18 நவம்பர், 2008

பகல் வேஷம்!

வாழ்க்கையில் இரட்டை வேடம் போடுபவர்களை "பகல் வேஷம் போடுறாண்டா!" என்று நாம் சொல்வதுண்டு. பகல் வேஷம் ஒரு காலத்தில் உன்னதக் கலையாக, தொழிலாக தமிழகத்தில் இருந்ததுண்டு. உத்திரமேருரூக்கு அருகில் இருக்கும் சில கிராமங்களில் இன்னமும் பகல்வேடக் காரர்கள் உண்டு. என்ன தொழிலை தான் மாற்றிக் கொண்டார்கள். பல பேர் விவசாயக் கூலிகளாகவும், கல்லுடைப்பவர்களாகவும் உருமாறியிருக்கிறார்கள். சமீபத்தில் உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் திருப்புலிவனம் செல்ல நேர்ந்தது. அங்கே சில முன்னாள் பகல்வேடக் காரர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. சினிமா வரும் காலத்திற்கு முன்பாக மக்களுக்கு பொழுதுபோக்க பயன்பட்ட கலை தெருக்கூத்து. பண்டிகைக் காலங்களிலும், கோயில் திருவிழாக்களிலும் இரவுவேளைகளில் தெருக்கூத்து நடத்துவார்கள். தெருக்கூத்தின் சப்ஜெக்ட் பொதுவாக இதிகாசக் கதைகளாகவும், நாட்டுப்புறக் கதைகளாகவும் அமைந்திருக்கும். ராஜா வேடம் போடுபவரை ராஜபார்ட் என்றும், ராணி வேடமோ அல்லது பெண்வேடமோ தரிப்பவரை ஸ்த்ரீபார்ட் என்றும் அழைப்பார்களாம். பெண்கள் யாரும் தெருக்கூத்தில் பங்கேற்க அப்போது அனுமதியில்லை என்பதால் ஆண்களே பெண் வேடமும் அணியவேண்டிய நிலை இருந்திருக்கிறது. தெருக்கூத்து கட்டுபவர்கள் நல்ல பாடகர்களாகவும் இருப்பார்கள். தொழில்முறை தெருக்கூத்து கலைஞர்கள் மட்டுமல்லாமல் பார்ட் டைமாக விழாக்காலங்களில் மட்டும் கூத்து கட்டுபவர்களும் இருந்திருக்கிறார்கள். வருமானத்துக்கு என்றில்லாமல் புகழுக்காக இத்தொழிலை பகுதிநேரமாக செய்திருக்கிறார்கள். எனது தாய்வழி பாட்டனார் அப்படிப்பட்ட ஒரு கலைஞர். உத்திரமேரூருக்கு அருகில் இருக்கும் அகரம்தூளி என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் அவர். கோயில் திருவிழாக்களில் ராஜபார்ட் வேடம் கட்டுவாராம். அவரது உறவினர் ஒருவர் ஸ்த்ரீபார்ட் போடுவாராம். திருவிழா முடிந்ததுமே அவரவர் வேலையை (பொதுவாக விவசாயம்) கவனிக்கப் போய்விடுவார்கள். ஆனாலும் கூத்தையே தொழிலாக கொண்டவர்கள் தெருக்கூத்து இல்லாத காலங்களில் வருமானத்துக்காக பகல்வேடம் பூணுவார்கள். அதிகாலை நான்கு மணியளவில் எழுந்து முகம் முழுக்க அரிதாரம் பூசி சிவன், கிருஷ்ணன், ராமன், ராவணர், அசுரர், நாரதன் என்றெல்லாம் வேடம் பூண்டு அருகிலிருக்கும் கிராமங்களுக்கு செல்வார்கள். ஒவ்வொரு வீடாக சென்று பாட்டு பாடியோ, வசனம் பேசியோ பணமாகவோ, நெல்லாகவோ ஏதாவது பொருளாகவோ பெறுவார்கள். உணவும் ஏதோ ஒரு வீட்டில் விருந்தாக கிடைக்கும். அக்காலங்களில் பகல்வேடக் காரர்களுக்கு மக்களிடையே நல்ல மதிப்பும் இருந்திருக்கிறது. கடவுள் வேடம் போட்டவர்கள் ஆசீர்வதித்தால் தங்கள் குடும்பம் விளங்கும் என்ற நம்பிக்கையும் பலபேருக்கு இருந்திருக்கிறது. சில பகல்வேடக் காரர்கள் கூட்டமாக மற்ற மாவட்டங்களுக்கு ஓரிரு மாதங்கள் சுற்றுப்பயணமாக சென்றும் தங்கள் தொழிலை செய்வதுண்டு. அவ்வாறு வேடம் இட்டுவரும் பகல்வேடக் காரர்களிடமே அந்த வருட திருவிழாவுக்கு தெருக்கூத்து கட்ட பேரம் பேசி கிராமத்து முக்கியஸ்தர்கள் அட்வான்ஸும் கொடுத்து விடுவார்களாம். இதெல்லாம் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு. சினிமாத் தொழில் வளர்ந்ததால் பாதிக்கப்பட்டது நாடகக்கலை மட்டுமன்று, இக்கலையும் தான். இன்றைய தேதியில் மிக மிக குறைவானவர்களே பகல் வேடம் கட்டுகிறார்கள். தெருக்கூத்துக்கும் இளைய சமுதாயத்திடம் அவ்வளவாக வரவேற்பில்லை. ஒரு உன்னத கலையை தொழிலாக கொண்டவர்கள் மாறிவரும் சமூகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நம் கண்ணுக்கு தெரியாமலேயே மறைந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த முறை சாலையில் எங்கேயாவது ராமன் வேடம் போட்டவரோ, ராவணர் வேடம் போட்டவரோ உங்களிடம் காசு கேட்டால் தயவுசெய்து எரிந்து விழாதீர்கள். நம் முன்னோர்கள் பொழுதுபோக்க உதவிய ஒரு பெரும் கலையின் மிச்சமாய் அவர்கள் மட்டுமாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக