28 நவம்பர், 2008

பெய்யெனப் பெய்திடும் மாமழை!

சென்னை முடங்கிக் கிடக்கிறது. ஒருநாள் மழையையே தாங்கமுடியாத லட்சணத்தில் இருக்கும் மாநகரத்தில் நான்கு நாட்கள் பேய்மழை பெய்தால் என்னவாகும்? வழக்கம்போல மடிப்பாக்கமும், வேளச்சேரியும் வெனிஸ் ஆகிவிட்டது. எப்போதும் அரசியல்வாதிகளை கண்டமேனிக்கு திட்டும் சென்னைவாசிகளுக்கு இப்போதுதான் அரசியல்வாதிகளின் அருமை புரிகிறது. குறிப்பாக திராவிட அரசியல்வாதிகள். அரசு எந்திரங்களை நம்பாமல் தன்னார்வலர்களாக மீட்புப்பணிகளில் அவர்கள் காட்டும் வேகம். இந்த மீட்புப்பணிகளுக்கு பின்னே அவர்களுக்கு ஆயிரம் அரசியல் ஆதாயங்கள் இருக்கட்டும். பசித்த வாய்க்கு சரியான நேரத்தில் சோறுபோடுகிறார்களே? வாழ்க. வாழ்க. வடசென்னையை அதிமுகவும், தென்சென்னையை திமுகவும் தத்தெடுத்துக் கொண்டிருக்கிறது. மற்றநாட்களில் அரிவாளும், ஆசிட்டுமாக ஒருத்தரையொருத்தர் துரத்திக் கொள்பவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள். தளபதி எங்கே எப்போது திடீரென்று ரெயின்கோட்டில் பிரசன்னமாவார் என்று தெரியாமல் திமுகவினர் 24 மணிநேரமும் ஆக்‌ஷனில் இருக்க வேண்டிய நிலை. அம்மா வருவாரா வரமாட்டாரா என்று தெரியாவிட்டாலும் ‘அம்மா வெள்ளநிவாரணம்' என்று ப்ரிண்ட் செய்யப்பட்ட ஃப்ளக்ஸ் போர்டுகளோடு அதிமுகவினர். புறநகர் பகுதிகளில் காங்கிரஸாரும், பாஜகவினரும் குத்தும் கோமாளிக்கூத்து. தேசியக்கட்சிகளில் பதவி வாங்குவது மிக சுலபம். பேரிடர் காலங்களில் பத்திரிகையில் போட்டோ வந்தால் போதும். தேமுதிக சென்னையில் காணவே காணோம். கேப்டன் படப்பிடிப்பில் பிஸியோ? வாராவாரம் ஆனந்தவிகடனில் மட்டும் நாற்று நடுகிறார், நெசவு இயந்திரத்தை மிதிக்கிறார், காய்கறி கடையில் வியாபாரம் செய்கிறார். திருமாவேலரே நியாயம்தானா? கேப்டனை மடிப்பாக்கத்துக்கு படகில் கூப்பிட்டு வந்து போட்டோ எடுத்திருக்கக் கூடாதா? கோயம்பேடு - கத்திப்பாரா நூறடி சாலை இவ்வளவு வெள்ளத்தை இதுவரை கண்டதில்லை. ஜி.என்.செட்டி ரோடு ஸ்விம்மிங் பூலை விட ஆழமாக இருக்கிறது. நகரின் மழைநீர் வடிகால்கள் இரண்டுமாதங்களுக்கு முன்பு தான் தூர் வாரப்பட்டது. அப்படி இருந்தும் எப்படி இவ்வளவு வெள்ளம்? கடல்நீர் மட்டம் உயர்ந்திருப்பதால் வெள்ளம் வடிவதில் சிரமம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள். க்ளோபல் வார்மிங்? சில பெருசுகள் அமாவாசை நெருங்கும் நேரத்தில் கடல்நீர் மட்டம் உயர்வது சகஜம் என்று சால்ஜாப்பு சொன்னாலும் பயமாக இருக்கிறது. அடுத்த ஐம்பதாண்டில் மாலத்தீவு இருக்காதாம். சென்னை இருக்குமா? * - * - * - * - * - * - * ஹாலிவுட் படங்களில் பார்த்தது போன்ற காட்சிகளை தொலைக்காட்சிகளில் இரண்டு மூன்று நாட்களாக பார்க்க முடிகிறது. மும்பை! போனவாரம் வாசித்த ‘என் பெயர் எஸ்கோபர்' நூலில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இந்தியாவிலேயே நடைபெறும் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. தீவிரவாதம் ஏன்? தீர்வு என்ன? என்று பா.ராகவன் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார். யாராவது இந்தியில் மொழிபெயர்த்து டெல்லியில் விற்றால் தேவலை. நேற்று மும்பை மேரி ஜானும், வெட்னஸ்டேவும் டிவிடியில் பார்த்தேன். * - * - * - * - * - * - * சன் பிக்சர்ஸின் ‘தெனாவட்டு' படத்தில் ஒரு காட்சி. கைலாசம் சென்னையில் நெ.1 தாதா. அவரது மகன் சந்தோஷ் பார்க்கும் பெண்களையெல்லாம் பெண்டாளத் துடிப்பவன். ஹீரோ ஜீவாவின் ஃபிகர் மீதே கையை வைக்கும் சந்தோஷை கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் போட்டு மழையில் புரட்டியெடுக்கிறார் ஜீவா. நூற்றுக்கணக்கான பொதுமக்களோடு ஏ.சி.பி. சாய்குமாரும் வேடிக்கை பார்க்கிறார். ஒரு ஆட்டோக்காரர் ஏ.சி.பி.யை பார்த்து “இப்படி போட்டு ஒரு ஆளை புரட்டியெடுக்கிறானே? தடுக்கக்கூடாதா?” என்று கேட்கிறார். “தப்பு நடந்தா தட்டிக் கேட்குறது மட்டுமில்லை, நல்லது நடந்தா அதை தடுக்காம கண்டும், காணாமலும் போறது கூட போலிஸ்காரன் வேலைதான்!” என்கிறார் ஏ.சி.பி. :-))))) படத்தில் இதுபோல Current Affairsகளுடன் பொருத்திப் பார்க்க ஏராளமான காட்சிகள் உண்டு. எச்சரிக்கை : படம் செம மொக்கை. அரவாணிகளை நல்லவிதமாக காட்டுகிறேன் பேர்வழி என்று இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்திருக்கிறார் இயக்குனர். * - * - * - * - * - * - * முந்தாநாள் மாலை, வெள்ள மீட்புப்பணிகளில் (?) தீவிரமாக ஈடுபட்டு சோர்வாக வீட்டுக்கு வந்தேன். சோஃபாவில் அப்படியே விழுந்தபோது தாகம் எடுத்தது. மின்வெட்டு. அருகில் மிரண்டா பாட்டிலில் தண்ணீர் இருந்தது. மூடியை திறந்து அப்படியே வாயில் ஊற்றிக்கொண்டேன். இதுவரை என் நாக்கு சுவைத்திராத தீவிர உப்பு. அமில நெடி. மார்பெல்லாம் எரிந்தது. ஓடிச்சென்று பாத்ரூமில் வாந்தியெடுத்தேன். அமிலநெடி வயிற்றுக்குள் தீயாய் பரவியதை உணர்ந்ததால் கையை விட்டு அம்மாவிடம் குடித்த பால் உட்பட மொத்தமாக வாந்தியெடுத்தேன். தலையெல்லாம் கிறுகிறுத்தது. ஒரு ஃபுல் ஓல்டுமாங்கை அப்படியே கல்பாக அடித்தது போல போதை. முகம் கழுவிவிட்டு எதுவும் நடக்காதது போல வீட்டில் விசாரித்தேன். பாட்டிலில் வைத்து இருந்தது துணிதுவைக்க பயன்படுத்தும் ‘ஆலா' மாதிரியான ஏதோ ஒரு வஸ்துவாம். நல்லவேளை பாத்ரூம் கழுவப் பயன்படுத்தும் ஆசிட், கீசிட் எதையும் அங்கு வைத்திருக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக