16 டிசம்பர், 2008

பொம்மலாட்டம்!

வயதானாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் இமயம். கடைசியாக பாரதிராஜா இயக்கத்தில் பார்த்த படம் எதுவென்பதே நினைவில் இல்லை. தாஜ்மஹால் தந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் எனக்கு தேவைப்பட்டிருக்கிறது. பாரதிராஜா தமிழின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்றாலும் 1980களின் இறுதியிலும், 90களின் ஆரம்பத்திலும் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தொழில்நுட்ப மறுமலர்ச்சியை பயன்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டார் அல்லது பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை. இந்த ஒரு காரணத்தாலேயே தமிழில் அவுட்-ஆஃப்-ஷோ ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். கடைசியாக கிழக்குச்சீமையிலே தான் சூப்பர்ஹிட் என்பதாக ஞாபகம்.
 
பாரதிராஜாவின் பலம் மண்ணின் மனம் + கதை மாந்தர்களின் உளவியல் போக்கினை எளிமையாக சித்தரிப்பது. தன் மகனை கதாநாயகனாக்கி அழகு பார்க்கும் ஆசையில் தன்னுடைய பலத்தை சில ஆண்டுகளாக மறந்து தொலைத்திருந்தார். அப்போதிருந்த தமிழ் திரையுலகின் பெரிய ஜாம்பவான்களோடு கூட்டணி அமைத்து ஆசை மகன் மனோஜுக்காக உருவாக்கிய தாஜ்மஹாலில் தன்னுடைய இயல்பினை கோட்டை விட்டு விட்டார். இழந்த இயல்பை 'பொம்மலாட்டம்' மூலமாக கச்சிதமாகப் பெற்றிருக்கிறார். இப்படத்தில் நானா படேகர், ருக்மிணி, ரஞ்சிதா கதாபாத்திரங்கள் அச்சு அசல் பாரதிராஜாவின் டிரேட்மார்க். 'சினிமாவுக்குள் சினிமா' என்ற கல்லுக்குள் ஈரம் காலத்து கான்செப்ட்.
 
அனேகமாக தானே நடித்து இயக்க இக்கதையை பாரதிராஜா கையிலெடுத்திருக்கக் கூடும். நானாபடேகரின் ஒவ்வொரு பிரேமையும் பாரதிராஜாவோடு ஒப்பிட்டு பார்க்கத் தோன்றுகிறது. நானாபடேகரின் நடிப்பை நடிப்புச்சுனாமி என்று சொல்லுவதா அல்லது நடிப்பு பூகம்பம் என்று சொல்லுவதா? 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது நானாபடேகருக்கு வழங்கப்படாவிட்டால் அவ்விருதினை தூக்கி குப்பையில் போடுவது தான் நியாயம். தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குனரே சினிமாத்துறையையும், அதன் போக்கையும் கிண்டலடிப்பது ரசிக்கக்கூடியது. குறிப்பாக தற்கால கதாநாயகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபைனான்ஸியர்களை வாங்கு வாங்கென்று வாங்குகிறார் பாரதிராஜா. அயல்நாட்டுப் படங்களில் இருந்து காட்சிகளை சுடும் இயக்குனர்களையும் ஒரு பிடிபிடித்திருந்தால் தாராளமாக எழுந்து நின்று கைத்தட்டியிருக்கலாம்.
 
'பொம்மலாட்டம்' த்ரில்லராகவும் இல்லாமல், சராசரிப் படமாகவும் இல்லாமல் திரிசங்கு சொர்க்கத்தில் விடப்பட்டிருக்கிறது. படம் முழுக்க ஆமைவேகத்தில் நகருகிறது. இடையிடையே சில பாடல்கள் கதையின் போக்குக்கு தொந்தரவாக இருந்தபோதிலும் ஹிமேஷ்ரேஷ்மையாவின் இசையில் பாடல்கள் காதுக்கு இனிமை. ஹீரோயின் முகத்தை சூப்பர் இம்போஸ் செய்து பாடல்காட்சிகளில் காட்டும் உத்தி 1980களிலேயே காலாவதியாகி விட்டது என்று பாரதிராஜாவுக்கு யாராவது உதவி இயக்குனர் எடுத்துச் சொல்லியிருக்கலாம். படத்தின் இறுதிக்காட்சி வித்தியாசமானதாக இருந்தபோதிலும் 'சப்'பென்று முடிகிறது. க்ளைமேக்ஸ் இன்னும் வெயிட்டாக இருந்திருந்தால் பொம்மலாட்டம் ஜோராக நடந்திருக்கும்.
 
இப்படம் ஆங்கிலத்திலோ அல்லது பிரெஞ்சிலோ எடுக்கப்பட்டிருந்தால் உலகப்படமாக போற்றப்பட்டிருக்கும். பல உலகப்பட விழாக்களில் பங்குபெற்றிருக்கும். பின்நவீனத்துவக்கூறுகள் உள்ளடக்கப்பட்டதாக சினிமா சிந்தனையாளர்களால் பாராட்டப்பட்டிருக்கும். தமிழில் இதை பாரதிராஜா முயற்சித்திருப்பதால் 'தற்கொலை முயற்சி' என்று கூறி அவர்மீது காவல்துறை வழக்கே தொடரலாம்.
 
ஆக்சன் கிங் அர்ஜூன் நடித்திருப்பதாக சொன்னார்கள். படம் முழுக்கத் தேடிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. படம் பார்த்த யாராவது கண்டுபிடித்துத் தரலாம். ஒரு இரண்டாம் கட்ட நடிகர் நடிக்க வேண்டிய கேரக்டர் அது. படத்துக்குத் தொடர்பில்லாத அவரது காதல் மற்றும் கந்தாயத்து காட்சிகள் தாமரை இலை மேல் நீர்த்துளி. படத்துக்கு ப்ளஸ் : பாரதிராஜா + நானாபடேகர். மைனஸ் : மீதி எல்லாமே. நானாபடேகருக்காக ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டிய படம். ஆனால் சாருநிவேதிதாவுக்கு மட்டும் தான் இந்தப் படம் பிடிக்கும்.
 
பொம்மலாட்டம் - நவரசத் தாண்டவம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக