், ஆனந்தக் கண்ணீரோடும் தொடங்குகிறது நூல். தொடங்கியப் புள்ளியிலிருந்து இறுதிவரைக்கும் விறுவிறுப்பு, பரபரப்பு இதைத்தவிர வேறொன்றுமில்லை. ஒபாமா குறித்த நூலென்றாலும் ஒபாமாவின் கென்யா தாத்தாவை கூட விட்டுவைக்காமல் விரிவாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். கென்யாவின் அந்த பாரம்பரிய பழங்குடி இனம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வாசகர்களுக்கு தீபாவளி போனஸ்.

நூலின் கதையை இவ்விமர்சனத்தில் வைக்க விரும்பவில்லை. இனி நூல் வாசிக்கப்போகும் வாசகர்களுக்கு அது Spoiler ஆக அமைந்துவிடும். இந்நூல் என்னிடம் கையளிக்கப்படும்போது நூலின் பதிப்பாசிரியர் ஒரு சுவாரஸ்யமான சவால் விட்டார். இந்நூலில் இடம்பெற்றிருப்பதை தவிர்த்து ஒபாமா குறித்து இன்றைய தேதியில் புது தகவல்களை வேறும் யாரும் தந்துவிட முடியாது என்று. சவாலை அப்போது ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் என்னுடைய தோல்வியை நூல் வாசித்து முடித்ததுமே மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்.

ஒரு அமெரிக்கரால் கூட தங்கள் அதிபரைப் பற்றி இவ்வளவு சுருக்கமாக, தெளிவான தரவுகளோடு இன்றைய தேதியில் எழுதிவிட இயலாது. இந்நூல் உருவாக்கத்துக்காக முத்துக்குமார் உழைத்த உழைப்பு பின்னிணைப்பில் அவர் வாசித்த புத்தகங்களின் பட்டியலை கண்டாலே புரிகிறது. ஆங்கிலம் மட்டுமே வாசிக்கும் இந்தியர்களுக்காக உடனடியாக இந்நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட வேண்டியது அவசியம்.

நிறைகள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கும் இந்நூலில் சிறு சிறு குறைகளும் உண்டு. ஒரு மசாலாப்பட வேகத்தோடும், விறுவிறுப்போடும் ஓடும் ஒபாமாவின் கதைக்கு இடையிடையே அமெரிக்க கருப்பரின போராட்டங்கள் குறித்த பிளாஷ்பேக் இடையிடையே தோன்றுவது வாசிப்பின் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர். ஆயினும் பரிபூரணமான தகவல்களை வாசகனுக்கு தந்தே ஆகவேண்டும் என்ற அறம் நூலாசிரியருக்கு இருப்பதால் இதை மனப்பூர்வமாக மன்னித்து விடலாம்.

அமெரிக்கா குறித்த டாலர் தேசம் உள்ளிட்ட சில நூல்களை வாசிக்காதவர்களுக்கு இந்நூலில் அடிக்கடி இடம்பெறும் ஏழ்மை போன்ற சொற்கள் ஆச்சரியம் அளிக்கலாம். அமெரிக்காவிலும் ஏழைகள் உண்டு. இந்தியாவில் என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதெல்லாம் அமெரிக்காவிலும் கட்டாயம் உண்டு. சதவிகித வாரியாக வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அமெரிக்க தேர்தல் முறை குறித்து விலாவரியாக ஆனால் எளிமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் கமிஷனருக்கு இந்நூலை சிபாரிசு செய்கிறேன். அதே நேரத்தில் அங்கேயும் தேர்தல் முறையில் எப்போதாவது கோமாளித்தனம் நடக்குமென்பதையும் நூலாசிரியர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார். அதிக வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்ற அல்கோர் 2000ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றதை இதற்கு உதாரணமாக நூல் காட்டுகிறது.

இரா. முத்துக்குமாரின் மொழிநடை குறித்து அவசியம் பாராட்டியே தீரவேண்டும். இவ்வளவு எளிமையாக வாக்கியங்களை அமைக்கும் வித்தையை எங்குதான் கற்றாரோ? வாசிப்புக்கு இடையூறு செய்யாத சுருக்கமான, அழகான, நல்ல தமிழோடு கூடிய நடை. எழுத விரும்பும் அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு இந்நூல் வாக்கியங்களை அமைக்க நல்ல பயிற்சியை அளிக்கும். வரலாறு மற்றும் சுயசரிதை நூல்கள் இதே நடையில் தொடர்ந்து வருமேயானால் இவ்வகை நூல்களுக்கான வாசகர்களை எண்ணிக்கையை கட்டாயம் அதிகரிக்கச் செய்யும். நியூ ஹொரிசன் மீடியா நிறுவனத்தின் வெளியீடுகளான மினிமேக்ஸ் புத்தகங்களுக்கு பொறுப்பாசிரியராக பதவி வகிக்கும் முத்துக்குமாருக்கு மிக உயரமான எதிர்காலம் பதிப்பகத்துறையிலும், எழுத்துத்துறையிலும் நிச்சயம் இருக்கிறது.

கருப்பு, வெள்ளை இனத்தவர் பிரச்சினை குறித்து மார்ச் 18, 2008 அன்று ஒபாமா பிலடெல்பியாவில் பேசிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த உரையின் தமிழாக்கம் நூலின் பின்னிணைப்பில் இருப்பதாக 112ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் வாசித்த பிரதியில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. அதுபோலவே 126 மற்றும் 127ஆம் பக்கங்களில் 88 மற்றும் 14 ஆகிய இரு எண்களைப் பற்றிய சில முக்கிய, குறிப்பிட வேண்டிய தகவல்கள் உண்டு. ஆனால் 126ஆம் பக்கத்தில் 88 என்பதற்குப் பதிலாக 84 என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருக்கிறது. கண்களுக்கு உடனடியாக 'பளிச்'சென்று தெரிந்த இரு குறைகள் இவை. அடுத்தடுத்த பிரதிகள் அச்சிடப்படும் போது இக்குறைகளை பதிப்பகம் நிவர்த்தி செய்துவிடுமென்று நம்புகிறேன்.

ஒபாமா பராக்! - அனைவருமே கட்டாயம் வாசித்தாக வேண்டிய நூல்.


நூலின் பெயர் : ஒபாமா பராக்!

நூல் ஆசிரியர் : ஆர். முத்துக்குமார்

விலை : ரூ.80

பக்கங்கள் : 152

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

நூல் குறித்த பதிப்பாசிரியரின் அறிமுகம்!

நூலாசிரியரின் குரு தன் மாணவன் குறித்து அடையும் பெருமிதம் இங்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக